பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 16.1

யமுனாவை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்த மறுகணமே, அதற்கான ஏற்பாடுகளை செய்தாள் பல்லவி. வேலை நிமித்தமாக டெல்லி செல்வதாகப் பாட்டியிடம் தகவல் சொன்னவள், சகஊழியரிடம் யமுனா குணாவின் திருமண சான்றிதழ் மற்றும் சொத்துக்கான வில்லங்க சான்றிதழ் அனைத்தையும் உரிய அரசாங்க அலுவலகங்களில் இருந்து வாங்கி வைக்கும் மாறு கேட்டுக்கொண்டாள்.

யமுனாவிடம் பேசி உண்மைகளை கண்டறிந்தவுடன், காலம் தாழ்த்தாமல் குணா மீது வழக்கு தொடருவதில் தீர்மானமாக இருந்தாள்.

புத்தி குணாவை தண்டிக்கத் துடித்தப்போதும், அவனின் தந்தை பாசத்தில் கரைந்த மனம், நிதர்சனங்களை ஏற்க மறுத்தது. குணாவை குற்றமற்றவனாகக் காண பேதை நெஞ்சம் பேராசைக் கொண்டது.

திடமாகத் திட்டங்களைத் தீட்டி டெல்லிவரை துணிந்து வந்தவள், யமுனா வீட்டின் வாசற்கதவு முன் தயக்கத்துடன் நின்றாள். அழைப்புமணியை அழுத்திவிட்டு ஒரு நிமிடம் காத்திருந்தவளுக்கு ஒரு யுகம் போல தோன்றியது.

அது இரண்டு தளங்கள் கொண்ட தனி வீடு. சுற்றுப்புறம், குடியிருப்பு பகுதி போலதான் காட்சியளித்தது.

குணாவுடன் வாழப் பிடிக்காமல் வேறொருவனை நாடி வந்திருப்பாளோ என்று கற்பனையில் மிதந்தவளின் சிந்தனையைக் கலைத்தது அந்த கதவின் ஓசை.

சாயலில் மதுமிதா அவள் அன்னையின் நகல் அல்லவா!’ என மலைத்தவள், கதவருகே நிற்பது யமுனா என்று உடனே அடையாளம் கண்டுகொண்டாள்.

“யமுனா!” தாழ்ந்த குரலில் பல்லவி தயக்கத்துடன் அழைக்க,

“அட பல்லவி! என்னைத் தேடி டெல்லி வரை வந்துடீங்களா? உள்ள வாங்க!” அலட்டலே இல்லாமல் மலர்ந்த முகத்துடன் அழைத்தாள் யமுனா.

“உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும்?” பல்லவி குழம்பி நிற்க,

“மாமாவும் உங்களோட வந்திருக்காரா?” என்று கேட்டு, மேலும் குழப்பினாள்.

நான்கு மாத கைகுழந்தையை பரித்தவிக்கவிட்டு வந்த குற்றவுணர்ச்சியின் அறிகுறிகூட இல்லாமல் நலன்விசாரிக்கும் இவள் ஒருபுறம்; கட்டுக்கதைகள் சொல்லி ஏமாற்றியவன் மறுபுறம் என இருவர் மேலும் ஆத்திரம் தலைக்கேற,

“குணாவோட வாழ பிடிக்கலன்னு நீங்க விலகி வந்துட்டீங்களா; இல்ல அவர் உங்கள விரட்டி விட்டுட்டாரா?” நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் பல்லவி.

கொந்தளிக்கும் அவள் பேச்சிலிருந்தே, பல்லவியிடம் குணா எதுவும் சொல்லவில்லை என்று புரிந்துகொண்டாள் யமுனா.

“வாசலுலேயே நின்னுகிட்டு பேசினா, ரெண்டு பேருக்கும் கால்தான் வலிக்கும். உள்ள வாங்க!” வலுக்கட்டாயமாக பல்லவியை உள்ளே இழுத்தாள் யமுனா.

