பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 03

பெற்றவர்களின் செய்கையில் கோபம் தலைக்கேறியவன், ஊருக்குத் திரும்ப தீர்மானித்து, அன்றைய தேதியில் புறப்படும் விமானங்களின் விவரங்களை மடிக்கணினியில் அலசினான்.

காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாத மதுமிதா, பால் பாட்டிலை எடுத்துவந்து, “மா…மா…மாமா!” என்று நீட்டினாள். குழந்தையின் பசியையும் ஆற்றாமல், சரியான நேரத்தில் மருந்துகளையும் புகட்டாத தன் அலட்சியத்தை நினைத்து நொந்துகொண்டான் குணா.

மடிக்கணினியை மூடிவைத்து, குழந்தையுடன் சமையலறைக்கு வந்தான். சமைப்பதில் மும்முரமாக இருந்த அன்னையைப் பொருட்படுத்தாது, அவளுக்கு ஒத்தாசையாய் வெண்டைக்காய் நறுக்கி கொண்டிருந்த கமலாம்மாவை அழைத்து,

“குழந்தைக்கு ஒரு டம்ளர் பால் கொட்டித்தாங்க. கொஞ்சம் வெதுவெதுப்பா இருக்கட்டும்; சக்கரை வேண்டாம்!” விவரங்களைச் சொல்லி பாட்டிலைக் கொடுத்தான்.

தனக்கும் பசி வயிற்றைக் கிள்ளியபோதும், வாய்விட்டு கேட்க அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதை உணர்ந்த தாய்மனதிற்கும் முன்வந்து பசியாற்ற விருப்பமில்லை.

வீம்புக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பவளை ஏறிட்டவனுக்கு, அங்கு நிற்கும் ஒவ்வொரு நொடியும், தீ மேல் நிற்பதுபோல தோன்றியது.

“கமலாம்மா! எங்களால யாருக்கும் தொந்தரவு வேண்டாம். நாங்க இப்போவே ஊருக்குக் கிளம்பறோம்.” அம்மாவின் காதில் விழுமாறு உரக்கச் சொல்லி, அங்கிருந்து நகர்ந்தான்.

குடும்ப விவகாரங்கள் தெரிந்தும், கமலாம்மா கண்டும் காணதவளாக அமைதி காக்க, அப்போதும் தாய்மனம் அசரவில்லை;

ஆனால் மகன் சொன்னதைக் கேட்டு சுதாரித்துக்கொண்ட மனோகர், கால் மணி நேரத்தில் மகனைத் தேடி வந்தார்.

மதுமிதாவை தோளில் சுமந்துகொண்டு, குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்றவன், தந்தையைப் பார்த்ததும் அவரிடமிருந்து பால் பாட்டிலை வாங்குவதற்குக் கையை நீட்டினான்.

அதைத் தர மறுத்தவர், “தாத்தாகிட்ட வா டா செல்லம்…அப்பா காபி குடிக்கட்டும்!” என்றதும் மதுமிதா மறுகணமே இளித்துக்கொண்டு அவரிடம் தாவினாள். குணாவும் மறுப்பு சொல்லாமல் அவளை விட்டான்.

மதுமிதா இயல்பிலேயே அனைவரிடமும் சுலபமாக ஒட்டிக்கொண்டு விடுவாள். அவளுக்கு வேற்றுமுகம், பழக்கமில்லாதவர்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை.

பாசத்தைப் பொழியும் எவரிடமும் சிரித்த முகத்தோடு ஐக்கியமாகிவிடும் அழகிய பதுமை அவள்.

முதல் முறையாக குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தவருக்கும் மெய்சிலிர்த்தது. மதுமிதாவின் பட்டான கேசத்தை வருடியவாரே மடியில் அமர்த்திக்கொண்டார். அவளும் தாத்தாவின் அரவணைப்பில், சொகுசாய் அமர்ந்து, பாலை பருகினாள்.

 மகன் காபி குடித்து முடிக்கும்வரை காத்திருந்த மனோகர்,

“குணா! நீ இப்படி கோபப்பட்டு எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுக்கறதுல யாருக்கும் எந்தவித பிரயஜோனமும் இல்ல…தப்பு செஞ்சது நீ!” அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார்.

