பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 27

நித்திய பூஜைகள் செய்துமுடித்து வரவேற்பறைக்கு வந்த சாவித்ரி, மௌன புன்னகையுடன் கடவுளுக்கு நன்றிகூறினாள். பெண்கள் காய் நறுக்கிகொண்டே வம்படித்து சிரிக்க, ஆண்கள் அரசியல், வர்த்தகமென கலந்துரையாட, ஒன்றுகூடிய சொந்தங்களைக் காண, கண்கோடி வேண்டுமென மகிழ்ச்சியில் மிதந்தாள்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவர்கள் தாரகையின் மழலைமொழி.

“மா…மா…மாமா!” தூக்கம் கலையாதவளாகக், கண்களைச் கசக்கிக்கொண்டு அசைந்தாடி வந்தவளை, தன்னிடம் வரும்படி ஒவ்வொருவரும் கைநீட்டி கூப்பிட,

இடவலமாக ஏறிட்டவள், குணாவின் மடியில் ஏறி அமர்ந்தாள்.

“குட் மார்னிங் மதுகுட்டி!” முத்தமிட்டவன், “மதுகுட்டி எப்படி பல் தேய்ப்பான்னு அம்மாக்கு காட்டு!”, என்றதும், அவன் தோள்சுற்றி இறுக கைகோர்த்து யமுனாவிடம் செல்ல மறுத்தாள்.

குழந்தையை வற்புறுத்த வேண்டாமென்று யமுனா கூற,

“மதுகுட்டி! அடம்பிடிக்காமல் அம்மாகிட்ட போ!” அன்புக்கட்டளை இட்டாள் பல்லவி.

அதையும் பொருட்படுத்தாது, குணா கழுத்தில் அழுத்தமாக முகத்தை புதைத்துக்கொண்டாள்.

விட்டுப்பிடிக்கலாம் என்று குணா கூற, திட்டவட்டமாக பல்லவி மறுக்க, குழந்தையின் பரிதவிப்பை கண்ட அனைவரும் குணாவிற்கு ஆதரவாகப் பேசினர்.

“இப்படியே செல்லம் கொடுத்தா அவளுக்கு எப்படிப் புரியும்?” சிடுசிடுத்து, சமையலறைக்குள் புகுந்தாள் பல்லவி.

அவளைப் பின்தொடர்ந்த யமுனா, இரவில் மதுமிதா அவர்களைத் தேடித் தவித்ததையும், நடுஜாமத்தில் ஐபேடில் காட்டி கேட்டதையும் விவரித்து,

“காலையில வந்துடுவாங்கன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் தூங்கினா! அதான் நேர மாமாகிட்ட போயிட்டா! அவளுக்கு இப்போ எல்லாமே புரியுது பல்லவி! எங்களோட தனியா வந்து இருப்பாளா?” கவலை தோய்ந்த குரலில் வினவினாள்.

“ஒரு நாள்தானே யமுனா ஆச்சு! குணாவை விட்டு என்கிட்டயும் முதல்ல வராம தான் இருந்தா!” நம்பிக்கையூட்டியவள், மாமனை தன்வழிக்கு கொண்டுவர மதுமிதாவை பணயம் வைத்து செய்த குறும்புகளை விளக்கினாள்.

கவலைகள் மறந்து சிரித்தவள், “நேத்து எப்படி? மாமா உங்க வழிக்கு வந்தாரா இல்லையா!” சீண்ட,

இமைதாழ்த்தி அசடுவழிந்தவளின் சிவந்த கன்னங்களே ரகசியங்களை அம்பலமாக்கியது. கிசுகிசுப்புகளுக்கு இடையில், பெண்கள் காலைஉணவு சமைக்க ஆயத்தமானார்கள்.

“சரி! என் மாமாவுக்கு பணியாரம் செய்து கொடுத்தீங்களா இல்லையா?” அன்று விடுத்த சவாலை நினைவுகூர்ந்தாள் யமுனா.

“உங்க மாமா என்னை சமைக்கவிட்டால் தானே!” அலுத்துக்கொண்டவள், அவன் நிபந்தனைகளை எல்லாம் விவரிக்க அரட்டையும் நீடித்தது.

