பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 2.1

ஏக்கமும் பதற்றமும் கலந்த உணர்வுகளுடன், வாடகை வண்டி ஒன்று ஏற்பாடு செய்துகொண்டு வீட்டிற்கு வந்தான் குணா. அவனை வரவேற்க யாரும் இல்லாதது, வழக்கத்திற்கு மாறாக இருந்தது. 

மூன்றாண்டுகளுக்கு முன் அவன் செய்த செயல்களும், வழக்கத்திற்கு மாறானவை தானே! அதற்கான விளைவுகளை அவன் சந்தித்துதானே ஆகவேண்டும்; பரிகாரங்களைத் தேடித்தானே ஆகவேண்டும்.

நிதர்சனத்தை ஏற்று பெருமூச்சுவிட்டவன், பெட்டிகளை இறக்கிவைத்த வண்டி ஓட்டுனருக்கு  நன்றிகூறி பயணக்கட்டணத்தைச் செலுத்தினான்.

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கமலாம்மா அவனைப் பார்த்ததும்,

“குணா தம்பி! வந்துட்டீயா! உனக்குத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்யா!” பூட்டப்பட்டிருந்த கதவை திறந்தபடி நலம் விசாரித்தாள்.

“அம்மா அப்பா எங்க கமலாம்மா?” தான் வரப்போவது தெரிவித்திருந்தும், அவர்கள் வீட்டில் இல்லாததை எண்ணி வருந்தினான்.

“வா டா ராசாத்தி!” மதுமிதாவை இருகைகளிலும் அள்ளிக்கொண்டு முத்தமிட்டவள்,

“அப்படியே நம்ம யமுனா பாப்பா சாயல்!” என பூரித்தாள்.

மென்மையாகத் தலையசைத்து சிரித்தவன், “அம்மா எங்க கமலாம்மா?” மீண்டும் வினவினான்.

“முதல்ல குளிச்சிட்டு வந்து சாப்பிடு தம்பி! இட்லி செய்யறேன்!” என்று இடுப்பில் குழந்தையுடன் சமையல் அறைக்குள் சென்றவள்,

“பாப்பா இட்லி சாப்பிடுவா தானே?” உறுதி செய்துகொண்டாள்.

அன்புக்கட்டளைக்கு பணிந்தவன், அவள் சொற்படி நடந்தான்.

கமலாம்மா அவனுக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து, அவர்கள் வீட்டில் பணிபுரிந்து வந்தாள். பணிப்பெண் என்பதைத் தாண்டி, வீட்டின் நலனுக்காக அயராது உழைத்தவளை, வீட்டார் அளவுகடந்து நேசித்தனர்.

மதுமிதாவிற்கு ஊட்டிக்கொண்டே, இட்லி சாம்பார் சாப்பிட்டு முடித்திருந்தான் குணா. ஆனால் கேட்டக் கேள்விக்குத்தான் பதில் கிடைக்கவில்லை.

சாமர்த்தியமாக மற்ற விஷயங்களைப் பேசி நேரத்தைக் கடத்தியவள், அவர்கள் தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்திருப்பதாகக் கூறி வீட்டிற்கும் புறப்பட்டாள்.

“அம்மாவும் அப்பாவும் அப்படி எங்கத்தான் போயிருக்காங்க, கமலாம்மா?” பொறுமையிழந்து எகிறினான் குணா.

“அது தம்பி…அது…இன்னைக்கு நம்ம சுதா பாப்பாவோட நிச்சயதார்த்தம்…அங்கேதான் போயிருக்காங்க!” உண்மையை உடைத்தாள்.

“சுதாவுக்கு நிச்சயதார்த்தமா…” வாயை பிளந்த குணா, “முன்னாலேயே சொல்லிருந்தா, நானும் அங்கே போயிருப்பேனே!” என வருந்த,

“இல்ல தம்பி… நீ அங்க…அங்க வந்தா…யமுனா பாப்பா மாதிரி… ஏதாவது குழப்பம்…” மென்றுவிழுங்கி தலைகுனிந்து நின்றாள் கமலாம்மா.

“புரியுது கமலாம்மா! நீங்க பத்திரமா வீட்டுக்குப் போயிட்டு வாங்க!” நிதர்சனத்தைக் கிரகித்து மௌனம் காத்தான்.

