பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 19.1

குணா வீசிய காகிதத்தின் கூர்முனை, பல்லவியின் கருவிழியைப் பதம் பார்த்துவிட்டு தரையிறங்கியது. நீர் கசியும் கண்களைக் கசக்கியவாறு அதை எடுத்தவளுக்கு, எழுத்துக்கள் மங்கலாகத் தெரிய,

“இது என்ன குணா?” கபடமற்ற குரலில் வினவினாள்.

“போதும் நிறுத்துடி! இன்னும் ஏன் அப்பாவி மாதிரி நடிக்கற! உன்ன உளவுபார்க்க அனுப்பினாளே ஒருத்தி…அவகிட்ட சொல்லு…மோசடி செய்த குற்றத்திற்காக நானும் என் அண்ணனும் அமெரிக்காவில் சிறைவாசம் அனுபவிச்சிட்டு இருக்கோம்னு!” ஆக்ரோஷமாக மிரட்டினான்.

அண்ணன் பெயரை குறிப்பிட்டதும், அவன் பரிசோதனை பற்றி அறிந்துவிட்டான் என்று புரிந்துகொண்டாள். அதேசமயம் அவன் இரைச்சல் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த சரணுக்கும் கோபம் தலைக்கேறியது.

“தாராளமா எங்கமேல புகார் கொடுடா! உயிரோடு இருக்கும் மனைவி இறந்துட்டான்னு பொய்சொல்லி ஊர ஏமாத்திட்டு இருக்கான்; பெறாத பிள்ளைக்கு அப்பான்னு சொந்தம் கொண்டாடுறான்னு நானும் வாக்குமூலம் கொடுக்கறேன்!” வெஞ்சினத்துடன் உறுமினான்.

யமுனாவை பற்றியும் தெரியுமா!’ திடுக்கிட்டவன் உறைந்துபோக அவன் மௌனத்தைத் தனக்குச் சாதகமாக்கி மேலும் மிரட்டினான் சரண்.

“குணச்சித்திர நடிகர் மிஸ்டர்.குணசேகரன் குழந்தை வளர்ப்பில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. குழந்தையின் பாதுகாப்பு கருதி குறுக்குவழியில் பரிசோதனை செய்யவேண்டிய சூழ்நிலைன்னு சொன்னா எங்கள யாரும் கைது செய்ய முடியாது…மிஞ்சிப்போனா விசாரணை கமிஷன் வைப்பாங்க…

அப்படியே விசாரணை நடத்தினாலும், அவங்க என்ன, என்னோட மாமனா மச்சானா…தப்பு செஞ்சிட்டோமேன்னு அவங்க முன்னால அவமானபட்டு நிற்க!” இளக்காரமாகப் பேசியவன்,

“ஆனா உன் நிலைமையை யோசிச்சு பாரு…நீ பதில் சொல்லவேண்டியது உன்னை உத்தமன்னு நம்புற உண்மை உறவுகள்கிட்ட!”, எதில் வலி அதிகமென்று சிந்திக்கச் சொன்னான்.

அண்ணனின் குத்தல் பேச்சில், குற்றமே செய்யாமல் குற்றவாளியாகக் கூனிக்குறுகி நிற்கும் தன்னவனை ஆறுதலாகக் கட்டியணைக்கப், பெண்மனம் துடித்தது.

“இன்னும் ஏன் இங்கேயே நிக்கற! போய் எங்க மேல புகார் கொடு! தக்க ஆதாரங்களோட வாக்குமூலம் கொடுக்க நாங்களும் தயார்!” திமிராக உரைத்தவன்,

“பித்தலாட்டம் செய்யறவன் எல்லாம் மிரட்ட வந்துட்டான்!” முணுமுணுக்க,

“அவசரப்பட்டு வார்த்தையை விட்டுடாதீங்க அண்ணா! என்னதான் இருந்தாலும், குணா நாளைக்கு இந்த வீட்டிற்கு மாப்பிள்ளையா வரப்போறவரு!”

அரக்கனை விட்டுவிட்டு தன்னை அதட்டுகிறாளே என்ற அண்ணனின் பரிதவிப்பை உணர்ந்தபோதும் குணாவிற்காகவே வாதாடினாள்.

