பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 28

மனையாளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வேகநடையிட்டவன், நள்ளிரவில் யமுனாவை தொந்தரவு செய்யத் தயங்கினான்.

குணா கதவை தட்ட முடியாமல் தவிக்கவும், பல்லவி எதிர்பக்கத்திலிருந்து அவனை தட்டச்சொல்லி கண்ணசைப்பதுமாக நிமிடங்கள் நகர,

“என்ன வேணும் மாமா?” கேட்டபடி யமுனா அவன் எதிரே நின்றாள்.

அதில் துணுக்குற்றவன், “அது…அது…மது நல்லா தூங்கறாளா?”

“ம்ம்…தூங்குறா மாமா!”

“இப்போ காய்ச்சல் இல்லையே!”

“இல்ல மாமா!”

“சரி! தூக்கத்துல இரும்பினா வெதுவெதுப்பான தண்ணீர் கொடு!” விடாமல் அறிவுரைகள் வழங்கிக்கொண்டிருந்தான் குணா.

தான் களத்தில் இறங்கவில்லை என்றால், மாமன் விடிய விடிய விஷயத்தைச் சொல்லாமல் மழுப்புவான் என்று நன்கு அறிந்த பல்லவி,

“என்ன வளவளன்னு பேச்சு!” இருவரையும் கண்டித்தவள்,

“மதுமிதா எங்களோட தான் வளருவா யமுனா! அவள எங்ககிட்ட கொடு!” ஆளுமையுடன் கேட்டாள்.

“பல்லவி…கொஞ்சம் பொறுமையா பேசலாமே…” குணா குறுக்கிட,

“இன்னும் எத்தனை நாள் பொறுமயா இருக்கறது குணா!” சிடுசிடுத்தவள் யமுனாவிடம்,

“உன் புருஷன்கிட்ட எதிர்த்துப் பேசாம, மாமா நோமான்னு சாக்கு சொல்லிட்டு…”

“அப்புறம், நீங்க என்ன மிஸ்டர்.மதுசூதனன்! குழந்தை வேண்டாம்னு சொல்வீங்க; அப்புறம் வேணும்னு சொல்வீங்க; மதுமிதா என்ன கடையில் வாங்குற பொம்மையா? பிடிச்சிருக்கு பிடிக்கலன்னு சொல்றதுக்கு…இல்ல என் புருஷன் தான் என்ன கடைக்காரரா…அவர்கிட்ட பேரம் பேசுறீங்க….” மூவரையும் சரமாறியாகத் தாக்கினாள்.

“பல்லவி ப்ளீஸ்… எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாமே!” காலில் விழாத குறையாய் கெஞ்சினான் குணா.

அவர்கள் பேச்சுசத்தம் கேட்டு வெளியே வந்த அஷ்வின், விவரம் தெரியாததனால் அமைதியாக நின்றான்.

குணா அப்பாவியாக மன்றாடுவதும், பல்லவி விடாமல் பதிலடி கொடுப்பதாகவும்,

அதற்கு மேல் நாடகம் தொடர முடியாத யமுனா, “போதும் பல்லவி! என் மாமா பாவம்!” பக்கென்று சிரித்தவள்,

“மாமா! நாங்க ஏற்கனவே இதைப்பற்றி பேசிட்டோம்; எனக்கு மனப்பூர்வமான சம்மதம். மதுமிதா உன்கிட்ட வளர கொடுத்து வெச்சிருக்கணும்!” என்று அவன் கைவளையத்துக்குள் கோர்த்து செல்லம்கொஞ்சினாள்.

பல்லவியின் விழிகள் அவளை ஏறிட்டது.

“சரி! உங்க ரெண்டு பேர் கிட்டையும் வளர கொடுத்து வெச்சிருக்கணும்!” திருத்திச் சொல்லி,

“ஆனா ஒண்ணு பல்லவி! நீங்க என் மாமாவ அநியாயத்துக்குக் கொடுமை படுத்துறீங்க!” அன்பாக அவள் கன்னத்தைக் கிள்ளினாள்.

