பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 20

புலராத காலை பொழுதில், பறவைகள் இரைத்தேடி வானில் படையெடுக்க, பல்லவியின் மணவாளனை சுமந்துவந்த விமானம் தரையிறங்கியது. குடிநுழைவு சம்பிரதாயங்களை முடித்துவிட்டு வெளியே வந்தவன், அந்த ஏகாந்த வேளையில் வீசிய குளிர்காற்றை ஆழ்ந்து சுவாசித்தான். ஒரு வருடத்திற்கு முன்பு, முறிந்த உறவுகளைப் புதுப்பிக்க வந்தபோது இருந்த பதற்றம் இம்முறை அவனுக்கில்லை. எல்லாம் தன் கட்டுக்குள் இருக்கும் கர்வத்தில் பெருமிதத்துடன் வீட்டிற்கு வந்தான்.

வாசலுக்கு அழகூட்டிய மாகோலத்தையும், வாசற்கதவில் அசைந்தாடும் மாவிலை தோரணங்களையும் ஏறிட்டபடி உள்ளே நுழைந்தவன், வீட்டிற்குள் செய்திருந்த அலங்காரங்கள் அதற்கும் ஒருபடி மேலிருந்ததைக் கவனித்தான். உட்கூரையிலிருந்து தரைவரை தவழ்ந்த வண்ணப் பூச்சரங்கள், மேஜையை நிரப்பிய சீர்வரிசை தட்டுகள், காற்றில் கலந்த பலகாரத்தின் வாசம் என வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு காதும் காதுமாக நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு, ஏன் இத்தனை தடபுடலான ஏற்பாடுகள் என யோசித்தபடி,

“அம்மா! அம்மா!” கூக்குரல்யிட்டு வீட்டை வலம்வந்தான் குணா.

மகனிடன் பல்லவியின் ரகசியத் திட்டங்களை எப்படி சொல்வதென்று புரியாமல் தவித்தவள், அறையில் முடங்கிக் கிடந்தாள். அதற்குள் குணாவிடமிருந்து இறங்கிய மதுமிதா, பாட்டியின் மூச்சுக்காற்று வீசும் திசையறிந்து அறைக்குள் ஓடினாள்.

மகனுடன் கண்ணாமூச்சி ஆடியவள், பேத்தியிடம் தோற்றுப்போக, ஆசையாய் தன்னைத் தேடிவந்த குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினாள். மதுமிதாவை பின்தொடர்ந்து வந்தவனை கண்டதும் பிராயணத்தைப் பற்றி விசாரித்து இயல்பாய் இருக்கப் பாடுபட்டாள் சாவித்ரி.

“நிச்சயதார்த்தம் தானே செய்யப்போறோம்; அதுக்கு எதுக்குமா கல்யாண வீடு மாதிரி இத்தனை ஏற்பாடுகள் செஞ்சிவெச்சிருக்க?” சிடுசிடுத்தான் குணா.

“குணா…அது…அது…நான் சொல்றத கோபப்படாம பொறுமையா கேளுடா! உனக்கும்…உனக்கும்…பல்லவிக்கும்…இன்னைக்கே…இன்னைக்கே கல்யாணம்…பல்லவி உனக்கொரு இன்பதிர்ச்சி…” சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், சாவித்ரி திண்டாட,

பல்லவி, சூழ்ச்சி செய்து தன்னை ஊருக்கு வரவைத்திருக்கிறாள் என்று உணர்ந்தான்.

“இன்பதிர்ச்சியா!” ஏளனமாகக் கேட்டவன், “பெற்ற மகன், அதுவும் தாயில்லா குழந்தையை தனியா வளர்குறானேன்னு கொஞ்சமாவது பொறுப்பா யோசிச்சியா மா! புத்திக்கெட்டு விளையாடுற அவளோட, நீயும் சேர்ந்து கல்யாண ஏற்பாடுகள் செய்து வெச்சிருக்க!” அலங்காரங்களைக் கண்ஜாடையில் காட்டிப் பேசினான்.

மகன் அமைதியாகப் பேச, தாய்மனதில் தைரியம் எட்டிப்பார்த்தது. அவன் தோளினை மென்மையாக வருடியவள்,

“முன்னறிமுகம் இல்லாத பொண்ணுன்னா யோசிச்சிருப்பேன் டா!” தன்பக்கத்து நியாயத்தை எடுத்துரைத்தாள்.

