பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 14

ஆறு மாதத்தில் நல்ல முடிவோடு திரும்புகிறேன் என்று தேனொழுகப் பேசி, சாவித்ரி தன்னை ஏமாற்றியதாகக் கோபாவேசம் கொண்டாள் சுதா.

மதுமிதாவின் முகத்தில் யமுனாவின் சாயலை கண்டதில், நித்தமும் பரிதவித்தவளுக்கு, முன்கோபம் கொண்ட மாமனிடமிருந்து எப்படியாவது குழந்தையை மீட்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் அழுந்தப் பதிய,  மாணிக்கத்தை வற்புறுத்தி சட்டரீதியாக எதிர்க்கத் துணிந்தாள்.

வழக்கறிஞர் அலுவலகத்தில் பல்லவியை சந்தித்தவளுக்குக் கரைகாணா மகிழ்ச்சி. மதுமிதாவிற்காக அன்று பள்ளியில் வாதாடியவள், தன் பிரச்சனையையும் சுலபமாகத் தீர்த்துவிடுவாள் என்று நம்பிக்கை கொண்டாள்.

சுதா கொடுத்திருந்த குறையீடு முழுவதுவமாகப் படித்துவிட்டதாகக் கூறிய பல்லவி, அதில் சாவித்ரிக்கும் பங்கு உள்ளதா என்று அறிய குறுக்கு விசாரனை செய்தாள். சாவித்ரியிடம் சண்டையிட்டு தான் வந்திருக்கிறாள் என்று ஊர்ஜிதமானதும், பல்லவி அவர்கள் அமெரிக்காவில் பேசிப்பழகியதைப் பற்றி மூடி மறைத்தாள்.

“சொல்லுங்க சுதா! உங்களுக்கு முதல் முதல்ல, குணா….” மென்று விழுங்கியவள், “மிஸ்டர்.குணசேகரன் மேல எப்போ சந்தேகம் வந்துது!”

“அவர் குழந்தையை அத்தைகிட்ட விட்டுட்டு ஊருக்குப் போயிருந்தாரு. அப்போ அத்தை ஊட்டச்சத்து மருந்துன்னு ஏதேதோ கொடுத்தாங்க…” என்று தொடங்கியவள், அவை மூளை நரம்பு சம்பந்தமான மருந்துகள் என்று கண்டறிந்தது முதல், கிஷோரை அவதூறாக பேசியது வரை அத்தனையும் விளக்கினாள்.

மதுமிதாவின் உடல்நிலை பற்றி முற்றிலும் அறிந்திருந்த பல்லவிக்கு, மருந்துகளின் பயன்பாடுகளும் தெரிந்திருந்தது.

குணாவின் சுபாவம் நேரில் பார்த்துப் பழகிப்போனவளுக்கு, அவன் கிஷோரிடம் நடந்து கொண்டவிதமும் ஆச்சரியமாகவே இல்லை.

‘இதெல்லாம் ஒரு காரணமா, பொறுப்பான தந்தையிடமிருந்து குழந்தையை பிரிக்க’ மனதில் சலித்துக்கொண்டவள் அடுத்தக் கேள்வியைக் கேட்க குறிப்பேடை அலசினாள்.

“குணசேகரன் உங்க அக்காவை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்டிருக்கீங்களே! அதைப்பற்றி உங்க அக்கா வீட்டுல யார்கிட்டையும் சொல்லலையா?”

யாரிடமும் சொல்லவில்லை என்று பெருமூச்சுவிட்டவள், அவர்கள் திருமணத்திற்கு முன்தினம், குணா கோவிலில் யமுனாவை வலுக்கட்டாயமாகச் சம்மதிக்கவைத்ததைத் தங்கள் நண்பர் செந்தில்நாதன் பார்த்ததாகவும், அது அவர்களுக்குக் காலம் கடந்துதான் தெரியவந்தது என்றும் வருந்தினாள். பணம், சொத்து கேட்டு குணா தொல்லை செய்ததையும், யமுனாவை அவர்களிடம் பேசவிடாமல் தடுத்ததைப் பற்றியும் விளக்கினாள்.

