பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 2.2
மனிதர்கள் நடமாட்டம் இல்லாத ஒரு மரத்தின் நிழலில் வந்தமர்ந்தனர்.
“மாமா! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!” எச்சில் விழுங்கி, மெல்லத் தொடங்கினாள் பேதை.
அர்ச்சனை செய்த தேங்காய் மூடியைத் தரையில் அடித்துக்கொண்டே,
“ம்ம்…சொல்லு அம்மு!” எந்தவித அலட்டலும் இல்லாமல் கேட்டான்.
“மாமா! நான்…நான்…ஒருத்தரை காதலிக்கறேன்….” என்றதும்,
அவளைப் பார்வையால் சுட்டெரித்தான் குணா.
“அவர் பெயர் மதுசூதன். நான் அவரைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்… அம்மா அப்பாவுக்கு துளிகூட விருப்பமில்ல…அதனால வீட்டைவிட்டு ஓடிப் போகலாமுன்னு….!” பதற்றத்தில் அனைத்தையும் உளறினாள்.
அவளைப் பார்த்து முறைத்தானே தவிர, முகத்தில் எந்தவித அதிர்ச்சியும் காட்டவில்லை. சட்டை பாக்கட்டிலிருந்து கைபேசியை எடுத்து உயிர்ப்பித்தவன்,
“இப்போ அனுப்பு டா!” திடமான குரலில் அஷ்வினுக்கு ஆணையிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
குறுஞ்செய்தி வந்ததும், கைபேசியை யமுனா முன் நீட்டினான்.
பாழடைந்த கட்டிடம் ஒன்றில்,கைகள் கட்டப்பட்டு, மயங்கிய நிலையில் இருந்தவனை புகைப்படத்தில் கண்டு அதிர்ந்தாள்.
“மது… மது…என்ன டா ஆச்சு உனக்கு…யாரு மாமா அவனைக் கடத்தி வெச்சிருக்காங்க… உனக்கு அவனைத் தெரியுமா மாமா…”
கைபேசியை அதிரடியாக திருப்பிக் கொண்டவன், “நான்தான் கடத்தி வெச்சிருக்கேன்!” என்று கடுதாசி ஒன்றை அவளிடம் தந்தான்.
அதை வாங்கிப் படித்தவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
“ரெண்டு தட்டு தட்டினதுக்கே, நீயும் வேண்டாம், உன் உறவும் வேண்டாம்னு ஓடுறான்…அவனை நம்பி வீட்டைவிட்டு போகத் திட்டம் போடுறையா?” குணா ஏளனமாக வினவ, அவனைக் கேள்வியாய் நோக்கினாள் யமுனா.
“இங்க பாரு அம்மு! நீ அந்தக் கிழவனைக் கல்யாணம் செய்துக்கறத பார்க்கவோ, உன் காதலுக்குப் பச்சைகொடி காட்டவோ நான் ஊருலேந்து வரல்ல.” என்று அவள் விரல்களைக் கோர்த்தவன்,
“என் அம்மு எனக்கு மட்டும்தான். நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம்…” தன் திட்டத்தை அலட்டலே இல்லாமல் உரைத்தான்.
“ஏன் மாமா ஏதேதோ பேசுற… நாம என்ன அப்படியா பழகினோம்… நமக்கு ஜாதகம் பொருத்தம் இல்லேன்னு அத்தை சொன்னபோது கூட நீ பேசாமத்தானே இருந்த…திடீர்னு என்ன மாமா….”,
அவன் மேலிருந்த அதீத பாசத்தால், குரலைக் கூட உயர்த்திப் பேசமுடியவில்லை அவளால்.
“ம்ம்…” தலையசைத்தவன், “பெரியவங்களா பார்த்து கல்யாணம் செய்து வெச்சிடுவாங்கன்னு தான் நானும் பேசாம இருந்தேன்…என்னை கல்யாணம் செய்துகிட்டா, உன் உயிருக்கு ஆபத்துன்னு ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக்கழிச்சிட்டாங்க….”,
அவன் முடிக்கும் முன், “என் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும், நீ என்னை கல்யாணம் செய்துக்க நினைக்கறியா….” பரிதாபமாக கெஞ்சினாள்.
