பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 17

புதைந்திருந்த மர்மங்களைத் தேடிச் சென்றவள், புத்துணர்வுடன் அலுவலகம் திரும்பினாள்.

பல்லவி கேட்டிருந்த அத்தனை ஆவணங்களும் தயார் நிலையில் அவள் பணிமேஜையில் இருந்தன. அதில் திருமண சான்றிதழை வருடிய அவளது விரல்கள், சாட்சி கையொப்பம் இட்டிருந்து தன்னவனின் பெயரில் வந்து நிற்க, முகம் புன்னகையில் மலர்ந்தது.

கற்பனையில் குணாவுடன் டூயட் பாடியவளுக்குப் பக்க வாத்தியம் வாசித்தது கைபேசி.

திரையில் ‘பவித்ரா காலிங்க்’ என்று கண்டவள்,

‘இவளுக்கு வேற வேலையில்லை!’ முணுமுணுத்துக் கொண்டே அழைப்பை ஏற்றாள்.

யமுனாவின் கைபேசி எண்தான் பவித்ரா என்ற பெயரில் சேமித்திருந்தாள். குணா தன்னை முதல் முதலாக அழைத்த பெயரல்லவா அது!!!

“சொல்லிட்டீங்களா! மாமா சம்மதம் சொன்னாரா?” படபடவென்று மறுமுனையிலிருந்து கேள்விகளை அடுக்கினாள் யமுனா.

“நீ இப்படியே எனக்கு ஃபோன் செய்துகிட்டு இருந்தா, கூடிய சீக்கிரம் உங்க வீட்டுல மாட்டிக்க போற பாரு!” செல்லமாகக் கண்டித்தாள் பல்லவி.

“நான் மாட்டுறது இருக்கட்டும்; நீங்க மறந்துபோய் நம்ம எடுத்துகிட்ட புகைப்படங்கள் எல்லாம் முகநூலில் பதிவேற்றிட போறீங்க!” பதிலுக்குக் கிண்டல் செய்தாள் யமுனா.

உண்மைகள் உடைந்ததில், பெண்களுக்குள் ஒரு அழகான புரிதல் மலர்ந்தது. அலுவலக நேரம் என்பதையும் மறந்து அளவளாவிக் கொண்டிருந்தனர்.

குணா மீது வழக்கு தொடராமல் தட்டிக்கழிக்க, அலுவலகத்திலும், சுதாவிடமும் தான் படும்பாட்டை விளக்கிய பல்லவி, அவனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு வழி தேடுவதாகப் புலம்பினாள்.

“இன்னும் ஆதாம் ஏவாள் காலத்துலேயே இருக்கீங்களே!” கிளுகிளுவென்று சிரித்தவள், காணொளி அழைப்பில் பேசும்படி யோசனை சொன்னாள்.

“உன்னோட மாமா, கல்யாணம்னு பேச்சு எடுத்தாலே ருத்திரதாண்டவம் ஆடுவாரு; இதுல நான்மட்டும் நேருல பார்த்துப் பக்குவமா பேசலேன்னா ஒரேடியா தலைமறைவு ஆயிடுவாரு.” குணாவின் மனநிலையை நினைவூட்டினாள் பல்லவி.

உண்மைகளை ஒளிவுமறவின்றி பகிர்ந்துகொண்டாலே, குணா திருமணத்திற்குச் சம்மதிப்பான் என்று யமுனா சுட்டிக்காட்டினாள். ஆயிரம்தான் அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தாலும், யமுனாவின் உதவி இல்லாமல் குணாவின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் பல்லவி உறுதியாக இருந்தாள்.

‘என் கணவன்’ என்ற பெண்களுக்கே உண்டான பண்பியல்புக்கு இவள் மட்டுமென்ன விதிவிலக்கா.

“அதெல்லாம் வேண்டாம் யமுனா! என் காதல் விவகாரத்தை நானே பார்த்துக்கறேன்! நீ முதல்ல உன் கணவருக்குப் புத்திசொல்லி மதுமிதாவை அழைச்சிட்டுப் போ!” பேச்சைத் திசைதிருப்பினாள் பல்லவி.