ஒரு பெண்ணை அழவைக்கும் அளவுக்குக் கொடுமைகாரனாகக் குணாவை கற்பனை கூடச் செய்துபார்க்க முடியவில்லை அவளால். அனுமானங்களை தள்ளிவைத்து நடுநிலை காக்க புத்திக்கு நினைவூட்டிக் கொண்டாள்.

“அந்த பணம், சொத்து எல்லாம் என்ன ஆச்சு?”

அனைத்தும் அக்கா பெயரில் அவன் வாங்கியதாகச் சொன்னவள், அதிகாரப்பத்திரம்(Power_of_Attorney) மட்டும்  தன் பெயரில் பெற்றுக்கொண்டான் என்றாள்.

“ம்ம்!” தலையசைத்தவள், “அதிகாரப்பத்திரம் உங்க அக்கா கையொப்பம் போட்டிருந்தாலும், அவங்க இறந்த பிறகு, அது செல்லாது. இப்போ அந்தச் சொத்து யார் பேருல இருக்குன்னு தெரியுமா?” கேட்டவளுக்கு,

குணா ஏன் அதை குழந்தையின் பெயரில் மாற்றி எழுதியிருக்கக் கூடாது என்று தோன்றியது.

ஏனோ அவனை ஒரு தந்தையாகப் பார்க்கும்போது அவள் மனம் அவனிடம் தோற்றுதான் போனது.

“தெரியாது பல்லவி! அவன் அதை என்ன வேணும்னாலும் செஞ்சிருக்கட்டும்; எங்களுக்குக் குழந்தையை மீட்டுத் தாங்க! அதுபோதும்!” பொறுமையிழந்து சிடுசிடுத்தாள் சுதா.

வார்த்தை வழியாக மெல்லமெல்ல மரியாதையும் சரிவதை கவனித்தவள்,

“அப்படியில்ல சுதா! அவர்கிட்ட குழந்தை வளருவது பாதுகாப்பு இல்லன்னு நம்ம நிரூபிக்கணும். அவர் நன்நடத்தையை எடுத்துக்காட்டும் இந்த மாதிரி விஷயங்களை அலட்சிய படுத்தக்கூடாது!” என்றவள், வில்லங்க சான்றிதழ் வாங்குவதற்குப்  பத்திரத்தின் நகலும், மேற்கொண்டு வழக்கு தொடருவதற்கு, அவர்களின் திருமண சான்றிதழும், யமுனாவின் இறப்பு சான்றிதழும் கேட்டாள்.

“வீட்டுப் பத்திரத்தோட நகல் தரேன்! நீங்க கேட்ட மற்ற எதுவும் எங்ககிட்ட இல்ல; மதுமிதாவையே நாங்க இப்போதான் முதல் முறையா கண்ணால பார்த்தோம்!” ஆற்றாமையுடன் உரைத்தாள்.

கேட்டவளுக்குக் கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. ஆனால் அப்போதும் குணாவை ஒரு கெட்டவனாக ஏற்க அவள் மனம் மறுத்தது.

சுதா சொல்வெதெல்லாம் உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட, குணா புத்திகெட்டு செய்த தவறுகளுக்காக வருந்தி, பிராயசித்தம் தேடும் ஒரு மனிதனாகவே அவள் கண்களுக்குத் தோன்றினான்.

“சரி! பரவாயில்ல மா! அமெரிக்கா போக எப்படியும் திருமணத்தைப் பதிவு செஞ்சிருப்பாங்க; நான் அதைப் பதிவாளார் அலுவலத்துலேந்து வாங்கிக்கறேன். உங்க அக்காவோட இறப்பு சான்றிதழ் அமெரிக்காவுலேந்து வரவழைக்கவும் நானே ஏற்பாடு செய்யறேன்.” பல்லவி மறுயோசனை சொல்ல,

அவள் மேலிருந்த நம்பிக்கை பன்மடங்காக ஆனது சுதாவிற்கு.

