பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 26

ஒருவிதத்தில் பல்லவி அவர்களுடன் வராததை நன்மையாகவே கருதினான் குணா. பெண்களுக்கு இடையே நிலவிய புரிதலை கவனித்தவன், யமுனாவிடம் மனம்விட்டு பேசுவதற்காக, காரை முருகன் கோவிலுக்குச் செலுத்தினான்.

யமுனாவும் மதுசூதனனும், நினைவலையில் கலந்தபடி கோவில் பிரகாரத்தை வலம் வர, திருமண மண்டபத்தைக் கடந்து சென்ற குணாவின் கண்களில் பல்லவியின் உருவம் பற்றிக்கொண்டு, அவன் இதழ்கள் தன்னிச்சையாகப் புன்னகை உதிர்த்தன.

“அம்மு! நான் பல்லவி விஷயத்துல நிறைய தப்பு பண்ணிட்டேன் டி!” எதில் தொடங்குவது என்று புரியவில்லை அவனுக்கு.

“தெரியும் மாமா! அதனால தான் நான் ஓடி வந்தேன்!” என்றவள்,

தன்னை மலைத்துப் பார்க்கும் மாமனின் கைகோர்த்து, “அஷ்வின் அண்ணா எல்லாத்தையும் சொல்லிட்டாரு! அவரும் இப்போ இந்தியா வந்திருக்காரு!” மேலும் புதிர் போட்டாள்.

சிந்தனையில் கலந்தவனை உலுக்கியவள், “ஊருக்கு மட்டும்தான் மாமா நீ உபதேசம் செய்வ! பாசத்தால் எதையும் வெல்லலாமுன்னு சொல்லிட்டு, பல்லவி பாசத்தைப் புரிஞ்சுக்காமலேயே இருந்துட்டியே!” அவன் தவறை சுட்டிக்காட்டினாள்.

மதுமிதாவின் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தில் நிலையான மனஉறுதிப்பாடு இல்லாமல், அனைவரையும் சந்தேகக் கண்களுடன் பார்த்தாக ஒப்புக்கொண்டான். மேலும் பல்லவியின் குறும்பிற்கும், பக்குவத்திற்கும் வித்தியாசம் அறியாமல் திண்டாடியதாக எடுத்துரைத்தான்.

யமுனா அவள் பங்குக்கு, பல்லவி தன்னிடம் அடித்த லூட்டிகளை விவரித்தாள்.

வெளிப்படையாகப் பேசியதில், இருவரின் மனமும் லேசானது.

மதுசூதனனின் மனமாற்றத்தை அறிய ஆவலாக இருந்தவன், “அது சரி மது! இவ இவ்வளவு வியாக்கியானம் செய்யறாளே! மதுமிதா விஷயத்துல, உன்கிட்ட பொறுமையா பேசினாளா, இல்லை அடம்பிடிச்சாளா!” யமுனாவின் தலையில் செல்லமாகத் தட்டியபடி வினவினான்.

“சொல்லுடா! நான் உன்ன மிரட்டினேனா!” கண்களை உருட்டினாள் யமுனா.

“இப்போவாவது நான் ஒருத்தன் இங்க இருக்கேன்னு யோசிச்சீங்களே!” பொய்கோபம் கொண்டவன், குணாவிடம் தான் சுயநலத்துடன் நடந்துகொண்டதற்கு மனதார மன்னிப்பு கேட்டான்.

குணாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, யமுனா தன்னிடம் மதுமிதா விஷயத்தில் ஒருபோதும் குரலைக் கூட உசத்தியதில்லை என்று புகழ்ந்தவன்,

“என் பிடிவாதத்துனால, நான் மிகவும் நேசிக்கற யமுனாவ இழந்திடுவேனோன்னு பயந்துட்டேன் குணா!” சொல்லும்போதே அவன் குரல் வலுவிழந்தது.

அன்று பணிக்குத் திரும்பும் வழியில் விமானத்தில் தனக்கு கடவுள் கற்பித்த அனுபவப் பாடத்தை விளக்கினான்.

