பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 01

ஓய்வே இல்லாமல் பரபரப்பாக இயங்கும் நியூயோர்க் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்தது அந்தக் குழந்தைகள் நல மருத்துவமனை. மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் கடிகார முள்ளைக் காட்டிலும் வேகமாக செயல்படும் பலதரப்பட்ட மக்கள் புழங்கும் அந்த வணிகவளாகத்தில், அவ்விடம் மட்டும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக திகழ்ந்தது. குழந்தைகளின் இதமான நறுமணம், காற்றில் கலந்திருக்க, மழலை மொழியின் சிரிப்பும், அழுகையும், சிணுங்கல்களும் செவிகளுக்கு மெல்லிசையாய் ஒலித்தது.

“மது குட்டி! மாமா உனக்கு இன்னும் ஒரேவொரு ஊசி போடப்போறேன், சரியா!” குழந்தையிடம் பேசிக்கொண்டே, ஊசியில் மருந்தின் அளவை சரிபார்த்தான் அஷ்வின். இரண்டு வயது பூர்த்தியான மது என்னும் மதுமிதாவும் சிரித்த முகத்தோடு சத்தமாகக் கைத்தட்டி ஆமோதித்தாள். அவளை மடியில் வைத்துக்கொண்டிருந்த குணா என்னும் குணசேகரனுக்குத் தான் அங்கமெல்லாம் நடுங்கியது.

அஷ்வின் ஊசியின் முனையைக் குழந்தையின் கையருகில் எடுத்துவர, குணா இன்னும் இறுக்கமாக அவளைப் பிடித்துக்கொண்டு, தன் கண்களை மூடி மூடி திறந்தான். அதை கவனித்த அஷ்வின், இதழோர சிரிப்புடன்,

“மது குட்டி! ரெடியா… அப்பாவ கண்ண மூடிக்க சொல்லலாமா?” நண்பனை கிண்டல் செய்தான்.

அஷ்வின் விளையாட்டு பேச்செல்லாம் குணா காதில் விழவில்லை. பதற்றத்தில் இருந்தவன், கண்களை இறுக மூடிக்கொள்ள, அஷ்வின் மென்மையாக குழந்தையின் இடது கையில் ஊசியைச் செலுத்தி, இதமாக தேய்த்துவிட்டான். தனக்கு டாக்டர் கிச்சுகிச்சு மூட்டியதுபோல, மது கலகலவெனச் சிரித்தாள்.

“போதும்…கண்ணைத்திற டா! ஊசி போட்டாச்சு!” அதிகாரமாய் சொல்லி, உரிமையோடு நண்பன் தோளினை உலுக்கினான் அஷ்வின்.

குழந்தையை ஆழமாகப் பார்த்த குணாவின் முகத்தில் கவலை ரேகைகள்.

“உண்மையிலேயே அவளுக்கு வலி தெரியலையா டா!” வாடிய குரலில் கேட்டபடி, குழந்தையை மென்மையாக வருடினான்.

அக்கேள்வியை தன்னிடம் ஆயிரம்முறை கேட்டிருப்பான் என்று மனதில் நினைத்துச் சலித்தாலும், பொறுமையாக பதிலளித்தான் அஷ்வின்.

“ம்ம்…அவளுக்கு வலி தெரியாதுடா! அதான் சொல்லிருக்கேனே… ‘ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’(Autism Spectrum Disorder) இருக்குற பெரும்பாலான குழந்தைகள் வலி உணர மாட்டாங்கன்னு…”

“மூட்டை மூட்டையா இந்தச் சின்ன உடம்புக்குள்ள இவ்வளவு பிரச்சனைகளை வெச்சிட்டோமேன்னு வருந்தின கடவுள், வலி தாங்கும் சக்தியை மட்டும் சலுகையா கொடுத்துட்டாரு போல!” மனம் நொந்தான் குணா.

மேலும் அதைப்பற்றி ஆராய்ந்து நண்பன் மனதை புண்படுத்த விரும்பாத அஷ்வின், பேச்சைத் திசைதிருப்பினான். மதுமிதாவின் மருத்துவ அறிக்கைகளை மின்னஞ்சலில் அனுப்புவதாக விவரித்தவன்,

“வீட்டுக்குப் போகுற வழியில், பார்மசியில(Pharmacy) இந்த மலேரியா தடுப்பு மருந்த மறக்காம வாங்கிக்கோ!” என்று திரையில் சுட்டிக்காட்டினான்.