“உங்களை என் சகோதரியா நெனச்சு, இதுல குறிப்பிடாத விஷயம் ஒண்ணு சொல்றேன்.” என்றவளின் குரல் கம்மியது.

“ம்ம்…சொல்லுமா!”

“அவனுக்குப் பெண்கள் சகவாசம் கூடக் கண்டிப்பா இருக்கும். அவன் கைபேசியில் ‘லவ் யூ ஹனி’, ‘மிஸ் யூ ஸ்வீட்ஹார்ட்’ன்னு சிரிச்சு குழைஞ்சு பேசுறத நான் பலமுறை பார்த்திருக்கேன். அக்காவும் என்கிட்ட பேசும்போது இதே மாதிரி சொல்லிருக்கா. அதுவும் மதுமிதா பிறந்ததுக்கு அப்புறம் தினமும் வீட்டுக்கு லேட்டா வராணும் புலம்பிருக்கா!” மனம் திறந்து பேசியவளை ஆழமாய் பார்த்தாள் பல்லவி.

“யமுனாவை யாரிடமும் பேச விடமாட்டார்னு சொன்னீங்க!” எதிர்கேள்வி கேட்டு மடக்கினாள் பல்லவி.

“அது…அது…” தடுமாறியவள், “அம்மா அப்பாகிட்ட பேச விடமாட்டான். ஆனால் என்கிட்ட மட்டும் அக்கா சகஜமா பேசிட்டு இருந்தாங்க. சின்ன பொண்ணுதானேன்னு என்கிட்ட யாரும் எதையும் சொல்லவுமில்ல.” சமீபத்தில்தான் உண்மைகளை அறிந்ததாக ஒப்புக்கொண்டாள்.

விரைவில் சந்திக்கிறேன் என்று சுதாவை வழியனுப்பிவிட்டு வந்தவளுக்குப் பல குழப்பங்கள்.

மதுமிதாவின் நலனைக் கருத்தில் கொண்டவளுக்கு, திடமில்லாமல் பேசும் சுதாவை மட்டும் நம்பி, குணா மேல் வழக்குப்போடுவது பெரிய முட்டாள்தனம் என்று தோன்றியது.

‘குணாவுக்கு பெண்கள் சகவாசம்!’ சுதாவின் குற்றச்சாட்டு செவிமடலில் எதிரொலிக்க, அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

‘ஒரு மாதமாக அவனுடன் பழகிய எனக்குத் தெரியாதா, கண் பார்த்து மட்டும் பேசும் அந்த கண்ணியனின் குணம்!’ என்று இறுமாப்புடன் மனதில் அசைப்போட்டாள்.

மறைந்த மனைவியின் நினைவலையில் சஞ்சரித்தவனை நேரில் கண்டவளுக்கு சுதாவின் குற்றச்சாற்றில் பிடிமானம் வரவில்லை.

வழக்கு போடவிடாமல் அவள் கவனத்தைத் திசைத்திருப்ப முடிவு செய்தாள். குணாவிடம் இதைப்பற்றி ஜாடையாக எப்படி எச்சரிப்பது என்று சிந்திக்க, அவள் கைபேசி ஒலித்தது.

“குணா காலிங்க்!” திரையில் கண்டதும்,  “உங்களுக்கு நூறாயுசு குணா!” என்றபடி அழைப்பை ஏற்றாள்.

மறுமுனையில் கேட்டவனுக்கும் முகம் மலர்ந்தது.

எதற்காக ஒருவரை பற்றி ஒருவர் நினைத்தார்கள் என்று வியந்தனர்.

காரணத்தை யார் முதலில் சொல்வது என்று  இருவரும் சில நிமிடங்கள் செல்லச்சண்டையிட, பல்லவியே வென்றாள்.