பல்லவி தன்னை வெளியே அழைத்துச்சென்றதே இதைப்பற்றி பேசுவதற்குத்தான் என்று யமுனா விளக்கியதும், குணாவிற்கு அத்தனையும் புலப்பட்டது. ஆனால் யமுனா, மதுசூதனனிடம் கலந்தாலோசித்தாளா என்று ஐயம் கொண்டவன், அதைப்பற்றி விசாரித்தான்.

“இந்த விஷயத்துல, பல்லவி சொல்றா மாதிரி எனக்குப் பேசக்கூட உரிமை இல்ல குணா!” மதுசூதனன் தன்மையாக பதில் சொல்ல,

“மன்னிச்சிருங்க மதுசூதனன்! நான் விளையாட்டுக்குத் தான் சொன்னேன்!” வருந்தினாள் பல்லவி.

“தெரியும் பல்லவி!” என்றவன், இருவரும் கலந்தாலோசித்து, மனப்பூர்வமாக எடுத்து முடிவு என்றும் உறுதிசெய்தான்.

“நான் சொன்னா மாதிரியே வேப்பிலை அடிச்சீங்களா!” யமுனா, பல்லவியடம் கிசுகிசுக்க,

“ம்ம்…ம்ம்…!” மெட்டுப்போட்டாள்.

“எல்லாம் உன் வேலையா டி!” யமுனாவின் காதுகளைத் திருகினான் குணா.

“அப்போ! நீதான் அடி வாங்கினையா டா நண்பா!” அஷ்வின் அப்பாவியாக வினவ,

இவனுக்கு எப்படித் தெரியும் என்று பெண்கள் அவனைக் கேள்வியாக நோக்கினர்.

அது…அது…ஒட்டுக்கேட்கல…தண்ணி குடிக்க வெளியே வந்தேன்! பளார்னு அடி சத்தம் கேட்டுது…சத்தியமா அதுக்குமேல எதுவும் தெரியாது!”, அசடுவழிந்தான் அஷ்வின்.

“டேய் நண்பா! இன்னைக்கு மட்டுமில்ல; அன்னைக்கும் நான்தான் டா அடி வாங்கினேன்!” புலம்பிய குணா, அன்று மதுசூதனனை கண்ட யமுனா, மாமனின் விளையாட்டிற்குக் கன்னத்தில் பரிசு தந்ததாக உண்மையை உடைக்க, அவ்விடமே சிரிப்பொலியில் நிரம்பியது.

துயில் கொண்டிருக்கும் தாரகையை மாமனிடம் நீட்டினாள் யமுனா. மதுமிதாவை மார்போடு சேர்த்து அணைத்தவனின் கண்கள் குளமானது. யமுனாவை ஆரத்தழுவி நன்றிதெரிவித்து குணா நகர, மாமன் கையில் தன்னையே மதுமிதா ரூபத்தில் கண்ட பேதையும் நெகிழ்ந்துபோனாள்.

“மா…மா…மாமா! மாமி! மா…மா…மாமா! மாமி…!” குழந்தை உறக்கத்தில் முனகிக்கொண்டிருக்க, பல்லவிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“பல்லவியை மன்னிச்சிரு டா…மதுகுட்டி மாமாகிட்ட இருக்கறது தான் சரி!” என்று மெத்தையில் உறங்கும் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவள் எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை என்று உணர்த்தி, குணா ஆறுதலாகப் பேசினான். அப்படியும் குற்றவுணர்வில் இருந்து மீளமுடியாமல் தவித்தாள்.

அவள் முகத்தைக் கண் பார்க்க நிமிர்த்தியவன், “திருமதி.பல்லவி குணசேகரன் இன்னும் வேறேதேவாது இன்பதிர்ச்சி கொடுக்கப்போறிங்களா, இல்ல இந்த மாமா உங்களுக்கு…” குறுகுறுவென பார்த்து சீண்டினான்.

“ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்கு!” நள்ளிரவு ஒருமணி கடந்தும் சலிக்காமல் உரைத்தவள்,

“அது என்ன குணா உங்களுக்கு…தப்பு செஞ்ச மதுசூதனன் மேல இல்லாத வெறுப்பு கிஷோர் மேல இருக்கு!” கேட்டு, அவன் விழாவில் கிஷோருடன் ஒன்றிப் பழகவில்லை என்று குறைப்பட்டாள்.

‘இவளுக்கு உடல் எல்லாம் கண்கள்!’ எண்ணி சிரித்தவன், “அவன் அன்று மதுமிதாவுடன் விளையாடுகிறேன் என்ற பெயரில், சுதாவுடன் கொஞ்சிக் குலாவியதை விவரித்தான்.

குணாவின் விளக்கத்தைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவள், அவன் தோளினில் கைகளை மாலையாகக் கோர்த்து,

“ப்ரொஃபெஸர் ஸர்! அது காதல் பாடம்.  கல்யாணமாகி ஒரு வருஷமான பிறகும், மனைவிக்கு முத்தம் கூடச் சரியா கொடுக்க தெரியாத உங்களுக்கு, அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. தப்பு உங்கமேல இல்லை; உங்களுக்குச் சரியா பயிற்சி கொடுக்காத என்மேல தான்!” என்று மெல்லமாக அவன் முகமருகே எம்பினாள்.

அவள் பிடியிலிருந்து எத்தனித்தவன், “உன் ஃபோன் கொஞ்சம் கொடு பல்லவி!” என்றான்.

“நிம்மதியா ஒரு முத்தம் கொடுக்க விடுறீங்களா!” கடுப்பானவள், அவன் கையில் தன் கைபேசியை திணித்துவிட்டு மதுமிதா அருகில் படுத்துக்கொண்டாள்.

தன்னையே வெறித்துப் பார்க்கும் பெண்மானை, குறும்பு வழியும் கண்களால் ஊடுருவியபடி, சோஃபாவில் அமர்ந்தவன், காணொளி அழைப்பு இணைந்ததும்,

“சரண்! உண்மையிலேயே  நீங்க உங்க பொகிஷத்தைத் தான் எனக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கீங்க.” தாழ்ந்த குரலில் பேச,

மறுமுனையில் கேட்டவனுக்கு எதுவும் விளங்கவில்லை.

“குணா! நீங்க என்ன சொல்றீங்க!” சரண் குழப்பத்தில் தத்தளிக்க,

அண்ணன் குரல் கேட்டதும், தன்னவன் அருகே விரைந்தோடி வந்து ஒட்டிக்கொண்டாள் பல்லவி.

தம்பதிகளின் அன்யோனியம் கண்டு மனம்குளிர்ந்த சரணின் முகத்தில் மகழ்ச்சி தாண்டவமாடியது.

“சரண்! உங்க மனைவியையும் கூப்பிடுங்களேன்; அப்படியே பாட்டியும்!” என்று குணா அழைத்து காத்திருக்க,

“குணா! நீங்க எந்தத் தப்புமே பண்ணல!” பல்லவி அவன் மனநிலை உணர்ந்து எதுவும் சொல்லவேண்டாம் என்றாள்.

அவளை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டவன், மூவரிடுமும் ஒளிவுமறைவு இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்து, தன் நடத்தைக்கு மன்னிப்பும் கேட்டான்.

குணாவின் வாழ்க்கையில் இத்தனை சவால்களா என்று சரண் வியந்தான்.

“இதைத்தான் உன் கணவரோட ரகசியம்னு சொன்னியா டி!” மஞ்சரி வினவ, ஆம் என்று அசடுவழிந்தாள் பல்லவி.