காலி வீட்டை வலம் வந்தவன் மனம்மட்டும் வேதனையில் நிரம்பி வழிந்தது. நிசப்தம் சூழ்ந்த அவ்விடத்தில், மனசாட்சியின் கர்ஜனை மரணவேதனை தந்தது. மனவுளைச்சலில் துடிதுடித்தவனுக்கு, இரவோடு இரவாக ஊருக்கு சென்றுவிடலாம் என்றுக்கூடத் தோன்றியது.

உடலில் களைப்பும் கண்ணில் தூக்கமுமாக மதுமிதா அவன் கால்களைத் தழுவ, அவளைத் தூக்கிக்கொண்டு மார்போடு அணைத்தான். குழந்தைக்கு தட்டிக்கொடுத்தபடி, சோஃபாவில் அமர்ந்தவன், சுவற்றில் மாற்றிய குடும்பப் படத்தை வெறித்துப் பார்த்தான்.

மூன்றாண்டுகளுக்கு முன் எடுத்தது; அனைவரும் ஒன்றாக இருந்த கடைசி நாள்; நிழற்படத்தில் மட்டுமில்லை; நிஜத்திலும் உறைந்துதான் போய்விட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்…

“மா… மா… மாமா” காதோரம் பலமுறை கிசுகிசுத்தும் அவன் எழுந்த பாடில்லை. தொலைக்காட்சியில் செய்தியாளர் ஒருபுறம் இடைவிடாமல் வாசிக்க, மறுபுறம் சோஃபாவில் சயனித்த குணா ஓயாமல் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.

ஆழ்ந்த நித்திரையில் உறங்கும் மாமனை வைத்த கண் வாங்காமல் ரசித்தவள், அந்த அழகிய தருணத்தைக் கைபேசியில் சிறைச்செய்ய விழைந்தாள்.

“எத்தனை முறை சொல்றது டி உனக்கு…தூங்கற பிள்ளையை போட்டோ எடுக்காதுன்னு!” கண்டித்த குணாவின் தாய் சாவித்ரி, யமுனாவிடமிருந்து கைபேசியைப் பிடுங்கினாள்.

தூங்கும் பிள்ளைகளை புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறையும் என்ற மூடநம்பிக்கையில் ஊறிப்போனவள் சாவித்ரி. அவையாவும் கட்டுக்கதைகளே என்று ஏட்டிக்குப் போட்டி தர்க்கம் செய்பவள் யமுனா.

“அட! அத்த…அதெல்லாம் பிறந்த குழந்தைக்குதான் சொல்லுவாங்க… உங்க பையனுக்கு ஏழு கழுத வயசாயிடுத்து!” சொன்னவள், துயில் கொண்டிருப்பவனின் இடுப்பை நறுக்கென்று கிள்ளி,

“இத்தன சத்தத்திலும் எப்படித்தான் மாமா தூங்குற?” பற்களை நறநறத்தாள்.

“ஆ வலிக்குது டி!” இடுப்பை தேய்த்துக்கொண்டே எழுந்தவனின் விழிகள், சேட்டை செய்யும் அவள் முகத்தில் சிறையானது.

“நான் எங்க டி தூங்கினேன்…சும்மா கண்ண மூடிக்கிட்டே, நியூஸ் கேட்டுட்டு இருந்தேன்!” குறும்பாக சிரித்து மறுத்தான் குணா.

“பொய்! பொய்! பொய்!” சண்டைக்கு வந்தவள், சாவித்ரி இடமிருந்து கைபேசியைப் பற்றி,

“இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்துவன்னு தான் போட்டோ எடுத்தேன் பாரு!” கர்வப் புன்னகையுடன் அதை உயரத்திக் காட்டினாள்.

நீட்டும் அவள் கரம்பிடித்து தன்பக்கம் இழுக்க, அவனருகில் வந்து விழுந்தாள் யமுனா. அவளிடமிருந்து கைபேசியை வாங்கியவன்,

“என்ன போட்டோ எடுக்கறது இருக்கட்டும்…மாப்பிள்ளை போட்டோ எங்க அம்மு?” கேட்டு, அதிலுள்ள புகைப்படங்களை அலசினான்.

