பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 22
ஊரறிய மணந்துகொண்டவர்கள் ஊமை நாடகமாடி நாட்களைக் கழித்தனர். வேலை, மேற்படிப்பு என கவனம் செலுத்தியவனிடம் பல்லவியின் சீண்டல்களும், செல்லமான மிரட்டல்களும் செல்லாக்காசானது.
தன்மேல் பிடிமானம் வருமாறு வேறேதாவது செய்ய வேண்டுமென்று சிந்தித்தவளுக்குச் சுதாவின் நினைவு வந்தது.
பொய்காரணங்கள் சொல்லி தட்டிக்கழித்த அவளிடம், தங்கள் திருமணத்தைப் பற்றி அறிவிப்பதோடு, குணாவின் சந்தேகங்களையும் தீர்க்க நினைத்தவள், சுதாவை நேரில் பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினாள்.
அதைக்கேட்ட சாவித்ரியின் முகம் மலர, மனோகரின் முகமோ சுருங்கியது.
எப்போதும் போல, குணா மறுக்கவும், அவள் எதிர்த்துப் பேசவும், மனைவி இவர்கள் உள்குத்துத் தெரியாமல் வெகுளியாகச் சமரசம் செய்வதுமென வாதம் சூடுப்பிடித்தது.
“குணா சொல்றது சரிதான் மா! உங்க கல்யாணத்திற்கு அழைக்க வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ எதுக்கு அவங்களோட உறவாட நினைக்குற?” குறுக்கிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் மனோகர்.
“அவ சரியான சுயநலவாதி பா! தன் மனசுக்கு என்ன தோணுதோ, அதை அப்படியே அந்த நிமிஷமே செஞ்சிடணும்;” பெண்மானை வீழ்த்தும் சுவாரசியத்தில்,
‘சுயநலம் பற்றி யார் பேசுவது!’ என்று தன்னை ஏளனமாகப் பார்க்கும் தந்தையை கவனிக்க மறந்தான் குணா.
அத்தனை நாட்களாக பட்டும்படாமல் பழகின மாமனார் உரிமையாக கேள்வி எழுப்பியதும், அவரிடம் மனம்திறந்து பேச முன்வந்தாள் பல்லவி.
“மாமா! உங்க கேள்வி நியாயமானது!உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்றேன்….” அவள் மெல்லத் தொடங்கியதும், குணாவின் முகம் வெளிறிப்போனது.
“பல்லவி….” கசந்த குரலில் அழைத்தவனை, அமைதியாக இருக்கும்படி கண்ணசைத்தாள்.
சுதா வழக்கு தொடர தன்னிடம் வந்ததைப் பற்றி விவரித்தவள்,
“குணா ரொம்ப நல்லவர் மாமா! அவர மாதிரி மதுமிதாவ வேற யாராலையும் பார்த்துக்க முடியாது!” ஆழ்மனதிலிருந்து உரைத்து,
தாழ்ந்த குரலில், “அவருடைய இந்தக் குணம்தான் எனக்கு அவர்மேல காதல் வர காரணமானது!” என்றாள்.
பல்லவியின் மென்மையான பேச்சில் மனோகர் மனம் கரையவே செய்தது.
“சரி மா! உன்ன நம்பறேன்!” மருமகளின் தலையில் அன்பாகத் தட்டிக்கொடுத்தவர், அவர்கள் குணாவின் பிடிவாதத்தால் மட்டும்தான் பெற்ற மகளை இழந்தார்கள் என்று நினைவூட்டி, இருவரையும் பொறுமையாகப் பேசிவிட்டு வரும்படி அறிவுறுத்தினார்.
தன்னவன் வீண்பழிக்கு ஆளாகிறானே என்று அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் பல்லவி.
மொத்த குடும்பத்தையும் தனக்கு எதிராகத் திருப்புகிறாளே என்று முகம் சுளித்தவன், “எனக்கும் என் பொண்ணுக்கும் அவங்க உறவே வேண்டாம். எங்களவிட அவங்கதான் முக்கியம்னு உனக்குத் தோணினா, நீ தாரளமா அவங்கள சந்திக்கலாம்!” என இரைந்தான்.
