பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 18
ஞாயிற்றுக்கிழமை மதியஉணவு சமைத்துக்கொண்டிருந்த வேளையில், வாசற்கதவு மணி ஒலிக்க, அஷ்வின்தான் காரக்குழம்பின் வாசம் பிடித்து வந்துவிட்டானோ என்ற யோசனையில் கதவை திறந்தான் குணா.
“ஹாய் குணா!” என்றவளின் முகம், தன்னவனை கண்ட பூரிப்பில் ஜொலித்தது. காதல் மயக்கத்தில் மிதந்தவளின் கைகள் அவனைக் கட்டியணைத்துத் தழுவ பறபறத்தது.
“பல்லவி! நீங்களா!” காண்பது கனவா என்று கண்களைக் கசக்கினான்.
அவள் கைவளைவிலிருந்த விஷ்ணு குணாவிடம் தாவி, தன்னிடமிருந்த லெகோ கார் பொம்மையைக் காட்டி மழலையில் மொழிய, அதில் சுயத்திற்கு வந்தான் குணா.
அவனிடம் சகஜமாக ஒட்டிக்கொண்ட குழந்தையைச் சுட்டிக்காட்டி, “விஷ்ணுவை பார்த்துக்க வந்தேன். அப்படியே உங்களுக்கு ஒரு இன்பதிர்ச்சி கொடுக்கலாம்னு நெனச்சேன்!” இயல்பாகப் பேச்சுக் கொடுத்தாள்.
“ரொம்ப நாளா நீங்க எனக்கு போன் கூட செய்யாததுனால, என்ன மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்!” என்றபடி அவளை உள்ளே அழைத்தான்.
“உங்கள மறக்கல குணா; மணக்க நெனச்சேன்!” மனதில் தோன்றிய எண்ணத்தைத் தன்னையும் மீறி உரக்க சொன்னாள்.
“என்ன சொன்னீங்க?” அவன் கண்கள் சுருங்க வினவ, பேந்தப்பேந்த முழித்தாள் பெண்.
காற்றில் பரவும் குழம்பின் வாசம் கைகொடுக்க, மூச்சை இழுத்து சுவாசித்தவள், “மணக்கும் காரக்குழம்பை ஒரு பிடி பிடிச்சிட்டுப் போகலாம்னு வந்தேன்!” என்று சமாளித்தாள்.
இதழோர சிரிப்புடன் மென்மையாகத் தலையசைத்தவன் மதுமிதாவை அழைக்க, பல்லவியை கண்டதும் ஓடி வந்து அவள் மேல் ஏறிக்கொண்டாள்.
மதுமிதாவிற்காக வாங்கிவந்த காட்டன் பாவாடை சட்டையை விரித்துக் காட்டி பிடித்திருக்கிறதா என்று வினவினாள்.
“உண்மையிலேயே உங்களுக்கும் யமுனாவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. அவளும் இந்தமாதிரி கண்கூசும் நிறங்கள் தான் தேர்ந்தெடுப்பா!” அந்த ஆரஞ்ச் மிட்டாய் கலர் பாவாடையும் அதில் பளிச்சிடும் பச்சை நிற வேலைபாடுகளையும் சுட்டிக்காட்டினான்.
‘யமுனா தானே என் வற்புறுத்தலில் குழந்தைக்கு உடைகள் அனுப்பியிருக்கிறாள்!’
சிரிப்பை அடக்கிகொண்டவள், மற்ற துணிமணிகளையும் அவனிடம் ஒவ்வொன்றாய் காட்டினாள்.
அதில் ஒன்றின் லேபிலை உற்றுப் பார்த்தவன், “குணா எக்ஸ்போர்ட்ஸ்” உரக்க படித்து எங்கு வாங்கியதாக வினவினான்.
‘சரியான மாமா கோண்டு!’ மனதில் ஏசியவள், உள்ளூர் கடையில் என்று மழுப்பி, மதுமிதாவிற்கு அதிலொன்றை அணிவிக்கச் சொன்னாள்.
“நீங்களே போட்டுவிடுங்க பல்லவி! நான் அதுக்குள்ள சாப்பாடு எடுத்து வைக்கறேன்!” சொல்லி நகர்ந்தான்.