விமானத்தில் பயணம் செய்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு, பாதிவழியில் எதிர்பாராமல் பிரசவ வலி எடுத்தது. தக்கசமயத்திற்கு விமானத்தைத் தரையிறக்க முடியாமல்போக, அவளின் நிலமையும் தீவிரமானது.

தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் அடிப்படை முதலுதவி தெரிந்த விமான ஊழியர்களும், ஒரு சில பெண்களும் அப்பெண்ணிற்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். ஆனால் குழந்தையை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது.

“பசியில் பரிதவிக்கும் பிள்ளை ஒரு பக்கம், பசியாற்ற வேண்டியவள் பிணமாக மறுபக்கம் என ஜனனத்துக்கும் மரணத்துக்குமான பாசப் போரில் பரிதவிக்கும் அந்த ஆண்மகனின் நிலையைக் காண கொடுறூமாக இருந்தது.

குழந்தை வேண்டாம்னு ஒரு நொடியில் சொல்லிட்டேன் குணா. ஆனால் அந்தப் பெண், குழந்தையைப் பெற்றெடுக்க பாடுப்பட்டது; பிறந்த குழந்தை, அம்மாவின் அரவணைப்புக்குத் தவிக்கிறது எல்லாம் பார்த்ததும், என் யமுனாதான் கண்முன்னே வந்தாள்.

மனைவி, குழந்தைன்னு, கடவுள் எனக்கு எல்லாம் கொடுத்தும், அவர்கள் அருமை புரியாமல் எவ்வளவு அலட்சியமா இருந்தேன்னு புரிஞ்சுகிட்டேன்!” என்று வருந்தினான்.

ஊருக்குப் புறப்படும்போது அனைத்துமானவள் கல்நெஞ்சத்தோடுப் பேசியதையும் விவரித்து, அவளளைத் தோளோடு சேர்த்து வளைத்தான்.

பேதையும், நடந்ததை எல்லாம் அசைப்போட்டபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

மனதளவில் யமுனா இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது என்றவன்,

“அதான், நடப்பது நடக்கட்டும்னு துணிஞ்சு என் பெற்றோர்கிட்ட உண்மையைச் சொல்லிட்டேன்.

அவங்க நம்பிக்கைக்கு மாறாக நடந்துகிட்டேன்னு என்மேல வருத்தப்பட்டாலும், யமுனாவின் நற்குணம், சகிப்புத்தன்மை எல்லாம்  கண்கூடா பார்த்தவங்க, அவளுக்காக என் தவறுகளை மன்னிச்சிட்டாங்க.” என்றவனின் விழிகள் தன்னவளைத் தழுவி மீண்டது.

பாசத்தால் வென்ற யமுனாவை மெச்சுதலாகப் பார்தான் குணா. பேதையும் அவன் உள்ளம் அறிந்து கண்சிமிட்டினாள்.

இருவரையும் மனநிறைவோடு யமுனாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

பிறந்த வீட்டிற்கு வந்ததும், குறும்புகள் செய்யும் சிறுப்பிள்ளையாகவே மாறினாள் யமுனா. திறந்திருக்கும் கதவின் தாழ்ப்பாளை ஓங்கித்தட்டி விடாமல் சத்தம் செய்தாள்.

“யார் அது, பெல் அடிக்காம தாழ்ப்பாள் சத்தம் செய்யறது?” திட்டியபடியே வாசலை நோக்கி விரைந்துவந்தாள் மீனாட்சி.

குணாவும், யமுனாவும் வாசற்படியில் ஜோடியாக நிற்க, காலச்சக்கரத்தில் திடீரென்று பின்நோக்கி சென்றதுபோல பேந்தப் பேந்த முழித்தாள்.

நெடுநாட்களுக்குப் பிறகு அன்னை முகம் கண்டவள், “அம்மா!” எனப் பாய்ந்தோடி அவளை இறுக கட்டியணைத்தாள்.

