பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 23

நியூயோர்க் நகரத்தின் பரபரப்பான காலைநேர போக்குவரத்து நெரிசலை வேடிக்கை பார்த்தபடி தேநீர் பருகிக்கொண்டிருந்தாள் பல்லவி. அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஏழாவது மாடியிலிருந்து எத்தனை மஞ்சள்நிற டாக்சிகள் சாலையைக் கடக்க, குறுக்கும் நெடுக்குமாக பாடுபடுகிறது என்று கணக்கிடுவதைத் தவிர, வேறெந்த முக்கியமான பொறுப்பிலும் கணவரான கணிதபேராசிரியர் அவளை நியமிக்கவில்லை.

தன் அன்றாட வேலைகள் எதிலும் அவள் தலையிடக் கூடாதென்று நிர்த்தாட்சண்யமாகத் தடைவிதித்திருந்தான்.

விட்டுக்கொடுத்துப் போக விழைந்தவள், “அதான் சொல்லிட்டேனே குணா! சமைக்க வேண்டாம்னு சொல்ற கணவன் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்னு!” தடைகளை மகிழ்ந்து ஏற்றாள்.

இந்தியாவிலிருந்து வந்தவன், கொரோனா விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, வீட்டில் இருந்தபடியே கல்லூரி வேலைகளைக் கவனிக்க, பல்லவி குழந்தையுடன் விளையாடி, கணவனிடம் பொடிவைத்துப் பேசி வம்பிழுக்க, இரண்டு வாரங்கள் நகர்ந்தது.

அன்று கல்லூரிக்குப் புறப்பட தயாரானவன், மதுமிதாவிற்கும் உடைமாற்றி, அவளுக்குத் தேவையான பொருட்களைத் தோள்பையில் எடுத்துவைக்க, அவளோ, பல்லவியிடம் ஓடி வந்தாள்.

“என்னடி! உன் மாமா கல்லூரிக்குக் கிளம்பிட்டாரா!” மடியில் ஏறிக்கொண்ட மதுமிதாவின் தலையில் பரவலாக முளைத்த புதுமுடியை சீர்செய்தபடி வினவினாள்.

“அவளுக்கு நான் அப்பா! தப்பு தப்பா சொல்லிக்கொடுத்து அவள குழப்பாத!” குழந்தையைப் பின்தொடர்ந்து வந்தவன் கண்டித்தான்.

“அவளே உண்மையை தெளிவா புரிஞ்சுகிட்டு, உங்கள மாமான்னு சரியா அழைக்கும்போது, நான் ஏன் குழப்பணும்?” உதட்டை சுழித்தவள், குழந்தையின் கன்னத்தோடு கன்னம் உரசி, “நான் சொல்றது சரிதானே மதுகுட்டி!” என்று முத்தமிட்டாள்.

மதுமிதாவும், “மா…மா…மாமா!” என்று குணா நிற்கும் திசையில் கையசைத்து கொஞ்ச, மாமனின் முகம் சிவந்தது.

தன்னவன் அருகில் வந்த பெண்மான், “உங்கள அப்பான்னு கூப்பிட ஒரு ஜீவன் வேணும்னா, என்கிட்ட கேளுங்க மாமா!” அவன் காதோரம் கிசுகிசுத்தாள்.

“நீ தலைகீழ நின்னாலும், உன்னால என்னை நெருங்கவே முடியாது!” கர்ஜித்து குழந்தையுடன் புறப்பட்டான்.

“மதுமிதாவ எங்க அழைச்சிட்டு போறீங்க?” வழிமறித்தாள் பல்லவி.

“டே கேருக்கு!” என்றான்.

“அவள பார்த்துக்க நான் இருக்கறப்ப, எதுக்கு டே கேர்!” குழந்தையைத் தன்பக்கம் இழுத்தாள்.

மதுமிதாவை மார்போடு சேர்த்து அணைத்தவன், “வீட்டுக்கு வந்த அழையா விருந்தாளிகிட்ட எல்லாம் என் குழந்தையைத் தனியா விட்டுட்டு போகமுடியாது;” அமர்த்தலாகப் பதிலளித்தான்.

“ப்ளீஸ் குணா! நான் இங்க இருக்குறப்ப, மதுகுட்டிய டே கேர்ல விட்டு என்னை அவமானப்படுத்தாதீங்க!” கெஞ்சினாள்.