அண்ணன்-தங்கைக்குள் ஏற்பட்ட விரிசல், பல்லவி-குணாவிற்கு இடையே நிலவிய மனஸ்தாபம் எல்லாம் கேட்டு, திடுக்கிட்டுப் போனாள் நீலாவதி. பல்லவியின் ஜாதக தோஷத்தைப் பற்றி அவள் பயம்கொள்ள,

தன்னவளை வளைத்து அணைத்தவன், “பாட்டி! இனிமே உங்களுக்கு திருமதி.பல்லவி குணசேகரன் பார்க்கணும்னா, நீங்கதான் எங்க வீட்டுக்கு வரணும். நான் என் பொண்டாட்டியை யார் வீட்டுக்கும் அனுப்பமாட்டேன்!” என்றதும்,

சரணும், மஞ்சரியும் வாய்விட்டு சிரிக்க, நீலாவதி அவன் ஜாடைபேச்சை புரிந்துகொண்டாள்.

“சரி குணா! நான் கண்டிப்பா உங்களோட வந்து தங்கறேன்!” சம்மதம் தெரிவித்தாள்.

மேலும் சில நிமிடங்கள் மனம்விட்டு பேசியவர்கள், ஊரில் சந்திக்கலாம் என்று அழைப்பைத் துண்டித்தனர்.

“அண்ணன்கிட்ட இப்போவே பேசணும்னு என்ன அவசியம். நான் எவ்வளவு ஆசையா உங்களுக்கு முத்தம் கொடுக்க வந்தேன் தெரியுமா!” சிணுங்கியவள், அவன் இதழ்களை விரல்களால் வருடினாள்.

தீண்டும் அவள் விரல்களைக் கையில் குவித்து முத்தமிட்டவன்,

“கிசோர்கிட்ட நான் சரியா பேசலன்னு சொல்ற அளவுக்கு என் ஒவ்வொரு அசைவும் புரிஞ்சு வெச்சிருக்க! ஆனா நான் உன்னையும் புரிஞ்சுக்கல, உனக்கு எல்லாமாயிருக்கும் உன் அண்ணன், பாட்டி அத்தனை பேரையும் மரியாதை குறைவா பேசியிருக்கேன். உனக்காக இதையாவது காலம்தாழ்த்தாமல் செய்யலாமேன்னு…” என்றதும்,

காதலில் கரைந்தவள், அவன் மார்புக்குள் தலையைப் புதைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

“அது சரி! எதுக்கு டி யமுனா ஃபோன் நம்பர பவித்ரான்ற பேருல வெச்சிருக்க?” அவள் கைபேசியை அசைத்துக்காட்டி வினவினான்.

அவனுக்கு எப்படி தெரிந்தது என்று அவள் முழிக்க, சரணுக்கு அழைத்து காத்திருந்த போது, யமுனாவின் கிண்டல் குறுஞ்செய்திகள் பவித்ரா என்ற பெயரில் பளிச்சிட்டதைக் கவனித்ததாக விளக்கினான்.

அதைக்கேட்டு சிரித்தவள், “என் குணா என்னை முதல் முதலா அப்படித்தானே கூப்பிட்டாரு!” மலரும் நினைவுகளைப் பேசியவளுக்கு, திடீரென்று ஒன்று புத்திக்கு எட்டியது.

“யார் அந்த பவித்ரா! உங்களுக்கு காதல் தோல்வி…ஒரு தலை காதல் அப்படி இப்படின்னு ஏதாவது இருக்கா?” புருவங்கள் உயர்த்தி குறுக்குவிசாரணை செய்தாள்.

“எவ்வளவு சீக்கிரம் கேக்குறா பாரு என் மக்கு பொண்டாட்டி!” புன்முறுவலோடு அவள் கன்னத்தைக் கிள்ளி, “உன்ன பாட்டி அன்னைக்கு பவின்னு கூப்பிட்டதும் உன் பேரு பவித்ரான்னு நெனச்சேன். பல்லவியை சுருக்கி பவின்னு கூப்பிடுவாங்கன்னு யார் கண்டா!” சலித்தவன்,

“ஆனா ஒண்ணு டி! உங்க அப்பா பல்லவி சரணம்னு கச்சேரி பண்ணதுல, கூடவே அனுபல்லவியும் சேர்த்து பாடியிருந்தாருன்னா, வக்கீல் பொண்டாட்டிகிட்டேந்து இந்த மாமான காப்பாத்த ஒரு மச்சினி இருந்திருப்பாள்!” குறும்பாகக் கண்சிமிட்டினான்.