கட்டியணைத்தவளைத் தொடலாமா வேண்டாமா என்று மீனாட்சியின் கரங்கள், முன்னுக்கும் பின்னுக்கும் செல்ல,

“யாருமா வந்திருக்கா!” வினவியபடி மேடிட்ட வயிறுடன் வந்தவள்,

“அக்கா” எனக் கூக்குரலிட,

தங்கையின் உடல்நலம் பற்றி, பல்லவி சொன்னது நினைவுகூர்ந்தாள் யமுனா.

“சுதா! பதற்றப்படாத! எனக்கு ஒண்ணும் ஆகல. நான் எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்!” பதறியவள், தங்கையின் நெஞ்சில் நீவிவிட்டாள்.

பெண்களின் பேச்சுக்குரல் கேட்டு, வெளியேவந்த மாணிக்கம், யமுனாவை கண்டதும்,

“எங்கடா வெச்சிருந்த என் பொண்ண இத்தனை நாளா? படுபாவி!” என்று குணாவின் சட்டையை பிடித்து உலுக்கினார். மீனாட்சியும் அவனை சரமாறியாக திட்டி ஒப்பாரிவைத்தாள்.

யமுனா இடைபுகுந்தும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அடிகளையும், திட்டுக்களையும் சிலையாக நின்று ஏற்றுக்கொண்டான்.

“நீயாவது வாய்திறந்து உண்மையை சொல்லேன் மாமா!” கடுப்பானவள், உறைந்துபோனவனை உலுக்கினாள்.

யமுனாவை குறும்பாக ஏறிட்டவன், “பொறு டி! அவங்களுக்கு அலுப்பு தட்டட்டும்! இவ்வளவு  பலமா அடிச்சா, உன் ஆளு தாங்க மாட்டான்!” எனக் கண்சிமிட்டினான்.

“இத்தனை இன்னலிலும் உனக்கு விளையாட்டா!” என்றபடி அவனை மடக்கிய கையால் குத்தியவள்,

“ராணுவத்துல இருக்குற என் புருஷனுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்!” பெருமையடித்துக் கொண்டு,

“மது வா டா!நீ எவ்வளவு பலசாலின்னு இவங்களுக்குக் காட்டு!” உரக்க அழைத்தாள்.

மகளின் அழைப்புக்குப் பணிந்து, பரிச்சயமில்லாத ஒருவன் வந்து நின்றதும், அத்தனை நேரம் ஓயாமல் துன்புறுத்திய உதடுகளும், கைகளும் அமைதியடைந்தன.

“என்னை வேண்டாம்னு சொல்லிட்டு, உங்க பொண்ணு இவன் கூட ஓடிப்போனா, நான் என்ன செய்யறது அத்தை!” குணா அப்பாவியாக உதட்டைப் பிதுக்க,

“உன்ன போய் வலுக்கட்டாயமா அழைச்சிட்டு வந்தேன் பாரு! எல்லாம் என்னை சொல்லணும்!” தன் பங்குக்கு மொத்தினாள் பேதை.

“அஞ்சு வருஷத்துக்குப் பிறகு வந்திருக்கேன் மா! உள்ள வான்னு சொல்லமாட்டையா!” யமுனா கெஞ்சலாகக் கேட்க,

குழப்பத்தில் தத்தளித்தவள் அமைதியாக உள்ளே நகர்ந்தாள்.

“பிடிக்கலன்னு சொல்லியும் என்னை அந்த ஆளுக்குக் கல்யாணம் செஞ்சு வெக்கணும், நீங்க பிடிவாதமா இருந்ததுனால தான், நான் இப்படி செஞ்சிட்டேன்!” வேறுவழி தெரியாமல் செய்ததாக மன்னிப்பு கேட்டு தன்னால் குணா எதிர்கொண்ட அவமானங்களையும் கூறி வருந்தினாள்.

பூர்விக சொத்தின் பத்திரத்தையும் தந்தையிடம் திருப்பித் தந்து, குணா அதை வாங்கியதற்கான காரணத்தையும், பணம் கேட்ட நோக்கத்தையும் விவரித்தாள்.