“மதுகிட்ட கண்டிப்பா இந்தமுறை இன்னும் அழுத்தமா பேசி புரியவைக்கிறேன் பல்லவி! மதுமிதா உங்க திருமண வாழ்க்கைக்கு ஒரு தடையா இருக்க மாட்டா!” கசந்த குரலில் பதிலளித்தாள்.

யமுனா இவ்விஷயத்தில் போராடமல் இல்லை; மாமன் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, மதுசூதனனிடம் தன்மையாகப் பேசியும், அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. வருடத்திற்குப் பெரும்பாலான நாட்கள் போர்முனையில் உயிரைப் பணயம்வைத்து அல்லாடிவிட்டு வீடு திரும்புபவனிடம் பொழுதுக்கும் சண்டையிட, அவள் மனமும் ஒப்பவில்லை.

தன் உரிமையை நிலைநாட்ட நினைத்து யமுனாவின் மனம் புண்படும்படி பேசிவிட்டோமே என்று மனம்நொந்தவள்,

“மன்னிச்சிரு யமுனா! நான் அந்த அர்த்தத்துல சொல்லல்ல! நீ குணா அறிவுரைபடி நடந்துக்கோ! அதுவரைக்கும் மதுமிதா எங்களோட அரவணைப்புல பாதுகாப்பா வளருவா!” தன்மையாக விளக்கினாள்.

‘எங்கள் அரவணைப்பில்!’ பல்லவி கூறியதைக் கேட்டவளுக்குக், குற்றவுணர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட நல்லுள்ளங்களுக்குப் பாரமாக இருக்கும் தன் கையாலாகத தனத்தை எண்ணி விரக்தியில் சிரித்தவள்,

“ம்ம்!” என்று மட்டுமே உரைத்தாள்.

யமுனாவை இயல்பு நிலைக்கு திருப்ப முயற்சித்தவள், “நீ வேணும்னா பாரேன்! குணாவுக்கு என் கையால பணியாரம் செஞ்சு அதை அவருக்கு ஊட்டியும்விட்டு ஃபேஸ்புக்ல போட்டோ போடுவேன்!” குறும்பாகப் பேசி சவால்விட்டாள்.

அதைவிட வேறென்ன மகிழ்ச்சி தந்துவிட முடியுமென்று நினைத்தவளின் மனமும் லேசானது.

குணாவை நேரில் பார்த்துப் பேச ஏங்கிய மனதிற்கு அதைப் பாட்டியிடம் வெளிப்படையாகச் சொல்லத் துணிவில்லை. காரணமில்லாமல் அவள் அமெரிக்கா வர அண்ணனும் அனுமதிக்க மாட்டானென்று அறிந்திருந்தாள் பல்லவி.

இன்று மட்டும் என்ன பேரதிசியம் நிகழ்ந்துவிடப் போகிறதென்ற விரக்தியில் அலுவலகத்திலிருந்து திரும்பியவளின் செவிகளை எட்டியது அந்தச் சூடான விவாதம்.

மஞ்சரி மேற்படிப்பு சம்பந்தமாக வேறொரு நகரத்தில் ஒருமாத காலம் பயிற்சியெடுக்க வேண்டியதால், விஷ்ணுவைப் பார்த்துக்கொள்ள, குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் அவர்களுடன் செல்வதாக சரண் பாட்டியிடம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தான்.

பணியில் காட்டும் அக்கறையைக் குழந்தை விஷயத்தில் மஞ்சரி காட்டுவதில்லை என்று நீலாவதி புலம்பிக் கொண்டிருந்தாள்.

“கொள்ளு பேரன் பேத்தி பார்க்கணும்னு நீ கட்டாயப்படுத்தினதுனால தானே நாங்க குழந்தை பெத்துக்கிட்டோம்!” மனைவிக்குப் பரிந்துப் பேசியவன், “விஷ்ணு மேல அவ்வளவு அக்கறை இருந்தா, நீ நிரந்தரமா என் கூடவே வந்து இரு. உனக்கு கிரீன் கார்டு வாங்கித்தரேன்!” மறுயோசனை சொன்னான்.

