பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 24.2

மதுமிதாவிடம் காட்டிய பாசமெல்லாம் காதல் மயக்கத்தில் போட்ட வெளிவேஷமா என்று அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாக காரில் ஏறி அமர்ந்தான். வீட்டிற்குப் போனால் பின்னால் வந்து தொல்லை செய்வாள் என்று யூகித்தவன், காரை அஷ்வின் வீட்டிற்குச் செலுத்தினான்.

நள்ளிரவில் குணாவை கண்ட அஷ்வினும், நந்தினியும், குழம்பி நின்றனர்.

“ஃபோன்லேயே புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கலாமே டா! பல்லவி எங்க?” காலநேரமில்லாமல் திடுதிடுப்பென்று வந்திருக்கிறானே என்ற மனைவியின் குத்தீட்டும் பார்வையை கவனித்து நிலமையை சமாளித்தான் அஷ்வின்.

“இனி எனக்கும் அவளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல!” இரைந்தான் குணா.

குணாவின் முன்கோபம் அறிந்த நந்தினி, மதுமிதாவை தூக்கிக்கொண்டு,

“உங்க பஞ்சாயத்து முடிஞ்சதும் குழந்தையை அழைச்சிட்டு போங்க!” உத்தரவிட்டு, மாடி ஏறினாள்.

நடந்ததை எல்லாம் குணா விவரிக்க, மீண்டும் வாயிற்கதவு மணி ஒலித்தது. பல்லவி ஏதாவது புகார் கொடுத்திருப்பாளோ என்று அஞ்சியவன், கதவை திறக்க, அங்கு தலைநிமிர்ந்து நின்றிருந்தாள் பல்லவி.

“டாக்ஸிக்கு பணம் கொடுத்திட்டு வாங்க அஷ்வின்!” ஆணையிட்டு உள்ளே நுழைந்தாள்.

“இங்க எதுக்கு வந்த?” உறுமினான் குணா.

“ராமன் இருக்குமிடம் தானே சீதைக்கு அயோதி மாமா!” காதோரம் கிசுகிசுத்தாள்.

‘இன்னைக்குச் சிவராத்திரி தான்!”, பெருமூச்சுவிட்ட அஷ்வின், “என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை!” சலித்துக்கொண்டான்.

இருதரப்பு வாதத்தையும் கேட்டவன், அவர்கள் மனதில் நினைத்தது ஒன்று, பேசியது ஒன்று என்று புரிந்துகொண்டான். குணா தன்மீது மலர்ந்த காதலை சொல்லவே அங்கே அழைத்துச் சென்றான் என்று அறிந்தவள்,

“காதல நேரடியா சொல்லாம, இப்படி பொடிவைத்து பேசினா எனக்கு எப்படி புரியும் அஷ்வின்.” முணுமுணுத்தவள், “வாங்க குணா, நம்ம வீட்டுக்குப் போகலாம்!” அவன் கரத்தை மென்மையாக இழுத்தாள்.

கைகளை அவன் வெடுக்கென்று திருப்பிக்கொள்ள,

“பாருங்க அஷ்வின்! இவர்மட்டும் கோபத்துல வார்த்தையை விட்டுட்டு அப்புறம் மன்னிப்பு கேட்பாராம்; அதே நான் செய்தா தப்பா!” முகம் சுருக்கினாள் பல்லவி.

“ஆமாம் தப்பு தான்!” கர்ஜித்தவன், “மதுமிதா உன் திருமண வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருக்கான்னு ஒரு செகெண்ட் யோசிச்ச இல்ல. இனி உனக்கு எங்க வாழ்க்கையில இடமில்ல!” திட்டவட்டமாகக் கூறினான்.

“நீங்களே என்னை விரட்ட நெனச்சாலும், மதுமிதா என்னைவிட்டு இருக்கமாட்டா!” மதுமிதா மீது கொண்ட அதீத நம்பிக்கையில் முகத்துக்கு எதிரே சவால்விட்டாள்.

“ஓ உனக்கு அவ்வளவு நம்பிக்கையா!” உதடுகள் கர்வத்தில் வளைந்தாலும், பல்லவியின் கூற்று முற்றிலும் உண்மை என்று அவனும் அறிந்தான்.