பெற்றவளை நன்றாகவே மூளைசலவை செய்து வைத்திருக்கிறாள் என்று புரிந்துகொண்டவன்,

“ஓ அப்படியா! பதிலுக்கு நானும் இன்பதிர்ச்சி கொடுத்தேன்னு பல்லவிகிட்ட சொல்லிடு!” என்றவன், மதுமிதாவை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு, அறையைவிட்டு வெளியேறினான்.

வெள்ளந்திமனம் படைத்தவள், அவன் செய்கை புரியாமல், “என்னடா இன்பதிர்ச்சி?’ அப்பாவியாக வினவினாள்.

“இன்னுமா புரியல!” நமுட்டுச் சிரிப்புடன் கண்சிமிட்டியவன், “நானும் விளையாட்டுக்குத்தான் அவள கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னேன். இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு அவகிட்ட சொல்லிடு!” அலட்சியமாகப் பதிலளித்து, பெட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

“என்னடா விளையாட்டு குணா இது!” பதறியவள் அவன் பின்னால் ஓடினாள்.

மனைவி அவனை நிற்கச்சொல்லி கெஞ்சுவதும், மகன் அவளை அவமதித்து நகருவதையும் கண்ட மனோகருக்குக் கோபம் தலைக்கேறியது.

“நில்லுடா குணா!” அதிகாரக் குரலில் கர்ஜித்தார்.

அந்தக் கணீர் குரலுக்குக் கட்டுப்பட்டு அவன் கால்கள் நிற்கவே செய்தது.

“இந்தக் கல்யாணம் நடக்கலேன்னா, இங்க யாரும் வருத்தப்பட போகுறது இல்ல! உனக்குப் பிடிக்கலேன்னா, அதை நீயே அந்தப் பொண்ணுகிட்ட நேரடியா சொல்லிட்டு கிளம்பு! உங்க விவஸ்தைக்கெட்ட விளையாட்டுக்கு நடுவுல என் மனைவி ஏண்டா அவமானப்படணும்!” திட்டவட்டமாக உரைக்க,

“கொஞ்சம் பொறுமையா பேசுங்க!” கணவரிடம் கண்ணீர்மல்க கெஞ்சினாள் சாவித்ரி.

அவள் தோளினை ஆறுதலாகப் பற்றியவர், “நீ ஏன் மா அழற! ஏற்பாடு செய்த கல்யாணத்தை நிறுத்துறது, நம்ம பையனுக்குக் கைவந்த கலை! அவன் பார்த்துப்பான்!” இடித்துக் காட்டியவர், மனைவியை உள்ளே அழைத்துச் சென்றார்.

பெற்றோர் முன் தலைகுனிந்து நிற்கும் அளவிற்குச் செய்துவிட்டாளே என்ற கோபத்தின் உஷ்ணம் பல்லவியின் பக்கம் திரும்ப, அவள் கைபேசிக்கு அழைத்தான். இருமுறை அழைத்தும் அவள் எடுத்தபாடில்லை.

இடைவிடாமல் அழைக்கும் தன்னவனின் சீற்றம் அவளுக்கும் புரியாமல் இல்லை. பின்விளைவுகள் தெரிந்துதானே அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தாள்.

திட்டமிட்டபடி எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என பெருமூச்சுவிட்டவள், தனது முதல் அஸ்திரத்தை ஏவிவிட்டாள்.

குறுஞ்செய்தியில், யமுனாவுடன் அவள் எடுத்துக்கொண்ட வேறொரு புகைப்படத்தைப் பார்த்தவனுக்கு ரத்தம் சூடேறியது.

‘இன்னும் எத்தனைமுறை டி இதே மாதிரி பயமுறுத்துவ!’ அவன் குறுஞ்செய்தியில் வினவவும்,

‘மீண்டும் புகைப்படம் அனுப்ப நான் ஒண்ணும் முட்டாள் இல்ல மிஸ்டர்.குணா! புகைப்படம் எடுத்த இடத்தை உற்றுப்பாருங்க! உங்க முதல் மனைவி கூப்பிடும் தூரத்தில்தான் இருக்காங்க!’ அவள் பதிலனுப்பவும் சரியாக இருந்தது.