அதற்குள் யமுனா ஆவி பறக்கும் பணியாரங்களை இறக்கி, அதில் ஒன்றை பல்லவிக்கு ஊட்டினாள்.

அதை ரசித்து ருசித்து மென்றவள், கட்டைவிரலை ஆள்காட்டி விரலுடன் மடக்கி, “ம்ம்…செம்ம சூப்பர்!” எனப் பாராட்டி,

“சரி வா! இன்னைக்கு நீயா நானான்னு பார்த்துடலாம்!” என்று தனக்குத் தெரிந்த ஒரு வகையான திடீர் பணியாரம் செய்ய, களத்தில் இறங்கினாள்.

சமையல் நிகழ்ச்சியின் போட்டியாளர்களைப் போல ஆளுக்கொரு தட்டுடன் மாமன் எதிரே நின்ற பெண்களைக் கண்டதும்,

“இன்னைக்கு நீ காலி டா நண்பா!” கேலிசெய்தான் அஷ்வின்.

குணா யமுனாவிடமிருந்து தட்டை வாங்கினான்.

“நான்தான் சொன்னேனே பல்லவி! மாமா நான் செய்யும் பணியாரம் மட்டும்தான் விரும்பி சாப்பிடுவாருன்னு!” ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதித்து,

“உனக்கு அவங்க கையாலேயே பணியாரம் செய்து ஊட்டிவிடுவேன்னு என்கிட்டேயே சவால் விட்டாங்க மாமா!” கிண்டலும் செய்தாள் யமுனா.

காதல் கணவன் தன்னை காயப்படுத்தமாட்டான் என்ற மிதப்பில் இருந்தவளின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது.

நல்ல புரிதலோடு பழகும் பெண்கள் போட்டியை தாண்டி தன் அன்பை அளவிட நினைகிறார்கள் என்று புரிந்துகொண்டான்.

தன்னவளின் வாடிய முகத்தை நிமிர்த்தி, “இங்க பாரு பல்லவி! யமுனா மேல நான் எவ்வளவு அன்பு வெச்சிருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும்! இப்போவும் சொல்றேன், அவ இடத்துக்கு வர முயற்சி செய்யாத!” தீர்கமாக உரைத்தான்.

அவள் வெடுக்கென்று அங்கிருந்து நகர, “நில்லு டி! நான் சொல்றத முழுசா கேளு!” குரலை உயர்த்தினான்.

பெண்ணும் சிலையாக நிற்க, “அவ இடத்தை கேட்காதன்னு தான் சொன்னேன். உனக்கே உனக்கான சிம்மாசனம் இந்த பல்லவிதாசன் இதயத்தில் இருக்கு. அதுல வேற யாருக்கும் இடமில்லை!” அழுத்திச் சொல்லி யமுனாவை ஏறிட்டான்.

“வசனமெல்லாம் நல்லா வக்கணையா தான் மாமா பேசுற!” உதட்டைச் சுழித்தாள் யமுனா.

“என் அம்மு செய்த பணியாரத்தை தான் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் அதை ஊட்டிவிடும் உரிமை என் மனைவி திருமதி.பல்லவி குணசேகரனுக்கு மட்டும்தான் இருக்கு” என்றவன்,

தட்டை பல்லவியின் கையில் திணித்து, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி காத்திருந்தான்.

அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது. அவளோ மாமனின் சாமர்த்திய பேச்சை அசைப்போட்டு அமைதியாக நின்றாள்.

“பசிக்குது டி! சீக்கிரம் ஊட்டு!” குணா கெஞ்சல் குரலில் கேட்டு வாய் திறக்கவும் தன்னையும் மீறி பக்கென்று சிரித்தாள்.

வெட்கமும், காதலும் கண்ணில் மிளிர பணியாரம் ஊட்டிவிட்டவளின் உள்ளங்கையில், முத்தங்களைப் பரிசாகப் பொழிந்தான் மாமன்.

சுற்றி இருந்தவர்கள் ஆரவாரம் செய்ய, பல்லவியின் முகம் நாணத்தில் சிவந்தது.

மாமனின் முடிவில் நெகிழ்ந்த பெண்கள் மற்றவர்களுக்கும் பணியாரம் பரிமாற, அதைப் புசித்தவர்களின் வயிறும் உள்ளமும் நிறைந்தது.