“அப்படின்னா, அவள உன்னை அம்மான்னு கூப்பிடவை பார்க்கலாம்! அப்போ நான் உன்ன நம்பறேன்!” சாத்தியமில்லாத சவால் ஒன்று விடுத்தான்.

“இது என்ன அசட்டுத்தனமான சவால் குணா! பேச்சே வராத குழந்தையை அம்மான்னு கூப்பிடவைக்க சொன்னா எப்படி!” நொந்தாள்.

“பேச்சே வராத குழந்தை, என்னை மாமான்னு கூப்பிடுறானா, அது பாசத்தால!” கர்வத்தோடு சுட்டிக்காட்டியவன்,

“உனக்கு நம்ம முதல் திருமண நாள் வரைக்கு அவகாசம்; அதுக்குள்ள சொல்லித்தா; இல்ல ஐபேட்ல வித்தைகாட்டு; அது உன் இஷ்டம். மதுமிதா முடிவு செய்யட்டும், நீ எனக்கு மனைவியா இருக்கலாமா வேண்டமான்னு!” என்றவன், நண்பனிடம், அன்றைய பொழுதுக்கு அவர்கள் வீட்டில் தங்குகிறேன் என்று விருந்தாளி அறைக்குள் சென்றான்.

எல்லாம் கைக்கூடி வரும் வேளையில், வார்த்தை தவறவிட்டதை எண்ணி வருந்தியவள், சோபாவில் இடிந்துபோய் உட்கார, அவள்மேல் பரிதாபம் கொண்ட அஷ்வின்,

“அவன் ஏதோ கோபத்துல பேசுறான் பல்லவி! உன்ன அவனுக்கு ரொம்ப பிடிக்கும்!” நம்பிக்கையூட்டி, மதுமிதா மீது நண்பனின் அளவுக்கு மீறின பாசமே அவனின் இன்றைய நடத்தைக்கும் காரணமென்று கூறினான்.

“என்னைப் பிடிக்குமா!”, கசந்த புன்னகையுடன், பிறந்தநாள் என்று கூடப் பாராமல், அவன் சண்டையிட்டதை பற்றி எடுத்துக்கூறினாள்.

“எனக்கும் அதைப்பற்றி தெரியும்!” அஷ்வின் சொன்னதும் வியந்தாள்.

ஆனால் குணா நண்பனிடம் பகிராத விஷயம்தான் ஏதாவது உண்டோ என்று மறுகணமே தெளிந்தாள்.

“அந்தப் பணம் உனக்காகதான் சேர்த்து வெச்சிருந்தான் பல்லவி. தினமும் குழந்தையோட பயிற்சி மையத்திற்கு டாக்சியிலும், ரயிலிலும் அல்லாடும் உனக்கு கார் வாங்கிக்கொடுக்க சேர்த்துவைத்த முன்பணம்.” உண்மையை உடைத்தான்.

“சிடுசிடுன்ன எரிஞ்சு விழுறதுக்குப் பதிலா ஆசையா சொல்லியிருக்கலாமே!” விரக்தியாக வினவினாள்.

“அவன் சுபாவமே அப்படித்தான் பல்லவி!” வீணாக குழம்பாமல், நந்தினியின் அறையில் நிம்மதியாக உறங்குமாறு சொன்னான்.

அறைக்குள் வந்த அஷ்வினை கண்டதும், “என்னடா! அவளே கிளம்பிட்டாளா, இல்ல அவ அண்ணன்காரன் வந்தானா?” கறாராகக் கேட்டான் குணா.

நண்பனின் முன்கோபத்தில் எரிச்சலடைந்தவன், “டேய் குணா! தப்பு செஞ்சவங்களை விட்டுட்டு, உன் அன்பிற்காக ஏங்குறவள தண்டிக்கிறது எந்தவிதத்திலும் நியாயமில்லை.” கண்டித்தான்.