மாமன் மார்பில் புதைந்து, தேம்பி தேம்பி அழுதாள் சுதா.

அவள் பின்முதுகில் ஆறுதலாகத் தட்டிகொடுத்தவன், “ஓய் குட்டிச்சாத்தான்! நீ என்னோட சண்டைப்போட்டாலும், உன் பொண்ணையும் இந்த மாமன் தான் டி வளர்ப்பேன்!” உரிமைகொண்டாட,

“அது என்ன பொண்ணு! பையனா இருந்தா வளர்க்க மாட்டியா!” வம்பிழுத்தாள் யமுனா.

“மாமாவுக்கு கன்னி ராசி அம்மு!” குணா கண்சிமிட்ட, சுதாவும் இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.

சிறுவர்கள் சகஜமாக ஒத்துப்போக, தங்கள் பிடிவாதத்தால் பிள்ளைகள் அனுபவித்த சவால்களை எண்ணியபடி பெரியவர்கள் தலைகுனிந்து நின்றனர்.

குணா முன்வந்து, அவர்கள் மனம் புண்படும்படி மரியாதை குறைவாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு, நல்லுறவாடும் படி கெஞ்சினான்.

தவறு தங்களுடையதும் என்று ஒப்புக்கொண்டு, மருமகனை ஆரத்தழுவி கண்ணீர் உகுத்தார் மாணிக்கம். மீனாட்சியும் கணவன் அருகில் நின்று வருந்த, குணா அவளிடமும் கனிவாகப் பேசினான்.

“நீ பேசாத மா! என் பொண்ண எப்போப்பாரு குறை சொல்லிட்டு, இப்போ கும்பலோட கும்பலா நல்ல பேரு வாங்க பார்க்குறியா!” இடித்துக்காட்டினாள் யமுனா.

குணா அவளைத் தடுத்தப்போதும், கேட்க மறுத்தாள்.

அவள் கையை பற்றிய மதுசூதனன், “குழந்தை விஷயத்துல இவங்களோட பெருசா தப்பு செஞ்சவங்க எல்லாரையும் பெருந்தன்மையா மன்னிச்சிட்ட! அவங்க பெற்ற மகள தொலைச்ச விரக்தியில் அப்படி பேசிருப்பாங்க; விடு டி!” என்றதும், அவன் ஜாடைபேச்சு உணர்ந்து அமைதிகாத்தாள்.

புகுந்த வீட்டில் மகளுக்கு ஏதாவது பிரச்சனையோ என்று மாணிக்கம் வினவ, அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லி மாமியார் மாமனாரின் நற்குணங்களைப் பறைசாற்றினாள் யமுனா.

பழையபடி நல்லுறவாடும் அத்தை மாமனை, பிறந்தநாள் வியழாவிற்கு வரும்படி அன்பாக அழைத்தவன், தன் உயிர் நண்பன் அஷ்வினை சந்திக்க புறப்பட்டான்.

மதுமிதாவின் பிறந்தநாள் விழாவிற்கு தடபுடலாகவே ஏற்பாடு செய்திருந்தாள் பல்லவி.

உறவினர்கள் ராகமாக பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாட, அன்னை தந்தைக்கு இடையில் நின்ற தாரகை குதூகலமாக கேக் வெட்டினாள்.

“இன்னைக்கு இன்னொரு முக்கியமான நாளும்!” குணா பெருங்குரலில் கூறி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

உடனே அஷ்வின், நண்பனிடம் ஒரு நகைப்பெட்டியை நீட்ட, அதிலிருந்து திருமாங்கல்யம் கோர்த்த தங்கச்சங்கிலியை எடுத்து,

“இன்னைக்கு எங்களோட முதல் திருமண நாளும் கூட!” அறிவித்தவன், பல்லவி உறவுகள் சூழ தனக்குத் தாலி பிரித்து கோர்க்கும் விழா கொண்டாட விரும்பியதாகக் கூறினான். பல்லவியும் அமைதியாகத் தலையசைத்தாள்.