“மன்னிச்சிரு பல்லவி! என் கண்பார்வையில், மதுமிதாவோட எவ்வளவு நேரம் வேணுமானாலும் செலவிடு. ஆனால் குழந்தையை உன்கிட்ட தனியா விடச்சொல்லி கேட்காத!” தீர்கமாக உரைத்தான்.

“ஏன் குணா உங்களுக்கு என்மேல இவ்வளவு அவநம்பிக்கை? உங்களுக்காக என் வேலையே விட்டுட்டு வந்திருக்கேனே!இன்னும் நம்பலேன்னா எப்படி?”,  மனமுடைந்தாள் பேதை.

“நீ செய்த காரியங்கள் அப்படி பல்லவி!” கசந்த குரலில் பதிலளித்தான்.

மனம் கவர்ந்தவனை தன்வசப்படுத்தும் முயற்சியில், அளவுக்கு அதிகமாக அவன் வெறுப்பை சம்பாதித்துவிட்டதை உணர்ந்தாள். அத்தனை தொல்லைகள் செய்தபோதும், மனிதாபிமானத்துடன் தன்னை ஊருக்கு அழைத்துவந்து, மரியாதையுடன் நடத்தும் அவன் உயர்ந்த குணத்தை நினைவுகூர்ந்தாள்.

அவன் மனதில் தோன்றிய பயம் நீங்கினால்தான் தன்மீது காதல் மலரும் என்று புரிந்துகொண்டவள்,

“இதுவரை உங்க முதல்மனைவியை நான் நேருல பார்த்ததே இல்ல!” என்றாள்.

புருவங்கள் உயர்த்தி ஏறிடும் மாமனின் முகமாற்றத்தைக் கவனித்தவள்,

“பர்தாவ விலக்கி, அது உங்க முதல்மனைவியான்னு பரிசோதனை செய்யற அளவுக்கு நீங்கபோக மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில், அத்தைகிட்ட யமுனாவின் ஃபோட்டோ வாங்கி, பர்தா போட்டிருக்கா மாதிரி ஃபோட்டோஷாப் செய்தேன். சென்னையில் இருக்காங்கன்னு பொய்யும் சொன்னேன்!” அசடுவழிந்தாள்.

‘அடிப்பாவி!’ வியந்த மனதை கட்டுப்படுத்தி, ஒலிப்பதிவில் கேட்டது, சாட்சாத் யமுனாவின் குரல்தான் என்று தர்க்கம் செய்தான்.

“அதையும் அத்தைகிட்ட வாங்கிய பழைய காணொளி பதிவிலிருந்து சேமித்து, எனக்கு வேண்டிய வசனங்களை அந்தக் குரலில் பதிவு செய்தேன்.” விழிகள் படபடவென்று இமைக்க, அப்பாவியாக விளக்கினாள்.

“அப்போ யமுனா டெல்லியில் இருக்கான்னு சொன்னீயே!” கேட்டவனின் குரல் கம்மியது.

மாமனின் பதற்றத்தைக் குறுஞ்சிரிப்புடன் ரசித்தவள், “கதைவிடுறப்ப சட்டுன்னு மனசுக்கு தோணின ஊர் பேர் சொன்னேன். நீங்க அதைக்கேட்டு தடுமாறினதும், அப்படியே என் கதையைத் தொடர்ந்தேன்!” கலாய்த்தவள்,

“அப்போ உங்க முதல்மனைவி டெல்லியில் தான் இருக்காங்களா குணா!” வெகுளியாகவும் வினவினாள்.

‘நானாகத்தான் இவள் வலையில் சிக்கினேன்னா!’ துணுக்குற்றவன், “அதெல்லாம் எனக்குத் தெரியாது! அவளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல!” படபடவென்று உரைத்து முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

மாமானின் உள்ளத்தில் பிறந்த நிம்மதியை, அவன் இதழோரம் தேங்கிய புன்னகை காட்டிக்கொடுத்தது. 

“உங்க மேல மலர்ந்த காதல் கிறுக்கில்தான் இதெல்லாம் செஞ்சேன்! அப்பன் முருகனும், மாஷா அல்லாவின் ஆசிர்வாதத்தில் என் எண்ணமும் நிறைவேறியது! நம்புங்க குணா!” பரிவாகப் பேசினாள்.

சரியென தலையசைத்து, குழந்தையோடு வெளியே நகர்ந்தான்.

