பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 19.2

தன்னிடமிருந்து தப்பிக்க, குணா ஆடும் கள்ளாட்டத்தை அறிந்தவள், காலம் தாழ்த்தாமல் அன்று மாலையே சாவித்ரியை நேரில் சந்தித்துத் தன் விருப்பத்தையும் சொன்னாள்.

பேச வார்த்தையில்லாமல், ஸ்தம்பித்து நின்றாள் சாவித்ரி.

“குணாவோட பழகின கொஞ்ச நாளிலேயே அவரை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் ஆன்ட்டி! ஆனா அவருக்குத் திருமணத்துல ஈடுபாடு இல்லன்னு தெரிஞ்சதும், நானும் என் விருப்பத்தைச் சொல்லாமலேயே வந்துட்டேன்.

ஆனா இப்போ, அவர் திருமணம் செய்துக்க தயாரா இருக்கும்போது, என்னை ஏன் ஆன்ட்டி உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கக் கூடாது!” அது ஒரு நாளில் மலர்ந்த காதல் இல்லையென்று தெளிவுபடுத்தினாள்.

“ஆனால் குணா, கணவன் இழந்த பெண்தானே பார்க்க சொல்லியிருக்கான்!” சாவித்ரி அவன் நிபந்தனையை நினைவூட்ட,

“அவருடைய அந்த உயர்வான குணம்தான் உங்ககிட்ட வாய்விட்டு கேட்க தூண்டியது!” பல்லவியும் விடாமல் நச்சரித்தாள்.

சாவித்ரியின் மனதிலே வேறொரு தயக்கமும் இருந்தது.

“அதுமட்டுமில்ல பல்லவி! உன் முதல் திருமண வாழ்க்கை விவாகரத்துல முடியும்னு…பாட்டி…”, வார்த்தைகளைத் தேட,

பல்லவி அவள் தயக்கத்தை புரிந்துகொண்டாள். அவள் அவளாகவே இருந்திருந்தால், அது வெறும் மூடநம்பிக்கையே என்று தர்க்கம் செய்திருப்பாள். ஆனால், எப்படியாவது குணாவின் கரம் பிடித்தே தீரவேண்டுமென்று பிடிவாதமாக இருந்தவள்,

“உங்க பயம் நியாயமானதுதான்! நான் பாட்டி சொன்ன அத்தனை பரிகாரமும் செய்யறேன். அப்போ என்னை உங்க வீட்டு மருமகளா ஏத்துப்பீங்களா ஆன்ட்டி!” பரிதாபமாகக் கெஞ்சினாள்.

பல்லவியின் உறுதி, மகனுக்கும் அவளுக்கும் உள்ள நல்லதொரு புரிதல், மதுமிதா மீது அவள் பொழியும் அன்பு என்ற அத்தனை நல்ல விஷயங்களும் கண்முன் தோன்ற,

“உன்ன மருமகளா ஏத்துக்க எனக்கென்ன கசக்குமா! இன்னும் என்ன ஆன்ட்டி! உரிமையா அத்தைன்னு கூப்பிடு மா!” சம்மதம் தெரிவித்து அவளை ஆரத்தழுவினாள்.

கணவரிடமும் மகனிடமும் பேசிவிட்டு, அவளை முறைப்படி பெண்கேட்க வருவதாகக் கூறினாள். பல்லவியும் குடும்பத்தினரிடம் பேசுவதாகச் சொல்லி,

“ஆன்ட்டி…!” பல்லை கடித்துக் கொண்டு அசடுவழிந்தவள், “அத்தை! நிச்சயதார்த்தம் நடக்கும்வரை, உங்க அண்ணன் வீட்டில் இதைப்பற்றி எதுவும் சொல்லாதீங்க! குழந்தையை மீட்க அவங்கப் பிரச்சனை பண்ணலாம்!”

 உண்மைகளை அறிந்தால் சுதா வேறொரு வக்கீல் மூலமாக குணாமேல் வழக்கு தொடர்ந்துவிடுவாளோ என்று அஞ்சினாள்.

சுதாவின் அவசரபுத்தி, கோபம் அனைத்தும் அறிந்தவள், பல்லவி திட்டத்திற்குச் செவிசாய்த்தாள்.