“நான் வர மாட்டேன்னா சொன்னேன்; உன் தங்கைக்குக் கல்யாணம் செய்துவை; உன் கூடவே வந்திருக்கேன்! அப்புறம் நீங்க ஜோடியா ஊர் சுத்துங்க; படிங்க; உங்க இஷ்டம்போல செய்யுங்க!” அவன் கடமைகளை நினைவூட்டினாள்.

அவர்கள் வாதத்தைக் கேட்ட பல்லவிக்கு ஒரு யோசனை உதித்தது.

“இவ்வளவு கோபம் உனக்கு ஆகாது நீலுமா!” பாட்டியின் கழுத்தைச் சுற்றி வளைத்தவள், “அண்ணா எங்க ரெண்டு பேருக்குமே கிரீன் கார்டு வாங்கித்தா; நாங்க உன் கூடவே இருக்கோம்; அங்கேயே செட்டிலான ஒருத்தரை கல்யாணமும் செய்துக்கறேன்!” செல்லம் கொஞ்சினாள் பல்லவி.

நீலாவதிக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால் அதில் சரணுக்கு உடன்பாடு இல்லை.

“இந்திய சட்டம் படிச்சிட்டு இங்க வந்து என்ன செய்யப்போற?” திடமாகக் கேட்டான்.

‘சட்டப்படிப்பு தன் காதலுக்குச் சதி செய்கிறதே!’ மனதில் சலித்தவள், எப்படியாவது இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குணாவை சந்தித்துவிட வேண்டுமென்று தீர்மானமாக இருந்தாள்.

“நீ சொல்றதும் சரிதான் அண்ணா! நான் உன்கிட்ட பேசின “அந்த கேஸ்” விஷயமா எனக்கும் அமெரிக்கா வந்தா உபயோகமா இருக்கும். விஷ்ணுவும் கண்ணுலேயே நிக்கறான்.” சாமர்த்தியமாக காயை நகர்த்தியவள்,

“அண்ணி! நீங்க கவலையில்லாம ஊருக்குப் போயிட்டுவாங்க!” என்றாள்.

சரணுக்கும் அவள் ஜாடைபேச்சு புரிந்தது. வழக்கில் அவள் காட்டும் அக்கறையை மெச்சியவன் உடனே சம்மதம் தெரிவித்தான். மஞ்சரிக்கும் மனதில் நிம்மதி பிறந்தது.

“தங்கைக்குக் காலாகாலத்துல கல்யாணம் செய்து வைக்காம இப்படியே ரெண்டு பேரும் பணம் பதவின்னு கிறுக்குப் புடிச்சி அலையுங்க!” நீலாவதி மறுபடியும் ஏச, மஞ்சரியின் முகம் வாடியது.

“குழந்தை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு எங்க லட்சியமும் எங்களுக்கு முக்கியம்; இரண்டையும் எப்படிச் சமாளிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்!” சரண் அழுத்தமாக உரைக்க,

“அண்ணா சொல்றது சரிதான்!” ஒத்தூதியவள், “நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா இருப்போம்; இன்னொரு முறை இப்படி புலம்பாத!” மிரட்டாதக் குறையாக எச்சரித்தாள் பல்லவி.

நல்லெண்ணத்துடன் பேசப்போய் இறுதியில் அண்ணன் தங்கை இருவரும் ஒன்று சேர்ந்து தன்னை திட்டுவது பழகிப்போனவள், “எப்படியோ போங்க!” கழுத்தை நொடித்து அங்கிருந்து வெளியேறினாள்.

பாட்டியின் குத்தல் பேச்சால் வாடியிருந்த மஞ்சரியின் முகத்தில் சிரிப்பை வரவைக்க அண்ணனும் தங்கையும் மெனக்கெட்டனர். பிறகு பல்லவியின் அமெரிக்கா பயணத்தைப் பற்றி கலந்துரையாடினர்.

தன்னவனை காணும் நாளை எண்ணி பேதை துள்ளி குதித்தாள்.

அலுவலகத்தில் மறுபடியும் விடுப்பு கேட்டு நின்றவளை கேள்வியாக நோக்கினாள் அந்த அப்பாவி வழக்கறிஞர். வழக்கு விஷயமாக நிறைய ஆதாரங்கள் திரட்ட, இப்பயணம் ஏதுவாக இருக்கும் என்றுதும் அவள் உடனே தலையசைத்தாள்.

