பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 24.1

கண்சிமிட்டும் நேரத்தில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிய தங்கச்சங்கிலியை வெறித்துப்பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான் குணா. தன் அதிரடி செயலிலும், ஆழமான பேச்சிலும் அவன் மனதில் ஒரு பிரளயத்தை உண்டாக்கிவிட்டு சென்றிருந்தாள் பல்லவி.  

தூக்கம் கலையாத நிலையில், பல்லவியை தேடி வெறிச்சோடிக்கிடந்த வீட்டை வலம்வந்த குழந்தை, குணாவை கண்டதும், “மா…மா…மாமா” என்று அவன் மடியில் ஏறிக்கொண்டாள்.

புண்ணான மனதிற்கு மருந்தாக இருந்தது அவள் ஸ்பரிசம். குணா குழந்தையை தன் கைவளையத்தில் இறுக அணைத்து உச்சந்தலையில் முத்தமிட, அவளோ அவன் பிடியிலிருந்து விலக எத்தனித்தாள்.

பல்லவி கற்றுக்கொடுத்த சைகை பாஷையில் மென்கரங்களை நளினத்துடன் அசைத்து தன் தேவைகளை எடுத்துச்சொன்னாள். அது புரியாமல் அவள் பிஞ்சு கரத்தை குவித்து முத்தமிட்டுக் கொஞ்சினான் குணா.

அவனிடமிருந்து இறங்கிய குழந்தை குளியலறை கதவைத் தட்டிக்காட்டினாள்.

அவள் தேவையறிந்து பின்தொடர்ந்தவன், முந்தைய இரவு நடந்த வாக்குவாதத்தில், குழந்தைக்கு டயாப்பர் கூட அணிவிக்கவில்லை என்று கண்டறிந்தான். அவளின் அன்றாட வேலைகளை பூர்த்தி செய்தபின் வீடெங்கிலும் தேடியும் குழந்தையின் டயாபர் மட்டும் தென்படவில்லை.

‘கொஞ்சம் கூட பொறுப்பில்லை அவளுக்கு!’ திட்டிக்கொண்டே, வேறுவழியில்லாமல் பல்லவியை அழைத்தான்.

அவள் குரல் கேட்டதும், “அப்படி எங்கதான் டயாப்பரை வெச்சிருக்க?” படபடவென்று பொரிந்தான்.

சண்டையிட்ட ஒருமணி நேரத்தில், அழைத்துவிட்டானே எனப் பூரித்த பெண்மனம், அவன் அழைத்த காரணம் அறிந்ததும் விரக்தியில் சிரித்தது.

“அவளுக்கு டயாப்பர் பழக்கத்தை நிறுத்தி ரெண்டுமாசம் ஆச்சு மிஸ்டர்.குணா!” திடமாக உரைத்தாள்.

“நிஜமாவா!” வியக்கவே செய்தான் அவன்.

“ஆம்!” என்றவள், குழந்தையிடம் ஐபேட் கொடுத்து, காணொளியில் அழைக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

“மதுகுட்டி! உனக்கு என்ன வேணுமோ, அதைக் கேட்டுத்தான் வாங்கிக்கணும், சரியா!” கொஞ்சியவள், “இப்போ மதுகுட்டிக்கு என்ன வேணும்னு சொல்லு!” என்றாள்.

மறுகணமே மதுமிதா ஐபேடில் சில படங்களை வரிசையாகத் தொட,

“ஐ வான்ட் பல்லவி!” ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.

அருகில் இருந்தவன் அதைக்கேட்டு அதிர, மறுமுனையில் இருந்தவளோ நெகிழ்ந்தாள்.

“பல்லவி டாடா போயிருக்கேன் மதுகுட்டி. உனக்கு வேறென்ன வேணும்!”

ஐ வான்ட் மில்க் ஆன்ட் பிரெட்!” ஐபேடில் ஒலிக்கவிட்டாள்.

குழந்தைக்குத் தலையசைத்தவன் மௌனம் காக்க, அவன் குழப்பத்தை உணர்ந்தவள் மென்மையாகப் பேசினாள்.

“குணா! அவளோட IEPல பரிந்துரை செய்த பேசும் சாதனம் ஐபேடில் பதிவிறக்கம் செய்து வீட்டுலேயே பயற்சி கொடுத்துட்டு வரேன். மதுமிதாவுக்கு தேவையான அடிப்படை விஷயங்களைப் படங்களா மாற்றி அதுல சேகரிச்சு வெச்சிருக்கேன். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஒலிப்பதிவு இருக்கும்; இனி அதுதான் அவளுக்கு நிரந்தர தொடர்புமுறை. தனக்குத் தேவையானதை அதுல காட்டினால்தான் செய்வேன்னு, நீங்களும் அவகிட்ட கண்டிப்பா இருங்க.” என்றவள்,

மேலும் மதுமிதாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அவள் கையாளும் யுக்திகளை விளக்கினாள்.