“உன்னையும் அவள் பக்கம் இழுத்துட்டாளா! வசியக்காரி!” ஏசியவன், தக்க சமயத்தில் தனக்கு அவள் சுயரூபத்தை காட்டியதற்குக் கடவுளுக்கு நன்றிகூறிவிட்டு புரண்டுபடுத்தான்.

“உன்ன திருத்தவே முடியாதுடா!” பெருமூச்சுவிட்டவன், “எல்லாம் அவன சொல்லணும்! டேய் மதுசூதனா! உன் காதலுக்கு உதவி செஞ்சதுக்கு, இப்படி புத்தாண்டு அதுவுமா, ரெண்டு அப்பாவி குடும்பஸ்தர்கள, பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வெச்சிட்டியே! என் சாபம் உன்னை சும்மாவே விடாதுடா!” தன் பங்குக்குப் புலம்பினான்.

“மது!” பெருங்குரலில் அழைத்தபடி, விமான நிலையத்திலிருந்து கம்பீரமாக வெளியேவரும் ராணுவ வீரனை கட்டியணைத்தாள் யமுனா.

“என்னடி புதுசா! ஏர்போர்டுக்கே வந்துட்ட!” வினவியபடி, அவளை தோளோடு சேர்த்து வளைத்தான் மதுசூதனன்.

“ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும் டா! வீட்டுக்குப் போனா பேச முடியாது!” என்றவள், கார் பிரதான சாலையில் செலுத்தியதும், குணாவின் திருமணம், பல்லவியின் அருமை பெருமை என ஒன்றுவிடாமல் விவரித்தாள்.

அனைத்தையும் கேட்டு முடித்தவன்,”நல்லது! இனி குழந்தையைப் பற்றி பேச்சு எடுக்கமாட்டேன்னு சொல்லு!” அலட்டலே இல்லாமல் சொன்னான்.

கேட்டவள் அதிர்ச்சியில் கால்களை பிரேகில் அழுந்தப் பதிக்க, “ஏய்! பார்த்து ஓட்டு டி!” என்று தலையில் தட்டினான்.

வண்டியை ஓரம்கட்டியவள், “என்னடா பேசுற! இனி அவங்களுக்குன்னு ஒரு குடும்பம் உருவாக்கிக்கணும்! மதுமிதாவை பற்றி வீட்டில் சொல்லிடலாம் டா!” கெஞ்சலாகக் கேட்டாள்.

“முடியாதுன்னா முடியாதுதான் யமுனா!” தீர்கமாக மறுத்தவன், “நான் வந்திருக்கறதே ஒரு மாசத்திற்குதான். வீண்வாதம் செய்யாம சந்தோஷமா நாலு வார்த்தை பேசு!” என்றான்.

விடுமுறைக்கு வந்த மதுசூதனனை பின்தொடர்ந்து அவன் தங்கையும் அவள் குழந்தையும் வர, யமுனாவிற்கு தன் பிரச்சனைகளை எடுத்துரைக்க வாய்ப்பே கிட்டவில்லை.

“இன்னும் எத்தனை நாட்களுக்கு குழந்தை பெத்துக்கறத தள்ளிப்போடப்போறீங்க! சீக்கிரமே எனக்கு மருமகள் பெற்றுக்கொடுங்க!” அண்ணியிடம் உரிமையாக வினவினாள்.

யமுனாவிற்கு மதுமிதாவின் ஞாபகம் வந்து வாட்டியெடுக்க, “அதை ஏன் என்கிட்ட மட்டும் கேக்குற? உன் அண்ணனுக்கும் அதுல பங்கு இருக்குல?” குத்தீட்டியாய் கேட்டு நகர்ந்தாள்.

மருமகளின் மென்மையான குணமறிந்தவள், அவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாமென்று மகளுக்கு அறிவுறுத்த, யமுனாவின் ஜாடைப்பேச்சில் கடுப்பான மதுசூதனன் அவளைப் பின்தொடர்ந்தான்.

“இப்போ எதுக்குடி என்னைக் கோர்த்துவிட்ட?”

“குழந்தை வேணுமா வேணாமான்னு முடிவெடுக்க உனக்கும் சமஉரிமை இருக்குன்னு சொன்னல்ல; அதான் உன்கிட்ட கேட்க சொன்னேன்!” இடித்துக்காட்டினாள் யமுனா.