மதுமிதாவின் அன்றாட பழக்கவழக்கங்களை பல்லவியே யமுனாவிற்கு கற்றுக்கொடுத்தாள். குணாவிடம் சாமர்த்தியமாகச் செல்லம் கொஞ்சி நழுவும் யுக்திகள், பல்லவியிடம் செல்லுபடி ஆகவில்லை. விசும்பல்களுக்கும், பிடிவாதங்களுக்கும் இடையில் வேண்டாவெறுப்பாக அவள் பல்லவியின் சொற்படி நடக்க வேண்டியதாயிற்று.

அன்று மதியம் கஞ்சி போட்ட காட்டன் புடவை, கூலிங்க் கிளாஸ் என்று படு நேர்த்தியான அலங்காரத்துடன் வந்த பெண்கள் கடைக்குச் செல்வதாக அறிவித்தனர்.

எதற்காக என்று குணா காரணம் கேட்க,

“உங்க அம்மு பணியாரம் செய்து கொடுத்தா பரிசு வாங்கித்தரேன்னு சொன்னீங்களே! அதுக்குத்தான்!” பதிலளித்து, அவன் வாலெட்டில் இருந்து கிரெடிட் கார்டை உருவினாள் பல்லவி.

மனையாளின் பதிலிலும் செயலிலும் நெகிழ்ந்தவன், “மாமாவுக்கு அதிகமா செலவு வெச்சிறாத அம்மு! மாமா இப்போ குடும்பஸ்தன்!” யமுனாவிடம் பேசியபடி, தன்னவளைக் காதலுடன் ஏறிட்டான்.

“வடிக்கட்டின கஞ்சன் மாமா நீ!”, பொய்கோபம் கொண்ட யமுனா அவன் இடுப்பை நறுக்கென்று கிள்ளினாள்.

இவர்கள் வேடிக்கைப் பேச்சில் தனக்கு ஆதாயமான வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்த மதுமிதா, “Mommy!” செல்லம் கொஞ்சியபடி பல்லவியுடன் புறப்பட தயாரானாள்.

குழந்தை எதிரே முட்டியிட்டு அமர்ந்தவள், “இன்னைக்கு மதுகுட்டி சொல்பேச்சு கேட்கவே இல்ல; பல்லவி இஸ் அப்ஸெட்!” மென்மையாகக் கடிந்து, வலதுபுறத்தில் இருந்த திருகுவெட்டு புதிர் விளையாட்டை அவளிடம் தந்தாள்.

“இதை அப்பாவோட விளையாடி முடி! அப்புறம் உன்னையும் ஷாப்பிங் கூட்டிட்டுப் போறேன்!” குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவள்,

“மதுசூதனன்! நீங்க மட்டும் தனியா அவளோட விளையாடுங்க!” அழுத்தமாகச் சொன்ன விதத்திலேயே, மனையாள் தனக்கு விடுத்த எச்சரிக்கையை உணர்ந்தான் குணா.

அச்சமயம், மீனாட்சியும் மாணிக்கமும் வர, சாவித்ரி அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள்.

“யமுனாதான் எங்களோட வந்து இருக்க மாட்டேன்றா. அதான் நாங்களே…!”, மீனாட்சி தயங்க,

கடைக்குப் பிறகு செல்லலாம் என்றாள் பல்லவி.

“என் மாமா எனக்கு உருவங்களை உள்ளத்துல வெச்சு நேசிக்க கற்றுக்கொடுத்திருக்காரு! நம்ம கிளம்பலாம் பல்லவி!” தீவிரக்குரலில் மறுத்தாள் யமுனா.

“மாமா!மாமா!மாமா! அம்மா அப்பாவோட அருமை தெரியுமாடி உனக்கு?” பெருங்குரலில் கண்டித்தாள் பல்லவி.

“நீ ஏன் என்மேல கோபமா இருக்கேன்னு தெரியும்டி! உன் குழந்தையை வேண்டாம்னு சொன்னது தப்பு தான்! ஆனால், அவனும் தானே நீ இறந்துட்டதா எங்ககிட்ட எல்லாம் பொய் சொன்னான்!” தவறு இருபக்கமும் என்று நினைவூட்டினாள் மீனாட்சி.