பல்லவியின் பாசத்தில் வீழ்ந்த மனம், ‘திரும்பி வந்துவிடு பல்லவி!’ வார்த்தைகளை எழுப்ப, அதற்குத் தன்மானம் தொண்டைக்குழியில் அணைகட்டியது.

“சரி! நீ திரும்பி வரவரைக்கும், காலை வேளையில் மதுமிதாவை உன்கிட்ட விட்டுட்டு போறேன்!” என்றான்.

‘திரும்பி வந்துவிடு என்றால் உடனே வந்துவிடப் போகிறேன்!’ ஏங்கிய பெண்மனம் சரியென்று மட்டும் சொன்னது.

தோழியான மனைவியின் அறைக்குள் மதுமிதாவின் உடைமைகளை எடுக்க சென்றவனுக்கு மேலும் சில வியப்பூட்டும் விஷயங்கள் தென்பட்டன. பொழுதுக்கும் கதைசொல்லி, விளையாடுகிறாள் என்று எண்ணியவனுக்கு, பல்லவி, மதுமிதாவின் நலனில் கொண்டுள்ள ஈடுபாட்டினை அவள் மேஜையிலிருந்த மனஇறுக்கம், சைகைபாஷை புத்தகங்களும் பறைசாற்றியது.

குணா அன்றே குழந்தையைப் பல்லவியிடம் விட்டுச் செல்லவும், அதைக்கண்ட நீலாவதி ஆறுதல் அடைந்தாள். தொடர்ந்த வந்த நாட்களிலும், குணா அவளுடன் சகஜமாகப் பேசிப்பழகவும், மனைவியுடன் தனிமையில் நேரம் செலவிடமுடியாத விரக்தியில் அப்படி நடந்துகொண்டிருப்பான் என்று நம்பினாள்.

வீடு திரும்பிய பல்லவி, மீண்டும் மாயமாக மறைந்துவிடப் போகிறாளோ என்பதுபோல, மதுமிதா அவள் காலையே சுற்றி சுற்றி வந்தாள். அதையும் மாமன் கண்கள் கவனிக்கவே செய்தது. ஆனால் இருவரும் மதுமிதாவின் விஷயங்களைத் தாண்டி எதைப்பற்றியும் பேசிக்கொள்ளவில்லை.

அன்றிரவு மதுமிதா உறங்கியதும் அவளை குணாவிடம் விடுவதற்காக வந்தாள் பல்லவி.

“பல்லவி!” மென்மையாக அழைத்தவன், அவளிடம் திருமாங்கல்யத்தை நீட்டினான்.

பார்வையால் வீழ்த்தி நகர்ந்தாள் பெண்.

“நான் பேசினது தப்புதான் பல்லவி! உண்மையிலேயே வேறொரு முக்கியமான செலவிருந்ததுனால தான் அப்படி பேசிட்டேன்!” தன்மையாக விளக்கினான்.

அவனருகே திரும்பி வந்தவள், “எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் மிஸ்டர்.குணா. உங்க மனைவியா என்னை ஏத்துக்கிட்டீங்கனா, நீங்களே என் கழுத்துல மாட்டிவிடுங்க! ஒரு நண்பனா கொடுக்குறதா இருந்தா எனக்கு வேண்டாம்!” கைகளைக் குறுக்கே கட்டியபடி காத்திருந்தாள்.

“அது…அது…பல்லவி!” தயங்கியவன் கரங்களைத் திருப்பிக்கொள்ள, அவன் மனநிலை அறிந்து விலகினாள்.

திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்ள விரும்பாதவன், அந்த இரண்டுவார பிரிவில், தன் கொள்கை ஆட்டம்காண தொடங்கிவிட்டதை உணர்ந்தான். யமுனாவை பற்றிய உண்மைகளைச் சொன்னால், மதுசூதனனிடம் சண்டைக்குப் போய்விடுவாளோ என்று பயம்கொண்டான். சொல்லாமல் அவளை மனைவியாக ஏற்கவும் மனசாட்சி இடம்கொடுக்கவில்லை.

குழப்பத்தில் தத்தளிக்கும் தன் வாழ்க்கைக்குத் தீர்வுகாண நண்பனை நாடினான். பல்லவியின் பாசத்தில் கரையும் குணாவின் மனதை நொடியில் கண்டறிந்தான் அஷ்வின். பல்லவிக்கு கொடுத்த வாக்கையும் மீறி, அவள் மதுமிதாவை பற்றி தன்னிடம் அக்கறையாக விசாரித்த விதத்தை எடுத்துரைத்து,

“தைரியமா உண்மைகளை சொல்லு நண்பா; மதுமிதாவின் உடல்நலம் பற்றி முழுசா தெரிஞ்ச அவ எப்படி மதுசூதனன் போல ஒரு பொறுப்பில்லாத அப்பாகிட்ட குழந்தையை கொடுக்க சொல்லுவா?” தெளிவுபடுத்தினான்.