வழக்கமாக மறுத்துப் பேசும் போதெல்லாம், அமைதியாக விலகுபவள், இம்முறை தொடர்ந்து குழந்தையின் விஷயத்தில் நச்சரிப்பதை உணர்ந்தான்.

“இரு! உங்க மாமாகிட்ட இப்போவே கேக்குறேன். குழந்தை விஷயத்துல பிரச்சனை செய்யமாட்டேன்னு சொல்லிட்டு, இப்போ புதுமனைவி வந்ததும் உன்னைத் தூண்டிவிடுறாரா!” மிரட்டியவன் கைபேசியை எடுத்தான்.

மாமனுக்கு அமைந்த நல்வாழ்க்கை சீர்குலைய, தானே காரணமாகி விடப்போவதை எண்ணி,

“நிறுத்து மது!” தடுத்தவள், “யாரும் யாரையும் தூண்டல! நம்மள அம்மா அப்பான்னு கூப்பிட குழந்தை இருந்தும் அதை வாய்விட்டு சொல்லமுடியாத சூழ்நிலையில இருக்கோமேன்னு ஒரு ஆதங்கத்துல பேசிட்டேன்!” குமுறினாள் பேதை.

“ஊரறிய உன்ன அம்மான்னு கூப்பிட குழந்தை வேணும்னா, உன் மனச மாத்திக்கோ யமுனா!” திட்டவட்டமாகச் சொல்லி நகர்ந்தான்.

மதுமிதாவை ஏற்க மறுத்தவனிடம், இனி அவர்கள் வாழ்க்கையில் தாம்பத்தியம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தடைவிதித்திருந்தாள் யமுனா. அப்படியாவது தன் முடிவை மாற்றிக்கொள்வான் என்று நப்பாசை கொண்டாள். ஆனால் அவனோ, யமுனா மீதுள்ள காதலையே உயர்வாகக் கருதுவதாகக் கூறி, அதை ஆத்மார்த்தமாகச் செயலிலும் காட்டினான். உள்ளத்தால் நேசிக்கும் அவனிடம் தோற்றுத்தான் போனாள் பேதை.

ஊருக்குப் புறப்படும் நாளும் நெருங்க, விமான நிலையம் வந்தவன், “இந்தமுறை என்கிட்ட வழக்கத்துக்கு அதிகமா சண்டை போட்டுட்ட டி! இப்போவாவது கொஞ்சம் சிரியேன்!” அவள் கன்னத்தை ஏக்கத்துடன் வருடினான்.

“நீ கோபப்பட்டாலும் பரவாயில்ல மது! மதுமிதா விஷயத்துல நீ தேவையில்லாம பயப்படுற; அளவுக்கு மீறி அடம்பிடிக்குற! என்னை மகளாக பார்த்துக்கற அத்தை மாமாகிட்ட, நம்ம தவறுகளை மனம்திறந்து சொல்லி மன்னிப்பு கேட்டா புரிஞ்சுப்பாங்க!” என்றவள், மதுமிதாவின் நிழற்படத்தை ஒரு முறையாவது பார்க்கும் படி கெஞ்சினாள்.

ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாகக் கருதும் பெற்றோரிடம், மதுமிதாவை பற்றி சொல்ல துணிவில்லாதவன்,

“ப்ளீஸ் யமுனா! இத்தோட இந்த பேச்சை விட்டுட்டு சிரி டி! இந்தமுறை நான் ரொம்ப ஆபத்தான இடத்துக்குப் போகப்போறேன். திரும்ப வருவேனான்னு கூடத் தெரியாது! அப்புறம் புருஷன் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியலையேன்னு ஃபீல் பண்ணுவ!” உணர்ச்சிப்பூர்வமாக பேசி அவளைத் திசை திருப்பினான்.

