பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 07

மதுமிதாவை இம்மியளவும் பிரியக்கூடாது என்று உறுதியாக இருந்தவன், மூன்று நாட்கள் அவளைப் பிரிந்திருக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டான். யாருடன் அம்மா நெருங்கிப்பழகுவது ஆபத்து என்று நினைத்தானோ அவர்களே இன்று வீடுவரை வந்துவிட்டனர்.

எண்ணியது ஒன்று, நடப்பது ஒன்று என்று அனைத்தும் எதிர்மாறாக நிகழ, டெல்லியில் யாரை பார்த்துவிடக்கூடாது என்று பயந்தானோ, அவளைச் சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சினான்.

டெல்லி பயணத்தைத் தவிர்க்க எந்த அளவிற்கு குணா பாடுபட்டானோ, அதே அளவிற்கு, அவன் உயர் அதிகாரி அவனை அங்கு அனுப்புவதில் தீவிரமாக இருந்தார். நடப்பது நடக்கட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டு சவால்களை எதிர்கொள்ள தயாரானான்.

ஆனால் விமானம் டெல்லியில் தரை இறங்கிய நொடி முதல் கண்ணில் தென்படும் பெண்கள் யாவரும் யமுனாவை போலவே தோன்றினார்கள்.

‘வேண்டாம்னு சொன்னேனே கேட்டீயா மாமா! எல்லாம் நான் பார்த்துக்கறேன்னு சொன்னீயே…இப்போ என்ன ஆச்சு பாரு!’

யமுனாவின் குரல் இடைவிடாமல் இம்சிக்க, காலச்சக்கரத்தில் பின்னோக்கி பயணித்து, முடிவுகளை திருத்தி அமைக்க முடியாதா என்று அவன் மனம் துடிதுடித்தது.

அன்று…

‘தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல….’

பாடல் டீ கடையில் காட்டிலும் சத்தமாக அலறிக் கொண்டிருக்க, இருள் படர்ந்திருக்கும் வீட்டிற்குள் நுழைந்தான் குணா.

“என்னடி இன்னைக்கு ஒரு மார்கமா பாட்டு கேட்டுட்டு இருக்க?” பொழுது சாய்ந்தும், சோஃபாவில் சயனத்திருந்தவளிடம் வினவிக்கொண்டே, மின்விளக்கை ஒளிரவிட்டான்.

சட்டென்று பளிச்சிட்ட வெளிச்சத்தில் கூசிய கண்களை இடுக்கிக்கொண்டு,

“நீ தானே மாமா உன் மேல ஃபீலிங்ஸ் வரா மாதிரி பாட்டு மட்டும்தான் கேட்கணும்னு சொல்லிருக்க!” இளக்காரமாக பதிலளித்தாள்.

அவள் குறும்பை சிறிதும் பொருட்படுத்தாது, வீட்டை வலம் வந்தான்.

தையல் இயந்திர மேஜையில் பொருட்கள் போட்டது போட்டப்படி இருந்தது. சமையலறையிலும் பாத்திரங்கள் ஆங்காங்கே கிடந்தன.

“வேலை செய்யாம மதியம் நல்லா தூங்கிட்டு, பாட்டு போட்டு மடக்கலாம்னு பாக்குறியா?” நக்கலாக கேட்டு கைபேசியை சார்ஜில் போட நகர்ந்தான்.

‘என்ன ஏதுன்னு அக்கறையா விசாரிப்பன்னு நெனச்சது என் தப்பு’ தனக்குள் முணுமுணுத்தவள்,

“உடம்பு சரியில்ல!” என்றாள்.

அவள் சொன்னதுதான் தாமதம்.

“என்ன ஆச்சு அம்மு!” பதறியடித்து ஓடிவந்தவன் அவள் நெற்றி மேல் விரல்கள் பரப்பி, உடல்வெப்பத்தை சோதித்தான்.

உடல்வெப்பம் சீராக இருப்பதை உணர்ந்தவனுக்கு, மறுநாள் அவளுக்குக் கல்லூரியில் பரிட்சை என்று நினைவுக்கு வர,

“எக்ஸாம் ஃபீவரா?” வினவினான்.

