பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 04

மலரும் நினைவுகளை தந்த மஞ்சள் நிற பாவாடை தாவணியை அலமாரியில் பூட்டிவைக்க முடிந்ததே தவிர, அவள் நினைவிலிருந்து மீளமுடியாமல் தவித்தான் குணா. உறங்க வந்தவனின் இமைகளுக்கு இடையே நின்று வாஞ்சையுடன்,

‘மாமா! நான் சொன்னா மாதிரியே நடக்குதா!’ வம்பிழுத்தாள் பெண்.

அன்று…

“அட மாமா! அமெரிக்காவில் வாத்தியார் கூட கிளாஸ் கட் பண்ணலாமா!” மதியமே வீடு திரும்பியவனை குறும்பாகக் கேட்டு வழிமறித்தாள் யமுனா.

“எத்தனை முறை சொல்றது… நான் வாத்தியார் இல்ல… ஐ ஆம் ய காலேஜ் ப்ரொஃபெஸர்!” அழுத்தமாகத் திருத்திச் சொல்லி நகர்ந்தான்.

ப்ரொஃபெஸர்…இந்த பந்தாவுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!” உதட்டைச் சுழித்தபடி, அவனைப் பின்தொடர்ந்தாள்.

‘ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன், நீ சொல் அன்பே!

உடல் உயிரை தள்ளி வாழுமா, நீ சொல் அன்பே…’

பாடல் ஆடியோ ஸிஸ்டத்தில் ஒலிக்க, அவளை ஏறிட்டவன்,

“மேடமுக்கு லவ் ஃபீலிங்கு…” அதட்டலாக கேட்டான்.

“ஏன் இருக்கக் கூடாதா?” எதிர் கேள்வி கேட்டுத் தர்க்கம் செய்தாள்.

அந்தப் பாடலை நிறுத்தியவன்,

‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா…’

வேறொரு பாடலை இசைக்கவிட்டு,

“அப்போ இந்தப் பாடலைக் கேட்டு ஃபீல் பண்ணு அம்மு!” அவள் கன்னத்தை வருடி கண்சிமிட்டினான்.

“பெரிய பொன்னுமணி மாமான்னு நெனப்பு! ஃபீலிங்ஸ் எல்லாம் தானா வரணும்…இப்படிக் கட்டாயப்படுத்தக் கூடாது!” தர்க்கம் செய்தவள், கழுத்தை நொடித்து சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

மடிக்கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தவன் அருகில் அமர்ந்தவள்,

“இன்னைக்கு பணியாரத்துல புதுசா ஒண்ணு சேர்த்திருக்கேன்…கண்டுபிடி பார்க்கலாம்!” கேட்டுக்கொண்டே ஊட்டிவிட்டாள்.

“ம்ஹூம்! தெரியல டி!” மென்று ருசித்தவனின் கண்கள் மட்டும் மடிக்கணினியை அகலவில்லை.

“நீ நேத்து சுக்கினின்னு(zucchini) ஏதோ வெள்ளரிக்காய் மாதிரி வாங்கினையே…அதைத் துருவி போட்டிருக்கேன் மாமா…நல்லாயிருக்கா!” வினவினாள்.

“ம்ம்…!”

அவன் அலட்சியத்தில் கடுப்பானவள், “ரெண்டு நிமிஷம் என் முகம்பார்த்து பேசேன்!” என்று அவன் தலையை வலிய தன் பக்கம் திருப்பினாள்.

“இப்படித் தினமும் பணியாரம் செஞ்சே உங்க அப்பாகிட்ட வாங்கின பணத்தை எல்லாம் செலவழிச்சிடலாம்னு பாக்குறையா!” திடமான குரலில் கேட்டு, தலையை திருப்பிக்கொண்டான்.

“பிணைக்கைதி மாதிரி என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டு, வேறென்ன செய்ணும்னு எதிர்பாக்குற!” கிண்ணத்தை மேஜையில் ஓங்கி வைத்துவிட்டு எழுந்தாள்.

“வேலைக்குப் போ…நாலு காசு சம்பாதி!” அலட்டலே இல்லாமல் கூறி, அவளை வியப்பில் ஆழ்த்தினான்.

“பாஷை தெரியாத ஊருக்குக் கடத்திட்டு வந்துட்டு இப்படியெல்லாம் கொடுமை படுத்துவியா!” மல்லுக்கு நின்றாள் யமுனா.