மாலை வீட்டிற்குத் திரும்பிய மனோகரிடம் குணாவின் மனமாற்றத்தைப் பற்றி விளக்கினாள். சுயநலவாதியின் இந்த திடீர் மாற்றமே மர்மமாக இருக்கும் நிலையில், பல்லவியின் அறிமுகம் முதல் அவள் காதல் வரை அனைத்தும் கேட்டவருக்கு இன்னும் வியப்பாக இருந்தது.

மேல்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள், சட்டம் படித்தவள், குணாவிற்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட மெனக்கெடுவது ஏன் என்று யோசித்தார்.

நினைத்ததைச் சாதிக்கும் பிடிவாதம் குணம்கொண்ட மகனின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதே மேலென்று சிந்தித்தவர், மனைவி விருப்பத்திற்குத் தலையசைத்து பட்டும்படாமலும் இருந்தார்.

கணவன் மனதை வென்றவள் மகனிடம் நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும் உற்சாகத்துடன் நித்திரை கொண்டாள்.

இதற்கிடையே பல்லவியும் நீலாவதியிடம் தன் விருப்பத்தைப் பகிர்ந்தாள். குணாவைப் பற்றி குறைசொல்ல ஒன்றுமில்லாத போதும், பேத்தி இரண்டாம் தாரமாக வாக்கப்படுவதை எண்ணி வருந்தினாள்.

“நீலுமா! நீயும் தானே அப்பாவ எங்களுக்காக இன்னொரு திருமணம் செய்துக்க சொல்லி கட்டாயப்படுத்தின! எனக்குக் கிடைக்காத தாய்பாசத்தை நான் மதுமிதாவுக்கு கொடுக்கணும்னு நினைக்கறேன்!” நைச்சியமாகப் பேசி மடக்கினாள்.

அதற்குமேல் நீலாவதியால் மறுப்பு சொல்லமுடியவில்லை.

“உன் நல்லமனசுக்கு எல்லாமே நீ நினைத்தபடி அமையும் டி ராசாத்தி!” ஆசிர்வதித்து பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

குடும்பத்தினரின் சம்மதம் பெற்றுவிட்டதைச் சொல்வதற்கு, சாவித்ரியை நேரில் காண வந்தாள்.

“பல்லவி…அது…அது…குணா அவன் நிபந்தனையில் ரொம்ப பிடிவாதமா இருக்கான் மா…அதனால….” சாவித்ரி தடுமாற,

குணாவின் சுபாவம் அறிந்தவளோ புன்முறுவலோடு, “பயப்படாதீங்க அத்தை! அவர்கிட்ட நான் பேசுறேன்! இந்தக் கல்யாணம் நிச்சயமா நடக்கும்! நீங்க நிச்சயதார்த்தத்துக்கு நல்லநாள் பாருங்க!” தன்னம்பிக்கை ததும்பும் குரலில் உரைத்தாள்.

வீட்டிற்குத் திரும்பியவள், தன்னவனுடன் காதல் யுத்தம் செய்ய ஆயத்தமானாள்.

எப்படியும் அழைப்பை ஏற்க மாட்டான் என்று அறிந்தவள், அவனுக்குக் குரலஞ்சலில் வீரவசனம் பேச தொண்டையைச் செருமிக்கொண்டாள்.

எப்படியும் இவள் குரலஞ்சல் அனுப்பி தொல்லை செய்வாள் என்று அறிந்தவன் அழைப்பை ஏற்றான்.

“அட! என்ன பேரதிசயம் ப்ரொஃபெஸர்! அழைப்பைத் துண்டிக்காமல் பேசுறீங்க”, சீண்டினாள்.

“உங்களுக்கு என்ன வேணும் பல்லவி?” கடுப்பானான் அவன்.

“நீங்கதான் வேணும் குணா!” கடுப்பேத்தினாள் அவள்.

“ப்ச்ச….” அவன் பொறுமையிழக்க, பல்லவி பொறுப்பாகப் பேசினாள்.

“சரி! நான் நேரடியாவே கேக்குறேன் குணா! யாரோ அறிமுகமில்லாத ஒருத்தர கல்யாணம் செய்துக்கறத்துக்குப் பதிலா, உங்கள காதலிக்கறேன்னு சொல்ற என்னைக் கல்யாணம் செய்துக்கலாம்ல…ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம்!”

