பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 15

நள்ளிரவு பல்லவியிடம் பேசியதிலிருந்தே சரண் ஏதோ ஒரு சிந்தனையில் கலந்தவனாகவே இருந்தான். குணாவின் சம்மதம் இல்லாமல் பரிசோதிக்க முடியாது என்று தீர்கமாக மறுத்திருந்தான் அவன்.

இதுவரை தங்கை பேச்சுக்கு மறுப்பே சொன்னதில்லை என்று அவன் வருந்த,

“அவ கேக்குறது எல்லாம் சாத்தியமே இல்ல சரண்! நீங்க சொன்னதுதான் சரி!” ஆறுதலாகப் பேசினாள் மஞ்சரி.

“இருந்தாலும் நான் அவகிட்ட கொஞ்சம் கடுமையா பேசிட்டேன் மா!” வருந்தினான் அவன்.

பல்லவி அண்ணனிடம் செல்லம் கொஞ்சும் அளவிற்குப் பிடிவாதமும் பிடிப்பாள் என்று மஞ்சரி நன்றாகவே அறிந்திருந்தாள். ஆனால் ஒருபோதும் தவறான பாதையில் செல்ல விரும்பாதவள், இன்று குணாவிற்காக ஏன் இவ்வளவு தூரம் இறங்கவேண்டும் என்பது மட்டுமே அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

“பல்லவிக்கு குணா மேல காதல் இல்லன்னு நீங்க நம்புறீங்களா சரண்?”

நேற்றே அதைப்பற்றியும் பல்லவியிடம் நேரடியாகவே கேட்டிருந்தான்.

குணா தனக்கு நல்ல நண்பன் மட்டுமே என்று அழுத்தமாகச் சொன்னவளின் குரலில் தடுமாற்றம் இல்லை. வலிய வந்து உதவ அவள் சொன்ன காரணத்திலும் பொய்யில்லை என்று உறுதியாக நம்பினான்.

“உனக்கே தெரியாதா மஞ்சரி! அவளுக்கு அப்பான்னா எவ்வளவு பிடிக்கும்னு?” கேள்வியைத் திருப்ப, அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.

பெற்றவளிடம் கிடைக்காத அன்பை, தந்தையிடம் எதிர்பார்த்து, பல்லவி ஏங்கி ஏமாற்றம் அடைந்த நாட்கள் ஏராளம்.

வாழ்க்கைத்துணையை பிரசவத்தில் பறிகொடுத்ததில் மனவுளைச்சலுக்கு ஆளானவர் மனைவியின் சாயலை மகளின் முகத்தில் காண மறந்துவிட்டார். பாசத்திற்காக அருகில் வந்த குழந்தையை அலட்சியம் செய்த நாட்கள் தான் அதிகம்.

மனம் தேடிய மகிழ்ச்சியை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு வாழ்க்கையே வெறுமையாகிவிட்டது என்று தனிமையை நாடினார். மனைவியின் அன்பிற்கு ஈடிணையில்லை என்ற எண்ணம் மனதில் அழுந்தப் பதிய, அவளோடு சொர்கத்தில் வாழ கிளம்பிவிட்டார் பல்லவியின் தந்தை.

அண்ணன், பாட்டியின் அரவணைப்பில் ஆனந்தமாக வாழ்ந்தாள் எனினும், தந்தையின் முகத்தை மட்டும் பல்லவியால் மறக்கவே முடியவில்லை. தான் பெறாத அந்த தந்தையின் பாசத்தை குணாவிடம் கண்டவள், அவனைக் கண்மூடித்தனமாக நேசித்தாள்.

“அதையே நெனச்சு நீங்க மனச போட்டு அலட்டிக்காதீங்க சரண்! வேறவழியலையும் குணாவுக்கு உதவி செஞ்சு மதுமிதா அவரோட இருக்குறா மாதிரி செய்யலாம்னு நம்பிக்கை கொடுத்தா பல்லவி புரிஞ்சுப்பா!” மஞ்சரி யோசனை சொல்ல, அவனுக்கும் அது சரி என்றுபட்டது.

