பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 21.2

பாலும் பழமும் அருந்த வந்த இடத்திலும், நீலாவதியை தவிர யார் முகத்திலும் உற்சாகமில்லை.

இருதுருவங்களாக மாமனும் மச்சானும் முரண்டு பிடிக்க, அண்ணன் அருகில் அமர்ந்தவள், தனக்காகத் தழைந்துப் போகும்படி கெஞ்சினாள்.

“பல்லவிக்கு விசா எப்போ எடுக்கப்போறீங்க!” துவேசத்துடன் தாலி கட்டியவனின் பொறுப்புணர்ச்சியை மறைமுகமாக சோதித்தான் சரண்.

“உடனே எல்லாம் விசா எடுக்கமுடியாது! அதுக்கான நேரம், பணம் இரண்டும் என்கிட்ட இல்ல!” தயக்கமின்றி மறுத்தவன், பல்லவியை வெட்டும் பார்வையில் ஏறிட்டான்.

அகம்பாவியை அடம்பிடித்து மணந்த தங்கை அமெரிக்காவில் தன்னருகில் இருந்தாலாவது ஆறுதலாக இருக்குமென்று எண்ணிய பாசமலர், தானே இருவருக்கும் கிரீன் கார்ட் எடுக்கிறேன் என்று கூற,

“உங்களுடைய தங்கைக்குத் தாராளமா கிரீன் கார்ட் வாங்கித்தாங்க! என் வாழ்க்கைக்குத் தேவையானதை நானே பார்த்துக்கறேன்!” மறுத்துப்பேசி புறப்பட்டான் குணா.   

“அண்ணா! விசாவோ; கிரீன் கார்டோ; எதுவாயிருந்தாலும், எத்தனை நாளானாலும் என் கணவரே எனக்கு வாங்கித்தரட்டும்!” என்றவள்,

புகுந்த வீட்டிற்கு எடுத்துச்செல்ல, வைத்திருந்த இரண்டு பெட்டிகளை தன்னவனுக்கு கண்ணால் சுட்டிக்காட்டி,

“எடுத்துட்டு வாங்க குணா! நம்ம வீட்டுக்குக் கிளம்பலாம்!” அதிகாரமாகச் சொல்லி வாசலுக்கு நகர்ந்தாள்.

வீட்டிற்கு வந்த புதுமண தம்பதிகளை, சாவித்ரியும் கமலாம்மாவும் முகம்கொள்ளா புன்னகையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். புதுப்பெண்ணும் அதே புத்துணர்சியுடன் உள்ளே நுழைந்தாள்.

இரண்டு மணி நேரமாக குணாவை காணாத மதுமிதா, தாத்தாவிடமிருந்து அவனிடம் தாவ, இடைபுகுந்து குழந்தையைத் தூக்கினாள் பல்லவி.

தன்னைச் சுட்டெரிக்கும் மணாளனை ஏறிட்டவள்,

“இனி உங்க சுமையை நான் சுமக்கறேன்; என் சுமையை நீங்க சுமந்துட்டு வாங்க!” என வாசற்படியில் இறக்கிவைத்த பெட்டிகளை மீண்டும் கண்காட்டினாள்.

பல்லவியின் வேடிக்கைப் பேச்சை கேட்டுப் பெண்கள் புன்னகை சிந்த, ஆண்கள் நெற்றியில் வழக்கம்போல குழப்பத்தின் கோடுகள்.

சாவித்ரி சமைத்துவைத்த விருந்து உணவை அருந்திய வீட்டின் உறுப்பினர்கள் ஆளுக்கொரு திசையாக நகர, பல்லவியின் கண்கள் மட்டும் தன்னவனையே பின்தொடர்ந்தது. அவன் அறைக்குள் புகுந்ததும், அவளும் இயல்பாக உள்ளே நுழைந்து தன் பெட்டிகளைத் திறந்தாள்.

