பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 29

“மதுமிதா ஆரம்பப் பள்ளி”

வெள்ளை நிறத்தில் பெயர் பொறிக்கப்பட்டு, வண்ண வண்ண நிறங்களில் திருகுவெட்டு புதிர் துண்டுகளை ஓரங்களில் கொண்ட அந்த நீல நிற பெயர்ப் பலகையை இமைக்காமல் பார்த்தபடி கைகோர்த்து நின்றுகொண்டிருந்தனர் காதல் ஜோடிகள். அவர்கள் நெஞ்சில் சுமந்த கனவுக் குழந்தை நனவாகிய தினம் அன்று. 

சில மாதங்களுக்கு முன்…

குழந்தை குணாவுடன் வளரவேண்டிய நிதர்சனத்தை, மதுசூதனனின் பெற்றோர் புரிந்துகொண்டார்கள் எனினும், அவளை ஒரு முறையாவது நேரில் அழைத்து வந்து காட்டியிருக்கலாம் என்று வருந்தினர்.

“நீ அவளைப் பார்க்காததே நல்லது மா! அவளோட சிரித்த முகத்தை ஒருமுறை பார்த்தாலும் போதும்…உன் மனச பறிகொடுத்துடுவ; அத்தனை பாசமான குழந்தை மா மதுமிதா!” தேக்கிவைத்த ஏக்கங்களைக் கொட்டியவன்,

“எப்படித்தான் உன் மருமகள், மதுமிதாவை விட்டு இவ்வளவு வருஷம் இருந்தாளோ!” என்று யமுனாவை ஏறிட்டான்.

ஊரில் யதார்த்தமாகப் பேசியவன், மனதளவில் எந்தளவிற்கு உடைந்து போயிருக்கிறான் என்று யமுனா அசைப்போட,

ராணுவ வேலையும் ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்து அவளை இன்னும் வியப்பில் ஆழ்த்தினான் மதுசூதனன்.

“என்ன காரியம் செய்திருக்க மது?”, அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் யமுனா.

“ஒரு ராணுவ வீரனுக்குத் தேவையான அடிப்படை தகுதிகள் எதுவுமே எனக்கு இல்லை யமுனா!

உடலாலும் உள்ளத்தாலும் என்னை முழுசா நம்பி வந்த உன்னை அநாதைன்னு சொன்ன நம்பிக்கைத்துரோகி நான்; நம்ம அன்பிற்குச் சாட்சியா பிறந்த குழந்தைகிட்ட அப்பான்னு உறவாட மறுத்த கோழை நான்!” நொந்துக்கொண்டான்.

“நீ எதையும் வேணும்னு செய்யல மது. அது உன் குடும்ப சூழ்நிலை…” யமுனா விட்டுக்கொடுக்காமல் பேச,

“சமாளிக்காத யமுனா! எனக்கு மட்டும்தான் குடும்ப சூழ்நிலையா…உனக்கு இல்லையா…உன்னோட மாமாவுக்கு இல்லையா…” குறுக்கிட்டவன்,

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் யமுனாவின் பேருக்குக் களங்கம் வராமல் பார்த்துக்கொண்ட தன்னலமற்ற குணா எங்கே; பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாகவும், சமுதாயத்தின் பார்வையில் நல்ல மனிதனாகவும் மட்டும் வாழ நினைத்த சுயநலவாதி தான் எங்கே என்று ஒப்பிட்டுப் பேசினான்.

செய்த குற்றங்களை வெளிப்படையாக ஏற்பதே நற்குணம், தைரியத்தின் அடையாளம் என்று தேற்றியவள், அவனைப் போன்ற தேசப்பற்றுக் கொண்ட ஒருவனின் சேவை நாட்டிற்கு அவசியம் என்று வலியுறுத்தினாள்.

“நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனா மட்டும் இருந்தால் போதுமா. மனைவிக்கு ஒரு நல்ல கணவனா இருக்க வேண்டாமா!” கேள்வியை அவளிடமே திருப்பினான்.

அதைக்கேட்டு மென்மையாகச் சிரித்தவள், “இதெல்லாம் தெரிஞ்சு தானே மது நான் உன்ன கல்யாணம் செய்துகிட்டேன்.” நினைவூட்டி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளை அன்பாக அரவணைத்தவன், “ராணுவம் தான் வேணும்னா, நான் காதலிச்சிருக்கவே கூடாது யமுனா!”,தெளிந்த மனதோடுதான் இம்முடிவை எதுத்திருப்பதாக விவரித்தான்.