உரிமைக் கொண்டாடுவதைப் போல நடிக்கும் அவன் வழியிலேயே பேசி மடக்கினாள் பல்லவி.
“நீங்களும் மதுமிதாவும் தான் எனக்கு முக்கியம் குணா! ஆனா நாளைக்கு நீங்க அங்க வரலேன்னா, நம்ம டெல்லி போகவேண்டியதா இருக்குமே!” அப்பாவியாகக் கண்சிமிட்ட, ‘டெல்லி’ என்ற வார்த்தை கேட்டு துணுக்குற்றான்.
பெரியவர்கள் அவள் சொல்வது புரியாமல் குழம்பி நிற்க,
“சுதாவை பகைச்சுகிட்டா, அப்புறம் அவ எங்கமேல இருக்குற கோபத்துல சுப்ரீம் கோர்ட்டுல வழக்கு போடுவாளோன்னு பயமா இருக்கு அத்தை!” என சாவித்ரியின் தோளில் சாய்ந்தாள்.
சாவித்ரியும் ஆமாம் என்று தலையசைக்க, பல்லவியின் மறைமுக மிரட்டலை உணர்ந்தவன் அமைதியானான்.
காதலை தாண்டி மருமகள், மகனின் மர்மங்கள் அறிந்திருப்பதை உணர்ந்தார் மனோகர். அதே சமயத்தில், மகனின் நன்னடத்தைப் பற்றி அவள் விவரித்ததில் அவன் மீது கொண்ட நம்பிக்கையும் புரிந்துகொண்டார்.
இனியாவது மகன் நல்வழியில் நடக்கட்டும் என எண்ணி நகர்ந்தார். பிரிந்த சொந்தங்கள் இணையப்போகும் மிதப்பில் சாவித்ரியும் கணவனை பின்தொடர்ந்தாள்.
மாமன் வீட்டின் முன் காரை நிறுத்தியதும், பல்லவி கம்பீரமாக இறங்கி நடந்தாள். குட்டிச்சாத்தானோடு சேர்ந்து என்ன சூழ்ச்சி செய்யப்போகிறாளோ என்று சிந்தித்தபடியே உடன்நடந்தான் குணா.
“பல்லவி! அத்தை ஒண்ணும் என்னோட அம்மா மாதிரி மிருதுவானவங்க கிடையாது. அவங்க பொண்ணு இடத்துக்கு நீ வந்திருக்கன்னு குத்திக்காட்டி உன் மனசு கஷ்டப்படுறா மாதிரி பேசுவாங்க!” அவர்கள் சகவாசம் நல்லதில்லை என்று எச்சரித்தான்.
அவளுக்குச் சாதகமாக பேசினால், திரும்பிவிடுவாளோ என்ற நப்பாசை அவனுக்கு.
“என் மனசு கஷ்டப்படும்னு கூட யோசிப்பீங்களா குணா!” அவள் மென்மையாகக் கேட்கவும், திட்டம் வேலை செய்யும் மிதப்பில் அவன் உதடுகள் வளைந்தன.
“உங்க அக்கறைக்கு நன்றி குணா!” ஏளனமாக உரைத்தவள்,
“அவங்க மட்டும் அப்படிப் பேசட்டுமே; நானும் பதிலுக்கு அவங்ககிட்ட சொல்லுவேன். உங்க பொண்ணுதான் இப்படிப்பட்ட நல்ல புருஷனும், தேவதை மாதிரி மகளும் வேண்டாம்னு சொல்லிட்டு ஓடி போயிட்டான்னு!” அலட்டலே இல்லாமல் சொல்லி வேகமாக முன்னே நடந்தாள்.
யமுனாவை அவதூறாகப் பேசியவளை, “பல்லவி!” என அரற்றியவன், அவள் மென்கரங்களை அழுந்தப்பிடித்து தடுத்தான்.
“பல்லவி!” என அரற்றியவன், அவள் மென்கரங்களை அழுந்தப்பிடித்து தடுத்தான்.