“இப்போ கூடப் பாரு! உன் குழந்தைன்னு தான் சொல்ற; என் பேத்தின்னு வாயுல வருதா உனக்கு.” பதிலுக்கு இடித்துக்காட்டியவள்,

மற்றவர்கள் மனம்மாறி மாமனையும் குழந்தையையும் ஏற்ற பின்னும் அவள்மட்டும் வெறுத்தது ஏன் என்றாள்.

உறவுகள் முன் மகள் குத்திக்காட்டி பேசியதில் தலைகுனிந்து நின்றாள் மீனாட்சி.

“அதுதான் அம்மாவுக்கும் மற்றவங்களுக்கும் இருக்கும் வித்தியாசம்!” பல்லவி மென்மையாக எடுத்துரைக்க,

மீனாட்சிக்கு இன்னும் உறுத்தலாக இருந்தது. பொறுமையாக மகளுக்குப் புரியவைக்கும் பல்லவியின் பாசத்தில் கரைந்தவள்,

“நீயும் எங்களுக்குப் பொண்ணு மாதிரிதான் பல்லவி! நான் கோபத்துல பேசினது எதையும் மனசுல வெச்சுக்காத மா!” மனதார மன்னிப்பு கேட்டாள்.

பல்லவி மென்மையாகத் தலையசைத்தாள்.

“எல்லாத்தையும் பேசிட்டு மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா!” விடாப்பிடியாக ஏசினாள் யமுனா.

“நாமளும் தானே அம்மு, அவங்களுக்கு நல்ல பிள்ளைகளா நடந்துக்கல! குணா நிதானமாக அறிவுறுத்த,

“சரி! மதுமிதாவுக்கு உன்ன பிடிக்கட்டும். அப்புறம் உன்னோட வந்து தங்கறேன்!”, அம்மாவிற்கு நிபந்தனை விடுத்து, கடைக்குச் செல்லலாம் என்று பல்லவியின் கரத்தை இழுத்தாள்.

புறப்படச் சொல்லி குணா, பல்லவிக்கு ஜாடைகாட்ட,

’மாமன மாதிரியே சவால் விடுறத பாரு!’ மனதில் முணுமுணுத்த படி நகர்ந்தாள்.

மீனாட்சியின் வாடிய முகத்தைக் கண்டுகொண்ட சாவித்ரி, இலகுவாகப் பேச்சுக்கொடுத்தாள்.

“அட விடு மீனாக்ஷி. குணா ஊருக்கு வந்தாலே யமுனா இங்கேயே தான் இருப்பான்னு உனக்குத் தெரியாதா. அதுவும் இப்போ எத்தனை வருஷத்துக்கு அப்புறம் பார்த்திருக்கா!” என்றவள்,

“என்னங்க! நம்ம ரெண்டுபேரும் அண்ணன் வீட்டுக்குப்போய் தங்கலாமா!” மனோகரிடம் கொஞ்சலாகக் கேட்டாள்.

“பிறந்த வீட்டின் சொந்தங்களைக் கண்டதும், பெண்கள் வயது வரம்பின்றி குழந்தைகளாகவே மாறிடுறீங்க!” மனையாளை கிண்டல் செய்தவர், முழுமனதுடன் சம்மதித்தார்.

இரவு உணவுக்குப் பின் ஐவரும், மதுமிதாவின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவளுடன் ஆயிரம் பகுதிகள் கொண்ட திருகுவெட்டு புதிரை நடு ஹாலில் பரப்பி விளையாடிக் கொண்டிருந்தனர்.

நந்தினியிடமிருந்து காணொளி அழைப்பு வர, அஷ்வின் நகர்ந்தான்.

கடைவீதிகளில் சுற்றிய களைப்பில் தூக்கம் கண்ணைக் கட்ட, பல்லவியும் எழுந்து, மதுமிதாவிற்கு தெரியாமல் வரும்படி குணாவிற்கு ஜாடைகாட்டினாள்.

குணாவின் சிறு அசைவையும் துல்லியமாகக் கவனிக்கும் மதுமிதா, வெடுக்கென்று எழுந்து தன்னைத் தூக்கும்படி கை உயர்த்தினாள். குழந்தையை ஏமாற்ற மனம் இல்லாதவனின் விழிகள் பல்லவியிடம் கெஞ்ச,

“என்கிட்ட வா மதுகுட்டி! நம்ம தூங்கலாம்!” வழிமறித்தாள் பல்லவி.