“என்னடா! சென்டிமென்டெல்லா பேசினேன்னா பயந்துடுவேன்னு நெனச்சியா! இந்த யமுனா பெத்தவங்க இருந்தும் அனாதை; பேர் சொல்ல பிள்ளை இருந்தும் மலடி; அந்த லிஸ்டுல உன் பிடிவாதத்தால புருஷன் இருந்தும் வாழாவட்டியா இருக்க பழகிட்டேன்! அப்படியே உனக்கு ஏதாவது ஆச்சுனா, என் புருஷன் வீரமரணம் அடைந்தார்ன்னு கம்பீரமா சொல்லுவேனே தவிர அழமாட்டேன்.” தெளிவுபடுத்தி,

“என் மாமா உருவங்களை உள்ளத்துல வெச்சு நேசிக்க  கற்றுக்கொடுத்திருக்காரு! நீ கிளம்பு!” எனக் கையசைத்தாள்.

தலைகுனிந்து நகரும் அவனை கண்கொட்டாமல் பார்த்து நின்றவள், ‘உனக்கு ஒண்ணுமாகது மது!’ மனதார பிரார்த்தித்தாள்.

அவன் பயணித்த விமானம் புறப்பட்டதும், ‘மன்னிச்சிரு பல்லவி! இந்த முறையும் என்னால மது மனச மாற்றமுடியல!’ எல்லாம் கைமீறிவிட்டதாக மனதிற்குள் குமுறினாள்.

அவள் குரலை கேட்டதுபோல, ‘யமுனா!’ விருட்டென விழித்தாள், கணவன்விட்ட சவாலில் தோற்றுப்போய் இந்தியா திரும்பும் பல்லவி.

மதுமிதாவுடன் பயண இருக்கைக்குத் திரும்பியவன் வேண்டாவெறுப்பாக மனைவி அருகில் அமர,

“குணா! இப்படி மதுமிதாவை என்கிட்ட நெருங்கவே விடாம, அவ என்ன அம்மான்னு கூப்பிடலன்னு சொல்றது நியாயமா!” தாழ்ந்த குரலில் கெஞ்சினாள்.

“நான் மதுமிதாவை டே கேர்ல சேர்த்த அடுத்த நாளே, நீ அங்க டீச்சர் வேலை வாங்கிட்டு போனது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா!” ஏளனமாகக் கேட்டு வார்த்தையால் வதைத்தான்.

புத்தாண்டு தினத்திற்கு மறுநாளிலிருந்து மதுமிதாவை டே கேர் அனுப்பியவன், வீட்டிலும் பெரும்பாலான நேரம் குழந்தையை தன்னுடனே வைத்துக்கொண்டான். வாய்ப்பே தராமல், விவாகரத்து செய்ய முடிவெடுத்தவனிடம் இனியும் என்ன பேசுவது என மனமுடைந்தாள் பேதை.

இருவருக்கும் நடுவில் அமர்ந்திருக்கும் குழந்தையைப் பார்த்து, “மதுகுட்டி! ஒரே ஒரு முறை அம்மா சொல்லுடா!” விடாமல் முயற்சி செய்தாள் பல்லவி.

குணாமேல் ஏறிக்கொண்ட குழந்தை, தன் பிஞ்சுக்கரங்களால் அவன் தோளினை சுற்றி வளைத்து, “மா…மா…மாமா!” என செல்லம்கொஞ்ச, தன்னவனின் கூர்மையான பார்வை, பெண்ணின் இதயத்தை துளைத்தது.

தலைவிதிபடி நடக்கட்டும் என்று கண்களை இறுகமூடி தலைசாய்ந்தாள் பெண்.

அதீத காதல் கொண்ட போதும் தாயவளின்,

ஆசையை அலட்சியம் செய்கிறான் ஒருவன்!

அனைத்துமானவன் நீயே என்று உரைக்கும் தாரத்தை,

அவதூறாகப் பேசி அவமதிக்கிறான் இன்னொருவன்!

அத்தனை இன்னல்களிலும் பெண்கள் அமைதி காப்பது ஏன்?

அன்பின் ஆதிக்கமா; அவநம்பிக்கையின் ஆக்ரோஷமா;

ஆண் அவனின் ஆணவமா; பெண் அவளின் அனுசரணையா?

அதுவே அகிலத்தின் நியதியா-தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…