பல்லவி துள்ளலாக ஊருக்குப் புறப்பட, நீலாவதியின் முகத்திலோ கவலை ரேகைகள் வழிந்தோடியது. தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ளாமல், அண்ணன் குடும்பத்திற்காக அல்லாடும் பேத்தியைப் பற்றி அவள் வருந்தாத நாளே இல்லை. வாழ்க்கைத்துணையின் அவசியத்தை அலட்சியம் செய்பவளுக்கு என்ன சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் தவித்தாள்.

ஆனால் இம்முறை அதைப் பல்லவி உணர்ந்தாள். குணா மீது வந்த காதலை நேரடியாகச் சொல்லத் துணிவில்லாத போதும், பாட்டியின் தோளினை அன்பாக அரவணைத்து,

“பாட்டி! கூடிய சீக்கிரம் நானும் கல்யாணம் செய்துக்கறேன். அப்புறம் நீ முழுநேரம் விஷ்ணுவோட இருக்கலாம் சரியா!” மறைமுகமாக நம்பிக்கையூட்டினாள்.

சந்தோஷத்தில் தத்தளித்தவள், பேத்தியின் முகத்தை வழித்து திருஷ்டி எடுத்தாள். பதிலுக்குப் பாட்டியின் கன்னங்களை கிள்ளி செல்லம் கொஞ்சியவள், அவளின் பரிபூரண ஆசிர்வாதங்களுடன் தன்னவனைச் சந்திக்கக் கரைகாணா மகிழ்சியுடன் கடல் தாண்டி பறந்தாள்.

குணாவிடம் தன் காதலை தெரிவித்தப் பிறகே குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டுமென்று உறுதியாக இருந்தாள். ஆனால் அண்ணன் அண்ணியிடம் செயற்கையாக உறவாடவும் அவளால் முடியவைல்லை.

நடப்பது நடக்கட்டுமென்று துணிந்தவள், வெளிப்படையாகப் பேச தீர்மானித்தாள். அதனால் மஞ்சரி பயிற்சி முடிந்து ஊருக்குத் திரும்பும் நாள்வரை காத்திருந்தாள்.

கைக்கெட்டும் தூரத்தில் தன்னவன் இருந்தும் அவனிடம் பேசாமல், அவனை நேரில் காணாமல் இருப்பது, பல்லவிக்கு நரக வேதனையாக இருந்தது. காத்திருப்பதும் சுகம் என்ற நம்பிக்கையுடன் நாட்களை ஓட்டினாள்.

இந்தியா திரும்ப ஒரு வாரமே இருந்த நிலையில் மூவரும் இரவு உணவுக்குப் பின் பொது விஷயங்களைப் பற்றி பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

பல்லவியின் மனம் படித்தவள் போல, “மதுமிதா சித்திகிட்ட எல்லா விவரங்களையும் சொல்லிட்டியா பல்லவி! குழந்தையோட அம்மா எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிக்க முடிஞ்சுதா?” கேள்விகளை அடுக்கினாள் மஞ்சரி.

இதைவிட வேறு உகந்தநேரம் அமையாதென்று உணர்ந்தவள், “அண்ணி! நான் குணாவை கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கறேன்!” ஆர்ப்பாட்டமே இல்லாமல் உள்ளத்தில் இருந்ததை உள்ளபடி சொன்னாள்.

“என்னடி உளறுற?” மஞ்சரி பதற,

அவள், தனக்குத் தெரியாமல், வழக்கு சம்பந்தமாகக் குணாவை நேரில் சந்தித்துப் பேசியிருப்பாளோ என்று யூகித்த சரண், “குணாகிட்ட பேசினியா? உண்மையெல்லாம் தெரிஞ்சு போச்சேன்னு உனக்கு காதல் வலை விரிக்கறானா?” உறுமினான்.

“இல்ல அண்ணா! நான் இங்க வந்திருக்கறதுக் கூட அவருக்குத் தெரியாது!” மென்றுவிழுங்கியவள்,

“ஆனால் நான் இங்க வந்திருக்கறதே அவர்கிட்ட என் விருப்பத்தைச் சொல்லத்தான்.” உண்மையை உடைத்தாள்.