ராணுவம் என்பது துறவுக்குச் சமம். நாட்டிற்காகத் தன்னையே அர்பணித்துக் கொள்ள நினைப்பவனுக்கு மனைவி, மக்கள் என்ற ஆசாபாசமே இருக்கக்கூடாது. தன் தேவைக்காகத் திருமணம் செய்துகொண்டு, பிறகு தன்னையே உலகமென பாவிக்கும் மனைவி, பெற்ற பிள்ளைகளை நிர்கதியாக விட்டுவிட்டு, போரில் மரிப்பது எப்படி வீரமாகும்? தன்னலமற்ற சேவை ஆகும்? அது முற்றிலும் சுயநலமே என்று கருதுவதாகச் சொன்னான்.

“ஆனா மது…இது உன் லட்சியம் டா…”

தெரியும் என்பதுபோல தலையசைத்தவன், அவள் உதட்டின் மேல் விரல் வைத்து தடுத்து, “நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தபோதும், நீங்க யாரும் என்னைத் தண்டிக்கல. அதான் நானே எனக்குத் தண்டனை கொடுத்துக்கறேன்!” என்றும்,

மதுமிதாவின் இடத்தை வேறு யாருக்கும் தர விரும்பவில்லை என்று மற்றொரு பேரதிர்வையும் தந்து, தன் எதிர்காலத் திட்டங்களை விவரித்தான்.

மனஇறுக்கம் கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் நல்லவிதமாக அமைய, அவர்களுக்கென பிரத்யேகமான பள்ளி ஒன்று துவங்கி, முறையான பயிற்சி பெற்றவர்களின் துணைக்கொண்டு நடத்த விரும்புவதாகக் கூறினான்.

அதைக்கேட்டவளின் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

தன்னவனை இறுக அணைத்தவள், “நீ சிறந்த ராணுவ வீரன்; அன்பான கணவன்; பாசமான அப்பா டா!” கதறி, முத்தமழையில் நனைத்தாள்.

தனது சின்னதொரு முயற்சியையும், பூதாகரமாகப் பாவித்து பாராட்டும் தன்னவளின் பாசத்திற்கு எதுவுமே ஈடாகாது என்று அவனும் அவள் அன்பில் நனைந்தான்.

பெற்ற பிள்ளையை பிரிந்து வாழும் தம்பதியரின் மனக்கிலேசம் உணர்ந்த மதுசூதனனின் பெற்றோரும் அவர்கள் எண்ணங்களுக்குச் செவிசாய்த்தனர்.

குணா அவர்கள் முடிவில் நெகிழ்ந்தான் எனினும், அவர்கள் வாழ்க்கை திசைமாறியதில் தனக்கும் ஒரு சிறு பங்கு உண்டு என்ற எண்ணம் மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது.

செய்தி கேட்ட மாணிக்கம் அவர்களின் பக்குவத்தை மெச்சி, தன் பூர்வீக இடத்திலேயே பள்ளி துவங்குமாறு கேட்டுக்கொண்டார். மதுசூதனனின் தந்தையும், தனது சேமிப்புகளை முன்வந்து கொடுத்தார். பள்ளி துவங்க வேண்டிய மற்ற சம்பிரதாயங்களையும் அவரே மேற்பார்வையிட்டார்.

உறவுகளின் கூட்டுறவால், அவர்கள் நினைத்ததை விட வேலை மிக விரைவாக நடந்து முடிந்தது.

பள்ளித் திறப்பு விழா இனிதே நிறைவுபெற்ற பூரிப்பில், விருந்தாளிகளை வழியனுப்ப வந்த தம்பதியர், அப்பெயர் பலகை கண்டதும், நினைவலைவில் கலந்தவர்களாக ஸ்தம்பித்து நின்றனர்.

பல்லவியிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாக மதுசூதனனின் அம்மா கூற, சிந்தனையில் கலந்திருந்த யமுனா அவளையே அழைப்பை ஏற்கச் சொன்னாள்.

பல்லவியின் கன்னத்தோடு கன்னம் உரசி, பாட்டி என்று ஐபேடில் ஒலிக்கவிட்டு, சிரித்த முகத்துடன் நலன்விசாரிக்கும் குழந்தையின் அசைவுகளை முதல் முதலில் கண்டவளுக்கு, கரைகாணா இன்பம்.

