பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 13

நேரம் கிடைக்கும் போதெல்லாம் குணா வீட்டிற்கு வருவது, பல்லவிக்கு வாடிக்கையாகவே போயிற்று. குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக விளையாட, சாவித்ரியும் நீலாவதியும் அரட்டை அடித்தும், புலம்பியும், அதற்காகப் பல்லவியிடம் திட்டு வாங்கியும் பொழுதுகளைக் கழித்தனர்.

அவர்களை மிகவும் பிடித்துப்போனது சாவித்ரிக்கு. தனக்கும் அவர்கள் புறப்படும் தேதியிலேயே பயணச்சீட்டை மாற்றித் தரும்படி குணாவிடம் கேட்டாள். அவனும் அதை மகிழ்ந்து செய்தான்.

ஆனால் மதுமிதாவின் விஷயத்தில்தான் சாவித்ரியின் திட்டங்கள் அறியமுடியாமல் மனதில் குமுறினான்.

ஊருக்குப் புறப்பட மூன்று நாட்களே இருந்த நிலையில் கொரோனா தொற்று இல்லையென்று உறுதி செய்யும் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருந்தது.

சாவித்ரியின் பரிசோதனை அறிக்கைகளையும் சேர்த்துப் பெற்றுக்கொண்ட பல்லவி, அதைக் கொடுப்பதற்காகக் குணா வீட்டிற்குச் சென்றாள். 

எண்ணெய் பலகாரத்தின் வாசத்தை நுழைவாயிலிலேயே நுகர்ந்தவள், “இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ஆன்ட்டி! வடை, பாயசம்னு ஒரே தடபுடலா சமைச்சிருக்கீங்க!” வினவிக்கொண்டே மதுமிதாவைத் தூக்கிக்கொண்டாள்.

“இன்னைக்கு அமாவாசை மா! மதுமிதா நோய்நொடி இல்லாம தீர்க்காயுசோட வாழணும்னு அவ அம்மாகிட்ட வேண்டிக்கதான்….” என்றவளின் கண்கள், சுவற்றில் சாய்த்து வைத்திருந்த யமுனாவின் நிழற்படத்தைச் சுட்டிக்காட்டியது.

யமுனாவின் முகத்தை முதல்முறையாகப் பார்த்தவள்,

“எத்தனை அழகாக இருக்கிறாள்; மதுமிதா அப்படியே அவள் அம்மாவின் சாயல்!” என்று குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.

மென்சிரிப்புடன் தலையசைத்த சாவித்ரி, யமுனாவின் நிழற்படம் முன் விளக்கேற்றி,

“குணாவிற்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது மா! ஒவ்வொரு மாதமும் அவனுக்குத் தெரியாமல் செய்துட்டு வரேன்!” எனப் பெருமூச்சுவிட்டாள்.

“ஆன்ட்டி! ஒரு பத்து நிமிஷம் காத்திருங்க! இதோ வந்துடறேன்.” என்ற பல்லவி, ரோஜாப்பூ பூங்கொத்து ஒன்று வாங்கி வந்து, யமுனாவின் நிழற்படத்தின் முன் நேர்த்தியாக அலங்கரித்தாள்.

பல்லவியின் பாசத்தில் நெக்குருகிப் போனாள் சாவித்ரி.

மதுமிதாவின் கரங்களை ஒன்றாக சேர்த்துப் பிடித்துக்கொண்டு சாவித்ரி,

“யமுனா! குழந்தைக்கு ஏதேதோ பிரச்சனை இருக்கறதா சொல்றாங்க டி! அதெல்லாம் எனக்கு ஒண்ணும் புரியல; நீதான் அவளுக்கு எப்பொழுதும் துணையா இருக்கணும்” வேண்டும்போதே அவள் கண்கள் குளமாகின.

மதுமிதா “மா…மா…மாமா” என்று அவள் பாஷையில் தாயின் உருவப்படம் முன் இசைத்தாள்.

சேலை முந்தானையில் கண்களைத் துடைத்துக்கொண்ட சாவித்ரி, “குணா மனசு முழுக்க நீதான் டி நெறஞ்சு இருக்க; ஆனால் இந்தக் குழந்தைக்காகவாது கட்டாயம் அவன் இன்னொரு திருமணம் செஞ்சுக்கணும்; அவனுக்குக் கொஞ்சம் புரியவை டி!” என்று மன்றாடினாள்.

சாவித்ரியின் தோள் சுற்றி ஆறுதலாக அரவணைத்துத் தேற்றினாள் பல்லவி.

பல்லவி இருப்பதை உணர்ந்து, சுதாரித்துக்கொண்ட சாவித்ரி, அவளையும் தன்னுடன் மதியஉணவு உண்ணும் படி வற்புறுத்தினாள்.

சாவித்ரியின் அன்புக்கட்டளைக்கு இணங்கியவள், முதலில் மதிமிதாவிற்கு ஊட்டிவிடுலாம் என்று கூற இருவரும் சமையலறைக்குள் நுழைந்தனர்.

யமுனா நிழற்படத்தின் முன், புகைந்து கொண்டிருந்த ஊதுவத்தியை கவனித்த மதுமிதா, காற்றில் கலக்கும் புகையை பிடித்து விளையாட, அவள் கரங்கள் மெல்ல மெல்ல கீழே இறங்கியது. செம்மஞ்சள் தீப்பொறியை விரல்களை மடக்கி பிடித்தவளின் உள்ளங்கை, ஒரே நொடியில் புண்ணானது.

தீப்பொறியின் சூட்டை உணர்ந்தவள் திடுக்கென்று கையை திருப்பிக்கொண்டாள். அதில் சரிந்த பூஜைப் பொருட்களின் சத்தம் கேட்டு ஓடிவந்தனர் பெண்கள்.

