பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 16.2

அதற்குள் யமுனா ஒரு பெண்கள் மறுவாழ்வு மையம் முன் வண்டியை ஓரங்கட்டினாள்.

“உனக்கு எல்லாவிதத்துலையும் உதவி செஞ்ச குணா, மதுமிதாவை மட்டும் தர மறுத்தது ஏன்?” நேரடியாக கேட்டாள் பல்லவி.

அதே மென்சிரிப்புடன், அவள் கரங்களைப் பற்றி, “அதுக்குத்தான் உங்களை இங்க அழைச்சிட்டு வந்திருக்கேன். இது நான் நடத்துற பெண்கள் மறுவாழ்வு மையம்.” என்றவள், உள்ளே வரும்படி மென்மையாக அழைத்தாள்.

மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்திற்குச் சென்றனர் பெண்கள். மறுவாழ்வு மையம் என்ற போதிலும் சோகத்தின் பிம்பமாய் அது விளங்கவில்லை. மாறாக அங்கு தையல் இயந்திரத்துக்குள் தலைகுனிந்து மும்முறமாக வேலை பார்த்து கொண்டிருந்தவர்களின் முகத்தில் உற்சாகமே மின்னியது. நவீன வசதிகளால் நிரம்பிய அந்த இடம், யமுனா அமெரிக்காவில் மேற்கொண்ட படிப்பை பிரதிபலித்தது.

பல வண்ணத்துணிகளை சிற்றாடைகளாக உருமாற்றும் பெண்களுக்கு மத்தியில் அந்த இடம், யமுனை நதிக்கரையில் கோப்பியர்கள் வாழும் பிருந்தாவனமாகவே காட்சியளித்தது. மாயக்கண்ணன் இல்லாதது ஒன்று தான் குறை என்று கற்பனை செய்தவளுக்கு ஏனோ குணாவின் முகம் தான் கண்முன் நின்றது.

“அவங்க எல்லாம்….” விருந்தாளிகள் இருக்கையில் அமர்ந்தபடி அப்பெண்களைப் பற்றி வினவினாள் பல்லவி.

“உங்களுக்கு அவர்கள் யாருன்னு தெரியணுமா, இல்ல மதுமிதா ஏன் மாமாவோட இருக்கான்னு தெரியணுமா!” ஆளுமையுடன் கேட்டு, கம்பீரமாக எதிரிலிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தாள் யமுனா.

“ரெண்டுமே தான்! ஆனா முதல்ல மதுமிதா பற்றி!” அவளும் விடுவாதாக இல்லை.

“ம்ம்!” அதே சிரிப்புடன் தன் வாழ்க்கையைத் திசைமாற்றிய அந்த நிகழ்வுகளை விவரித்தாள்.

“நான் கருவுற்றது எனக்கே நாலு மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. அப்போ மதுசூதனன் ஒரு ரகசிய பணியில் இருந்தான். அதனால அவன்கிட்ட விஷயத்தைச் சொல்லமுடியல. இந்தக் குழந்தை வேண்டாம்னு நான் எவ்வளவு சொல்லியும், மாமா கேட்கல.” பெருமூச்சுவிட்டவள்,

“ஏதேதோ சொல்லி வழக்கம்போல என் மனச மாத்திட்டாரு. மதுமிதா பிறந்ததுக்கு அப்புறம் தான் மதுசூதனனுக்கு சொல்ல முடிஞ்சுது; ஆனால்…” யமுனா முடிக்கும் முன்,

“ஏன் அவர் தன் குழந்தையே இல்லன்னு உன்னைச் சந்தேகப்பட்டாரா?” கொந்தளித்தாள் பல்லவி.

“ச்சே ச்சே!” நொடியில் மறுத்தவள், “அவன் மட்டும் அப்படிச் சொல்லியிருந்தா இந்நேரத்துக்கு நானே அவன் மேல வழக்கு போட்டிருப்பேன்!” பதிலுக்குப் பொங்கினாள் யமுனா.

‘அம்மாடியோ! அப்படியே குணா மாதிரியே மூக்குக்கு மேல கோபம் வருதே!’ மனதில் நினைத்தவள், யமுனா பேச காத்திருந்தாள்.

“அவன் மறுக்கல்ல; ஆனா ஏத்துகவும் இல்ல!” முரண்பாடாக பதில் சொல்லி மேலும் குழப்பினாள்.