தாரம் தந்த தார்மீக ஆதரவில் தங்கையின் நினைவில் தத்தளித்தவனின் மனமும் லேசானது. நன்றிகளை நெற்றி முத்தங்களால் தெரிவித்து மருத்துவமனைக்கு புறப்பட்டான்.

மதியம் வரை நோயாளிகளைப் பார்த்துவிட்டு களைப்பாக அறைக்குத் திரும்பியவன், முகக் கவசத்தை அகற்றி ஆழ்ந்து சுவாசித்தான். அறிக்கைகள், நோயாளிகளின் மருந்துச்சீட்டு முதலியவற்றைக் கவனிக்கவும், அன்றைக்கு வந்திருந்த மின்னஞ்சல்களைப் படிக்கவும் மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.

மின்னஞ்சல்கள் ஒவ்வொன்றாய் படித்து, அவற்றுக்குப் பதில் எழுதியும், கூடுதல் தகவல் தேவைப்படும் பட்சத்தில், அதை உரிய ஊழியர்களிடம் கேட்டும் பணியாற்றிக் கொண்டிருந்தான் சரண்.

குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள்(Child Protection Services) அனுப்பியிருந்த அறிக்கையும் அன்று வந்த மின்னஜல்களில் ஒன்று.

தீக்காயம்பட்ட குழந்தை மதுமிதாவின் வீட்டில், சந்தேகம் வருமாறு அபாயமான சூழலோ, அலட்சியமான உறவுகளோ இல்லை என்று குறிப்பிட்டிருந்த அறிக்கை அது. மேலும் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விசாரனை சார்ந்த அனைத்து ஆவணங்களையும் தரவுத்தளத்தில் இருந்து நீக்கிவிடப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

நடந்தது எல்லாம் ஏற்கனவே பல்லவி மூலம் அறிந்திருந்தவன், அந்த மின்னஞ்சலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  ஆவணங்கள் நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த காரணத்தால், அவற்றின் பிரதி ஒன்று கைவசம் இருக்கட்டும் என்று நினைத்து அச்சிட்டான். அவற்றைக் கோப்புக்குள் இணைத்துப் பத்திரப்படுத்த,அப்போது தென்பட்டது அந்தக் கையொப்பம்;

குணாவின் கையொப்பம்;

“பாதுகாவலர்” என்று குறிப்பிட்ட இடத்தில் கண்டான். குணா தவறுதலாக கையொப்பம் இட்டிருப்பான் என்று நினைத்து, குணாவை அழைக்க யோசித்தான்.

திடீரென்று பல்லவி சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வர, ஏதோ ஒன்று சரியில்லை என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. சிறிதும் யோசிக்காமல், அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்த அதிகாரியின் தொலைப்பேசியை அழைத்தான்.

இயல்பான முறையில் அவரிடம் பேச்சுக்கொடுத்து அறிக்கை அனுப்பியதற்கு நன்றி கூறியவன், குணாவை பற்றி வினவினான்.

குணா, மதுமிதாவின் பாதுகாவலர் தான் என்று அதிகாரி குறிப்பிட, அதைக்கேட்ட சரணுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

முழுவிவரமும் தெரியாமல், குணா மீது குற்றம் சுமத்தக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், மருத்துவ பதிவுகளுக்காகக் குழந்தையின் பெற்றோர் விவரங்கள் கிடைக்குமா என்று மறைமுகமாகக் கேட்டுப்பார்த்தான்.

குழந்தை மேல் இனி தனக்கு எந்த உரிமையும் இல்லையென்று, குழந்தையின் தாய் மனப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதாக குணசேகரன் குறிப்பிட்டதை விளக்கினார்.

‘பெற்ற பிள்ளைக்குப் பாதுகாவலராக இருக்க வேண்டிய அவசியம் என்ன?’ மனதில் நினைத்தவன், குழந்தையின் தந்தை பற்றிய விவரங்களைக் கேட்டான்.