விஷ்ணுவிற்கு விளையாட சில பொம்மைகளை கொடுத்துவிட்டு, மதுமிதாவை மட்டும் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
குழந்தை என்ற போதும் அவர்களுக்கான பர்சனல் ஸ்பேஸ் கொடுத்து சரியாக வழிநடத்தும் அவள் இங்கிதத்தை மெச்சினான் குணா.
பத்து நிமிடத்தில் குணா எதிரில் மதுவிதாவுடன் வந்து நின்றாள் பல்லவி. குழந்தையும் அவனிடம் தாவிக்கொண்டு “மா…மா…மாமா” என்று முத்தமழையில் நனைத்தாள்.
ஏற்கனவே யமுனாவின் சாயலில் இருந்தவள், இன்று அவள் ரசனைக்கு ஏற்ப உடை அணிந்திருப்பதைக் கண்டவனின் கண்கள் பனித்தன.
பல்லவி இருப்பதை உணர்ந்து அவன் அடக்கிவாசிக்க, அனைத்தும் அறிந்தவளோ கண்டும் காணாமலும் நின்றாள்.
இருவரும் உணவு மேஜையின் இருபுறமும் அமர்ந்து, குழந்தைகளை மேஜையின் மேலே உட்கார வைத்தார்கள். பல்லவி, விஷ்ணுவுக்கு சாதமும் தயிரும் கலந்து ஊட்டிவிட, மதுமிதா காரக்குழம்பை வெளுத்துக்கட்டினாள்.
“குழந்தைக்கும் இதே உணவா!” வாயைப் பிளந்தாள் பல்லவி.
“அவளுக்கு என்ன பிடிக்குமோ அதுதான் எங்களுடைய தினசரி மெனு!” பெருமிதம் கொண்டவன், குழந்தைக்கு உணவை ஊட்டித் தானும் உண்டான்.
காரக்குழம்பை ருசித்த பல்லவியின் கண்களிலிருந்து தாரை தாரையாக தண்ணீர் வழிந்தது.
“என்ன பல்லவி! என் கைப்பக்குவத்துல மெய்மறந்துபோய் ஆனந்த கண்ணீர் வடிக்கறீங்களா!” கேலி செய்தான்.
“இவ்வளவு காரமா போடுவீங்க குணா!” புலம்பியவள், கோப்பையிலிருந்த தண்ணீர் மொத்தத்தையும் பருகினாள்.
காரம் தெரியாமலிருக்க அவள் உணவில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றினான். ஆனால் அவளோ, காரமென்று குறை சொல்லிக்கொண்டே அவன் கைப்பக்குவத்தில் மயங்கி, வயிறார சாப்பிட்டு எழுந்தாள்.
உண்ட மயக்கத்தில் குழந்தைகள் இருவருக்கும் தூக்கம் கண்ணைக் கட்ட, அவர்களை உறங்கவைத்தாள் பல்லவி. குணாவும் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு வரவேற்பறைக்கு வந்தான்.
விஷ்ணு கலைத்துப்போட்ட பொருட்களை நேர்த்தியாக அடுக்கிவைத்துக் கொண்டிருந்தவள் அருகில் குணா ஓசையில்லாமல் வரவும்,
“அது…அது…விஷ்ணு அத்தனையும் கீழே போட்டுட்டான்!” திடுக்கிட்டாள் பெண்.
சற்று நேரம் அமர்ந்து பேசலாம் என்று மென்சிரிப்புடன் அழைத்தான் குணா.
மனம்திறந்து பேச ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்,
“குணா நம்ம கல்யாணம் செய்துக்கலாமா!” நேரடியாகக் கேட்டேவிட்டாள்.
அவள் குறும்புத்தனம் அறிந்தவன், “இன்னைக்கு ஏப்ரல் ஃப்ர்ஸ்ட் இல்ல பல்லவி!” கிண்டலாகப் பதிலளித்தான்.
“நான் நிஜமாதான் கேக்குறேன் குணா!” தீவிரக்குரலில் உரைத்தாள்.
“என்ன திடீர்னு!” மென்மையாகக் கேட்டவனின் முகம் மட்டும் இறுகியது.