பூட்டப்பட்டிருந்த அலமாரியில் இருந்து ஒரு கோப்பை எடுத்து தந்து,

“இதைப் படிங்க! மதுமிதா விஷயத்துல என் மாமா எடுத்த முடிவு எவ்வளவு சரின்னு உங்களுக்கே புரியும்.“ என்றவள்,

ஏற்றுமதி வேலைகளைக் கவனித்துவிட்டு அரைமணி நேரத்தில் திரும்புவதாகச் சொல்லி நகர்ந்தாள்.

பல்லவி அந்த கோப்பைத் திறந்தாள். அதில் யமுனாவிற்கு குணா தன் கைப்பட எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தது.

அம்மு!

நீ நினைக்குறா மாதிரி விசா பிரச்சனைக்காக உன்ன நான் டெல்லிக்கு அனுப்பல. உன்னோட மது உனக்காக அங்க காத்துக்கிட்டு இருக்கான். ஆனா அதுல ஒரு சிக்கல்; உனக்காக மட்டும்தான் காத்துக்கிட்டு இருக்கான்.

ப்ளீஸ் எனக்காக கோபப்படாம மிச்சத்தையும் படி.

மதுமிதா பிறந்த இருபது நாளுல மதுசூதனன் எனக்கு போன் பண்ணான். அவன் விருப்பத்தைக் கேட்காம நீ குழந்தை பெற்றெடுத்ததில் அவனுக்கு உடன்பாடு இல்லை.

 நிச்சயமா உன்மேல சந்தேகப்பட்டு அவன் அப்படிச் சொல்லல.

திருமணமாகாதத் தன் தங்கை எதிர்காலத்தை பற்றி பயப்படுறான். அதனால அப்பா அம்மா கிட்ட சொல்லவும் தைரியம் இல்லன்னு சொன்னான்.

கொஞ்சம் அவகாசம் கொடுத்தா மனசு மாறிடுவான்னு நெனச்சு தான் இதைப்பற்றி உன் காதுல போடாமலேயே இருந்தேன்.

ஆனால் அவன் தன் முடிவுல பிடிவாதமா இருக்கான். யமுனா கிட்ட நேரடியா பேசிக்கறேன்னு பலமுறை சொன்னான். நான்தான் அவன உன்கிட்ட பேச விடாம தடுத்தேன்.

காரணம், எங்க நீ அவனோட சண்டைபோட்டு வாழ்க்கை முழுக்க தனியா வாழணும்னு முடிவு செஞ்சிடுவியோன்னு பயம்.

உன் வாழ்கையை தீர்மானிக்க நான் யாருன்னு உனக்கு என் மேல கோபம் வரலாம் அம்மு. நீ வேண்டாம்னு சொல்லியும், நான்தான் உன்ன குழந்தை பெத்துக்க சொல்லி கட்டாயப்படுத்தினேன். அதுக்கு பிராயச்சித்தம் தேடத்தான் தலையிடறேன். அந்த உரிமையை நீ எனக்கு தருவேன்னு நம்பி ஒரு திட்டம் போட்டிருக்கேன்.

கொஞ்சம் நிதானமா சிந்திச்சு பாரு அம்மு. குழந்தை விஷயத்துல அவனுக்கும் முடிவெடுக்க சமஉரிமை இருக்கு. அவன் விருப்பத்தைக் கேட்காம விட்டது தப்பு. இனி அதை நம்ம திருத்தி அமைக்கவும் முடியாது.

ஆனா விட்டுக்கொடுத்து போகலாம் அம்மு. நான் உனக்கு முன்னாடியே சொன்னது தான். காதலிச்சா மட்டும் போதாது. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து வாழவும் தயாரா இருக்கணும்.

இந்த விஷயத்துல இப்போ நீ தான் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகணும். அவன் மனசுல இருக்குற பயத்தை போக்கும் சக்தி, நீ காட்டும் பாசத்துக்கு மட்டும்தான் இருக்கு.

நல்லது நடக்கும்னு நம்பிக்கையோட பொறுமையா இரு.