“ஊரு உலகத்துல யாரும் செய்யாத தப்பையா நான் செஞ்சேன். எல்லாரும் ஏன் என்னை குற்றவாளி மாதிரியே பாக்குறீங்க…” எதிர்த்துப் பேசி கொந்தளித்தான்.

“பின்ன நீ செஞ்ச காரியத்திற்கு, உன்னைப் பாராட்டி சீராட்டுவாங்களா டா!” விடாமல் வாதாடினவர், “யமுனா உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் நீ அவளை கல்யாணம் செஞ்சுகிட்ட…சரி, அவள் மேல இருக்குற பிரியத்துல அப்படிச் செஞ்சிட்டன்னு தான், பரிகாரம் செய்யச் சொன்னோம்…அதையும் செய்யாம அலட்சியபடுத்திட்டு, அவளே இல்லாம ஆக்கிட்ட!” பிழைகளை நினைவூட்டினார்.

அவற்றை நினைத்து பார்த்தவனிடம் பதிலேதும் இல்லை.

மனோகருக்கும் நடந்து முடிந்ததைக் குத்திக்காட்டும் எண்ணமில்லை. மகனின் எதிர்காலத்தைத் திருத்தி அமைக்க மட்டுமே விரும்பினார்.

குணா தோளினை ஆறுதலாய் வருடியவர்,

“கொஞ்சம் நிதானமா யோசி குணா! அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மாநாடு, உன் லட்சிய பாதையில் ஒரு முக்கியமான மைல்கல். நீ செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தம் தேடவவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. பிடிவாதத்தைத் தள்ளி வெச்சிட்டு, முதல்ல அம்மாகிட்ட மன்னிப்பு கேளு!” பக்குவமாக அறிவுருத்தினார்.

அவன் நிதானமாக யோசிக்க ஒரு நொடிதான் தேவைப்பட்டது.

“அப்பா! தயவுசெய்து எனக்கு எந்த அறிவுரையும் சொல்லாதீங்க…நான் யார் காலுலையும் விழமாட்டேன்; யாருக்கு இஷ்டம் இருக்கோ, அவங்க எங்களோட உறவாடட்டும்! அம்மா பெங்களூர் வந்து, என் மதுமிதாவை பார்த்துக்கச் சொல்லுங்க! அப்போ நான் மாநாட்டுல கலந்துக்கறேன்.

இல்லேன்னா நாங்க இப்போவே ஊருக்குப் புறப்படறோம். எனக்கு என் மகளைத் தவிர வேறேதுவும் முக்கியமில்ல” தன் முடிவை உறுதியாகச் சொல்லி, மதுமிதாவை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டான்.

“ரெண்டு வருஷம் வளர்த்ததுக்கே என் மகள், என் மதுமிதான்னு தலையில் தூக்கிவெச்சுகிட்டு ஆடுறியே… இருபத்துநாலு வருஷமா பொத்திவளர்த்த நம்ம வீட்டுப் பெண்ணை, உன் பிடிவாதத்தால நாங்க இழந்துட்டு நிக்கறோம்…” ஒப்பிட்டுக் கர்ஜித்தவர்,

“என் மனைவி உன் மகளைப் பார்துக்கக் கண்டிப்பா வரமாட்டா! நீ உன் இஷ்டம்போல கிளம்பு!” தீர்மானமாய்ச் சொல்லி வெளியேறினார்.

தந்தை பேச்சில் ரோஷம் தலைக்கேற, இரண்டே விரல்களில் லேப்டாப்பை திறந்தவன், பயணச்சீட்டு வாங்க, பல விமான நிறுவனங்களின் பட்டியல்களை அலசினான். அடுத்த ஐந்து நாட்களுக்கு அனைத்து விமானங்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததை உணர்ந்தான்.

அழையா விருந்தாளியாக வீட்டில் இருப்பதைவிட, விடுதியில் தங்கலாம் என்று தோன்றியது. ஆனால் மதுமிதா விடுதியில் சரியான சாப்பாடு இல்லாமல் அல்லல்பட்டது நினைவுக்கு வர, அந்த யோசனையைக் கைவிட்டான். குழந்தையின் நலன்கருதிச் சுயகௌரவத்தை விட்டொழித்து வீட்டிலேயே இருக்க முடிவுசெய்தான்.