அதற்கெல்லாம் அசரவில்லை அவள்.
“நானும் உங்கமேல இருக்குற அக்கறையில் தான் சொல்றேன். என் குணா நல்லவர்; நான் ஈன்றெடுக்காத என் மதுமிதா அதற்கும் ஒருபடி மேல!”, உரிமைகொண்டாட, அவன் பிடி வலுவிழந்தது.
பல்லவியை எதிர்பார்த்து துள்ளலாகக் கதவு திறந்தவள், குணாவை கண்டதும் மிரண்டாள்.
முன்தினம் சுதாவிடம் பேசிய பல்லவி, வழக்கு சம்பந்தமாக எல்லாம் தயார் நிலையில் உள்ளதென்றும், அவள் விரும்பியபடியே வழக்கு நகர்வதாகவும் நம்பிக்கை வார்த்தைகள் கூறியிருந்தாள். அது சம்பந்தமாகக் குடும்பத்தினரை ஒரே இடத்தில் சந்தித்தால் சௌகரியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தாள். ஆனால் அவள் குணாவை நேரில் அழைத்து வந்ததின் நோக்கம் புரியாமல் குழம்பி நின்றாள் சுதா.
குணாவை கண்ட அத்தை மாமன் முகத்திலும் அதே பதற்றம். பல்லவி சற்றுமுன் கறாராக பேசிய விதத்தில், குணாவும் அமைதிகாத்தான்.
“இவன எதுக்குமா இங்க அழைச்சிட்டு வந்திருக்க! எதுவா இருந்தாலும் கோர்ட்ல பேசிக்கலாம்!” மாணிக்கம் எத்தனிக்க,
“அட! அப்பா!” சிரித்த முகத்துடன் மாணிக்கத்தை அழைத்தவள், “வழக்கு போடாமலேயே உங்களுக்குச் சாதகமா தீர்ப்பு முடிவாயிடுத்து!” புதிர்போட்டாள் பல்லவி.
“அப்பாவா! யாரு யாருக்கு அப்பா!” மீனாட்சி கொந்தளிக்க, பல்லவியின் பார்வை தன்னவனை தழுவி மீண்டது.
பெண்மான் உடைந்துவிடுவாள் என்று அவன் சிந்திக்க, அவளோ,
“உங்க மருமகன் எனக்கு கணவர்னா, உங்கள நான் அம்மா அப்பான்னு கூப்பிடறது தானே முறை!” என்றாள்.
‘அதானே! இவளுக்கா பேசக் கற்றுக்கொடுக்க வேண்டும்!’ மனதில் சலித்தவன், எதிரிகள் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொள்ளட்டும் என்று அமைதியாக வேடிக்கைப் பார்த்தான்.
சுதா அவள் பங்குக்கு பல்லவியை கேள்விகளால் தாக்கினாள்.
புத்தர் வம்சாவளியில் பிறந்தவள்போல, பல்லவி, சுதாவின் தோளினை அன்பாக அரவணைத்து,
“நீதானே சுதா சொன்ன! குணா மறுமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் மதுமிதாவை அவரே வளர்க்கலாம்னு!” என்று, கொண்டுவந்த கோப்பிலிருந்து சுதா எழுதிக்கொடுத்த புகார் கடிதத்தை அனைவருக்கும் கேட்குமாறு படித்தாள்.
“நீங்க சொல்லித்தானே அப்படி எழுதினேன் பல்லவி!”, குமுறினாள் சுதா.
“ஆமாம்! நான் அப்படித்தான் சொல்லுவேன்!” ஒப்புக்கொண்டவள்,
தனக்கும் அங்கு நடப்பதற்கும் சம்பந்தமே இல்லாதது போல பேண்ட் பாக்கட்டில் கட்டைவிரல் நுழைத்து மிடுக்குடன் நிற்கும் தன்னவன் அருகில் நடந்தாள். அவன் கைவளையத்துக்குள் தன் கையை பிண்ணிக்கொண்டவள்,
“என் காதலன் மீது வழக்குதொடர நான் என்ன முட்டாளா?” கேட்டு, தன்னவனை விழி உயர்த்தி பார்த்தாள்.