“எதுக்கு பல்லவி எல்லா போட்டோவும் ஃபேஸ்புக்ல போட்டிருக்கீங்க!” ஊரில் அவர்கள் உல்லாசமாகச் சுற்றியது முதல், வீட்டில் சந்தித்தது வரை, அனைத்தையும் முகநூலில் பதிவேற்றிருந்தாள்.

“போஸ்ட் செஞ்சு எத்தனை நாளாச்சு! இப்போதான் கவனிக்கறீங்களா குணா!” மென்சிரிப்புடன் வினவினாள்.

புகைப்படம் எடுத்து உடனுக்குடன் முகநூலில் பகிர்வது அவள் பழக்கம்.

தேவைப்படும்போது மட்டுமே முகநூல் பக்கம் போவது அவன் வழக்கம்.

“இன்னைக்குக் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு!” என்றவன், அதன் காணொளியை முகநூலில் பார்த்தப் போது புகைப்படங்களையும் கவனித்ததாகப் பதிலளித்தான்.

“அதானே! ப்ரொஃபஸருக்கு கணக்கு பாடம் விட்டா வேறெதுவும் தெரியாதே!” கிண்டல் செய்து வம்பிழுத்தாள்.

அதைக்கேட்டு அசடுவழிந்தவனுக்கு வக்கீலிடம் மறுத்துப்பேசி வாதாட பதிலேதும் இல்லை.

“சரி! நீங்க சொல்லுங்க! எதுக்கு உங்களுக்கு இந்த நேரத்துல என் ஞாபகம்!” பேச்சைத் திசைத்திருப்பினான்.

மதுமிதாவிற்கு ஒரு பிரச்சனை என்று தெரிந்தாலே தலைகால் புரியாமல் கொந்தளிப்பவனிடம் என்ன சொல்வது என்று தயங்கினாள்.

“இருக்கீங்களா…” மௌனத்தைக் கலைத்தான் குணா.

“ம்ம்…” என்றவள், “ப்ரொஃபஸர் ஏக பத்தினி விரதன்னு இத்தனை நாளா நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா அவர் நிறைய பெண்களிடம் கடலை போடுற மிஸ்டர்.ரோமியோன்னு இன்னைக்குத் தான் தெரிஞ்சுகிட்டேன்.” விளையாட்டாகப் பேசினாள்.

“சுதாவை சந்திச்சீங்களா?” சிறிதும் யோசிக்காமல் கேட்டவனின் குரலில் குறும்பு இல்லை.

“குணா!” திகில் கொண்டவளின் குரலிலேயே அது உண்மை என்று புரிந்துகொண்டான்.

“அது…அது….” திணறியவள், “மதுமிதாவை தத்தெடுத்துக்க அவங்க விரும்புறாங்க!” மென்மையான தோரணையில் நல்லவிதமாகத் தொடங்கினாள்.

அம்மாவின் தூண்டுதலில் நண்பர்களாக பேசிப் பழகியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தவனுக்கு அச்செய்தி பேரதிர்வாக இருந்தது.

“எத்தனைமுறை சொல்றது! மதுமிதா அனாதை இல்ல; அப்பா நான் இருக்கேன்னு!” அழுத்தமாகக் கர்ஜித்தவனின் குரலில்,

அருகில் உறங்கி கொண்டிருந்த குழந்தைக்கும் சரி, மறுமுனையில் காத்திருந்த பல்லவிக்கும் சரி, தூக்கிவாரிப்போட்டது.

“குணா! ப்ளீஸ்! நான் சொல்லப்போறத பதட்டபடாம கேளுங்க!” தாழ்ந்த குரலில் கெஞ்சினாள் பேதை.

குழந்தையின் நெற்றியில் மிருதுவாகத் தட்டிக்கொடுத்தபடி, அவளிடம் தன்மையாகப் பேசினான்.

“எனக்கும் உங்க மதுமிதா உங்கக்கூட இருக்கணும்னு தான் ஆசை!” முதலில் தன் விருப்பத்தைச் சொன்னாள் பல்லவி.

“தாங்க்ஸ் பல்லவி!” நிம்மதி பெருமூச்சுவிட்டான் குணா.