அவள் உணர்ச்சிபூர்வமான பேச்சுக்கள் எல்லாம் அவன் செவிகளுக்கு எட்டவே இல்லை.
“அந்தக் கோழை, உன் சகவாசமே வேண்டாம்னு விட்டு ஓடிட்டான்…இப்போ உன்னோட அப்பா பார்த்து வெச்சிருக்க கிழவனை கல்யாணம் செய்துகிட்டு, வாழ்நாள் முழுக்க பிடிக்காத வாழ்க்கையை வாழப்போறியா…இல்லை உயிரோட இருக்குற கொஞ்ச நாளுக்கு, உன்னை ராணியாட்டம் பார்த்துக்கறேன்னு சொல்ற என்னோட சந்தோஷமா குடும்பம் நடத்த போறியான்னு….யோசி அம்மு!”
“அதுக்கில்ல மாமா… எனக்கு மதுவை ரொம்ப பிடிக்கும் மாமா…அவனுக்கும் அப்படித்தான்…ஏதோ பயத்துல…அவன்…ப்ளீஸ் எங்களை சேர்த்துவைங்க மாமா!” முடிவெடுத்துவிட்டு பேசுபனிடம் வீணாக மன்றாடினாள்.
“எனக்கும் அப்படித்தான் அம்முகுட்டி…உன்னையும் பிடிக்கும்…உன் அப்பா பெயருல இருக்கும் நம்ம பாட்டன் காலத்துப் பூர்வீக இடமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்றவன் அதை வரதட்சணை என்ற பெயரில் யமுனாவை மணந்துகொள்ளும் யாரோ ஒருவருக்கு விட்டுக்கொடுக்க மனமில்லை என்றும் திடமாகக் கூறினான்.
“மாட்டேன்! இந்தக் கல்யாணத்திற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்!” என்று கதறியவள், மதுசூதனின் அலைபேசிக்கு அழைத்தாள்.
இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று அறிந்தவளின் இதயமும், துடிக்க மறந்தது. வெளிறிய அவள் முகத்தை வலுக்கட்டாயமாகத் தன் பக்கம் திருப்பியவன்,
“நான் சொல்றபடி நடந்துகிட்டா, அந்தக் கோழை நல்லபடியா நடமாடிக்கிட்டாவது இருப்பான்…இல்லேன்னா…” அவன் முடிக்கும் முன்,
வெடுக்கென்று எழுந்தவள், கண்களைத் துடைத்துக்கொண்டு வேகநடையிட்டாள்.
உயிராய் நேசித்த காதலன் பயந்தோடியதைக் காட்டிலும், நம்பிக்கையின் மொத்த உருவமாய் நினைத்த மாமன், குணம்கெட்டு நடப்பதுதான் அவள் மனதை வாட்டியெடுத்தது.
தெய்வத்தின் சன்னிதானத்தில் பேசிய ரகசியங்கள், அந்த செந்தில்நாதனின் செவிகளுக்கு எட்டாமல் போய்விடுமா என்ன.
அங்கிருந்து அவளை அஷ்வின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் குணா. அவள் மனநிலை என்னவென்று புரியாமல் அஷ்வின் திருதிருவென்று முழிக்க,
“நீங்களுமா அண்ணா மாமா கூட சேர்ந்துக்கிட்டு…” ஆதங்கத்தில் குமுறினாள் யமுனா.
“வேண்டாம் குணா! இது சரிவராதுன்னு நினைக்கறேன்!” அஷ்வின் எச்சரிக்க,
மாமன் மகளின் கன்னங்களை மென்மையாக வருடியவன், ”வேப்பிலை அடிச்சா எல்லாம் சரிவரும்!” கிசுகிசுத்து, வாங்கிவந்த பொருட்களை அவள் கையில் திணித்து மறுநாள் காலை ஒன்பது மணிக்கு முருகர் கோவிலில் திருமணம் என்றும் திட்டவட்டமாக அறிவித்தான்.