மதுமிதாவிற்குத் தேவையான அனைத்தையும் தானே செய்தான். அவளைக் குளிக்கவைத்து உணவு ஊட்டுவது, விளையாடிக் கதைச் சொல்வது, மருத்துவர் பரிந்துரை செய்தப் பயிற்சிகளைச் செய்வதென்று அன்றாட வேலைகளைத் தனியாளாகச் செய்தான். மாலை நேரங்களில் அருகிலிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.

மகனின் பொறுப்புணர்ச்சியை கவனித்த பெற்றோர் மனதளவில் பூரித்தாலும், யமுனாவின் உருவம் அவர்கள் கண்முன் வந்து வாட்டியெடுத்தது. குணாவிற்கும் தழைந்துபோக மனமில்லை. கமலாம்மா தான் இவர்கள் பனிப்போருக்கு இடையே அல்லாடினாள்.

கண்ணாமூச்சி ஆட்டம் முடிவேயில்லாமல் நீடிக்க, ஊருக்கு புறப்படும் நாளும் வந்தது.

மாநாட்டிற்காகக் கொண்டுவந்த கோப்புகளைப் பையில் வைத்தவனின் மனம் ஏக்கத்தில் கனத்தது. இரவுபகலாக உழைத்தது எல்லாம் வீண்போனதை என்ணி வருந்தினான்.

‘இனி உங்க வாழ்க்கை நல்லாயிருக்கான்னு பாருங்க மா…மா…மாமா!’ யமுனாவின் குரல் மனதில் எதிரொலிக்க, அவன் கண்கள் குளமானது.

ஆழந்து உறங்கும் மதுமிதா அதை உணர்ந்தாற் போல, “மா…மா…மாமா” என்று முனங்கினாள்.

குழந்தையின் உச்சந்தலையில் முத்தமிட்டவன், “என் வாழ்க்கை நல்லாதான் இருக்கு அம்மு…நான் ஒரு நாளும் தோற்றுப்போக மாட்டேன் டி!” மனசாட்சியாய் வலம் வந்தவளுக்குக் கம்பீரமாகப் பதிலளித்தான்.

அச்சமயம் அவன் கைபேசி ஒலிக்க, ஊரிலிருந்து தன் மாணவன் ஒருவன் அழைப்பதை உணர்ந்தான்.. பாடப்பகுதியில் மாணவன் கேட்ட ஐயங்களுக்கு விளக்கம் சொன்னான்.

யமுனாவின் நினைவுகளில் தத்தளித்தவனுக்கு அஷ்வினிடம் மனம்விட்டு பேசினால், ஆறுதலாக இருக்குமென்று தோன்றியது. உறங்கும் குழந்தைக்குத் தட்டிக்கொடுத்தவன், கைபேசியுடன் மொட்டை மாடிக்குச் சென்றான். ஊருக்கு வந்து சேரும் நாள், நேரம் என விவரங்களை பகிர்ந்து கொண்டான்.

“கொஞ்சம் உன் பிடிவாதத்ததை விட்டுட்டு அம்மாகிட்ட பேசு டா! எப்படியாவது மாநாட்டுல கலந்துக்க பாரு!” நண்பன் முடிவில் அதிருப்தி கொண்டான் அஷ்வின்.

“யாரு…இவங்க கிட்டையா!” ஏளனமாக சிரித்தவன், தினமும் பாசமாக நெருங்கம் குழந்தை முகம்பார்த்துச் சிரிக்கக்கூட மனமில்லாத கல்நெஞ்சம் படைத்தவர்கள் என்று தூற்றினான்.

“புரியுது குணா…ஆனா…”

“குணா…குணா…சீக்கிரம் வா டா இங்க!” பெருங்குரலில் சாவித்ரி அலற, அதில் பதறியவன் பாய்ந்தடித்த ஓடினான்.

இமைக்கும் நொடியில் அங்குச் சென்றவனின் கண்கள் சிவந்தது.