வீட்டிற்குள் நுழைந்தவளின் கண்கள் தடயங்களைத் தேடி ஓடியது. அடிப்படை வீட்டு சாதனங்களைத் தாண்டி அந்த வரவேற்பறையில் ஒன்றுமில்லை. நிசப்தமாக இருந்த அவ்வீட்டில் வேறொருவரும் இருப்பதாகவும் தெரியவில்லை.

“பழச்சாறு குடிங்க பல்லவி!” மென்சிரிப்புடன் யமுனா உபசரிக்க,

“பழி பாவம் செய்தவங்க கையால பழச்சாறு வாங்கி குடிக்கறது தான் ஒரு கேடு!” சிடுசிடுத்தவள், “என் கேள்விக்கு பதில் சொல்லுங்க யமுனா!” நினைவூட்டினாள்.

“இங்க யாரும் யாரையும் விட்டு வரல்ல; யாரையும் விரட்டிவிடவும் இல்ல! போதுமா!” புதிர் போட்டவள்,

“அது சரி! நீங்களும் மாமாவும் நல்ல சிநேகிதமா தானே இருந்தீங்க! திடீர்னு என்னாச்சு; மாமா மேல உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்!” ஏதோ பல நாள் பழக்கம்போல விசாரித்தாள்.

அவனுக்குத் தெரியாமல் தந்தைவழி பரிசோதனை செய்தது, ஆவணக்களை சேகரித்தது என மறைமுகமாக செய்த எதையவாது கண்டுபிடித்துவிட்டானா என்று சந்தேகம் கொண்டாள் பல்லவி.

“நான் உங்களைச் சந்திக்க வரும் திட்டம் தெரிஞ்சுகிட்டு, அந்தக் கயவன் உங்களை ஏதாவது மிரட்டி வெச்சிருக்கானா?” வினவியவளின் விழிகள் மீண்டும் சுற்றிமுற்றி பார்த்தது.

“குணா மாமா கயவனா!” எனப் பெருங்குரலில் சிரித்தாள் யமுனா.

“நீங்க ஃபேஸ்புக்ல போட்ட புகைப்படங்கள் பார்த்தேன் பல்லவி. சும்மா சொல்லக்கூடாது…மாமாவை நல்லா வளச்சு வளச்சு போட்டோ எடுத்திருக்கீங்க!” கேலி செய்தவள் கலகலவென்று சிரிக்க,

‘இவளுக்கு என்ன பைத்தியமா!’ மனதில் சிந்தித்தவள்,

“உண்மையை சொல்லு யமுனா! என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு அவன் உன்னை மிரட்டி வெச்சிருக்கான் தானே!” பொறுமையிழந்து உறுமினாள்.

“அட என்ன பல்லவி! பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டதென்று நினைக்குமாம்! “அந்தமாதிரி இருக்கு நீங்க ரெண்டு பேரும் செய்யறது” ஏளனமாக சொன்னவள்,

“போன் நம்பர் மாத்திட்டா, எனக்கு அவரோட பேச வேற வழியே இருக்காதுன்னு மாமா தான் கிறுக்குத்தனமா திட்டம் போட்டாருனா, நீங்களும் அவர மாதிரியே யோசிக்கறீங்களே!” மேலும் சிரித்தாள்.

“மதுமிதாவை உன்கிட்டேந்து பிரிச்சு வெச்சுகிட்டு அவன் அங்க நீ இறந்து போயிட்டன்னு ஊரு முழுக்க தம்பட்டம் அடிச்சிட்டு இருக்கான். நீ எந்தக் கவலையும் இல்லாமல் அவன் யார்கூட பழகுறான்னு உளவு பார்த்துகிட்டு, அதைவேற பெருமையா விமர்சனம் செஞ்சிட்டு இருக்குற!” எரிச்சல் கொண்டாள் பல்லவி.

“எங்க வீட்டு பிரச்சனையில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை பல்லவி?” திடமாகக் கேட்டு முறைத்தாள் யமுனா.