“ஆசையப்பாரு!” அவன் இடுப்பில் கிள்ளியவள்,

“வாய்தான் அப்படிச் சொல்லுது; மற்றபடி, குணா மனசு முழுக்க பல்லவி தான் நெறஞ்சி இருக்கறா!” என்று அவன் மார்பில் வாஞ்சையாகத் தட்டினாள்.

இவர்கள் பேச்சுக்குரலில் தூக்கம் கலைந்த குழந்தை எழுந்து உட்கார, பல்லவி அவளருகே ஓடிச்சென்று தட்டிக்கொடுத்தாள்.

சோஃபாவில் குணாவை கண்டுகொண்டவள், தன் அறை, தன் குடும்பம் என்பதுபோல பாதுகாப்பை உணர்ந்தாள்.

“மாம்மி!” என பல்லவியின் கன்னத்தை வருடி, அருகில் படுத்து அரவணைக்குமாறு இழுத்தாள். மதுமிதாவின் பாசத்தை வென்ற கிளர்ச்சியில் நெகிழ்ந்தவள், அவளருகே படுத்துக்கொண்டாள்.

பல்லவியின் மனப்போராட்டத்தை உணரவே செய்தான் குணா. குழந்தை உறங்கியதும், தன்னவள் அருகிலிருந்த இடுக்கான இடத்தில் அவளை உரசி படுத்துக்கொண்டான்.

“என்ன செய்யறீங்க மிஸ்டர்.குணா! அந்தப் பக்கம் போய் படுங்க!” பெண் அவனை விரட்ட,

“இப்படி விரட்டிவிட்டா, அப்புறம் உன்ன எப்படி திகட்ட திகட்ட லவ் பண்ணறது; முத்தம் கொடுக்க பயிற்சி எடுக்கறது?” முணுமுணுத்த படி, அவளை இறுக அரவணைத்து,  கழுத்து வளையத்தில் முத்தமிட்டான்.

அவன் புலம்பகளை ரசித்தவாறு, மதுமிதாவின் மறுபக்கம் புரண்டு படுத்தவள்,

“முதல்ல கண்ணால காதலிக்கறது எப்படின்னு பயிற்சி எடுத்துக்கோங்க! அமெரிக்கா போய் நம்ம புதுவாழ்க்கை தொடங்கலாம்!” அவன் கைகோர்த்து இதழ்கள் பதித்தாள்.

 அன்றுமுதல், குணா எப்போதும் தன் பக்கத்திலேயே இருந்ததை உணர்ந்த மதுமிதா, மற்றவர்களுடனும் சகஜமாகப் பழகினாள்.

யமுனா,மதுசூதனன் இருவரின் புகைப்படங்களை ஐபேடில் சேமித்து அம்மா, அப்பா என்று ஒலிப்பதிவும் செய்தாள் பல்லவி. குணாவின் படத்திற்கு, “மா…மா…மாமா!” என்றும், தனக்கு “மாமி!” என்றும் மதுமிதா குரலிலேயே ஒலிப்பதிவு செய்தாள். அதைக்கேட்ட குழந்தைக்குக் கரைகாணா இன்பம்.

பாட்டி தாத்தா என்று மற்ற உறவுமுறைகளையும் பல்லவி அக்கறையாகக் கற்றுக்கொடுத்தாள். அவரவர் உறவுமுறை வைத்து அழைத்து, கள்ளம் கபடமில்லா சிரிப்பினால் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டாள், அவர்கள் வீட்டின் தேவதை.

குழந்தை யமுனா மதுசூதனனுடன் தனிமையில் அதிக நேரம் செலவழிப்பதை கண்ட குணா, விடுமுறை நாட்களை நீடித்தால், அவர்களோடு நிரந்தரமாக இருப்பாளோ என்று யோசித்தான். ஆனால் அவன் யூகம் மிகத் தவறு என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்தாள் மதுமிதா.

