பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 06
தமக்கை தனக்கென பிரத்யேகமாக தைத்திருந்த பாவாடை தாவணியை அணிந்து அழகு பார்த்தவள், அதைப்பற்றி ஓயாமல் பெருமையடித்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா எவ்வளவு நினைவா, நான் கேட்ட ஒண்ணொண்ணும் செஞ்சிருக்கா பாரேன்! தாமரைப் பூக்கள் மடிப்பில் வரா மாதிரி தைக்கச் சொன்னேன்…அப்புறம் இந்தப் பச்சை இலைகள் பார்டர்!அதுல குந்தன் கற்கள்!” உடையின் நுண்ணிய வேலைபாடுகளை சுட்டிக்காட்டி வர்ணித்தவள்,
“குணா மாமா ஏன் என்னை பார்க்காமலேயே கிளம்பிட்டாரு…பாப்பாவையும் அழைச்சிட்டு வந்திருந்தாரா மா!” அன்னையின் தோளினை அரவணைத்துக் கேள்விகளை அடுக்கினாள்.
பெற்றோரின் எதிர்ப்புகளை மீறி யமுனாவும், குணாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை தாண்டி, சுதாவிடம் வேறெதுவும் சொன்னதில்லை அவர்கள். கல்லூரியில் படிக்கும் பெண்ணின் மனதில் வீண் எண்ணங்களை விதைக்க வேண்டாமென்று நினைத்து மறைத்திருந்தனர்.
கணவரே மகளிடம் அனைத்தையும் பக்குவமாக விளக்கட்டும் என்ற எண்ணத்தில், அவருக்குக் கண்ணசைத்தாள் மீனாட்சி.
“அது…அவனுக்கு வேறேதோ முக்கியமான வேலையாம்….” மாணிக்கம் மழுப்ப,
“பரவாயில்ல பா! நாளைக்குச் சாயங்காலம் நானே போய் பார்த்துட்டு வரேன்!” சுதா சுலபமாக வழிசொல்ல,
“முறிந்த உறவு முறிந்துபோனது தான். யாரும் போய் புதுப்பிக்க வேண்டாம்!” மகளின் கைகளை விலக்கி மீனாட்சி படபடவென்று பேசினாள்.
“ஏன் மா உனக்கு இவ்வளவு கோபம்! நம்ம அக்கா! நம்ம மாமா தானே!” சுதா தாழ்ந்த குரலில் கெஞ்சினாள்.
இனியும் அவளிடம் மறைப்பது உசிதமில்லை என்று உணர்ந்தவள், “அவன் லட்சணத்தைப் பற்றி நீங்க சொல்றீங்களா, இல்ல நான் சொல்லவா?” பொறுமையிழந்தாள்.
“அது…அது…” மாணிக்கம் தயங்க,
“அந்தப் படுபாவி நம்ம யமுனாவை கல்யாணம் செய்துகிட்டதே பணத்துக்காகத் தான்!” பட்டென்று உண்மையை உடைத்தாள் மீனாட்சி.
பேரதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மகளின் மனவோட்டத்தை உணர்ந்தவர், அவளைத் தன்னருகில் அமரும்படி அழைத்து, நடந்த அனைத்தையும் ஒளிவுமறைவின்றி மகளிடம் பகிர்ந்து கொண்டார்.
குறுக்கு விசாரணை எதுவும் செய்யாமல், சுதா அமைதியாகத் தன் அறைக்குள் செல்ல, மகள் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டாள் என்று பெருமூச்சுவிட்டார் மாணிக்கம்.
குணாவை கெட்டவன் என்று ஏற்க மறுத்த பேதையின் மனதிலோ பல விடைதெரியாத கேள்விகள். நொந்துக் கிடக்கும் பெற்றோரிடம் அதைப் பற்றி உடனே கேட்டுப் புண்படுத்த வேண்டாமென்று ஒத்திப்போட்டாள்.
இப்படியே ஒரு வாரம் அமைதியாகக் கடந்தது.