“அது…அது…” பல்லவி எதை முதலில் சொல்லலாம் எனச் சிந்திக்க,

“குணா மாமாவ விரும்புறீங்களா! நான் உயிரோட இருக்கேன்னு தெரிஞ்சதும் அவர உங்களுக்குப் பிடிக்காம போயிடுத்தா!” கேள்விகளை அடுக்கினாள் யமுனா.

குழந்தையைப் பற்றி விசாரிக்காமல் அவனைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் இவள் சுயநினைவோடு தான் பேசிகிறாளா என்று அலுத்துப்போனவள்,

“மதுமிதா உனக்கும் குணாவுக்கும் பிறந்த குழந்தையே இல்ல. உண்மையை சொல்லு! மதுமிதாவோட அப்பா யாரு?” என்று மிரட்டினாள்.

அத்தனை நேரம் எதார்த்தமாகப் பழகியவளின் முகம் இறுகியது. குணா நிச்சயமாக அவளிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கமாட்டான் என்று உறுதியாக நம்பினாள் யமுனா.

“அது…அது…உங்களுக்கு எப்படித் தெரியும்!” கேட்டவளின் குரல் வலுவிழந்தது.

“இப்போ எங்க போச்சு உன் சிரிப்பு கேலி பேச்சு எல்லாம்!” இடித்துக்காட்டினாள் பல்லவி.

பதில் சொல்லமுடியாமல் யமுனா தலைகுனிந்து நிற்க, பல்லவியின் மனம் இளகியது. ஆயிரம்தான் தவறு செய்திருந்தாலும் குத்திக்காட்டி பேச, இது நேரமில்லை என்று பக்குவமாகச் சிந்தித்தவள்,

யமுனாவின் தோளினை மென்மையாக வருடி, “உன் கணவருக்கும் குழந்தைக்கும் தந்தைவழி பரிசோதனை செய்தோம். அதுல தான் தெரியவந்துது. யாருக்கும் பயப்படாம உண்மையை சொல்லுமா;” நம்பிக்கையூட்டினாள் பல்லவி.

குணா இதற்கு ஒருபோதும் சம்மதித்திருக்க மாட்டான் என்று தெளிந்த யமுனா, பல்லவிதான் ஏதோ சூழ்ச்சி செய்கிறாள் என்று புரிந்துகொண்டாள்.

பல்லவியிடமிருந்து விலகி நின்றவள் தலை நிமிர்ந்து அவளை நோக்கினாள்.

“என் மாமா ஒருபோதும் பரிசோதனைக்குச் சம்மதிச்சிருக்கவே மாட்டாரு! என் மாமாவோட நல்லுறவாடினது எல்லாம் இதுக்குத்தானா? நீங்க உண்மையை சொல்லுங்க! யாரு சொல்லி எங்கள உளவு பார்க்க கிளம்பிட்டீங்க?” கர்ஜித்தாள் யமுனா.

“மாமா! மாமா! மாமா!” தலையை அழுந்தபிடித்து இரைந்தவள்,

“உன் குழந்தையைப் பற்றி உனக்கு கவலையே இல்லையா. குழந்தையை வளர்க்க வசதி இல்லன்னு பொய் சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கொடுத்திட்டு, இங்க சொகுசா வாழுறன்னு உன் மேல வழக்கு தொடரத்தான் இங்க வந்தேன் போதுமா!” ஆவேசமாகவும் கத்தினாள்.

அச்சமயம் அழைப்புமணி ஒலிக்க, யமுனா வாசலை நோக்கி நடந்தாள்.

வயதில் முதிர்ந்த தம்பதியர் உள்ளே நுழைந்தனர்.

“அத்தை! இவங்க பல்லவி! ஆடைகள் ஏற்றுமதி விஷயமா பேச வந்திருக்காங்க! நீங்க வீட்டுக்கு வந்ததும் அலுவலகத்துக்குப் போகலாம்னு இருந்தேன்!” மென்சிரிப்புடன் விளக்கினாள் யமுனா.

அவர்களும் சிரித்த முகத்துடன் தலையசைத்தனர்.