தங்கை அடுத்தடுத்து தரும் பேரதிர்வுகளில் உறைந்து போயிருந்தான் சரண்.

“புரிஞ்சுதான் பேசுறியா பவி மா! உயிரோட இருக்கும் மனைவியை அந்த படுபாவி இறந்துட்டான்னு பொய்சொல்லி சொந்த பந்தங்களை ஏமாத்திகிட்டு இருக்கான்! அவன கல்யணம் செய்துக்கறேன்னு சொல்ற?” நிதர்சனத்தை நினைவூட்டி, அவள் தோளினை மென்மையாக அரவணைத்தாள் மஞ்சரி.

காதல் மயக்கத்தில் தத்தளித்தவளால் குணாவை பற்றிய சின்னதொரு பழிச்சொல்லையும் ஏற்க முடியவில்லை.

மஞ்சரியின் கையை உதறிவிட்ட பல்லவி, “பொய்தானே சொன்னாரு; கொலை செய்யலியே!” கொந்தளித்தாள்.

அண்னன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து, “அவர குற்றவாளியா மட்டும் பார்க்காம, அவர் பக்கத்து நியாயத்தையும் யோசிச்சு பாரு அண்ணா! உயிரோடு இருக்குற மனைவியை இறந்துட்டான்னு சொல்ற அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனையோ? அப்படிச் சொல்ல அவர் மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும்!” பரிதாபமாகவும் கேட்டாள்.

குணா மீது தங்கை கொண்டுள்ள இந்த திடீர் பரிவிரக்கம் எதனால் இருக்கும் என்று மனதில் அசைப்போட்டவன், “அப்போ! அவனைப் பற்றி உனக்கு எல்லா உண்மைகளும் தெரியும்! அப்படித்தானே!” திடமாய் வினவினான்.

“ம்ம்…தெரியும்!” என்று மென்மையாய் தலையசைத்தவள், சரண் அதைப்பற்றி துருவித்துருவி மேலும் கேள்விகள் கேட்பானென்று யூகித்து,

“ஆனா என் கணவரோட ரகசியங்கள், என்னோட ரகசியங்களும் தான். அதை நான் யார்கிட்டையும் சொல்லமாட்டேன்!” விழிகள் தரை பார்க்க பேசினாள்.

அவளைப் பலமாகத் தள்ளிவிட்டு, “யாருக்கு யார் கணவன்! என்னால அவன ஒரு மனுஷனா கூட ஏத்துக்க முடியலன்னு சொல்றேன்!” கர்ஜித்தவன்,

தங்கை தன்னை மீறி எதுவும் செய்யமாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், திருமணத்திற்குத் தான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்றும் நிர்த்தாட்சண்யமாக மறுத்தான்.

மனதிலுள்ள பாரத்தை இறக்கி வைத்தவளுக்கு எதிர்த்துப் பேச தைரியமும் தலைக்கேறியது. அண்ணனை நேருக்கு நேர் ஏறிட்டாள்.

“கல்யாணம் என் தனிப்பட்ட விஷயம். யாரை கல்யாணம் செய்துக்கறதுன்னு நான்தான் முடிவு செய்யணும்; குணா நல்ல கணவரா இருப்பாருன்னு எனக்குத் தெரியும்; வீணா அடம்பிடிக்காம உங்க சம்மதத்தைச் சொல்லுங்க!”ஆளுமை அவள் குரலில் மேலோங்கியது.

புத்திகெட்டு பேசும் தங்கை மீது ஆத்திரம் கொண்டவன், அவளருகே வேகநடை இட்டான்.

“விடுங்க சரண்!” இடைப்புகுந்த மஞ்சரி,

“நீங்க சொல்லப்போற எந்த விஷயமும் அவ காதுக்கு எட்டப்போகுறது இல்ல; நமக்கெல்லாம் தெரியாத ஏதோ ஒண்ணு அவளுக்குத் தெரிஞ்சிருக்கு. அதனாலதான் இவ்வளவு பிடிவாதமா இருக்கா! அவளைச் சுதந்திரமா முடிவெடுக்க விடுங்க” என்று, பல்லவியை கூர்மையாக ஏறிட்டாள்.