‘அற்புதமாக நடிக்கிறாள்!’ என்று அவனும் பதிலுக்கு வெட்டும் பார்வையில் நோக்கினான்.
மகளை பகடைக்காய் ஆக்கி பல்லவி செய்த சூழ்ச்சியை அறிந்து கோபாவேசம் கொண்டார் மாணிக்கம்.
“ஊர் உலகத்துல இவள விட்டா வேற வக்கீலே இல்லையா? வேறவொரு நல்ல வக்கீலா பார்த்து, இவ மேலையும் சேர்த்து மோசடி கேஸ் போடலாம் மா சுதா.” என்று சவால்விட்டார்.
அவர்கள் அன்யோனியத்தை சகித்துக்கொள்ள முடியாத சுதா, “ஆமாம் பா! ரெண்டு பேரும் ஜெயிலில் குடும்பம் நடத்தட்டும்!” விரக்தியில் சபித்தாள்.
அரிதாகக் கிடைக்கும் தன்னவனின் அருகாமையில் மூழ்கியிருந்த பல்லவிக்கு அவர்கள் பேசியது எதுவும் காதில் விழவில்லை.
“இந்த வீணாப்போனவன, நாலு வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சிருக்க வேண்டியதுதானே! என் பொண்ணுக்கு நாங்க பார்த்த மாப்பிள்ளையோட கல்யாணம் நடந்திருக்கும்; அவளும் உயிரோட இருந்திருப்பா!” மீனாட்சி தன் பங்குக்குத் தூற்றினாள்.
தன்னவனை குறைசொன்னதும், சுருக்கென்று குத்தியதில், சுயத்திற்கு வந்தாள் பல்லவி.
“நீங்களும் அந்த வீணாப்போன ஜாதகம், ஜோசியம் எல்லா நம்பாம, அன்பு அனைத்தையும் வெல்லும்னு புரிஞ்சுகிட்டு இவர் சொல்படி நடந்திருந்தா, உங்க பொண்ணு இன்னைக்கு உயிரோட இருந்திருப்பாளோ என்னமோ!” பதிலடி கொடுத்தாள்.
உணர்ச்சிவசப்பட்டு யமுனா உயிரோடு இருப்பதைச் சொல்லிவிடப் போகிறாள் என்று அஞ்சியவன், “பல்லவி! இவங்ககிட்ட ஏன் வீண்பேச்சு! வா கிளம்பலாம்!” நாசுக்காக அழைத்தான்.
அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் திணறுகிறான் என்று கர்வம் கொண்ட சுதா, “நீ கல்யாணம் செஞ்சுகிட்டதுனால நான் அமைதியாகிட்டேன் நினைக்காத மாமா! என் அக்கா குழந்தையை உன்கிட்டேந்து எப்படி வாங்குறதுன்னு எனக்குத் தெரியும்!” எச்சரித்தாள்.
மறுபடியும் தத்தெடுக்கும் பேச்சை எடுக்கிறாளே என்று பதறிய மீனாட்சி,
“அவன் செய்த துரோகத்துக்குத் தான் மனவளர்ச்சி இல்லாத குழந்தையை பெத்து கொடுத்திட்டு போயிருக்கா மா நம்ம யமுனா; அவனும், அவன உத்தமன்னு ஜால்ரா அடிக்குற இவளும் சேர்ந்து அந்தப் பைத்தியத்தை வளர்க்கட்டும்! நீ தலையிடாதே!” மதுமிதாவின் உடல்நலத்தைக் குறைகூறினாள்.
“என் அம்மு எனக்காகப் பெற்றடுத்த பொக்கிஷம் என் மதுமிதா!” குணாவின் நரம்புகள் புடைக்க, அதை உணர்ந்த பல்லவி, அவன் உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து தடுத்தாள்.