நெற்றியில் படர்ந்திருந்த அவன் விரல்களை, தன் கைகளுக்குள் சிறைசெய்து பிசைந்தவள்,

“நீ எனக்குக் கல்விச்செல்வம் கொடுக்கணும்னு ஆசைப்படற; ஆனா கடவுள் எனக்குப் பிள்ளைச்செல்வம் கொடுக்க விரும்புறாரு மா…மா…மாமா!” மறைமுகமாகக் காரணத்தைச் சொல்லி அசடுவழிந்தாள்.

“என்னடி சொல்ற?” திடுக்கிட்டவன், அவளிடமிருந்து விலகி அமர்ந்தான்.

“ஆமாம் மாமா! காலையிலிருந்து தலை பாரமா இருந்துது.” என்றவள், நந்தினையை அழைத்து, அவள் உதவியோடு வீட்டிலேயே பரிசோதனை செய்து கொண்டதாக விளக்கினாள்.

“அதுக்கில்ல அம்மு….” அவன் தயங்க,

“தெரியும் மாமா! நீ கவலைபடாத! நந்தினிகிட்ட விசாரிச்சேன்; கருக்கலைப்பு இங்க ரொம்ப சாதாரணமான விஷயமாம்!” அலட்டலே இல்லாமல் தீர்வு சொன்னாள்.

“அடீங்க!” கையை உயர்த்தியவன், “நீ கவனக்குறைவா இருந்துட்டு, ஒரு பாவமும் செய்யாத குழந்தையை கொல்லுவேன்னு சொல்லுவியா!” என்று கண்டித்தான்.

“என்மேல மட்டும் பழிப்போடுற!” உதட்டை மடித்துச் சண்டையிட்டவள், அவன் இடுப்பை நறுக்கென்று கிள்ளி,

“வேப்பிலை அடிச்சது யாரு மா…மா…மாமா!” என்று கண்சிமிட்டினாள்.

அவள் பார்வையை எதிர்கொள்ள இயலாதவன், “சரி! சரி!” என்று தொண்டையை செருமிக்கொண்டு, மடிக்கணினியை திறந்தான்.

சுகாதார காப்பீட்டில் குறிப்பிட்ட மகப்பேறு மருத்துவர்களின் பட்டியலைத் திரையில் காட்டி யமுனாவுடன் கலந்தாலோசித்தான்.

“கொஞ்சம் நிதானமா யோசி மாமா… இப்போ இந்தக் குழந்தை அவசியமா? முதல்ல வீட்டுல எல்லாருடைய கோபமும் தணியட்டுமே!” தாய்மை அடைந்த பெண்களுக்கே உண்டான ஏக்கத்தில் பேசினாள்.

அதை உணராதவன், “வீட்டவிட்டு ஓடிப்போக நெனச்சவங்க எல்லாம் அதைப்பற்றி கவலைப்படக்கூடாது!” இடித்துக்காட்ட,

மறுகணமே எரிச்சலடைந்தவள், “சும்மா அதையே சொல்லிக்காட்டி கொடுமை படுத்தாத மாமா…நான் எனக்காக மட்டும் பேசல…ஜோசியர் சொன்ன பரிகாரத்தை செய்யலன்னு, உன்னையும் திட்டித்தீர்ப்பாங்க!” சாவித்ரியிடம் அவன் கொடுத்த வாக்கை நினைவூட்டினாள்.

“ஜாதகம் பொருந்தலன்னு சொல்றப்பவே அந்த ஆளு பரிகாரமும் சொல்லிருக்கணும்; சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி மாற்றி பரிகாரம் சொல்றவன் பேச்சுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காத அம்மு!”

இதற்கெல்லாம் சலிப்பேனா என தர்க்கம் செய்தவன், அவள் முகத்தை இருகைகளிலும் குவித்து,

“இங்க பாரு அம்மு! அதெல்லாம் உண்மை இல்லன்னு எனக்கும் தெரியும், உனக்கும் நல்லாவே தெரியும்!”, கண்பார்த்துப் பேச,

பேதையின் விழிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

“வேண்டாம்னு சொல்றேனே கேளு மாமா!” மன்றாடினாள் யமுனா.

“நான் தான் பார்த்துக்கறேன்னு சொல்றேனே…என்ன நம்ப மாட்டியா அம்மு!” யாசிக்கும் குரலில் கேட்டு அவளை இறுக அரவணைத்தான்.