“மஞ்சரி! அவதான் ஏதோ புரியாம பேசுறானா, நீயும் அவள மாதிரியே பேசினா எப்படி மா!” சரண் மனமுடைந்துப் போக,

கணவனின் கரத்தைச் சேர்த்துப் பிடித்தவள்,

“இது காதல் சரண்; மறந்துட்டீங்களா! நான் உங்களுக்காக என் அப்பாகிட்ட போட்ட சண்டையும், பிடித்த அடமும் உங்களுக்கு மறந்துபோச்சா!” மென்மையிலும் மென்மையாக நினைவூட்டினாள்.

அவர்கள் திருமணமும் காதல் திருமணம் தான். சவால்களுக்குப் பஞ்சமில்லை என்றபோதும், மஞ்சரியின் பெற்றோர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சரணும் வளைந்து கொடுத்துப் போனான். காலப்போக்கில் அவர்களுக்குள் இருந்த மனஸ்தாபங்களும் மறைந்தது.

ஆனால் குணா பொய் சொன்னது கண்கூடாக தெரிந்த ஒன்று. இரண்டாம் தாரமாக, அதுவும் மனஇறுக்கம் கொண்ட குழந்தைக்குத் தாயாக வாழ நினைக்கும் தங்கையின் முடிவில் அதிருப்தி கொண்டான்.

“அவனும் நானும் ஒண்ணா மஞ்சரி!” கேட்டவன் மனதளவில் உடைந்தே போய்விட்டான்.

“இல்ல பா! நிச்சயமா இல்ல!” சொன்னவளின் விழிகள் ஒரு கணம் பல்லவியை சுட்டெரித்து கணவன் பக்கம் தயவுடன் மீண்டது.

“ஆனா காதல் உணர்வுகள் எல்லாருக்கும் ஒண்ணுதான் சரண்! அவளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ்!” மென்மையாகக் கேட்டாள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் பொறுமையாகவும் யார் மனதையும் புண்படுத்தாது நடக்கும் அண்ணியின் பக்குவத்தை மெச்சியவள், அவளை ஆரத்தழுவினாள்.

“தாங்க்ஸ் அண்ணி! உங்க நம்பிக்கையை கண்டிப்பா நான் காப்பாத்துவேன்!” கதறினாள் பல்லவி.

அவள் முகத்தை நிமிர்த்தியவள், அண்ணனிடம் பேசும்படி ஜாடை காட்டினாள். அண்ணன் மார்பில் சாய்ந்து மன்றாடினாள் பல்லவி.

 மனையாளின் முடிவில் பெரும் நம்பிக்கை கொண்டவன், தங்கைக்கு ஆறுதலாகத் தட்டிக்கொடுத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

நன்றிகள் கூறி அவர்களைக் கட்டியணைத்தாள் பல்லவி. மகிழ்ச்சியில் தத்தளிக்கும் தங்கையிடன் தன் மனதில் இருப்பதைச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தான் சரண்.

“பாட்டி சொன்னா மாதிரி உன் முதல் திருமணம் விவாகரத்துல போய் முடிஞ்சுடுமோன்னு இப்போ எனக்குப் பயமா இருக்கு பவி மா!” தன் ஆதங்கத்தைக் கொட்ட,

அண்ணன் அண்ணி விரல்களை ஒன்று சேர்த்து குவித்தவள், “நிச்சயமா அப்படி எல்லாம் நடக்காது அண்ணா! உங்க ரெண்டு பேரோட நல்லாசி இருக்குறப்ப எனக்கு அப்படி எதுவும் நடக்காது அண்ணா!” உறுதியாக உரைத்தாள்.

அவர்களும் அதைத்தானே விரும்பினார்கள். ஆனால் வீட்டின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த தங்கை இனி சந்திக்கவிருக்கும் சவால்களுக்கு எல்லையே இல்லை என்று அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்….

விருப்பத்தைச் சொல்ல கடல்கடந்து வந்தவள் – இன்று

விதண்டாவாதம் செய்து வீட்டாரை வென்றுவிட்டாள் – நாளை

வீம்பனின் விரல் கோர்த்து விதியை வெல்வாளா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…