“மொத்த சொத்தையும் அபகரிக்க நினைக்குற நீ, எதுக்கு இதெல்லாம் மட்டும் வாங்கித் தர மாமா… நீ சும்மா கெட்டவன் மாதிரி நடிச்சு என்கிட்ட விளையாடுற தானே!” ஏதாவது பேரதிசயம் நிகழ்ந்துடாதா என்ற நப்பாசையில் கண்கள் அகல அவனை பார்த்தாள்.
“மொத்த சொத்தையும் என் பெயருல மாத்திக்க, இது மாமா செய்யும் முதலீடு அம்முகுட்டி! அதையெல்லாம் மாமா பெயருக்கு,எழுதிவைக்க சொல்லி, உன்னோட அப்பாகிட்ட நீயே கெஞ்சுவ பாரேன்!” நமுட்டு சிரிப்புடன் பேசியவன், கைபேசியின் திரையில் மயக்கத்தில் இருக்கும் அவளவனின் நிழற்படத்தைக் காட்டினான்.
“ச்சீ…மனசுல வஞ்சனையோட என்னை அப்படிக் கூப்பிடாத!” விலகி நின்றாள் அவள்.
அவளிருக்கும் மனநிலையில் குணாவின் சொல்படி நடப்பாளா என்று அஷ்வின் கேள்வி எழுப்ப,
“அதெல்லாம் வேப்பிலை அடிக்குற விதத்துல அடிச்சா, மறுபேச்சு இல்லாம கழுத்தை நீட்டுவா!” இறுமாப்புடன் சொன்னவன், உயிரானவளின் தோளினை அரவணைத்து,
“வா அம்முகுட்டி…மாமா மனசுல என்ன இருக்குன்னு காட்டுறேன்!” என்று, அவளை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச்சென்று தாளிட்டான்.
அறைக்கதவு சாற்றப்பட்ட ஐந்து நிமிடத்தில், பளார் என்ற அறையும் சத்தம் வீடெங்கும் எதிரொலித்தது.
‘குணா! உனக்கு ஏண்டா இந்த விபரீத ஆசை!” நண்பன் செயல்களுக்கு தலையைக் கொடுத்துவிட்டு முழித்தவன் பெருமூச்சுவிட்டான்.
“ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்” அழைப்பு மணி ஒலிக்க, வாசலுக்கு வந்தாள் மீனாட்சி.
வாடாமல்லி நிறப் பட்டுப்புடவையில், கழுத்தில் தாலியுடன் குணா கைக்கோர்த்து தலைதாழ்த்தி நிற்கும் மகளை கண்டவள், பேச வார்த்தையின்றி உறைந்துப் போனாள்.
“அத்தை…அது…” மெல்லமாகத் தொடங்கினான் குணா.
“அண்ணி! உங்க பிள்ளை செஞ்சிருக்க வேலையைப் பாருங்க!” பெருங்குரலில் கர்ஜித்தாள்.
திருமணப் பத்திரிக்கைகளுக்கு மஞ்சள் தடவிக்கொண்டிருந்த சாவித்ரி, மனோகர், மாணிக்கம் பதற்றத்துடன் வாசலுக்கு ஓடி வந்தனர்.
“அம்மா…அது…” குணா தொடங்க, அவன் சட்டையை கொத்தாய் பிடித்து உலுக்கிய சாவித்ரி,
“என்ன காரியம் செஞ்சிருக்க குணா… இதுக்காகவா ஊருலேந்து வந்த…” ஒப்பாரி வைக்க,
“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்னு, எங்களுக்கு மட்டும் ஆசை இல்லையா குணா… ஜாதகம் சரியில்லேன்னு தானே…” மாணிக்கம் கசந்த குரலில் புலம்பி தங்கையைத் தேற்றினார்.
மகளின் உயிருக்கு ஆபத்து என்று ஜோசியர் சொன்னதை நினைவுகூர்ந்த தாய்மனம், பின்விளைவுகளை எண்ணி பதறினாள்.
“இவன்கிட்ட என்னங்க பேச்சு…அவன் கட்டின தாலியை கழட்டு யமுனா… நம்ம மாப்பிள்ளை வீட்டுல உண்மையை சொல்லிக்கலாம்!”