அவள் கரம்பிடித்துத் தன்னருகில் சுண்டி இழுத்தவன்,

“ஆங்கிலம் ஒரு மொழிதான் அம்மு! எம்.ஏ தமிழ் பட்டதாரி, உன்கிட்ட அவங்களால ரெண்டு வார்த்தை சேர்த்தா மாதிரி தமிழில் பேசமுடியுமா?” அவள் பலத்தைச் சுட்டிக்காட்டினான்.

பெண்ணவள் தலைகுனிந்து சிந்திக்க, அவளை அரவணைத்தவன்,

“நான் சொல்லப்போற வேலையில், நீ யார்கிட்டையும் பேசவேண்டாம்!” நம்பிக்கையும் ஊட்டினான்.

“அப்போ மனசுல ஏதோ வெச்சுகிட்டு தான் பேசுற!” அவன் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டி கண்சிமிட்டியவள், விவரங்களை பகிருமாறு உரைத்தாள்.

“உனக்குப் பிடிச்ச தையல்கலை தான் இந்த ஊருல ஃபேஷன் டிசைனிங்ன்னு சொல்லி, அதுக்குக் கல்லூரியில் பாடமெல்லாம் நடத்துறாங்க!” என்றவன், மடிக்கணினியில் சுட்டிக்காட்டி விளக்கினான்.

வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் என்றும், கல்லுரிக்கு சென்றுவர ரயில் சேவைகள் இருப்பதாகவும் எடுத்துரைத்தான்.

“அடி ஆத்தி! பக்கத்துத் தெருவிற்கு நடந்து போனாலே, வீட்டுக்குத் திரும்பி வர வழி தெரியல…இதுல நான் ட்ரெயின்ல போகணுமா…அதுவும் தனியாகவா!” முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தாள்.

“உனக்கு நான் சாய்ஸே கொடுக்கல… சொன்னதைச் செய்!” அவன் குரலில் ஆளுமை ஓங்கியது.

“ஆனா இதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே மா…மா…மாமா; என் படிப்பில் உனக்கு அவ்வளவு அக்கறையா?” பணம் செலவிடுவதில் மகா கஞ்சன் என்று அறிந்தவள்,செல்லம் கொஞ்சி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

கிள்ளும் அவள் விரல்களை தன் கையில் குவித்தவன், “ஆசைய பாரு…உங்க அப்பாகிட்ட விவரங்களைச் சொல்லி, உன் அக்கௌன்ட்க்கு பணம் அனுப்பச் சொல்லு” என்று படிவங்களை தந்தவனின் கண்ணில் கர்வம் மின்னியது.

“ஊருக்கு வரதுக்கு முன்னாடிதானே, பூர்விக இடத்தை மொத்தமா என் பேருல எழுதி வாங்கிகிட்ட. உடனே இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட, அப்பா எங்க மாமா போவாரு!” துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.

“எங்கையும் போகவேண்டாம்…அதான் உனக்கு ஒரு பைசா செலவாகாம கல்யாணம் ஆயிடுத்தே… சத்திரம், சாப்பாடுன்னு மிச்சமான பணத்தை எல்லாம் கொடுக்கச் சொல்லு…நகைகளை பணமா மாற்றி தரச்சொல்லு…” வழியா இல்லை என்பதுபோல பேசி, அவள் நுனிமூக்கை வருடினான்.

பனித்த கண்களோடு இடவலமாய் தலையசைத்து மறுத்தாள்.

அழுது வீங்கிய அவள் முகத்தை கையில் ஏந்தியவன், “ஏன்…அப்படியே எல்லாத்தையும் சுதா கல்யாணத்துக்குப் பயன்படுத்திக்கலாம்னு நினைக்கறாரா உங்க அப்பா!” ஏளனமாக கேட்க,

அவன் கையை உதறியவள், “நான் வேணும்னா வேலைக்குப் போறேன் மாமா!” அவள் குரல் கம்மியது.

“அவசரப்படாதே செல்லம்! ரெண்டு மாசத்துல வேலைக்குப் போகலாம்!” தீவிரக்குரலில் கூறி, அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் சிந்தியக் கண்ணீர் எல்லாம், அவன் பிடிவாதத்தில் உலர்ந்து போனது. ஏழ்கடல் தாண்டி இருக்கும் மகளின் நலன்கருதி, மாணிக்கம் அவள் கேட்டப் பணத்தை அனுப்பிவைத்தார்.

திட்டமிட்டபடி கல்லூரி வளாகத்திற்கு சென்று பயின்றாள். ரயிலில் சென்று வர ஏதுவாய் குணா அவளுக்கு மாதாந்திர அனுமதிச்சீட்டு வாங்கித் தந்தான். இரண்டு நாட்கள் அவளுடன் பயணமும் செய்து ஏறும் இடம், இறங்கும் இடம் என அனைத்தையும் காட்டினான்.