இவன் மனதில் இடம்பிடிப்பது கடினமென்று சலித்துப்போனவள், “மதுமிதாவுக்கு ஒரு பேபி சிட்டராகவாது இருக்கேனே. இருந்த ஒரு வேலையும் விட்டுட்டேன்; கையிலிருந்த சேமிப்பு பணமெல்லாம் விசாவுக்கு செலவு செஞ்சிட்டேன்;” காரணங்களை அடுக்க,

பதிலேதும் கூறாமல், வீட்டிற்குள் திரும்பியவன், மதுமிதாவை மடியில் அமர்த்தியபடி, சாவித்ரியை அழைத்தான்.

கைபேசியை ஸ்பீக்கரில் போட்டு, பல்லவியை வெட்டும் பார்வையில் நோக்கினான்.

இப்படியொரு சூழ்நிலையும் கருத்தில்கொண்டவள் தன்னவனுக்கு மிரட்டல்கள் விடுக்கும் முன்னரே, அதற்கான வேலைகளையும் கச்சிதமாகச் செய்திருந்தாள்.

குடும்ப புகைப்படங்களையும், வைபவங்களின் காணொளி பதிவுகளையும் பல்லவியிடம் காட்டியதாக சாவித்ரி கூறினாள்.

அன்பிற்காகத் தவமிருக்கும் கண்களைக் கூர்மையாகப் பார்த்தவன், மதுமிதாவை அவளிடம் மனப்பூர்வமாக நீட்டினான்.

மகிழ்ச்சியில் மிதந்த பேதையின் விழிகளில் வெள்ளம் பெருக்கெடுக்க, இதழ்களோ கைசேர்ந்த தாரகையை முத்தமழையில் நனைத்தது.

கண்ணின் வழியே கசிந்த நீர், அவள் காதலை காவியம் பாடியது. ஆனாலும் யமுனாவை பற்றிய ரகசியங்களைச் சொல்லும் அளவுக்கு அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.

“உன்னால மதுமிதாவுக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு நம்பறேன். நீயும் என்னை கணவனா நடந்துக்கோன்னு தொல்லை செய்யாமல் இருந்தால், நம்ம பழையபடி நல்ல நண்பர்களாக இருக்கலாம்!” தன் எதிர்பார்புகளைத் தெளிவுபடுத்தினான்.

படிப்படியாக மாமன் மனதை கரைக்க திட்டமிட்டவள், “லெட்ஸ் பி ஃப்ரெண்ட்ஸ்!” கைகளை நீட்டினாள்.

அவனும் ஆத்மார்த்தமாகக் கைகுலுக்கினான்.

அன்றிலிருந்து மதுமிதா முழுநேரமும் பல்லவியின் அரவணைப்பில் வளர்ந்தாள். சிகிச்சைக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாள். அங்கு நிபுணர்கள் கொடுக்கும் பயிற்சிகளைக் கூர்ந்து கவனித்தவள், சராசரி குழந்தையைக் காட்டிலும், மதுமிதாவிற்கு அதிகப்படியான பராமரிப்பும், அவளின் உடல்நிலைக்கு ஏற்ப சரியான அணுகுமுறையும் அவசியமென்று உணர்ந்தாள்.

அஷ்வினை அழைத்து, மனதில் எழுந்த சந்தேகங்களைக் கேட்டாள். அவனும் பல்லவி காட்டும் அக்கறையை மெச்சி, மதுமிதாவின் மருத்தவ வரலாறு பற்றி விவரித்தான்.

இயற்கையிலேயே குழந்தை கொண்டுள்ள கணிதம் சார்ந்த புத்திசாதுரியத்தை சுட்டிக்காட்டி,

“சுருக்கமா சொல்லணும்னா, நம்ம விருப்பங்களை அவள்மேல திணிக்காம, அவளுக்குப் பிடித்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினா, அது அவளோட வாழ்க்கையை மேம்படுத்தும். பாசம், பொறுமை, சகிப்புத்தன்மை, அசைக்க முடியாத நம்பிக்கையோட அவள வளர்த்தோமுன்னா, உறுதியா சொல்றேன் பல்லவி, மதுமிதா சாதிக்கப் பிறந்தவள்!” என்றவன்,

மூன்றுவயது பூர்த்தியான மதுமிதாவிற்கான Individualized Education Program(IEP), பரிந்துரை செய்த வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினாலே, அவளை ஒரு சாதகப்பறைவயாக மாற்றலாம் என்றும் உறுதியளித்தான்.