மதுமிதாவை மடியில் சாய்த்தபடி அவள் தலையைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள் சாவித்ரி.

“தம்பி…அது…பாப்பா, தூங்கி எழுந்து உன்னைத் தேடிட்டு வந்திருக்கா போல…. நான் அப்போதான் வீடு துடைத்து சுத்தம் செஞ்சேன்… ஈர தரையில பாப்பா வழுக்கி விழுந்துட்டா….” கமலாம்மா மென்றுவிழுங்க,

தான் குழந்தையைத் தனியாக விட்டுச்சென்றது தவறு என்று தெரிந்தபோதும்,

“இந்த வீட்டுல என் குழந்தைய ஒரு அஞ்சு நிமிஷம் தனியா விட்டுட்டு போக முடியுதா…மனுஷங்க மனசுல அவ்வளவு அழுக்கு…வீடு சுத்தம் செய்யறது ஒரு கேடா?” பழியை அவர்கள் மீது சுமத்தி, மதுமிதாவை தூக்க முயன்றான்.

அனைவரும் வியக்கும் வண்ணம், குழந்தையைத் தர மறுத்தாள் சாவித்ரி.

 தன்னையும் அறியாது தரையில் விழுந்த குழந்தையைப் பதறியடித்துத் தூக்கிய நொடியோ, பாதுகாப்பை உணர்ந்த மதுமிதா தன் பிஞ்சுக் கரங்களால் அவள் கழுத்தைச் சுற்றி வளைத்த தருணமோ, இல்லை கன்னத்தோடு கன்னம் உரசிய வேளையோ சாவித்ரியின் வீம்பெல்லாம் சுக்குநூறாய் உடைந்தது.

“எனக்கும் பாசம் இருக்குடா! அக்கறையும் இருக்கு…மதுமிதா என் பேத்தி…எங்க யமுனா எங்களுக்காக விட்டுட்டு போயிருக்கா…” வாய்விட்டு கதறியவள், கண்களைத் துடைத்துக்கொண்டு,

“எங்களுக்கும் அவள் மேல உரிமை இருக்கு…நான் தர மாட்டேன்…” அழுத்தமாய்ச் சொல்லி, குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்தாள்.

உறைந்து நின்றவன் அருகில் வந்த மனோகர், “மன்னிப்பு கேட்க நீ அவ்வளவு யோசிச்ச… ஆனா அம்மாவைப் பாரு… அதுதான் பெற்றவளின் பாசம்… யார் மனசுல அழுக்கு இருக்குன்னு தெரியுதா இப்போ!”

ஜாடைமாடையாக மகன் பிடிவாதத்தைச் சுட்டிக்காட்டினார்.

சாவித்ரி அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், “என்னோட பெங்களூர் வருவியா மா…வந்து மதுமிதாவை பார்த்துப்பியா மா?” தன்மையாகக் கேட்டுக் குழந்தையின் தலையை வருடினான்.

“ம்ம்! வரேன் குணா!” மனதார சம்மதித்தவள், “முதல்ல குழந்தைக்கு நல்லெண்ணை தேய்க்கறேன். அடிப்பட்ட இடத்துல வீங்காம இருக்கும்!” தாய்மைக்கே உள்ள பரிதவிப்பில் உரைத்து அங்கிருந்து நகர்ந்தாள்.    

மன்னிப்பு கேட்காமல், தன் காரியத்திலேயே குறியாக இருக்கும் மகனின் சுயநலத்தை நினைத்து நொந்தார் மனோகர்.

மகன் விரிக்கும் பாச வலையில் மறுபடியும்  விழுகிறாளே பைத்தியக்காரி என்று மனமுடைந்தவர், மனையாளுக்கு வலிகளைத் தாங்கும் வலிமையும் சேர்த்துக் கொடுக்கும்படி இறைவனிடம் பிரார்தித்தார்.

அங்கே நடந்த அத்தனை பேரதிசயங்களையும் துண்டிக்கப்படாத அழைப்பின் வாயிலாகக் கேட்ட அஷ்வின், நண்பன் வாழ்க்கையில் ஏற்படும் நல்லதொரு திருப்பத்தை எண்ணி நெகிழ்ந்தான்.