“அவங்க மனு தாக்கல் செய்யாத படி நான் இங்க சமாளிக்கறேன். அதுக்குள்ள நீங்க மதுமிதாவின் பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், உங்களுடைய வருமான விவரங்கள் அனைத்தின் நகலையும் எனக்கு அனுப்பிவிடுங்க!” குழந்தை அனாதை இல்லையென்றும், தந்தையின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருக்கிறாள் என்றும் நிரூபிக்கத் தேவைப்படும் என்று மெல்லமாக விவரித்தாள்.

மதுமிதா சார்ந்த ஆவணங்கள் எதையுமே பகிர்ந்துகொள்ள விரும்பாதவன், அவை அனைத்திலும் யமுனா பெயர் மட்டும்தான் இருக்கிறது என்று தட்டிக்கழித்தான்.

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் ஆவணங்களில் அம்மா பெயர் மட்டும் இணைத்தால் போதுமென்ற சட்டதை அவளும் அறிந்திருந்தாள். விஷ்ணுவின் ஆவணங்களில் அதைக் கண்கூடாகப் பார்த்தவளுக்கு, குணா மேல் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை.

அவன் தரப்பு நியாயத்தைப் பலப்படுத்த நினைத்தவள், “சரி குணா! அதுக்குள்ள நீங்க ஒரு தந்தைவழி பரிசோதனை செஞ்சு எனக்கு ரிப்போர்ட் அனுப்புங்க. நம்ம பக்கம் அது ஒரு பலமான ஆதாரமாக இருக்கும்!” தன்னையும் மறந்து அவனுக்காகவே பேசினாள்.

“அதெல்லாம் முடியாது!” தீர்கமாக மறுத்தவன், குழந்தையின் உள்ளங்கையை இறுக பிடித்துக்கொண்டான்.

“பிடிவாதம் பிடிக்க இது நேரமில்லை குணா! ” நிலமையின் தீவிரத்தைப் புரியவைக்க முயன்றாள் பல்லவி.

ஆனால் அவன் புரிந்துகொண்டபாடு இல்லை.

“அந்தக் குட்டிச்சாத்தான் மருந்து கடைக்காரனிடம் அறைகுறையா விஷயம் கேட்டுட்டு வந்து சண்டைபோடுவா; அதுக்கு அவளுக்கு தலையாட்ட ஒருத்தன கட்டி வெச்சிருக்காங்களே; அவன் ஆதாரம்னு சொல்லி கூகுல்லேந்து பிரிண்ட் எடுத்துட்டு வந்து அவளுக்கு ஜால்ரா அடிப்பான்!” அன்று நடந்ததை எல்லாம் புலம்பியவன்,

“விடுங்க பல்லவி! இந்த கேஸ் எடுத்து நடத்த முடியாதுன்னு சொல்லிடுங்க!” யோசனை சொன்னான்.

அவன் புலம்பல்களைக் கேட்டவள் பக்கென்று சிரித்துவிட்டாள்.

சுதா சற்றுமுன் கவலை தோய்ந்த முகத்துடன் கூறிய விஷயங்களை இவன் நகைச்சுவை கலந்து சொல்வது போலவே இருந்தது.

“அது சரி குணா! மிஸ்டர்.ரோமியோன்னு சொன்ன அடுத்த நிமிஷமே சுதாவை சந்திச்சீங்களான்னு கேட்டீங்களே! அது எப்படி?” குறும்பாகக் கேட்டு வம்பிழுத்தாள்.

“இவங்களுக்கு ‘லவ் யூ’, ‘மிஸ் யூ’ எல்லாம் காதலி, மனைவி தவிர வேற யார்கிட்டையும் சொல்லிடக்கூடாது. நான் என் மாணவிகள்கிட்ட அப்படி பேசினதும், உடனே இந்த குட்டிச்சாத்தான் என்னை உளவுபார்க்க கிளம்பிட்டா!” அவன் விளக்கம் கொடுக்க அதையும் கேட்டு ரசித்தாள் பல்லவி.

