பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 21.1

ஸ்ரீவள்ளித் திருக்கல்யாண உற்சவம் காணும் ஆசையில் வந்தவர்களுக்கு மத்தியில், ஒருவன் மட்டும் திருமணம் என்ற வார்த்தையில் அரண்டு போனவனாக, முருகன் முன் கைகூப்பி நின்றிருந்தான். மாமன் மகள் காதல் விவகாரத்தில், அவளைச் சீண்டி, குறும்புசெய்து விளையாடியது அத்தனையும் மனத்திரையில் வந்து வாட்டியெடுக்க,

‘என் சன்னிதானத்தில் சில்மிஷங்கள் செய்தாய் அல்லவா! இனி என் ஆட்டம் பாரு!’ கந்தன் கேலிப்புன்னகையுடன் அசரீரி உரைப்பதுபோல உணர்ந்தான் குணா.

மனதின் ஆசைகளை நிறைவேற்றிய அந்தக் கருணைக் கூர்ந்த வேலவனுக்கு நன்றிகளைச் செலுத்திய சாவித்ரி, மகனிடம் நகரலாம் என கையசைத்தாள்.

கோவில் பிரகாரத்தின் உள்ளேயே அமைந்திருந்த சின்னதொரு மண்டபம் அது.

காலில் சக்கரம் கட்டியவளாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த நீலாவதி, மாப்பிள்ளை வீட்டாரை கண்டதும் வாய்கொள்ளா புன்னகையுடன் அவர்களை வரவேற்றாள்.

சாவித்ரி பதிலுக்குச் சிரித்த முகத்துடன் நலன்விசாரிக்க, ஆண்கள் மட்டும் சிக்கனமாகப் புன்னகைத்தனர். குணாவின் கண்கள் ஒருபுறம் கோவிலுக்குள் பல்லவியையும், மறுபுறம் எதிரிலிருந்த மசூதியில் யமுனாவையும் தேடித்தவிக்க, மனோகரின் கண்களோ மகனை விடாமல் கண்காணித்தது. மகன் பல்லவியின் பிடியில் வசமாக மாட்டியிருக்கிறான் என்பதை அவன் உடல்மொழியிலேயே அறிந்துவிட்டார். சுயநலம் படைத்தவனுக்குத் தக்க தண்டனை என்று மனதளவில் சபித்தாரே தவிர, சிறிதளவும் வருந்தவில்லை.

பெண்கள் சீர் தட்டுகளை நேர்த்தியாக அடுக்க, விஷ்ணுவும் மதுமிதாவும் அவற்றை ஆராய்ச்சி செய்தபடி பாட்டிகளுக்கு அன்புத்தொல்லை கொடுத்தனர். மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்த ஐயர், மணமகனுக்கு மாலையிட பெண்வீட்டாரை அழைத்தார். நீலாவதி, சரணுக்கு கண்ணசைத்தாள்.

வேண்டாவெறுப்பாக வந்தவன், குணா கழுத்தில் மாலையிட்டு, பல்லவி வாங்கிவைத்திருந்த வைர மோதிரத்தை கடனே என்று அணிவித்தான்.

குணா அவன் பங்குக்கு முறைக்க, சரணின் எரிச்சல் எல்லையை கடந்தது.

“பொய் பித்தலாட்டம் செய்யும் உன் வாழ்க்கையில் வந்த பொக்கிஷம் என் தங்கை! இனியாவது நல்லவனா இருக்குறத்துக்கு முயற்சி செய்!” புன்முறுவலுடன் காதில் கிசுகுசுத்தான்.

வலியவந்து அந்த மேனகையை மணப்பதுபோல அறிவுறுத்துகிறானே என்று கடுப்பானவன், “யாருக்கு வேணும் உங்க பொக்கிஷம்! வந்த வேகத்திலேயே விரட்டிவிட்டுடறேன்!” பதிலளித்தவன் உதடுகள் கர்வப்புன்னகையில் வளைந்தன.