மதுமிதாவின் தினசரி பழக்கவழக்கங்களை சாவித்ரியிடம் விளக்கினான். அவள் சாப்பிடக்கூடிய, சாப்பிடக்கூடாத உணவு வகைகள், தினம்தோறும் உட்கொள்ளும் மருந்துகளின் விவரங்கள் என்று பட்டியலிடாதக் குறையாய் பாடம் எடுத்தான்.

தூங்கும் நேரம் போக, மற்ற எல்லா நேரமும், மதுமிதா பாட்டியின் இடுப்பில் சொகுசாய் சவாரி செய்தாள். மதுமிதாவின் மென்சிரிப்பில், சாவித்ரியும் கவலைகள் எல்லாம் மறந்தாள். மனோகர் குழந்தையிடம் சகஜமாக இருந்தாரே தவிர குணாவிடமிர்ந்து தள்ளியே இருந்தார்.

திங்கட்கிழமை திட்டமிட்டபடி மூவரும் பெங்களூர் கிளம்பினர். குணா மாநாட்டில் கலந்து கொண்டான். மதுமிதா பாட்டியின் அரவணைப்பில் பாதுகாப்பாய் விடுதியில் இருந்தாள்.

காலை நேரங்களில் பாட்டி சொல்லும் கதைகளுக்கு “மா…மா…மாமா!” என்று தித்திக்கும் குரலில் ஏட்டிக்குப் போட்டி மழலையில் மொழிந்தும், கைத்தட்டி ஆரவாரம் செய்தும் குதூகலத்துடன் பொழுதுகளைக் கழித்தாள். மாலையில் மூவரும் சுற்றுலா ஸ்தலங்களைக் கண்டு களித்தனர்.

இரண்டு நாட்களில் மாநாடு இனிதே நிறைவடைந்தது. தன் உழைப்பிற்கு எதிர்ப்பார்த்த அனுபவமும் அடையாளமும் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான் குணா.

விழாவில் அவன் விளக்கிய வேதகாலத்துக் கணிதத்தின் கணிப்பு முறைகளை அனைவரும் மெச்சினர். . பாராட்டு விழாக்கள், தொலைக்காட்சி பேட்டிகள் என்று விழா முடிந்து, புறப்படும் நாளும் வந்தது. இந்தியாவின் பிரபலமான கல்லூரி நிறுவனங்களின் சார்பாக வந்திருந்த அதிகாரிகள் அவனைத் தங்கள் கல்லூரிகளுக்கு வந்து சிறப்புரை ஆற்றும்படி அழைத்தனர்.

மதுமிதாவை ஊரூராக அலைக்கழிக்க விரும்பாதவன் அன்பாக மறுத்தான்.

நித்தியமும் வேலையென்று ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த குணா, உறங்கி கொண்டிருக்கும் தாரகையின் பக்கத்தில் இளைப்பாற, சாவித்ரி தன் மனதில் பூட்டிவைத்த ஐயங்களை கேட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

“குணா! குழந்தைக்கு ரெண்டு வயசாகுது…இன்னும் ஏன் சரியா பேச்சு வரல்ல…ஏதாவது பிரச்சனையா?” மனதை உருத்திய முதல் கேள்வியை இறக்கிவைத்தாள்.

அம்மாவின் விழியில் தேங்கியிருக்கும் பயத்தை உணர்ந்தவன் “டெவலெப்மென்டல் டிலே!(Developmental_Delay)” அலட்டலே இல்லாமல் சொல்லி, மதுமிதாவின் விரல்களை வருடினான்.

“ஹான்…அப்படினா!” அவன் ஆங்கிலத்தில் ஏதேதோ சொல்கிறானே என்று இன்னும் குழம்பியவளாய் ஆழமாகப் பார்த்தாள்.

அன்னையின் கரங்களை ஆறுதலாக வருடியவன், “அவளுக்கு எல்லாமே கொஞ்சம் தாமதமாக வரும்…ஆறு மாதத்தில் ஒரு குழந்தை தவழ்ந்தால், இவள் பத்து மாதத்தில்தான் தவழுவா!” அவளுக்குப் புரியும்படி விளக்கினான்.