உண்மை அறிந்தவர்கள் அமைதிகாக்க, மகனின் குணமறிந்த பெற்றோர், மனஸ்தாபத்திற்கு தீர்வு காண அவன் ஏதோ முயற்சி செய்கிறான் என்று உணர்ந்தனர்.

‘என்னவள் நீ!’ என்று பொங்கி வழியும் காதலுடன், தன்னவளின் கண்பார்த்து அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தைச் சூட்டியவன், நண்பனுக்கு கண்ணசைவில் நன்றிகளைத் தெரிவித்தான்.

மதுசூதனன் மனமாற்றம் பற்றி நற்செய்தி சொல்ல, தன்னை தொடர்புகொண்ட யமுனாவிடம், குணா பல்லவியின் மனஸ்தாபம் பற்றி விவரித்து, அவளை உடனே நேரில் செல்லும்படியும் கேட்டுக்கொண்டான் அஷ்வின்.  பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று திடமாக நம்பியவன், குணா வீட்டிலிருந்து, திருமாங்கல்யத்தை எடுத்து வந்திருந்தான்.

சுதாவின் கையில் தங்க வளையல்கள் அடுக்கி, அவள் வளைகாப்புக்கு மாமன் சீர் என்று சொல்லி அனைவரையும் இன்பதிர்ச்சியில் ஆழ்த்தினான் குணா.

“மாமா! பல்லவி, சுதாவுக்கு மட்டும் பரிசுப்பொருள் கொடுக்கற! எனக்கு ஒண்ணும் வாங்கலையா!” சண்டைக்கு வந்தாள் யமுனா.

“நாலு வருஷமாச்சுடி, உன் கையால பணியாரம் சாப்பிட்டு; நீ முதல்ல எனக்குப் பணியாரம் செய்து கொடு!” அவள் காதை திருகினான் குணா.

வெகு நாட்களக்குப் பிறகு ஒன்றுகூடிய உறவுகளுடன் விழாவும் விமர்சியாக நடந்து முடிந்தது. மாணிக்கம் குடும்பத்துடன் புறப்பட, யமுனா அத்தை வீட்டிலேயே தங்கினாள்.

மாமன், மனையாளுடன் கொண்ட பனிபோரை பற்றி அறிந்தவள், அவர்களுக்குத் தனிமை கொடுக்க எண்ணி, அன்றிரவே மதுமிதாவை தனியாகப் பார்த்துக்கொள்கிறேன் என்றாள். குழந்தைக்குக் காய்ச்சல் இருந்ததால், குணா தயங்கினான். பல்லவி எதிலும் தலையிடாமல் அமைதிகாத்தாள்.

யமுனாவின் உள்நோக்கத்தை உணர்ந்த அஷ்வின், தானும் அன்றிரவு அவர்கள் வீட்டிலேயே தங்குவதாகச் சொல்லி,

“யமுனா! உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்னைக் கூப்பிடு மா!” என்று அவளுக்குக் கண்ணசைத்தான்.

அதற்குமேல் குணாவால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

கழுத்தில் தொங்கிய தாலியை விரல்களின் இடுக்கே சுழற்றியபடி, பல்லவி அமைதியாக சோபாவில் அமர்ந்திருக்க, கட்டிலில் சயனித்தவன், அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

தன்னவளிடம் முழுமனதாக மன்னிப்பு கேட்க தயாராக இருந்தபோதும், அவள் மனநிலை முற்றிலும் அறியாத நிலையில், முன்வந்து பேசுவது நல்லதில்லை என்று மௌனம் காத்தான்.

விவாகரத்தில் வந்து நின்ற உறவை புதுப்பிக்க நினைப்பது முட்டாள்தனம் என்று முடிவுசெய்தவளோ, திருமாங்கல்யத்தை தலைக்குமேல் கொண்டுவர,

அதைக்கண்டு திடுக்கிட்டு எழுந்தவன், “பல்லவி! என்ன செய்யற!” பதறினான்.

“நாளைக்கு விவாகரத்து ஆகப்போகுது; இது மட்டும் எதுக்கு!” குத்தலாக வினவினாள்.