அதனால இப்போ அவன் எதிர்பாக்குறா மாதிரி நீ போய் அவனோட சந்தோஷமா குடும்பம் நடத்து. மனசுக்கு பிடிச்சவனோட வாழத்தானே அம்மு இத்தனை காலம் தவமிருந்த. சண்டைபோட்டு என்ன சாதிக்க போறோம்னு சொல்லு.

உன் கண் பார்த்து அறிவுரை சொல்ற அளவுக்கு எனக்குத் தைரியம் இல்ல டி; நீயும் கண்டிப்பா கேட்டுக்கற மனநிலையில இருந்திருக்க மாட்ட. அதான் பொய்சொல்லி உன்ன ஊருக்கு அனுப்ப வேண்டியதா போச்சு.

குழந்தையை உன்கிட்டேந்து பிரிச்சு உன்ன கஷ்டப்படுத்தணும்னு எனக்கு மட்டும் ஆசையா.

உயிரா நேசிச்ச அந்த மதுசூதனனுக்காக உயிரா வந்த இந்த மதுமிதாவை கொஞ்சம் காலத்துக்குப் பிரிஞ்சு இருக்க வேண்டிய நிலைமை.

நீ உன் மதுமிதாவை வந்து அழைச்சிட்டு போகுற வரைக்கும், அவ என் கூட பத்திரமா இருப்பா; எத்தனை நாள் எத்தனை வருஷமானாலும் சரி;

மதுசூதனன் ஊர் அறிய மதுமிதாவை தன் குழந்தைன்னு சொல்ற வரைக்கும், நம்ம போட்ட இந்தத் திருமண நாடகம் அப்படியே இருக்கட்டும்.

அத்தை மாமாகிட்ட எல்லாம், நீ உயிரோட இல்லன்னு பொய்சொல்ல போறேன். உன் பேருக்கு களங்கம் வராம இருக்கணும்னா, எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியல அம்மு.

வேடிக்கையை பார்த்தீயா! ஜாதக தோஷம் நமக்கு எப்படி கைக்கொடுத்து உதவுது!

மதுசூதனன் குடும்பம் பொறுத்தவரை, அவன் உன்னை ஒரு அனாதைன்னு சொல்லித்தான் வீட்டுக்கு அழைச்சிட்டு போகப்போறான். அதுவும் இனி உங்க வாழ்க்கை டெல்லியில மட்டும்தான்.

பார்ப்போம் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்னு. மதுசூதனன் மனசு மாறி மதுமிதாவ ஏத்துக்கற நாள், நான் எந்தவித தயக்கமும் இல்லாமல் எல்லா உண்மையையும் சொல்லிடுவேன்.

அதுவரைக்கும் எப்பேர்பட்ட பழியும் பாவமும் என் அம்முவுக்காக சுமக்க இந்த மாமா தயார். எல்லையில்லா பாசம் காட்ட என் அம்மு சாயல்ல மதுமிதா என் பக்கத்துலேயே இருக்குறப்ப, இந்த மாமாவுக்கு எதுவும் கஷ்டம் இல்லை.

இந்த மாமன மீறி எதுவும் நடக்காதுன்னு நீயும் நம்பினா, அஷ்வின்கிட்ட உன் பாஸ்போர்ட் கொடுத்து அனுப்பிடு. அதை உன் சம்மதமா நான் எடுத்துக்கறேன்.

அதே மாதிரி என் போன் நம்பர் மாத்திட்டேன். என்கிட்ட பேச முயற்சி செய்யாத; உன்னோட பேச எனக்குத் தைரியம் இல்ல அம்மு; அதான் உண்மை.

உன்கிட்ட மன்னிப்பு கேட்க ஆயிரம் விஷயம் இருக்கு.  அதையெல்லாம் இன்னொரு கடிதமா எழுதியிருக்கேன்.

இதுவும் கடந்து போகும்! நம்பிக்கையோடு இரு!

முதல் கடிதம் படித்து ஸ்தம்பித்து போனவள், இரண்டாவது கடிதத்தை எடுத்தாள்.

…உனக்காக எதையும் கண்மூடித்தனமா செய்யற நான், உன் கல்யாணத்துக்கு அப்புறம் பல நேரங்கள் உன் மனசு புண்படும் அளவுக்குக் குத்தலா பேசி நடந்துகிட்டு இருந்திருக்கேன்.