“ம்ம்! சரி அஷ்வின்!” என்றவளின் குரலில் சோகம் வழிந்தோடியது. நேர்மறை விஷயங்கள் அத்தனை இருந்தும், பெண்மனம் குழந்தை எதிர்கொள்ளும் அவஸ்த்தைகளையும், சவால்களையும் நினைத்து நொந்தது. அவள் கவலையை உணர்ந்தவன்,

“நீங்க டெம்பிள் கிராண்டின் எழுதிய, ‘தி ஆடிஸ்டிக் பிரெயின்’ படிச்சிருக்கீங்களா?” வினவினான்.

“இல்ல!”

“படிச்சு பாருங்க பல்லவி! அவங்க உலகம் போற்றும் விஞ்யானி மற்றும் கால்நடை அறிவியல் துறை பேராசிரியர். மனஇறுக்கக் குறைபாடு குறித்த தன்னுடைய வாழ்க்கை பாதை பற்றி அவ்வளவு அழகா எழுதியிருப்பாங்க! “அவங்களுக்கும் நம்ம மதுகுட்டிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு;” நம்பிக்கையூட்டினான்.

கரிசனத்தோடு பேசியவனுக்கு நன்றி தெரிவித்தவள்,

“இதையெல்லாம் கேட்டேன்னு உங்க நண்பர்கிட்ட சொல்லிடாதீங்க அஷ்வின்! இதுக்கும் ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு குதர்க்கமா யோசிப்பாரு!” நொந்துக்கொண்டாள்.

“மனச தளரவிடாதீங்க பல்லவி! அவன் ரொம்ப நல்லவன்!” நண்பனை பறைசாற்றியவன், மனையாளும் நண்பனுக்கு ஏற்ற குணவதி என்று மெச்சினான்.

அஷ்வின் அனுப்பிய IEP அறிக்கைகளைப் படித்தவளுக்கு, மதுமிதாவின் பேச்சு குறைப்பாடு கண்ணை உறுத்தியது. ஓரிரு வார்த்தைகளைத் தவிர தொடர் வாக்கியம் பேசுவது அவளுக்குச் சாத்தியமில்லை என்பதால், அதில் பரிந்துரை செய்திருந்த சைகை பாஷையின் அடிப்படைகளை முறையாகப் பயின்று, மதுமிதாவுக்கும் வீட்டில் கற்பித்தாள்.

அதில் குறிப்பிட்டிருந்த Augmentative and alternative communication (AAC) முறையில், நிழற்படங்கள் மூலமாகவும், iPadஇல் பேசும் சாதனங்கள் மூலமாகவும் தொடர்புகொள்ளும் அணுகுமுறைகளை நித்தியம் பயிற்சி கொடுத்தாள்.

மதுமிதாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பல்லவியுடன் குணாவும், மனஸ்தாபங்களை மறந்து சகஜமாகப் பழகினான். பல்லவி அவ்வப்போது, மதுமிதாவை அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்று வரவும் அனுமதித்தான்.

மாலை வீடு திரும்பியவனை, வாய்கொள்ளா புன்னகையுடன் வரவேற்றாள் நீலாவதி. குணாவும் பணிவாக நலன்விசாரித்து, தன் அறைக்குள் புகுந்தான்.

அன்றைய ஒப்பந்தத்திற்குப் பிறகு, அவன் அறைக்குள் செல்லாதவள், தயக்கத்துடன் பின்தொடர்ந்து,

“அண்ணன் அண்ணி, திருமண நாளையொட்டி, வெளியூர் போயிருக்காங்க…அதுவரைக்கும் பாட்டி நம்ம கூட இருக்கட்டுமா?” மென்றுவிழுங்க,

“அதனால என்ன! தாரளமா இருக்கட்டும்!” அலட்டலே இல்லாமல் சொல்லி, குளியலறைக்குள் புகுந்தான்.

குளித்துவிட்டு வந்தபோதும், பல்லவி அங்கேயே சிலையாக அமர்ந்திருக்க,

“அதான் சரி சொல்லிட்டேனே!” கறாராக உரைத்தான்.