பல்லவி தன்னை இரண்டு நாட்களாக ஏமாற்றியதை நினைவுகூர்ந்தவள், அவளிடம் செல்ல மறுத்து, குணாவின் வலதுகாலை இறுக சுற்றி வளைத்தாள்.

மதுமிதாவின் பிடிவாதம் அறிந்தவள், குழந்தை தூங்கியதும், யமுனாவிடம் விடச்சொன்னாள்.

மறுகணமே மதுமிதாவை கையில் ஏந்தியவனின் முகம் புன்னகையில் மிளிர்ந்தது. தன்னவனை வெட்டும் பார்வையில் ஏறிட்டவள், அமைதியாக அறைக்குள் நுழைந்தாள்.

ஒரு மணி நேரமானது அன்று அவனுக்கு மதுமிதாவை தூங்கவைக்க. தன் சட்டையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்ட விதம் அவன்மட்டுமே அறிவான். குழந்தையின் நலன்கருதி, விடுமுறையை நீடிக்கலாமா என்று விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி மல்லாந்து படுத்திருந்தான்.

அவன் கைவளைவில் புகுந்து தோள் சாய்ந்தவளை வாஞ்சையாக அணைத்தான்.

“உங்களுக்கு உண்மையிலேயே என்மேல காதல் வந்திருக்கா இல்லை உங்க யமுனாவின் ரகசியங்கள் காப்பாத்தின நன்றிகடனுக்காக என்னோட குடும்பம் நடத்துறீங்களா?”, மதுமிதாவை போலவே அவன் சட்டை பட்டனை சுழற்றியபடி, கம்மிய குரலில் கேட்டாள் பல்லவி.

“ஏன் டி இப்படி ஏடாகூடமா கேக்குற!” என்றவனின் சிந்தனைகள் மறுபடியும் மதுமிதா பக்கம் திரும்பியது.

“இல்ல குணா! நான் எப்பவுமே உங்களை மிரட்டி மிரட்டி காரியம் சாதிக்கறா மாதிரி இருக்கு!” கவலை தோய்ந்த குரலில் உரைத்தாள்.

குழந்தைபோல் கொஞ்சும் அவள் முகத்தை ரசித்து சிரித்தவன், “ஏய் மக்கு! அது உன் மனபிராந்தி! வக்கீலுக்கு படிச்சிட்டு சும்மா இருக்கல்ல!அதான் தொழில் மறந்து போயிட கூடாதூன்னு என்னோட வாதாடுற!” சீண்டினான்.

“விளையாடாதீங்க குணா! நான் மதுமிதா விஷயத்துல கேக்குறேன். நீங்க குழந்தையை எவ்வளவு மிஸ் பண்றீங்கன்னு, உங்க முகத்துல அப்பட்டமா தெரியுது!” வெளிப்படையாகவே பேசினாள்.

“ம்ம்…மிஸ் பண்ணறேன்…எப்பவுமே மிஸ் பண்ணுவேன்!” அவன் கசந்த குரலில் பதிலளிக்கவும்,

தன் யூகம் சரியென்று உணர்ந்தவள் அமைதியாக மறுபுறம் புரண்டு படுத்தாள்.

தன்னவளை பின்னாலிருந்து வளைத்து அணைத்தவன், “அதுக்காக உன் முடிவு தப்புன்னு சொல்லமாட்டேன் பல்லவி! மதுமிதா அவங்களோட ஒன்றி பழகிட்டா, அதுவே எனக்குப் போதும். எதையும் யோசிக்காம தூங்குமா!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

‘இவருக்குச் சொன்னால் புரியாது’ மனதில் நினைத்தவள் , “குணா! விளக்குப் போடுங்களேன்!” என்றாள்.

மேஜை விளக்கை ஒளிரவிட்டு திரும்பியவனின் கன்னத்தில் பளார் என்று அடி விழுந்தது. 

“எதுக்கு டி அடிக்குற? உனக்கு என்ன பைத்தியமா?” அவள் தோளினை பிடித்து உலுக்கி இரைந்தான். அவளின் பேச்சு, செயல் எல்லாம் விசித்திரமாகவே இருந்தது.