சாப்பிடுவது என்னவென்று கூடத் தெரியாமல் செய்தித்தாளில் மூழ்கியிருக்கும் அப்பாவின் அருகில் அமர்ந்தவள்,
“குணா மாமா பற்றி நீங்க சொன்னது எல்லாம் நம்பறேன்…ஆனா…ஒரு சந்தேகம்…!” மெல்லமாக பேச்சுக்கொடுக்க,
மாணிக்கத்திற்குப் புரையேறியது. கணவருக்குப் பருக தண்ணீர் கொடுத்த மீனாட்சி,
“இன்னும் என்னடி சந்தேகம்!” கடுகடுத்தாள்.
“பொறுமையா இரு மீனாட்சி. அவ கேட்டகட்டும்!” மகளுக்குப் பரிந்துப் பேசினார் மாணிக்கம்.
“உண்மையிலேயே மாமாவுக்கு நம்ம சொத்து பணம் மேல ஆசையிருந்திருந்தா அதெல்லாம் ஏன் அக்கா பேருல எழுதி வாங்கணும்…அதுல அவருக்கு என்ன லாபம்?” முதல் சந்தேகத்தை முன்வைத்தாள்.
“எல்லாம் வெளிவேஷம்! உன்னோட அக்கா சீக்கிரமே இறந்துடுவான்னு அவனுக்குத் தான் தெரியுமே!” மீனாட்சி குறுக்கிட,
“மீனாட்சி!” மனைவியை அமைதிகாக்கும் படி நினைவூட்டியவர், மகளுக்கு விளக்கினார்.
“அதான் அவன் தந்திரம் சுதா! சொத்தெல்லாம் யமுனா பேருல எழுதி வாங்கிகிட்டாலும், அதை என்ன செய்யணும்னு முடிவெடுக்கற முழுஉரிமை, அதாவது “பவர் ஆஃப் அட்டோர்னி” தன் பேருல பதிவு செஞ்சுகிட்டான்…அதுக்கு அப்புறம் அந்தச் சொத்தெல்லாம் என்ன செஞ்சான்னு எனக்குத் தெரியாது…” இடவலமாய் தலையசைத்தவர்,
“…தெரியவும் வேண்டாம்! இத்தனை நாளா ஊருக்கு வராதவன் உன் கல்யாணம் சேர வந்திருக்கான்னா, ஏதோ திட்டத்தோட தான் வந்திருப்பான்! நீ தயவு செய்து அவன்கிட்டேந்து விலகியே இரு மா!” மகளிடம் வாய்விட்டு கெஞ்சினார்.
மனதை நெருடும் கேள்விகள் ஏராளம் இருந்தபோதும் தந்தையின் பரிதவிப்பை கருதி சம்மதம் என்றாள். ஆனால் அக்காவின் நினைவலைகளில் இருந்து மீள முடியாமல் தவித்தாள்.
அன்று மாணிக்கம் அலுவலக வேலையாக ஊருக்குச் சென்றிருந்தார். அம்மாவிடம் மனம்திறந்து பேச முடிவுசெய்தவள்,
“அம்மா! என்னதான் குணா மாமா பணத்தாசைப் பிடித்தவரா இருந்திருந்தாலும், அக்காவும் மாமாவும் சந்தோஷமா தானே இருந்தாங்க!” மேலோட்டமாகத் துவங்க,
“அவர்களைப் பற்றிப் பேச ஒண்ணும் இல்லன்னு உனக்கு எத்தனைமுறை சொல்றது டி!” மகளை பேசவிடாது எகிறினான் மீனாட்சி.
“ப்ளீஸ் மா! என்னைக் கொஞ்சம் பேசவிடு! எனக்கும் நாளைக்குக் கல்யாணமாகப் போகுது!” தீவிரக்குரலில் தடுக்க, மீனாட்சியும் சாந்தமானாள்.