“ஏற்கனவே அவளுக்கு தினமும் நிறைய மருந்து கொடுக்கறேன் டா…” குணா தயங்க,

“வேற வழியில்ல குணா! நம்ம ஊரில் கொசுக்கள் அதிகம்… இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு மலேரியா போன்ற நோய்களுக்கு எதிர்ப்புசக்தி ரொம்ப குறைவு… அதனால கொடுத்தே ஆகணும்!” புரியவைத்தான் அஷ்வின்.

அதற்கு மறுப்பாய் தலையசைத்தவன், “எனக்கு மட்டும் கல்லூரியில் இந்தியா போகச் சொல்லி கட்டாயப்படுத்தலேன்னா, நாங்க பாட்டுக்கு இங்கேயே நிம்மதியா இருப்போம்… ஊருக்குப்போய் என்னென்ன பிரச்சனையை இழுத்துட்டு வரப்போறேனோ… நெனச்சாலே பயமா இருக்குடா!” புலம்பினான் குணா.

நண்பன் தோளில் ஆறுதலாக தட்டிக்கொடுத்தவன், “தேவையில்லாம பயப்படாத…எல்லாம் நடந்து முடிஞ்சு மூணு வருஷம் ஆயிடுத்து…எதையும் மனசுல வெச்சுக்காம அவங்களோட சகஜமா பழகு…” என குழந்தையின் தாடையை குவித்துச் செல்லம் கொஞ்சி,

“நம்ம மதுகுட்டியைப் பார்த்தா, அவங்க கோபம் எல்லாம் காத்துல பறந்துடும் பாரேன்!” நம்பிக்கையூட்டினான்.   

“சரிதான்…ஆனா யமுனா இல்லன்னு சண்டைக்கு வருவாங்களே டா!”, நிதர்சனத்தை எடுத்துரைத்தான் குணா.

“சண்டைக்கு வர தான் செய்யுவாங்க குணா… நீதான் திடமா இருக்கணும்!” தொடங்கியவன், “அவங்க எப்படி மடக்கி கேட்டாலும், யமுனா கொரோனா நோயில் இறந்துட்டா என்பதை தாண்டி எதுவும் சொல்லிடாத…நீ தடுமாறி பேசுற ஒவ்வொரு முறையும் நமக்குத்தான் ஆபத்துன்னு நியாபகம் வெச்சுக்கோ!” எச்சரிக்கவும் செய்தான்.

சிணுங்கும் குழந்தையை இறக்கிவிட, அவள் பொம்மைகளுடன் ஐக்கியமானாள். தத்தி நடக்கும் குழந்தையை ஒரு கணம் பார்த்த குணா,

“நான் செய்தத் தப்புக்கு, உன்னையும் உடந்தை ஆக்கிட்டேன் டா!” வருந்தினான்.

“அப்படியெல்லாம் இல்ல குணா…நீ மட்டும் என்ன வேணும்னா செஞ்ச…நீ நெனச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு,” ஆறுதலாய் பேசி,

“ஆனா எந்த சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடி…கொஞ்சம் தப்பா போச்சுனா கூட…உன் வேலைக்கு உலை வெச்சிடுவாங்க…மதுகுட்டியை உன்கிட்டேந்து பிரிச்சிடுவாங்க!” சவால்களை நினைவூட்டினான் அஷ்வின்.

அனைத்திற்கும் மௌனமாக தலையசைத்த குணா, கல்லூரியில் வேலை இருப்பதாகக் கூறிக் குழந்தையை தூக்கிக்கொண்டு நகர்ந்தான்.

“ஹான் அப்புறம்…தடுப்பூசி போட்டிருக்கறதுனால, குழந்தைக்கு ஜுரம் வரும்…அதனால நாளைக்கு விடுப்பு எடு!” அஷ்வின் பரிந்துரை செய்ய, அவனை யோசனையாகப் பார்த்தான் குணா.