“அதுக்கில்ல குணா…நம்மளோட இந்த…இந்த…இடைவெளி பற்றி பாட்டிக்குத் தெரியவேண்டாம்!” கவலை தோய்ந்த குரலில் கெஞ்சினாள்.

இத்தனை மாதங்களாக, தன்னை தொல்லை செய்யாதவளுக்காக, அவனும் விட்டுக்கொடுக்க முன்வந்தான்.

இரவுஉணவு அருந்த வந்தவன், தோசையை தானே செய்துகொள்ளவதும், பல்லவி குழந்தையுடன் புத்தகம் படிப்பதையும் கவனித்த நீலாவதி,

“மாப்பிள்ளை! ஆனாலும் நீங்க பல்லவிக்கு ரொம்ப செல்லம் கொடுக்கறீங்க!” என்றதும்,

‘என்ன சொல்லி வைத்திருக்கிறாய்!” அவன் விழிகள் மனையாளுக்கு வினா எழுப்ப, தனக்கும் பாட்டியின் பேச்சு விளங்கவில்லை என்று உதட்டை மடித்தாள்.

“வீட்டுவேலை எல்லாம் நீங்களே செய்யறீங்களாமே! இவளும் அதை என்கிட்ட பெருமையா சொல்றா!” என்றவளின் கண்கள், பேத்தியை கண்டிப்புடன் தழுவி மீண்டது.

குறைகூறாமல், தன்னை பற்றி புகழாராம் பாடியிருக்கிறாள் என்று மெச்சுதலாகத் தன்னவளை ஏறிட்டவன்,

“எனக்கு அதுல ஒரு கஷ்டமும் இல்ல பாட்டி! மதுமிதாவ முழுநேரமும் பார்த்துக்கிட்டே வீட்டுவேலையும் செய்யறது அவ்வளவு சுலபமில்லை!” மென்மையாகப் பதிலளித்தான்.

“அதுக்கில்ல மாப்பிள்ளை…!”, நீலாவதி மறுக்க,

“நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிகிட்டு பொறுப்புகளை சமமா பிரிசிக்கிட்டோம்;” என்றவன்,

அவள் முகவாயை குவித்து, “அப்புறம், நானும் உங்க பேரன் சரண் மாதிரிதான்; என்னை மாப்பிள்ளைன்னு எல்லாம் கூப்பிடாதீங்க!” அன்புக்கட்டளை இட்டு,

தோழியாக மாறிய மனைவியிடம், பேசியது சரியா என்று புருவங்கள் உயர்த்தி வினவினான்.

பல்லவி தன்னவனுக்கு மென்சிரிப்பில் நன்றிகளைத் தெரிவிக்க, குணாவின் அன்பில் மூழ்கிய பாட்டியின் முக சுருக்கங்கள் பூரிப்பில் பொலிவுற்றது.

சிறிது நேரத்தில், மதுமிதாவை உறங்கவைத்தவள், குணாவின் மடியில் குழந்தையை இறக்கிவிட்டு,

“வா பாட்டி! நம்ம அந்த ரூம்ல படுத்துக்கலாம்!” இயல்பாக அழைத்தாள்.

நீலாவதி, தனக்குத் தனியாக உறங்குவதில் சிரமமில்லை என்று மறுத்தாள்.

“ரெண்டு வாரம் உன்கூட இருக்கறதுனால, அவருக்கு ஒண்ணும் என்மேல காதல் குறைஞ்சிடாது!” செல்லம் கொஞ்சி, பாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்தாள்.

மறுபடியும் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசியவளை, சிந்தையிலிருந்து அகற்ற முடியமால் தவித்தான். இரண்டு மணிநேரம் கடந்தும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

மனையாளின் அன்பை புரிந்துகொள்ள முயற்சிசெய்த மனதிற்கும், நிதானம் கடைப்பிடிக்க எச்சரித்த புத்திக்கும் இடையே சிக்கித் தவித்தவன், பல்லவியின் அறை கதவை தட்டினான்.

திறப்பேனா என்று தர்க்கம் செய்த அவளின் இமைகள், தன்னவனைக் கண்டதும் விரிந்தன.

“நம்ம ரூமுக்கு வா பல்லவி! மதுமிதா உன்ன தேடுறா!” அவன் உதடுகள் உதிர்க்கவும், பேதையின் கண்கள் இன்னும் அகலமாக விரிந்தன.