“புரிஞ்சுக்கோ அம்மு! தற்காலிகப் பிரச்சனைகளுக்காக இன்னைக்கு இந்தக் குழந்தை வேண்டாம்னு சொல்லிட்டு, நம்ம வேணும்னு கேட்கறப்ப குழந்தையே பிறக்காம போச்சுனா…” குழந்தை பாக்கியம் எல்லோருக்கும் சுலபமாக அமைவதில்லை என்றான்.

அவளும் மென்மையாக தலையசைத்து அவன் தோள் சாய்ந்தாள்.

“சரி! இன்னைக்கு மாமா டின்னர் சமைக்கறேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு!” அவளை இயல்பு நிலைக்கு திருப்ப மெனக்கெட்டான்.

“கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்துக்கட்டுமா?” ஏக்கத்துடன் கேட்டவளின் அன்பில் தோற்றுத்தான் போனான்.

மாமனே உலகம் என்று மடியில் கிடந்தவளின் தலையில் மென்மையாகத் தட்டிக்கொடுத்தபடி, தன் முடிவு சரியா என்று சிந்தித்தான்.

மசக்கை, மயக்கம் என மகப்பேறு அதற்கே உரியதான வேலைகளைக் காட்ட ஐந்து மாதங்கள் ஓடின.

“இன்னைக்கு எடுக்கவிருக்கும் ஸ்கேனில் குழந்தை ஆணா பெண்ணான்னு தெரியும்; உங்களுக்குத் தெரிஞ்சுக்க விருப்பமிருந்தா சொல்லுவோம்!” 

முதல்கட்ட பரிசோதனைகளை செய்த செவிலியர் அறிவிக்க, யமுனா முகம் பேரின்பத்தில் பிரகாசமானது.

பத்து நிமிடத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி, செவிலியர் நகர்ந்ததும்,

“மா…மா…மாமா! குழந்தைக்கு ஒரு பெயர் யோசிச்சு வெச்சிருக்கேன்…மறுப்பு சொல்லாம, கோபப்படாம கேட்பீயா! பீடிகையுடன் அவன் தோள் சாய்ந்து விரல் கோர்த்தாள்.

“உம்…சொல்லு!”

“மது…” முழுப்பெயரும் சொல்லும் முன் அவளைப் பார்வையால் சுட்டெரித்தவன்,

“மேடமுக்கு ஃபீலிங்ஸ்ஸோ!” அதிராத குரலில் அழுத்தமாகக் கேட்டான்.

“கோபப்பட மாட்டேன்னு சொன்னீயே!” சுருங்கிய முகத்துடன் முணுமுணுத்தாள்.

“கோபப்பட மாட்டேன் அம்மு!” கனிவாக பேசும் மாமனை விழிகள் உயர்த்தி பார்த்தாள் பெண்.

அவன் உதடுகள் கர்வப்புன்னகையில் விரிந்தது.

“கோபப்பட வேண்டிய அவசியம் இருக்காது செல்லம்…” என்று அவள் கன்னத்தை மிருதுவாக வருடியவன்,

“ஏன்னா பிறக்கப்போவது கண்டிப்பா பெண் குழந்தைதான்…மாமாவுக்கு எப்பவுமே கன்னிராசி அம்மு!” விஷமப் புன்னகையுடன் கண்சிமிட்டினான்.

சிறிது நேரத்தில் யமுனாவை பரிசோதித்த மருத்துவர், பெண் குழந்தை என்று ஊர்ஜிதம் செய்ய, குணா இறுமாப்புடன் சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டு அவள் அருகில் வந்தான்.

சீண்டும் கள்வனை கம்பீரமாக எதிர்கொண்டாள் பேதை.

“பெண் குழந்தையா இருந்தா என்ன? மதுமிதான்னு பேரு வெச்சு மது…மதுன்னு செல்லமா கூப்பிடுவேன் மா…மா…மாமா!” பதிலுக்குச் சீண்ட,

ஒரு நொடி ஸ்தம்பித்துதான் போனான்;

ஒரு நொடி மட்டும்தான்;

‘தோற்பவன் நானா!’ என்று உதடுகள் கர்வத்தில் வளைய,

“பேரு தானே அம்மு…தாராளமா வெச்சுக்கோ…ஆசைத்தீர கொஞ்சிக்கோ; அதைமட்டும் தான் உன்னால செய்யமுடியும்…மற்றபடி இந்த மாமனை மீறி உன்னால எதுவும் செய்யமுடியாது அம்முகுட்டி!” அவள் நுனிமூக்கை ஒற்றை விரலால் வருடினான்.

