பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 25

இந்தியாவிற்கு திடீர் விஜயம் செய்தவர்களைக் கண்டதும், சாவித்ரிக்கும், மனோகருக்கும் தலைகால் புரியவில்லை. தங்கள் முதல் திருமண நாளையும், மதுமிதாவின் பிறந்தநாளையும் அவர்களுடன் கொண்டாட வந்திருப்பதாக, பல்லவி சமாளிக்க, உதட்டில் தேங்கிய பரிகாச சிரிப்புடன், பெண்மானின் மழுப்பல் பேச்சுக்கு ஒத்தூதினான் குணா.

திருமணநாள் பரிசாக மனைவிக்கு விவாகரத்து கொடுக்க கங்கணம் கட்டியிருந்தவன், பத்திரங்களை நீட்ட,

“அவசரப்படாதீங்க குணா. நான் அந்த அர்த்தத்துல சொல்லல…!” உண்மையைக் கூற வந்தவளை, தன்மானம் கட்டிப்போட்டது.

பத்திரங்களை மடக்கியவள், “நம்மளோட பிரிவு பலரோட மனச கஷ்டப்படுத்தும் குணா!” ஆதங்கத்துடன் தொடங்கவும், அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்கவும், சரியாக இருந்தது.

அறைக்குள் நுழைந்த கமலாம்மா, “பல்லவி பாப்பா! உன்ன பார்க்க ஒரு முகமதிய பெண் வந்திருக்காமா; உன் சிநேகிதின்னு சொன்னா;” அறிவித்தாள்.

முகமதிய பெண் என்றதும், பல்லவியின் பித்தலாட்டங்களை நினைவுகூர்ந்தவன்,

“நீ திருந்தவே மாட்டியா…ச்சீ…!” முகம் சுளித்து, “இப்போவே உன் ஆட்டத்துக்கு ஒரு முடிவுகட்டறேன்!” என்று வேகநடையிட்டான்.

“வந்திருக்கிறது யாருனே எனக்குத் தெரியாது குணா!” மன்றாடியபடி அவனைப் பின்தொடர்ந்தாள் பல்லவி.

ஆவசேமாக குணா அப்பெண்ணை நோக்கி செல்வதும், அவள் பின்னுக்கு நகருவதுமாக, சுவற்றில் மோதி அகப்பட்டாள்.

“அவதான் அறிவுகெட்டத்தனமா வேஷம்போட சொன்னான்னா, நீயும் கிளம்பி வந்துடுவியா!” பழித்தவன், பலவந்தமாக அவள் முகத்திரையை விலக்கினான்.

“அம்மு!” மறுகணமே அவன் பேதலித்துப்போக,

“யமுனா!” என்று பெண்களின் குரல், ஒரேசீராக அதிர்ச்சியில் எதிரொலித்தது.

குணாவின் பெருங்குரலில் திடுக்கிட்டு ஓடிவந்த சாவித்ரியும் மனோகரும், கண்ணாமூச்சி ஆட்டத்தில், சற்றும் எதிர்பாராத நேரத்தில் மறைந்திருப்பவரை கண்டுவிட்டதுபோல அதிர்ந்தனர்.

“மாமா!” மென்குரலில் அழைத்தாள் யமுனா.

அதில் சுயத்திற்கு வந்த சாவித்ரி, யமுனா நிற்கும் திசையில் பாய்ந்தோடி “நீ உயிரோடதான் இருக்கியா டி!” இருபுறமும் தோளினை உலுக்கி அழுதாள்.

“அத்தை! எனக்கு ஒண்ணும் ஆகல; பதற்றப்படாம இருங்க! எல்லாம் விளக்கமா சொல்றேன்!” அவளை ஆரத்தழுவி ஆசுவாசப்படுத்தினாள் யமுனா.

யமுனா மட்டும் தனியே வந்ததை கவனித்தவன், பல்லவிதான் மதுமிதாவை அவளிடம் சேர்க்க, சதிதிட்டம் தீட்டியிருக்க வேண்டுமென்று யூகித்து,

“யார் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்ல; நீ மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்குற…சுயநலவாதி!” பல்லவியை பழித்து, விவாகரத்து செய்தே தீருவேன் என்றும் மிரட்டினான்.

கட்டியவள் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாகப் பொய்சொல்லி மறுமணம் செய்துகொண்டு, இன்று அவளையும் விவாகரத்து செய்ய நினைக்கும் மகனின் அக்கிரமங்களை கண்ட மனோகர்,

“உன் அட்டூழியங்களுக்கு அளவே இல்லையா டா!” கர்ஜித்து அவன் கன்னத்தில் ஓங்கி அடித்தார்.