“நீங்க சொல்றா மாதிரி அவ்வளவு பிரச்சனைகள் இருந்திருந்தா… அவங்களுக்குள்ள தாம்பத்தியம்…அக்கா உடன்பாடு இல்லாம…குழந்தை எப்படி…” மென்றுவிழுங்க,
ஆண்கள் வர்கத்தை மகள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்ற விரக்தியில் சிரித்த மீனாட்சி,
“இந்த விஷயத்துல பல பெண்களுக்குத் தன் விருப்பத்தை வாய்திறந்து சொல்லக்கூட உரிமை இல்லை…அனாவசியமா யோசிச்சு குழம்பாத மா…போய் படு!” நாசுக்காகப் பேச்சைத் தவிர்த்தாள்.
சுதாவும் சிந்தனையில் சஞ்சரித்தவளாகக் கதவை நோக்கி நடந்தாள்.
திருமணமாகவிருக்கும் பெண்ணிடம் பயமுறுத்துமாறு பேசிவிட்டோமே என்று தெளிந்தது தாய்மனம்.
“சுதா! ஒரு நிமிஷம் இங்க வா மா!”
“குணா உன்னோட அக்காவை வற்புறுத்தி தான் கல்யாணம் செஞ்சிகிட்டான்.” தாழ்ந்த குரலில் தொடங்கியவள், அன்று முருகர் கோவிலில் குணா மிரட்டுவதுமாக, யமுனா தேம்பி அழுவதுமாக தங்கள் நண்பர் செந்தில்நாதன் கண்கூடாகப் பார்த்ததையும், அதைப்பற்றி அவர் தங்களிடம் பகிரும் முன் அனைத்தும் கைமீறி போய்விட்டது என்றும் வருந்தியவள்,
“பாவம் நம்ம யமுனா…அந்தப் பாவிகிட்ட என்னவெல்லாம் கொடுமை அனுபவிச்சாளோ!” சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.
“அம்மா…”
கண்களைத் துடைத்துக்கொண்ட மீனாட்சி, மகளின் தாடையைக் குவித்து,
“எல்லா ஆண்களையும் அப்படிச் சொல்லிட முடியாது மா! கிஷோர் ரொம்ப தங்கமானவர்…நீ எதையும் நெனச்சு பயப்படாதே!” என்று அவள் கன்னத்தில் தட்டிக்கொடுத்தாள்.
தாயின் தயக்கத்தை உணர்ந்தவள், “தெரியும் மா! நீ கவலைப்படாம தூங்கு!” ஆறுதலாகப் பேசி நகர்ந்தாள்.
அவளும் தன் வருங்காலக் கணவன் கிஷோர் பற்றி நன்கு அறிந்திருந்தாள். ஒரு வாரமாகத் தான் இயல்பாகப் பழகாத போதும் அவர் பெருந்தன்மையுடன் அனுசரித்துப் போனதை நினைவூட்டிக்கொண்டாள்.
பெற்றோர் சொல்வது அனைத்தும் ஏற்கக்கூடியதாக இருந்தாலும், தாயில்லா பிள்ளை மதுமிதாவின் எதிர்காலத்தை எண்ணி கவலையுற்றாள்.
செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவதற்கு என்றாலும் கூட, ஒரு ஆணிடம் தனியாக வளரும் பெண் குழந்தையின் நிலையை எண்ணும்போதே மனம் கனத்தது. யமுனா அவளிடம் ஏதோ சொல்ல வருவதுபோல ஒரு பிரம்மை.
ஒருமுறை குணாவை நேரில் சந்தித்துப் பேசினால் தெளிவு பிறக்கும் என்று நம்பினாள்.
காலையில் அலுவலகம் புறப்படத் தயாராகி வந்தவள் அன்னையிடம் தன் திட்டத்தைச் சொல்ல, கேட்டவளுக்குத் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
“கடவுளே! உனக்கு என்ன பைத்தியமா டி! அவன் மேல இரக்கப்பட்டு, நீயே உன் வாயால ரெண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு சொல்லுவன்னு தான் காத்துக்கிட்டு இருக்கான்…” குமுறினாள் மீனாட்சி.
“அட அம்மா! உன் கற்பனை குதிரையைக் கொஞ்சம் ஓரங்கட்டு…கிஷோர் தான் என் கணவர். அதுல எந்தவித மாற்றமும் இல்ல…குழந்தையைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு!” என்றாள்.
“துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாங்களே டி…உனக்கு புரியலையா!” போகாதே என்று தடுத்தாள் மீனாட்சி.
மன்றாடும் அன்னை பக்கம் திரும்பியவள், “ஆயிரம் தான் இருந்தாலும், மதுமிதா நம்ம யமுனாவோட குழந்தை மா. அவ நம்ம வீட்டுத் தேவதை…உனக்கு அது புரியலையா!” எதிர்கேள்வி கேட்டு மடக்கினாள் சுதா.
“வேண்டாம்னு சொல்றேனே…கேளு மா!” மீனாட்சி கதற,
“நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்றேனே…நம்பு மா!” விடாப்பிடியாகப் புறப்பட்டாள் சுதா.
‘படுபாவி… எங்களோட நிம்மதியைக் குலைப்பதே இவனுக்கு வேலை!’ மனதளவில் குணாவை ஏசியவள்,
“சரி! தனியா போகாதே! நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்துப் போகலாம்!” தழைந்து போனாள்.
“வேண்டாம்னு சொல்றேனே…கேளு மா!” மதுமிதா உடன் வராமல், தான் மட்டும் மூன்று நாட்கள் டெல்லிக்குச் செல்வதில் விருப்பமில்லை என்று சாவித்ரியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் குணா.
“நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்றேனே…நம்பு டா!” மதுமிதா தன்னிடம் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள் என்றும், அவளைப் பார்த்துக் கொள்வதில் சிரமம் இல்லை என்றும் மகனிடம் பதிலுக்கு தர்க்கம் செய்துகொண்டிருந்தாள் சாவித்ரி.
“அதுக்கில்ல மா!ராத்திரி என்னைவிட்டு தூங்கவே மாட்டா மா!” குணா சொல்லும்போதே மதுமிதா பாட்டியிடம் தாவிக்கொண்டாள்.
வெற்றிப்புன்னகையுடன் மகனை ஏறிட்ட சாவித்ரி, குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு செல்லம் கொஞ்சினாள்.
“அதுமட்டும் இல்ல மா! அவளுக்கு நேரத்துக்கு மருந்து கொடுக்கணும்…நீ வீட்டு வேலையில் மறந்துடுவ…நீயும் குழந்தையும் என்கூடவே டெல்லிக்கு வாங்க மா!” கெஞ்சலாகக் கேட்டான்.
ஒரு மணி நேரமாக விதண்டாவாதம் செய்பவன் மேல் கோபம் வந்தது அவளுக்கு.
“உனக்கு என்னடா அவ்வளவு அவநம்பிக்கை. அமெரிக்காவில் எவளோ ஒரு வெள்ளக்காரி ஆயாகிட்ட விட்டுட்டுப் போவ…அம்மா என்னை நம்பமாட்டீயா!” கண்களை உருட்டி மிரட்டினாள்.
“அவங்க ஆயா இல்ல…பேபிசிட்டர்!” அந்தக் கலவரத்திலும் அன்னைக்கு ஆங்கிலப் பாடம் எடுத்தான்.
“ஏதோ ஒண்ணு!” உதட்டை சுழித்தவள்,
“இன்னைக்கு ராத்திரி மதுகுட்டி என்னோட தூங்கட்டும். குழந்தை உன்ன தேடினா, நானும் உன்கூட ஊருக்கு வரேன்…இல்லன்னா நீ மட்டும் டெல்லிக்கு போயிட்டு வரணும்!” தீர்மானமாகச் சொல்லி, அவன் பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்தாள்.
குணா இருபதிற்கும் மேற்பட்ட கல்லூரிகளின் அழைப்பை ஏற்றிருந்தான். பெரும்பாலான கல்லூரிகள், காலையில் சென்று மாலையில் திரும்பிவிடும் தூரத்தில் தான் இருந்தது.