பெண்மானிடம் தனியாகச் சிக்கிக்கொள்ள விரும்பாத சிங்கம், “எனக்கு பயணச்சோர்வு(JetLag)! கொஞ்சநேரம் தூங்கணும்! இப்போ இங்கே கடையைப் பரப்பாதே!” உறுமினான்.

அவன் கண்கள் சோர்ந்திருப்பதைக் கவனிக்கவே செய்தாள் பெண். இருந்தாலும் அவனை வம்பிழுக்காமலும் இருக்க முடியவில்லை.

பெட்டிகளை மூடிவிட்டு அவனருகில் வந்தவள், “நல்லா தூங்குங்க மாமா! அப்புறம் விடியவிடிய கண்முழுச்சி இருக்க வேண்டியிருக்கும்!” ரகசியம் சொல்லி, வெகுமதியாகக் கன்னத்தில் அழுந்த இதழ்களையும் பதித்தாள்.

“கல்யாணம் ஆனதுனால மட்டும் நீ என் மனைவின்னு ஆகிடாது; வீணா ஆசையை வளர்த்துக்காத! உன்னால என்ன நெருங்கவே முடியாது!” சொன்னவனின் குரலில் கொஞ்சம் தன்னம்பிக்கையும் கூடியிருந்தது.

“தெரியுமே!” இதிலென்ன அதிசயம் என்பதுபோல தோள்களைக் குலுக்கியவள், ”சரண் எனக்கு கிரீன் கார்ட் வாங்கிக் கொடுத்துட்டா, நீங்க வேற ஊருக்கு வேலையை மாத்திட்டு போகலாமுன்னு தானே திட்டம் போட்டீங்க!” என்று கண்சிமிட்டினாள்.

அவன் திருதிருவென்று முழித்த விதத்திலேயே கள்வனின் சூழ்ச்சியை உணர்ந்தவள், அவன் மார்பில் ஒற்றைவிரலால் தட்டி,

“என்கிட்டேந்து தப்பிச்சிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க! உங்க முதல்மனைவிக்கு இரண்டே வாரத்துல விசா வாங்கின கதையெல்லாம் எனக்குத் தெரியும்; சாக்கு சொல்லாம ஏற்பாடு செய்யுங்க!”, அதிராத குரலில் அழுத்தமாகக் கூறி அங்கிருந்து நகர்ந்தாள்.

தலைபோகும் காரியம் ஆயிரம் இருந்தபோதும், உடலாலும் உள்ளத்தாலும் துவண்டு போயிருந்தவனின் கண்களில் உறக்கம் தன்னால் தழுவிக்கொண்டது.

மொட்டைமாடி சுவற்றில் சாய்ந்து, அஸ்தமனமாகும் கதிரவனை வெறித்துப் பார்த்தபடி, மாமன் மனதில் காதல் உதயமாகுமா என்ற கவலையில் மூழ்கியிருந்தாள் பல்லவி.

மருமகளைத் தேடி வந்த சாவித்ரி, “பல்லவி! அண்ணன் வீட்டுக்குத் தகவல் சொல்லிடலாமா? தயங்க,

“கண்டிப்பா அத்தை! நாங்களே அவங்கள நேருல பார்த்துட்டு வரோம்!” என்று ஆறுதலாக மாமியாரின் கரங்களைப் பற்றினாள்.

அதைக்கேட்டு உச்சி குளிர்ந்தவள், பல்லவியை ஆரத்தழுவி முத்தமிட்டாள்.

சாவிதிர்யின் கள்ளம் கபடமில்லா மனதைப் படித்தவளுக்கு, இனியும் உண்மைகளை மறைக்க மனம் ஒப்பவில்லை. குணா மீது வழக்கு தொடர, சுதா தன்னிடம் வந்ததை விவரித்து, அவளைப் பணயம் வைத்து தன் காதல் வேட்டை ஆடியதற்கும் மன்னிப்பு கேட்டாள்.