‘கட்டுக்கதை சொல்வதில் மாமனையே தோற்கடிப்பாள் இவள்’ என்று மனதில் நினைத்தபடி அவர்களைப் பார்த்து இளநகையுடன் தலையசைத்தாள் பல்லவி.

“வாங்க பல்லவி! நம்ம கிளம்பலாம்!” நாசுக்காக அவள் தோளினை சுற்றி வளைத்து வெளியே அழைத்துச் சென்றாள் யமுனா.

மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவது இதற்குத் தீர்வு இல்லை என்று உணர்ந்தாள் பல்லவி.

கார் கதவை திறந்துவிட்ட யமுனாவின் கரங்களைப் பிடித்து,

“இங்க பாரு யமுனா! குணாவின் வளர்ப்பில் மதுமிதாவுக்குப் பாதுகாப்பு இல்லன்னு உன் தங்கை சந்தேகப்படுறா; அவர் மேல வழக்கு போடவும் துடிக்கறா; அது சம்பந்தமான புலனாய்வுல தான் இதெல்லாம் தெரியவந்துது.” பொறுமையாக விளக்கினாள் பல்லவி.

“அப்போ நீங்க சந்தேகப்படல! அப்படித்தானே!” யமுனா மடக்க, அதற்கு பல்லவியிடம் பதிலேதும் இல்லை.

“சரி! அந்த சுதாகிட்ட போய் சொல்லுங்க! மதுமிதா பாதுகாப்பான இடத்துல தான் இருக்குறான்னு!” மறுபடியும் குணாவை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

“என் மனசுக்கும் அப்படித்தான் தோணுது; ஆனால் புத்தி கண்முன் இருக்கும் சாட்சிகளைப் பார்த்து குழம்புதே! எனக்கே தெரியல யமுனா! ஏன் குணா விஷயத்துல இப்படி மனசு ஊசலாடுதுன்னு!” மனம்நொந்து பேசியவளின் கண்களும் கலங்கியது.

அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்திய யமுனா, “அதுதான் என் மாமவோட மேஜிக்” அழுத்தமாகச் சொல்லி கண்சிமிட்டியவள்,

“என்னோட வாங்க! ஊசலாடும் உங்க மனச ஒரு இடத்துல கட்டிப்போடுறேன்!” என்று புதிரும் போட்டாள்.

சாலை நெரிசலில் வண்டியை மெதுவாக முன்னோக்கி செலுத்தியவளின் சிந்தனை மட்டும் மதுசூதனின் நினைவில் பின்னோக்கி பயணித்தது.

காதல் திருமணத்திற்குச் செவிசாய்க்காத தன் பெற்றோரின் மனநிலை அறிந்தவள், குணாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.

எந்தவொரு சூழ்நிலையிலும் குடும்பத்தினரை அசால்ட்டாக சமாளிக்கும் ஆற்றல் தன் மாமன் குணா ஒருவனுக்கு மட்டும்தான் உண்டு என்று அவன் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்தாள்.

ஊருக்கு வந்தவனிடம் தன் காதல் விவகாரங்களைப் பகிர்ந்து, அதற்கு அவன் தீர்கமாக மறுப்பு தெரிவித்து, அஷ்வின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதுவரை சொன்னவள், மாமனின் சில்மிஷத்தை ஒரு கணம் எண்ணி சிரித்தாள்.

அஷ்வின் வீட்டில் அவளுக்காகக் காத்திருந்தது, உயிரினும் மேலாக நேசித்த தன் காதலன் மதுசூதனன்! மாமன் தன்னை வேண்டுமென்றே அழ வைத்து சீண்டியதைப் புரிந்துகொண்டு கண்ணீரும் புன்னகையுமாக அவனிடம் செல்லச் சண்டையிட்டாள்.

“என்ன மன்னிச்சிரு மது! யமுனா ரொம்ப தெளிவா இருக்குறா; இதுக்கு மேல அவள் அழ வெச்சு பார்க்க என்னால முடியாது! அவ சொன்னா மாதிரியே உடனே கல்யாணம் செய்துக்கோங்க!” என மாமன் மகளை இறுக அணைத்தான் குணா.