“அது…குணா…பாட்டி!” அவள் தடுமாற,

தம்பதியரின் பேச்சை கேட்ட நீலாவதி, “யாரு என்னைத் தூக்கிட்டு போகப்போறா பவி மா! உன் ரூமுக்கு போ!” மனநிறைவோடு உரைத்தாள்.

மதுமிதா இருவரையும் சமமாக நேசித்தாள். உறங்குவது குணாவின் அறையிலும், விழிப்பது பல்லவியின் அறையிலும் என நடுஜாமத்தில் தூக்க கலக்கத்தில் இடம் மாறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தாள் அவர்களின் தாரகை.

குணா சொன்ன காரணம் உண்மையென்ற போதும், அவனாக முன்வந்து அழைத்ததும், ஏக்கமும் தயக்கமும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டது. குழந்தை அருகில் அவளுக்கென இடம் ஒதுக்கிவைத்திருந்ததைக் கண்டவளுக்குப் பேரானந்தம். குணாவும் மௌனமாக குழந்தையின் மறுபக்கத்தில் படுத்தான்.

“பாட்டி வருந்த கூடாதுன்னு தான் உன்ன இங்க கூப்பிட்டேன்!” அவள் மனதில் வீண் நம்பிக்கை கொடுக்க விரும்பாதவன், முன்னெச்சரிக்கை விடுக்க,

“குணா! அப்படியே இன்னொரு விஷயம் செய்வீங்களா!” என்றாள்.

‘அதானே! இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குவாளே!’ மனதில் ஏசியவன்,

“சொல்லு!” சிடுசிடுத்தான்.

“நீங்க உணவில் சேர்க்கும் உப்பும் காரமும், பாட்டிக்கு ஒத்துக்கல! அதனால பாட்டி இங்க இருக்குற வரைக்கும் சமைக்கட்டுமா!” வேண்டிக்கேட்டாள்.

“அதெல்லாம் வேண்டாம்! நான் பார்த்துக்கறேன்!” திட்டவட்டமாக மறுத்தான்.

இத்தனை தூரம் மாமன் இறங்கி வந்ததே போதுமென்று நினைத்தவளும் அதற்குமேல் அவனை தொந்தரவு செய்யவில்லை.

காலை உணவுக்காக அவன் செய்திருந்த வெங்காய சட்னியை சாப்பிட நீலாவதி சிரமப்படுவதைக் கண்கூடாகப் பார்த்தவனுக்கு, பல்லவியின் கவலை புரிந்தது. ஆனால் அவளுக்குச் சலுகைகள் கொடுக்கவும் மனமில்லை.

“பாட்டி! நீங்க ரொம்ப நல்லா சமைப்பீங்கன்னு பல்லவி சொல்லிருக்கா. இங்க இருக்குற வரைக்கும், நீங்களே தினமும் சமைக்கறீங்களா?” என்று கண்சிமிட்டினான்.

குணாவின் பாசத்தில் கரைந்தவள், உளமாற சம்மதம் தெரிவித்தாள்.

மாமன் முரடு பிடித்தாலும், அவனின் நற்குணத்தை மெச்சி நெகிழ்ந்தாள் பல்லவி.

நாட்களும் அதன் போக்ககில் அமைதியாக உருண்டோடியது.

“குணா! இன்னைக்கு பல்லவிக்கு பிறந்தநாள்!” அறிவித்தபடி, பால்பாயசம் பரிமாறினாள் நீலாவதி.

அமைதியாகத் தலையசைத்து பருகியவனிடம், பேத்தியின் பிறந்தநாள் விழா கொண்டாதுவதைப் பற்றி இலகுவாய் பேச்சுக் கொடுத்தாள்.

கல்லூரியில் முக்கியமான பணிகள் இருப்பதாக அவன் தட்டிக்கழிக்க, தன்னவனின் தயக்கத்தைப் புரிந்துகொண்டவள்,

“ஆமாம் பாட்டி! அவர் சொல்றது உண்மைதான்!” என்று, உரிமையாக அவன் பேண்ட் பாக்கட்டிலிருந்து வாலெட்டை(Wallet) எடுத்தாள். அதிலிருந்து கிரெடிட் கார்டு மட்டும் உருவியவள்,

“எனக்குப் பிடிச்ச பரிசுப்பொருளை நானே வாங்கிக்கிட்டமா குணா!” வாஞ்சையாகக் கேட்டாள்.