அஷ்வின் போதித்த அறிவுரைகளில், பல்லவி மேலிருந்த கண்ணோட்டம் மாறியது.

ஒரு சில நாட்களில் புத்தாண்டு பிறக்க இருப்பதைக் கவனித்தவன் அன்று டைம்ஸ் ஸ்குவேரில் அவளுக்கு மிகவும் பிடித்த பால் ட்ராப் நிகழ்வின்போது தன் காதலை சொல்ல திட்டமிட்டான்.

தோழியாக வேடமேற்று வாழும் மனைவியை ரகசியமாக நேசித்தபடி அந்த நாளிற்காகக் காத்திருந்தான்.

“பல்லவி! கிளம்பு நம்ம டைம்ஸ் ஸ்குவேர் போகலாம்!” அன்று மாலை வீடு திரும்பியவன் அலட்டலே இல்லாமல் அழைக்க,

“என்ன குணா திடீர்னு?” வியந்தாள் பெண்.

“புத்தாண்டு தினம் அங்க கொண்டாடுறது தானே உன் வழக்கம்!” வழிவழியாக பின்பற்றும் ஐதீகம்போல விளக்கினான்.

அவன் மனமாற்றம் அறியாதவள், தோழியா மனைவியா என்று கேட்டு மீண்டும் பட்டிமன்றம் நடத்த,

‘காதலி!’ பதிலளித்த மனசாட்சியை மறைத்து, “நம்ம நண்பர்களா அங்க ஏற்கனவவே போயிருக்கோம்!” நினைவூட்டியவன், தர்க்கம் செய்யாமல் வரும்படி அழைத்தான்.

பல்லவிக்கு மிகவும் பிடித்த கடையான மேசிஸ் வாசலில் அவர்களை இறக்கிவிட்டு, “உனக்குத் தேவையானதை வாங்கிக்கோ! நான் கார் பார்க் செய்துட்டு வரேன்.” என்றான்.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் அவ்விடத்தில் பார்க்கிங்க் கிடைப்பது சிரமம் என்றாலும், மதுமிதாவின் உடல்நலம் கருதி அவர்களை காரில் அழைத்து வந்திருந்தான்.

ஒரு மணிநேரம் அல்லாடி ஒருவழியாக பார்க்கிங்க் கிடைக்க, தன்னவளைத் தேடி விரைந்துவந்தவன், அவர்களை விட்ட இடத்திலேயே கண்டதும்,

“உள்ளப் போக சொன்னேனே! குழந்தைக்குப் பனிகாற்று ஆகாதுன்னு உனக்குத் தெரியாதா!” குளிரில் உறைந்துபோன கைகளை தேய்த்தவாறு வினவினான்.

அவன் சாதாரணமாகக் கேட்டபோதும், குறைகூறுவது போலவே தோன்றியது அவளுக்கு.

“நானா வெளிய கூட்டிட்டுப்போங்கன்னு கேட்டேன்!” பதிலுக்கு இடித்துக்காட்டினாள்.

“சரி வா! முதல்ல உனக்குத் தேவையான பரிசுப்பொருள் வாங்கிக்கோ! அப்புறம் பால் டிராப் பார்க்க போகலாம்!” என்று அவள் தோளினை சுற்றி வளைத்தான்.

அவனிடமிருந்து விலகி நின்றவள், “உங்களுக்கு ஆயிரம் முக்கியமான செலவுகள் இருக்கும். எதுக்கு எனக்காக வீணா செலவு செஞ்சுகிட்டு!” மேலும் குத்திப்பேசினாள்.

“இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல! என்னுடைய பட்ஜெட் தெரிஞ்சும் அளவுக்கு மீறி செலவு செய்தது உன் தவறு!” நிதர்சனத்தை நினைவூட்ட,

“ஆமாம் தவறு என்னுடையது தான் மிஸ்டர்.குணா! உங்க நடிப்பை பார்த்து, என் கணவர்னு உரிமை எடுத்துகிட்டது என் தவறுதான்!” பற்களை நறநறத்தாள்.

சற்று நேரத்தில் மனம்திறந்து காதலை சொன்னதும் அவள் இயல்பு நிலைக்கு திரும்புவாள் என்ற புன்முறுவலுடன்,

அவளருகில் விரல் கோர்த்து நிற்கும் தேவதை உயரத்துக்கு குனிந்து,

“பல்லவி இங்கேயே இருக்கட்டும் மதுகுட்டி! நம்ம போகலாம்!” குழந்தையை மட்டும் அழைத்துச் சென்றான்.