குணா தள்ளியிருந்தாலும், கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறானா என்று உறுதி செய்துகொண்ட பின்தான் அவர்களோடு தனிமையில் விளையாடினாள்.

இதற்கிடையில், சுதாவும் நல்லபடியாகப் பிரசவித்தாள். மாமன் அன்பில் மூழ்கிய சுதாவும் கிஷோரும்,அவனையே தங்கள் மகளுக்கு பெயர் வைக்கும்படி கேட்க,

“பவித்ரா!” என்றபடி மனையாளை ஏறிட்டான்..

அவள் கன்னங்கள் நாணத்தில் சிவக்க, மற்றவர்கள் அப்பெயரை மகிழ்ந்து ஆமோதித்தனர்.

பல்லவி அளித்த பயிற்சியில் மதுமிதாவும் ஓரளவிற்கு யமுனாவின் பெற்றோருடன் ஒன்றிப் பழகினாள். விழாவில் பேத்திகள் இருவரையும் சரிசமமாக நேசித்த மீனாட்சியின் பாசத்தை அனைவரும் கவனிக்கவே செய்தனர்.

“அதான் உங்க அம்மா, நீ விட்ட சவாலுல ஜெயிச்சிட்டாங்களே! போய் ஆசையா நாலு வார்த்தை பேசு டி!”, நினைவூட்டினாள் பல்லவி.

 மறுநொடியே தாயின் மடியில் தஞ்சம் புகுந்தாள் யமுனா.

பல்லவி அருகில் வந்தவன், “ஏய் வசியக்காரி! என்ன சொல்லி அவ மனச மாத்தின?” என்று காதோரம் கிசுகிசுத்தான்.

தன்னவனை விழி உயர்த்தி ஏறிட்டவள், “ம்ம்…உன் மாமா மாதிரியே தொட்டதுக்கெல்லாம் சவால் விடாதன்னு சொன்னேன்!” உதட்டை சுழித்தாள்.

“சண்டயில் தான் அன்பு கூடம்னு உனக்குத் தெரியாதா!” கண்சிமிட்டியவன், மின்னல் வேகத்தில் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

சண்டைகள் மறந்து அனைவருமே சந்தோஷத்தில் தத்தளித்தனர். நாட்களும் அழகாய் நகர்ந்தது.

குணா ஊருக்குப் புறப்படும் அன்றே, யமுனாவும் டெல்லிக்கு கிளம்ப திட்டமிட, டெல்லி விமான நிலையம் வரை ஒன்றாகப் பயணித்தனர்.

ஜோடிகள் இரு திசையில் பிரியும் நேரம் வந்ததும், யமுனாவும் மதுசூதனனும் குழந்தையின் முகத்தில் மாறி மாறி முத்தமிடவும், மதுமிதா அவர்களை ஐபேடின் துணையோடு, அம்மா அப்பா என்று அழைத்து கொஞ்சுவதையும் கண்ட குணாவிற்கு நெஞ்சம் கனத்தது.

“அம்மு! உனக்கு இதுல எதுவும் வருத்தம் இல்லையே!” அவன் மென்மையாக வினவ,

‘வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது!’ என்று மனதில் சலித்தவள், “அவ இருக்குன்னு சொன்னா மட்டும் அப்படியே தூக்கி கொடுத்துடுவீங்களா!” சிடுசிடுத்தாள் பல்லவி.

“அப்படியில்ல பல்லவி….!” குணா பம்ப,

பல்லவியின் குணமறிந்த யமுனா குறுஞ்சிரிப்புடன், “மாமா! இவங்க உன்ன நல்லா ஏமாத்துறாங்க; என்கிட்ட உன்னவிட அதிகமா ஃபீல் பண்ணி பேசிட்டு, இப்போ ரொம்ப கெத்தா காட்டிக்கறாங்க!” என்றவள்,

அன்று மதுமிதாவின் நலன்கருதி அனைவரும் இந்தியாவிலேயே இருக்கலாமென பல்லவி முன்வைத்த யோசனையை விவரித்தாள்.