மகன் அன்று சொன்னது எத்தனை உண்மை என்று அசைப்போட்டவள்,

“மதுகுட்டி! இந்தப் பாட்டியை ஒருமுறை நேரில் வந்து பாத்திருக்கலாமே!” தன்னையும் மீறி கேட்க,

அப்போதுதான் சுயத்திற்கு வந்தார்கள், கனவில் மிதந்த தம்பதியர்.

மதுசூதனன் அவளிடமிருந்து கைபேசியை வாங்க எத்தனிக்க, யமுனா இடைப்புகுந்து, வேண்டாமேன்று கண்ணசைத்தாள்.

பேத்தியுடன் ஆசைத்தீர பேசியவள், மனநிறைவுடன் கைபேசியை மருமகளிடம் நீட்டினாள்.

கட்டிடத்தைச் சுற்றிக் காட்டி விழாவின் சிறப்பு அம்சங்களைப் பற்றி யமுனா விவரிக்க, பெண்கள் அரட்டை கணக்கில்லாமல் நீடித்தது.

குணா முகத்தைக் கண்டதும், “எல்லாரும் வந்திருக்காங்க மாமா! நீங்க மட்டும்தான் வரல்ல!” செல்லம் கொஞ்சினாள் யமுனா.

முனைவர் பட்டம் பெறும் நாள் நெருங்கியதை, நூறாவது முறையாக அவளுக்குச் சலிக்காமல் நினைவூட்டினான்.

அவர்கள் பேச்சுக்குரலை கேட்ட சாவித்ரி, மனோகர், மாணிக்கம் , மீனாட்சி அனைவரும் போட்டிப்போட்டு பேசிக்கொண்டிருக்க, இடுப்பில் குழந்தையுடன் வந்த சுதா, கணவனை தன்பக்கம் இழுத்தபடி,

“மாமா! குழந்தை எதுக்காக அழறான்னு கண்டுபிடிக்க இவருக்கு கொஞ்சம் பயிற்சி கொடு!” புகார் கூறினாள்.

சுதா தன்னை தொட்டதுக்கெல்லாம் மாமனிடம் கேட்டு கற்றுக்கொள்ளும்படி  நச்சரிப்பதாக, கிஷோர் தன் பங்குக்குப் புலம்ப,

“என்னடி கொழுப்பா!என் மகன் குழந்தை வல்லுனர் மாதிரி அவன்கிட்ட ஆலோசனை கேட்க சொல்ற!” என சுதாவின் காதை திருகினாள் சாவித்ரி.

குணாவின் மடியில் அமர்ந்து, அமைதியாக விளையாடிக் கொண்டிருக்கும் மதுமிதாவையும் விஷ்ணுவையும் காணொளியில் காட்டிய பல்லவி,

“அத்தை!அத்தை! உங்க மகன் முதல்ல குழந்தைகளை வசீகரிக்கும் மாமன். அப்புறம்தான் கணித பேராசிரியர்!” என்று அசடுவழியும் தன்னவனின் கன்னத்தைக் கிள்ளினாள்.

அதைப்பார்த்து அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

மாமன் பாசத்தில் யார் தான் விழமாட்டார்கள் என்று சிந்தித்தபடி மதுமிதாவை கண்களால் பருகினாள் யமுனா.

ஆறாண்டு கால தவத்தின் பலனாகக் கிடைத்த  முனைவர் பட்டத்தின் சான்றிதழை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தபடி சோஃபாவில் அமர்ந்திருந்தான் குணா. அவனருகில் வந்து அமர்ந்தவள்,

“இப்போ உங்களை ப்ரொஃபெஸர்ன்னு கூப்பிடணுமா, இல்லை டாக்டர்ன்னு கூப்பிடணுமா!” அப்பாவியாக வினவினாள்.

“மாமான்னு கூப்பிடுங்க திருமதி.பல்லவி குணசேகரன்!”, என்று அவள் மூக்கின் நுணியை உரசியவன், யமுனா தன்னை முதல் முதலில் மா…மா…மாமா என்று அழைத்த பசுமையான நினைவுகளையும் விவரித்தான்.

“குணா! உங்களுக்கு யமுனாவை ரொம்ப பிடிக்கும் தானே!”

இதில் என்ன சந்தேகம் என விழித்தான் அவன்.

“நம்ம நிரந்தரமா இந்தியா போயிடலாம் குணா!” என்றாள்.

“என்ன திடீர்னு!”