அதில் திடுக்கிட்ட பல்லவி, “மாமா!” பெருங்குரலில் எதிர்த்து,

“குணா உங்க மகனாகவே இருந்தாலும், இப்போ அவர் என் கணவர்; என் கணவரை கைநீட்டி அடிக்க உங்களுக்கு உரிமை இல்ல!” கண்டித்தவள்,

“உங்க எல்லாருக்கும் சொல்றேன்! குணா ரொம்ப நல்லவர்!” என்றாள்.

வசியப்பேச்சால் அனைவரையும்  திசைத்திருப்புகிறாள் என்று எரிச்சலடைந்தவன்,

“என்னுடைய அப்பா என்னை அடிப்பாரு; இது எங்க குடும்ப விவகாரம்; இதுல தலையிட உனக்குத்தான் எந்த உரிமையும் இல்ல!” என்று அவளை வலுக்கட்டாயமாக வாசலை நோக்கி இழுத்தான்.

“மாமா! பல்லவிக்கு நம்ம ரகசியம் எல்லாமே தெரியும்!” பட்டென்று உண்மையை உடைத்தாள் யமுனா.

“நீ சும்மா இரு அம்மு! இவளுக்குப் பயப்படாத; நான் பார்த்துக்கறேன்.” தடுத்தவன்,

மென்மையான குரலில், “அப்பா! கொஞ்சம் பொறுங்க! இவளுக்கு ஒரு முடிவு கட்டிட்டுவந்து எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்!” என்றான்.

மூவரின் பேச்சையும் கவனித்த மனோகர்,

“எதுவாயிருந்தாலும் பல்லவியே சொல்லட்டும்” ஆணையிட்டார்.

“அப்பா!” எதிர்த்தான் குணா.

“பேசாதே டா! உங்க ரெண்டு பேரையும் நான் நம்ப மாட்டேன்; குடும்ப மானம் எப்படிப்போனா எனக்கென்னன்னு, திருட்டு கல்யாணம் செய்துகிட்டவங்க தானே நீங்க!” பொருமினார்.

பல்லவியின் நற்குணம் அறிந்த யமுனா அமைதிகாக்க, எல்லாம் தன் கைமீறி போனதாக மனமுடைந்தான் குணா.

இத்தனை இன்னல்களிலும், மாமனார் தன்னை முழுமனதாக நம்பியதில் பல்லவி ஆறுதலடைந்தாள். தன்னவனின் பிடியிலிருந்து விலகி,

“மாமா! முதல்ல ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க! குணா ரொம்ப நல்லவர்!” அடிமனதிலிருந்து உரைத்தவளின் விழிகள் தன்னவனை ஏக்கத்துடன் பார்த்தது.

அப்போதும் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான் குணா.

“நீங்க எல்லாரும் நினைக்குறா மாதிரி, குணாவும், யமுனாவும் கல்யாணம் செய்துக்கல! யமுனாவுக்கும், அவள் காதலன் மதுசூதனனுக்கும் தான் குணா கல்யாணம் செய்துவைத்தார்!” மெல்லமாகத் தொடங்கினாள்.  

மதுசூதனன் பெயரை உச்சரித்தும், அவள் அனைத்தையும் அறிந்திருப்பதைப் புரிந்துகொண்டான் குணா. அதை உறுதி செய்ய யமுனாவை அவன் ஏறிட, அவளும் இமைகள் தாழ்த்தி விடையளித்தாள்.

காதல் திருமணத்தை எதிர்க்கும் யமுனாவின் பெற்றோர் மனநிலை, மதுசூதனனின் இராணுவப் பணி என காரணங்களை அடுக்கி குணா அவர்களுக்கு ரகசியமாகத் திருமணம் செய்துவைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் என்று தன்னவனை விட்டுக்கொடுக்காமல் பேசியவள்,

“மதுசூதனன் பணி முடிந்து வந்ததும், ரெண்டுபேர் வீட்டுலையும் உண்மையை சொல்ல நினைத்தார். ஆனால் விதியின் விளையாட்டில், அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று!

மதுமிதா பிறந்து நாலுமாசம் இருக்கும்போது, மதுசூதனனுக்கு ஒரு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.” என்றவளை குணாவும், யமுனாவும் குழப்பத்துடன் ஏறிட்டனர்.

அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கண்ணசைத்தவள் தன் கற்பனைக்கு எட்டிய கட்டுக்கதை ஒன்றை கூறினாள்.

“விபத்தில் அவர் முள்ளந்தண்டு வடம் பாதித்ததில், கால்கள் முற்றிலும் செயலிழந்தவிட்டது. கொரோனா காலம் என்பதால், அவர் பணிபுரிந்த அந்த மலைபிரதேசத்தில் இருந்த கிராமத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டியதாயிற்று.

அவர் பரிபூரணமாக குணமடைய ஒன்றிலிருந்து இரண்டு வருடங்கள் கூட ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் மதுமிதாவிற்கு மனஇறுக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு, காலம்தாழ்த்தாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்தனர்.