மகன் மேலுள்ள கண்மூடித்தனமான காதலால் தான் அவ்வாறு செய்தாள் என்று புரிந்துகொண்ட சாவித்ரி பெருந்தன்மையாக அவள் தோளில் தட்டிக்கொடுத்து புன்னகைத்தாள்.

இரவின் மடியில் தலைசாய அனைவரும் ஆயத்தமாகும் வேளையில், ஆந்தை போல புத்துணர்வுடன் விழித்துக் கொண்டனர் பயணச்சோர்வில் இருந்த மீளாத தந்தையும் மகளும். மதுமிதாவை தூக்கிக்கொள்ள, சாவித்ரி முன்வர,

“எங்களுக்குத் தேவையானதை நாங்களே பார்த்துக்கறோம்! நீங்க தூங்குங்க!” வீம்பு பிடித்தவன், குழந்தைக்கும் ஊட்டிவிட்டு தானும் உண்டான்.

பல்லவியும் அமைதியாக அறைக்குள் புகுந்தாள். ஒரு மணி நேரத்தில், போகுமிடம் தெரியாமல் குழந்தையுடன் அறைக்குள் வந்தவன்,

“நான் ஆன்லைன் க்ளாஸ் எடுக்கணும்!” விரட்டாமல் விரட்டினான்.

அப்போதும் எந்தவித கேள்வியுமின்றி நகர்ந்தாள்.

‘பேரதிசயம்! அமைதியாக நகருகிறாளே!’ அவன் நினைத்தது தான் தாமதம்.

மறுபடியும் உள்ளே நுழைந்தவள், படுக்கையில் விளையாடிக் கொண்டிருக்கும் மதுமிதாவை தூக்கினாள்.

“அவள எங்க அழைச்சிட்டுப் போகுற?” அதட்டலாய் வினவினான்.

“ஆன்லைன் க்ளாஸ்ல அவ என்ன செய்ய போகுறா?” அதே அதட்டலான தோரணையில் கேள்வியைத் திருப்பியவள்,

“க்ளாஸ் முடிஞ்சதும் சொல்லுங்க! நான் வந்து உங்களுக்குப் பாடம் எடுக்கறேன்!” குறும்பாகச் சொல்லி சிட்டென பறந்தாள்.

அறையின் கதவை இழுத்து தாளிட்டவன், வகுப்பு முடிந்தபின்னும், அங்கேயே முடங்கிக் கிடந்தான். பல்லவி தன்னை தொந்தரவு செய்யாமல் உறங்கிவிடுவாள் என யூகித்தான்.

அவளோ சலிக்காமல் மதுமிதாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இருவரும் இருநூறு பகுதிகள் கொண்டுள்ள திருகுவெட்டு புதிரை ஒன்று சேர்ப்பதில் மூழ்கி இருந்தனர்.

இளஞ்ஜோடிகளின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று யோசித்த சாவித்ரி ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அதையும் குறுஞ்சிரிப்புடன் ரசிக்கவே செய்தாள் பல்லவி.

தன்னவன் கைபேசிக்கு ரகசியமாக அழைத்து, அவன் குரல் கேட்காத வண்ணம் ஒலியை மொத்தமாகக் குறைத்தவள்,

“அத்தை! நான் போன மாசம் டெல்லிக்குப் போயிருந்தேன்! அங்கே எடுத்த புகைப்படங்கள் பாக்குறீங்களா?” உரக்க வினவினாள்.

இப்போது அதற்கென்ன அவசியம் என்று யோசித்தாலும், மருமகளுக்குச் சிரித்த முகத்துடன் தலையசைத்தாள் சாவித்ரி.

அங்குப் பார்த்த இடங்கள், செய்த விஷயங்கள், சந்தித்த மனிதர்கள் என ஒவ்வொன்றாகக் காட்டியவள்,

“என் கட்சிக்காரர் ஒரு சமூக சேவகி….” என்றதும், அறையின் கதவு படார் என்று திறந்தது.