யமுனா இன்னொரு குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்தப் போதே அவர்கள் மனநிலை கருத்தில் கொண்டு யோசித்ததாகவும், குணா மேற்படிப்பு முடித்தவுடன் தன் எண்ணத்தைத் தெரிவிக்க நினைத்ததாகவும் கூறினாள்.

இடவலமாக தலையசைத்தவன், “படிப்பு முடிந்ததும் நானும் சில முக்கியமான விஷயங்கள் உன்கிட்ட பேசணும்னு இருந்தேன் பல்லவி!” என்றவன் மேஜையிலிருந்த மடிகணினியை எடுத்தான்.

“பல்லவி!” என்று பெயர்கொண்ட கோப்பு திறந்தவன், நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் அவள் மேற்கொண்டு சட்டம் படிப்பதற்காகச் சேகரித்த தகவல்களை விளக்கினான்.

இந்திய சட்டம் முழுமையாகப் பயின்ற நிலையில், அவள் தொடர்ந்து அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெறுவதற்கான விவரங்கள் அது. அப்பல்கலைக்கழகம் குறிப்பிட்டிருக்கும் சட்டத்தின் பல பிரிவுகளில் இருந்து, அவளுக்குத் தகுந்த ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறினான்.

தனக்காக மாதக்கணக்கில் நேரம் செலவிட்டு தகவல்கள் சேகரித்திருக்கிறான் என்று அந்தப் பட்டியல் பறைசாற்றியது. தன்னவனின் செயலில் நெகிழ்ந்தாலும், அவள் கண்முன் நின்றது மதுமிதா மட்டும்தான்.

“நான் என்ன கேக்குறேன்; நீங்க என்ன சொல்றீங்க குணா!” தன் கேள்விக்குப் பதில் சொல்லும்படி வலியுறுத்தினாள்.

“மதுமிதா நம்மளோட வந்துட்டான்னு அவங்க இன்னொரு குழந்தை வேண்டாம்னு சொல்லல. அவன் மதுமிதாவை தன் குழந்தைன்னு ஏற்க மறுத்ததுக்குப் பிராயச்சித்தம் தேடுறான்.” யமுனா பகிர்ந்துகொண்ட விஷயங்களை கறாராக நினைவூட்டினான்.

“சரி குணா! மதுமிதா நம்மகிட்ட வளர்ந்தாலும், உள்ளூருல இருந்தா நெனச்சபோது வந்து பார்ப்பாங்க! மதுசூதனன் அம்மா கூட எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா?” எதிர்த்துப் பேசியவளை பார்வையால் சுட்டெரித்தான்.

அவன் நெஞ்சை மென்மையாக நீவிவிட்டாள்.

“இருங்க! நான் முழசா சொல்லி முடிக்கல! நம்ம ஊரில் வக்கீல் தொழில் செய்தால் நான் படிச்ச இந்திய சட்டமும் வீண்போகாதே!” என்றாள்.

”போதும் பல்லவி. நீ எங்களுக்காக எத்தனையோ விஷயம் இழந்திருக்க.  உனக்குப் பிடித்த நியூயோர்க் நகரத்தை விட்டு நாம எந்த ஊருக்கும் போகமாட்டோம்!” தீர்மானமாக உரைத்தான்.

“அட குணா! விளையாட்டா நான் வேண்டிகிட்டதுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கறீங்க! சட்டப்படிப்பே நான் சும்மா பொழுதுபோக்குக்காகத் தான் படிச்சேன்!” செல்லம் கொஞ்சி அவனை இறுக அணைத்தவள்,

“என் குணா என் பக்கத்துலேயே இருக்கும்போது, நம்ம எந்த ஊருல இருந்தா என்ன…”

அவள் முடிக்கும் முன் வெடுக்கென்று எழுந்தவன், “பொழுதுபோக்குக்காகச் சட்டம் படிச்சவங்க யாரும் பேட்ச் டாப்பரா மார்க் வாங்கமாட்டாங்க!” பொய் சொல்வதற்கும் ஒரு அளவு உண்டு என்று பார்வையில் கூறிவிட்டு நகர்ந்தான்.

இவன் எப்படி இத்தனை விஷயங்களைச் சேகரித்தான் என்று யோசித்தவள், தன்னவனை கோபமும் தாபமும் கலந்த விழிகளால் பருகினாள்.