யார் யாரிடம் தோற்பார்கள் என்று அறிந்த தொப்புள்கொடி பந்தம், இவர்கள் வாதத்தை கருவறையிலிருந்து கேட்டபடி எள்ளி நகையாடியது.

வளர்பிறை நிலவாகப் பதுமையின் வயிறு அழகாய் மேடிட்டுப் பெருக, மனதிலுள்ள ஆசைகளும் வெள்ளமென பெருகியது.

வளைகாப்பு, அம்மாவின் அருகாமை என பேதை மனதில் எண்ணிலடங்கா மசக்கை மயக்கங்கள் எழ, எதற்கும் செவிசாய்க்காமல் முட்டுக்கட்டையிட்டான் குணா.

உறவாட நினைப்பவர்கள் தானே முன்வந்து சமாதானம் பேசட்டும் என்ற எண்ணம் அவனுக்கு.

பெண் கருவுற்றதை அறிந்த வீட்டாருக்கு இளஞ்சோடிகள் பரிகாரத்தை அலட்சியம் செய்தது மட்டும்தான் கண்முன் நின்றது. யமுனாவை இழந்துவிட நேரிடும் என்ற மனக்கவலையில் புழுங்கியவர்களுக்கு, புதிதாய் ஜனிக்கவிருக்கும் உயிரை கொண்டாட மனமில்லாமல் போனது.

யமுனாவின் வாடிய முகத்தைக் காணச் சகிக்காமல், நந்தினி குணாவிடம் அடிப்படைச் சடங்குகளாவது செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினாள்.

தாய்வீட்டு சம்பிரதாயங்களை நந்தினியும் அஷ்வினும் செய்ய, குணா புகுந்த வீட்டுச் சடங்குகளை நிறைவேற்றினான்.

விழா முடிந்து நால்வரும் அளவளாவிக் கொண்டிருந்தனர்.

“யமுனா! ரத்த அழுத்தம், சக்கரை அளவு மட்டும் கட்டுக்குள்ளே வெச்சுக்க… நல்லா ஓய்வெடு!” மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் அறிவுரை சொன்னான் அஷ்வின்.

கால்நீட்டி நிமிர்ந்து அமர்ந்தவள், “உங்க நண்பர் பொழுதுக்கும் என்னைப் படிப்பிலும் தொழிலிலும் கவனம் செலுத்தச் சொன்னா, ஓய்வு எங்க எடுக்கறது? சலித்துக்கொண்டு பெருமூச்சுவிட்டாள்.

“இந்த மாதிரி சமயத்துல யமுனாவுக்கு நல்ல ஓய்வு தேவை குணா;மனவுளைச்சல் அதிகமானா குழந்தையோட ஆரோக்கியம் பாதிக்கும் டா!” நண்பனுக்குப் பின்விளைவுகளைப் பொறுமயாக எடுத்துரைத்தான் அஷ்வின்.

“ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் அம்மா அப்பான்னு தேவையில்லாம யோசிப்பாங்க மேடம்…அதுதான் அவளுக்கு மனவுளைச்சல் கொடுக்கும்!” தர்க்கம் செய்தவன், அப்பாவியாகச் செல்லம் கொஞ்சும் பெண்மானை பார்வையால் ஊடுருவினான்.

“அம்மா, அப்பான்னு யோசிக்கறது தேவையில்லாத விஷயமா!” யமுனா சண்டைக்கு வர,

அச்சமயம் குணாவின் கைபேசி ஒலித்தது. திரையில் ‘எலிசபெத்’ என்று கண்டுகொண்டவள்,

“போங்க வாத்தி…ஸ்வீட்ஹார்ட், ஹனின்னு போய் கொஞ்சிட்டு வாங்க!” கிண்டல் செய்து அவன் கையில் நுழைத்தாள்.

“அப்படிக் கூப்பிடாதன்னு சொல்லிருக்கேன்ல!” மிரட்டியபடி கைபேசியை உயிர்ப்பித்தவன்,

“ஹாய் லிசி!” என்று குழைய மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.

குணா, மாணவியின் சந்தேகங்களுக்கு மிடுக்கான தோரணையில் விளக்கம் சொல்லி அழைப்பைத் துண்டித்ததும், கைபேசியை வெடுக்கென்று பிடுங்கிய அஷ்வின்,

“அது என்னடா! உன் வகுப்புல பசங்களே இல்லையா…இல்ல பசங்களுக்குச் சந்தேகமே வராதா!” பெண்களின் பட்டியலை உரக்கப் படித்து சரமாரியாக ஓட்ட, அவ்விடமே சிரிப்பொலியில் நிரம்பியது.