தேவைக்கு மீறிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்,

“குழந்தையின் சிகிச்சையை முன்னிட்டு, அம்மாவை தொடர்புகொள்வது அவசியமா?” கேள்வியைத் திருப்ப,

‘அவள்தான் இறந்துவிட்டாளே!’ குழம்பியவன்,

“அது…அது…ஆம்!” மென்றுவிழுங்கி, “HIPAA விதிமுறைகள் படி சிகிக்சை விவரங்களைச் சம்பந்தபட்டவர்களைத் தவிர வேறெவருக்கும் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. அதனாலதான் கேக்குறேன்!” பதிலுக்கு விதிகளைத் துணைக்கு அழைத்துப் பேசினான்.

அவரும் அவ்விதிமுறைகளை அறிந்திருந்ததனால், சரண் சொன்ன காரணத்தை ஏற்றார்.

நிதி நிலைமை சாதகமாக இல்லாததனால், குழந்தையை வளர்க்க தன்னால் இயலவில்லை என்று அந்தப்பெண் இவர் பொறுப்பில் விட்டுவிட்டு இந்தியா சென்றதாக விளக்கியவர்,

“உங்களுக்குத் தேவையான தகவல்கள் கொடுக்கச் சொல்லி, மிஸ்டர்.குணசேகரன் கிட்ட பரிந்துரை செய்யட்டுமா?” என்றார்.

“அதெல்லாம் வேண்டாம்!” திடுக்கிட்டான் சரண்.

இந்த உண்மைகளை அறிந்துக்கொண்டது ஒருபோதும் குணாவின் காதுகளுக்கு எட்டவே கூடாது என்று நினைத்தான்.

“தேவைப்படும் போது நானே உங்களை அழைக்கறேன்!” அதிகாரிக்குச் சந்தேகம் வராதபடி பணிவாகப் பேசி, நன்றிகளை தெரிவித்தான்.

புற்றிலிருந்து வெளியேறும் ஈசல்களைப் போல, ஒன்றன் பின் ஒன்றாக குணாவின் சூழ்ச்சிகளை அறிந்தவனின் கண்முன் தோன்றியது இருவர் மட்டுமே.

பாசமென்னும் போர்வையில் ஒளிந்திருக்கும் அந்த வஞ்சகனின் நிழலில் வளரும் மதுமிதாவும், பாதகனின் வசியப் பேச்சிலும், நடையிலும் சரிந்துப் பள்ளத்தாக்கில் விழுந்த தன் பாசமலர் தங்கை பல்லவியும்.

புலித்தோல் போர்த்திய பசுவின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற நினைத்தவனுக்கு, தங்கை கேட்டிருந்த தந்தைவழி சோதனை மிக அவசியம் என்று புரிந்தது.

பெற்ற குழந்தையை சட்டரீதியாக ஏற்காமல், சமூகத்தில் அப்பா என்று வெளிவேஷம் போட்டு பாசம் காட்டுவது ஏன்?

மணந்தவள் உயிரோடு இருக்க, அவளிடமிருந்து குழந்தையை கைப்பற்றி, நிர்க்கதியாக விட்டதோடு இல்லாமல், இறந்துவிட்டாள் என்று உறவுகளிடம் பொய் சொன்னது ஏன்?

தீர்வு காண விழைந்தவன், மதுமிதாவிற்குச் சிகிச்சை அளித்தபோது நிரப்பிய படிவங்களை அலசினான்.

 “தன்னார்வ இரத்த தானம் செய்பவர்!” குணாவை பற்றிய அந்தத் தகவல் கண்டவனுக்கு, வஞ்சகனை வலையில் சிக்கவைக்க வழி பிறந்தது.

இன்பத்திலும் துன்பத்திலும் சரிநுட்பமான ஆலோசனைகள் கொடுக்கும் தன் சரிபாதியை நேரில் வரும்படி உடனே அழைத்தான். குணாவின் மர்மங்களை விளக்கி, தன் திட்டத்தையும் சொல்லி, மஞ்சரி பதிலுக்காகக் காத்திருந்தான்.

“இப்படியும் ஒருத்தானா!” எதையும் ஜீரணிக்க முடியவில்லை அவளால்.