சுதாவை ஏறிட்டவள், “மகள் பெற்றெடுத்த குழந்தையை பாரமா நினைக்குற உங்க அம்மா பக்கத்துல வளருறது மதுமிதாவுக்கு நல்லதா; இல்லை உலகமே எதிர்த்தாலும், என் மனைவி எனக்காக விட்டுட்டுபோன பொக்கிஷம்னு போராடுற இவர்கிட்ட வளருறது நல்லதா! நிதானமா சிந்திச்சு பாரு! அப்போ என் முடிவு சரின்னு நீயே புரிஞ்சிப்ப!” நிமிர்வாய் பேசி, தன்னவனிடம் புறப்படலாம் என்று கண்ணசைத்தாள்.
பல்லவியின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்து நிற்பவளை கர்வப் புன்னகையுடன் நோக்கினான் குணா.
“தேவையில்லாம என் வாழ்கையில தலையிட்டு உன் ஆசைநாயகன் கிஷோரோட குடும்பம் நடத்த மறந்துடாத. அப்புறம் அவன் உன்னை விவாகரத்து செஞ்சிடப் போறான்! சீண்டியவன்,
பல்லவியின் தோளினை சுற்றிவளைத்து, “உனக்குச் சட்டரீதியான உதவி ஏதாவது தேவைப்பட்டால், தயங்காமல் என் மனைவிகிட்ட கேளு. உன் மேல இருக்குற பாசத்துல, ஃபீஸ் கூட வாங்கமாட்டா!” என்று,
“என்ன திருமதி.பல்லவி குணசேகரன் பி.ஏ.பி.எல்!” நான் சொல்றது சரிதானே!” நக்கலாகக் கண்சிமிட்டினான்.
மென்மையாக அரவணைத்தவனின் கரங்கள் கொடுத்த நம்பிக்கையை, அந்த எள்ளல் பார்வை, ஒரு நொடியில் சுக்குநூறாக உடைத்தது.
“இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலையா குணா!” காரில் ஏறி அமர்ந்ததும், கசந்த குரலில் கேட்டாள்.
“நம்பிக்கையா!” உரக்க சிரித்தவன், “அவங்க முன்னாடி நீ எனக்கு மனைவியா நடிச்ச! பதிலுக்கு நானும் உனக்குப் புருஷனா நடிச்சேன்! அவ்வளவுதான்!”, தெளிவுபடுத்தினான்.
இத்தனை அவநம்பிக்கை படைத்தவனிடம் வாதம் செய்வதும் பயனற்றது என்று வலிகளை மறைத்தவள், “அது சரி! புருஷனா நடிக்க உங்களுக்குச் சொல்லித்தரணுமா என்ன; அதான் ஏற்கனவே நிறைய முன்னனுபவம் இருக்கே!” குத்திக்காட்டி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
‘திமிர் பிடித்தவள்!’ மனதில் ஏசியவன், கவனத்தைச் சாலையில் செலுத்தினான்.
எதிர்பார்ப்புடன் காத்திருந்த சாவித்ரி மனோகரிடம், பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்று பல்லவியே மழுப்பலாக பேச, பெண்மானின் நடிப்பை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தான் குணா. மனமுடைந்த சாவித்ரியிடம், அவர்களை விட்டுப்பிடிக்கலாம் என்று மென்மையாகப் பேசி தேற்றினாள். பல்லவியின் பக்குவத்தையும், குணாவின் அலட்சியத்தையும் கவனித்தவருக்கு, மருமகள் மேல் நம்பிக்கை கூடியது.
அன்றிரவு உறங்க வந்தவர்கள் வழக்கம்போல சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். கட்டாயத்தால் பல்லவியிடம் உறங்கின மதுமிதாவுக்கும் அதுவே பழகிப்போனது. பல்லவியின் இதமான அரவணைப்பில் சொகுசாகத் துயில்கொண்டாள் தாரகை.
சோபாவில் உடம்பை வளைத்து உறங்குவதற்குப் பாடுபட்டவனுக்கு, படுத்திருந்த இடம் கொடுத்த அசௌகரியத்தைத் தாண்டி, அவன் மனதில் உதித்த குழப்பங்கள், உறங்கவிடாமல் பாடாய்படுத்தியது.