புகைப்படத்தை விரல்நுனிகளில் பெரிதாக்கிப் பார்த்தவனுக்கு விதிர்விதிர்த்துப் போனது. உள்ளூர் மசூதி வாசலில் பர்தா அணிந்து யமுனா நிற்க, பக்கத்தில் பல்லவி அவளுடன் சிரித்துப்பேசிக் கொண்டிருந்தாள்.

யமுனா எதற்கு சென்னை வர வேண்டும்; முஸ்லிம் பெண்போல ஆடை அணிய வேண்டுமென்ற பல கேள்விகள் அவன் மனதில் எழும்ப, அச்சமயம் அவன் கைபேசிக்கு ஒலிப்பதிவு ஒன்று வந்தது.

அதுவே அவளது இரண்டாவது அஸ்திரம்.

மதுமிதாவை சோஃபாவில் இறக்கிவிட்டவன் ஹெட்ஃபோன் வாயிலாக அந்த ஒலிப்பதிவை கேட்டான்.

“அட! யமுனா! நீங்க எப்படி இங்க! பர்தா எல்லாம் போட்டுகிட்டு…மதம் மாறிட்டீங்களா” அதிர்ச்சியும் தயக்கமும் கலந்த அது, பல்லவியின் குரல்.

“மதமெல்லாம் மாறலீங்க!” கிண்கிணி சிரிப்புடன், அது யமுனாவின் குரல்.

“எங்க மறுவாழ்வு மையத்திலிருக்கும் இரண்டு பெண்களை முகமதிய மதத்தை சேர்ந்த அண்ணன் தம்பி கல்யாணம் செய்துக்கறாங்க! இன்னைக்கு ஒரு நிக்காஹ்; நாளை மறுநாள் இதே மசுதியில் இன்னொரு நிக்காஹ்! விழாவுல கலந்துக்க வந்திருக்கேன்! அவங்களோட மரபுகளை மதிக்கத்தான் பர்தா போட்டிருக்கேன்!” தெளிவாகப் பேசினாலும் கடைசியில் சற்று தடுமாறித்தான் போனாள் யமுனா.

யமுனா பர்தா அணியவேண்டிய கட்டாயத்தைக் குணா அறியவே செய்தான்.

“அப்படியா! கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கு! எனக்கும், இதோ இந்த முருகன் கோவிலில்தான் நாளை மறுநாள் கல்யாணம். என் கல்யாணத்துக்கும் நீங்க அவசியம் வரணும்!” பல்லவி அன்பாக அழைக்க,

“இந்த உடையோட வர முடியாது! உங்க வீட்டு விலாசத்தைக் கொடுங்க! ஊருக்குப் போகுறதுக்கு முன்னால கட்டாயம் வரேன்!” யமுனா மறுயோசனை சொல்ல,

அத்தோடு அந்த ஒலிப்பதிவு முடிந்தது.

அனுப்பி வைத்த அஸ்திரங்களைப் பார்த்தும் கேட்டும் இந்நேரம் மாமனின் கோபம் மலையேறி இருக்கும் என்ற நம்பிக்கையில் பல்லவி அவனை அழைத்தாள்.

அழைப்பை ஏற்றும் அவன் பேசவில்லை. அவளே பேசினாள்.

“இப்போ மணி ஏழாகுது! சரியா ஒன்பது மணிக்கு, பட்டுவேட்டி சட்டையில், சும்மா மாப்பிள்ளை கணக்கா, முருகன் கோவிலுக்கு வரீங்க! இல்லேன்னா…நானும் உங்க முதல்மனைவியும் சேர்ந்து உங்க வீட்டுக்கு…அதாவது எங்க புகுந்தவீட்டுக்கு உங்களைத் தேடி வந்துடுவோம்.” என்று தொண்டையைச் செருமிக்கொண்டவள்,

“அப்புறம் நீங்க உங்க முதல்மனைவியோட மனம்மாறி சேர நினைத்தாலும் சரி! இல்ல அவங்க கண்ணு முன்னாடி என்னை மணந்துகொள்ள நினைத்தாலும் சரி! எதுவா இருந்தாலும் நான் ஏத்துப்பேன். குணாவுக்கு ஒரு மனைவி, மதுமிதாவுக்கு ஒரு அம்மா…அவ்வளவுதான் எனக்கு வேணும்.” மிரட்டாதக் குறையாகக் கொஞ்சினாள்.

“இதெல்லாம் பொய்! நான் நம்பமாட்டேன்! யமுனா இங்க வர வாய்ப்பே இல்ல!” படபடத்தான் குணா.