“நீங்க நல்லெண்ணத்துல தான் செய்யறங்க சரண்; ஆனால் உங்க மருத்துவர் உரிமம், பல்லவியோட வேலை…” பின்விளைவுகளை அடுக்கினாள்.

அவள் கரங்களை ஆறுதலாக வருடியவன்,

“இது குறுக்குவழி தான்மா! ஆனால் குழந்தையின் நலன் கருதிதான் இதெல்லாம் செஞ்சேன்னு சொன்னா, கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. அந்தப் பித்தலாட்டக்காரனை கையும் களவுமா பிடிக்கணும்…மதுமிதாவின் பாதுகாப்புக்காக…” தயங்கியவன், “என் தங்கைக்கும்!” கசந்த குரலில் கூற,

கணவனின் பயத்தைப் புரிந்துகொண்டாள் மஞ்சரி.

“சரி சரண்! துணிஞ்சு இறங்குங்க.” அவன் கரங்களைத் தட்டிக்கொடுத்து, “பல்லவிகிட்ட பார்த்துப் பேசுங்க!” என்றாள்.

 மென்மையாகச் சிரித்துத் தலையசைத்தவன், பல்லவியை அழைத்தான்.

“சொல்லுங்க அண்ணா!” அவள் குரலில் சுரத்தே இல்லை.

“பவி மா! நீ கேட்டா மாதிரியே குணாவிற்கு தந்தைவழி பரிசோதனை செய்யறேன்!”

“நான் கேட்ட எதையுமே நீ மறுக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும் அண்ணா!” பூரிப்பில் மிதந்தாள் பல்லவி.

அவள் வெள்ளந்தி மனதை எண்ணி, கணவன் மனைவி இருவரும் கண்ஜாடையில் மொழிந்தனர்.

தொண்டையைச் செருமிக்கொண்ட சரண், “ஒரு முக்கியமான விஷயம் பவி! குணாவிற்கு நம்ம மேல சந்தேகம் வராம இருக்கணும்னா, இதைச் செயல்படுத்தி முடிக்கும் வரை, நீ எந்தக் காரணத்துக்கும் அவர்கிட்ட பேசவே கூடாது. உனக்காகத்தான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கறேன்! ” தீர்கமாகச் சொல்ல,

“கண்டிப்பா! கண்டிப்பா அண்ணா!” குணாவுக்காக மலை உச்சியிலிருந்து கூடக் குதிக்கத் தயாராக இருந்தவள், உற்சாகமாகச் சம்மதித்தாள்.

தங்கையை ஒருவழியாக ஆட்டத்திலிருந்து விலக்கியவன், பரிசோதனை செய்வதற்குத் தேவையான அனைத்தையும் நேரடியாகக் கவனித்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அஷ்வினை அழைத்து மருத்துவரீதியாக தனக்கு உதவி வேண்டுமென்று பேச்சைத் துவங்கினான் சரண். அஷ்வினும் ஆர்வம் காட்ட, கற்பனை கதை ஒன்றை மொழிந்தான்.

தன் மருத்துவமனையில் வாரயிறுதியில் நடக்கவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு AB-ve வகை இரத்தம் தேவைப்படுகிறது என்று கூறியவன், அது அரிய வகை என்பதால், தெரிந்தவர்கள் மூலம் முன்னெச்சரிக்கையாகச் சேகரிப்பதாகச் சொன்னான்.

“ஒண்ணும் பிரச்சனை இல்ல சரண்! குணாவுக்கு அந்த ப்ளட் குரூப் தான். உங்ககிட்ட அவனைப் பேச சொல்றேன்!” என்றான் அஷ்வின்.