“ஊருக்கு வந்து பதினெட்டு மணி நேரமாகியும், என்ன நேருல வந்து பார்க்காதவங்களுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா மாப்பிள்ளை தரிசனம் கிடைச்சிடாது மாமா!” செல்லம் கொஞ்சியவள், லாவகமாய் கைபேசியை கைப்பற்றினாள்.

“ஜெட் லேக் அம்மு… அதான் உன் கல்யாணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே வந்திருக்கேனே…அது போதாதா?” பதிலுக்கு குழைந்து மங்கையை தன்வசப்படுத்தினான்.

திடுக்கென்று எழுந்தவள், “சரி வா! ஊருலேந்து, எனக்கு என்ன ஸ்பெஷலா வாங்கிட்டு வந்திருக்கன்னு காட்டு மாமா…சுதா கல்லூரியில் இருந்து வரத்துக்குள்ள, எனக்குத் தேவையானதை எடுத்துகிட்டு நான் கிளம்பறேன்!” என்று, அவனை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்றாள்.

இவர்கள் குறும்புகளுக்கு அளவேயில்லை என்பதுபோல, இடவலமாய் தலையசைத்த சாவித்ரி, அங்கிருந்து நகர்ந்தாள்.

பெட்டியை திறந்தவன், ஊரிலிருந்து வாங்கிவந்த பரிசுப்பொருட்களை அடுக்கினான். ஏதோ ஒரு சாக்குச் சொல்லி ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தாள் பெண்.

அவளுக்கென்று பிரத்யேகமாக வாங்கிவந்த எம்.பி.3 பிளேயரில் மெல்லிசை ஒன்று ஒலிக்கவிட்டு, அவள் காதுகளில் பொருத்தியவன்,

“கண்மூடி கேளு அம்மு! எப்படி இருக்குன்னு சொல்லு!” மென்மையிலும் மென்மையாய் பேச,

அதை மறுகணமே அவன் கையில் நுழத்தியவள், “மாமா! எனக்கெல்லாம் டீ கடை மாதிரி, சத்தமா பாட்டை ஒலிக்கவிட்டுக் கேட்டாத்தான் பிடிக்கும்…இதையும் சுதாவுக்கே கொடு!” உதடு சுழித்து,

“எனக்குப் பிடிச்சா மாதிரி ஏதாவது வாங்கிட்டு வர தெரியுதா உனக்கு!” புலம்பினாள்.

பொருட்களை நேர்த்தியாக அடுக்கியவன், அவள் முகத்தை கையிலேந்தி, “வேறென்ன டி எதிர்பார்த்த?” தாழ்ந்த குரலில் கேட்டான்.

“மேக் அப் செட்…பெட்டியைத் திறந்தா, அதுக்குள்ள நிறைய குட்டிக் குட்டிப் பெட்டிகள் இருக்குமே…சினிமா நடிகையெல்லாம் உடை நிறத்துக்கு இணையா போட்டுப்பாங்களே…அந்தமாதிரி ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பன்னு நெனச்சேன் மாமா!” குதூகலத்துடன் வர்ணிக்க,

அதைக்கேட்டு வாய்விட்டு சிரித்தவன், “என் அம்மு இயற்கையிலேயே ரொம்ப அழகு…அதெல்லாம் அவளுக்குத் தேவையே இல்ல தெரியுமா!” என அவள் தாடையைக் குவித்து இனிமையாகப் பேசினான்.

அதற்கெல்லாம் வசப்படாதவளாய், “வாங்கிட்டு வராததுக்கு ஏதாவது சாக்குச் சொல்லு!” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சமாதானப்படுத்த முயன்றவன், உள்ளூரில் அவள் விரும்பும் அனைத்தையும் வாங்கித் தருவதாகச் சொல்ல, அவள் கோபமெல்லாம் காற்றில் பறந்தது.

“எது கேட்டாலும் வாங்கித் தரணும்!” உறுதிசெய்து கொண்டாள் யமுனா.

அமெரிக்க டாலரை இந்திய நாணயத்திற்கு மாற்றியதும், கடைகளுக்கு அழைத்துச் செல்வதாக அவன் சொல்ல, மகிழ்ச்சியில் மிதந்தவள், மாமன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து, புள்ளிமான் என துள்ளிகுதித்து ஓடினாள்.