“நான் உங்களை நம்பவே சொல்லல குணா! அதான் சுளையா ரெண்டுமணி நேரம் இருக்குல்ல; யோசிங்க! விசாரிங்க! உங்க முதல்மனைவியோடு இன்னும் தொடர்புல இருந்தா, அவங்களையே நேரடியா கேளுங்க!” தன்னம்பிக்கை ததும்ப பேசியவள்,

“ஆனா என்கிட்டேந்து தப்பிச்சு ஓடிடலாமுன்னு மட்டும் ஏதாவது செஞ்சீங்கன்னா, சுதாவும் நானும் பாய்வீட்டு கல்யாணத்துல, பிரியாணி சாப்பிட வேண்டியதா இருக்கும்!” சற்று கண்டிப்பாக மிரட்டி அழைப்பைத் துண்டித்தாள்.

அழைப்பை துண்டித்தவளின் இதயமும் துகள் துகள்களாக உடையவே செய்தது.

யமுனவைப் பற்றி சொல்லிவிட்டால், குணா மனதில் எளிதில் இடம் பிடிக்கலாம் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால் அதை செய்யத்தான் மனமில்லை.

தங்களுக்குள் இருந்த நல்லதொரு புரிதலில், காதலை சொன்னதும், குணா ஒளிவுமறைவின்றி தன்னிடம் அனைத்தையும் சொல்லிவிடுவான் என்று திடமாக நம்பியவளுக்கு, அந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வருடக்கணக்கில் காத்திருந்தாலும், யமுனா வரும்வரை அவனுக்கென்று ஒரு வாழ்க்கையைப் பற்றி யோசிக்கக்கூட மாட்டான் என்ற ஆதுரத்துடன் காதலித்தாள். இந்தியா வருபவனை விட்டுவிட்டால், பிறகு அவனை நெருங்கவே முடியாதென்று அறிந்தவள், திருமண ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்ய ஆயத்தமானாள்.

குணாவிற்கு மறுமணம் என்பதால், எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொல்லி, பாட்டியின் சம்மதத்தைப் பெற்றிருந்தாள். அவள் காதல் விவகாரத்தில் அதிருப்தி கொண்ட சரணும் மஞ்சரியும் ஆற்றாமையுடன் சம்மதித்திருந்தனர்.

சுதா பெயரைச் சொல்லி பயமுறுத்தியே, சாவித்ரியையும் தன் ரகசிய திட்டத்திற்குப் பணியவைத்தாள். யமுனாவின் நினைவலைகளில் சிக்கித்தவிக்கும் மகன், மறுமணம் செய்துகொண்டால் தான் அவனுக்கும், குழந்தைக்கும் நல்லது என்று ஏங்கிய தாய்மனம் பல்லவி சொல்லிற்குக் கட்டுப்பட்டது. பல்லவியின் வினோதமான செயல்கள் ஒருபக்கம், சுயநலம் படைத்த மகன் மறுப்பக்கம் என்று கவனித்த மனோகர், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதே மேல் என்று அமைதிகாத்தார்.

குணாவை தன்வழிக்கு கொண்டுவர நினைத்தவள், டெல்லிக்குச் சென்றாள். யமுனாவின் கிண்டல்களையும் கேலிகளையும் பொருட்படுத்தாமல், தன் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு, ஊருக்குத் திரும்பினாள்.

கையிலிருந்த அத்தனை அஸ்திரங்களையும் உபயோகித்து ஆகிவிட்டதென்று பெருமூச்சுவிட்டவள், கைபேசியில் சேமித்திருந்த, தன்னவனின் புகைப்படத்தை வருடினாள்.

‘மன்னிச்சிருங்க குணா! இதுவே யமுனா பேர சொல்லி நான் உங்கள பயமுறுத்துற கடைசி முறையா இருக்கட்டும்!’ வருந்தியவள், அவன் வருவான் என்ற நம்பிக்கையில் மேஜயிலிருந்த பட்டுப்புடவையை கையில் எடுத்தாள்.

பல்லவியிடம் பேசி முடித்தவன், மா…மா…மாமா என்று தன் பின்னே வரும் குழந்தையையும் கவனிக்காது மொட்டைமாடிக்கு வேகநடையிட்டான். அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மதுமிதா, வலதுபுறமிருந்த அறையில் மனோகரை கண்டதும், அவரிடம் ஒட்டிக்கொண்டாள்.