கணவரா, குழந்தையா என்ற போராட்டத்தில் தத்தளித்த யமுனாவிற்கு உதவ முன்வந்தார் குணா. மதுசூதனன் பூரணமாக குணமடையும் வரை யமுனாவின் கணவராக நாடகத்தை தொடர தீர்மானித்தவர், யமுனாவை பற்றி சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தன் இதயத்தை கல்லாக்கி, தான் உயிரினும் மேலாக நேசித்தவள் இறந்துவிட்டதாகச் சொன்னார்.” என்று பெருமூச்சுவிட்டாள் பல்லவி.

“உன் கணவர் ஏன் வரல்ல? இன்னும் உடம்பு சரியாகலையா?” படபடவென்று வினவினாள் சாவித்ரி.

மதுசூதனன் மனநிலை என்னவென்று தெரியாத குணாவும் பல்லவியும் அவளை ஆழமாகப் பார்த்தனர்.

“அவரும் வந்திருக்காரு அத்தை! அவருக்கு உங்க எல்லாரையும் சந்திக்க தயக்கம்; அதான் பல்லவியை சந்திச்சு, மாமா காதுல போட சொல்லலாம்னு, இப்படி பர்தா போட்டுட்டு வந்தேன். ஆனா இந்த மாமா எல்லாத்தையும் சொதப்பிட்டாரு!” உதட்டை சுழித்தாள்.

மதுசூதனனின் மனமாற்றத்தை அறிந்த குணாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதேசமயத்தில் யமுனாவும், பல்லவி புராணம் பாடுகிறாளே என்று வியந்தவன், அவன் சுமைகளைத் தனதாக்கி கொண்டு ரகசியமாகப் போராடியவளின் உள்ளம் அறியாமல், அளவில்லாமல் துன்புறித்திவிட்டதை எண்ணி நொந்தான்.

அவளிடம் மன்னிப்பு கேட்க துடிதுடித்த இதயம், விழிகளில் தூது அனுப்ப, வேதனைகளில் மறத்துப்போன பெண்மனம் அதை அலட்சியம் செய்தது.

மகனை மெச்சுதலாகப் பார்த்தவர், சற்றுமுன் காயப்படுத்திய அவன் கன்னங்களை வருடி, “யமுனா இறந்துட்டான்னு சொல்றதுக்குப் பதிலா, இந்த உண்மையெல்லாம் சொல்லிருக்கலாமே டா!” கம்மல் குரலில் வினவினார்.

“அது…அப்பா!” தடுமாறியவன், “யமுனாவை நேருல பார்க்காமல் நான் சொல்றத எல்லாம் நீங்க நம்புவீங்களான்னு யோசிச்சேன் பா.” அவன் வார்த்தைகளைக் கோர்க்க,

“எனக்கும் மதுசூதனனை அந்த நிலமையில உங்களுக்கு அறிமுகம் செய்ய விருப்பமில்ல மாமா. உடலாலும் உள்ளத்தாலும் அவர் தேறின பிறகு நேருல அழைச்சிட்டு வரேன்னு சொன்னதுனால தான், குணா மாமா எனக்காக உண்மையை மறைத்து உங்க எல்லாருடைய வெறுப்பையும் சம்பாதிச்சாரு!” தன்னால் நிலைகுலைந்து நிற்கும் மாமனை ஏக்கமாக பார்த்து ஒத்தூதினாள்.

“ஆனா! மதுமிதாவுக்கு ஒன்றைரை வயசுலதான் மனஇறுக்கம் இருக்குறத கண்டுப்பிடிச்சதா சொன்னீயே டா!” சாவித்ரி குறுக்குவிசாரனை செய்ய,

கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் ஏறிட்டனர். குணா தடுமாற,

“அத்தை! இத்தனை பொய் சொன்ன உங்க மகன், இதை மட்டும் உண்மையாவா சொல்லிருக்க போறாரு!”, சாவித்ரியின் தோளினை சுற்றிவளைத்தவளின் பார்வை தன்னவனை ஊடுருவியது.

‘இவள் அப்படியே ஹரிச்சந்திர சக்கரவர்த்தி வம்சம்! என்னைக் குறைசொல்கிறாள்!” அவன் பதிலுக்கு ஏறிட,

மருமகளின் புத்துசாதூரியத்தை மெச்சியவள், “சரி! பல்லவி! உனக்கு இதெல்லாம் எப்படி தெரிய வந்துது!” அடுத்த கேள்வியைத் தொடுத்தாள்.

அன்று மதுமிதாவிற்கு ஏற்பட்ட தீக்காயத்தைத் தொடர்ந்து நடந்த விசாரணை, சுதா வழக்கு தொடர சொல்லி நச்சரித்தது எல்லாம் விளக்கி, யமுனாவை கண்டுபிடித்து நேரில் சந்தித்ததாகச் சொன்னாள்.