மிஞ்சிப்போனால் அழகு சாதனங்கள் வாங்குவாள் என்று யூகித்தவன்,

எஞ்சாய் யூர் டே பேபி!” கண்சிமிட்டி, அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டினான்.

அவனும் பாட்டிமுன் நடிக்கிறான் என்பதை மறந்த பெண்மனம் பல திட்டங்கள் தீட்டியது.

மாலையில் வீடு திரும்பியவன், மங்கலகரமான ஏற்பாடுகளையும், திருமண பட்டில் ஜொலிக்கும் தன்னவளையும் யோசனையாகப் பார்த்தான்.

“இன்னைக்கு பல்லவிக்கு தாலி பிரிச்சு கோர்த்திடலாம்னு ஏற்பாடுகள் செஞ்சிருக்கேன் குணா! நீயும் போய் குளிச்சிட்டு வா!” அன்புக்கட்டளை இட்டாள் நீலாவதி.

பிறந்தநாள் அன்று பல்லவியின் மனதை காயப்படுத்த விரும்பாதவன், நீலாவதி சொற்படி நடந்தான். தங்கச்சங்கிலியில் மாற்றி பொருத்தப்பட்ட திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் சூட்டி, மகிழ்ச்சியாக விருந்து உண்டவனை கவனித்த பெண்மனம், மாமனின் மனம் மாறியதாகவே நம்பியது.

அதே பூரிப்பில் அன்றிரவு அவள் அறைக்குள் நுழைய,

வரவு செலவு கணக்குக்குளைப் பார்த்தவன், அவள் தங்கச்சங்கிலியை தன் கிரெடிட் கார்டில் தான் வாங்கி இருக்கிறாள் என்று அறிந்து,

“யார கேட்டு இவ்வளவு பணம் செலவு பண்ண; ஒழுங்கு மரியாதையா, அந்த சேயின்ன கழட்டிகொடு!” வெஞ்சினத்துடன் கர்ஜித்தான்.

“என்ன பேசுறீங்க குணா! இதுல திருமாங்கல்யம் கோர்த்திருக்கேன்!” பேதை பதறினாள்.

அவர்கள் உறவே ஒரு ஊமை நாடகம் என்று விதண்டாவாதம் செய்பவனிடம் அவளால் பேசி ஜெயிக்க முடியவில்லை.

மறுநாள் மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தை மாற்றிவிட்டு தங்கச்சங்கிலியைத் திருப்பித் தருவதாகச் சமரசத்துக்கு வந்தாள்.

இப்படியொரு பிறந்தநாள் கொண்டாடுவதற்காகவா பிறவி எடுத்தோம் என்று குமுறியவளுக்கு அந்த இரவு சுமையாயக இருந்தது.

அடுத்தநாள் காலை வழக்கமான பொலிவுடன் நீலாவதி உணவு பரிமாற, குணாவின் கோபம் எல்லையைக் கடந்தது. வயதானவள் என்று அனுசரித்துப்போனால், பேத்தியுடன் சேர்ந்து கும்மாளம் அடிக்கிறாள் என்று கோபாவேசம் கொண்டவன்,

“இவ்வளவு நெய்யா பொங்கல கொட்டுவீங்க!”, எரிமலையாக வெடித்தான்.

“அது சுவையா இருக்குமேன்னு…!” நீலாவதி தயங்க,

“ஓ! இப்படி முந்திரியும் நெய்யுமா சாப்பிடுறது தான் உன் பாட்டி சாப்பிடும் பத்திய உணவா!” ஏளனமாக உரைத்தவன், “வந்தோமா! கிளம்பினோமான்னு இல்லாம;” முணுமுணுத்தான்.

அவன் குத்தல் பேச்சில் நீலாவதி கண்கலங்கி நின்றாள்.

“குணா! பாட்டிகிட்ட மன்னிப்பு கேளுங்க!” ஆணையிட்டாள் பல்லவி.

‘இவள் பேச்சை நான் கேட்பதா!’,  இறுமாப்புடன் நகர்ந்தவனை தடுத்த நீலாவதி,

“என்னால உங்களுக்குள்ள மனஸ்தாபம் வேண்டாம்! நான் இன்னைக்கே கிளம்புறேன்.” என்று தன் உடமைகளை எடுக்க அறைக்குள் நுழைந்தாள்.