காதல் கல்யாணம் என்றாலே பல சவால்கள் இருக்கும்; அதுலையும் நீ காதலிச்சது ஒரு ராணுவ வீரன். அவனால உனக்கு சராசரி குடும்ப வாழ்க்கையை கொடுக்க முடியாதுன்னு உனக்கு அன்னைக்கு அறிவுரை சொல்ல நெனச்சேன். ஆனால் அதை புரிஞ்சுக்கற நிலமையில நீ இல்ல.

அந்தப் பக்குவத்தை உனக்குச் செயலுல காட்டணும்னு தான் கண்டிப்பா இருந்தேன் அம்மு.

கணவன் பக்கத்துலேயே இருக்கணும்னு ஆசை படுற பெண்களுக்கு மத்தியில் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டும்தான் மதுசூதனன் உன்னோட இருப்பான்னு தெரிஞ்சும் நீ உறதியா காதலிச்சது ரொம்ப பெருமையான விஷயம்.

ஆனா நீ அந்த நிதர்சன உண்மையை எப்பவும் கடைப்பிடிக்கணும்னு தான் அவனோட உன்ன அடிக்கடி பேச விடல்ல.

அதேமாதிரி அவன் உன்ன அழைச்சிட்டு போன பிறகு, அத்தை மாமா உன்னோட உறவாட மறுத்தாங்கனா, அதுல உன் மனசு உடைஞ்சு போயிட கூடாதூன்னு தான் அவங்களோடையும் பேச விடாம தடுத்தேன்.

உருவங்களை உள்ளத்தில் வைத்து நேசித்துப் பழக உனக்கு பயிற்சி தந்தேன். ஆனா விதியின் விளையாட்டு பாரேன்…. உன் குழந்தையும் அந்தப் பட்டியல்ல சேர்ந்தது தான் கொடுமை. என்ன மன்னிச்சிரு அம்மு.

மனிதனா பிறந்த ஒவ்வொருவரும் இறப்பது உறுதி தான். நெருப்புன்னா வாய் சுட்டுற போறது இல்ல; ராணுவ வீரர்களுக்கே உண்டான பேராபத்துக்கள் உனக்குத் தெரியும். எந்த சவாலையும் தலைநிமிர்ந்து எதிர்க்குற தைரியசாலியா தான் என் அம்முவை நான் எப்பவுமே பார்க்க விரும்புறேன். 

எப்படிபட்ட சூழ்நிலையிலையும் நீ தன்னம்பிக்கையோட சுயமா சிந்திச்சு வாழணும்னு ஆசைப்பட்டு தான் உன்ன கல்லூரிக்கு அனுப்பினேன். தொழில் தொடங்க சொன்னேன்.

இந்த அடிப்படை அனுபவத்தோடு, நீயும் சுயமா வேலைசெய்து, நாலு பேருக்கு முன்னுதாரணமாக சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்வன்னு நம்பறேன் அம்மு.

பணம் விஷயத்துல மாமாவை தொல்லை செய்தது தப்புதான். நீ படிக்கணும்னு ஆசைபட்டேன். ஆனால் அது என்னோட மாதாந்திர வருமானத்துல சாத்தியம் இல்லன்னு எனக்குத் தெரியும். வேற வழியில்லாம தான் மாமாகிட்ட கேட்டேன். ஆனால் மாமவுக்கு பணம் நெருக்கடி வராத அளவுக்குத் தான் அவர கேட்டேன். என்ன நம்பு அம்மு.

அதே மாதிரி பூர்வீக சொத்து உன் பேருல வாங்கினதும் உனக்காகத் தான் அம்மு. உன் பேருல இந்தியாவுல சொத்து, பேங்க் பேலன்ஸ் இருந்தால்தான் விசா கொடுப்பாங்க; அதான் அதை உன் பேருல எழுதி வாங்கிகிட்டேன். அது எப்பவும் உன் பேருல தான் இருக்கும். அதுல எந்தவித மாற்றமும் இல்லை.

பணம் விஷயத்துல என்னை யார் தப்பா நெனச்சாலும் பரவாயில்ல; நீ புரிஞ்சுண்டா போதும்.

நீ என் உயிர் அம்மு! உனக்காக எதையும் செய்வான் இந்த மாமா. உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா, நடந்தது எதைப்பற்றியும் வருத்தப்படாம மதுசூதனனோட சந்தோஷமா வாழணும். குறிப்பா மதுமிதாவைப் பற்றி கவலைப்படாம இருக்கணும்.