“உண்மையை சொல்லு பல்லவி! மதுமிதா என்னோடதான் இருக்கணும்னு சொல்ற; ஆனா அவள என்கிட்டேந்து பிரிக்க நினைக்கறவங்களோட உறவாடுற; உன் பேச்சுக்கு உடன்படலேன்னா, உடனே யமுனாவ காட்டி பயமுறுத்துற; உன் நோக்கம்தான் என்ன?” விரக்தியில் வினவினான்.
‘இப்படி மூச்சுவிடாமல் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, நம்பி என்னிடம் உண்மையை சொல்லுங்களேன் குணா’ என்ற ஏக்கத்தைப் புறம்தள்ளியவள்,
“அவசியம் தெரிஞ்சுக்கணுமா குணா!” வினவி, பத்தடி தூரத்தில் சயனித்திருக்கும் அவனை இமைக்காமல் பார்த்தாள்.
மனம்திறந்து பேசுவாளோ என்று அவனும் அவளை வெறித்துப் பார்த்தான்.
“அப்போ! இங்க வாங்க!” மெத்தையைத் தட்டிக்காட்டி வாஞ்சையாக கண்சிமிட்டினாள்.
வம்பு செய்யும் அவள் குறுகுறு விழிகளுக்கு அனல்பார்வையில் பதில்சொல்லி புரண்டுபடுத்தான்.
“உரக்க பேசினா, குழந்தை முழிச்சிடுவாளேன்னு நல்லெண்ணத்துல கூப்பிட்டேன்! நான் வேணும்னா அங்க வரட்டுமா மா…மா…மாமா!” மேலும் சீண்டியவளை அவன் பொருட்படுத்தவில்லை.
மாமனை கடுப்பேத்திய கிளர்ச்சியில் குளிர்ந்தவள் மனஸ்தாபங்களை மறந்தாள்.
‘உங்கள் தவத்தை விரைவில் கலைக்கிறேன் கணித பேராசியரே!’ மனதில் சபதம் செய்துகொண்டு தர்மபத்தினியும் நித்திரை கொண்டாள்.
மறுநாள் காலை வெளியே புறப்பட தயாரனவனை வழிமறித்தவள், “புருஷனா நடிக்கறவங்களோட குழந்தையை எல்லாம் என்னாலையும் பார்த்துக்கு முடியாது! எனக்கும் அலுவலகத்துல முக்கியமான வேலையிருக்கு!” படபடவென்று பேசி, மதுமிதாவை அவன் கைகளில் திணித்தாள்.
மதுமிதாவை தன் கண்முன்னே திட்டிவிட்டு, மறைவில் அவளைக் கொஞ்சிக் குலாவுவதைப் பலமுறை கண்டவனுக்கு, பல்லவியின் செயலில் கோபம் வரவில்லை. மாறாகக் கடுகடுக்கும் அவள் முகத்தை ரசிக்கவே செய்தான்.
“அப்போ மதுமிதாவுக்காகத் தான் என்னைக் கல்யாணம் செய்துகிட்டேன்னு சொன்னது எல்லாம் வெளிவேஷமா?” கிண்டலாகக் கேட்டு, குழந்தையைக் கண்பார்க்க தூக்கியவன்,
“வக்கீல் அம்மாவுக்கு, நேற்று அவங்க எதிர்பார்த்த ஆதாரம் ஒண்ணும் கிடைக்கலன்னு கடுப்புடா மதுகுட்டி. நீ பாட்டியோட விளையாடு. நம்ம ரெண்டு பேரும் இன்னும் ஒரே வாரத்துல அமெரிக்கா போயிடலாம், சரியா!” என்றான்.
மதுமிதாவும் எல்லாம் புரிந்ததுபோல, “மா…மா…மாமா!” என்று அவன் கழுத்தை சுற்றி செல்லம்கொஞ்சினாள். குணாவும் குழந்தையை முத்தமழையில் நனைத்து, இமைக்காமல் தன்னையே முறைத்துக் கொண்டிருப்பவளை வெறுப்பேற்றினான்.