“கிராதகி! வாய் திறந்தாலே பொய்!” குணா தன்னிடம் அவள் கூறிய பொய்களை அசைப்போட,

“அப்போ, இதெல்லாம் தெரிஞ்சுதான் குணாவ கல்யாணம் செய்தக்கணும்னு பிடிவாதமா இருந்தையா?” வாஞ்சையாக வினவினாள் சாவித்ரி.

அத்தனை நேரம் கம்பீரமாக பேசியவள், ஆம் என்று மட்டும் தலையசைத்தாள்.

மகன் சற்றுமுன் பல்லவியிடம் கடுமையாக நடந்துகொண்டது நினைவுக்கு வர அதைப்பற்றி இருவரிடமும் விசாரித்தார் மனோகர்.

பல்லவியின் அன்பை புரிந்துகொள்ளாமல் அவளுக்குக் கொடுத்த தொல்லைகளை எண்ணி தலைகுனிந்து நின்றான் குணா.

எதை தன்னவன் வாயால் கேட்பதற்குத் தவமிருந்தாளோ, அதைத் தானே, அதுவும் அனைவரின் முன் சொல்லவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி நொந்தாள் பல்லவி.

கணவன்-மனைவி இருவரும் வெளிப்படையாகப் பேச தடுமாறுவதைக் கவனித்தாள் சாவித்ரி. மகன் மதிகெட்டு நடந்தாலும், மருமகள் பக்குவமாக நடப்பாள் என்ற நம்பியவள், அவர்கள் தனிபட்ட விஷயத்தில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைத்து,

“அட! குணாவுக்கு கோபம் வந்தா கண்மூடித்தனமா கத்துவான்னு உங்களுக்குத் தெரியாதாங்க!” கணவருக்குக் கண்ணசைத்து, யமுனாவிற்கு குழந்தையை காட்டும்படி பேச்சை திசைத்திருப்பினாள்.

அன்னை சொல்லிற்குக் கட்டுப்பட்டவன்,

“வா அம்மு! மதுமிதா எப்படி வளர்ந்துட்டான்னு பாரு!” மென்குரலில் அழைக்கவும்,

பேதையின் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவன் மார்பில் புதைந்து பெருங்குரலில் கதறி கதறி அழுதாள். யாருடைய சமாதானமும் அவள் செவிகளுக்கு எட்டவில்லை.

எத்தனை நாட்கள் தேக்கிவைத்த ஏக்கம் என்று பல்லவி அறிந்திருந்தாள். அவனும் தான்.

அழுதால் மனபாரம் குறையும் என்று சில நிமிடங்கள் மௌனமாகத் தட்டிக்கொடுத்தவன், அவள் முகத்தை விழிபார்க்க நிமிர்த்தி,

“ஓய் அம்மு! வீட்டவிட்டு ஓடிப்போக நெனச்சவ ஏன் டி திரும்ப வந்த?” அவன் பாணியில் கிண்டலாகக் கேட்டு கண்சிமிட்டினான்.

“என் மாமாவ மீறி எதுவும் நடக்காதுன்னு நம்பிக்கையில் மா…மா…மாமா!” சந்தோஷமும், துக்கமும் தொனிக்கக் கூறி, அவன் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினாள்.

அவள் தன்னை ‘மா…மா…மாமா’ என்று அழைத்ததில் அவன் கண்களிலும் நீர் கட்டிக்கொண்டது.

மாமனின் கண்களைத் துடைத்தவள், “ம்ஹூம்! நீ அழக்கூடாது மாமா!” இடவலமாகத் தலையசைத்தாள்.

இவர்கள் சுபாவம் பழகிப்போன சாவித்ரி, “ஏன் டி! உனக்கு கொஞ்சமாவது தாய்பாசம் இருக்கா; குழந்தையை பார்க்காமல், இன்னும் சின்ன பொண்ணு மாதிரி அவன்கிட்ட செல்லம் கொஞ்சுற!” கேலி செய்தவள், யமுனாவின் கரம் பிடித்து அழைத்துச் சென்றாள்.

யமுனா, பல்லவியின் கைகோர்த்து தன்னுடன் வரும்படி கையசைக்க, மீண்டும் காதலில் விழுந்தவன், தன்னவளைப் பின்தொடர்ந்தான்.

வானத்து நிலவை போல துயில் கொண்டிருக்கும் தாரகையின் அருகில் சயனித்தாள் யமுனா.

தன்னுள் ரத்தமும் சதையுமாகக் கலந்திருந்தவள், இன்று மாமனின் பாசமான அரவணைப்பில் பதுமையாக வளர்ந்திருந்தாள். குழந்தையின் பிஞ்சு விரல்களை வருடி, அவள் பளிங்கு நெற்றியில் முத்தமிட்டாள்.