இரண்டு மாதத்தில் பூவுலகில் தாரகையாக பூத்தாள் மதுமிதா. தாயாக, தந்தையாக உறவுகளின் மொத்த உருவமாக குணா குழந்தையைப் பேணிக்காக்க, அவனை மலைப்பாய் பார்த்துப் பூரித்தாள் யமுனா.

நாளிடைவில் அவளுக்கும் பெற்றோர் தன்னருகில் இல்லை என்ற ஏக்கம் மறைந்தது.

குணா அப்பாவிடம் பணம் கேட்டு நச்சரிக்கும் தொல்லைகளும் குறைந்தன. படிப்பு, தொழில் என்று அனைத்தையும் தள்ளிவைக்கவும் சொன்னான். முழு நேரமும் ஆசைத்தீர மதுமிதாவிற்கு சீராட்டி, பாலூட்டி நாட்களைக் கழித்தாள் யமுனா.

குழந்தையை அவள் வேண்டுமென்றே மது! மது! என்று அழுத்தமாகச் சொல்லி கொஞ்சும்போதும் குணா அதைப் பெரிதுபடுத்தவில்லை. அவனும் அவளுக்கு இணையாகவே குழந்தையிடம் பாசமாக இருந்தான்;

குழந்தையிடம் மட்டும்தான் பாசமாக இருந்தான்.

மாமன் தன்னிடமிருந்து மெல்ல மெல்ல விலகிச் செல்வதை பெண்மனம் கண்டும் காணாமல் இருந்தது.

பணிச்சுமை என்று சாக்குச்சொல்லி, நள்ளிரவுக்கு மேல் வீட்டிற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டான். வீட்டில் இருந்த குறுகிய நேரத்தையும் மதுமிதாவுடன் மட்டும்தான் செலவழித்தான்.

மாமன் தன்னுடன் சண்டையிட்டு, கண்டிப்புடன் இருந்த நாட்களே மேல் என்று தோன்றியது அவளுக்கு.

அதைப்பற்றி நந்தினியிடம் கலந்தாலோசித்தாள். பிரசவித்த பெண்களுக்கே வரும் “பிரசவத்திற்கு பிந்தைய மனச்சோர்வு”(Postpartum Depression) என்று மருத்துவரீதியாக விளக்கங்கள் தந்து சமாதானம் செய்தாள் நந்தினி.

சனிக்கிழமை இரவு யமுனா அவனுக்கு மிகவும் பிடித்த பணியாரம் கொண்டுவர, அச்சமயம் கைபேசி ஒலித்தது. திரையில் வழக்கம்போல ஒரு மாணவியின் பெயர் கண்டதும், தானே அழைப்பைத் துண்டித்து,

“வாத்தி! சூடா பணியாரம் சாப்பிட்டு அப்புறம் உங்க ஸ்வீட்ஹார்ட் கிட்ட கடலை போடுங்க!” அவள் பாணியில் வம்பிழுத்தாள்.

சுள்ளென்று கோபம் கொண்டவன், உணவுத்தட்டைத் தட்டிய வேகத்தில் அது தடம்புரண்டு விழுந்து, பணியாரம் தரையில் சிதறியது.

“உனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்துல மூக்கை நுழைக்காதே!” அவள் முகம் எதிரே விரல் நீட்டி மிரட்டி, கைபேசியுடன் வாசலுக்கு நடந்தான்.

“என்ன முடிவெடுத்தீங்க குணா? வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு என கேள்வி பறந்தது.

“அது…அது…ஒரு ஆறு மாசம் ஆரப்போடலாமே ப்ளீஸ்!” அவகாசம் கேட்டு பம்பினான் குணா.

ஆறு மாதமானாலும், ஆறு வருடங்கள் ஆனாலும், தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று மறுமுனையிலிருந்து திட்டவட்டமாக பதில் வர,

“சரி! எனக்கு ரெண்டு வாரம் அவகாசம் கொடு; ஏதாவது பொய்காரணம் சொல்லி யமுனாவை ஊருக்கு அனுப்பிடறேன்! ஆனா குழந்தை என்னோட தான் இருப்பா!” தன் பக்கத்துத் திட்டங்களைத் தெளிவுபடுத்தினான்.