குழந்தையைத் தூக்கி செல்லம்கொஞ்சியவர், “உன் அப்பனுக்கு ஸ்திரபுத்தியே இல்ல கண்ணம்மா!” மகனை வசைப்பாடி மனைவியை முறைத்தார்.

ஊருக்குப் போகாமல், பல்லவியோடு பேசிக்கொண்டாவது இருக்கிறானே என்று திருப்தியடைந்த பெண்மனம், பேத்தியைக் கொஞ்சும் தாத்தாவை கண்டதும் இரட்டிப்பு சந்தோஷம் கொண்டது.

மாடி ஏறியவன், கழுதைக் கெட்டால் குட்டிச் சுவரென்று அஷ்வினை அழைத்தான்.

‘இவன் ஊருக்குப் போனாலே வில்லங்கம்தான்!’ மனதில் சலித்தபடி அழைப்பை ஏற்றான் அஷ்வின்.

“டேய்! உனக்கு யமுனாவோட போன் நம்பர் தெரியுமா?” இருப்புக்கொள்ளாமல் கேட்டான் குணா.

 ‘இது என்ன புதுவிதமான பிரச்சனை!’ மனதில் அசைப்போட்டவன், “எதுக்கு டா! வினவினான்.

பல்லவியின் மிரட்டல்கள் அனைத்தையும் ரத்தின சுருக்கமாக ஒப்பித்தவன், “அம்மு சென்னையில இருக்காளான்னு மட்டும் தெரிஞ்சா போதும்டா! அப்புறம் இந்தப் பல்லவியை உண்டில்லன்னு செஞ்சிடறேன்!” உறுமினான்.

“மறந்துட்டியா குணா! யமுனா பற்றி எந்த விவரமும் வேண்டாமுன்னு, மதுசூதனன்கிட்ட கடைசியா பேசின நம்பர் கூட போன்லேந்து நீக்கிட சொன்ன!” அஷ்வின் மெதுவாக நினைவூட்ட,

கையிலிருக்கும் குறுகியகாலத்தில் பல்லவி விடுத்த மிரட்டல்களை ஊர்ஜிதம் செய்வது சாத்தியமில்லை என்று மனம்நொந்தான் குணா.

“பல்லவிகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடு டா! அவ நல்ல பொண்ணு; உன் நிலைமையை புரிஞ்சுப்பா; ஒருவேளை பொய்யா காதலிச்சிருந்தாக் கூட இதைக்கேட்டதும், உன்ன உண்மையா நேசிப்பா நண்பா!” அஷ்வின் ஆலோசனை சொல்ல,

“நெவர்!” இரைந்தவன், “பல்லவி கண்டிப்பா சுதாவுக்காக உளவு பார்க்கத்தான் வந்திருக்கா! யமுனா பேசினத அவளுக்கே தெரியமா திருட்டுத்தனமா பதிவுசெய்து என்ன மிரட்டினா மாதிரி, என் வாயால உண்மையெல்லாம் சொன்னா வாக்குமூலம் பதிவுசெய்து வழக்குபோடுறது தான் அவளோட திட்டம்.” எல்லாம் இப்போது தெளிந்தது என்று கூறியவன்,

“ஒருபோதும் என் அம்மு பேருக்குக் களங்கம் வரா மாதிரி நான் எதுவுமே செய்யமாட்டேன்!” தீர்மானமாக உரைத்தான்.

“ஆனா, இப்போ நீ பல்லவியை கல்யாணம் செய்துக்க வேண்டியிருக்குமே!” நிதர்சனத்தை நினைவூட்டினான் அஷ்வின்!”

“பரவாயில்ல நண்பா! பெண் அவளே கள்ளாட்டம் ஆடி, துணிஞ்சு கல்யாணம் செய்துக்கறப்ப எனக்கென்ன வந்துது!” இறுமாப்புடன் சொன்னவன்,

“அப்படியே யமுனா எங்க கல்யாணத்தைப் பார்த்தாலும், எனக்காக சந்தோஷப்படுவா! இது தெரியாம அந்த மடச்சி ஏதோ, முதல்மனைவியை கண்ணுல காட்டவான்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்கா!” பல்லவியின் முட்டாள்தனத்தை விவரித்தான்.

வம்பை விலைக்கு வாங்கவேண்டாமென்று அஷ்வின் வலியுறுத்த, குணாவோ வம்புசெய்பவளை பக்கத்திலேயே வைத்துப் பழிவாங்கலாம் என்று மறுத்துப்பேசினான்.