பணிமேஜை அருகே வேகநடையிட்டவள், அங்கிருந்து ஒரு தாளினை எடுத்துவந்து, அவனிடம் நீட்டினாள்.
“உங்களுக்குச் சாதகமா வேலை செஞ்சேன்னு, இந்நேரத்துக்கு சுதா என் சீனியர்கிட்ட போட்டு கொடுத்திருப்பா. அவங்களா என்னை வேலையைவிட்டு துரத்துரத்துக்கு முன்னாடி, நானே ராஜினாமா செய்தா கொஞ்ச நஞ்ச மரியாதையாவது மிஞ்சும். அதுக்காகத்தான் கிளம்புறேன் போதுமா!” எரிந்துவிழுந்தவள்,
“இப்படி என்மேல நித்தியம் சந்தேகப்படாம, விசா வாங்குற வழியப்பாருங்க!” ஆணை பிறப்பித்தாள்.
“உளவு பார்க்க வரவங்களுக்கு எல்லாம் எந்த பிரிவுல விசா எடுக்கணும்னு உங்க சட்டம் சொல்லுது திருமதி.பல்லவி குணசேகரன்!” இளக்காரமாகக் கேட்டு நகர்ந்தான்.
பதிலேதும் சொல்லாமல், அவளும் நகர, விட்டது தொல்லை என்று பெருமூச்சுவிட்டான் குணா. ஆனால் போன வேகத்தில் திரும்பி வந்தவள், அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு,
“உளவு பார்க்க வந்தவள் உம்மா கொடுத்த குற்றத்திற்காகப் பிணைகைதியா அழைச்சிட்டு போக, சிறப்பு பிரிவுல விசா எடுக்கலாம் மிஸ்டர்.குணா.” ஆளுமையுடன் உரைத்தாள்.
பல்லவியின் செயலில் குதூகலம் அடைந்த குழந்தை, “மா…மா…மாமா!” என்று சிரிப்பு முத்துக்களைச் சிந்தினாள். குழந்தையின் சிரிப்பில் தோற்றவள்,
“அத்தைகிட்ட விட்டுட்டுப் போங்க! நான் மதியத்துக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்!” தாழ்ந்த குரலில் சொல்லி, குழந்தையின் நெற்றியில் முட்டினாள்.
‘நவரச நாயகி!’ கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே ஏசியவன், சட்டை காலரில் அவள் குத்திய அடையாள முத்திரைகளை கவனிக்காமல் வெளியே வந்தான்.
குணாவின் தும்பை பூ நிற சட்டை காலரில், அடையாள முத்திரைகளை கவனித்த கமலாம்மா, பெரும் சிரமத்துடன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “தம்பி! வேற சட்டை மாத்திட்டு வா பா!” என்றாள்.
“ஏன்! இதுக்கு என்ன?” மேலும் கீழுமாக ஆராய்ந்தவனை, கண்ணாடி முன் நிறுத்தி சட்டை காலரை இழுத்துக்காட்டினாள் கமலாம்மா.
அடர்சிவப்பு நிற உதட்டுச் சாயத்தைக் கண்டவனுக்கு, நாயகியின் ஆட்டம் புரிந்தது.
சினம்கொண்டவன் வாய்திறந்து விளக்கும் முன், கமலாம்மாவுடன் இணைந்து, சாவித்ரியும், மனோகரும் புன்முறுவலிட, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அசடுவழிவதை தவிர, அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
திட்டமிட்டு தன்னவனை சீண்டியவளோ, சாமர்த்தியமாக அறையின் கதவை உள்புறமாகத் தாளிட்டுக்கொண்டு, வேண்டுமென்றே தாமதமாக குளித்துமுடித்து வந்தாள். தன்னவனை ஹாலில் கண்டதும் வெற்றிப் புன்னகையில் அவள் முகம் மலர்ந்தது.
“நான் ரெடி குணா! கிளம்பலாமா?” புடவையின் மடிப்பை சரிபார்த்தபடி அனைவரின் முன்னிலையிலும் இலகுவாய் பேச்சுக்கொடுத்தாள்.