எதையாவது நெனச்சு நீ அழுதா, இந்த மாமா தோற்றுப்போனதா அர்த்தம். அதை மட்டும் மறந்துடாத டா அம்மு. ‘மா…மா…மாமான்னு’ நீ கூப்பிடற அந்த நாளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன் அம்மு.

மிஸ் யூ அம்மு!

கோப்பையை மூடி வைத்தவளின் கண்கள் காவிரி வெள்ளமாய் வழிந்தோடியது. கேட்ட, கேட்காத கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைத்துவிட்டது இன்று.

அச்சமயம் உள்ளே வந்த யமுனா, பல்லவியின் முகம் பார்த்தே அவளின் மனநிலையை அறிந்தாள்.

அவள் மனம்திறந்து பேச வேண்டும் என்று நினைத்தவள், “சொல்லுங்க பல்லவி! யாரு மேல வழக்கு தொடர போறீங்க!” வம்பிழுத்தாள்.

“யமுனா! மதுமிதா, குணாவை மா…மா…மாமான்னு தான் கூப்பிடுறா தெரியுமா.” பல்லவி சொல்ல,

“ம்ம்!” என்றாள்.

“சமீபத்துல அவளுக்கு மனஇறுக்கம்னு கண்டுபிடிச்சாங்க! உங்களுக்கு யாராவது அதைப்பற்றி சொன்னாங்களா!” மேலும் வினவினாள்.

“அதெல்லாம் மாமா பார்த்துப்பாரு! நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க!” மதுமிதா பேச்சை திசைத்திருப்பினாள் யமுனா.

“அப்படின்னா என்னன்னாவது உங்களுக்குத் தெரியுமா!” குழந்தை மீது சற்றும் பாசம் இல்லையே இவளுக்கு என்று கொந்தளித்தாள் பல்லவி.

பல்லவி முகம் பார்க்க நின்றவள், பத்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் மனஇறுக்கம் பற்றி பாடம் எடுத்து,

“கடிதத்த முழுசா படிச்சீங்க தானே! குழந்தையைப் பற்றி நான் எதுவும் கேட்கமாட்டேன்! நான் எதுக்கும் அழவும்மாட்டேன்; என் மாமா தோற்றுப்போகும் படியா எதுவும் செய்யமாட்டேன்!” திடமாகச் சொன்னவள்,

“மதுமிதாவை என் மாமாகிட்டேந்து பிரிக்க சதி வேலை பார்க்காம வேற ஏதாவது வழக்கு எடுத்து நடத்துங்க!” உத்தரவிட்டு புறப்படும்படி கையசைத்தாள்.

“சதி வேலை பார்க்க போகுறது இல்ல யமுனா; உங்க மாமவுக்கு சரி பாதியா ஆகலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்!” மறைமுகமாகப் பேசி புறப்பட்டாள்.

காதில் விழுந்தது சரிதானா என்று சிந்தித்தவள், பல்லவியின் கரத்தைப் பிடித்து தடுத்தாள்.

“பல்லவி! நிஜமாவா!” கண்கள் அகல கேட்டாள்.

“தெரியல யமுனா! அவர் மேல என்ன உணர்வு ஏற்பட்டிருக்குன்னு என்னால சரியா சொல்லமுடியல்ல!” வெட்கத்தில் இமைகள் குடைசாய பேசினாள்.

“யோசிக்காதீங்க பல்லவி! குணா மாமா ரொம்ப நல்லவர்!” பரிந்துரை செய்தவளின் மனம், தன்னால் தனிமனிதனாக அல்லாடும் மாமனுக்கு நல்லதொரு வாழ்க்கை அமையவேண்டும் என்று விழைந்தது.

“மதுமிதாவிற்காக இத்தனை தூரம் ஓடி வந்த உங்களை விட வேறு யாரு மாமாவுக்கு ஏற்ற துணையா இருக்க முடியும்னு, எனக்கும் உள்மனசுல தோணினதுனால தான் பல்லவி உங்ககிட்ட ஒளிவுமறைவு இல்லாம எல்லா விஷயத்தையும் சொன்னேன்!” மனம்திறந்து பேசியவள்,

“நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க! மாமாகிட்ட நம்ம சந்திச்சத பற்றி சொல்லிடலாம். அவரும் இந்த திருமணத்திற்கு மனப்பூர்வமா சம்மதம் சொல்லுவாரு.” என்றாள்.