“வகுப்பு முடிஞ்சுது! மதுமிதாவை தூங்க வைக்கணும்!” கதவிடுக்கில் சிக்கிய எலி போல சிடுசிடுத்தான் குணா.

மகனை கண்ட நிம்மதியில் பெருமூச்சுவிட்டவள், “நான் குழந்தையைப் பார்த்துக்கறேன் டா!” என்று மருமகளை உறங்கும்படி கண்ணசைத்தாள்.

புதிர் பகுதிகளைத் திரட்டி பைக்குள் போட்டவள், “நான் மதுமிதாவுக்கு அம்மாவா இருக்கணும்னு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கேன் அத்தை!” என்று குழந்தையைத் தூக்கினாள்.

“அதுக்கில்ல மா…இன்னைக்கு…வந்து…முதல்…” சாவித்ரி தயங்க,

“வந்த முதல் நாளே அப்பாவையும் மகளையும் பிரிச்சு, சித்தி கொடுமை செஞ்சிட்டான்னு ஊர் பேசுணுமா!” கேள்வியைத் திருப்பியவள்,

“குட்நைட் அத்தை!” என்று தன்னவன் அறைக்குள் உரிமையோடு தலைநிமிர்ந்து நுழைந்து,

“கைப்பேசினா தான் வழிக்கு வருவீங்க!” செல்லமாக மிரட்டி, கைபேசியை உயர்த்திக் காட்டி, அதை வேண்டுமென்றே மேஜையில் வைத்துவிட்டு, குளித்துவிட்டு வருவதாகக் கூறி நகர்ந்தாள்.

மேஜையிலிருக்கும் கைபேசி அவன் கண்களை உறுத்தவே செய்தது. மற்றவர் கைபேசியை சோதிப்பது அநாகரீகமான செயலென்று அறிந்திருந்தாலும், மனம் ஊசாலடியது.

இன்றோடு பல்லவியின் அக்கிரமங்களுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று தீர்மானித்தான். தன் அதிர்ஷ்டம், திரை பாஸ்வேர்ட் இல்லாமலேயே உயிர்ப்பித்தது என மகிழ்ந்தான்.

அவள்தான் வேண்டுமென்றே அப்படி வைத்திருந்தாள் என்று அந்தப் அதிபுத்திசாலிக்கு யார் சொல்வது.

கைபேசியில் யமுனாவின் புகைப்படங்களைத் தேடி விரல்கள் மின்னல் வேகத்தில் நகர்ந்தன. தனக்கு அனுப்பிவைத்த புகைப்படங்கள் கூட அதில் இல்லை. யமுனாவின் கைபேசி எண்ணை கண்டுபிடிக்க அலசினான். அவள் பெயர் அந்தப் பட்டியலிலேயே இல்லை. தோல்வியுற்றவன் மதுமிதா அருகில் வந்து படுத்துக்கொண்டான்.

குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், சட்டென்று கண்களை இறுக மூடிக்கொண்டான். அன்றொரு பொழுதுக்கு அவளிடமிருந்து தப்பிக்க, நினைத்த அவன் சிறுமூளைக்கு அதைத்தாண்டி எதுவும் தோன்றவில்லை.

வெளியே வந்தவள், மேஜையில் திசைமாறி இருந்தக் கைபேசியைக் கண்டதுமே மாமனின் கள்ளாட்டத்தைப் புரிந்துகொண்டாள். படுக்கையில் மாமன் உறங்குவது போல நடிப்பதையும் உணரவே செய்தாள்.

மாமனின் அரவணைப்பில் தன்போக்கில் விளையாடும் குழந்தையை பார்த்தவளுக்குச் சற்று பொறாமையாகவே இருந்தது. அவன் பிடியிலிருந்து குழந்தையை லேசாக நகர்த்தி, இருவருக்கும் இடையே தவழ்ந்து வந்தவள், மேஜை விளக்கை அணைத்து குழந்தை பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அவள் அட்டூழியங்கள் அறிந்தபின்னும், நாடகத்தைத் தொடரமுடியாமல் தடுமாறியவன்,

“என்ன செய்யற பல்லவி?” வெடுக்கென்று எழுந்து மின்விளக்கை ஒளிரவிட்டான்.