பாட்டி சமைத்த உணவை, தன்னவன் ஊட்டிவிட புசித்தவள், ஆஹா ஓஹோ என்று புகழாரம் பாட,

“குணா! நீங்க அவள சமைக்க வேண்டாம்னு சொல்றதே தப்பு! இதுல இப்படி ஊட்டிவிட்டு, கல்லூரிக்கு அனுப்பினா, அப்புறம் அவ எப்படி குடும்பம் நடத்துவா!” வாய்விட்டு கேட்டாள் நீலாவதி.

“அவ எங்க பாட்டி குடும்பம் நடத்துறா! மதுமிதாவுக்கு இணையா போட்டி போடுறா! நாள் முழுவதும், இவள் ‘என் குணா’ சொல்றதும், பதிலுக்கு மதுமிதா ஐபேடில் ‘My Guna!’ ஒலிக்கவிடுறதும், என் பாடுதான் திண்டாட்டமா இருக்கு!” எனப் புலம்பியவன்,

“பாட்டி! நீங்க எங்களுக்கு ஒரு உதவி செய்யணும்!” என்றான்.

பல்லவி கல்லூரிக்குப் போகும் பட்சத்தில், அதே சமயத்தில் ஆரம்பப்பள்ளி செல்லவிருக்கும் மதுமிதாவை மதிய வேளையில் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டான். இந்த நிபந்தனைக்கு தான் செவிசாய்த்தால் மட்டுமே, பல்லவி மேற்கொண்டு படிப்பேன் என்று குறிப்பிட்டதையும் வலியுறுத்தினான்.

தனக்கு அதில் ஒரு சிரமமும் இல்லை என்று மனதார சம்மதம் தெரிவித்தாள் நீலாவதி.

பல்லவி மீது குணா கொண்ட அக்கறையை மெச்சிய சரண், “குணா! கிரீன் கார்ட் வேண்டாம்னு மறுத்துட்டீங்க…இந்தப் படிப்புக்கான பணமாவது…” தடுமாற,

“ஸ்டூடென்ட் லோன் எடுத்துருக்கேன் சரண்!” என்றவன், தன் மேற்படிப்புக்காக வாங்கிய கடன் தொகையின் மீதியை, இரண்டு மாதங்களில் கட்டிமுடித்தப் பின், பல்லவியின் மேற்படிப்புக்கான செலவுகளை எதிர்கொள்ள முடியும் என்று விளக்கினான்.

கடன் வாங்காமல் பல்லவிக்காக தான் சேர்த்து வைத்த பணத்தை உபயோகிக்கலாம் என்று சரண் கூற,

அன்று யமுனாவை வற்புறுத்தி பணம் வாங்கியதை நினைவுகூர்ந்தவன், மென்சிரிப்புடன்,

“என் மனைவிக்கு நானே செலவு செய்யணும்னு ஆசைப்படறேன்!” பணிவாக மறுத்தான்.

“அதுக்கில்ல குணா…வட்டிக் கட்டுறது தவிர்க்கலாமே!”

“அண்ணா!” பல்லவி குறுக்கிட்ட அதே சமயம்,

“சரண் பா! அது அவங்க வாழ்க்கை! அவங்க பார்த்துப்பாங்க!”, கணவன் தோளினில் அழுத்தம் கொடுத்தாள் மஞ்சரி.

“எனக்கு ஏதாவது கஷ்டம்னா, உங்ககிட்ட தான் முதல்ல வந்து உரிமையா உதவி கேட்பேன் சரண்!” குணா அவனை ஆரத்தழுவினான்.

எப்போதும் போல தக்க சமயத்தில் கைகொடுத்த அண்ணிக்கு, நன்றிகளைத் தெரிவித்தவளின் புத்திக்கு ஒன்று எட்டியது.

“அண்ணி! நீங்கதானே என் சான்றிதழ் எல்லாம் இந்த பிரொஃபஸருக்கு கைமாற்றி விட்டீங்க!” எனக் கேட்டு இருவரையும் ஏறிட்டாள்.

குணாவும் மஞ்சரியும் அசடுவழிந்த விதமே அது உண்மை என்று உணர்த்தியது.

பிள்ளைகள் நால்வரின் ஒற்றுமை மேல் கண்பட்டுவிடக்கூடாது என்று இறைவனிடம் பிரார்த்தித்தார் நீலாவதி.

“ஊசி போட்டாச்சு! கண்ணத் திற டா!” நண்பன் தோளினை உலுக்கினான் அஷ்வின்.