“என் மனமாற்றத்தை தெரிவிக்க, நான் காலையிலேந்து முயற்சி செய்யறேனே; உனக்குப் புரியலையா; இல்ல புரியாத மாதிரி நடிக்கறையா?” பொங்கிய சினத்தை அடக்கியபடி வினவினான்.

“ஓ அப்படியா மிஸ்டர்.குணா! நான் இதையும் நம்ம வழக்கமா போடுற ஊமை நாடகம்னு நினைத்துவிட்டேன்!” ஏளனமாக உரைத்தாள்.

அவளருகே வேகநடையிட்டவன், “போதும் பல்லவி! தப்பெல்லாம் என்னுடையது தான்!” ஒரே வரியில் ஒப்புக்கொண்டு அவள் முகத்தை இருகரங்களில் குவித்து,

“ப்ளீஸ்! நாம மனசவிட்டு பேசலாமே டி; கசப்பான நிகழ்வுகளை மறந்து புது வாழ்க்கை தொடங்கலாமே டி!” கெஞ்சினான்.

“நீங்க இப்படி உரிமையா என்கிட்ட டி போட்டு பேசுறத கேட்க நெகிழ்வாதான் இருக்கு குணா. ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் நான் இல்ல!” பதில்சொல்லி, அவன் கைகளை விலக்கினாள்.

“யாருக்காக எதுக்காக இப்படியெல்லாம் நடந்துகிட்டேன்னு தெரிஞ்சும் நீ இவ்வளவு பிடிவாதமா பேசுறது எந்தவிதத்திலும் நியாயமில்ல பல்லவி!” அவள் அனைத்தும் அறிந்தும் அறியாதவளாக, தன்னிடம் பழகியதையும் சுட்டிக்காட்டினான்.

“நீங்க மட்டும் என்னவாம்? ஒரு நண்பரா எவ்வளவு புரிதலோட பழகினீங்க. ஆனால் காதலிக்கிறேன்னு சொன்னதும், வெறும் சந்தேகக் கண்களோட மட்டும்தானே பார்த்தீங்க!”, அவன் செய்ததும் நியாயமில்லை என்று வருந்தியவள்,

“ஒரு உண்மையை சொல்லுங்க குணா! அன்னைக்கு அஷ்வின் குறுக்கிடலேன்னா, என்னை அப்போவே விரட்டி விட்டிருப்பீங்க தானே! இன்னைக்கு யமுனா வரலேன்னா, என்னை விவாகரத்து செஞ்சியிருப்பீங்க தானே!” கசப்பான உண்மைகளைச் சுட்டிக்காட்டினாள்.

பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து நின்றான் குணா.

“ஒவ்வொரு முறையும் யமுனாவும் அஷ்வினும் வந்து நம்மள சமாதானப் படுத்தி சேர்த்து வைக்குற வாழ்க்கை எனக்கு வேண்டாம்.” தீர்கமாக உரைத்தவள்,

உங்கள காதலிச்சத தவிர நான் எந்த தப்பும் செய்யலன்னு நீங்க புரிஞ்சுகிட்டீங்க. அதுபோதும் குணா! நான் சந்தோஷமா விவாகரத்துக்குச் சம்மதிக்கறேன்!” முடிவே செய்துவிட்டாள்.

“லூசா டி நீ! நான் வேண்டாம்னு சொல்றப்ப எல்லாம், ‘என் கணவர்’, ‘என் குணா’, ‘உன்ன வெறுக்க மாட்டேன்’னு உரிமை கொண்டாடிட்டு, இப்படி எல்லாம் கூடி வரப்ப, விட்டுட்டு போறேன்னு சொல்றியே!” எரிச்சலடைந்தவன்,

“உன்ன நம்பாம இருந்தது தப்புதான் பல்லவி! ஆனால் கொஞ்சம் என்னோட பக்கத்துலேந்தும் யோசிச்சு பாரு!” தாழ்ந்த குரலில் கெஞ்சியவன், தன் மனநிலையை எடுத்துரைத்தான்.