ஒரு வாரத்தில் ஊருக்குப் புறப்படுவதால், கல்லூரியில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் ஏராளம் என்று குணா கவலையாகப் பேச,

அதை உணர்ந்த அஷ்வின், “நாளைக்கு மதியத்துக்கு மேல நான் வந்து மதுகுட்டியைப் பார்த்துக்கறேன். ஒரு நாளைக்கு மட்டும் டே கேர் அனுப்பாமல் இருந்தா நல்லது!” உதவுவதாகக் கூறினான் .

“தாங்க்ஸ் அஷ்வின்!” நன்றிகளைத் தெரிவித்துப் புறப்பட்டான் குணா.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற குணா, அதைச் செவ்வனே முடித்தக் கையோடு, அங்கேயே ஒரு பிரபலமான கல்லூரியில் கணித பேராசிரியராகப் பணிப்புரிய தொடங்கினான். வழக்கமான பாடமாக நடத்தாமல், ஒவ்வொரு செயல்முறையின் வரலாற்றையும் ஆழமாக கற்றரிந்து அதை மாணவர்களுக்கும் எளிமையான முறையில் கற்பிக்க, அவனின் தனித்திறன் பலரின் மனதையும் கவர்ந்தது. தேன் கசியும் பூவை மொய்க்கும் வண்டுகள் போலவே, எப்போதும் எவ்விடத்திலும், மாணவர்கள் சூழ காணப்பட்டான்.

கணிதத்தில் அதீத ஆர்வம் கொண்டவன், முனைவர் பட்டம் பெறுவதற்கு அதைச் சார்ந்த வகுப்புகளில் சேர்ந்தும் படித்தான். அதே சமயத்தில் தன்னார்வத்துடன், பல ஆய்வுகளையும் மேற்கொண்டான். குறிப்பாக வேதகாலத்துக் கணிதத்தின் கணிப்பு முறைகள் பற்றி அவன் செய்த ஆய்வுகளை மெச்சிய உயர் அதிகாரிகள், பல்கலைக்கழகம் சார்பாக அவனை உலகளவில் நடைப்பெறும் கணிதவியல் மாநாட்டில் கலந்துக் கொள்ளும்படி பரிந்துரை செய்தனர்.

மாபெரும் மேதைகளும், அறிஞர்களும் பங்கேற்கும் அந்த மாநாட்டிற்கு செல்வதில் அவனுக்கும் ஈடுஇணையில்லா மகிழ்ச்சி. எனினும், அவ்விழா இந்தியாவில் நடக்கவிருப்பதை எண்ணி ஒருவித தயக்கமும் கொண்டான்.

லட்சிய பாதையில் திருப்பு முனையாக அமையும் வாய்ப்பை நழுவ விடுவது உத்தமம் இல்லை என்று புரியவைத்தான் அஷ்வின். ஆனால் அப்பயணம், லட்சிய பாதையில் மட்டுமில்லாமல், தன் வாழ்க்கையையும் புரட்டிப்போடும் திருப்பு முனையாக அமையும் என்று அவன்மட்டும் அறிந்திருந்தால்…

அஷ்வினுடன் மணிக்கணக்காக விளையாடிய அசதியில், மதுமிதா வழக்கத்தைவிட வெகுவிரைவாகவே உறங்கிவிட்டாள். இரவு உணவை சமைத்துவிட்டு, நண்பன் வருகைக்காகக் காத்திருந்தான் அஷ்வின்.

எட்டு மணியளவில் வீட்டிற்குள் நுழைந்தவனை, லாசக்னாவில்(Lasagna) உருகிய சீஸ்(Cheese) வாசம் வரவேற்றது.

“எதுக்குடா உனக்கு இந்த வீண்வேலை? நந்தினியும் குழந்தைகளும் வீட்டுல காத்துக்கிட்டு இருப்பாங்கல?” அக்கறையாகக் கண்டித்தான் குணா.

“பரவாயில்ல குணா! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்; குளிச்சிட்டு வா!” நாளிதழ் ஒன்றைப் புரட்டியபடிக் கூறினான்.

அஷ்வினும், குணாவும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள். பத்தாம் வகுப்புக்குப் பிறகு, முற்றிலும் வெவ்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்து, வெவ்வேறு இடங்களில் பயின்ற போதிலும், அவர்கள் நட்பு மட்டும் நீடித்து நின்றது. பல வருடங்களாக நேரில் கூடச் சந்திக்கவில்லை.