“வேண்டாம் மீனாட்சி! அப்படியெல்லாம் அவசரப்பட்டு செய்யாத மா…” குறுக்கிட்ட சாவித்ரி, ஜோசியரிடம் பரிகாரம் கேட்கலாம் என்று மறுயோசனை சொன்னாள்.
“உங்களுக்கு, உங்க மகன்தானே ஒஸத்தி… என் பொண்ணு உயிர் பற்றி என்ன கவலை!” விசும்பியவளால், அதற்குமேல் எதுவும் பேசமுடியவில்லை.
“எங்களுக்கு குணா வேற, யமுனா வேற இல்லம்மா மீனாட்சி… சாவித்ரி சொன்னா மாதிரி கேட்டுத்தான் பார்ப்போமே!” புலம்புவதைக் காட்டிலும், பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுதான் உத்தமம் என்றார் குணாவின் தந்தை மனோகர்.
பிள்ளைகள் செய்தது சரியா, தவறா என்று அலசி ஆராய்ந்த பெரியவர்கள் ஜோசியர் சொற்படி நடக்கலாம் என்று ஒருமித்தமாக முடிவுக்கு வந்தனர்.
“அவங்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சிட்டு வாங்க மா!” மாணிக்கம் பெண்களிடம் கூற,
ஜோசியர் சொல்வதின் அடிப்படையிலேயே கல்யாணத்தை அங்கீகரிப்பேன் என்று தீர்மானமாய் சொன்ன மீனாட்சி, மகளை மட்டும் உள்ளே அழைத்தாள்.
“அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும், என் முடிவில் மாற்றமில்லை; ஆளுமையுடன் குறுக்கிட்ட குணா, இரண்டு வாரங்களில், யமுனாவை அமெரிக்கா அழைத்துச் செல்ல வேண்டுமென்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, அவள் தன்னுடன் இருப்பது அவசியமென்றும், அலைபேசியை அசைத்துக் காட்டி அழுத்திக் கூறினான்.
“ஜோசியர் சொல்லாம, என் மகளை உன்னோட அனுப்பமாட்டேன்!” மீனாட்சி திட்டவட்டமாக மறுக்க,
“பெரியவங்க சொல்றத கேளு குணா! பிடிவாதம் பிடிக்காத டா!” மகனை விட்டுக்கொடுத்து போகும்படி கெஞ்சினாள் சாவித்ரி.
“நான் மாமா இருக்குற இடத்துல தான் இருப்பேன்!”
அதுவரை மௌனம் சாதித்த யமுனா வாய்திறந்து பேச, அனைவரும் அவளை ஆழமாய் பார்த்தனர்.
பெண்மானை மெச்சுதலாக ஏறிட்ட குணா,
“நீங்க உங்க ஜோசியர் கிட்ட பொறுமையா பரிகாரம் கேளுங்க அத்தை… நாங்க அதுவரைக்கும் அஷ்வின் வீட்டில் தங்கிக்கறோம்!” கம்பீரமாக உரைத்து, மங்கியின் கரம் கோர்த்து வெளியேறினான்.
“மாமாவை விட்டுட்டு இருக்க மனசில்லையா என் அம்முகுட்டிக்கு!” முகத்தில் புன்னகை ததும்ப அவளை இறுக அணைத்துக் காதோரம் கிசுகிசுத்தான் குணா.
மாமனை விழி உயர்த்திப் பார்த்து முறைத்தவள், “நடிகர் திலகத்துக்கு ஜோடியா வேஷம்போட வந்தாச்சு… அப்போ சரோஜாதேவி மாதிரி நடிச்சுதானே ஆகணும்!” பதிலடி கொடுத்துக் கண்சிமிட்டினாள்.
“வேஷமா!” புருவங்கள் உயர அவளை பார்வையால் விழுங்கியவன்,
“போடு! போடு! நல்லா வேஷம்போடு… யாரு வேணாம்னு சொன்னா… இப்படியே நேர்மறையா சிந்திக்கப் பழகிக்க…அப்போ நடக்கறது எல்லாம் நல்லதுக்குன்னு தோணும்!”