மதுமிதாவின் படிவங்களில் அன்று குணாவின் குருதிப் பகுப்பினம் கண்டறிந்தவன், அவன் இரத்த தானமும் முன்வந்து செய்வான் என்று அறிந்தான். ஆனால் குணாவை நேரடியாகத் தொடர்புகொண்டால், அவனுக்குச் சந்தேகம் வந்துவிடுமென்று யூகித்து அஷ்வினிடம் பேசினான். அவன் எதிர்பார்த்த மாதிரியே, அஷ்வினும் குணாவின் பெயரை சிபாரிசு செய்ய, தன் திட்டத்தின் முதல் படியில் வெற்றிப் பெற்றதாக நெகிழ்ந்தான்.

குணாவே சரணை அழைத்து இரத்த தானம் செய்ய வேண்டிய நாள் இடமெல்லாம் விவரமாக கேட்டுக்கொண்டான். சரண் குறிப்பிட்ட தேதியை நாட்குறிப்பில் பார்த்தவன்,

“சரண்! அன்னைக்கு மதுமிதாவுக்கு டே கேர் கிடையாது. அஷ்வினும் வெளிய போகுறதா சொன்னான்….!” தயக்கத்துடன் மறுக்க,

“அவளையும் அழைச்சிட்டு வாங்க! விஷ்ணுவோட மருத்துவமனை டே கேர்ல விளையாடட்டும்.” அலட்டலே இல்லாமல் தீர்வு சொன்னான்.

குணா பேருவகையுடன் சம்மதம் தெரிவித்து நேரில் சந்திப்பதாகச் சொன்னான்.

குணாவை வரவழைக்க திட்டம் போட்டவனுக்கு, மதுமிதாவிற்கு எப்படி பரிசோதனை செய்வதென்று குழப்பமாகவே இருந்தது. குணா அவளையும் மருத்துவமனைக்கு அழைத்து வரும் பட்சத்தில் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று கணித்தான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுப் போல இருந்தது அவனுக்கு.

மதுமிதாவிற்கு செய்ய வேண்டியவற்றை, மஞ்சரியிடம் விளக்கமாகச் சொல்லி எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்தான்.

தானம் என்ற பெயரில் தன் தவத்தைச் சோதிக்க, விதி கெட்டிமேளம் கொட்டி வரவேற்கிறது என்று தெரியாமலேயே, பனிமழை பொழியும் அந்த நன்னாளில் குணா, சரண் மருத்துவமனைக்கு வந்தான்.

புன்முறுவலுடன் நலன்விசாரித்து வரவேற்றவன், குழந்தையை மஞ்சரியுடன் அனுப்பிவைத்து, குணாவை தன்னுடன் அழைத்துச் சென்றான்.

இரத்த தானம் சார்ந்த படிவங்கள் யாவும் மின்னணு வடிவத்தில் இருப்பதாகக் கணினியின் திரையில் காட்டியவன்,

“இதில் உங்களுடைய மின்னணு கையொப்பம் போடுங்க குணா!” எனச் செவ்வக வடிவத்தில் இருந்த கையளவு கருவி ஒன்றை நீட்டினான்.

“ம்ம்…சரி!” சிறிதும் தயங்காமல் கையொப்பமிட்டான் குணா.

விதியின் விளையாட்டில், அவன் படித்தப் படிவங்கள் வேறு; கையொப்பம் இட்ட படிவங்கள் வேறு;

நம்பிக்கைதுரோகத்தின் வலியை உணரும் நாளை நோக்கிப் பயணிப்பது தெரியாமலையே புண்ணியம் சேகரிப்பதாக நினைத்து, அந்த நெகிழிப் பையில் சொட்டு சொட்டாக இறங்கும் உதிரத்தைப் பார்த்த வண்ணம் படுத்திருந்தவனின் மனம், பல்லவியை நினைத்தது.

அவளின் அறிமுகத்தால் இப்படிப்பட்ட நல்லுறவுகள் கிடைத்ததை எண்ணி சிரித்தான்.

ஒரு மணி நேரத்தில் திட்டமிட்டபடி எல்லாம் செவ்வனே முடிந்தது.

காலம் தாழ்த்தாமல் சரண் தந்தைவழி பரிசோதனைகளை செய்தான்.