“அதான் அவளுக்குத் தினமும் அவ்வளவு மருந்து மாத்திரை கொடுக்கறியா!” கேட்டவளின் முகத்தில் கவலை வழிந்தோடியது.

“அவளுக்கு மன…” தொடங்கியவன், அஷ்வினின் அறிவுரைகளை நினைவுக்கூர்ந்து, “இல்லம்மா…ஸ்பீச் தெரபி…பேச்சு வர பயிற்சி கொடுக்கறேன்…” சமாளித்தான்.

“அப்போ அந்த மருந்து மாத்திரை எல்லாம் எதுக்கு?” விடாமல் கேட்டு நச்சரித்தாள் சாவித்ரி.

“பயப்படாதே மா! அதெல்லாம் ஊட்டச்சத்து மருந்து…எதிர்ப்புசக்தி வளர…தேவையான வைட்டமின் போஷாக்குக்காக!” பொய்காரணங்களை அடுக்கினான்.

ஆழந்த சிந்தனையில் இடவலமாக தலையசைத்தவள், “நம்ம பாரம்பரிய உணவுகளில் இல்லாத ஊட்டச்சத்தா, இந்த மருந்துகளில் இருக்கப்போகுது…அதெல்லாம் வேண்டாம்…நான் குழந்தைக்கு ஆரோக்கியமான சாப்பாடு சமைச்சுத் தரேன்.” அக்கறையாகப் பேசினாள்.

மறுத்துப்பேசி அவளை குழப்ப வேண்டாமென்று நினைத்தவன் அங்கிருந்து நகர,

“குணா…மதுகுட்டி அன்னைக்கு எவ்வளவு பலமா தரையில விழுந்தா தெரியுமா?” அவன் கைப்பிடித்து தடுத்தாள் சாவித்ரி.

குணா மௌனம்காக்க, மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்க தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள்,

 “அவ கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல்ல டா. அடிப்பட்ட இடத்தில் எண்ணெய் தேய்க்கறப்ப கூட சிரிச்சிக்கிட்டே இருந்தா!” குழந்தை வலி உணரவில்லையே என்று ஆதங்கத்துடன் பேசினாள்.

அன்னையின் கவலை வழிந்தோடும் கன்னங்களை வருடியவன், “அவளுக்கு வலி தெரியாது மா…அது அவளுக்கு ஆண்டவன் கொடுத்த அற்புத வரம்!” விரக்தியாக பேசி தலையை தொங்கப்போட்ட படி மறுபக்கம் சென்று படுத்துக்கொண்டான்.

மகன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்று உறுதியாக நம்பியவள், சமயம் பார்த்துப் பேச தீர்மானித்தாள். அச்சமயம் மதுமிதா சிணுங்க, அவளைத் தூக்கி மார்போடு அணைத்துத் தட்டிக்கொடுத்தவள்,

“குழ்ந்தைக்கு எந்தப் பிரச்சைனையும் இல்ல குணா! நீ என்னதான் பொத்தி பொத்தி வளர்த்தாலும், தாய் பாசத்துக்கு ஈடாகுமா…யமுனாவோட அரவணைப்பு இல்லாததுதனால தான் குழந்தை ஏங்கி போயிருக்கா…”  தனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்ல,

அதைக் கேட்டவன் செருக்கு ஒரு கணத்தில் குலைந்தது.

“ரெண்டு வயசு குழந்தை மட்டும்தான் தாய் பாசத்துக்கு ஏங்குமா….முப்பது வயசு குழந்தைக்கு அந்த ஏக்கம் இருக்காதா?” இமைக்காமல் கேட்டவன், கண்கள் பனித்தன.

கணப்பொழுதில் தடுமாறியவள் வலது கையை நீட்டி, அருகில் வரும்படி கண்ணசைத்தாள்.

தாய்பாசத்தில் தோற்றுப்போனவன் அன்னை மடியில் தலைசாய்ந்தான்.

தோளில் உறங்கும் குழந்தையின் கன்னத்தோடு கன்னம் அழுத்தி, மடியில் படுத்திருக்கும் மகனின் தலையை மென்மையாக வருடினாள் சாவித்ரி.