“உங்க மனைவியும் இப்படித்தான் கேட்பாங்களா?” போட்டு வாங்கினாள் பல்லவி.

“என் அம்மு என்னை நிறைய கிண்டல் செய்வா! ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டா!” பதிலளித்தவனின் நினைவுகள் அன்று பணியாரத்தைத் தட்டிவிட்டு அவளிடம் கோபம் கொண்டதில் சுழன்றது.

‘என் அம்மு’ மறுபடியும் அந்த ஆத்மார்த்தமான அன்பை கவனித்தாள்.

மனம்விட்டு பேசும் அவனிடம், மறுபடியும் கேட்டுப்பார்க்கலாம் என்று நினைத்தவள்,

“குணா! எதுக்கும் ஒரு தந்தைவழி பரிசோதனை செய்துடலாமே!” மென்மையாகக் கேட்க,

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது தான் மிச்சம்.

அச்சமயம் அவளது மூத்த வழக்கறிஞர் உள்ளே வர, குணாவிடம் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தவள் எழுந்து நின்று பேந்தப் பேந்த முழித்தாள்.

மேஜையில் இருந்த குறிப்பேடை அலசிய வழக்கறிஞர்,

“நல்ல யோசனை பல்லவி! இந்த மாதிரி விஷயத்தில் தந்தைவழி பரிசோதனை தான் மிகச்சிறந்த வழி. குழந்தையோட பாட்டி இல்லேன்னா தாத்தாவுக்குப் பரிசோதனை செய்யலாம்.” பரிந்துரை செய்தாள்.

பல்லவி குழம்பி நிற்க, “அவங்ககிட்ட தானே பேசிட்டு இருந்த?” உறுதிப்படுத்திக் கொண்டாள்.

ஆம், இல்லை என்று எல்லா திசைகளிலும் தலையசைத்தாள் பல்லவி.

அதைப் பெரிதும் கவனிக்காதவள், “இதுக்குக் குழந்தையோட அப்பா எந்த அளவுக்கு ஒத்துழைப்பாருன்னு தெரியாது. அமெரிக்காவில் வசிக்கும் என் வக்கீல் நண்பர் கிட்ட பேசி, குழந்தையோட ரிப்போர்ட் வாங்க நான் ஏற்பாடு செய்யறேன்!” என்றதும் பல்லவிக்குத் தலையே சுற்றியது.

“மேம்! அதெல்லாம் வேண்டாம். வேற சுலபமான வழி பார்க்கலாம்!” மறுக்க முயன்றாள்.

“நோ! நோ! நோ! ரொம்ப திறமையா சிந்திச்சிருக்க! உடனே நீ மனுதாரர்…” படிவத்தை அலசியவள், “ஹான்! திருமதி.சுதா கிஷோர் அவங்க சித்தி முறை தானே…” வினவ,

பல்லவி ஆம் என்று மட்டும் தலையசைத்தாள்.

“அவங்களுக்கும் பரிசோதனை செய்யலாமுன்னு நினைக்கறேன். நம்ம முதல்ல குழந்தையோட பாட்டி தாத்தாவுக்கு பரிசோதனை செஞ்சு பார்க்கலாம்!”  என்றவள், அவர்களை உடனே தொடர்புகொள்ளும் படியும் பல்லவியை கட்டாயப்படுத்தினாள்.

வேறுவழியில்லாமல், சுதாவை அழைத்துப் பேசினாள் பல்லவி.

பல்லவியின் வேகத்தை கவனித்த சுதாவுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. விரைவில் ஏற்பாடுகள் செய்வதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

குணா மேல் வழக்கே தொடரக்கூடாது என்று நினைத்துவிட்டு இப்போது அவனை வசமாக மாட்டிவிட்டதை எண்ணி வருந்தினாள்.

மூத்த வழக்கறிஞர் அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பரை அழைப்பதாகக் கூற, பல்லவிக்கு திடீர் யோசனை ஒன்று முளைத்தது.