இறகை காட்டிலும் மென்மையான அவள் பாதத்தில் தலைபுதைத்த தாயின் உதடுகள் குழந்தையிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு முத்தமிட, அதைக் கவனித்த சாவித்ரி,

“குழந்தை காலில் முத்தம் கொடுக்காத டி! அப்புறம் அவ உன்னவிட்டு ஓடிப்போயிடுவா!” மூடநம்பிக்கையில் பதற,

அத்தையை ஏறிட்டவள், “ஓடிப்போனாலும், என் மாமா அவள பிடிச்சிட்டு வந்து என்கிட்ட பத்திரமா கொடுத்திடுவாரு!” மாமன் புராணம்பாடி வாயாடினாள்.

ஏட்டிக்குப்போட்டி வாயாடும் தன் யமுனாவை மறுபடியும் கண்ட மிதப்பில் குணா நெகிழ,

“உன்ன திருத்தவே முடியாது!”, சலித்துக்கொண்டு அங்கிருந்த நகர்ந்தாள் சாவித்ரி.

“மதுமிதாவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல். மருந்து கொடுத்திருக்கேன். அதான் இப்படி அடிச்சுப்போட்டா மாதிரி தூங்குறா யமுனா!” பல்லவி விளக்க,

“ம்ம்!” என்று மட்டும் தலையசைத்தவள், “ஏன் பல்லவி, மதுசூதனன் பற்றி பொய் சொன்னீங்க!” வினவினாள்.

பேச்சை திசைத் திருப்புகிறாளே என்ற எரிச்சல் பல்லவியின் முகத்தில் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.

அதை உணர்ந்தவள், “அதான் சொல்லிருக்கேனே பல்லவி! குழந்தையை மாமா அக்கறையா பார்த்துக்கறப்ப எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை!” நினைவூட்டினாள்.  

“சரியான மாமா கோண்டு!” சிடுசிடுத்தாள் பல்லவி.

“சரி! நீங்களும் மாமாவும் மதுமிதாவை அக்கறையா பார்த்துக்கறப்ப…!” தன் கூற்றைத் திருத்தியவள்,

“சரி! இப்போ சொல்லுங்க! ஏன் பொய் சொன்னீங்க?” என்றாள்.

குணாவும் அவள் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தான்.

தன்னவனை அனல்பார்வை பார்த்தவள், “பின்ன, உன் மாமாதான் தேவையில்லாம அவனுக்குப் பயந்துகிட்டு, பெரிய சுமைதாங்கி மாதிரி நடந்துக்கிட்டாரு! அப்போவே நாலு தட்டு தட்டி வழிக்கு கொண்டு வந்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா!” படபடவென்று பொரிந்தவள்,

யமுனா பக்கம் திரும்பி, “அதுக்கு நீயும் ஜால்ரா!” அவளையும் சேர்த்து திட்டினாள்.

இருவரும், பிரம்படி கொடுக்கும் ஆசிரியருக்கு பயந்தவர்கள் போல திருதிருவென முழிக்க, பல்லவியே மேலும் பேசினாள்.

“தப்பு செஞ்சவர் மனம்திருந்தி வரும்போது தவறை குத்திக்காட்டாம மறப்போம் மன்னிப்போம்னு ஏத்துக்கறது தான் பெருந்தன்மை; அப்படித்தான் என் பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்து வளர்த்துருக்காங்க!” என்றாள்.

குணா அவள் பதிலில் நெகிந்தான்.

அவன் கைவளையத்தில் பின்னிக்கொண்ட யமுனா, “தப்பு செஞ்ச அவன், எல்லார்கிட்டையும் நல்லபேரு வாங்கணும்; வீண்பழி சுமந்த என் மாமா மட்டும் கெட்ட பேரு வாங்கணுமா!” பல்லவி செய்தது தவறு என்று வாதம் செய்தாள்.

“ஏய் லூசு! உன் மாமா இந்த வீட்டுப்பிள்ளை. அவர் தப்பே செய்திருந்தாலும், உன் குடும்பத்தார் அதை மன்னிச்சு காலப்போக்கில் மறந்தும்போவாங்க; ஆனா மதுசூதனன் அப்படி இல்ல; அவர மன்னிச்சு மாப்பிள்ளைன்னு ஏத்துக்கிட்டாலும் நடந்ததை மறக்க மாட்டாங்க; மனதோரம் ஒரு வடு இருந்துட்டே இருக்கும். அவர உன் குடும்பம் சந்தோஷமா ஏத்துக்கணும்னு தான் அப்படிச் சொன்னேன்!” வித்தியாசத்தை தெளிவுபடுத்தினாள்.

பல்லவிக்கு மனதார நன்றி தெரிவித்தவள், அவளை மறுபக்கம் வளைத்து, “மாமா! பல்லவி உன்ன சுமைதாங்கின்னு கிண்டலா சொன்னாலும், இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சதுனால தான் அவங்களுக்கு உன் மேல காதலே வந்துது!” குறும்பாகக் கண்சிமிட்டினாள்.