மாமன் வளைவிலிருந்து விலகாதவள், “நான் அவ்வளவு சொல்லியும் உனக்கு என் பிரச்சனை புரியல இல்ல மது!” காதலனை கண்கள் உருட்டி மிரட்டினாள்.

மதுசூதனன், யமுனாவை உண்மையாக நேசித்த போதிலும், அவளை உடனே மணமுடிக்க இயலாத நெருக்கடியில் இருந்தான். இருவீட்டினரிடமும் தங்கள் காதல் விவகாரத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவள் கைப்பிடிக்க விரும்பினான்.

ஆனால், ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய திட்டமிட்டிருந்தவன், இரண்டு வாரத்தில் காஷ்மீர் செல்ல வேண்டியதாக இருந்தது. அதனால், பணி முடிந்து திரும்பி வந்ததும், பெற்றவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறினான்.

வேறொருவருக்கு நிச்சயம் செய்திருந்த நிலையில், தன்னால் அத்தனை நாட்கள் காத்திருக்க இயலாது என்று யமுனா அவனிடம் பிடிவாதம் பிடித்தாள்.

தன்னவளை சமாதானம் செய்ய முடியாமல் தோற்றுப்போனவனுக்கு, குணாவின் நினைவு வந்தது. காரணம், காதலித்தப் பெரும்பாலான நேரங்கள் அவள் மாமன் புகழாரம் மட்டுமே பாடியிருந்தாள்.

ஊருக்கு வந்த குணாவை, விமான நிலையத்திலேயே வழிமறித்து தங்கள் காதல் விவகாரத்தைச் சொல்லி, யமுனாவிற்கு வீட்டில் நிச்சயம் செய்த திருமணத்தை நிறுத்தும்படி கெஞ்சினான்.

யமுனாவிற்குப் பார்த்திருந்த மணமகனைப் பற்றி, மாணிக்கத்திடம் எதிர்மறையாகப் பேச்சுக்கொடுத்தான் குணா.

ஆனால் அவரோ, அந்தத் திருமணம் நிகழ்ந்தே ஆக வேண்டும் என்று தர்க்கம் செய்தார்.

யமுனாவை சீண்டிப் பார்த்ததில் அவள் தன் காதல் மேல் வைத்த உறுதியை காட்டிலும், தன் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பதை உணர்ந்தான்.

அதனால் நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தான் குணா.

“என்ன குணா! நீங்களாவது அவளுக்கு என் நிலைமையை புரிய வைப்பீங்கன்னு பார்த்தா, இப்படி அவளோட சேர்ந்து அடம்பிடிக்கறீங்க!” புலம்பினான் மதுசூதனன்.

“என் மாமா எப்பவுமே எனக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்ணுவார்!” அழுத்திச் சொல்லி, மாமன் தோள் சாய்ந்து செல்லம் கொஞ்சினாள் யமுனா.

“அவ என்கிட்ட சண்டை போட்டிருந்தாலோ இல்லை எதிர்த்துப் பேசியிருந்தாலோ கூட சமாளிச்சிருப்பேன் மது; விசும்பி விசும்பி அழுதா; பார்க்கவே ரொம்ப வேதனையா இருந்துது!” அவள் அன்பில் விழுந்துவிட்டதாக விளக்கினான் குணா.

“எனக்கு மட்டும் உன்ன அழ விடணும்னு ஆசையா டி! நாளைக்கே உன் கழுத்துல தாலி கட்டிடுவேன்; ஆனா நான் ஊருக்குப் போனதுக்கு அப்புறம் உன் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு யமுனா!

இது என்னோட முதல் பணி நியமனம். இத முடிச்சிட்டு வந்தால்தான் என்னால எங்க வீட்டுலையும் சரி, உங்க வீட்டுலையும் சரி, நம்ம கல்யாணத்தைப் பற்றி தன்னம்பிக்கையோடு பேச முடியும்! ஒரே ஒரு வருஷம்தான் டி! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!” மனம்திறந்து கெஞ்சினான் மதுசூதனன்.