தங்கை வாழ்க்கை கண்முன் சீரழிவதை எண்ணி நொந்தவன் பாட்டி அருகில் வர,

“என்னடா! அதுக்குள்ள மாமன் மச்சான் ரகசியமா!” கிண்டல் செய்தாள் நீலாவதி. அவளைக் கூர்மையாக நோக்கி பேசாமல் இருக்கும்படி அதட்டினான் சரண்.

பெண்ணை அழைத்துவரும்படி ஐயர் கூற, தாரகையாக அண்ணியின் கரம்பிடித்து வந்தாள் பல்லவி. அவளைக் கண்டதும் திடுகிட்டுப்போனான் குணா.

அன்று யமுனாவுக்கு பரிசளித்த அதே வாடாமல்லி நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள்.

‘கிராதகி! தெரிந்து செய்கிறாளா; தெரியாமல் செய்கிறாளா!’ யோசித்தவன், சுற்றம் மறந்தவனாக அவளையே வெறித்துப் பார்த்தான்.

மாமன் மயங்கிவிட்டான் என்ற உள்ளக்கிளர்ச்சியில், பேதையும் பல்லிளித்தபடி அவனருகில் வந்து அமர்ந்தாள்.

“போதும் மாமா! இப்படியா வெச்சகண்ணு வாங்காம பார்ப்பீங்க!” காதோரம் அவள் கிசுகிசுக்க, சுயத்திற்கு வந்தவன் அவளை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“என்ன மிஸ்டர்.குணா! எல்லாம் தேஜாவு மாதிரி இருக்கிறதா?” அவன் புஜத்தில் இடித்து வம்பிழுத்தாள்.

குணாவின் முகம் இன்னும் இறுக, அதைக்கண்டு பயந்த சாவித்ரி, பல்லவி அருகில் வந்தாள். மருமகளை நலன்விசாரித்து கன்னத்தை வழித்து முத்தமிட, அவள் இடுப்பிலிருந்த மதுமிதா பல்லவியிடம் வெடுக்கென்று தாவி, பாட்டிக்குப் போட்டியாக முத்தங்களை வாரி இறைத்தாள்.

சாவித்ரி மதுமிதாவை அழைக்க, அவளோ பல்லவியின் கழுத்தை இறுக்கமாக வளைத்தாள். குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்த பல்லவி, குணா பக்கம் திரும்பி,

“இந்த ஒரு காரணம் போதாதா குணா! என்னை உங்க மனைவியா ஏத்துக்க?” யாசிக்கும் குரலில் கேட்டாள்.

அவனிடம் பதில் இல்லை. ஆனால் அங்கிருந்த மற்றவர்களுக்குத் தெய்வத்தின் சங்கல்பம் புரிந்தது. அவரவர் மனநிலைக்கு ஏற்றார்போல, தனக்குத்தானே விடையளித்துக் கொண்டனர்.

மணமக்கள் இருவரும், மிதமாய் எரிந்து கொண்டிருக்கும் யாகவேள்விக்குப் பசும்நெய் சமர்பித்தபடி மந்திரங்களை உச்சரித்தனர். ஐயர் மாங்கல்யதாரணம் என்றதும், சாவித்திரி அனைவரின் கையிலும் அக்ஷதையும், பூக்களையும் திணித்து, தானும் கைக்கொள்ளாத அளவிற்கு உள்ளங்கையில் குவித்து, மணமக்களை ஏக்கத்தோடு பார்த்தாள்.

தாம்பூலத்திலிருந்து பூஜிக்கப்பட்ட திருமாங்கல்யத்தை கையில் எடுத்தவன், பல்லவியின் எதிரில் வந்து நின்றான்.

நொடிப்பொழுதில் ஏதாவது பேரதிசயம் நிகழ்ந்து இந்த திருமணம் நின்றுவிடாதா என்று அப்போதும் அவன் மனம் தவித்தது.

மதுவிதாவை தன் மடியில் அமர்த்தியபடி, தன்னவனின் முகத்தை விழி உயர்த்தி பார்த்த பேதையின் மனமோ, ‘என் உண்மையான காதலை உணரமாட்டாயா!’ என்று கெஞ்சியது.