‘சாயம் வெளுத்த பின்னும் எதற்கு இந்த நாடகம்’ அவளை கேள்வியாகப் பார்க்கும் தன்னவனின் கைகோர்த்து, “வாங்க குணா! நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்!” மென்மையாக அழைத்தாள் பல்லவி.

தங்கை கெஞ்சுவதும், வஞ்சகன் முரடு பிடிப்பதுமென அவர்களைப் பார்க்க சகிக்கமுடியாமல், “எதுவாயிருந்தாலும் இங்கேயே பேசு!” உத்தரவிட்டான் சரண்.

“எனக்கு அவரோட தனியா பேசணும்னு சொல்றேன்ல!” எகிறினாள் பல்லவி.

கோபத்தின் எல்லையைக் கடந்த சரண், விஷ்ணுவைத் தூக்கிக்கொண்டு, “நான் வெளிய போறேன்! போதுமா!” கர்ஜித்து வேகநடையிட்டான்.

குணாவும் வாசலை நோக்கி நகர அவனை வழிமறித்தாள் பல்லவி.

“நம்புங்க குணா! சுதா உங்கமேல குற்றம் சுமத்தியபோதும், தொழில்தர்மத்தையும் மீறி உங்களுக்காகத்தான் யோசிச்சேன். தந்தைவழி பரிசோதனை செய்யச் சொன்னதும், உங்க பக்கத்து நியாயத்தை பலப்படுத்ததான்!”

அவளை வெட்டும் பார்வையில் நோக்கியவன், “பரிசோதனை செய்யாதன்னு சொல்லியும், ரத்த தானம்ன்ற பேருல போலியா கையொப்பம் வாங்கி திருட்டுத்தனமா பரிசோதனை செய்யறதுதான் உங்க தொழில்தர்மமா?” ஏளனமாகக் கேட்டான்.

“தப்புதான் குணா!” மன்னிப்பு கேட்டவள், குழந்தைகள் பாதுகாப்பு சேவை மையம் அன்று வீட்டில் நடத்திய புலனாய்வுகளின் விவரங்களைச் சரணிடம் சொன்னதால் ஏற்பட்ட குழப்பம் என்றவள்,

“பரிசோதனை செய்யலாம்னு நான் சொன்னப்போவே என்ன நம்பி, ஒளிவுமறைவு இல்லாமல் பேசியிருந்தீங்கன்னா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதில்ல.” அவன் தவறையும் சுட்டிக்காட்டினாள்.

“என்னோட அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்துக்க, நீங்க எனக்கு யாரு?” கொச்சையாகப் பேசி அவமதித்தான்.

“அன்று உங்களோட ஒரு உண்மையான சிநேகிதி! இன்று…” தொடங்கியவளின் விழிகள் தயக்கத்தில் தரையில் படர்ந்தது.

“சிநேகிதியா!” இழிவாகச் சிரித்தவன், “என் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட என் உறவுகளுக்கே உரிமையில்லாத போது, நீ எம்மாத்திரம்!” செய்நன்றி மறந்து அவமதித்தான்.

சுருக்கென்று குத்திய வார்த்தைகளில் எரிச்சலடைந்தவள், “அப்போ! ஒரு வக்கீலா உங்களைக் குறுக்குவிசாரணை செய்திருந்தா உண்மைகளை உரக்க சொல்லிருப்பீங்களா?” திடமான குரலில் பொங்கினாள்.

“இது…இது…இதுதான் உன்னோட உண்மையான சுயரூபம் பல்லவி!” ஒற்றைவிரலை காட்டி உரைத்தவன், “நீ எத்தனை ஆதாரங்கள் சேர்த்தாலும், என் மதுமிதாவை என்னிடமிருந்து பிரிக்கமுடியாது!” சவால்விட்டு புறப்பட எத்தனித்தான். 

உயிரானவளை ஊர் போற்ற, உண்மைகளை மறைக்க போராடும் இவனிடம் தர்க்கம் செய்வது நியாயமில்லை என்று நொடியில் உணர்ந்தவள்,

“ஒரு நிமிஷம் குணா!” மீண்டும் கையசைத்து தடுத்தாள்.

“கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க! நீங்க இத்தனை பொய்சொன்ன பிறகும், உங்களைக் காதலிக்கறேனே…ஏன் தெரியுமா?” இடைநிறுத்தி அவனை ஏறிட்டாள்.

‘காதல் என்னும் பெயரில் கள்ளாட்டம் ஆடுகிறாய்!’ மனதில் நினைத்தவன் அசையாமல் நின்றான்.

“தனிமனிதனாகக் குழந்தையை வளர்க்கும் குணாவவையே நான் பிரமிப்பா பார்த்தேன். அப்படியிருக்க அந்தக் குழந்தை உங்களுக்குப் பிறக்கலன்னு தெரிஞ்சியிருந்தும் அவமேல உயிரா இருக்குற உங்க பாசம்தான் என்னை உங்ககிட்ட ஈர்த்தது!” அவன் கரத்தை இறுக பற்றிக்கொண்டவள்,

“எனக்கு உங்க கடந்தகாலத்தைப் பற்றிக் கவலையில்லை. யார் சரி? யார் தப்பு? எதுவுமே நீங்க எனக்கு சொல்லவேண்டாம். இப்போ இருக்குற குணா…மதுமிதா மேல கண்மூடித்தனமான பாசம் வெச்சிருக்க இந்த குணாவோட நிழல்ல வாழ எனக்கும் இடம் கொடுங்க. அதுபோதும்!” முடிந்த அளவிற்கு தன் காதலின் ஆழத்தை எடுத்துரைத்தவள், அவன் பதிலுக்காக விமான நிலையத்தில் காத்திருப்பேன் என்று கூறி, சிறைசெய்த கரங்களை விடுவித்தாள்.

செவிடன் காதில் ஊதியச் சங்குபோல எந்த உணர்ச்சியும் காட்டாமல் நகர்ந்தான்.

மீதமிருந்த நாட்களில், அண்ணனுடன் ஏற்பட்ட விரிசல்களை ஒட்டவைக்க பெரும்பாடுபட்டாள்.

விமான நிலையத்தின் அலைமோதும் கூட்டத்தில் தன்னவனை தேடிய விழிகள் ஏமாற்றத்தில் துவண்டுபோனது. பலமுறை முயற்சி செய்தும், அவன் அழைப்பை ஏற்கவில்லை. வேண்டுமென்றே தன்னைத் தவிர்ப்பதை உணர்ந்தவள்,

‘இவன மிரட்டினாதான் வேலைக்காகும்!’ எண்ணியபடி, அழுத்தமான தோரணையில் குரலஞ்சல் பதிவுசெய்தாள்.

“என் முகம் பார்க்க முடியாமல் ஒதுங்கி இருக்கீங்கன்னா, உங்களுக்கும் என் மேல காதல் இருக்குன்னு புரியுது குணா! நான் ஊருக்குப் போய் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன். வந்து என் கழுத்துல தாலிகட்டுங்க; தேன்நிலவுக்கு எங்க போகுறதுன்னு நேருல பார்த்துப் பேசிக்கலாம்; மிஸ் யூ ஸ்வீட்ஹார்ட்!”

தன்மான சிங்கம் அதைக்கேட்ட மறுகணமே, ‘‘மனசுல ரதிதேவின்னு நெனப்பு!’ முணுமுணுத்தபடி அழைத்தான்.

திரையில் அவன் பெயர் கண்டதும் ‘அப்படி வாங்க வழிக்கு’ நமுட்டுச் சிரிப்புடன் அழைப்பை ஏற்றவள்,

“அதான் தேன்நிலவு பற்றி அப்புறம் பேசலாமுன்னு சொன்னேனே!” அவனை இன்னும் கடுப்பேத்தினாள்.