‘இப்படியும் யோசித்திருக்கலாமே!’  என குணா விழித்துக்கொள்ள,

“ப்ச்ச…மாமா! உன் கனவு லட்சியம் எல்லாம் தள்ளி வெச்சிட்டு எனக்காக ஏதோ ஒரு வேலை செய்ய போறையா! எதைப்பற்றியும் யோசிக்காம கிளம்பு மாமா! சீக்கிரம் முனைவர் பட்டம் வாங்கிட்டு, என் பொண்ணையும் உன்ன மாதிரியே கணித மேதாவியா வளக்கற வழியப்பாரு.” உரிமையோடு பேசி அவனைப் புறப்படச் சொன்னாள்.

யமுனாவின் மனவுறுதியை மெச்சி அவளை ஆரத்தழுவினான்.

மாமன் மார்பில் சாய்ந்தவள், “மாமா! என் வாழ்க்கை எப்பவுமே ரொம்ப நல்லா இருக்கும். உன் வாழ்க்கை அதைவிட ரொம்ப நல்லா இருக்கும் மா…மா…மாமா!”, என்றவளின் நெற்றியில் பனித்த கண்களுடன் முத்தமிட்டான் குணா.

டௌன் பஸ்ஸில் பாட்டி வீட்டிற்குச் சென்று வருவதுபோல அடிக்கடி விமானத்தில் பயணித்த மதுமிதாவிற்கு அனைத்தும் அத்துப்படியாக இருந்தது. ஜன்னலோரம் அமர வேண்டுமென்று அடம்பிடித்தவள், நடு பயணஇருக்கையில் தன் பக்கத்தில் குணா தான் உட்கார வேண்டுமென்றும் அடம்பிடித்தாள்.

“எல்லாம் நீ வெச்சதுதான் சட்டம்!” பொய்கோபத்துடன் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி தன் பயணஇருக்கையில் அமர்ந்தாள் பல்லவி.

விமானம் சிறகை விரித்துப் பறக்கவும், இருவரின் சிந்தனையிலும் நெஞ்சை வருடும் பல நினைவுகள் வந்து வாட்டியெடுத்தது.

வேண்டாவெறுப்பாக பல்லவியை திருமணம் செய்துகொள்ள வந்தது முதல் அவளை விவாகரத்து செய்ய அழைத்து வந்தது வரை மனதில் அசைப்போட்டவன், தன் வாழ்க்கையில் வரமாக வந்த தேவதையை இழந்துவிடக்கூடாது என்று கடவுள் தன்மீது இறக்கம் கொண்டு எத்தனைமுறை மன்னித்து அருளியிருக்கிறார் என்று நினைவுகூர்ந்தான்.

மனதிற்குப் பிடித்தவனின் கரம் பிடிக்க முட்டி மோதி போராடி, கடைசியில் விவாகரத்தின் விளிம்பில் நின்ற தன் திருமண வாழ்க்கையை எண்ணியவளின் கண்களும் குளமானது.

நினைவலையில் கலந்தவள், தன்னவனின் தோள் சாய, அவள் விழியோரம் கசிந்த நீர்சாரல் அவன் இதயத்தை நனைத்தது.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வலிகளை மௌனம் மொழிந்தது.

திடீரென்று யாரோ ஒரு பயணி, “பவித்ரா!” என்று அழைத்தபடி அவர்களை கடந்து செல்ல, இருவரின் முகத்திலும் சிரிப்பு ரேகைகள் படர்ந்தன். பல கசப்பான தருணங்களை மட்டுமே தந்திருந்தாலும், தங்கள் முதல் சந்திப்பின் சுகமான நினைவை தந்ததும் இதே விமானப் பயணம் அல்லவா என்று நேர்மறையாகச் சிந்தித்தனர்.