அவள் அன்பில் கரைந்தவன், கன்னத்தை தேய்த்துக்கொண்டே, கண்ணுக்கெட்டும் தூரம்வரை உள்ளம் நிறைந்தவளை விழிகளால் பருகினான்.

“சீக்கிரம் சாப்பிட்டு முடி மாமா! நீ லேட்டா கிளம்பிட்டு, அப்புறம் நான் கடையில நிறைய நேரம் எடுத்துக்கிட்டேன்னு குறைசொல்லாத!” உணவுத்தட்டைப் பிடுங்காதவளாய் புலம்பிக்கொண்டிருந்தாள்.

“அவனை நிம்மதியா சாப்பிடவிடு யமுனா… நீ செய்யற பணியாரமுன்னா, குணாவுக்கு ரொம்ப பிடிக்கும்னு உனக்குத் தெரியாதா?” வலதுபுறத்தில் அமர்ந்திருந்த அவள் தந்தை, குணாவின் தாய்மாமன் மாணிக்கம் இடைபுகுந்தார்.

“குணா! சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுங்க…மாப்பிள்ளை அவளுக்கு வாங்கி வெச்சிருக்க மோதிரத்தோட அளவு சரிபார்க்க நேரில் வரேன்னு சொல்லிருக்காரு!” அத்தை மீனாட்சி நினைவூட்டினாள்.

“பார்ரா…மாப்பிள்ளை அம்முவைப் பார்க்க என்னவெல்லாம் சாக்கு சொல்லிட்டு வராருன்னு!” கண்ணில் குறும்பு வழிந்தோட சீண்டியவன், மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்டும்படி வம்பிழுத்தான்.

அதை அலமாரியில் இருந்த எடுத்து வந்து குணாவிடம் உற்சாகமாய் நீட்டினாள் மீனாட்சி. அதைப் பார்த்தவன் முகம் நொடியில் சுருங்கியது.

வயதில் முதிர்ந்தவனாய், யமுனாவின் அழகுக்குக் கொஞ்சம்கூட பொருத்தமில்லாதவனாய் தோன்றினான் அவன்.

“எங்க அத்தை இப்படியொரு மாப்பிள்ளையை பிடிச்சீங்க! மாப்பிள்ளைக்கும் நம்ம அம்முவுக்கும் வயசு வித்தியாசம் நிறைய இருக்கும் போலவே!” கேட்டேவிட்டான் குணா.

மகளுக்கு மூளைசலவை செய்து, அவளைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த கஷ்டம் தனக்குத்தானே தெரியும் என்பதுபோல பதறினாள் மீனாட்சி.

“எதையாவது சொல்லிக் குழப்பாதே குணா! நல்ல இடம்; நல்ல குடும்பம்!” நிறைகளை அடுக்கினாள் மீனாட்சி.

“வயசு வித்தியாசம் ஓரளவுக்கு இருந்தால் தான், கணவன்-மனைவிக்குள்ள நல்லதொரு புரிதல் இருக்கும்… மாப்பிள்ளையும், இவள் சின்னப் பொண்ணுன்னு அக்கறையா பொறுப்பா பார்த்துப்பாரு” மனைவிக்கு ஒத்தூதினார் மாணிக்கம்.

“அதுக்கில்ல மாமா…” குணா தொடங்க,

“எதுவும் சொல்லாத குணா!” தடுத்தவர், “யமுனாவுக்கு எது நல்லது, கெட்டதுன்னு எங்களுக்குத் தெரியும்!” திட்டவட்டமாக மறுத்தார் மாணிக்கம்.

தனக்கென்ன வந்துது என்று தோளினை குலுக்கி எழுந்தவன், ‘உங்ககிட்ட எதுக்கு வீண்பேச்சு! யமுனாவுக்கு இந்த கிழவனோட கல்யாணம் நடந்தாதானே!’ மனதில் அசைபோட்டான்.

‘இவங்ககிட்ட பேசி ஏன் மாமா உன் நேரத்த வீணடிக்குற! இந்தக் கிழவனை, நான் கல்யாணம் செஞ்சுகிட்டா தானே!’ அலட்டலே இல்லாமல் சிந்தித்தவள் அவனை பின்தொடர்ந்தாள்.