தற்செயலாக, அஷ்வின் பணிப்புரியும் நகரத்திலேயே, குணாவிற்கும் வேலை கிடைக்க,மீண்டும் இணைந்த நண்பர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி. குணா, தன் மாமன் மகள் யமுனாவை அமெரிக்கா அழைத்துவரத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் அஷ்வின். குணா செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் உடந்தையாக இருந்தததால், அவன் வலதுக்கையாகவே மாறிவிட்டான். அதன் விளைவாக நண்பனுடன் சேர்ந்துப் பலரின் விரோதங்களையும் சம்பாதித்தான்.

“நேரமாச்சு! சாப்பிட வா டா! அப்புறம் நந்தினி என்ன வீட்டுக்குள்ள சேர்க்கமாட்டா!” சாப்பிடும் அறையிலிருந்து குரல் கொடுத்தான் அஷ்வின்.

 பத்து நிமிடங்களாகியும் குணா வந்தபாடில்லை.

நண்பன் அழைப்பது எதுவுமே காதில் வாங்காமல், சிந்தனையில் கரைந்தவனாய், அந்த நாளிதழையே வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தான் குணா.

சோஃபாவில் அவனருகில் வந்து அமர்ந்த அஷ்வின், திறந்திருந்த பக்கத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டான். குணா வாய்திறந்து சொல்லும் முன்னரே, அவன் பயத்தைப் புரிந்துகொண்டான்.

“வீணா எதையும் கற்பனை செய்யாத டா!வா சாப்பிடலாம்!” மென்மையாக பேசி, நண்பன் கைப்பிடித்து இழுத்தான்.

குணா தன் கையை விலக்கிக்கொண்டான்.

“நான் யமுனா பேச்சைக் கேட்டிருக்கணும் இல்ல…பின்விளைவுகளை யோசிக்காம பிடிவாதமா இருந்துட்டேன்…எனக்கு ரொம்ப பயமா இருக்குடா!” குரல் பயத்தில் நடுங்கியது.

நண்பன் கரங்களை மென்மையாக வருடியவன், “நீ செஞ்சது சரியா, தப்பான்னு ஆராய இது நேரமில்ல குணா…நடந்து முடிஞ்சத யாராலையும் மாற்றமுடியாது…இனிமே என்ன செய்யலாமுன்னு மட்டும் யோசி!” எதார்தத்தை எதுத்துரைத்து, சாப்பிட வரச்சொல்லி அழைத்தான்.

தனிமை வேண்டுமென்று கூறி உண்ண மறுத்தான் குணா. நண்பனை மேலும் வற்புறுத்த மனமில்லாமல் அஷ்வினும் புறப்பட எழுந்தான்.

தனிமைக் கேட்டவனுக்கு, தனிமையில் இருக்கவும் பயமாக இருந்தது.

திடுக்கென்று அஷ்வின் கரம்பிடித்து, “ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே!” தடுத்தான்.

“இப்போ நீ இருக்குற மனநிலையில் எதுவும் பேசவேண்டாம்.” அஷ்வின் மறுக்க,

பேசினால் மனதுக்கு ஆறுதலாக இருக்குமென்று கெஞ்சினான் குணா.

அதையே காரணம் காட்டி, நண்பனை சாப்பிட வைத்தானே தவிர, வந்த விஷயத்தைச் சொல்லாமலேயே புறப்பட்டான் அஷ்வின்.

தொடர்ந்து வந்த நாட்களில், குணா கல்லூரி சம்பந்தமான வேலைகளில் கவனம் செலுத்தினான். கொரோனா தாக்கத்தால், கடந்த ஒன்றரை வருடங்களாக இணையத் தளத்தின் வாயிலாகப் பாடம் நடத்திப் பழகிப் போனவனுக்கு, ஒரு மாத விடுமுறைக்குத் தேவையான பாடத் திட்டங்களை வரைய அவ்வளவு கடினமாக இல்லை. அட்டவணையை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டு, பாடங்களை இந்தியாவிலிருந்து எடுப்பதாகச் சொல்லி புறப்பட்டான்.

வீட்டில் செலவிட்ட நேரமெல்லாம், பயணத்திற்குத் தேவையானதை எடுத்துவைக்கவே சரியாக இருந்தது. மதுமிதாவின் உடைகள், பொம்மைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்து, மாத்திரை என அவளுக்கு மட்டுமே இரண்டு பெரிய பெட்டிகள் நிரம்பின.