யமுனாவின் பெற்றோர் அறிக்கைகளை பல்லவி மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தாள். அவற்றை மதுமிதாவின் சோதனை மாதிரிகளுடன் ஒப்பிட, அவள் யமுனாவின் மகள்தான் என்று ஊர்ஜிதமானது.

‘தந்தை நான்’ என்று தம்பட்டம் அடித்தவன் மாதிரிகள், குழந்தையின் மாதிரிகளோடு ஒத்துப்போகவில்லை.

“அப்போ மதுமிதா அவன் குழந்தை இல்லன்னு அவனுக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கு! அதான் குழந்தையின் பாதுகாவலர்னு எல்லா இடத்துலையும் பதிவு செஞ்சிருக்கான்.” என்ற சரண்,

“ஆனால் தனக்குப் பிறக்காத குழந்தையை பாசமா வளர்க்கறதுல இவனுக்கு என்ன ஆதாயம்? அதான் புரியல மா!”

மஞ்சரிக்கு ஏதாவது புலப்படுகிறதா என்று வினவினான்.

“ஒரு மனைவியாக, யமுனா தனக்கு செய்த நம்பிக்கை துரோகத்துக்குக் குழந்தையையும் அம்மாவையும் பிரிச்சு வெச்சு பழிவாங்குறானா?” மஞ்சரி தன் புத்திக்கு எட்டியதை உரைத்தாள்.

“பழிவாங்குறவன் ஏன் குழந்தை மேல இவ்வளவு பிரியமா இருக்கணும்!” ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கிறது என்றான் சரண்.

அச்சமயம் இந்தியாவிலிருந்து பல்லவி காணொளியில் அழைத்தாள்.

அறிக்கைகளை அனுப்பி பத்து நாட்கள் மேலாகியும் அண்ணன் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்று இருப்புக்கொள்ளாமல் தவித்தவள், தானே அழைத்துவிட்டாள்.

“அண்ணா! ரிஸல்ட்ஸ் வந்துடுத்தா!” குணா-மதுமிதா அறிக்கைகள் எனக்கு அனுப்புங்க அண்ணா!” அலட்டலே இல்லாமல் கேட்டாள் பல்லவி.

“அது…பவி மா!” சரண் மென்றுவிழுங்க,

உண்மை என்றிருந்தாலும் தெரியத்தான் போகிறது என்று உணர்ந்த மஞ்சரி,

“பவி! மதுமிதா குணாவோட குழந்தை இல்ல; ஆனா யமுனா தான் அவளோட அம்மா!” பட்டென்று போட்டு உடைத்தாள்.

“கடவுளே! இது என்ன சோதனை!” பதறியவள்,

“அண்ணா! குணா பாவம். மனைவி தனக்கு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சிட்டான்னு தெரிஞ்சா அவர் துடிதுடிச்சு போயிடுவாரு; இதைப்பற்றி அவர்கிட்ட எதுவும் சொல்லவேண்டாம்!” உருகினாள் பேதை.

நட்பின் காரணமாக தங்கையிடம் குணா ஏதாவது கூடுதல் தகவல் பகிர்ந்து கொண்டிருப்பானோ என்று எதிர்பார்த்த சரண்,

“ஏன் மா சொல்லவேண்டாம்னு சொல்ற?” மென்மையாகக் கேட்டான்.

“அண்ணா! குணாவ நீங்க எல்லாரும் ஒரு பாசமான தந்தையா மட்டும்தான் பார்த்திருக்கீங்க! ஆனால் அவர் மறைந்த தன் மனைவியை இன்னும் எவ்வளவு ஆத்மார்த்தமா நேசிக்கறாருன்னு நான் கண்கூடா பார்த்திருக்கேன்!” என்றவள், தான் பார்த்துப் பிரமித்துப்போன விஷயங்களைக் கூற,

“போதும் நிறுத்து டி குணா புராணத்தை!” இரைந்தான் சரண்.

குரல்கூட உயர்த்திப் பேசாத அண்ணன் ஆத்திரம் கொண்டதும், அதிர்ந்து போனாள் பல்லவி.