“இன்னொரு கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னதே உங்களுக்கும் அந்தக் குட்டிச்சாத்தானுக்கும் பதிலடி கொடுக்கத்தான்” அவனும் எந்தவித தயக்கமும் இல்லாமல் உண்மையை உரைத்தான்.

காதலை உணராமால், தன்னை ஒரு எதிரியாகவே பார்க்கும் இவனிடம் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் வேலைக்கு ஆகாதென்று புரிந்துகொண்டாள்.

“உங்களுக்குத் தெரியாம தந்தைவழி பரிசோதனை செய்ய தெரிஞ்ச எனக்கு, உயிரோட இருக்குற உங்கள் முதல் மனைவியை கண்டுப்பிடிக்கறது கடினமில்ல மிஸ்டர்.குணா…ஆனால்” அவள் முடிக்கும் முன்,

“போதும் நிறுத்தங்க பல்லவி!” குறுக்கிட்டவன், “என் திருமண வாழ்க்கையில வெளிய சொல்லாத ரகசியங்கள் இருக்குத்தான்; அதை நான் மறுக்கல; ஆனா உங்களால எதையும் கண்டுபிடிக்கவும் முடியாது; அதைக்காரணம் காட்டி நீங்க மிரட்டினாலும் உங்களைக் கல்யாணம் செய்துக்கமாட்டேன். இனி எனக்கு ஃபோன் செய்யாதீங்க!” திடமாகச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.

 ‘அழுத்தக்காரன் எதற்கும் மசியமாட்டேன் என்கிறானே!’ மனதில் கொஞ்சியவளின் புத்திக்கு ஒன்று எட்டியது.

யமுனாவை கண்டுப்பிடித்துவிடுவேன் என்று சொல்லியும், இம்முறை அவன் திடுக்கிடாமல்,சவால்விட்ததைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள்.

அது யமுனா மீதுள்ள அதீத நம்பிக்கையாலா இல்லை தன்னைக் குறைத்து மதிப்பிடுகிறானா என்று ஆராய்ந்தவளுக்கு, அதையும் சோத்திதுப் பார்த்துவிட வேண்டுமென்று தோன்றியது.

யமுனாவை அழைத்தாள்.

அழைப்பை ஏற்றதும் மாமன் புராணம் பாடியவளை இரண்டு நிமிடம் சகித்துக்கொண்டாள் பல்லவி.

“போதும் யமுனா! காதுல ரத்தம் வருது!” கெஞ்சியவள், “ஃபோன் செய்தது நான்! என்னைக் கொஞ்சம் பேசவிடுறியா!” கறாராக குறுக்கிட்டாள்.

“சொல்லுங்க பல்லவி!” அசடுவழிந்தாள் யமுனா.

குணா தன் காதலைத் திட்டவட்டமாக மறுத்துப் பேசியதை விளக்கியவள்,

“அதனால உன்னோட மாமாவ பயமுறுத்த, அவருக்கு நம்ம சேர்ந்து எடுத்துகிட்ட புகைப்படம் ஒண்ணு அனுப்பி வெக்கப்போறேன். அவர் கட்டாயம் உன்கிட்ட பேச முயற்சி செய்யமாட்டார். ஒருவேளை செய்தாருனா, நான் சொல்றா மாதிரி பேசு!” என்றவள், அவள் ரகசிய திட்டங்களை விவரித்தாள்.

மறுமுனையில் கேட்டவள் பக்கென்று சிரித்தாள்.

“இப்படியெல்லாம் மெனக்கெடுவதற்கு மாமாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாமே! ஏன் என்னோட மாமாவ இவ்வளவு கொடுமை படுத்துறீங்க!” வினவினாள்.

“அப்படித்தான் கொடுமை படுத்துவேன்.” உதட்டைச் சுழித்தவள்,

“நண்பர்களாக இருந்தவரை, எவ்வளவு பாசமா பழகினார்; காதலைச் சொன்னதும், என்ன ஆட்டம் ஆடுறார். அவருக்கு என்மேல நம்பிக்கைவந்து உண்மைகளை சொல்ற வரைக்கும், நானும் விடறதா இல்லை.” திட்டவட்டமாக உரைத்தாள்.

“இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா, உங்கமேல நம்பிக்கைவந்து சொல்லமாட்டார். பாவம், பயத்துல வேறவழியில்லாம உளறிடுவார்.” யமனா மேலும் சிரிக்க,

“யாரு! உன் மாமாவா!” ஏளனமாகக் கேள்வியைத் திருப்பியவள்,

“பயத்துல ரகசியங்களை மறைக்க தப்பு வேணும்னா செய்வார். நிச்சயமா உன்னபற்றி மூச்சுக்கூட விடமாட்டார். அவர் தைரியமா ஒருத்தர்கிட்ட உண்மைகளைப் பகிர்ந்துக்குறார்னா, அது அவர் நம்பிக்கையின் பாத்திரமா இருக்குற ஒருத்தர்கிட்ட மட்டும்தான் இருக்கும். அந்த நம்பிக்கையான உறவா, அவர் மனசுல நான் இடம்பிடிக்கணும்!” ஏக்கத்துடன் தெளிவுபடுத்தினாள்.

அஷ்வினை தவிர குணா வேறொருவரிடமும் தன்னைப்பற்றி சொன்னதில்லை என்று சிந்தித்தவள், பல்லவியின் யூகம் சரியென்று ஒப்புக்கொண்டாள். குணாவின் மனதில் இடம்பிடிக்க போராடும் பல்லவியின் விடாமுயற்சியையும் மனதார மெச்சினாள்.

‘இதை நான் முகநூலில் பதிவேற்றவா?’ குறுஞ்செய்தியுடன், டெல்லியில் யமுனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை குணாவின் கைபேசிக்கு அனுப்பினாள்.

கண்டவன் பதறியடித்துகொண்டு அவளை அழைத்தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“பல்லவி! என்ன காரியம் செஞ்சிருக்கீங்க!” பெருங்குரலில் கர்ஜித்தான்.

“அட மிஸ்டர்.குணா! இனி என்னை அழைத்துப் பேசாதேன்னு சொல்லிட்டு, இப்போ நீங்களே வலிய வந்து பேசுறீங்க! உங்களுக்கும் என் மேல காதல் வந்திருத்தா!” சினம் கொண்ட சிங்கத்தைச் சீண்டினாள் பெண்மான்.

“போதும் பல்லவி! எங்களை நிம்மதியா வாழவிடுங்க! மதுமிதா என்னவிட்டு பிரியக்கூடாதூன்னு பிரார்த்தனை செய்த நீங்களே இப்படியெல்லாம் செய்யறது நல்லாயில்ல!” மனம்நொந்தான் குணா.

ஆணவத்தோடு அவன் எதிர்த்த போதெல்லாம் ஏட்டிக்குப்போட்டி சீண்டியவள், அவன் அழாத குறையாகக் கெஞ்சியதும் உடைந்துபோனாள்.

“அதையே தான் நானும் சொல்றேன் குணா! மதுமிதா உங்களோடவே இருக்கணும்னு பிரார்த்தனை செய்த நான் எப்படி சுதா பக்கம் சாய்வேன்!” அழுத்தமாகச் சொன்னவள்,

“என் காதல் நிஜம் குணா! என்ன நம்புங்க!” தாழ்ந்த குரலில் மன்றாடினாள்.

யமுனாவை எப்படிக் கண்டுபிடித்தாள் என்று சிந்தனையில் கலந்திருந்தவனுக்கு அவள் பேசியது எதுவும் கேட்கவில்லை.

அதை உணரந்தவள் போல, அவளே மேலும் பேசினாள்.

“பயப்படாதீங்க குணா! ஒரு கேஸ் விஷயமா டெல்லி வரை போயிருந்தேன். என் கட்சிக்காரர் ஒரு சமூக சேவகி. மறுவாழ்வு மையம் நடத்தும் யமுனா என்ற பெண்ணை தற்செயலா அறிமுகம் செய்துவைத்தாங்க; அவ்வளவுதான்!” பெருமூச்சுவிட்டவளால், அவனைப்போல முழுவீச்சாகக் கட்டுக்கதை சொல்லமுடியவில்லை.

அப்போதும் அவனிடம் மௌனமே. இம்முறை யமுனாவின் சேவையைப் பற்றி மனதளவில் பூரித்தான்.