“மேம்! குழந்தையை பரிசோதித்து ரிப்போர்ட் வாங்க நான் ஏற்பாடு செய்யறேன்!” என்றாள்.

“எப்படி?” கேள்வியாக நோக்கினாள் அவள்.

“சட்டரீதியா ஒருத்தருக்கு தந்தை வழி பரிசோதனை செய்ய, மருத்துவர் அங்கீகாரம் அவசியம். என்னோட அண்ணாவும் ஒரு மருத்துவர் தான். அதுவும் நியூயார்க்கில் தான் இருக்காரு. நான் அண்ணாகிட்ட பேசி இந்த விஷயத்தில் நமக்கு உதவ சொல்றேன்!” என்றதும்,

அவள் முகம் புன்னகையில் விரிந்தது.

“நீ ரொம்ப திறமைசாலி பல்லவி!” பாராட்டித் தோளில் தட்டிக்கொடுத்தவள், “தனியா கேஸ் எடுத்து நடத்தும் அளவிற்கு வேகமும், விவேகமும் உன்கிட்ட இருக்கு!” மனதார வாழ்த்தினாள்.

மதுமிதா வழக்கு சம்பந்தமான மற்ற விஷயங்களை கவனிக்கும் முழு பொறுப்பையும் அவளிடமே ஒப்படைத்துவிட்டு நகர்ந்தாள்.

தலையை இருபுறமும் அழுந்தப் பிடித்து மேஜையில் சாய்ந்தவள், தன் தவறை நினைத்துக் குமுறினாள்.

உண்மையை வாய்விட்டு சொல்லாமல் பிரச்சனையை வளர்த்துவிட்டதை எண்ணியவளுக்கு, குணாவை எப்படி சமாளிப்பது என்ற ஒரே கவலை தான்.

‘அவன் ஒருமுறை பொறுமை இழந்து பேசினால் போதுமே; இவர்கள் அவன் முன்கோபத்தையே சுட்டிக்காட்டி குழந்தைக்கு அவனிடம் பாதுகாப்பு இல்லை என்று மதுமிதாவை சுதாவிடம் ஒப்படைத்துவிடுவார்களே.

இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அண்ணனிடம் பேசி நிலமையை புரியவைத்து, குழந்தைக்கு ரகசியமாக பரிசோதனை செய்யச் சொல்வது மட்டும்தான்.’ மனதில் அசைப்போட்டவளுக்கு, மற்றொரு யோசனையும் வந்தது.

குழந்தைக்கு ரகசியமாய் பரிசோதனை செய்யும் பட்சத்தில், குணாவிற்கும் அப்படியே செய்துவிடலாம் என்று நினைத்தாள்.

மதுமிதாவை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அவன் எண்ணம் உயர்ந்தது எனினும், தன் முன்கோபமும், பிடிவாதமும் அதற்கு ஒரு தடையாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளாதவனை வேறு எப்படியும் அணுக முடியாது என்று உறுதியாக நம்பினாள்.

குறுக்கு வழி என்றாலும், அவன் நன்மைக்காகத் தானே செய்கிறேன் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

கண்முன் இருந்த குழந்தையின் நிழற்படத்தை கையில் எடுத்தவள்,

“மதுகுட்டி! உன்னை உன் அப்பாகிட்டேந்து யாராலையும் பிரிக்கமுடியாது!” என்று, கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

அமெரிக்காவில் இரவு பதினோரு மணி என்றாலும், காலில் சக்கரம் கட்டி பரபரப்பாக வேலை செய்யும் அண்ணனிடம் பேச, இதைவிட சிறந்த நேரமில்லை என்று அறிந்தவள் அவனை அழைத்தாள்.

தவறுகளை மறைக்க தமையன் துணைக்கு வருவானா – வந்து

தந்திரம் செய்து தந்தையின் தவத்தை சோதிப்பானா – சோதித்து

தாம்பத்தியத்தின் ரகசியங்களை தம்பட்டம் அடிப்பானா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…