“ம்ஹூம்” உதட்டை மடித்து இடவலமாகத் தலையசைத்தவள்,

“என் காதல் நான்தான் சொல்லணும்! நானே பார்த்துக்கறேன்!” தன் உரிமையை அழுத்திச்சொன்னாள் பல்லவி.

“அதுக்கில்ல பல்லவி! மதுமிதா அவரோட இருக்கற வரைக்கும் மாமா வாய்திறந்து எந்த ரகசியத்தையும் சொல்லவும் மாட்டாரு; வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க சம்மதிக்கவும் மாட்டாரு!” நிதர்சனங்களை எடுத்துரைத்து,

“நான் பேசினா மாமா உடனே கேட்டுப்பாரு!” தனக்கு குணாவிடமிருந்த உரிமையை அழுத்தமாகச் சுட்டிக்காட்டி வலியுறுத்தினாள்.

“உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா யமுனா!” குறும்பாகத் தொடங்கியவள், ”உன் மாமா ஏற்கனவே எனக்கு ப்ரபோஸ் பண்ணிட்டாரு!” தானும் அவளுக்கு சலைத்தவள் இல்லை என்று உணர்த்தினாள்.

நமுட்டுச் சிரிப்புடன் சொன்னவளை புருவங்கள் உயர்த்தி பார்த்தாள் யமுனா.

அவர்கள் முதல் சந்திப்பைப் பற்றி விவரித்தாள் பல்லவி.

“அப்போகூட மதுமிதாவுக்காக தான் கேட்டிருக்காரு; நிச்சயமா நான் வாய்திறந்து பேசாம, அவர் உங்களோட காதல்ல ஏத்துக்கமாட்டரு!” உறுதியாகச் சொன்னாள் யமுனா.

“ஓ அப்படியா!” ஒற்றை புருவம் உயர்த்திய பல்லவி,

“உன் உதவி இல்லாமலேயே குணாவ கல்யாணம் செய்துக்கறேன் பாக்குறியா!” சொடுக்கு போட்டு சவால்விட்டாள்.

ஏட்டிக்குப் போட்டி வாதம் செய்தாலும், பல்லவியின் தன்னம்பிக்கையை மெச்சினாள் யமுனா.

அவள் கரத்தை மென்மையாகப் பற்றியவள், “மாமாவ கல்யாணம் செய்துக்கோங்க பல்லவி. நானும் சீக்கிரமே வந்து மதுமிதாவை அழைச்சிட்டு போறேன்!” தாழ்ந்த குரலில் சொன்னாள்.

அவளுக்கு விட்டுக்கொடுத்து பேச கற்றுக்கொடுத்தவன் அவள் மாமானாச்சே.

யமுனாவின் கரங்களை தட்டிக்கொடுத்தவள், “ஒண்ணும் அவசரமில்ல யமுனா! நிதானமா வா!” மென்மையாகச் சிரித்து,

“இரண்டு பேருக்குள்ள இருந்தால்தான் அது ரகசியம்; நம்மளோட இந்தச் சந்திப்பு நமக்குள்ளேயே இருக்கட்டும்; உன் மாமா உனக்கு எழுதின கடிதம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்; இதெல்லாம் தெரியாமலேயே அவர் என் காதல் ஏத்துப்பாரு; எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு!” என்று உறுதியாகச் சொல்லி கண்சிமிட்டினாள்.

சட்டம் படித்தவளுக்கு பேச சொல்லித்தர வேண்டுமா என்ன?

உள்ளத்து ரகசியங்கள் இன்று சுக்குநூறாய் உடைய – மாமனை

உளவு பார்க்க வந்தவள் உள்ளத்தைப் பறிகொடுத்தாள்;

வழக்காட வந்தவள் வாழ்க்கைத்துணையாக விழைகிறாள்-வழியில்

தோழி என்று வந்தவளுக்கு தோள்சாய இடம் கொடுப்பானா?

இவர்கள் இல்லறத்தில் இனிதே இணைவார்களா – தவறுகளை

இடித்துக்காட்டி இருதுருவங்களாகப் பிரிவார்களா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…