இருவரின் மனநிலையை அறிந்த மஞ்சரி,

“அவகிட்ட விவரங்கள் முழுசா சொல்லாமல் கோபப்படறதுல அர்த்தம் இல்ல சரண்!”

“உனக்கும்தான் பல்லவி! உனக்குத் தெரிஞ்ச அத்தனையும் ஒளிவுமறைவு இல்லாமல் சொன்னால்தான் குணாவின் உள்நோக்கம் நமக்கு புலப்படும்!” நிதானமாக எடுத்துச்சொன்னாள்.

சரண் முன்வந்து தான் பார்த்த, கண்டறிந்த விஷயங்கள் அனைத்தையும் தங்கையிடம் ஒப்பித்தான்.

ஒளிவுமறைவு இல்லாமல் பழகிய பாவத்திற்கு குணா தன்னிடம் சொன்ன பொய்களும், போட்ட வெளிவேஷமும் பல்லவியின் கண்முன் தோன்ற,

“அண்ணா! நான் ரொம்ப குழம்பி போயிருக்கேன்!” பிறகு பேசுகிறேன் என்று தனிமையை நாடினாள்.

“என் யூகங்களைச் சொல்றேன் பவி!”குறுக்கிட்டாள் மஞ்சரி.

“ஒண்ணு கணவன்-மனைவிக்குள்ள நல்லுறவு இருந்திருக்காது.

இல்லேன்னா, பணத்தாசை பிடித்தவனா இருப்பான். அந்தப் பொண்ணுகிட்ட  நிதி நிலைமை சாதகமா இல்லன்னு ஒப்பந்தத்துல கையெழுத்து வாங்கிட்டு, பணம் கொடுத்தால் தான் குழந்தையைத் தருவேன்னு மிரட்டி இருக்கலாம்! நாளைக்கே அவன் கேட்ட பணத்தை யமுனா கொடுத்துட்டு, குழந்தையை வாங்கிகிட்டா கூட இவன் மேல எந்த சந்தேகமும் வராது பாரு!” என்றவள்,

இல்லேன்னா…” மனதிலிருந்த மற்றொரு யூகத்தைச் சொல்லக்கூட நா கூசியது.

“பரவாயில்ல சொல்லுங்க அண்ணி!” உண்மை கசக்கும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டாள் பல்லவி.

“அவனுக்கு ஆண்மை குறைவு பிரச்சனை இருந்திருக்கலாம்…இல்ல…இல்ல… அவனுக்கும் இன்னொரு ஆணுக்கும்…” மீண்டும் மஞ்சரி தயங்க,

“புரியுது அண்ணி!” என்று பல்லவி சோர்வாகத் தலையசைத்தாள்.

“உன்னை பயமுறுத்த சொல்லல பவி மா! இந்த மாதிரி ஆண்கள், தன் குறைகளை மறைத்து, சமுதாயத்தின் பார்வையில் நல்லவர்களாக நடமாட, குடும்பம் குழந்தைன்னு வாழ்ந்து வெளிவேஷம் போடுவாங்க! ஒரு வேளை யமுனாவை குழந்தை பெத்துக் கொடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி இருந்தாலும் ஆச்சரியம் இல்லை!” நிதர்சனங்களை ஏற்க சொல்லி அறிவுறுத்தினாள் மஞ்சரி.

துக்கம் தொண்டையை அடைக்க, பிறகு பேசிகிறேன் என அழைப்பைத் துண்டித்தாள் பல்லவி.

உத்தமன் என்று நம்பியவனின் மனதில் இத்தனை அழுக்கா என்று குமுறினாள். பணத்தாசை பிடித்தவன் என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டவளுக்கு, இனியும் அவனை ஒழுக்கமானவன் என்று நம்புவது மடத்தனம் என்று புரிந்தது.

அண்ணி சொன்ன விளக்கங்களைக் கேட்டவளுக்கு அவன் விமானத்தில் பேசியதும் நினைவுக்கு வந்தது. சாதாரனமாகத் தொட்டுப்பேசும் போது கூட, விசித்திரமாக அவன் விலகிக்கொண்டவிதமும் அண்ணி சொன்னதை மேலும் ஊர்ஜிதம் செய்தது.