“வெளிய போறீங்களா!” சாவித்ரி வினவ,
“என்ன குணா! அத்தைகிட்ட சொல்லலியா!” என்றவள்,
“ஆமாம் அத்தை! அலுவலகத்துல என் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு, அப்படியே எனக்கு திருமதி.பல்லவி குணசேகரன்னு புதுசா விசா எடுக்கற வேலையா போயிட்டு வரோம்!” உரிமையோடு பேசி, தன்னவனை பார்வையால் ஊடுருவினாள்.
“அப்படியா! ரொம்ப சந்தோஷம் மா!” நெகிழ்ந்தவள், மருமகளின் கூந்தலில் மல்லிச்சரம் சூட்டி அரவணைக்க,
அறைக்குள் வேகநடையிட்டவன், “பல்லவி!” பெருங்குரலில் அரற்றினான்.
ஒருமணி நேரமாக கோபத்தை அடக்கி அமைதியாக காத்திருந்தவனின் மூளைமட்டும் மின்னல் வேகத்தில் திட்டங்கள் தீட்டியது.
தன் தேவைக்காக எதையும் செய்ய துணிந்தவளை இந்தியாவிலேயே விட்டுவிட்டு போனால், யமுனாவின் வாழ்க்கைக்கு ஆபத்தென்று உணர்ந்தவன், அவளைத் தன்னருகிலே வைத்துக்கொள்ள தீர்மானித்தான்.
குறும்புகளைக் கண்டு மிரண்ட சிங்கத்திடம், பணிந்துபோனால் தலைக்குமேல் ஏறுவான் என்று அறிந்தவள்,
“இனி என்கிட்ட சமூக இடைவெளி கடைப்பிடிக்க நெனச்சீங்கன்னா, இப்படித்தான் நீங்க எதிர்ப்பார்க்காத இடத்துல எல்லாம் அடையாள முத்திரைகள் பூக்கும்!” அதிரடியாக எச்சரித்தாள்.
அவளை வெட்டும் பார்வையில் நோக்கியவன், தன்னருகில் அமரும்படி கண்ணசைத்து, மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.
‘என்னடா இது அதிசயம்!’ யோசித்தவள், அடக்கவொடுக்கமாக அவனருகில் அமர்ந்தாள்.
“இதெல்லாம் விசா எடுக்க வேண்டிய விண்ணப்பங்கள். உனக்கு இமெயில் செய்யறேன். ஊருக்கு வரணும்னு விருப்பமிருந்தா, அத்தனையும் பூர்த்தி செய்துட்டு, தேவையான பணத்துக்கும் ஏற்பாடுசெய். கையெழுத்து போட்டுத்தரேன்.“, என்றவன்,
அவள் இதழருகே ஒற்றை விரலை சுழற்றி, “உன் வாதத்திறமையை எம்பசில(Embassy) காட்டி திருமதி.பல்லவி குணசேகரன்னு விசா வாங்கிக்க!” சவால்விட்டு எழுந்தான்.
“என்ன இங்கேயே விட்டுட்டுப் போனா உங்களுக்குப் பிரச்சனைன்னு பயந்துட்டீங்களா மிஸ்டர்.குணா!” உரக்க கேட்டு வம்பிழுத்தாள்.
‘மனவோட்டத்தைக் கூட இவளிடம் மறைக்க முடியவில்லையே!’ தடுமாறியவன், “பயமா! அது உனக்கிருந்தா, என்கிட்ட தனியா மாட்டிக்கணுமான்னு நீ யோசி!” சவால்விட்டு நகர்ந்தான்.
தந்திரங்கள் செய்து தன்வசப்படுத்துகிறாள் அவள்;
தடைகள் விதித்து தட்டிக்கழுக்கிறான் அவன்;
தாயுமானவனுக்கு தொந்தரவுகள் தரும் தலைவிக்கும்,
தாரம் என வந்தவளை தண்டிக்க நினைக்கும் தலைவனுக்கும்,
தனிக்குடித்தனம் தான் தீர்வா இல்லை தொல்லையா – தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…