வேலைக்குப் புறப்பட்டவனை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச்சென்று தாளிட்டாள் பல்லவி.

“இந்தத் தங்கச் சங்கிலிக்காகத் தானே என் பாட்டியை மரியாதை இல்லாம பேசினீங்க!” வெடித்தவள், சற்றும் யோசிக்காமல், அதைக் கழட்டி, அவன் கைகளில் திணித்தாள்.

“இது என் கழுத்தல இருந்தாலும், இல்லேன்னாலும், நீங்க தான் என் கணவர்; நான் தான்…” இடைநிறுத்தியவள், “நான் மட்டும்தான் உங்க மனைவின்னு அழிவில்லாத நம்ம மனசாட்சிக்குத் தெரியும். அழிந்து போகக்கூடிய அர்ப்ப பொருட்கள் அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை!” திடமாய் கூறி,

“என்ன அவமானப் படுத்தறதா நெனச்சுகிட்டு, உங்க தரத்தை நீங்களே குறைச்சுகாதீங்க குணா! தயவுசெய்து பாட்டிகிட்ட வந்து மன்னிப்பு கேளுங்க!” என்று, வெளியே வந்தாள்.

சிறிதும் யோசிக்காமல் தாலிச்சங்கிலியைக் கழற்றிக்கொடுக்கும் அளவிற்கு அவள் போனதில் திடுக்கிட்டுதான் போனான் அவன். அவ்வளவு இழிவாக பேசியும் தங்கள் உறவை விட்டுக்கொடுக்காமல் பேசிய அவளின் தன்னம்பிக்கையில் அவன் செருக்கு குலைந்ததும் உண்மைதான். தன் செயலை எண்ணி வருந்தவே செய்தான்.

வெட்கத்தில் குமுறியவன், “பாட்டி! ஏதோ தெரியாம பேசிட்டேன். எதையும் மனசுல வெச்சிக்காம இங்கேயே இருங்க!” மன்னிப்பு கேட்டு தலைகுனிந்தான்.

வாழ்க்கை கற்றுக்கொடுத்த அனுபவ பாடத்தில் உசந்தவள், “விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள்தான் குணா. நான் கிளம்பறேன்.”, என்று அவன் கரத்தைப் பற்றிக்கொண்டு,

“கணவன் மனைவிக்குள்ள மனஸ்தாபங்கள் வரது சகஜம்தான். ஆனால் அதை ஊதி பெருசாக்காம, மறப்போம்; மன்னிப்போம்னு விட்டுக்கொடுத்து வாழப் பழகுங்க!” என்றாள்.  

அத்துமீறி நடந்துகொண்டவனால் தலைகுனிந்து நிற்பதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

“பாட்டி! நீ கீழ போய் நில்லு! பத்து நிமிஷத்துல வரேன்!” என்றவள்,

தன்னவனின் முகத்தை நிமிர்த்தி, “குணா! நானும் பாட்டியோட கிளம்பறேன்!” அறிவித்தாள்.

“பல்லவி! அது…அந்தப் பணம்…முக்கியமான செலவுக்காக…!” அவன் வார்த்தைகளைக் கோர்க்க,

“எதுவும் சொல்லவேண்டாம் குணா! நான் கேட்ட அவகாசத்தைக் கொடுத்திருந்தா, தங்கச்சங்கிலியைத் திருப்பிக் கொடுத்திருப்பேன்.

உங்கமேல எனக்கு வருத்தம்தான்; அதுக்காக உங்க உறவே வேண்டாம்னு ஒரேடியா போக நினைக்கல. பாட்டியை இந்த மனநிலையில் தனியாவிட சங்கடமா இருக்கு.“, பெருமூச்சுவிட்டவள்,

“உங்களுக்கும் என்மேல கோபம் இல்லேன்னா, என்மேல இன்னும் நம்பிக்கை இருந்தா மதுமிதாவை என்கிட்ட விட்டுட்டு போங்க!” என்று அவன் கரத்தில் இதழ்கள் பதித்து நகர்ந்தாள்.

தனிமைதான் தகராறுகளை தீர்த்திடுமா – தீர்த்து

தலைவியின் தாம்பத்ய  தாகத்தை தணித்திடுமா?

பிரிவுகளே ப்ரியமானவர்களுக்கு பாலமாகுமா – பாலமாகி

பந்தத்தில் பாசத்தை பலப்படுத்துமா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…