உண்மையை மறைத்து, நம்பும்படி கூற வேறு எந்தக் காரணத்தைப் பற்றியும் சிந்திக்காதவளுக்கு, மறுபடியும் கையில் வீசிய காரக்குழம்பின் வாசம் கைகொடுத்தது.
அவன் வலது கரத்தைப் பிடித்து இழுத்தவள், “இப்படி தினமும் ருசியா சமைச்சு போடுற புருஷன யார்தான் வேண்டாம்னு சொல்லுவாங்க!” புன்முறுவலுடன் கண்சிமிட்டினாள்.
வெடுக்கென்று கையை திருப்பிக்கொண்டு, “விளையாடாதீங்க பல்லவி!” கண்டித்தான்.
“ஏற்கனவே குழந்தை இருக்குற பெண்ணா பார்த்து கல்யாணம் செய்துகிட்டா உங்களுக்கு வேலை மிச்சம்னு நீங்க சொல்றப்ப, மூணு வேளையும் ருசியா சமைச்சு போடுற கணவன் வேணும்னு நான் ஆசைப்படக்கூடாதா!” அவன் வழியிலேயே பேசி மடக்கினாள்.
அவளுடன் மேலும் பேசி வாதம் செய்ய விரும்பாதவன்,
“எனக்குக் கல்லூரியில் வேலை இருக்கு; நம்ம அப்புறம் சந்திக்கலாமா!” நாசுக்காக அவளை விரட்டினான்.
மற்றவர்கள் கல்யாணம் என்ற பேச்செடுத்தாலே கொந்தளிப்பவன், தன்னிடம் இத்தனை தூரம் பொறுமையாகப் பேசியதே தன் அதிர்ஷ்டம் என்று தெளிந்தவள்,
“ப்ளீஸ் குணா! உங்ககிட்ட மனசவிட்டு பேசத்தான் நான் இந்தமுறை அமெரிக்காவே வந்தேன். இங்க வந்து மூன்று வாரத்திற்கு மேலாகியும், உங்கள பார்த்துப் பேச தைரியம் வரல்ல; மனசுல இருக்குற ஏக்கமும் குறையுல!” கெஞ்சாதக் குறையாகக் கூறினாள்.
பல சந்தர்ப்பங்களில் தனக்குக் கைகொடுத்துக் காப்பாற்றியவள் என்ற நன்றிகடனுக்காக அவன் அமைதியாகவே இருந்தான்.
சினம் கொண்ட சிங்கம் எப்போது உறுமும் என்ற பதற்றத்திலேயே மேலும் பேசினாள்.
“எப்போ உங்கமேல எனக்கு காதல் வந்துதுன்னு கேட்டீங்கன்னா, அதுக்கு என்கிட்ட பதில் இல்ல குணா. ஆனா ஊருக்குப் போனதுக்கு அப்புறமும் உங்க ஞாபகமாவே இருந்துது.
சின்ன வயசுல நான் ஏங்கின தந்தை பாசத்தை உங்ககிட்ட பார்த்தேன். காலப்போக்கில் அதை மறந்துடுவேன்னு நெனச்சேன். ஆனால் மறக்க முடியல…காலத்துக்கும் உங்களோட சேர்ந்து வாழணும்னு ஆசை மனசுல அழுத்தமா பதிஞ்சிருத்து.” என்று பெருமூச்சுவிட்டவள்,
“மதுமிதாவின் உடல்நலத்தை நெனச்சு தயங்குறீங்கன்னா, அவளை நான் நல்லபடியா பார்த்துப்பேன்னு உங்களுக்கும் தெரியும். ப்ளீஸ்! சரின்னு சொல்லுங்க குணா!” தாழ்ந்த குரலில் கெஞ்சினாள்.
“உங்ககிட்ட என்னால குரலைக் கூட உயர்த்திப் பேச முடியல; ஏன்னா நீங்க எனக்கு செய்த உதவிகள் அத்தனை! உங்க மனசுல சலனம் வரா மாதிரி நடந்துக்கிட்டு இருந்தா அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்க நல்ல பொண்ணுதான். ஆனா என் எதிர்கால திட்டங்களும் எதிர்பார்ப்புகளும் வேற.” மேலோட்டமாக மறுத்தான்.