சுபமுகூர்த்த வேளையில், நூற்றுக்கணக்கான மக்களின் துள்ளலான “அரோகரா!” கோஷத்தின் நடுவில் குறவன் மகள் வள்ளி திருமணம் இனிதே நடைபெற, ‘என்னவன் நீ குணா’ என்று தவமிருந்தவளின் கனவும் நெருங்கிய சொந்தபந்தங்களின் ஆசியுடன் அமைதியாக நனவானது.

இன்னபிற சடங்குகளை முடித்தவன், விருந்தாளிபோல கிளம்ப எத்தனிக்க,

“குணா! இன்னைக்கு மதுமிதா பிறந்தநாளும் டா!” மென்று விழுங்கினாள் சாவித்ரி.

அவனுக்கும் அது நினைவிலிருந்த போதும், விடியற்காலையில் நடந்த கலாட்டாவில், அலட்சியம் செய்யவில்லை. இப்போது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையிலும் இல்லை.

“அதுக்காக?” கேட்டவனின் முகம் இறுகியது.

“குழந்தைக்கு முறையா ஆயுஷ்ஹோமம் செய்யல… அதான்…”, சாவித்ரி குழைய,

“இன்னைக்கு நம்ம தம்பதியரா மதுகுட்டிக்கு ஆயுஷ்ஹோமமும், காதுகுத்தல் சடங்கும் செய்யப்போறோம்! இன்னொரு நாள் குலதெய்வம் கோவிலில் முடியிறக்கணும்!” இடைபுகுந்த பல்லவி, மொத்தத்தையும் அதிகாரமாகத் தெரிவித்தாள்.

மறுப்பாகத் தலையசக்கும் மாமனின் உள்ளங்கையை அழுந்த பிடித்தவள், அவன் உயரத்துக்கு எம்பி,

“உங்களால முடியலேன்னா சொல்லுங்க; மசூதிலேந்து ஆள வர வெச்சிடலாம்!” கிசுகிசுத்தாள்.

“ஏதோ செய்யுங்க!” இயலாமையில் அவன் சலித்துக்கொள்ள,

அவன் பயத்தை ரசித்தவள் வெற்றிப் புன்னகையுடன் மதுமிதாவை தூக்கிக்கொண்டாள்.

ஆயுஷ்ஹோமம் சடங்குகளைச் நேர்த்தியாகச் செய்துமுடித்ததும், காதுகுத்தல் விழாவிற்கு, பல்லவி வாங்கியிருந்த கெம்பு கற்கள் பொருந்திய தங்கக் காதணிகளைப் பெருமிதத்துடன் மகனிடம் நீட்டினாள் சாவித்ரி. கடனே என்று தலையசைத்து முகத்தை திருப்பிக்கொண்டான் குணா.

ஐயர், குழந்தையை மாமன் மடியில் அமர்த்தச் சொல்லி உத்தரவிட, சாவித்ரி சிறிதும் தயக்கமின்றி சரணை அழைத்தாள்.

‘யார் குழந்தைக்கு யார் மாமன்!’ சரண் முகம் சுருக்க,

“மதுமிதாவுக்கு குணாதான் எல்லாமே அத்தை! அவர் மடியிலேயே உட்காரவெச்சு குழந்தைக்குக் காது குத்தலாம்!” குறுக்கிட்டாள் பல்லவி.

தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசும் இவள் காதல் உண்மைதானோ என்று குணா மனதில் அசைப்போட,

“நீங்க யமுனா குழந்தைக்கு அப்பா இல்லேன்னா, அப்போ மாமா முறைதானே வரும்!” அவன் காதோரம் கிசுகிசுத்து கண்சிமிட்டினாள்.

‘அதானே! உண்மை தெரிந்த திமிரில் பேசியிருக்கிறாள்! நல்ல வேளை இவளிடம் ஏமாறவில்லை!’ தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டவனுக்கு, அவள் மேல் வந்த நம்பிக்கை வந்த வேகத்திலேயே மறைந்தது.