மூன்று வருடங்களுக்குப் பிறகு உறவுகளைச் சந்திப்பதைப் பற்றி எண்ணியவனின் இதயம், அந்தப் பெட்டிகளைக் காட்டிலும் கனத்தது. மதுமிதாவின் கள்ளம் கபடமில்லாத முகத்தைக் கண்டாலாவது அவர்கள் கோபமெல்லாம் பறந்துவிடாதா என்று ரகசியமாய் ஏங்கினான்.

ஊருக்கு வருவதை அப்பாவிடம் மட்டும் சொல்லிருந்தான்; காரணம், அப்பா மட்டும்தான், நலன் விசாரிக்கும் அளவிற்காவது அவனுடன் பேசிக்கொண்டிருந்தார்.

ஊருக்குப் புறப்படும் நாளும் வந்தது. கொரோனா தாக்கத்தால் முடங்கிப் போயிருந்த போக்குவரத்துச் சேவை, ஊரடங்கு உத்தரவுகள் யாவும் தளர்த்தப்பட்டு, சில வாரங்களுக்கு முன்தான் இயல்பு வாழ்க்கை சூடுபிடிக்கத் தொடங்கியது.

தடுப்பூசிகளால், நோய் பரவும் வீரியம் வலுவிழந்தபோதும், முககவசம் அணியவேண்டும் என்பது மட்டும் அமலில் இருந்தது. ஆனால், பாதுகாப்பிற்காக முககவசம் அணியும் நிலமை மாறி, மக்கள் அதை உடைக்கேற்றார் போல பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் அணிவதில் ஆர்வம் காட்டினர். அடிப்படை பொருட்களைக்கூட ஆடம்பரமாக்கும் வியாபார யுக்திகளை எண்ணி சிரித்தப்படி, வரிசையில் நின்றான் குணா.

மதுமிதாவுடன் பயணித்ததால், அலைமோதும் கூட்டத்திலும், நீண்ட வரிசைகளிலும் அதிகநேரம் நிற்காமல், போர்டிங் பாஸ்(Boarding Pass) பெற்றுக்கொண்டான். கொரோனா நோய் சம்பந்தமான பரிசோதனைகளையும், அஷ்வின், சுலபமாக முடித்துக் கொடுத்திருந்தான்.

பாதுகாப்பு சோதனை நடக்கும் வரிசையில் நுழையும் முன், தனக்காகக் காத்திருந்த நண்பனை காண நடந்தான் குணா. வழியடைப்புக்கு மறுபுறம் நின்ற நண்பனை ஆரத்தழுவி நன்றி கூற, மதுமிதா அவனிடம் தாவிக்கொண்டாள்.

அதைக்கண்ட குணா, “மதுமிதா உன்கூடவே, இங்கேயே இருக்கட்டுமே டா!” வார்த்தைகளை மென்று விழுங்கினான் குணா.

“அவளை தைரியமா அழைச்சிட்டுப் போ நண்பா! மதுகுட்டி தான், உன்னை யாருன்னு இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டப் போகுறா!” அசரீரியாய் பேசியவன், குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டான்.

இருக்குமிடம் தெரியாமல் இருப்பதே நன்று என்றவன், “நீயாவது என்னோட வந்துடு டா!” கெஞ்சலாகக் கேட்டான்.

பயத்தில் வெளிறிப்போன நண்பன் முகத்தைக் கண்டு குறும்பாக சிரித்தவன், “மிஸ்டர் குணா…உண்மையை சொல்லணும்னா… மதுகுட்டி முகத்தைப் பார்த்து, உன்னைக் கூட மன்னிச்சிடுவாங்க டா…உனக்கு உடந்தையாக இருந்த எனக்குத் தான் கண்டிப்பா கரும்புள்ளி, செம்புள்ளிக் குத்துவாங்க!” என்றான்.

அஷ்வின் விளையாட்டாகப் பேசியபோதும், குணா அதிலிருந்த உண்மையை உணர்ந்தான். தன் சொந்தப் பிரச்சனைக்காகக் கடந்த மூன்றாண்டு காலமாக அவன் செய்த எண்ணிலடங்கா உதவிகளை நினைவுகூர்ந்தான்.