“என்னென்ன திட்டங்கள், எதிர்பார்ப்புகள்னு வெளிப்படையா சொன்னாதானே தெரியும் குணா!” விடாமல் நச்சரித்தாள்.
தன் மீதுள்ள நம்பிக்கையில் மனம்திறந்து பேசிவிடுவானோ என்று அவன் கண்களை ஆவலாகப் பார்த்தாள்.
“வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம் நமக்கு முற்றிலும் வேற மாதிரி இருக்கு. நீங்க ஆசைப்படுற ஆடம்பரமான வாழ்க்கையை என்னால நிச்சயம் உங்களுக்குத் தர முடியாது.
காதல சொல்லணும் நெனச்ச உடனே யோசிக்காம இவ்வளவு தூரம் கிளம்பி வந்துட்டீங்க. ஆனால் நான் இந்தியா போகணும்னு ஆசைப்பட்டா, அதற்குத் தேவையான பணத்தைச் சேமிக்கவே கிட்டதட்ட ஆறுமாசம் ஆகும்.” நிதானமாக எடுத்துரைத்தான்.
இருப்பதை வைத்து வாழும் அளவிற்குத் தானும் தயார் என்று உறுதி அளித்தவள்,
“மதுகுட்டிக்காக உங்க மனச மாத்திக்கக்கூடாதா குணா! அவளை விட்டுட்டுப் போகுற ஒவ்வொரு முறையும் எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு!” மனமுடைந்தாள் பேதை.
அன்று தன் வளர்ப்பை மெச்சியவளே, இன்று மற்றவர்களைப் போல குறை கூறுகிறாளே என்று அவனுக்கு எரிச்சல் மண்டியது.
“மற்றவங்களுக்கு சொன்னதுதான் உங்களுக்கும் பல்லவி! நீங்க எப்போ வேணும்னாலும் இங்க மதுமிதாவின் ஆன்ட்டியா வந்துட்டு போகலாம். யமுனா இடத்துக்கு வர முயற்சி செய்யாதீங்க!” அழுத்திக் கூறினான்.
“ஆன்ட்டிக்கும் அத்தைக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கு குணா!” உணர்ச்சிவசப்பட்டு உளறியவளை ஆழமாகப் பார்த்தான்.
மதுமிதாவின் மர்மங்கள் தொண்டை குழியில் தத்தளிக்க, மனதிற்கும் புத்திக்கும் இடையே நடந்த போராட்டத்தில் உளறிவிட்டாள்.
அச்சமயம் உறக்கம் கலைந்து விழித்த குழந்தை, “மா…மா…மாமா!” கண்ணைக் கசக்கியபடி அருகில் வர,
“மதுமிதா உங்கள மாமான்னு கூப்பிட்டா, உங்க மனைவி என்னை, அத்தைன்னு தானே கூப்பிடுவா!” கிண்டலாக விளக்கம் தந்து குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினாள்.
மதுமிதாவை அவளிடமிருந்து வெடுக்கென்று வாங்கியவன், “நேரமாச்சு! கிளம்புங்க!” அதட்டினான்.
மேலும் உளறாமல் தவிர்க்க, விஷ்ணுவை தூக்கிக்கொண்டு வந்தவள், “உடனே பதில் சொல்லச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தறது நியாயம் இல்லை; நிதானமா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க குணா!” என்றாள்.
“எங்களுக்கு யாரும் வேண்டாம்!” தீர்கமாக மறுத்தவனின் எதிரே கை நீட்டியவள்,
“யோசிச்சு சொல்லுங்கன்னு சொன்னேன்!” நினைவூட்டி,
“அடுத்த வாரம் ஊருக்குக் கிளம்பறேன். அதுக்குள்ள அண்ணனை சந்திச்சு முறையா பொண்ணு கேளுங்க!” குறும்பாகக் கண்சிமிட்டி நகர்ந்தாள்.
அவள் கண் பார்த்து பேச முடியாமல் தடுமாறுவது ஏன் என்று குழம்பியவன், பல்லவி ஊருக்குப் புறப்படும்வரை அவளைத் தவிர்ப்பதே சுலபமான வழி என்று மனம் தெளிந்தான்.