ஊசி செலுத்துவதையே பார்க்க விரும்பாதவன், மடியிலிருந்த குழந்தையை இறுக அணைத்துக் கண்மூடிக்கொண்டான். அதைக் கவனித்தவள் இதழ்கள் குறும்பில் வளைய, தன்னவன் தோளினை அழுந்த வளைத்தாள். அச்சமயத்தில் அவனுக்கும் அந்த ஆதரவான ஸ்பரிசம் வேண்டியிருக்க, கண்டும் காணாமலும் இருந்தான்.

ஆர்ப்பாட்டம் செய்வதில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மிஞ்ச, புது காதணிகளை அணிந்த குழந்தையோ தனக்குக் கிடைக்கும் வெகுமதிகளை அனுபவித்துக் கலகலவென்று சிரித்தாள்.

சுபவைபவங்கள் இனிதே நிறைவேற அனைவரும் வாசலுக்கு வந்தனர். விட்டால் போதுமென்று சரண் புறப்பட, நீலாவதி புதுமண தம்பதியரை பாலும் பழமும் அருந்த வீட்டிற்கு அழைத்தாள்.

குணா மறுபடியும் தடைப்போட, அதை வழக்கம்போல தகர்த்தெரிந்தாள் பல்லவி. திருமணத்தைப் பதிவுசெய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்திருப்பதாக அறிவித்தவள், அதை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லலாம் என்றாள்.

புதுமண தம்பதிகளுக்குத் தனிமை கொடுக்க எண்ணி மற்றவர்கள் சரணுடன் பதிவாளர் அலுவகத்திற்கு வந்தனர். காலையிலிருந்து கைபேசியில் வாயாடியவளின் முகத்திலும் ஒருவழியாக வெட்கம் எட்டிப்பார்த்தது.

“அதான்! நீங்க நெனச்சத சாதிச்சிட்டீங்களே! இன்னைக்கே திருமணத்தைப் பதிவு செய்யணும்னு என்ன அவசரம்!” சிடுசிடுத்தவன், அவள் மேலிருந்த எரிச்சலில் ஹாரனை இடைவிடாது ஒலிக்கவிட்டான்.

பேதை கன்னத்தில் பூத்த வெட்கம் சட்டென்று பொசுங்கியது.

“காதல் உணர்வுகளே இல்லாத பொம்மை கல்யாணத்துக்கு அந்தக் காகிதம் தானே ஒரே சாட்சி!” வெடுக்கென்று ஜன்னல் பக்கம் திரும்பினாள்.

அவளைக் கடுப்பேத்திய திருப்தியில் மனம் குளிர்ந்தவன் “அதுக்குத்தானே உங்கள ஆறுமாசம் காத்திருக்கச் சொன்னேன் பல்லவி!” எனக் கேலியாக உச்சுக்கொட்டினான்.

“முதல்ல இந்த வாங்க! போங்க! சொல்றத நிறுத்துங்க குணா!” இருகாதுகளையும் பொத்திக்கொண்டவள்,

“உங்களுக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, இப்போ நான் உங்களோட மனைவி!” பொங்கினாள்.

“அதெல்லாம் தானா வரணும் பல்லவி!” தொடங்கியவன்,

“யமுனான்னா எனக்குக் கொள்ளைப்பிரியம்; அதனால அவகிட்ட வாடி போடின்னு தான் பேசுவேன்! ஆனால் அதேமாதிரி உங்ககிட்ட பேசுறது கஷ்டம்!” உதட்டைப் பிதுக்கி வெறுப்பேற்றினான்.

‘மாமனுக்கு பயம் விட்டுப்போனதா!’ எண்ணியவள்,

“அதான் பொழுதுக்கும் அந்த மசூதியே பார்த்துட்டு இருந்தீங்களா மிஸ்டர்.குணா! நான் வேணும்னா உங்க முதல்மனைவியை நேருல வர சொல்லட்டுமா?” நக்கலாகக் கேட்டு, கைபேசியை உயிர்ப்பித்தாள்.