வாசலில் குணா, தன் காரை உயிர்ப்பிக்க, “மாமா! ஒரு நிமிஷம்! என் ஃபோன் மறந்துட்டேன்!” வீட்டை நோக்கி வேகமாக ஓடினாள்.

வாசற்கதவருகே வந்தவள், படார் படார் என்று தாழ்ப்பாளைத் மறுகணமே விரைந்தோடி வந்த மீனாட்சி,

“எத்தனைமுறை சொல்றது டி! தாழ்ப்பாள் சத்தம் போடாதே…வீட்டுக்கு ஆகாதுன்ன! பெல் அடிச்சாதான் என்ன?” கொந்தளித்தாள்.

“பெல்னா டிங்க் டோங்க்னு அடிக்கணும்… நீங்க மாட்டி வெச்சிருக்க பெல் மூணு நிமிஷம் மூச்சுவிடாம பாட்டுப் பாடுது!” விதண்டாவாதம் செய்தவள், மேஜையிலிருந்த கைபேசியை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்தாள்.

தாழ்ப்பாள் சத்தம் போடாமல் இருந்தால்மட்டும், அவள் செய்யவிருக்கும் செயல் குடும்பத்திற்கு நன்மையை விளைத்திடுமா என்ன?

கடைவீதிகளில் இரண்டு மணி நேரம் ஆசைத்தீரச் சுற்றி, தனக்குப் பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொண்டவள், தன் காதல் விவகாரத்தை ஒளிவுமறைவு இல்லாமல் மாமனிடம் சொல்ல ஆயத்தமானாள்.

“முருகர் கோவிலுக்குப் போகலாமா மா… மா… மாமா!” நமுட்டு சிரிப்புடன் குழைந்தாள்.

தனக்குக் காரியமாக வேண்டுமென்றால், அவ்வாறு அழைப்பாள் என்று அறிந்தவன், நமுட்டு சிரிப்புடன்,

“போலாம்! அதற்கு முன்னாடி, நான் உனக்கு வாங்கித்தர வேண்டிய சில பொருட்கள் இருக்கு அம்மு!” என்று கண்சிமிட்டினான்.

அவனும் மனதில் ஒரு திட்டத்துடன் தானே வந்திருந்தான்.

புடவை கடைக்கு அழைத்துச் சென்றான்.

நடக்காத திருமணத்திற்காக, ஏற்கனவே அத்தனை புடவைகள் வாங்கி வைத்திருந்த நிலையில், இன்னும் ஒன்றா என்று மனதில் நினைத்தவள்,

“ஏற்கனவே நிறைய புடவை இருக்கு மாமா!” மறுத்தாள்.

“இது அம்முவுக்கு மாமாவோட சீர்!”

அவள் மூக்கின் நுனியை கிள்ளி வாஞ்சையாகப் பேசியவன், வாடாமல்லி நிறத்தில் மிதமான வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப்புடவை ஒன்றைத் தேர்ந்தெடுத்தான்.

அவளும் மனநிறைவுடன் சரி என்று தலையசைத்தாள்.

அருகில் இருந்த நகைக்கடைக்கு அழைத்துச் சென்று, தங்கச்சங்கிலி, வளையல்கள், ஜிமிக்கி வாங்கித்தந்தவன், கடைக்காரரிடம்,

“தம்பி! இந்த வடிவத்தில் தாலி காட்டுங்க!” என்றான்.

“மாமா! அதெல்லாம் ஏற்கனவே, முறைப்படி வாங்கியாச்சு!” திடுக்கிட்டாள் யமுனா.

“நீ கொஞ்சம் பேசாம இரு! இதுவும் மாமன் சீர்!” அதிராத குரலில் அழுத்தமாய் சொல்லித் திருமாங்கல்யமும் வாங்கிக்கொண்டான்.

அரைமணி நேரத்தில் கோவிலுக்கு வந்தவர்கள், அவரவரின் பிரார்த்தனையை இறைவன் சன்னிதானத்தில் இறக்கி வைத்தனர்.

யாருக்கு வரம் கொடுப்பது என்று முருகன் பாடு தான் திண்டாட்டமானது.

தொடர்ந்து படிக்க Click Here – -> பாசமென்னும் பள்ளத்தாக்கில் 2.2