வகுப்பில் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து ஒப்பேத்தினாள் யமுனா. அவளின் தனித்துவமான தையல்கலை திறமையை மெச்சி ஆசிரியர்களும் சக மாணவர்களும் வெகு விரைவில் சகஜமாக பழக ஆரம்பித்தனர். இரண்டே வாரத்தில் அவளும் உற்சாகமாய் பயிலத் தொடங்கினாள். நாட்கள் அப்படியே நகர, இரண்டு மாதத்தில் முதல்நிலை பாடங்களை செவ்வனே முடித்திருந்தாள்.

அன்று மாலை வீடு திரும்பிய மாமனிடம் வெற்றிப் புன்னகையுடன் சான்றிதழ் ஒன்றை நீட்டினாள்.

“ம்ம்…வாழ்த்துக்கள் அம்மு!” இறுக்கமாகக் கூறி, சான்றிதழை முன்னும் பின்னுமாக அலசினான்.

“அதை கொஞ்சம் சிரிச்ச முகத்தோட சொன்னாதான் என்ன?” கழுத்தை நொடித்தாள்.

“நான் படின்னு சொல்றப்ப கண்ணைக் கசக்கின…இப்போ மட்டும் இளிச்சிட்டு நிக்குற!” இடித்துக்காட்டியவன்,

“பாரு… உனக்கே பெருமையா இருக்கா இல்லையா?” கேள்வியும் எழுப்பினான்.

மாமனின் சட்டை பட்டனை வளைத்து செல்லம் கொஞ்சியவள்,

“இல்லன்னு யாரு சொன்னா… அப்பாகிட்ட பணம்கேட்டு தொந்தரவு செய்யாதன்னு தானே அழுதேன்!” என்று குழைந்தாள்.

தழைந்திருக்கும் அவள் முகத்தை நிமிர்த்தியவன், “அவர் என்னமோ கடன் வாங்கித் தந்தா மாதிரி சலிச்சிக்குற…உனக்குச் சேர வேண்டிய பணத்தைத் தானே கொடுத்தாரு!” நியாயப்படுத்தினான்.

“நல்லாவே கணக்குப் போடுறீங்க வா…த்தி…யார்!” கண்சிமிட்டி வம்பிழுத்தாள்.

“அப்படிக் கூப்பிடாதன்னு சொல்லிருக்கேன் இல்ல…! அவன் அடிக்க கையோங்கும் முன் அங்கிருந்து ஓடினாள். தன் உயிரானவளின் பெயரை சான்றிதழில் வருடியபடி பெருமிதத்தோடு பார்த்துப் புன்னகைத்தான்.

இரவு உணவுக்குப் பின் மடிக்கணினியில் சில வடிவங்களை காண்பித்து, அவளுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னான்.

“எதுக்கு மாமா இதெல்லாம்!” குழம்பியவளாய் திரையை மேலும் கீழும் ஓட்டினாள்.

“இனி என் அம்மு ஒரு தொழிலதிபர். உன் பெயரில் தொழில் அட்டை அச்சடிக்கத்தான்!” பெருமையாகச் சொல்லி அவளை இறுக அணைத்தான்.

“என்ன விளையாடுறியா!” எத்தனித்தாள் பெண்.

இரண்டு மாதங்களில் சுயதொழில் செய்ய வேண்டுமென்று அன்று சொன்னதை நினைவூட்டி தன் திட்டத்தையும் விளக்கினான்.

“இது நிறைய இந்தியர்கள் வாழும் பகுதி அம்மு! பண்டிகை நாட்கள், சடங்குகளுக்கு, நம்ம ஊர் ஆடை அலங்காரங்கள் விரும்புவாங்க. வகுப்புக்கு போயிட்டு வர மிச்ச நேரத்துல, தையல் வேலையை கவனி…நந்தினி அவங்களோட நண்பர்களிடம் உன்னை அறிமுகம் செய்துவைப்பாங்க. இந்த ஊரில்தான் ஃபேஷன் டிசைனிங் படிக்குறன்னு தெரிஞ்சா, நிறைய பேரு நம்பி ஆர்டர் கொடுப்பாங்க!” நீண்ட விளக்கம் கொடுத்தான்.

தனக்குப் பிடித்தமான தையல் வேலையை செய்ய அவளுக்கும் விருப்பம்தான்.

சம்மதம் என்று அவன் தோளில் சாய்ந்து விரல் கோர்த்தவள், “அப்போ எனக்கு வரும் வருமானத்தில் அப்பாகிட்ட வாங்கின பணத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடலாமா மா…மா…மாமா!” யாசிக்கும் குரலில் வினவினாள்.