“அது உங்க இஷ்டம்; ஐ டோன்ட் கேர் அபௌட் இட்!”  மீண்டும் கறாராக பதில் வந்தது.

வெளியே சொல்ல முடியாத விவகாரங்களை பேசிமுடித்து வீட்டிற்குள் வந்தவன், யமுனாவின் வாடிய முகம் கண்டு தன் செயலுக்கு வருந்தினான்.

தன்னுடன் இருக்கும் இரண்டு வாரங்களுக்காவது அவள் மனம்கோணாமல் நடக்க வேண்டுமென்று நினைத்தான்.

சிதறிக்கிடந்த உணவை தானே சுத்தம் செய்து, அவளிடம் மன்னிப்பும் கேட்டான். வேலையில் இருந்த உளைச்சலை அவளிடம் காட்டிவிட்டதாகப் பொய்காரணம் சொல்லி, வலுகட்டாயமாக பணியாரத்தை ஊட்டினான்.

பெண்மனம் அவன் வசியப் பேச்சிலும் அன்பிலும் தோற்றுப்போனது.

தனது இக்கட்டான சூழ்நிலையை அஷ்வினிடம் பகிர்ந்து கொண்டான். யமுனாவை ஊருக்கு அனுப்பவதற்கு வடிவமைத்த திட்டத்தையும் விளக்கினான்.

“தப்பு குணா! நாலு மாத குழந்தையைத் தாய் கிட்டேந்து பிரிக்கறது ரொம்ப பாவம் டா…நீ தைரியமா யமுனாகிட்ட உண்மையை சொல்லு…எந்த முடிவா இருந்தாலும், அதை அவளே எடுக்கட்டும்!”

அஷ்வின் சொன்னதைக் கேட்டு ஏளனமாக சிரித்தவன்,

“உண்மையை சொன்னா…பரவாயில்ல மாமான்னு பக்குவமா பேசுவான்னு நெனச்சியா… பத்ரகாளியா மாறி ருத்ரதாண்டவம் ஆடுவா டா!” குணா மறுக்க,

“இருந்தாலும் நீ செஞ்ச தப்புக்கு தாயும் சேயும் பிரிக்கறது நியாயமே இல்லடா…” ஒரு குழந்தைகள் நல மருத்தவராக வருந்தினான்.

“மதுமிதா என்கூட இருந்தால் மட்டுமே, யமுனா என் சொல்படி நடப்பா!” உறுதியாகச் சொல்லி மறுத்தான்.

பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தபோதும் குணாவின் மனதை மாற்றுவதில் தோற்றுப்போன அஷ்வின், நண்பனின் ரகசிய திட்டத்திற்குப் பணிந்துபோனான்.

நந்தினியிடம் எதுவும் சொல்லவேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டான்.

நான்கு நாட்களில் தேவையான ஆவணங்களை தயார் செய்தார்கள் நண்பர்கள். வாரத்தின் மத்தியில் அஷ்வின், குணாவுடன் வீட்டிற்கு வந்ததே வழக்கத்திற்கு மாறாக இருந்தது யமுனாவிற்கு.

“அம்மு! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!” குணா தொடங்க, யமுனாவின் சந்தேகம் ஊர்ஜிதமானது.

அவள் மெல்ல தலையசைக்க, குணா சுவாசத்தைச் சீர் செய்துகொண்டு பேசத்தொடங்கினான்.

“உன் விசாவுல ஒரு சிக்கல். நீ உடனே இந்தியாவுக்கு போய் அதைச் சரி செஞ்சிட்டு வரணும்!” என்று ஆவணங்களை மேஜையில் பரப்பினான்.

“அதுக்கென்ன மாமா! விசா வேலையெல்லாம் முடிச்சிட்டு, அப்படியே ஊருல எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்!” முகமலர்ச்சியுடன் பேசினாள்.

“நீ மட்டும்தான் ஊருக்கு போகப்போற…உனக்கு மட்டும்தான் விசாவுல சிக்கல்…நானும் மதுமிதாவும் இங்கேயே இருப்போம்!” தெளிவுபடுத்திப் படிவங்களில் கையெழுத்திடச் சொன்னான்.

“என்னது! மதுகுட்டி தனியா விட்டுட்டு நான் மட்டும் போகணுமா?” எடுத்த எடுப்பிலே மறுத்தாள்.