“மிஸ்டர்.குணா! மனைவி சொல்பேச்சு கேக்குற கணவன் வேணும்னுதான் எல்லா பொண்ணுங்களும் ஆசை படுவாங்க. அதுக்குன்னு இப்படியா எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறது. போய் நம்ம மதுகுட்டியை கூட்டிட்டு வாங்க.” அலட்டலே இல்லாமல் உரைத்தாள்.

“என்னடி சொல்ற!”

“மதமிதா நம்மகிட்ட வளர்வதுதான் சரின்னு சொல்றேன்!” அழுத்தமாகக் கூறினாள்.

பக்குவத்திற்குப் பெயர்போனவள் என்று பெருமைபட்டால், பிதற்றுகிறாளே என யோசித்தவன்,

“நீதானே சொன்ன. குழந்தை அம்மா அப்பாகிட்ட வளர்வதுதான் சரின்னு!” நொந்தான்.

“நான்தான் சொன்னேன். ஆனா அது “உங்க” மனசுக்கு சரின்னு பட்டுதா?”

வார்த்தைகளைத் திருப்பிப் போட்டு விளயாடும் இவளை எப்படிச் சமாளிப்பது என்று அவன் தடுமாறி நிற்க,

“ம்ம்…சொல்லுங்க!” அதட்டினாள்.

“எனக்குக் குழப்பமா இருந்துது பல்லவி! ஆனா உன் முடிவு சரியா இருக்கும்னு எனக்கு தெரியும்டி!”

“மதுமிதா உங்க மருமகள். யார் உதவியும் இல்லாம வளர்த்தீங்க. அவளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தீர்மானிக்க உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கு!” அவன் கைகோர்த்தவள், தாழ்ந்த குரலில்,

“நீங்க என்ன மதிச்சு கேட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் குணா. மதுமிதா விஷயத்துல எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தன் முடிவுல உறுதியா இருக்குற குணா என் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாம சம்மதம் சொன்னதும் அப்படியொரு பெருமிதம். ஆனா மதுமிதாவை விலகவும் முடியாம, நெருங்கவும் முடியாம நீங்க படுற அவஸ்தைகள் பார்த்தா, நான்தான் அன்பு அக்கறைன்ற பேருல என் எண்ணங்களை உங்கமேல திணிக்கறேன்னு புரியுது!” மனம்திறந்து பேசினாள்.

“ம்ஹூம்!” மறுப்பாய் தலையசைத்தவன், “அம்மா அப்பா பாசத்திற்கு ஈடிணையே இல்லன்னு நீ சொன்னது ரொம்ப சரி பல்லவி!”

“அம்மாவா, அப்பாவா எல்லாமுமாம் இருந்து, தனியாளா குழந்தையை வளர்த்த என் குணாவோட பாசத்திற்கும் தான் ஈடிணை இல்ல!” பொங்கியவள், மதுமிதாவை உங்கள தவிர வேற யாராலையும் சிறப்பா வளர்க்க முடியாது! ப்ளீஸ் குணா! குழந்தையை கூட்டிட்டு வாங்க!” கூப்பிய கரங்களுடன் மன்றாடினாள்.

ஏன் இவளுக்கு இந்த திடீர் குழப்பம் என்று அவன் சிந்திக்க, பல்லவியே மேலும் பேசினாள்.

“நீங்க இல்லாத இடத்துல அவ சந்தோஷமாவே இருக்கமாட்டா! நான் அவளை உங்ககிட்ட நெருங்கவிடாததுனால தான் என்னையும் வெறுக்கறா! இந்தப் பயமும் ஏக்கமுமே குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் குணா!” என்றவள்,

மனஇறுக்கம் கொண்ட குழந்தைகளை அவர்கள் போக்கில் வழிநடத்துவதின் அவசியத்தை அலட்சியம் செய்து முடிவெடுத்ததாக மன்னிப்பு கேட்டு, குழந்தையின் பரிதவிப்புகளைப் பார்த்து தெளிவுற்றதாக விளக்கினாள்.

பல்லவியின் முடிவில் அவன் நெகிழ்ந்தான் எனினும், மதுமிதாவை வளர்ப்பதைத் தாண்டி, அவன் மனதிலிருந்த மற்ற எண்ணங்களை எப்படிச் சொல்வது என்று தயங்கினான்.