வெடுக்கென்று எழுந்தவன், “வருமானத்தில் ஒரு சென்ட் குறையாம எல்லாம் எனக்குக் கணக்குக் காட்டணும்…ஒரு டாலர் அவருக்குப் போச்சுன்னு தெரிஞ்சுது…” விரல் நீட்டி எச்சரித்தான்.

கோபாக்கினியாக தன்னையே ஏறிடும் பெண்மானை பதிலுக்கு முறைத்தவன், “வீட்டைவிட்டு ஓடிப்போக நெனச்சவளுக்கு இப்போ மட்டும் அப்பா பாசம் பொத்திகிட்டு வருதா!” குத்தலாகப் பேசி அங்கிருந்து நகர்ந்தான்.

எலியும் பூனையுமென பல நேரங்களிலும், நகமும் சதையுமென சில நேரங்களிலும் நாட்கள் ஓடின. நந்தினியின் உதவியோடு யமுனாவிற்கு நிறைய தையல் ஆர்டர்கள் வந்தன. அவளின் நேர்த்தியான வேலைப்பாட்டிற்குக் கிடைத்த பாராட்டுகளும் புகழாரங்களும், குணாவின் காதிலும் விழுந்தன.

அப்படியொரு நாள் வாடிக்கையாளரிடம் பேசிவிட்டு கதவை அடைத்து உள்ளே வந்தவளை வழிமறித்தவன்,

“வரவர மேடம் கையிலே பிடிக்க முடியறது இல்ல!” பார்வையை வேறுபக்கம் சுழலவிட்டவன், “ஹூம்…பணியாரம் சாப்பிட்டு ரெண்டு மாசம் ஆச்சு!” பொய்யாக சலித்துக்கொண்டான்.

“யோவ் மாமா! நீ தானே நாலு காசு சம்பாதின்னு தொல்லை செய்யற!” அவன் புஜத்தில் நறுக்கென்று கிள்ளினாள்.

“என்னடி மரியாதை எல்லாம் குறையுது!” பதிலுக்கு அவள் தாடையை அழுந்தக் குவித்தவன், முகத்தில் புன்னகை அரும்பியது.

“என் அம்மு பாஷை தெரியாத ஊருல படிக்கறது…வேலை செய்யறது எல்லாம் பார்க்க எவ்வளவு பெருமையா இருக்குத் தெரியுமா” வாஞ்சையாக அவள் நெற்றியில் முட்டினான்.

“நிஜமாவா மாமா!” பூரித்தாள் பேதை.

“ம்ம்..” உதடு பிரிக்காது புன்னகைத்தான்.

“அப்போ நான் உன்கிட்ட ஒண்ணு காட்டுவேன்! கோபப்படமாட்டையே!” என்றவள், அவன் சரி என்று தலையசைத்ததும், சிட்டென்று பறந்தாள்.

மஞ்சள் நிற பாவாடை தாவணி ஒன்றை விரித்து, ஆளுயுரத்துக்கு உயர்த்திக் காட்டி இடவலமாய் அசைந்தாடியவள்,

“நல்லா இருக்கா மா…மா…மாமா!” செல்லம் கொஞ்சினாள்.

“அருமையா இருக்கு அம்மு!” அதன் நுண்ணிய வேலைப்பாடுகளை ரசித்துப் பாராட்டினான்.

“இதை நான் சுதாவுக்கு தெச்சிருக்கேன் மாமா!” அவள் சொன்னதுதான் தாமதம்; அவன் முகம் சுருங்கியது.

“என் கல்யாணத்தில் இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுக்கணும்னு சொன்னா மாமா…அதான்…” ஆதங்கப்பட்டவள்,

“அப்பாவுக்குத் தானே எதுவும் செய்யக்கூடாதூன்னு சொன்ன… இது சுதாவுக்குத் தானே…” நியாயம் கேட்டாள்.

“உன்னோட அப்பாவுக்கு எதுவும் கொடுக்கக் கூடாதூன்னு சொன்னதுனால, இப்போ தங்கைக்கு செஞ்சு சரிக்கட்ட பாக்குறையா!” அழுத்தமாகக் கேட்டு நகர்ந்தான்.