“எனக்கு எந்தவித தயக்கமும் இல்ல; என் யமுனா இருக்குற இடத்துக்கு வர முயற்சி செய்யாதீங்க; மதுமிதாமேல உண்மையிலேயே அக்கறை இருந்தா அந்தக் குட்டிச்சாத்தானோட சேர்ந்து ஆடாதீங்க!” அவன் கடுகடுக்க,

‘உங்க யமுனா இடத்தை யார் கேட்டா!’ மனதில் நினைத்தவளின், இதழ்கள் புன்னகையில் தாண்டவமாடியது.

“வழக்கு எல்லாம் போடமாட்டேன் குணா! மதுமிதாமேல இருக்குற அக்கறைனால இல்ல; என் புருஷன ஜெயிலுக்கு அனுப்பிட்டு நான் எப்படி தனியா டூயட் பாடமுடியும்.” அப்பாவியாக உரைத்தவள்,

“நீங்க என் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து பேசியிருந்தா நானும் உங்களுக்காக எத்தனை நாட்கள் வேணும்னாலும் காத்திருந்திருப்பேன். ஆனா இப்போ “யூ டோன்ட் ஹேவ் எ சாய்ஸ் டியர்! முகூர்த்த நாள் பார்த்து சொல்றேன் வந்து சேருங்க!” திடமாகச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தாள்.

இனி அவளால் மதுமிதாவிற்கு ஆபத்து இல்லை என்று மனதளவில் நெகிழ்ந்தவன், பகட்டு வாழ்க்கை விரும்பும் அவளுக்குத் தன்மீது உண்டான காதலும் நாளிடைவில் மறைந்துவிடும் என்று அலட்சியம் கொண்டான்.

ஆனால் அவள் செய்யும் தந்திரங்களில் இனி திக்குமுக்காட போகிறான் என்று யார் அவனிடம் சொல்வது.

பணிக்குத் திரும்பியவள், மாமனை வழிக்குக் கொண்டுவர, சுதாவை நேரில் வரும்படி அழைத்தாள். குணாவிற்கு எதிரே பலமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று விவரித்தவள்,

“பேசாம உங்க மாமாவ இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்லி வற்புறுத்துங்க!” அலட்டலே இல்லாமல் யோசனை சொன்னாள்.

“பெண்சகவாசத்துக்குப் பேர் போனவனைத் தண்டிக்கச் சொன்னா, உல்லாசமா வாழ வழிசொல்றீங்களே!”, பொங்கினாள் சுதா.

“அப்படியில்ல சுதா! குழந்தைக்குப் பெண்ணின் அரவணைப்பு ரொம்ப முக்கியம்; குழந்தையை நாங்க வளர்க்கறோம், இல்ல நீங்க மறுமணம் செய்துக்கோங்கன்னு அவரை மிரட்டுங்க; பெண்சகவாசம் இருந்தால், நிச்சயமா திருமண பந்தத்துல மாட்டிக்க விரும்பமாட்டாரு; அதையே காரணம்காட்டி, நம்ம குழந்தையை மீட்டுடலாம்!” என்றாள்.

சட்டப்புத்தகத்தைக் கரைத்துக் குடித்தவள்போல பல்லவியை மெச்சினாள் சுதா. பல்லவியும் அவளை நம்பவைக்கும் விதத்தில், பிரதிவாதியிடம் முன்வைக்கும், கோரிக்கையைக் கைப்பட எழுதித்தரச் சொன்னாள்.

மாமனிடம் நேருக்கு நேர் பேச தயங்கிய சுதா, அத்தையிடம் முறையிட்டாள். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தவள் மீண்டும் பிரச்சனை செய்கிறாளே என்று பதறிய தாய்மனதிற்கு பல்லவி நினைவு வந்தது.

அனைத்தும் அறிந்தும் அறியாதவளாக, சாவித்ரியின் புலம்பல்களைக் கேட்டவள்,

“இந்திய சட்டப்படி அவங்க கேக்குற விஷயம் ரொம்ப நியாயமானது ஆன்ட்டி. குணா நல்லவருன்னு நமக்குத் தெரியும்; ஆனா இந்தமாதிரி சூழ்நிலையில் குணா என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும், குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்குமாவது பெண்ணின் அரவணைப்பு அவசியம்னு தீர்ப்பு அவங்களுக்குச் சாதகமாதான் வரும்.” தன்னால் முடிந்த அளவிற்குச் சாவித்ரியை குழப்பிவிட்டாள்.