மதுமிதாவின் இடதுகையை மென்மையாக வருடியபடி தடுப்பூசி செலுத்திய இடத்தை பரிதவிப்புடன் நோக்கினான் குணா. அதைச் சற்றும் பொருட்படுத்தாத மதுமிதா, சைகை பாஷையில் தனக்கு லாலிபாப் வேண்டுமென்று  கேட்டு அஷ்வினிடம் ஏறிக்கொண்டாள்.

“எத்தனைக்கு எத்தனை காரம் சாப்பிட்டாளோ, இப்போ பல்லவியோட சேர்ந்து நிறைய சாக்லேட்டா சாபிடுறா டா!” குணா பொய்கோபம் கொள்ள,

“அதான் நீயே அழைச்சிட்டு வந்தியா!” குறும்பாக வினவியவன், குழந்தையை செல்லம்கொஞ்சியபடி, பள்ளிக்கூடத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மருத்துவ அறிக்கைகளை எடுத்து வருவதாக சொல்லி நகர்ந்தான்.

பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவனிடம், “என்னால தானே டா மதுமிதாவுக்கு மனஇறுக்கம் வந்துது! நான் யமுனா பேச்சை கேட்டிருக்கணும்ல” கசந்த குரலில் வருந்தியவன்,

பெண்களின் கற்பகால மனவுளைச்சல், குழந்தைகளின் மனஇறுக்கத்திற்கு முக்கியமான காரணம் என்று குறிப்பிட்டிருந்த பக்கத்தைச் சுட்டிக்காட்டி, யமுனாவிடம் கண்டிப்பாக நடந்துகொண்ட நாட்களை நினைவுகூர்ந்தான்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நண்பா!” என்று ஆவேசமாக, வாரஇதழை அவன் கையிலிருந்து பிடுங்கிய அஷ்வின், அவையாவும் அனுமானங்களே தவிர, எதுவும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்று ஆறுதலாகப் பேசினான்.

குணா மறுப்பாய் தலையசைத்தான்.

“சரி அப்படியே இருந்தாலும், தன் குழந்தைக்கு மனஇறுக்கம் இருக்குன்னு ஏத்துக்க மறுக்கற பெரும்பாலான பெற்றோருக்கு மத்தியில், நீ உடனே நிதர்சனத்தை புரிஞ்சு செயல்பட்ட டா!

“ஆடிஸ்ம் குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகள் என்னன்னு சரியா கண்டுபிடிக்க முடியாம போகும்போது தான் குழந்தைகளை வளர்க்கறது சவாலாகுது. பெற்றோரும் தன்னனம்பிக்கை இழக்குறாங்க. ஆனா, நீ மதுமிதாவோட திறமை ரெண்டு வயசுக்கும் முன்னாலேயே கண்டுபிடிச்சிட்ட!” குணாவின் பொறுப்புணர்ச்சியை சுட்டிக்காட்டினான்.

மறுபடியும் கடனே என்று தலையசைத்தான் குணா.

ஆறுதலாக அவன் தோளில் தட்டிக்கொடுத்த அஷ்வின், “மதுமிதா கருவில் இருக்கும்போதே இந்த மாமாவோட கணக்குப் பாடங்கள் கேட்டு வளர்ந்த குழந்தை டா!” தாழ்ந்த குரலில் உரைத்தான்.

“மா…மா…மாமா!” செல்லம் கொஞ்சி, குணா மடியில் ஏறிக்கொண்டாள் மதுமிதா.

அவளிடம் ஐபேட்  தந்த அஷ்வின்,

“மதுகுட்டி, 45*45 வேதிக் மாத்  முறையில் கணக்குப் போட்டு விடை சொல்லு பார்க்கலம்!” என்றான்.

“2025” இமைக்கும் நொடியில் திரையில் காட்டினாள்.

“சரி! இப்போ, 65*65” என்றான்.

“4225” மின்னல் வேகத்தில் பதில் வந்தது.

“குட் ஜாப் மதுகுட்டி!” அவளை மெச்சுதலாகத் தட்டிக்கொடுத்தவன்,

“பாரு டா! நீ அஞ்சு வருஷமா ஆராய்சி செய்த வேதகாலத்துக் கணிதத்தின் கணிப்பு முறைகளை இவ அசால்ட்டா அஞ்சு வயசுல புரிஞ்சுகிட்டா! இதைவிட தெய்வ சங்கல்பத்திற்கு வேறேதாவது சான்று வேணுமா?” கறாராக வினவினான்.