சிந்தனையில் சஞ்சரித்திருந்த நண்பனின் தோளினை உலுக்கினான் அஷ்வின்.

“குணா! நீயா வாய்திறந்து சொல்ற வரைக்கும், யாருக்கும் எதுவும் தெரியப்போகிறது இல்ல! குடியேற்றத்தில்(Immigration) அதிகாரி கண்பார்த்து தெளிவா பேசு; கேட்டக்கேள்விக்கு மட்டும் பதில்சொல்லு. இந்த பிரயாணம் முழுக்க ரெண்டு விஷயத்துல கவனமா இருந்துக்கோ!” என்று பெருமூச்சுவிட்டவன்,

“எந்த நிலைமையிலும் பொறுமையிழந்து பேசிடவோ, சண்டையை வளர்த்தோ விட்டுடாத. பேச்சுவார்த்தை தாண்டி, ஆவணங்களைப் பரிசோதிக்கணும்னு யார் கேட்டாலும், நமக்கு பிரச்சனைதான்…அதேமாதிரி, மதுமிதா பற்றி தேவைக்கு மீறி சொல்லாத…உடல்நலம் சார்ந்த விஷயங்களுக்கு, இந்தியாவில் எந்த டாக்டர் கிட்டையும் அழைச்சிட்டுப் போகாத…எனக்கு போன் செய்…புரிஞ்சுதா?” கவனமாக இருக்கும்படி எச்சரித்தான்.

“நீ இல்லாம, நான் என்ன செய்திருப்பேன் டா!” குணா, தாழ்ந்த குரலில் பேச,

“டேய் நண்பா… வைத்தியம் பார்க்க வந்த என்னை ஏற்கனவே வக்கீலா மாத்திட்ட…இப்படி முகத்துல பயத்தோட, ஏதாவது உளறி கொட்டிடாத…அப்புறம் ரெண்டு பேரும், ஆரஞ்ச் யூனிபார்ம் போட்டுக்கிட்டு களி தின்ன வேண்டியதுதான்…இல்ல இல்ல…வறட்டு வறட்டுன்னு காய்ந்துபோன ரொட்டி(Bun) தின்ன வேண்டியதுதான்!” இருவருக்கும் அமெரிக்காவில் சிறைவாசம் என்றும் கிண்டலாக பேசிப்பார்த்தான்.

அப்போதும் குணா மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை.

“அதுக்குத்தான், உன்னையும் வர சொல்றேன்!” கவலை தோய்ந்த குரலில் பேசினான்.

“பொழுதுக்கும் உன்னோடதான் இருக்கேன்னு, ஏற்கனவே நந்தினி புலம்புறா…’அவனா நீ!’ அப்படின்னு வேற சந்தேகமா கேக்குறா டா!” முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு அஷ்வின் குழைய,

நந்தினியின் குறும்புத்தனத்தைப் பற்றி அறிந்திருந்த குணா, ஒருவழியாகச் சிரித்தான்.

அதைக்கண்ட அஷ்வின் மனமும் லேசாக, பயணம் நல்லபடியாக அமையட்டும் என்று வாழ்த்துகூறி புறப்பட்டான்.

விமானம் தன் சிறகுகளை விரித்து வானத்து மேகங்களோடு கலக்க, ‘இனி திரும்பி பார்க்க ஒன்றுமில்லை; நடப்பது நடக்கட்டும்!’ தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, ஆழமாய் சுவாசித்து கண்மூடினான் குணா.

அருகில் உறங்கிய மதுமிதா தூக்கம் கலைந்து, இருக்குமிடம் புரியாமல் அங்கும் இங்குமாகப் பார்த்தாள். குணாவை கண்டுகொண்டவள், “மா…மா…மாமா…” என்று முனங்கி, அவன்மேல் ஏறிக்கொண்டாள். பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தில் கண்விழித்துப் பார்த்தவன்,

 “மது குட்டி…அதுக்குள்ள எழுந்துட்டியா!” கொஞ்சிப் பேச,

“மா…மா…மாமா!” என்று மலர்ந்த முகத்துடன், அவன் தோள்சுற்றி அணைத்தாள்.