ஊடல் கொண்டவர்களின் விழி பரிமாற்றத்தைக் கண்டுகொண்ட யமுனா,

“குழந்தை அவளா முழிக்கட்டும்! நான் அதுக்குள்ள மதுவ அழைச்சிட்டு வரேன்!” என்று அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குப் புறப்பட்டாள்.

“உண்மையெல்லாம் தெரிஞ்சதுனால தானே பல்லவி, நீயும் அன்னைக்கு அப்படி பொடிவெச்சு வேண்டிக்கிட்ட?” மென்மையாகக் கேட்டான்.

“ம்ம்!” என்றவள் விலக எத்தனிக்க,

“ஏன் டி கோபப்படுற!” உரிமையோடு அவள் முகத்தை இருகைகளிலும் ஏந்தியவன், “கோபத்துல பேசினது எல்லாம் மன்னிக்கனும்னு நீதானே சொன்ன!” சிணுங்கினான்.

“மிஸ்டர்.குணா!” தீர்கமாக அழைத்தவள், “இப்போ பிரச்சனை அது இல்ல! நீங்க விட்ட சவாலுல நான் தோற்றுப்போயிட்டேன்! எனக்குப் போட்டியில நியாயமா ஜெயிச்சு முதல் பரிசு வாங்கத்தான் பிடிக்கும்; உப்புக்கு சப்பா கொடுக்கற ஆறுதல் பரிசு பிடிக்காது!”

ஒருபோதும் தன்மானம் இழக்கமாட்டேன் என்று உணர்த்திவிட்டு நகர்ந்தாள்.

‘எத்தனை நாட்களாக அவள் மனம் புண்படும்படி நடந்துகொண்டிருக்கிறேன்!’ நிதர்சனத்தை உணர்ந்தவன், விட்டுப்பிடிக்க விழைந்தான்.

ஆனால் இனி அவளை வாழ்வில் விட்டுவிடவே கூடாதென்று மானசீகமாக உணர்ந்தான். விவாகரத்துப் பத்திரங்களைத் துண்டுதுண்டாகக் கிழித்தவனின் “தோற்பவன் நானா!” என்ற அகந்தையும், அவள் அன்பில் அடையாளம் தெரியாமல் தூள்தூளானது. 

மதுசூதனனிடம் நடந்த அனைத்தையும் கூறி, போனவேகத்தில் அவனுடன் திரும்பி வந்திருந்தாள் யமுனா. சிரித்த முகத்துடன் வரவேற்ற சொந்தங்களின் அன்பில் அவன் குற்றவுணர்வு அதிகரித்தது. அவனால் குணாவிடமும், பல்லவியிடம் கண்பார்த்துக் கூடப் பேச முடியவில்லை. அவர்களிடம் வாய்விட்டு மன்னிப்பு கேட்கும் அத்தருணத்திற்காகக் காத்திருந்தான்.

அவன் கண்கள் குழந்தையை காணும் ஏக்கத்தில் வீட்டை வலம்வர, அதை உணர்ந்த குணா,

“பல்லவி! மதுமிதாவை அழைச்சிட்டு வா!” வேண்டுமென்றே தன்னிடமிருந்து விலகி நிற்பவளை வம்பிழுத்தான். தங்களுக்குள் ஆயிரம் மனஸ்தாபங்கள் இருந்தாலும், அதை உறவுகள் முன் காட்டிக்கொள்ள மாட்டாள் என்ற தலைக்கனம் அவனுக்கு.

அவனை வெட்டும் பார்வையால் வீழ்த்தியவள், யமுனா பக்கம் திரும்பி, “இன்னும் என்னடி மசமசன்னு உட்கார்ந்துட்டு இருக்க; உன் பொண்ணு கமலாம்மாவோட தான் மாடியில விளையாடிட்டு இருக்கா; போய் அழைச்சிட்டு வா!” அதிகாரம் செய்தாள்.

“அப்படிச் சொல்லு பல்லவி!” சாவித்ரியும் சேர்ந்து ஒத்தூதினாள்.

‘அழுத்தக்காரி!’ மனதில் ஏசியவன், “அதான் சொல்லிட்டாங்களே இந்த வீட்டு மகாராணி! போ அம்மு!” கழுத்தை நொடித்தான் குணா.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் மகள், தன்னிடம் வருவாளா என்ற தயக்கத்துடன், மாடி ஏறினாள் யமுனா.

ஓடி ஆடி சாப்பிடாமல் கமலாம்மாவுக்கு டிமிக்கி கொடுக்கும் குழந்தையை ஆசைத்தீர பார்த்தபடி சில நொடிகள் அப்படியே நின்றாள். தவிப்பும், தயக்கமும் விழிகளில் போட்டியிட, அவளைக் கையில் அள்ளிக் கொஞ்ச வேண்டுமென்று ஏக்கம் மனதை வாட்டியெடுத்தது.