தன் யூகம் எவ்வளவு சரி என்று நண்பனுக்கு மறைமுகமாக கண்ணசைத்தான் குணா.

‘தற்காலிகமாக குழந்தையை விட்டு இருப்பதற்கே இவ்வளவு பதறுபவள், குணாவின் திட்டத்தை முழுவதுமாக அறிந்தால்!’ அவளைப் பரிதாபமாகப் பார்த்தான் அஷ்வின்.

“இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் நம்ம இந்த ஊருல வாழணும்னு அவசியமில்ல மாமா…நாம மூணு பேரும் ஊருக்குப் போயிடலாம்!” மறுவழி சொல்லி படிவங்களைப் புறம்தள்ளினாள்.

“உனக்கு உன் பிரச்சனை மட்டும்தான் பெருசா! என் வேலை, கனவு எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னால வர சொல்றியா!” கொந்தளித்த குணா,

“இவளுக்கு நீயாவது புரியவை டா!” நண்பனிடன் சிடுசிடுத்தான்.

செய்யும் பாவம் போதுமென்று அமைதியாக இருந்தவன் பேச வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டான்.

“குணா உன் நல்லத்துக்குத் தான் சொல்றான் யமுனா. நிதானமாகப் படிச்சு பார்த்துட்டு கையெழுத்துப் போடு!” மறைமுகமாக எச்சரித்தான்.

அஷ்வின் தடுமாற்றத்தை நொடியில் உணர்ந்தான் குணா.

புன்முறுவலோடு யமுனாவை மென்மையாக அரவணைத்தவன்,

“மதுமிதா இங்கேயே இருந்தால் தான், உன் விசாவ ரத்து செய்யமாட்டாங்க!” தேனொழுகப் பேச,

துக்கத்தை அடக்கி அவன் காட்டிய இடத்தில் எல்லாம் மறுகேள்வி இல்லாமல் கையெழுத்திட்டாள்.

மாமனே உலகம் என்று கண்மூடித்தனமாக நம்பும் இவளுக்கு யார்தான் புத்தி சொல்லமுடியும் என்று தோளினை குலுக்கி கொண்டான் அஷ்வின்.

ஊருக்குப் புறப்படும் நாளும் வந்தது. யமுனாவுடன் டெல்லிக்குச் செல்லும் பொறுப்பை அஷ்வினிடம் விட்டிருந்தான் குணா.

விசா வேலைகளை சென்னையில் செய்திருக்கலாமே என்று கேட்டவளுக்கு, வழக்கம்போல மழுப்பலாகக் காரணம் சொல்லி சமாளித்தான்.

விமானம் புறப்பட நேரமாகிறது என்று குணா நினைவூட்ட,

மதுமிதாவை பிரிய மனமில்லாதவள், “மாமா! இதெல்லாம் வேண்டாமே!” கண்ணீர் மல்க கெஞ்சி, குழந்தையின் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.

குழந்தையை வலுகட்டாயமாக வாங்கியவன், “நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல…என்ன நம்ப மாட்டீயா அம்மு!” நைச்சியமாகப் பேசி அவள் கன்னங்களை வருடினான்.

பேதையும் தலையசைத்துப் புறப்பட,

“அம்மு!” மென்மையாக அழைத்தான் குணா.

நண்பன் மனம் மாறிவிட்டானோ என்று ஆவாலாகப் பார்த்தான் அஷ்வின்.

“அம்மு! ஆவணங்களோட சேர்த்து, உனக்கே உனக்குன்னு மாமா ஆசையா ஒரு பரிசு வெச்சிருக்கேன்! ஊருக்குப் போனதும் மறக்காம பாரு! இந்த மாமானை மீறி எதுவும் நடக்காதுன்னு நீயே புரிஞ்சுப்ப! !” பதமாய் பேசி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

‘அதை இப்போவே பிரிச்சுப்பாரு யமுனா!’ அஷ்வினின் மனசாட்சி உரக்க எச்சரித்தது.

மாமனின் வசியப்பேச்சில் மிதந்தவளின் செவிகளை அது எட்டவில்லை. மகளுக்கும், மாமனுக்கும் முத்தம் கொடுத்துவிட்டு அமைதியாக நகர்ந்தாள் பெண்.