“வேற்று சாதியில் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னாலே எங்க அம்மா ஊர கூட்டுவாங்க; இதுல நீ ராணுவத்துல இருக்கேன்னு துப்பாக்கியும் கையுமா வந்து நின்னா அவங்க ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க டா!” குடும்ப சூழ்நிலையை எடுத்துச்சொல்லி பெருமூச்சுவிட்டவள்,

“நம்ம பதிவு திருமணம் செஞ்சுக்குறோம்; மாமா சாட்சி கையெழுத்து போடுவாரு; நீ வர வரைக்கும் நான் வீடு ஒண்ணு வாடகைக்கு எடுத்துட்டு தனியா இருப்பேன். அவ்வளவுதான்!” கடைமுடிவாக சொன்னாள்.

“யமுனா….!” மதுசூதனன் கெஞ்ச,

“அம்மு! நீ உன் காதல்ல உறுதியா இருக்கறத நெனச்சா எனக்குப் பெருமையா இருக்கு. ஆனா ஒரு விஷயம் தெளிவுபடுத்து!” வினவினான் குணா.

“சொல்லுங்க மா…மா…மாமா!” குழைந்தாள் அவள்.

“விளையாடாதே டி!” கண்டித்தவன்,

“காதலிச்சா மட்டும் போதாது; காதலிக்கறவங்களோட உணர்வுகளை மதித்து விட்டுக்கொடுத்து வாழவும் தயாரா இருக்கணும்; அதுலையும் மதுசூதனன் ஒரு ராணுவ வீரன். அவன் கடமைகள் அதிகம்; காதல், குடும்பம்னு வரும்போது, நீ ஒரு சராசரி பொண்ணு மாதிரி அவன்கிட்ட அன்பும் கரிசனமும் எதிர்பார்த்து தொல்லை செய்யக்கூடாது. தள்ளி இருந்தாலும் அன்பு குறையாதுன்னு பக்குவமா நடந்துக்கணும் சரியா!” உறுதிப்படுத்தச் சொன்னான்.

கணித பேராசிரியர் கண்டிப்புடன் நடத்திய வாழ்க்கைப் பாடம், அனைதிற்கும் சலிக்காமல் தலையசைத்து வைத்தாள். காதல் மயக்கத்தில் மிதந்தவளின் புத்திக்கு எதுவும் எட்டவில்லை என்று அவனுக்கும் புரியாமல் இல்லை.

மதுசூதனன் பக்கம் திரும்பியவன், “மது! உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, நீங்க வரவரைக்கும் அம்மு என்னோட அமெரிக்காவுல இருக்கட்டும்; அதுக்கு வேண்டிய வேலைகளை எல்லாம் நான் பார்த்துக்கறேன்!” குணா சொன்னது தான் தாமதம்,

“இதுல்ல நான் மறுப்பு சொல்ல என்ன இருக்கு குணா! எனக்கு அவ பாதுகாப்பான ஒரு இடத்துல இருக்கணும்; அவ்வளவுதான்!” சொன்னவனின் பார்வை காதலியை கண்டிக்க, அதற்கும் அலட்சியமாகக் கழுத்தை நொடித்தாள் யமுனா.

வண்டியைச் செலுத்திக்கொண்டே, பசுமையான நினைவுகளில் கலந்திருந்தவளின்  சிந்தனையை கலைத்தது பல்லவியின் கேள்வி.

“அப்போ மதுசூதனன் தான் மதுமிதாவோட அப்பாவா?

“ஆம்” என்று மென்மையாகத் தலையசைத்தாள் யமுனா.

“அப்போ உனக்கும் குணாவுக்கும் கல்யாணமானதா ஏன் பொய் சொல்லி…” இழுத்தவள், “மதுசூதனனுக்கு போன இடத்துல ஏதாவது….” மேற்கொண்டு கேட்க தயங்கினாள் பல்லவி.