அலுவலகத்திலிருந்து திரும்பியவன் அன்றைய தேதியில் வந்த கடிதங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பிரித்துப் படித்தான். ஹெல்த் இன்சுரன்ஸ் கம்பெனியில் இருந்த வந்திருந்த கடிதத்தில் உள்ள விவரங்களைக் கண்டு திடுக்கிட்டான்.
சரண் மருத்துவமனையில் இரத்த தானம் செய்த அதே தினத்தில் தனக்கும் மதுமிதாவுக்கும் தந்தைவழி சோதனை செய்திருப்பதாகவும் அதற்கு உண்டான செலவு இன்சுரன்ஸில் அடங்காதென்றும், அதை விரைவில் கட்டும்படியும் குறிப்பிட்டிருந்தது.
‘தந்தைவழி பரிசோதனை’ அவ்வார்த்தைகளை கண்டவுனுக்கு ஒரு கணம் இதயம் துடிப்பது நின்றுவிட்டது.
உடனே அஷ்வினை அழைத்து விவரங்களைக் கூற, அவனுக்கும் அதே திகைப்பு. தன்னையும் ஏமாற்றி நண்பனுக்கு இப்படியொரு பரிசோதனை செய்துவிட்டார்களே என்று கொந்தளித்தான் அஷ்வின்.
“குணா! நீ பதறாத டா! உன் சம்மதம் இல்லாம செஞ்சதுக்கு அவங்க மேல புகார் கொடுக்கலாம்! மருத்துவக் குழுமம் அவங்களோட உரிமம் ரத்து செய்யட்டும்! அப்போதான் அவங்களுக்குப் புத்திவரும்.” என்றவன்,
உரிய இடங்களில் பேசிவிட்டு மீண்டும் அழப்பதாகச் சொன்னான்.
ஒரு மணி நேரத்தில் தகவல்களைச் சேகரித்த அஷ்வின் மனமுடைந்து போனான். நண்பனை நேரில் சந்தித்துச் சொல்லவேண்டிய விஷயமென்று உணர்ந்தான்.
“என்ன டா நேருலேயே வந்துட்ட!” பதறினான் குணா.
“உன்ன எப்படியோ ஏமாற்றி அத்தனை படிவங்களிலும் கையெழுத்து வாங்கி இருக்காங்க டா!” தலைகுனிந்தான் அஷ்வின்.
குணா அன்று மின்னணு கையொப்பம் இட்டது நினைவுக்கு வந்தது. எப்படி சூழ்ச்சி செய்திருப்பார்கள் என்று இருவருக்கும் புரிந்தது. சட்டரீதியாக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க, அலைபேசி உரையாடல்களைச் சாட்சியாகத் தரலாம் என்று மறுயோசனை சொன்னான் அஷ்வின்.
“அவங்க மோசடி செஞ்சதுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தால் மட்டும் என்னடா பிரயோஜனம். மதுமிதாவ பத்திரமா பார்த்துக்கறேன்னு யமுனாக்கு வாக்கு கொடுத்துட்டு, இப்போ குழந்தைக்குப் பரிசோதனை செய்தது கூடத் தெரியாத அளவிற்கு அலட்சியமா இருந்துட்டேனே!“ மனமுடைந்தான் குணா.
நண்பனின் மனநிலையை உணர்ந்தவன், “உன்ன அங்க அனுப்பினதுல எனக்கும் பங்கு இருக்குடா! மன்னிச்சிரு குணா!” வேதனையில் துடிதுடித்தான்.
“நீ என்னடா செய்வ! நல்ல மனிதர்கள்னு நம்பி அவங்களோட குழந்தையைத் தனியாவிட்டது என் தப்பு!” ஆற்றாமையுடன் புலம்பிய குணாவிற்கு பல்லவியின் நினைவு வந்தது.
இரண்டு நாட்கள் முன் அவள் திடீரென்று வந்தது, காதலிப்பதாகச் சொன்னது, அனைத்தையும் அஷ்வினிடம் விவரித்தான்.
“அவ குழந்தைக்கு உடை மாற்றிவிடுறேன்னு தனியா அறைக்குள்ள போனா டா! மேஜையில் இருந்த பொருட்கள் எல்லாம் விஷ்ணு தள்ளிவிட்டதா சொல்லி அடுக்கிட்டிருந்தா; என்னைப் பார்த்ததும் திருதிருன்னு முழிச்சா!” ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தான்.