“மதுகுட்டி! யாரு வந்திருக்கா பாரு டா!”, கமலாம்மா அவள் நிற்கும் திசையில் கைநீட்டி காட்ட, குழந்தையும் தாயை கண்டுகொண்டாள்.

“அம்மாகிட்ட வா டா மதுகுட்டி!” உதடுகள் உச்சரிக்க, அவள் கரங்கள் தன்னிச்சையாக விரிந்து தவம்கிடந்தது.

பசுமையான கருவறை நினைவுகள் திரும்பியதோ, யமுனாவின் மென்மையான குரல் காதுகளுக்கு ரீங்காரமாக இருந்ததோ, மதுமிதாவும் அவளருகே பாய்ந்தோடி வந்தாள்.

கரைகாணா மகிழ்ச்சியில் மிதந்தவள், குழந்தையின் முகமெங்கும்  முத்தான முத்தங்கள் பதித்து, நான்கு ஆண்டு பாசத்தை ஈடுகட்டப்பார்த்தாள்.

“மா…மா…மாமா!” மழலை மொழியுடன் தாயின் முகத்தில் வழிந்த நீர்விழ்ச்சியில் ஓவியம் வரைந்தாள் மதுமிதா.

விறுவிறுவென கீழே வந்தவள், “மது….மது…நம்ம மதுகுட்டி என்கிட்ட ஓடி வந்துட்டா! அவ என்ன மறக்கல; அவ என்ன மறக்கல!” கண்ணீர் மல்க உரைத்து, அவன் மடியில் அமர்த்தினாள்.

முதல் முறையாக குழந்தை முகத்தைக் கண்டவன், அவள் சாயலில் ஸ்தம்பித்துப் போனான். வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, அவள் கன்னங்களை மென்மையாக வருடினான்.

இமைக்காமல் பார்க்கும் குழந்தையிடம், “அப்பா டா மதுகுட்டி! இது மதுமிதாவோட அப்பா!” யமுனா தன்னவனைச் சுட்டிக்காட்டி பூரித்தாள்.

சுற்றிமுற்றி பார்த்த குழந்தை, குணாவிடம் செல்ல, அவளை மறுபடியும் மதுசூதனன் மடியில் விட்டான்.

குணாவின் கையை உதரிவிட்டவள், மேஜையிலிருந்த ஐபேட் எடுத்து,

ஐ வான்ட் பல்லவி!” ஒலிக்கவிட்டாள்.

அக்குரல் கேட்டு ஓடிவந்தவள், மதுமிதாவிடம் கொஞ்சிப்பேசி, மதுசூதனனிடம் அழைத்துச் சென்றாள். அவன் கையை நறுக்கென்று கடித்துவிட்டு கீழே இறங்கியவள்,

“மாம்மி…மாம்மி(Mommy)”, என்ற மெல்லிய விசும்பலுடன், பல்லவி நிற்கும் திசையில் நடந்தாள்.

குழந்தையை இருகைகளிலும் அள்ளிக்கொண்டு முத்த மழையில் நனைத்தவளுக்கு எல்லையில்லா இன்பம்.

ஆனால் சுற்றம் அறிந்து மறுகணமே சுதாரித்துக்கொண்டவள்,

“மதுகுட்டி!” அப்பா கையை கடிச்சது தப்புதானே! மன்னிப்பு கேளு!” என்றாள்.

அவளைவிட்டு விலகாதபடி, ஐபேடில் “ஐ ஏம் சாரி!” ஒலிக்கவிட்டாள் மதுமிதா.

மனையாள் சவாலில் வென்றுவிட்டதை எண்ணி நெகிழ்ந்தான் குணா. அதே சமயம் வாடிய யமுனாவின் முகத்தை காணவும் சகிக்கவில்லை.

மதுமிதா ஆண்களிடம் அவ்வளவு சகஜமாக பழகமாட்டாள் என்று சமாளித்தான்.

மென்சிரிப்புடன் தலையசைத்த மதுசூதனன், தான் செய்த தவறுகளை உறவுகள் மன்னித்தாலும், கடவுள் மகள் மூலமாகத் தண்டனை கொடுத்துவிட்டதாக எண்ணினான்.

வருந்தும் மனைவியை அன்பாக அரவணைத்து நம்பிக்கை வார்த்தை கூறினான். மதுசூதனின் பக்குவத்தைக் கண்ட குணாவிற்கும் நிம்மதி பிறந்தது.

அவர்களை அண்ணன் வீட்டிற்கு உடனே சென்றுவரும்படி சாவித்ரி வலியுறுத்த,

“அய்யோ அத்தை! எங்க அம்மா என்ன உன்ன மாதிரியா; எல்லாத்தையும் மறந்துட்டு கண்ணே மூக்கேன்னு கொஞ்ச!” எனப் பதறியவள், தன்னுடன் வரும்படி குணாவை அழைத்தாள்..