எல்லாவற்றிருக்கும் மேலாக, மனைவியை நேசிப்பவன் போல, ‘என் யமுனா’, ‘என் அம்மு’, அவன் உடல்மொழிகள் எல்லாம் நினைத்துப் பார்த்தவள்,

‘இவன் நாடகம் ஊர் அறிய செய்யவேண்டும்’ என்று தெளிந்தாள்.

மனு தாக்கல் செய்யும் எண்ணத்துடன் தான் அலுவலகத்திற்கு வந்தாள். ஆனால் ஏனோ, பணி மேஜயிலிருந்த தாள்களை புரட்டும்போது, கண்ணில் தென்பட்ட மதுமிதாவின் கள்ளம் கபடமில்லாத புகைப்படத்தைப் பார்த்தவளின் மனம் கடந்து தவித்தது.

நூற்றில் ஒன்றாக வரும் சாதரணமான வழக்காக மதுமிதாவின் விஷயத்தில் நடந்துகொள்ள முடியவில்லை.

‘அப்பா நான் இருக்கிறேன்’ என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக் கள்ளாட்டம் ஆடுகிறவனோடு இனி ஒருபோதும் மதுமிதா இருக்கக்கூடாது என்று உறுதியாக நினைத்தாள்.

அதே சமயத்தில் மனஇறுக்கம் பற்றி எள்ளளவும் புரிந்துகொள்ளாமல் பேசும் சுதாவின் அரவணைப்பில் குழந்தை வளர்வதும் சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு.

வேறு உசிதமான வழி என்னவென்று தீவிரமாகச் சிந்திக்க, யமுனாவின் நினைவு மட்டும்தான் வந்தது. தவறே செய்திருந்தாலும், அவளுக்கும் தன் தரப்பு நியாயத்தைப் பேச வாய்ப்பு கொடுத்துவிட்டு முடிவெடுப்பது தானே நீதிதேவதையின் தர்மம் என உணர்ந்தாள்.

யமுனா அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கும் பட்சத்தில் அவள் பயண விவரங்களை சேகரித்தால் அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம் என்று யூகித்தாள்.

சுதா கொடுத்த பாஸ்போர்ட்டின் நகலில் உள்ள விவரங்களை வைத்து யமுனாவின் I-94 பதிவுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தாள். மனைவி இறந்துவிட்டதாக குணா சொன்ன அதே தேதியில்தான் யமுனா இந்தியா வந்திருக்கிறாள் என்று கவனித்தவளின் கோபம் தலைக்கேறியது.

‘சுயநலவாதி!’ மனதில் ஏசியவள், அதிலிருந்த முத்திரையின் அடிப்படையில் யமுனா புது டெல்லிக்கு வந்ததாகக் கண்டறிந்தாள்.

அவர்கள் அலுவலகத்திற்கு உதவும் துப்பறியும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டவள், யமுனாவின் விலாசத்தைக் கண்டுப்பிடித்து தரும்படி விண்ணப்பித்தாள். கொரோனாவின் பரவலை தடுக்க அரசாங்கம் அச்சமயம் பயணிகளின் விலாசத்தைச் சரிபார்த்து பதிவில் வைத்திருந்தது, பல்லவிக்கு கைகொடுத்தது.

இவ்விஷயத்தில் யமுனாவை நேரில் சந்தித்துப் பேசுவதுதான் உத்தமம் என்று நினைத்தவள், தன் திட்டத்தை ரகசியமாகச் செயல்படுத்த தீர்மானித்தாள்.

உதிரத்தில் உதித்தவளை உதரிவிட்டது தான் உசிதமா – தங்கையாக

உடன்பிறந்தவள் உரைப்பது தான் உண்மையா – தோழியாக

உறுதுணையாக உடன்வந்தவள் உளவு பார்ப்பது தான் தர்மமா?

உலகமே இவள் தான் என்று உறுமுகிறான் இவன் – தாயுமானவன்

உரிமை போராட்டத்தில் இவர்களை வெல்வானா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…