நண்பனின் ஊசலாடும் மனதை படித்தவன், “நண்பா! நான் சொன்னத செஞ்சிட்டு என்னோட புது நம்பருக்கு போன் செய்…உனக்காக இங்க உன் மனைவி குழந்தைகள் எல்லாம் காத்துக்கிட்டு இருக்காங்க…சீக்கிரம் வந்துடு!” பூடகமாக எச்சரித்தான்.

எல்லாம் கைமீறி போய்விட்டதை உணர்ந்த அஷ்வின் அமைதியாக தலையசைத்து யமுனாவை பின்தொடர்ந்தான்.

“மதுகுட்டி! இனிமே உனக்கு அம்மா, அப்பா எல்லாம் நான்தான் டா செல்லம்!” குழந்தையை உயரத் தூக்கியவன்,

“அப்பா சொல்லு!” கெஞ்சலாகக் கேட்டான்.

“ஆ…ஆ…ஆ” மொழிந்தவள்,

‘நடப்பது அத்தனைக்கும் நானே சாட்சி!’ என்பது போல இளித்தாள்.

இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில், குணாவின் புது எண்ணுக்கு அழைத்த அஷ்வின், யமுனா உண்மை அறிந்து முதலில் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், கவர் திறந்துப் பார்த்ததில் அமைதியானதாகவும் தகவல் கொடுத்தான்.

வெற்றிப்புன்னகையுடன், தொட்டிலில் உறங்கும் அதிர்ஷ்ட தேவதையின் நெற்றியில் முத்தமிட்டான்.

சொந்தபந்தங்களுக்குக் கட்டுக்கதைச் சொல்வதைப் பற்றி தீவிரமாக சிந்தித்தவனுக்கு, கடவுள் வழிகாட்டியது போல இருந்தது, அன்று மாலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தலைப்பு செய்தி.

நியுயோர்க் மாநிலத்தில் காட்டுத்தீயாக பரவிக் கொண்டிருந்த கொரோனா தொற்றுப் பற்றிய செய்தி அது!

அமெரிக்காவில் நாள்தோரும் உயிர் சேதம் ஆயிரம் கணக்கில் ஏற்படுகிறது என்றும், குறிப்பாக நியுயோர்க் நகரத்தில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என உலகமே அறிந்திருந்தது.

பெற்றொரின் மூடநம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டான் குணா.

யமுனா கொரோனா தாக்கத்தால் இறந்துவிட்டதாகத் தகவல் சொன்னான்.

நோயின் தீவிரத்தால் ஊரடங்கு, போக்குவரத்து முழக்கம் என்று தொடர்ந்த அரசாங்க கட்டளைகளால், பெண்ணின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போனது என்று ஆழ்துயரத்தில் இருந்தவர்கள், குணாவை வெறுத்தார்களே தவிர அவன் மேல் எள்ளவும் சந்தேகம் கொள்ளவில்லை.

இன்று….

இரண்டு வருடங்களாக அவனுக்குத் துணைப்போன சந்தர்ப்பங்கள் இந்த இரண்டு நாள் டெல்லி பயணத்திலும் கைகொடுத்தது.

யமுனாவின் கண்ணில் தென்படாமலேயே, சென்னை புறப்படும் விமானத்தில் ஏறி அமர்ந்ததை எண்ணி நெகிழ்ந்தான்; ஊரில் தனக்குக் காத்திருக்கும் சவால்களைப் பற்றி அறியாதவன்…

டெல்லி விமான நிலையத்திலிருந்து இருநூறு மைல் தொலைவில் இருக்கும் யமுனா அவன் வருகையை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்;

பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இளம் பெண்களோடு சிற்றாடை தைத்துக் கொண்டிருப்பவளுக்கு அவனைச் சந்திக்க அவசியமில்லை; சிந்திக்கவும் நேரமில்லை!

‘தெய்வம் நின்று கொல்லும்’ என்று இவன் மனதில்,

தெளிவு பிறக்கும் நாள் தான் என்றோ?

ஊரார் பிள்ளைகளுக்குச் சிற்றாடை தைப்பவள்,

பெற்ற பிள்ளையைச் சீராட்டும் நாள் தான் என்றோ?

சுகமும் துக்கமும் எவருக்கும் நிரந்தரமில்லை-அதை

சுற்றும் காலச்சக்கரம் தலைகீழாய் மாற்றும் -இவர்கள்

உணரும் நாள் தான் என்றோ – விடை தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…

Please Click Here to Comment!