தினமும் வெளியே சென்று வர வேண்டிய அவசியமும் இல்லாததனால், வீட்டிற்கு அருகாமையில் இருந்த மழலையர் பள்ளியில் அஷ்வின் ஏற்பாடு செய்திருந்த பேச்சு மற்றும் ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy) பயிற்சிகளுக்குத் தானே அழைத்துச் சென்றான். அவன் வேலைக் காரணமாகப் பயணித்த சமயத்தில் மட்டும் சாவித்ரியும் மனோகரும் குழந்தையைத் தனியாக அழைத்துச் சென்றார்கள்.
மூன்று நாட்கள் டெல்லி ஜெய்பூர் பயணத்திற்கு, சாவித்ரி மறுப்பு சொல்லமாட்டாள் என்ற நம்பிக்கையில், முன்தகவல் சொல்லாமல் அவளுக்கும் சேர்த்துப் பயணச்சீட்டு வாங்கிருந்தான்.
மதுமிதாவை பராமரித்துப் பழகியவளுக்கு, ஊருக்குச் செல்ல விருப்பமில்லை.
குழந்தையை முதல் முறையாகத் தனியாக விட்டுச்செல்வது ஒரு பக்கம், அம்மாவை தன்னருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம், என்று குணா மனதில் ஓடிய கவலைகள் எண்ணற்றவை.
மதுமிதா நிச்சயம் இரவில் தன்னைத் தேடி வந்துவிடுவாள் என்று கனவு கண்டு நித்திரை கொண்டவனின் எதிர்ப்பார்ப்பு கனவாகவே போனது.
காலை எட்டு மணியளவில் அவனாக அவளைத் தேடி வரும்வரை, குணாவை லட்சியம்கூட செய்யவில்லை மதுமிதா. மகனுக்குப் பருக காபி கொண்டுவந்த சாவித்ரி இடுப்பில் அமர்ந்தபடி இளித்தாள். பாட்டி முகத்திலும் கர்வப்புன்னகை மின்னியது.
“எத்தனை மணிக்கு டா கிளம்புற?” இறுமாப்புடன் கேட்டாள் சாவித்ரி.
“அம்மா….” குணா இழுக்க,
“இங்க பாரு குணா! போகும் இடத்துக்கு எல்லாம் கங்காரு குட்டி மாதிரி இவளை மடியில் கட்டிக்கிட்டு நீயும் போகமுடியாது…என்னாலயும் உன்னோட ஊரூரா அலைய முடியாது… கவலைப்படாம போயிட்டு வா!” தொலைநோக்குப் பார்வையுடன் சாவித்ரி விளக்க, குணாவும் வேறுவழியில்லாமல் சம்மதம் சொன்னான்.
மாலை விமான நிலையம் புறப்படுத் தயாராகி வந்தவன்,
“அம்மா! மருந்து எல்லாம் சரியான நேரத்துக்கு கொடுத்திடு. அப்புறம் குழந்தையை வெளி ஆளுங்ககிட்ட தனியா விட்டுடாத… ரெண்டு நாள் தெரபிக்குப் போகலேன்னா பரவாயில்லை!”” நூறாவது முறையாக நினைவூட்டியவன்,
அவள் கையில் ஒரு மெல்லிய மருந்துப் பாட்டிலை நுழைத்து,
“இது… இது மதுமிதாவுக்கு…உபயோகிக்க வேண்டிய அவசியம் இருக்காது… இருந்தாலும் வெச்சுக்கோ!” தயக்கத்துடன் சொல்ல,
அதை முன்னும் பின்னும் திருப்பி ஆராய்ந்தவள், “எதுக்கு டா இது…குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையா…” அவள் குரல் கம்மியது.
“பயப்படாதே மா! ஒரு அவசரத்துக்குத் தான்… நான் சொன்னா மாதிரி மதுகுட்டியை கவனமா பார்த்துக்கோ…இது தேவையேபடாது…” இழுத்தவன், “தேவைப்பட்டா என்ன செய்யணும்னு சொல்றேன்.” என்று அவள் தோளில் தட்டிக்கொடுத்தான்.
உருக்கமான சூழலை உடைக்கும் வண்ணம், மதுமிதா கையில் அபாகஸ் பொம்மையுடன், “மா…மா…மாமா” என்று குணா காலை சுற்றி வளத்தாள்.