“புரிஞ்சுக்கோங்க குணா! உங்க முதல் மனைவி யமுனா உங்க வாழ்கையில் முடிந்துபோன அத்தியாயம். அதை நம்ம இனி புரட்டிப் பார்க்கவேண்டாம். நான் பார்த்துப், பழகின குணாவோட கைகோர்த்து புதுசா ஒரு காதல் காவியம் எழுத விரும்புறேன்.” மன்றாடினாள் பேதை.

“சரி! உங்களை நம்பறேன் பல்லவி!” இறங்கி வந்தவன், “ஆனால் உண்மையிலேயே எனக்கு வேறொரு கல்யாணத்துல விருப்பமில்ல; சுதா வழக்கு போடாம இருக்கத்தான்….” வெளிப்படையாகத் தன் திட்டத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கினான்.

‘அழுத்தக்காரன்! இவ்வளவு பேசியும் உண்மையை சொல்றானா பாரு!’ மனதில் ஏசியவள்,

“தெரியும் குணா! எப்படியும் ஆறு மாசத்திற்கு அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி கல்யாணம் வேண்டாம்னு மறுக்கப்போறீங்க. அந்தப் பெண் ஏன் நானா இருக்கக்கூடாது!” வாய்ப்பு கேட்டாள்.

‘இவள் எப்படி இத்தனை துல்லியமாக என் மனதை படிக்கிறாள்!’ என்று வாய்பிளந்தான்.

அதையும் உணர்ந்தவள் போல, “ரொம்ப யோசிக்காதீங்க மிஸ்டர்.குணா! இத்தனை நாள் பழகியிருக்கேன். உங்க தில்லுமுல்லு எல்லாம் எனக்குத் தெரியாதா!” கிண்டலாகக் கேட்க, அவனும் சிரிக்கத்தான் செய்தான்.

“அப்போ சம்மதம் சொன்னா, ஆறுமாசத்திற்குத் தொல்லை செய்ய மாட்டீங்க! அப்படித்தானே!” தனக்கு அதில் ஆதாயம் உள்ளதா என்று சோதித்தான்.

“நிச்சயமா தொல்லை செய்யமாட்டேன் குணா! ஆனால் நீங்க நிச்சயதார்த்தத்துக்கு நேருல வரணும்!” நிபந்தனையும் கோர்த்துவிட்டவள், அவன் குறுக்குவிசாரணை செய்ய இடம்கொடுக்காமல் தொடர்ந்துப் பேசினாள்.

“இந்த ஆறுமாசம் இடைவேளை ரெண்டு பேருக்கும் நிதானமா சிந்திக்கறதுக்கு அவகாசம். என் முடிவுல மாற்றமிருக்காது. இருந்தாலும் உங்க முடிவு எதுவாயிருந்தாலும் நான் மனப்பூர்வமா ஏத்துப்பேன். ஆனா நீங்க எனக்கு பயந்துகிட்டு தலைமறைவா ஆகமாட்டீங்கன்னு எனக்கு ஒரு உத்திரவாதம் வேண்டாமா!” நிதர்சனத்தை உரைக்க,

அதற்கும் அந்த கல்லுளிமங்கன் சிரித்தே மழுப்பினான்.

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய, அவனையே சாவித்ரியிடம் நற்செய்தியை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

விட்டுக்கொடுத்துப் பேசி, கள்வனை ஊருக்கு வரவைப்பதே, தன் இதயச்சிறையில் நிரந்தரமாகப் பூட்டிவைக்கத்தான் என்று அறியாதவன்,

“அம்மா! நான் பல்லவியை திருமணம் செய்துக்கறேன்! நிச்சயதார்த்தத்துக்கு தேதி பார்த்து சொல்லுங்க! ஊருக்கு வரேன்! கல்யாணம் ஆறு மாதத்திற்குப் பிறகு வெச்சிக்கலாம்!” அடுக்கடுக்காக நற்செய்திகளைச் சொல்ல தாய்மனம் பூரித்துத்தான் போனது.

அகம் அறிந்தவளின் அன்பில் ஆதாயம் தேடுபவன் – இல்லற

அந்தரங்களை மறைக்க அப்பட்டமாக பொய்சொல்பவன் – இனி

அவள் அன்பை உணராமல் அழிந்துப் போவானோ – இல்லை

அவள் இதயச்சிறையில் ஆயுட்கைதி ஆவானா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….