அப்பா, பணம் என்ற பேச்செடுத்தாலே சண்டைக்கு வருகிறானே என்று எரிச்சல் கொண்டவள்,

“போ போ…பணம் காசு எல்லாம் பெருசு இல்லன்னு ஒரு நாள் புரிஞ்சுகிட்டு நீயே உன் கையால இதைச் சுதாவுக்குக் கொடுப்ப பாரு…

…அப்போ இந்த யமுனா நெனப்பு வந்து கண்கலங்கி நிப்ப…ஆனா உன் கண்ணனைத் துடைச்சுவிட யமுனா பக்கத்துல இருக்கமாட்டா!” விரக்தியில் சவால்விட்டு அறைக்குள் சென்று தாளிட்டாள்.

இன்று….

கண்கலங்கி நின்றான்! மஞ்சள் நிற பாவாடை தாவணியை வருடியவன் கண்கலங்கித் தான் நின்றான்.

‘நானே சுதாவுக்கு இதைக் கொடுக்கறேன் அம்மு! என் அம்முகிட்டத் தோற்பதில் எனக்கு எந்த வெட்கமும் இல்ல!’ தனக்குத்தானே முணுமுணுக்க,

“மா…மா…மாமா!” தூக்கம் கலைந்து மெத்தையில் அமர்ந்த மதுமிதா பிஞ்சுக் கரங்களை நீட்டி அவனிடம் தாவிக்கொண்டாள்.

தன் கன்னத்தில் வழிந்தோடும் நீர்வீழ்ச்சியில் கோலமிட்ட அந்தக் குட்டி விரல்களில் யமுனாவின் ஸ்பரிசத்தை உணர்ந்தான். மதுமிதாவின் கருவிழியில் யமுனாவின் உருவம் கண்டவன், குழந்தையை மார்போடு சேர்த்து இறுக அணைத்தான்.

அவளுக்குத் தேவையான பணிவிடைகளை செய்துமுடித்து ஹாலுக்கு வந்தவன், சாவித்ரியிடம் யமுனாவின் வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவிக்க, அதைக் கேட்டவளுக்கு அளவில்லா சந்தோஷம். தானும் உடன் வருவதாகக் கூறினாள்.

“வேண்டாம் மா! ஆள் சேர்ந்தா வீணா வாக்குவாதம் தான் வளரும்!”. அவர்களுடன் தனிமையில் பேசுவது நல்லது என்று வலியுறுத்தினான்.

 மகன் அவர்களுடன் நல்லபடியாக உறவாடினால் போதுமென்று நினைத்த வெள்ளந்தி தாய்மனதிற்கும் அது சரியென்றுபட்டது.

“சரி குணா! ஆனா எதுவா இருந்தாலும் பார்த்துப் பொறுமையா பேசுடா. என்னதான் இருந்தாலும், அவங்க நம்ம மாமா அத்தை…” மகனுடைய முன்கோபத்தை கருத்தில்கொண்டு அறிவிறுத்தினாள்.

இளநகையுடன் அன்னையின் தோளினை வளைத்து அணைத்தவன், “பயப்படாதே மா! மதுகுட்டி அவங்க எல்லாரையும் மயக்கிடுவா பாரேன்!” உறுதியாகச் சொல்ல,

சாவித்ரியும் குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு, “ஆமாம் டா! அப்படியே யமுனா சின்ன வயசுல இருந்தா மாதிரியே இருக்கா குணா!” என்று விரல்களை சொடுக்கி திருஷ்டி எடுத்தாள்.

பாட்டி செய்வதைப் பார்த்து, “மா…மா…மாமா!” என்று இளித்து அவளிடம் தாவிக்கொண்டாள்.

ஒரு மணி நேரத்தில் தயாராகி வந்தவன் யமுனா தைத்தப் பாவாடை தாவணியை சாவித்ரியிடம் காட்டினான்.

உள்ளத்த்தால் நெகிழ்ந்தவள், பூ, பழம், இனிப்புகள் கூடிய ஒரு தாம்பூலத் தட்டாகவே சுதாவிடம் கொடுக்கும்படி கூறினாள். குணாவும் மறுப்பு சொல்லாமல் தலையசைத்தான்.

மகனையும், பேத்தியையும் சுமந்து செல்லும் காரை பார்த்தபடி முன்வாசலில் நின்றாள் சாவித்ரி. யமுனா திருமணத்தில் ஏற்பட்ட மனஸ்தாபங்களுக்கு, சுதா திருமணத்தில் நல்லதொரு தீர்வு ஏற்பட வேண்டுமென்று பிரார்த்தித்தாள்.

மூத்தவள் வைத்த பந்தயத்தில் தோற்றவன்,

இளையவள் இதயத்தில் இடம்பிடிப்பானா -பூர்வீக

இடத்தைக் கேட்டு இம்சித்த மருமகனை,

மாமன் மனமிறங்கி மன்னிப்பாரா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…

Click Here to Comment!