“உன்னை நம்பி தானேடா எல்லாருடைய எதிர்ப்புகளையும் மீறி யமுனாவை அனுப்பி வெச்சேன். ஜோசியர் சொன்னா மாதிரி ரெண்டு வருஷம் பொறுமையா இருந்திருக்கலாமே டா…”

புலம்பியவளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் துடித்தான்.

“குணா! இப்போவாவது நான் சொல்றத கேட்கறியா!” மெல்லத் தொடங்கினாள் சாவித்ரி.

“ம்ம்…சொல்லுமா!”

“பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளைச் சேரும்னு சொல்லுவாங்க…நம்ம குடும்ப ஜோசியர்…குழந்தைக்கு தோஷம்…ஏதாவது…” அவள் முடிக்கும்முன், கடும்கோபம் கொண்டு எழுந்தவன்,

“இதுக்குத்தான் நான் ஊருக்கு வர விரும்புறதே இல்ல…எப்ப பாரு ஜோசியம், ஜாதகம்னு…மதுகுட்டிக்கு ஒண்ணுமில்ல!” எறிந்து விழ,

“சரி! சரி! சத்தம் போடாதே! குழந்தை முழிச்சிக்க போறா!” தழைந்து போனவள்,

“அதெல்லாம் வேண்டாம்…எனக்காக இதைமட்டும் செய்!” கெஞ்சினாள்.

“சரி சொல்லு!” கறாராக பதிலளித்தான்.

“அத்தை மாமாவை பார்த்துட்டு வா…ஆயிரம்தான் இருந்தாலும் அவங்களுக்கும் குழந்தையை பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல!” மனஸ்தாபங்களை மறந்து உறவாடு என்றாள்.

“நீ புரிஞ்சுதான் பேசுறையா மா!” பொங்கியவன்,

“பாசம் இருக்குறவங்க ஏன் இத்தனை நாளா எங்களை வந்து பார்க்கல?” கேள்வியைத் திருப்பி, “என்னால அழையா விருந்தாளியா யார் வீட்டுக்கும் போகமுடியாது…பேசாம தூங்கு!” திட்டவட்டமாக மறுத்தான்.

குணா அமெரிக்கா புறப்படும் நாள் நெருங்க, சாவித்ரியின் மனவுளைச்சல் அதிகரித்தது. விடுமுறையை நீட்டிக்கச் சொல்லிக் கேட்க அவளுக்குத் துணிவில்லை.

மகன் வந்த நோக்கம் முடிந்தது; இனி யாருக்காகவும் எதற்காகவும் கவலைப்படமாட்டான் என்று மனைவிக்கு நிதர்சனத்தை புரியவைத்தார் மனோகர்.

பொருட்களை பெட்டியில் அடுக்கியவன் கண்களில் அந்த மஞ்சள் நிற பாவாடை தாவணி தென்பட்டது. அது யமுனா தன் தங்கை சுதாவிற்காக தைத்தது.

அதை வருடியவனுக்கு, யமுனா அன்று அமெரிக்காவில் அவனுக்கு விடுத்த சவால் நினைவுக்கு வந்தது. அதை மனதில் அசைப்போட்டவனின் இதழ்கள் கர்வப்புன்னகையில் வளைந்தன.

மெத்தையில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையைத் தூக்கி நெற்றியில் முட்டியவன்,

“மதுகுட்டி! சுதா சித்திக்கு மாமன் சீர் கொண்டு போகலாமா?” என்று கண்சிமிட்டினான்.

அவளும் பதிலளிப்பது போல, “மா…மா…மாமா!” என்று இளிக்க,

“வா இவங்க எல்லாரையும் ஒரு கை பார்த்துடலாம்!” என்று உரக்கச் சிரித்தான்.

உறவுகளே வேண்டாமென்று உறுதியாய் இருந்தவன் – இன்று

உரக்கச் சிரிப்பதின் உள்நோக்கமென்ன – தேனொழுகப் பேசி

உள்ளங்களை குளிர வைப்பானா- தேனீயாய் கொட்டி

உக்கிர தாண்டவம் ஆடுவானா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…