யமுனாவின் தயக்கத்தை உணர்ந்தவன், நமுட்டுச் சிரிப்புடன், பல்லவியின் தோளினை இறுக சுற்றிவளைத்து,

“என் பொண்டாட்டி என்னைவிட உங்க அம்மாவ நல்லாவே சமாளிப்பா டி!” மறுபடியும் கோர்த்துவிட்டான்.

குறும்பு செய்யும் அவனை விழி உயர்த்தி ஏறிட்டாள் பெண்.

அதற்கெல்லாம் சலிக்காதவன் “அதான் முதல் பரிசு வாங்கிட்ட இல்ல!” அவள் காதோரம் கிசுகிசுத்து தோளினில் அழுத்தம் கொடுத்தான்.

அவனிடமிருந்து எத்தனித்து, நிர்த்தாட்சண்யமாக மறுத்தாள் பல்லவி.

“உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு தெரியும் பல்லவி! விவாகரத்து அது இதுன்னு குணா காலையில் பேசினான். எதையும் மனசுல வெச்சுக்காத தங்கம்!”, மருமகளின் கன்னத்தை வருடி, கெஞ்சினாள் சாவித்ரி.

தன்னவனின் குத்தல் பேச்சில் புண்ணான மனதிற்கு, சாவித்ரியின் அன்பும் அக்கறையுமே பல சந்தர்ப்பங்களில் அவளுக்கு மருந்தாக இருந்திருக்கிறது.

 “அய்யோ! அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை! அவர் விவாகரத்து கொடுத்தா மட்டும் நான் சரி சொல்லிடுவேனா என்ன!” தன்னவனை பார்த்து உரைத்தவள்,

“இன்னைக்குக் குழந்தை அவளோட அம்மா அப்பாவோட பிறந்தநாள் கொண்டாடட்டும். அதுக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யலாம்னுதான்!” என்றவள்,

மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, “குணா பார்த்து பேசுங்க! அவங்களையும், விழாவிற்கு அழைச்சிட்டு வந்துடுங்க!” அறிவுறுத்தி,

யமுனாவிடம், “உனக்கும் தான்டி! சுதா இப்போ நிறைமாத கர்ப்பிணி…வந்திருக்கறது  ஆவியா மனுஷியான்னு குழம்பி, அதிர்ச்சியில் பிரசவம் ஆகிடப்போகுது.” என்றும் குறும்பாக எச்சரித்தாள்.

அனைவரும் வாய்விட்டு சிரிக்க, சந்தோஷம் காற்றில் கலந்தது.

மனைவி மனஸ்தாபங்களை வெளியே காட்டாமல் சாமர்த்தியமாகத் தட்டிக்கழிப்பதை உணர்ந்தவன், புன்முறுவலோடு, அவள் திட்டத்திற்குச் செவிசாய்த்தான்.

விரட்டி விரட்டி காதலித்தவள் விலகி நின்றதும்,

விரட்டி விட துடித்தவன் விரும்பி நெருங்கியதும்,

விதண்டாவாதம் செய்தவன் வியப்பில் ஆழ்த்தியதும்,

விதியின் விளையாட்டா; வினைப்பயனின் விளைவா-தேடுங்கள்

உறவுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாகில்…

பின்குறிப்பு:

1.மதுசூதனன் மனமாற்றம் எப்படி ஏற்பட்டது என்று அடுத்த அத்தியாயத்தில் தெளிவாகிவிடும்.

2. மதுமிதா, பல்லவியை Mommy என்று அழைத்தது, வெறும் கதைக்காக மட்டும் எழுதவில்லை. பல்லவி நெடுநாட்களாகக் குழந்தையிடம் அம்மா என்று அழைக்கும்படி போராடிக்கொண்டிருந்தாள். அதற்கு இணையான ஆங்கில வார்த்தையும் மதுமிதாவிற்கு பரிச்சயம் தான்.

ஆடிஸம் குழந்தைகள் பொதுவாக, தங்களுக்குப் பிடித்த வழியில் மட்டும்தான் நடப்பார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்துவது சாத்தியமில்லை. அதையும் மீறி தன்னை நேசிப்பவர்கள் கட்டாயப்படுத்தும் போது அவர்களுக்கு ஒரு insecurity feeling வரும். பாசத்துக்குரியவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினால், கட்டாயப்படுத்த மாட்டார்கள், மீண்டும் நல்லவிதமாக பழகுவார்கள், என்று அக்குழந்தைகளுக்குத் தோன்றும்.

அதனால்தான் மதுசூதனனிடம் போகச் சொல்லி கட்டாயப்படுத்திய பல்லவியின் அன்பை மீண்டும் வெல்ல, அவள் நெடுநாட்களாகக் கேட்டதை செய்தாள். (ஆடிஸம் குழந்தைகளுடன் பழகிய சொந்த அனுபவத்தில், இந்தக் கற்பனை காட்சியை எழுதினேன்.)