“மதுமிதாவை வளர்கணும்னு என் விருப்பத்தை மட்டும்தான் உன்கிட்ட சொன்னேன். நீ சம்மதம் சொன்னா, மற்ற விஷயங்களைப் பற்றி பேசலாம்னு நெனச்சேன்.” என்றதும்,

“சொல்லுங்க குணா!” அவன் மனமாற்றத்தில் உற்சாகம் கொண்டாள்.  

“மதுமிதாவை நாம வளர்க்கும் பட்சத்தில்…அது…” ஒரு மனைவியின் அடிப்படை ஆசைகளைப் புறம்தள்ள சொல்வது நியாயமா என்று தடுமாறினான்.

“மதுமிதா மட்டும்தான் இனி நமக்கு குழந்தை. அதானே சொல்லவரீங்க!” சர்வசாதாரணமாகக் கேட்டாள்.

எப்படித்தான் தன் மனதை துல்லியமாகப் படிக்கிறாளோ என்று பிரமித்தான்.

“இதெல்லாம் நான் உங்களை கல்யாணம் செய்துக்கறதுக்கு முன்னாடியே யோசிச்சிட்டேன்.” தன்னவனின் கன்னங்களை மென்சிரிப்புடன் வருடியவள்,

“எனக்கும் மதுசூதனன் திரும்ப வருவாருன்னு நம்பிக்கை இல்ல. யமுனாவும் உங்க பேச்சை மீறி நடந்துக்கமாட்டான்னு நல்லாவே புரிஞ்சுது. நீங்க மதுமிதா மேல வெச்சிருக்க பாசத்தை பற்றி சொல்லவே வேண்டாம்!” காரணங்களை அடுக்கி,

“இது பரிதாபத்தால் எடுத்த முடிவும் இல்லை குணா. மதுமிதா சாதிக்கப் பிறந்தவள். ஆனால்…”, சொல்லலாமா வேண்டாமா என்று தயங்க,

“ம்ம்…சொல்லு!” என்றான்.

“கல்யாணம், குடும்பம், குழந்தைன்னு அவளுக்கு வாழ்க்கை அமைச்சு தர முடியுமான்னு உறுதியா சொல்லமுடியாது. நமக்கு பிறக்கும் குழந்தைக்கு அப்படியொரு வாழ்க்கை கொடுக்கும் போது, மதுமிதா அதைப்பற்றி கவலை படுறாளோ இல்லையோ, நம்ம கண்டிப்பா ரெண்டு குழந்தைகளுக்கும் பாரபட்சம் பார்க்குறோமேன்னு வருந்துவோம்! அதான் நமக்குன்னு குழந்தை வேண்டாம்னு முடிவுசெஞ்சேன்!” என்றாள்.

அவள் உள்ளம் அறிந்தவனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.

மதுமிதாவிற்காக இத்தனை கோணங்களில் சிந்தித்து, எந்தவித எதிர்பார்புகளும் இன்றி தன்னையே அர்ப்பணிக்க எண்ணிய அவளின் மனதை புரிந்துகொள்ளக் கூட முயற்சி செய்யவில்லையே என்று கூனிக்குறுகி நின்றான்.

மதுமிதாவை தங்கள் மணவாழ்க்கைக்கு இடைஞ்சலாகப் பார்க்கிறாள் என்று அவளை அவதூறாக பேசியது கண்முன் வர, குற்றவுணர்சியில் துடிதுடித்தான்.

“குணா! ஏதாவது பேசுங்க!”, யாசிக்கும் குரலில் அழைத்தாள்.

தன்னவளை இறுக கட்டியணைத்தவன், “எங்களுக்காக இத்தனை விஷயங்களை யோசிச்ச உன்ன நம்பாம, எவ்வளவு சுயநலமா இருந்துட்டேன் பல்லவி!” கதறி அழுதான்.

அவை அனைத்திற்கும் ஒரே காரணம், அவன் மதுமிதா மீது கொண்ட அதீத பாசம் என்று உணர்ந்தவளுக்கு அதைப்பற்றி மேலும் பேசி அவன் மனதை காயப்படுத்த விருப்பமில்லை.