“இப்போதான் உனக்கு என் ஞாபகம் வருதா!” பொய்கோபத்துடன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினான்.
அவளும் இடைவிடாமல், “மா…மா…மாமா” என்று இசைத்து, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“உன் அம்மா மாதிரியே காரியம் ஆகணும்னா செல்லம்கொஞ்சு!” சுருங்கிய கண்களுடன், செல்லமாக மிரட்டி முத்தமிட்டான்.
அவர்கள் பாச பரிமாற்றத்தை ரசித்த சாவித்ரியின் இதயமும் கவலைகளை மறந்து நெகிழ்ந்தது.
பாட்டியின் இடுப்பில் சொகுசாய் அமர்ந்தபடி வாசலுக்கு வந்தவள், குணாவிற்கு துள்ளலாய் கையசைத்தாள். குழந்தையின் நெற்றியில் செல்லமாக முட்டி நிமிர்ந்தவனின் முன்வந்து நின்றாள் சுதா;
சுதாவும், மீனாட்சியும்.
“எப்படி இருக்கீங்க மாமா!” வாஞ்சையாக சுதா நலன்விசாரிக்க,
மகளை சந்திக்கவிடாமல் அக்கப்போர் செய்தவள், இன்று நேரில் அழைத்து வந்தது எதற்காக என்று திடுக்கிட்டவன்,
“சுதா…நீ…அத்தை…நீங்க” திக்கித் திணறினான்.
அவன் முகத்தில் வழிந்தோடியப் பயத்தைக் கண்கொட்டாமல் ரசித்தாள் மீனாட்சி.
மூவரின் மௌனமொழிகளை உணராத வெள்ளந்தி மனம் படைத்த சாவித்ரி வந்தவர்களை அன்பாய் அழைத்து, குணா ஊருக்குப் புறப்படும் செய்தியையும் பகிர்ந்துகொண்டாள்.
அதைக்கேட்ட மீனாட்சியின் மனம் நிம்மதி அடைந்தது.
“குழந்தையைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் மாமா!” சுதா மென்மையாக சொல்லி மதுமிதாவை தூக்கிக்கொண்டாள்.
சுதாவிடம் தாவிக்கொண்டவள், அவள் அணிந்திருக்கும் ஜிமிக்கி, பொட்டு என்று ஒவ்வொன்றாய் தொட்டுப்பார்த்து ஆராய,
“மதுகுட்டி சித்தியைப் பார்க்க ஊருலேந்து வந்திருக்காளா!” கொஞ்சினாள் சுதா.
சுதாவையே வெறித்துப் பார்க்கும் மகனின் தோளினை உலுக்கிய சாவித்ரி,
“கிளம்பு டா! நேரமாகுது…அதான் ஒருத்தருக்கு மூணு பேரு உன் மகளைப் பார்த்துக்க இருக்கோமே!” கிண்டல் செய்து,
அவன் இரண்டு நாட்களாக செய்த ஆர்ப்பாட்டங்களை மீனாட்சியிடம் சொல்லிச் சிரித்தாள்.
மகளை இமைக்காமல் பார்க்கும் வஞ்சகனின் மனக்கணக்கை யூகித்தவள்,
“போயிட்டு வா மருமகனே! அம்மாவுக்குத் துணையா நாங்க இருக்கோம்!” நயமாகக் கூறி எச்சரித்தாள்.
‘வேண்டாம்னு சொன்னேனே கேட்டீயா மாமா! எல்லாம் நான் பார்த்துக்கறேன்னு சொன்னீயே…இப்போ என்ன ஆச்சு பாரு!’ யமுனாவின் ஏளனக் குரல் மனதைத் துளைக்க அமைதியாகக் காரில் ஏறி அமர்ந்தான் குணா.
பந்தங்களைப் பயமுறுத்தி பகிரங்கமாய்ப் பேசியவன்,
இன்று நடுங்கி நிற்பது ஏனோ?
மாமன் மகத்துவம் அனைத்தும் அறிந்தும் – மங்கை
சொந்தம் கொண்டாட வந்தது ஏனோ?
விதியின் விளையாட்டா; வினையின் பயனா – தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…