முகம் பார்க்க ஏதுவாய் அவளைத் தூக்கியவன், “மாமா இல்ல டா மது குட்டி… அப்பா…அ…ப்…பா சொல்லு!” மென்மையாய் கற்றுக்கொடுத்தான்.

“மா… மா… மாமா!” என்றே விடாபடியாக மொழிந்து அவனை முத்தமழையில் நனைத்தாள் மதுமிதா.

குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்தவனின் கண்கள் குளமானது.

மதுமிதா வாய்திறந்து பேசுவதே சந்தேகம் என்று மருத்துவர்கள் முத்திரைக் குத்த, அவள் எழுப்பிய ஒரே ஒலி, “மா… மா… மாமா!” மட்டும்தான். அதுவும் யமுனா அவனை அன்பாக அழைக்கும் அதே தோரணையில் அழைத்தாள்.

அது தனக்குக் கிடைத்த வரமா, சாபமா என்று புரியாமல் திண்டாடியவனின், குழம்பிய மனதை யமுனாவின் நினைவுகள் ஆட்கொண்டது. மூன்று வருடங்களுக்கு முன் யமுனாவுடன் விமானத்தில் பயணம் செய்ததும் நினைவுக்கு வந்தது. தன் தோளில் சாய்ந்துகொண்டு, விரல்களை அழுந்த கோர்த்தவளின் ஸ்பரிசம் இன்னும் அவன் நினைவில் பசுமையாய் இருந்தது.

‘நான் எடுத்த முடிவு தப்பு இல்ல யமுனா; என்னால சமாளிக்க முடியும் டி; தனியாளா நின்னு நான் ஜெயிச்சு காட்டுறேன் பாரு!’ தனக்குத்தானே நம்பிக்கை வார்த்தைகளைக் கூறிக்கொண்டான்.

இருபது மணி நேரம் நீண்ட பயணம் ஒரு முடிவுக்கு வர, தாய்மண்ணின் வாசத்தை சுவாசித்தவனுக்கு, பெற்றவள் மடி சாய்ந்து வாய்விட்டு அழவேண்டும் போல இருந்தது.

ஊருக்கு வரவே தயங்கியவனுக்கு, ஒதுக்கிவைத்த சொந்தங்களுடன் உறவாட வேண்டுமென்ற ஏக்கம் வாட்டியெடுத்தது. உண்மைகளை மனம்திறந்து சொல்லிவிடலாம் என்று கூட ஒரு நொடி தோன்றியது அவனுக்கு.

பல குழப்பங்களுடன் குடியேற்றத்தின் வரிசையில் நிற்க, அவன் முறை வந்தது. பாஸ்போர்ட் மற்றும் இதர தாள்களை பரிசோதித்த அதிகாரி, கேள்விகளைத் தொடுத்தார். குணாவும் நிதானம் கடைப்பிடித்து திடமாக பதிலளித்தான்.

அதிகாரி பாஸ்போர்ட்டில் முத்திரைக் குத்தும் தருணம், பாட்டிலில் தண்ணீர் பருகி கொண்டிருந்த மதுமிதாவிற்கு பொறையேறி இரும்பினாள். இடைவிடாமல் இரும்பும் குழந்தையின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும்படி, சகஊழியரிடம் அதிகாரி உத்தரவிட்டார்.

குழந்தைக்குக் காய்ச்சல் இருப்பதாக ஊழியர் உறுதிசெய்ய, அது பிராயணத்தினால் ஏற்பட்ட உடல்சூடு என்று தர்க்கம் செய்தான் குணா. ஆனால் அதிகாரி அவளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென்று திட்டவட்டமாகக் கூறினார்.

குணா மறுத்துப்பேசி வாதாட, அதில் எரிச்சலடைந்த அதிகாரி, ஆவணங்களை காட்டும்படி நச்சரித்தார்.

நண்பன் சொன்ன வார்த்தைகள் காதில் எதிரொலிக்க, சுயத்திற்கு வந்தவன்,

“குழந்தைக்கு மருத்தவ ரீதியா நிறைய சிக்கல்கள் இருக்கு; எதுவாயிருந்தாலும் அவளுக்கு சிகிச்சை தரும் டாக்டர்கிட்ட கலந்தாலோசிக்கணும்!” தன்மையாக விளக்கினான்.