‘இவளுக்கு உடம்பெல்லாம் கண்கள்!’ அவன் முகத்தைத் திருப்பிக்கொள்ள,

“இல்ல! உங்க மனசுல இடம்பிடிக்க என்ன செய்யணும்னு அவங்கள கேக்கலாமேன்னு தான்…அப்போதானே என்கிட்டையும் நீங்க ஆசையா ‘டி’ போட்டு பேசுவீங்க!”, அப்பாவியாகக் குழைந்து அவன் புஜத்தைச் சுரண்டினாள்.

தனக்கு நேரம் சரியில்லை என்று குணா அமைதிகாக்க, அவளும் அதற்குமேல் அவனைச் சீண்டவில்லை.

பதிவாளர் அலுவலகத்தை வந்தடைந்ததும், காரில் அமர்ந்தபடி, ஆவணங்களைச் சரிபார்த்த பல்லவி,

“குணா! உங்க முதல்மனைவியை முறைபடி விவாகரத்து செஞ்சீங்களா!” பதில் தெரிந்த கேள்வியை வேண்டுமென்றே கேட்டு வம்பிழுத்தாள்.

சட்டென்று கட்டுக்கதை ஒன்றும் கற்பனையில் வராமல் திண்டாடியவனை,மனம் நிறையும்வரை ரசித்தவள்,

“பரவாயில்ல குணா! முதல்திருமணம் பற்றி எதுவும் பேசாதீங்க! தலைமை பதிவாளர் எனக்குப் பரிச்சயமானவர் தான். நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.” தீர்வும் கூறினாள்.

சொன்னபடி அத்தனை சம்பிரதாயங்களையும் தனியாளாகச் செவ்வனே முடித்தாள். குணா உட்பட வந்தவர்கள் அனைவரும் அவளுக்குத் தலையாட்டி காட்டிய இடத்தில் கையெழுத்திட்டனர். அரசாங்க நிறுவனத்தில் அரைமணி நேரத்தில் வேலையைத் துல்லியமாக முடிக்கும் இவள் சாமர்த்தியத்திற்குப் பேர்போனவள் என்று ஒப்புக்கொண்டான்.

பணிகளை முடித்து வெளியே வந்ததும், நீலாவதி வீட்டிற்கு வருமாறு நினைவூட்ட, பல்லவியின் கண்ஜாடையிலேயே மாமன் மறுகேள்வியின்றி சம்மதித்தான். மதுமிதா சோர்வாக இருப்பதாகக் கூறி, சாவித்ரியும் மனோகரும் குழந்தையை அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்.

காரில் ஏறி அமர்ந்தவள், சான்றிதழை பேருவகையுடன் வருடு, அதைக் கண்டவன் மனம் கேலிசெய்யத் துடித்தது.

“பரவாயில்ல பல்லவி! உன்னுடைய படிப்பு வீண்போகல; நல்லாவே பேசி வேலையை முடிச்சிட்ட!” என்றதும்,

விருது பெற்றவள் போல, தன்னவன் பாராட்டில் நெகிழ்ந்தவள், சான்றிதழை மார்போடு அணைத்தாள்.

“பார்த்து! கசங்கிடப்போகுது!” பதறியவனை மலைத்துப் பார்த்தாள் பேதை.

“நாளைக்கே நம்ம விவாகரத்து செய்யணும்னா, தேவைப்படுமே!” என்றவன், அவளின் வாடிய முகத்தை ஒரு கணம் ரசித்து,

“நீங்க என்ன, என் மாமா பொண்ணா; பிடிக்கலன்னு சொன்னதும் அமைதியா கிளம்ப; எதுவா இருந்தாலும் சட்டரீதியா அணுகினாதானே திருமதி.பல்லவி குணசேகரன் பி.ஏ.பி.எல்க்குப் பிடிக்கும்!” என்று ஏளனமாகக் கண்சிமிட்டினான்.

தாரம் நீ என்று தலைமகன் உரைத்ததில் மகிழ்ந்தாளா – இல்லை

தள்ளிவைப்பேன் என்று தகராறு செய்ததில் பயந்தாளா – பேதை

பித்தன் அவன்மீது பித்தம் கொண்டதுதான் சரியா -தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…

தொடர்ந்து படிக்க Click Here –> பாசமென்னும் பள்ளத்தாக்கில் 21.2