எல்லாம் அவன் தலைவிதி படி நடக்கட்டுமென்று நண்பனுக்கு வாழ்த்துக்கூறி அழைப்பைத் துண்டித்தான் அஷ்வின்.

குணா பல்லவியை அழைத்தான்.

திரையில் குணா பெயரை கண்டவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதே சமயத்தில் கொஞ்சம் பதற்றமும்!

‘யமுனா! ஏதாவது சொதப்பிட்டியா டி!’ பதறியபடி அழைப்பை ஏற்றாள்.

“சொல்லுங்க குணா!” கம்மலான குரலில் வினவினாள்.

“பல்லவி! நம்ம இன்னைக்கே கல்யாணம் செய்துக்கலாம்!” தாழ்ந்தகுரலில் அவன் சொல்லவும், பேதை மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தாள்.

“ஆனா ஒண்ணு! தேவையில்லாமல் என் கடந்தகாலத்துல தலையிடாதீங்க! எனக்கு இன்னொரு கல்யாணம் ஆகுறதுன்னு யமுனாவுக்கு மட்டும் தெரிஞ்சிதுன்னா, அவளே இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்திடுவா! அப்புறம் உங்க காதல்கனவு கனவாவே போயிடும்!” அவன் எச்சரிக்க,

கேட்டவள் சிரிப்பை அடக்க சிரமப்பட்டாள்.

“எனக்கும் சக்களத்தி சண்டையெல்லாம் போடப்பிடிக்காது குணா! அதனால இனி உங்க முதல்மனைவி பற்றி பேச்சுக்கூட எடுக்கமாட்டேன் போதுமா!” அவளும் பதிலுக்கு நிமிர்வாகப் பேச, அதில் கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனான் அவன்.

“வெளிப்படையா ஒரு விஷயம் கேக்குறேன் பல்லவி! நீங்க எதுக்கு என்ன திருமணம் செய்துக்கணும்னு இப்படி கங்கணம் கட்டிட்டு அல்லாடுறீங்க!”

இதில் என்ன சந்தேகம் என்பதுபோல அவளும், “நான் கவரிமா பரம்பரை மிஸ்டர்.குணா. எனக்கு முதல் முதல்ல ப்ரொபோஸ் செய்த நீங்கதான் என் கணவர்ன்னு நான் அப்போவே முடிவு செஞ்சிட்டேன்.” குறும்பாகச் சொல்ல,

‘அழுத்தக்காரி! வாய்கூசாம பொய் சொல்றாளே! மனதில் நினைத்தவன், கோவிலில் சந்திக்கலாம் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

‘அழுத்தக்காரன்! வாய்திறந்து உண்மையை சொல்றானா பாரு!” முணுமுணுத்தவள், கைபேசியில் இருக்கும் தன்னவன் நிழற்படத்திற்கு முத்தமிட்டாள்.

கண்ணாடி முன் நின்று இடவலமாக அசைந்து, தன்னைத்தானே ரசித்துக்கொண்டாள் பேதை. நற்செய்தி கேட்டு இயற்கையாகவே பொலிவுற்ற முகத்திற்குக், கூடுதலாக தன்னவன் புத்தாண்டு அன்று பரிசளித்த ஒப்பனை அணிந்தவள் தேவதையாகவே ஜொலித்தாள்.

மாடியிலிருந்து வந்தவன், சாவித்ரியிடம், கோவிலுக்கு புறப்படலாம் என்று ஜாடையாக ஒப்புதல் அளிக்க, அன்னை மறுகேள்வியின்றி பூரித்தாள். மணிக்கு ஒருமுறை முடிவை மாற்றிக்கொள்ளும் இவனை எல்லாம் எந்த ரகத்தில் சேர்ப்பது என்று நொந்த தந்தை, கடமைக்காக அவர்களுடன் புறப்பட்டார்.

அகம் நுழைந்தவனிடம் அறிந்தும் அறியாதவளாய் – இடைவிடாமல்

அக்கப்போர் செய்வதுதான் அசட்டுத்தனமா – இல்லை

அரவணைக்க வந்தவளை நம்பியும் நம்பாமலும் – இல்லறத்தில்

அடக்கியாள நினைப்பதுதான் அகங்காரமா – இவர்களுக்குள்

அன்யோன்யம் தான் மலர்ந்திடுமா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…