“மதுமிதா பிறக்காம இருந்திருந்தா யமுனா வாழ்க்கை சந்தோஷமா இருந்திருக்குமோன்னு நான் பலமுறை யோசிச்சதுண்டு. ஏன்னா, கருவை கலைக்கக்கூடாதுன்னு நான்தான் வற்புறுத்தினேன். அதான் அவளுடைய வாழ்க்கைக்குத் தீர்வு காணும்வரை, ரகசியங்கள் வெளியே வரவே கூடாதுன்னு நெனச்சேன்!

“அதையும் மீறி, பல சந்தர்ப்பங்களில் உன்கிட்ட மனசவிட்டு சொல்ல நெனச்சிருக்கேன். ஆனால் நீதான் ஏதாவது ஏடாகூடாமா செஞ்சி, அது உண்மையா பொய்யான்னு கூட தெரியாத அளவிற்கு குழப்பி விட்டுடுவ!” என்றான்.

அது உண்மை என்று அறிந்தவள் மௌனம்காக்க,

“ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்து பல்லவி! நம்ம பந்தம் விவாகரத்து வரைக்கும் போனதுக்கு அப்புறமும், உனக்கு உண்மைகள் ஏற்கனவே தெரியும்னு சொல்லாமல் ஏன் அவ்வளவு பிடிவாதம இருந்த?” கேட்டு மடக்கினான்.

“எந்த ஒரு விஷயத்தையும் என் குணா தயக்கமில்லாமல் என்கிட்ட பகிர்ந்துக்கணும்னு நெனச்சேன். என் குணாவோட நம்பிக்கையின் பாத்திரமா இருக்கணும்னு நெனச்சேன். மொத்ததில், எனக்கே எனக்கான குணா வேணும்னு நெனச்சேன். அது ஆசையா பேராசையான்னு எனக்குத் தெரியாது! ஆனா நான் இப்படித்தான்!” மனதில் தேக்கிவைத்த காதல் அடைமழையாக பொய்தது.

விலகிச்செல்கிறேன் என்று வீம்பு பிடித்தாலும், அடிமனதிலிருந்து அவள் “என் குணா” என்று வார்தைக்கு வார்த்தை சொல்லுதில் என்னவள் என்ற கர்வம் கொண்டான்.

இதழோரம் தேங்கிய புன்னகையுடன், “அது நியாயமான ஆசைதான் பல்லவி! கணவன் மனைவி உறவுல பேராசையும் தப்பு இல்ல!” வாஞ்சையாக அவள் கைகோர்த்து,

“இப்போ என் நெஞ்சை நெருடும் ஒரு விஷயத்திற்கு உன்கிட்ட பதில் கேட்கப்போறேன். இதுவரை நான் வாய்விட்டு இதைப்பற்றி யாரிடமும் சொன்னது இல்ல. உன் முடிவு எதுவாயிருந்தாலும், மறுகேள்வி இல்லாமல் மனப்பூர்வமா ஏத்துக்கறேன், சரியா!” என்றதும்,

பேதை கண்கள் அகல பார்த்தாள்.

மதுமிதாவிற்கு மனஇறுக்கம் என்று அறிந்த உடனே, அதைப்பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்டதில், குழந்தையின் நல்வாழ்விற்குத் தேவையான தரமான மருத்துவ சிகிச்சைகளும், பயிற்சிகளும், இந்தியாவை காட்டிலும், அமெரிக்காவில் தான் சிறப்பாக உள்ளது என்று கண்டறிந்தாகக் கூறினான். அதனால், யமுனாவே வந்து குழந்தையை கேட்டாலும், மதுமிதாவை தன்னுடனே வைத்துக்கொள்ள நினைத்ததாகக் கூறி, திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்ள விரும்பாததற்கு, அதுவும் ஒரு காரணம் என்றவன்,

“மதுமிதாவை நம்மகிட்டவே விடச்சொல்லி யமுனாகிட்ட கேட்கலாமா வேண்டாமான்னு யோசிச்சு சொல்லு!” அவள் கன்னத்தில் மென்மையாகத் தட்டி,

“குட் நைட்!” என்று கட்டிலை நோக்கி நகர்ந்தான்.