“அப்போ! அவங்களுக்கும் இந்தக் கடிதம் உனக்கு வரும்னு தெரிஞ்சியிருக்கு; இதுக்காகத்தான் வந்திருப்பாளோ!” அஷ்வின் தன் புத்திக்கு எட்டியதைக் கூற,
குணாவிற்கு மற்றொரு துப்பு கிடைத்தது. அவள் குணாவை மாமா என்றும் தன்னை அத்தை என்றும் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியவன், பல்லவி விவரமாகத் தான் பேசியிருக்கிறாள் என்று முடிவே செய்துவிட்டான்.
இத்தனை தந்திரம் செய்பவளை தன் யமுனாவுடன் ஒப்பிட்டுப் பேசியதை எண்ணி எரிச்சல்கொண்டான்.
“கண்டிப்பா இவ சுதா சொல்லித்தான் இதெல்லாம் செய்யுறா. காதல் வசனம் பேசினா அதைக்கேட்டு மயங்கி பல்ல இளிச்சிகிட்டே உண்மை எல்லாம் சொல்லிடுவேன்னு எதிர்பார்த்தாளா!
நெவர்!” என்று கர்ஜித்தான்.
நட்பு என்ற பெயரில் நம்பிக்கை துரோகம் செய்தவளைப் பற்றி நினைக்க நினைக்க அவன் ரத்தம் கொதித்தது. திரட்டிய ஆதாரங்களை அவள் இந்தியா எடுத்துக்கொண்டு போனால்தானே உண்மைகள் உடையும் என்று யூகித்தவன் நல்லுறவாடி வேஷம் போட்ட பாசமலர்களை அமெரிக்காவில் வைத்தே தண்டிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்தான்.
“அவங்க மேல இப்போவே புகார் கொடுக்கறேன்! கிரீன் கார்டு கேட்டா இல்ல; மொத்த குடும்பமும் இங்கேயே சிறைவாசம் அனுபவிக்கட்டும்.” என்று சீறினான்.
பலமான ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் மேல் புகார் மட்டும் கொடுப்பதால் குணாவிற்கு தான் பிரச்சனை என்றவன், அனுமானங்களைத் தள்ளிவைத்து அவர்களிடம் முதலில் சமரசமாக பேசும்படி அறிவுறுத்தினான்.
“மதுமிதாவை என்கிட்டேந்து பிரிச்சுடாதீங்கன்னு அவங்க காலில் விழந்து கெஞ்ச சொல்றீயா?” குணா ஏளனமாக கேட்க,
“அப்படியில்ல டா! எதுக்காக அவங்க இதையெல்லாம் செஞ்சாங்க; எந்த அளவுக்கு அவங்களுக்கு உண்மைகள் தெரியும்னு முதல்ல கண்டுபிடி. கோபத்துல ஏதாவது செஞ்சு பிரச்சனையை பெருசாக்கிடாதன்னு சொல்றேன்!” தெளிவுபடுத்தினான்.
சரி என்று தலையசைத்து, பல்லவியை சந்திக்கப் புறப்பட்டவனுக்கு, நண்பன் சொன்ன அறிவுரை எதுவுமே புத்திக்கு உறைக்கவில்லை.
முன்வாசலில் குணாவை பார்த்த பேதை, பரவசத்தில் தத்தளித்தாள். வாய்கொள்ளா புன்னகையுடன் உள்ளே அழைத்தாள்.
கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தவனோ,
“இதுக்குத்தானே டி காதல் வசனம் பேசி என்னை உளவு பார்க்க வந்த?” என்று ஆவணங்களை அவள் முகத்திற்கு எதிரே வீசி எறிந்தான்.
கயவன் என்று வெறுத்தவனை – கைகோர்க்கும்
கணவன் என பாவிக்கிறாள் இவள்!
தோழி என்று நேசித்தவளை – உளவுபார்க்கும்
துரோகி என பழிக்கிறான் இவன்!
விதி என்று விட்டு விலகிவிடுவார்களா – அவளே(னே)
கதி என்று காதலில் கரைந்து விடுவானா(ளா) -தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…