சாவித்ரியோ மகனிடம் அதைப்பற்றி பேசக்கூடத் தயங்கினாள்.

“இதெல்லாம் நீயே அவன்கிட்ட கொஞ்சம் பொறுமையா எடுத்துச்சொல்லுமா! நீ சொன்னா அவன் நிச்சயம் கேட்டுப்பான்!” மதுமிதாவிற்குத் தீக்காயமான போது, அவள் செய்த உதவியைச் சுட்டிக்காட்டினாள்.

“அப்போ நான் அங்க இருந்ததுனால தலையிட்டேன். ஒவ்வொரு முறையும் அவர் விஷயத்துல தலையிட முடியுமா ஆன்ட்டி! நீங்களே நேரடியா பேசுங்க! வேணும்னா, சட்டரீதியா இதுல இருக்குற சிக்கல் எல்லாம் நான்தான் சொன்னேன்னு சொல்லுங்க! அவருக்கு இந்த விஷயத்துல என்கிட்ட பேசணும்னு தோணினா, அவரே எனக்கு போன் செய்வார்!” அப்பாவியாகப் பேசி மறுத்தாள்.

விஷயம் அறிந்ததும், திட்டுவதற்காகவாவது குணா தன்னை தொடர்புகொள்வான் என்ற மிதப்பில் இருந்தாள் பல்லவி.

கடவுள் மீது பாரத்தைப் போட்டு, அனைத்தையும் ஒப்பித்த சாவித்ரி, மகன் எரிமலையாக வெடிக்கும் அந்த நொடிக்காகக் காத்திருந்தாள்.

குணாவோ, பல்லவியின் பெயரை கேட்டதுமே, அவள் சூழ்ச்சிகளைக் கண்டுகொண்டான். தந்திரம் செய்பவர்களை, அவர்கள் வழியிலேயே மடக்க வேண்டுமென்று தெளிந்தவன்,

“பல்லவி சொல்றது ரொம்ப சரிதான் மா!” மென்மையிலும் மென்மையாகத் தொடங்கினான்.

அதுவே சாவித்ரிக்கு வியப்பாக இருந்தது.

மதுமிதாவின் நலனைக் கருதி மறுமணம் செய்து கொள்வதாகக் கூறியவன், அப்பெண் திருமணமாகி கணவன் இழந்தவளாகக் இருக்கவேண்டும் என்றும் அப்படிப்பட்டவள் தான் தன் நிலைமையைப் புரிந்துகொண்டு அனுசரிப்பாள் என்றும் நிதானமாகப் பேசினான்.

கண்பது கனவா நிஜமா என்று சாவித்ரி முழிக்க,

“ஆனால் ஆறு மாசத்திற்குப் பிறகு திருமணம் செய்துக்கறேன்.” தடைவிதிக்க, தாய்மனம் விழித்துக்கொண்டது.

“ஏன் டா! ஆறு மாசத்திற்குப் பிறகு ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கலாம்னு பாக்குறியா?” அதட்டலாகக் கேட்டாள்.

ஆறு மாதத்தில், மதுசூதனன் மனம்மாறி வந்துவிட வேண்டுமென்று அவன் மனம் ஏங்கியதுதான் உண்மை. அதுவரை சுதாவும், பல்லவியும் அவன் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதற்கே திருமணத்திற்குச் செவிசாய்த்தான்.

“இல்லம்மா! இன்னும் ஆறுமாசத்துல என்னோட முனைவர் பட்டப்படிப்பு முடிஞ்சிடும்!” மழுப்பி, தாய்மனதை வென்றவன்,

“அப்படியே பல்லவிகிட்ட என் முடிவையும் அவங்களுக்கு என் நன்றிகளையும் சொல்லிடு!” காதல் நாடகம் ஆடும் அவளுக்குத் தானும் சளைத்தவனில்லை என்று உணர்த்த நினைத்தான்.

தொடர்ந்து படிக்க…

Click Here பாசமென்னும் பள்ளத்தாக்கில் 19.2