“மதுமிதாவை, யமுனாவோட அனுப்பறது தான் சரி!” பட்டென்று தன் முடிவை சொல்லிவிட்டாள்.

“யோசிச்சு சொல்லு மா!” நினைவூட்டினான்.

“மறுகேள்வி கேட்க மாட்டேன்னு சொன்னீங்களே!” இளக்காரமாக அவளும் நினைவூட்டினாள்.

அவள் மனநிலை புரியாமல் தவித்தான் குணா.

“இது என் உறுதியான முடிவு குணா. உங்க மனசுல இடம்பிடிக்கணும் எல்லாம் என்னால மனசாட்சிக்கு விரோதமா பதில் சொல்ல முடியாது. எனக்கும் மதுமிதான்னா உயிர்; அவள பிரிய ரொம்ப கஷ்டமாதான் இருக்கும்; அதுக்காகத் தவமிருந்த அம்மா, மனம்திருந்தி வந்த அப்பா, இவங்ககிட்ட சேர்க்காம ஏதோ மருத்துவ காரணங்களுக்காக நம்மகிட்டையே வெச்கிக்க நினைக்கறது ரொம்ப தப்பு!” தெளிவாக விளக்கினாள்.

சிந்தித்துப் பேசுகிறாள் என்று நிம்மதி அடைந்தவன், “அதுக்கில்ல பல்லவி! மனஇறுக்கம் பற்றி உனக்கும் எனக்கும் தெரிஞ்ச அளவிற்கு, அவங்களுக்குத் தெரியாதே!” அவன் தயங்க,

“அதெல்லாம் தாய் தந்தைன்னு பொறுப்பு வந்துட்டா தானா அத்தனை பேரும் தன் குழந்தைக்கு ஆசானாக, மருத்துவராக, வக்கீலாக மாறிடுவாங்க.” தர்க்கம் செய்தவள்,

“உங்களுக்கு மதுமிதா மேல அளவுகடந்த பாசம்; என்னதான் இருந்தாலும் இத்தனை வருஷம் தனி ஆளா வளர்த்திருக்கீங்க இல்ல! அதான் குழம்புறீங்க!” என ஆறுதலாக அவன் கரங்களை வருடினாள்.

அவனும் தன் மனதில் தோன்றிய உணர்வு பாசமா, பொறுப்பா என்று அசைப்போட்டான்.

“ஆயிரம் பேர் இருந்தாலும் அப்பா அம்மா நிழலுல வளராத ஏக்கம் எப்படி இருக்கும்னு நான் அனுபவிச்சிருக்கேன். அந்தக் கொடூறமான தண்டனையை மதுமிதாவுக்கு கொடுக்க விரும்புல குணா!

நீங்க என்னை மனைவியா ஏத்துக்கிட்டாலும் இல்லேனாலும், இது தான் என் முடிவு!” தீர்கமாக உரைத்து நகர்ந்தாள்.

“என் மனைவி திருமதி.பல்லவி குணசேகரன் முடிவு சரியாதான் இருக்கும்! நான் மனப்பூர்வமா சம்மதிக்கறேன்.” ஆழ்மனதிலிருந்து உரைத்து கரங்களை விரித்தான்.

மென்சிரிப்புடன் தலையசைத்தவள், என்னவன் என்ற மனநிறைவுடன், அவனுள் தஞ்சம் புகுந்தாள்.

ஒருத்தி மகளாக பிறந்து ஓசையில்லாமல்,

ஒப்பற்றவன் மாமனவன் மகளாக வளர்ந்தாள்;

ஒளிர்முகம் படைத்த பதுமை அவளை – பெற்றவளிடம்

ஒப்படைக்க கலந்தாலோசித்த தம்பதியர்கள்,

ஒருமித்தமாக எடுத்த முடிவு சரியா-தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…