தேவையில்லை என்று தலையசத்தவனின் கண்கள் குளமானது.

“இன்னொரு முறை நீ இப்படி யோசிக்கறத பார்த்தேன், அப்புறம் பல்லவிகிட்ட சொல்லி உனக்கு வேப்பிலை அடிக்க வேண்டியதுதான்!” மிரட்டினான் அஷ்வின்.

பல்லவி பெயரை கேட்டதும், குணாவின் உதடுகள் புன்னகையில் வளைய, மதுமிதா “மாமி…மாமி!” என்று குணாவை நச்சரித்தாள்.

“மாமி கிட்ட போகலாம் டா மதுகுட்டி!” என்றபடி நண்பனை ஆரத்தழுவி நன்றிகளைத் தெரிவித்து புறப்பட்டான்.

உறவாய் வந்த குழந்தைக்காக அவன் உருகுவதும், அவன் அன்பிற்காக மனையாள் மருகுவதும், பேச்சே வராத குழந்தை அவர்களை மட்டும் மழலையில் அழைப்பதும் என மூவரின் புரிதலை கண்ணுற்ற அஷ்வினுக்கு, ரத்த பந்தத்தையும் தாண்டி உண்மையான பாசம் வெல்லும் என்று தோன்றியது.

ஐந்தரை வயது பூர்த்தியான மதுமிதா ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கும், பல்லவி முதுகலை படிப்பிற்காகக் கல்லூரிக்குச் செல்லும் முதல்நாள் என்பதால், அன்றைய காலைபொழுது வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக நகர்ந்தது.

பேராசிரியர் அவர்களுக்குக் காலைஉணவு, மதியஉணவு என சமைப்பதில் ஆயத்தமாக இருந்தார். பெண்கள் இருவரும் கண்ணாடி முன்னே நின்று, வழக்கம்போல ஒருவரை ஒருவர் வம்பிழுத்து சண்டைப்போட்டு கொண்டிருந்தனர்.

பள்ளிப்பேருந்து வரும் நேரம் என்று குணா நினைவூட்ட, மதுமிதாவை செல்லம் கொஞ்சியபடி வந்தாள் பல்லவி. தன்னவன் சமைத்த மிருதுவான இட்லிகளை ருசித்தவள் அவன் கன்னத்தில் இதழ்கள் பதிக்க, போட்டிக்கு மேஜை மேலே ஏறிக்கொண்ட மதுமிதா, அவள் பங்குக்கு மூன்று மடங்காக முத்தங்களை வாரியிறைத்தாள். நொடியில் போட்டி நான் நீ என்று சூடுபிடித்தது.

“போதும் நிறுத்துங்க!” இருபக்கமும் கன்னத்தைப் பற்றிக்கொண்டவன், “யாரு இன்னைக்கு நல்ல பிள்ளையா ஸ்கூலுக்கு போயிட்டு வரீங்களோ, அவங்கள தான் மாமா இரவு கட்டிப்பிடிச்சிட்டு தூங்குவேன்!” என்றதும் இருவரும் அமைதியாக அவரவர் வேலைகளைச் செய்தனர்.

அரைமணி நேரத்தில், பள்ளிப்பேருந்தின் ஜன்னல் வழியே, தன் புன்னகை ததும்பும் முகத்தை நீட்டி, “மா…மா…மாமா! மாமி!” என்று இசைத்து கையசைத்தாள் மதுமிதா.

சாலையில் கைகோர்த்து நின்றவர்கள், பதிலுக்குக் கையசைத்துப் பூரித்தனர்.

கண்ணுக்கெட்டும் தூரம்வரை பேருந்தைப் பார்த்துவிட்டு திரும்பியவன், கல்லூரிக்குச் செல்லும் தன்னவளுக்கும் வாழ்த்துக்கள் கூறி, அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“நைட் என்னைத் தானே கட்டிப்பிடிச்சுப்பீங்க!” முகத்தை அப்பாவியாக வைத்து செல்லம் கொஞ்சினாள் பல்லவி.

அவள் குறும்பை ரசித்தான் எனினும், “போய் படிக்கற வழிய பாரு டி!” என்று விரட்டினான்.

தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தாள் பேதை.

“திருமதி.பல்லவி குணசேகரன்! சாயங்காலம், நானே உங்களை பிக் அப் பண்ணிக்க வரேன்!” உரக்கச் சொல்லி வம்புக்கு இழுத்தான்.