“அதெல்லாம் என் மதுக்கு ஒண்ணும் ஆகல…ஆகவும் ஆகாது!” பதறிய பதிவிரதையின் கை டச்வுட் என்று உச்சுக்கொட்டி மரத்தாலான பொம்மை ஒன்றை தொட்டது.

“மன்னிச்சிரு யமுனா!” வருந்தினாள் பல்லவி.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், சாலையில் கவனம் செலுத்தியபடி, மீதியை விவரித்தாள்.

பதிவு திருமணம் நல்லபடியாக முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் குணாவிற்கு இனம்புரியா பயமொன்று மனதை உறுத்தியது. அத்தை மாமனின் மனநிலை அறிந்தவன், பதிவு திருமணத்தை ரத்து செய்து மகளுக்கு அந்தக் கிழவனோடு திருமணம் செய்துவைத்தாலும் ஆச்சரியமில்லை என்று யூகித்தான்.

அதுவும் மதுசூதனன் சில நாட்களில் ஊருக்குப் போகும் பட்சத்தில், யமுனாவை தன்னுடன் அமெரிக்கா அனுப்பாமல் அவளுக்கு நிச்சயம் செய்தவனோடு திருமணம் செய்யவும் துணிவார்கள் என்று நம்பினான்.

அதனால் தானே மாப்பிள்ளை வேடமேற்று அவர்கள் மனநிலையை அறிவதாகக் குணா கூற, அப்படியெல்லாம் நடக்காது என்று தர்க்கம் செய்தாள் யமுனா. தனக்கு இத்திட்டத்தில் துளியும் உடன்பாடில்லை என்று சொல்லியும், அவளை வலிய சம்மதிக்க வைத்தனர் குணாவும் மதுசூதனனும்.

மகள் கழுத்தில் தாலி கண்ட மீனாட்சி எரிமலையாய் வெடித்தாள். மற்றவர்கள் ஓரளவிற்குச் சமாதானமானாலும், மீனாட்சியின் மனம் மட்டும் கல்லாக இருந்தது. தாங்கள் பார்த்துவைத்த மாப்பிள்ளையோடு பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென்றும் அடம்பிடித்தாள்.

குணாவின் யூகம் எவ்வளவு சரி என்று மலைத்துப்போனாள் யமுனா.மாமனின் நிழல் தவிர தனக்கு வேறெந்த இடத்திலும் பாதுகாப்பில்லை என்று உறுதியாக நம்பியவள், அவனை பின்தொடர்ந்தாள்.

அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தை சொல்லிமுடித்தவள் இதழோரம் ஒரு மெல்லிய சிரிப்பு.

“என்ன ஆச்சு யமுனா!” பல்லவி புரியாமல் தவிக்க,

“ம்ஹூம்!” இடவலமாக தலையசைத்தவள், “என் அம்மாவுக்குப் பயந்து மாமா பின்னாடி போனேன். அவர் செஞ்ச விஷயம் பிடிக்காமல் நான் வருத்தபடுறேன்னு அவர் தப்பா புரிஞ்சுகிட்டாரு.

என்மேல பரிதாபப்பட்டு ஊருக்குக் கிளம்புற வரைக்கும் என்னையும் மதுவையும் அஷ்வின் அண்ணா வீட்டுல தங்க சொன்னாரு.” என்று இடைநிறுத்தியவளின் கன்னம் நாணத்தில் சிவந்தது.

புரிந்தும் புரியாதவளாய், “ம்ம்…அப்புறம்!” வம்பிழுத்தாள் பல்லவி.

அவள் கேலிசெய்வதை உணர்ந்தவள், “அப்புறம் என்ன… நான் காஷ்மீர் போகுற மது மேல பரிதாபப்பட, மது அமெரிக்கா போகுற என் மேல பரிதாபப்பட, மினி மது வந்தது தான் பாக்கி!” குறும்பாகப் பதிலளித்தாள் யமுனா.

“மினி மது இல்ல! மதுன்ற பேருல மினி யமுனா!” திருத்திச் சொல்லி கண்சிமிட்டினாள் பல்லவி.

தொடர்ந்து படிக்க Click Here.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 16.2