கோபம் தணிந்த பிறகு மனையாள் மகிழ்ந்து ஷாப்பிங்க் செய்ய ஏதுவாக கிஃப்ட்கார்ட் மட்டும் வாங்கிகொண்டு வெளியே வந்தான். அப்போதும் பனியில் உறைந்த மெழுகு பொம்மையாகப் பிடிவாதமாக நின்றிருந்தாள் பேதை.

‘அழுத்தக்காரி!’ குறுஞ்சிரிப்புடன் இடவலமாக தலையசைத்தான்.

நள்ளிரவு நேரம் நெருங்க, பால் டிராப் நிகழும் இடத்திற்குச் சென்றனர். புதுவருடம் நல்வழி பிறக்கட்டும் என்ற பிரார்த்தனைகளுடன் திரண்ட மக்கள் கூட்டத்தோடு கலந்தனர்.

வானத்து நிலவோடு போட்டியிடடும் அந்த மனிதன் படைத்த வெள்ளைப் பந்து சரியாக பன்னிரெண்டுமணி ஆனதும் மணிக்கூண்டு மேல் மென்மையாக இறங்க அதைப் பிரமிப்பாகக் கண்டவர்களுக்கு மத்தியில், குணாவின் கண்கள் மட்டும் தன் எதிர்காலத்தைத் தழுவியிருந்தது.

கண்மூடி தவமிருந்த தன்னவளின் கைகோர்த்தவன்,

“பல்லவி!” மென்குரலில் அழைத்தான்.

“ம்ம்!” கண்திறந்தாள் தேவதை.

“போன வருடம், நம்ம நண்பர்களா இதே இடத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் பிரார்த்தனை செய்துகிட்டோம்!” நினைவூட்டினான்.

அவளும் மென்மையாகத் தலையசைத்தாள்.

“இந்த வருடமும் அதையே வேண்டிக்கப்போறேன்!” என்றவன், அவள் முகத்தை கண்பார்க்க உயர்த்தி, “உன் மனசுக்கு பிடிச்சவரை கல்யாணம் செய்துகிட்டு இந்த நியூயோர்க் நகரத்திலேயே நீ நிரந்தரமா இருக்கணும் பல்லவி!” என்றான்.

இத்தனை தூரம் வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது இப்படி மனதை புண்படுத்தும் அளவிற்கு மறுமணம் பற்றி பேசத்தானா என்று நொந்தவள்,

அவன் கையை உதரி, “என் மனசுக்கு பிடிச்சது ஒரே ஒருத்தர்தான் மிஸ்டர்.குணா. அது நீங்க மட்டும்தான். நீங்க எவ்வளவு அவமானப்படுத்தி பேசினாலும், நான் உங்களை வெறுக்கவே மாட்டேன்!” தீர்மானமாகச் சொல்லி வேகநடையிட்டாள்.

மனஸ்தாபத்தில் கழற்றி தந்த தாலியை மீண்டும் அவள் கழுத்திலிட்டு புதுவாழ்க்கை தொடரலாம் என்பதை மறைமுகமாக உரைத்தவன், ‘அதானே நானும் சொல்லவந்தேன்!’ யோசித்தபடி,

“பல்லவி! நான் சொல்றது உனக்குப் புரியலையா!” கேட்டு அவளைப் பின்தொடர்ந்தான்.

கோபத்தின் உச்சியில் இருந்தவள், “நல்லா புரியுது! நானும் உங்களுக்காக வேண்டிக்கறேன்! ஆனா உங்கள மாதிரி அதே வேண்டுதலை வைக்கிற அளவுக்கு எனக்குப் பெரியமனசு இல்ல!” கர்ஜித்தவள், தன் தோளில் சாய்ந்து உறங்கும் மதுமிதாவின் தலைமேல் கைவைத்து,

“இந்த மதுமிதா அவளோட மாமாவோட இருக்குற வரைக்கும் என் கணவர் எனக்குக் கிடைக்கமாட்டாருனா, அவளை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துட்டு என் கணவரை நானும் மீட்பேன்!” சபதமிட்டாள்.

“பல்லவி!” அரற்றியவன் அவள் முகமருகே ஒற்றைவிரலை நீட்டி, “திஸ் இஸ் தி லிமிட்!” எனக் குழந்தையைப் பறித்துக்கொண்டு,

“இனி என் மனசுலையும் சரி வீட்டுலையும் சரி உனக்கு இடமில்ல!” உறவு முறிந்தது என்று சொல்லி நகர்ந்தான்.

தொடர்ந்து படிக்க Click Here –> பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 24.2