அவன்பக்கம் திரும்பியவள், “ரெண்டு வருஷமா பிக் அப் ஸ்டேஜுலே இருந்தா, நீங்க காதல் பாடத்துல தேர்ச்சி பெறுவது ரொம்ப கஷ்டம் பிரொஃபஸர். நீங்க முதல்ல வாழ்க்கை பாடம் படிக்கற வழிய பாருங்க!” கழுத்தை நொடித்து நகர்ந்தாள்.

தன்னவளின் கைப்பற்றி சுண்டி இழுத்தவன், அவள் முகவாயை ஏந்தி, “வாரத்துக்கு அஞ்சு நாள் வக்கீல், உங்க பாடத்தைப் படிங்க; வாரயிறுதியில மாமாவுக்கு வாழ்க்கை பாடம் எடுங்க!” விஷமப்புன்னகையுடன் அட்டவணையிட,

ம்ஹூம்! மறுப்பாய் தலையசைத்து அசடுவழிந்தவள், “நான்கு நாட்கள் வக்கீல் பாடம்; வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் வாழ்க்கை பாடம்!” தீர்ப்பை மாற்றி உரைத்தாள்.

பல்லவி சொல்லுக்கு மறுபேச்சு ஏது என்பதுபோல அவனும் குறுஞ்சிரிப்புடன் சம்மதம் என்று அவள் நெற்றியில் முட்டினான்.

மாலை பல்லவியின் வகுப்பு முடிவதற்கு முன்னரே, அவள் பயிலும் கல்வி வளாகத்திற்கு மதுமிதாவுடன் சென்றிருந்தான் குணா.

நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தைச் சுற்றி பார்த்தவனுக்கு, தன்னவளின் வேண்டுதல்கள் நினைவுக்கு வந்தது.

‘அங்க மேல் மாடியில தான் என் கணவரோட அலுவலகம் இருக்கும். தினமும் ஷாப்பிங் செய்ய நான் இங்க வருவேன். அவர் என்னை பைனாகுலர்லேந்து பார்த்து சைட் அடிப்பார்.”

காதல் மயக்கத்தில் மிதந்தவன், தன்னவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, வகுப்பு நடக்கும் இடத்தைக் கேட்டுக்கொண்டான்.

இரண்டாவது மாடியில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் தன்னவளைக் கண்டுகொண்டதும், அவளை கீழே பார்க்கும்படி மற்றொரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

தன்னவனைப் பார்த்த மிதப்பில், பெண்ணின் முகம் மிளிர, உற்சாகமாகக் கையசைத்தாள். அவளைக் கவனித்த மதுமிதா “மாமி” என்று கூக்குரல்யிட, பதிலுக்குக் கையசைத்து இளித்தாள் பல்லவி.

முத்தங்களும், கண்சிமிட்டல்களும் பறக்க, மாலை நேர இதமான தென்றலில் காதலின் மணமும் கலந்தது.

இரண்டாவது மாடியில் பயிலும் அவளின் பளிங்கு முகத்தைப் பார்க்க, அவனுக்கு பைனோகுலர்ஸ் தேவை இருக்கவில்லை.

தன்னவன் கரம் சேர துடிதுடித்த பெண்மனதிற்கும் ஷாப்பிங்கில் நாட்டமில்லை.

அவர்களின் காதல் பரிபாஷனைகளுக்கு இடையே மா…மா…மாமா! மாமி என்று கூக்குரல்யிட்டு கிளர்ச்சியில் மிதந்தவளுக்கு, தன் அன்பை வெளிப்படுத்த வேறேதும் வார்த்தை வேண்டியிருக்கவில்லை.

ததாஸ்து என வாழ்த்த வந்த வான்தேவதைகளும் கடந்து செல்ல மனமில்லாமல், நிரந்தரமாக தஞ்சம் புகுந்தனர் அவர்கள் அன்பான உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்!!!

தாரம் என்பவளின் தாய்மையும் தாண்டி – அவள்,

தனித்துவத்தை போற்றும் ஆண்மகனும்,

கணவன் என்பவனின் கடமையும் தாண்டி – அவன்

கனவை தனதாக்கி வாழும் பெண்ணும்,

இல்லறத்தில் இணையும்போது – அவர்கள்

இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு கலந்த புரிதல்,

இடைவிடாமல் வற்றாத நதியாக ஓடும் – தேடிக் கண்டோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்!!!