இன்னார்க்கு இன்னார் என்று தேவன் சொர்கத்தில் எழுதியதை, வெண்மேகங்கள் சூழ, வான்தேவதைகளின் ஆசியோடு நனவானதும் இதே விமானத்தில் தானே என்று யோசித்தவள்,

“குணா! மறுபடியும் எனக்கு ப்ரபோஸ் பண்ணுங்க!” சிணுங்கினாள்.

அந்த நாள் ஞாபகத்தில், இதழோரம் தேங்கிய புன்னகையுடன்,

“பவித்ரா! உங்களுக்கு ஓகே நா, நானே உங்கள கல்யாணம் செய்துக்கறேன்!” என்றான்.

“மறுபடியும் பவித்ரா வா!” அவன் தோளில் பலமாக அடிவிழுந்தது.

“நீதானே டி அதே மாதிரி ப்ரபோஸ் பண்ண சொன்ன!” நமுட்டுச் சிரிப்புடன் அவன் தர்க்கம் செய்ய,

“மா…மா…மாமா!” என்று அவனை ஐபேடில் சுடோகு(Sudoku) விளையாட அழைத்தாள் மதுமிதா.

குழந்தையிடம் மென்மையாக மறுப்பு சொல்லி முத்தமிட்டவன், தன்னவள் பக்கம் திரும்பி, மறுபடியும் முயற்சிக்கவா என்று புருவங்கள் வளைத்தான்.

வேண்டாம் என்று கொஞ்சியவள், “எனக்கும் ஒரு முத்தம் கொடுங்க! உங்களை கல்யாணம் செய்துக்கறேன்” கண்மூடி அவன் முகமருகே காத்திருந்தாள்.

“பல்லவி! இது பொது இடம்! அவன் கண்களை சுழலவிட, மதுமிதா மீண்டும் அவனை நச்சரித்தாள்.

“ஏய் மதுகுட்டி! இது என் புருஷன் டி!எனக்கும் அவரோட விளையாட சான்ஸ் கொடு”, குழந்தைக்கு இணையாக குணாவை தன்பக்கம் இழுத்தாள் பல்லவி.

அவளை ஏறிட்ட மதுமிதா ஐபேடில், “He is our Guna! Sharing is Caring Pallavi!” ஒலிக்கவிட்டு பல்லவிக்கு பாடம் நடத்தினாள்.

மதுமிதாவின் புத்திசாதூரியத்தை மெச்சி குழந்தைக்கு மேலும் முத்தங்கள் வழங்கி கலகலவென்று சிரித்தான் குணா.

“மதுகுட்டிக்கு வர வர கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுத்து!” என்றவள், அவளை சீண்டும் வகையில், தன்னவனின் கன்னத்தில் அழுந்த இதழ்கள் பதித்தாள்.

நானும் சளைத்தவளில்லை என்பதுபோல, பயண இருக்கையில் எழுந்து நின்ற மதுமிதா, மாமனின் மறுகன்னத்தில் விடாமல் முத்தம் கொடுத்து பல்லவியை வெறுப்பேற்றினாள்.

தன்மீது மலையளவு அன்புகொண்ட இரு உள்ளங்களின் முத்தமழையில் நனைந்தவன், விழவே செய்தான் அவர்களின் உன்னதமான உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்.

விட்டுக்கொடுப்பதால் எதையும் இழப்பதும் இல்லை!

விலகிச்செல்வதால் நேசம் குறைவதும் இல்லை!

மனஸ்தாபங்கள் இல்லாத காதலும் இல்லை!

மனவேறுபாடுகள் இல்லாத குடும்ப உறவுகளும் இல்லை!

நம்பிக்கைக்கு மிஞ்சிய நற்சிந்தனை எதுவும் இல்லை!

நல்லுறவுகள் சூழ வாழ்வதை விட நல்லதிர்ஷ்டம் எதுவுமே இல்லை இல்லை!

உண்மையான அன்பிற்கு என்றும் தோல்வியே இல்லை-தேடிக்கண்டோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்!!!