தன்னவனை இயல்பு நிலைக்கு திருப்ப மெனக்கெட்டாள்.

அவன் கண்களைத் துடைத்துவிட்டவள், “சரி! சரி! அதுக்காக என்னை தியாகின்னு நீங்களா நெனச்சுகிட்டு, சமூக இடைவெளி கடைப்பிடிச்சீங்கன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்!” ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டி,

“எனக்கே திகட்டுற அளவுக்கு நீங்க என்ன காதலிக்கணும்! சரியா?” உதட்டைச் சுழித்தாள்.

தன்னவளின் குறும்பில் கவலைகள் மறந்து புன்னகைத்தவன்,

“இந்த நெருக்கம் போதுமா!” என அவளை இடையோடு சேர்த்து வளைத்தான்.

“இருங்க இருங்க!” அவன் கைச்சிறையிலிருந்து விலகாதவள், “நீங்க எனக்கொரு சத்தியம் செய்துதரணும்!” என்றாள்.

“ம்ம்…சொல்லுங்க திருமதி.பல்லவி குணசேகரன்!” இன்னொரு காதல் நிபந்தனை எதிர்பார்த்தபடி, அவள் நெற்றியில் படர்ந்த தலைமுடியைக் கோதிவிட்டான்.

“ஒண்ணு கவினிச்சீங்களா குணா! மதுகுட்டி என்னை, Mommyன்னு கூப்பிட்டாலும், தமிழ்ல சொல்லிப் பார்த்தால் ‘மாமி’ன்னு தானே அர்த்தம் வருது.” என்றதும்,

“இதைச் சொல்லத்தான் சத்தியம் அது இதுன்னு பிள்ட் அப் செஞ்சியா!” செல்லமாக அவள் நெற்றியில் முட்டினான்.

“இருங்க! நான் இன்னும் விஷயத்துக்கே வரல்ல…மதுகுட்டி தெளிவாதான் இருக்கா…நாம அவளோட மாமா-மாமின்னு. நமக்கும் அந்தத் தெளிவு வேணும்!” என்றவள்,

மதுமிதாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி வளர்ப்பது அவசியம் என்றும், யமுனா மதுசூதனனிடமும் கட்டாயம் பழகவிட வேண்டும் என்றும் எடுத்துரைத்து,

“பிற்காலத்தில் மதுமிதா அம்மா அப்பாவோட நிரந்தரமா இருக்கணும்னு விரும்பினால், அவளோட முடிவை சந்தோஷமா ஏத்துக்கணும். அப்போ மட்டும் இந்த மூஞ்சில ஏதாவது பீலிங்க்ஸ் பார்த்தேன்…”, அவன் கண்ணருகே இருவிரல்களை நீட்டி,

“கண்ண ரெண்டும் நோண்டிடுவேன்!” அதட்டினாள்.

ஐ அக்ரீ வித் யூ மை லார்ட்!” வக்கீல் மனைவியின் நிபந்தனைக்கு மனநிறைவுடன் ஆமோதித்தான்.

யூ பெட்டர் பிராக்டிஸ் டிடாச்ட் அட்டாச்மென்ட் ப்ரொஃபஸர்!” (You Better Practice Detached Attachment Professor!) ஏட்டிக்குப் போட்டி தீர்ப்பு உரைத்தவள்,

“சரி! போய் மதுமிதாவை அழைச்சிட்டு வாங்க!” இயல்பாகச் சொன்னாள்.

“இப்போவே வா!”, நள்ளிரவு பன்னிரெண்டு மணி என்று அவன் திடுக்கிட,

“பல்லவிக்கு எதுவாயிருந்தாலும் உடனே செய்யணும்னு தெரியாதா மிஸ்டர்.குணா!” அவள் கண்களை உருட்ட, அடுத்த நிமிடமே, குணாவின் கால்கள் யமுனாவின் அறை முன் நின்றது.

தாய் தந்தை பந்தத்திற்கு நிகரில்லை என்றவளே,

தாயுமானவன் பாசத்திற்கு அது ஈடாகுமா என்கிறாள்!

தன்னவன் தவிப்பில் தர்மசங்கடம் கொண்டாளோ,

தாரகை தவிர்த்ததில் தடுமாறிப் போனாளோ – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…