“பாடம் எடுக்க வரதுக்குள்ள தூங்கினா நியாயமா வாத்தியாரே!” அவன் இடுப்பைக் கிள்ளி வம்பிழுத்தாள்.

யமுனாவை போலவே சீண்டுகிறாளே என்று வியந்துதான் போனான் அவன்.

உள்ளத்தில் பூத்த வியப்பை மறைத்து, “நீ நினைக்கறது எதுவும் நடக்காது!” தேய்ந்துபோன ஒலிநாடாவை போல நினைவூட்டினான்.

தன்னுடன் கொண்டுவந்த கைபேசியை உயர்த்திக் காட்டியவள், “புகையா மறைஞ்சு போன புகைப்படங்களைப் பார்க்கணுமா மா…மா…மாமா!” செல்லம் கொஞ்சியவள்,

க்லௌட் பேகப்பிலிருந்து(Cloud Backup) யமுனாவின் புகைப்படங்களைக் காட்டி, “அட! நான் நினைக்கறது எல்லாம் நடக்குதே!” எனக் கண்சிமிட்டினாள்.

தான் கைபேசியை சோதித்ததைக் கண்டறிந்துவிட்டாள் என்று அறிந்தவன் தலைகுனிந்து நின்றான்.

தன்னவனின் வாடிய முகத்தை காணமுடியாமல் வருந்தியவள்,

“மறுபடியும் சொல்றேன் குணா! உங்களோட சந்தோஷமா குடும்பம் நடத்தத்தான் வந்திருக்கேன்; யாருக்கும் உளவுபார்க்க இல்ல; அதை நீங்க நம்பித்தான் ஆகணும்” மீண்டும் வலியுறுத்தி, அவன் பதிலுக்குக் காத்திராமல், மதுமிதாவை கட்டியணைத்தபடி உறங்கினாள்.

மதுமிதா, குணாவிடம் போவதற்கு “மா…மா…மாமா!” என்று சிணுங்க,

“உன்னோட விளையாடுறதுக்கு மட்டும் என்ன கூப்பிடறல்ல; இப்போ ஒழுங்கா என்கிட்ட தூங்கு!” குரலை உயர்த்தினாலும், பல்லவியின் கரங்கள் குழந்தையை மென்மையாகவே வளைத்தன.

 குழந்தையை விடும்படி குணா தாழ்ந்த குரலில் கெஞ்சினான்.

“உங்களுக்கு வேணும்னா, என்னைத் தாண்டி வந்து குழந்தையைச் சமாதானப்படுத்துங்க!” முகம் திருப்பாமல் பதலளித்தாள் பல்லவி.

தன்மேல் இருக்கும் வெறுப்பை குழந்தையிடம் காட்டும் அளவுக்கு கல்மனம் படைத்தவள் இல்லை என்று அறிந்தவன், மேலும் வற்புறுத்தாமல் நகர்ந்தான்.

இவ்வளவு சொல்லியும் தன் அன்பை புரிந்துகொள்ள மறுக்கிறானே என்று பேதை மனம் வாடினாலும், தன்னவனை தன்வழிக்கு கொண்டுவர அடுத்தக்கட்ட திட்டங்களை உற்சாகமாகக் கணிக்கத் தொடங்கியது.

பெற்றவவள் மனம் இங்கு பித்தில்லை – தாயாய்

வளர்க்க வந்தவள் மனமோ கல்லும் இல்லை – தாரமாய்

ஏற்க மாமன் மனமும் இறங்கவில்லை – தவமாய்

தவமிருக்கும் இவர்கள் மனதில் ஏன் நிம்மதி இல்லை -தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…