“உங்க அறிவுரைக்கு நன்றி மிஸ்டர்.குணா! எனக்கு எப்பவுமே நல்லது மட்டும்தான் நடக்கும்…” கர்வப் புன்னகையில் உதட்டை வளைத்தவள், “இனி உங்க வாழ்க்கை நல்லாயிருக்கான்னு பாருங்க மா…மா…மாமா!” சவால்விட்டு தலைநிமிர்ந்து முன்னே நடந்தாள்.
இன்று…
“மா…மா…மாமா!” சிணுங்கிய குழந்தை அவன் கன்னங்களை வருட, அதில் விழித்துக்கொண்டவனுக்கு மதுமிதாவின் முகத்தில் யமுனாவின் பிம்பம் தோன்றி மறைந்தது. இரவு முழுவதும், குழந்தையோடு அந்தச் சோஃபாவிலேயே உறங்கியதை உணர்ந்தான்.
‘இனி உங்க வாழ்க்கை நல்லாயிருக்கான்னு பாருங்க மா…மா…மாமா!’ யமுனாவின் குரலில் சஞ்சரித்தவனின் சிந்தனையைக் கலைத்தது வாசற்கதவின் அழைப்புமணி.
“அம்மா! அப்பா! எப்படி இருக்கீங்க!” மூன்றாண்டுகளுக்கு பின் அவர்களை நேரில் பார்த்தவனின் மனம் நெகிழ்ந்தது. அவர்களின் பாசக்கரங்களில் தஞ்சம் புக ஏங்கியது.
“மெல்லமாக தலையசைத்து, மனோகர் பட்டும்படாமல் பதிலளிக்க, சாவித்ரி சிலையாக நின்றாள்.
அச்சமயம், தத்தித்தாவி அவர்கள் அருகில் நடந்துவந்த மதுமிதா, பாட்டி வைத்திருந்தப் பளபளக்கும் பையை வருட, வெடுக்கென்று கழுத்தை நொடித்து நகர்ந்தாள் சாவித்ரி. எந்தப் பக்கம் சாய்வது என்று புரியாமல் மனோகரும் மௌனமாய் மனைவியை பின்தொடர்ந்தார்.
சாவித்ரியின் செயலில், தடுமாறி தரையில் விழுந்த குழந்தையை தூக்கிக்கொண்ட குணாவின் முகத்தில் கோபம் பரவியது.
பிஞ்சு குழந்தையின் பாசம் புரியாமல் வெறுப்பை காட்டும் அன்னையை கண்கொட்டாமல் பார்த்து முறைத்தான்.
பெரியவர்கள் சொற்படி நடக்காமல், ஜோசியர் சொன்ன பரிகாரத்தையும் மதிக்காமல், குடும்பத்தில் பேரிழப்பு ஏற்படுத்தியதற்கு, மகன் முகத்தில் வருத்தமும் இல்லை; மன்னிப்பு கேட்க மனமும் இல்லை என்று தோன்றியது சாவித்ரிக்கு.
தான் செய்தது எதுவுமே தவறில்லை என்று தீர்கமாய் நம்பியவனுக்கு, அவர்கள் துணையில்லாமல் தனித்து வாழமுடியும் என்ற வைராக்கியம் தலைக்கேறியது.
“இவங்க யாரோட தயவும் நமக்கு தேவையில்லை மதுகுட்டி; நாம நம்ம ஊருக்கே போகலாம்!” என்று, வேகமாக தன் அறையை நோக்கி நடந்தான்.
“மா… மா… மாமா!” அவன் கழுத்தை வளைத்து அணைத்த குழந்தையின் மழலை மொழியில் தன் யமுனாவை கண்டான்.
“நம்ம வாழ்க்கை நல்லபடியா தான் இருக்கு மதுகுட்டி! குழந்தையிடம் பேசியவன், தனக்குத்தானே நம்பிக்கை வார்த்தை சொல்லிக்கொண்டான்.
பரிகாரம் செய்யாத பிள்ளை மேல் பரிதாபம் கொள்வாளா – குலம்தழைக்க
பரிமளமாய் வந்தவளின் மென்சிரிப்பில் மயங்கிப்போவாளா – தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…