அஷ்வினுடன் கலந்துரையாடிய உள்ளூர் மருத்துவர், அவர்களை விடுதியில் தங்கி ஒருவாரம் தனிமை படுத்திக்கொள்ளும்படி பரிந்துரை செய்தார்.

மூன்று வருடங்களாகத் தனியாகவே இருந்து பழகியவனுக்கு, அது கடினமாக இல்லை.

மாநாட்டிற்காக பெங்களூர் செல்வதற்கு முன், இரண்டு வாரங்களாவது உறவுகளோடு இருக்கலாம் என்று திட்டமிட்டது, அந்த இறைவனுக்கே பொறுக்கவில்லை என்ற விரக்தியில் சிரித்தான்.

மதுமிதா ஆழ்ந்து உறங்கியதும் வீட்டின் தரைவழி தொலைபேசிக்கு அழைத்தான். தாயின் குரல் கேட்டதும், உறைந்து போனான் குணா.

கைக்கெட்டும் தூரத்திலிருந்தும், அவளை நேரில் காணமுடியாத வருத்தம் தன்னையும் மீறி மனதை துளைத்தது.

அவள், ‘ஹெலோ’ என்று பலமுறை பேசியும், பதில்சொல்லாமல் மௌனம் காத்தான்; ஏக்கமா, குற்றவுணர்வா, அவனுக்கே புலப்படவில்லை.

“அம்மா! நான் குணா பேசுறேன்!” ஒரு வழியாக தொடங்கினான்.

‘குணா….’ மென்மையாக உச்சரித்தவளுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை; பாசமா, வெறுப்பா, அவளுக்கும் அது புலப்படவில்லை.

“அம்மா! நாங்க ஊருக்கு வந்துட்டோம். கொரோனா நோய், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஒருவாரம் விடுதியில் தங்கி தனிமை படுத்திக்கச் சொல்லிருக்காங்க மா…சனிக்கிழமை வீட்டுக்கு வந்திடறோம்.” மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான்.

மகன் குரல் பல நாட்களுக்குப் பிறகு கேட்டதில், சின்னதொரு தடுமாற்றம் வந்தபோதும், ‘கொரோனா’ என்றதும், யமுனாவின் உருவம் அவள் கண்முன் தோன்றியது.

பெரியவர்கள் பேச்சை மீறி, யமுனாவை திருமணம் செய்துக்கொண்டு, இன்று கொரோனாவுக்கு பலி கொடுத்துவிட்டு வரும் மகன், அவள் கண்களுக்குக் கொலைகாரனாகவே தோன்றினாள். பிள்ளைப்பாசம், கோபமாக மாறியது.

“இப்போ, நீ இங்க வரலன்னு யார் அழுதா!” குத்தலாகக் கேட்டவளின் விழியோரம் ஒரு நீர்த்துளி.

அவன் பார்த்து விடப்போகிறானோ என்பதுபோல, வேகமாக முந்தானையால் துடைத்துக்கொண்டவள்,

“நீ என்ன வேலையா இங்க வந்தியோ அத செஞ்சிட்டுக் கிளம்பு; உன்னைப் பெத்த பாவத்துக்காக, இந்த வீட்டுல தங்க அனுமதிக்கறேன்.” கறாராக சொல்லி, அழைப்பைத் துண்டித்தாள். அது அவன் காதுகளில் ஓங்கி அறைந்தது போல வலித்தது.

பார்க்கக் கூட லட்சியம் செய்யாதவளிடம் இரண்டு வாரங்கள் தன்னுடன் பெங்களூர் வந்து மதுமிதாவை கவனித்துக் கொள்ளும்படி எப்படிக் கேட்பது என்று சிந்தித்தான். மடியில் துயில்கொண்ட குழந்தையின் உச்சந்தலையில் முத்தமிட்டவன், அவளைத் தவிர இந்த உலகத்தில் வேறெதுவும் முக்கியமில்லை என்று மனதை திடப்படுத்திக் கொண்டான்.

பாசம் தேடி வந்தவனை, பழி சுமத்தித் துரத்தினாளா – மருமகளை

பேத்தியின் சாயலில் கண்டவள் பகை மறந்து உறவாடினாளா- முதலில்

தழைந்து போன மனம் எது – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…