பதறியடித்துக் கொண்டு குழந்தையை தூக்கினாள் பல்லவி.

மதுமிதாவின் உள்ளங்கையில் ஏற்பட்ட தீக்காயத்தைப் பரிசோதித்தவள், குழந்தை வலியின் அறிகுறிகள் எதையுமே வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பதையும் கவனித்தாள். மனஇறுக்கம் பற்றி ஓரளவுக்கு தெரிந்திருந்ததனால், அமைதியாக இருந்தாள் பல்லவி.

மகனிடம் என்ன சொல்வதென்று பயந்த சாவித்ரி படபடவென்று புலம்பினாள்.

“ஆன்ட்டி பதறாதீங்க!நான் டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போறேன்!” என்றவள், கைபேசியில் கேப் ஒன்றை புக் செய்தாள்.

“அய்யோ! அதெல்லாம் வேண்டாம் மா! குணாவுக்கு போன் செய்; அவன் அஷ்வின் தவிர வேறெந்த டாக்டர்கிட்டையும் குழந்தையை அழைச்சிட்டுப் போகமாட்டான்.” பதறினாள் சாவித்ரி.

சாவித்ரியின் சொல்லுக்கு இணங்கி குணாவை அழைத்தாள். நான்கு முறை முயற்சிசெய்தும், அவன் அழைப்பை ஏற்கவில்லை.

மதியவுணவு வேளையில், மறதியாக கைபேசியை காரில் வைத்துவிட்டு சென்றவன் எப்படி அழைப்பை ஏற்பான்.

நேரத்தை வீணாக்காமல் அஷ்வினை அழைத்தாள். அறுவை சிகிச்சை அறையில் இருந்ததால் அவனும் அழைப்பை ஏற்கவில்லை.

அதற்குள் புக் செய்திருந்த வாடகை வண்டி வாசலுக்கு வர, சாவித்ரியை தன்னுடன் வரும்படி வற்புறுத்தினாள் பல்லவி.

“வேண்டாம் மா! குழந்தைக்கு நான் மஞ்சள் பத்து போடுறேன். குணா வரட்டும்!” மகனின் சுபாவம் அறிந்த சாவித்ரி வர மறுத்தாள்.

“கைவைத்தியம் எல்லாம் பாதுகாப்பு இல்லை ஆன்ட்டி. மஞ்சள் பொடியின் தூய்மை, காலாவதி தேதி எல்லாம் தெரியாமல் குழந்தைக்கு உபயோகிக்கக் கூடாது. மேலும் மதுமிதாவுக்கு நிறைய அலெர்ஜி இருக்கு!” விளக்கமாக எடுத்துரைத்தவள்,

“பயப்படாம வாங்க ஆன்ட்டி! நான் அண்ணனோட மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போறேன். குணா எதுவும் சொல்லமாட்டார்!” நம்பிக்கையூட்டி அவர்களை அழைத்துச் சென்றாள்.

மதுமிதாவிற்குத் தேவையான சிகிச்சை அனைத்தையும் முன்நின்று கவனித்தான் சரண்.

“சின்ன காயம்தான் ஆன்ட்டி! ஒரு வாரத்துல சரியாயிடும்.” சொன்னவன், “பவி! ஆன்ட்டிக்கு இந்த படிவங்களை நிரப்ப உதவி செய்.” என்றான்.

“ம்ம்…” தலையசைத்தவள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் ஒவ்வொருவரின் அடிப்படை விவரங்களை சேகரிக்கும் படிவங்கள் என்று தன்னையே கேள்வியாக நோக்கும் சாவித்ரியிடம் நிதானமாக விளக்கினாள்.

தனக்கேதும் தெரியாது என்று சாவித்ரி தயங்க, “பெயர், வீட்டு விலாசம், போன் நம்பர் வரைக்கும் எழுதுங்க! மற்ற விவரங்களை அஷ்வின் அலுவலகத்திலிருந்து வாங்கிக்க சொல்றேன்.” மறுவழி சொல்லி, அவளிடம் சில கையொப்பங்கள் பெற்றுக்கொண்டாள்.

இருவரையும் வீட்டில் இறக்கிவிட்டு புறப்படுவதாகச் சொன்னவளின் கரங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள் சாவித்ரி.

“பல்லவி! குணா வரவரைக்கும் நீ என்கூடவே இரு மா! குழந்தை கையில் காயம் பார்த்ததும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்! என்னை பேசக்கூட விடமாட்டான்.” என்று கெஞ்சினாள்.

சாவித்ரியின் பதற்றத்தை உணர்ந்து அவள் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தாள்.

வீட்டிற்கு வந்தவள், மதுமிதாவிற்கு உணவு ஊட்டி, அவளுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு உறங்கவும் வைத்தாள்.

குணா வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும் என்று உணர்ந்தவள், பக்கத்தில் ஒரு வேலையாக சென்றுவிட்டு விரைவில் வருவதாகச் சொல்லி நகர்ந்தாள்.

அவர்கள் கெட்டநேரம், அவன் பல்லவி புறப்பட்ட கால்மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டான். கதவை திறந்து உள்ளே நுழைந்தவன்,

“பல்லவி போன் செய்தாங்களா மா! நிறைய மிஸ்ட் கால் கொடுத்திருக்காங்களே!” வினவ,

அவன் குரல் கேட்டு, “மா…மா…மாமா!” என்று தத்தித்தாவி நடந்துவந்தாள் மதுமிதா.

குழந்தையின் உள்ளங்கையில் காயத்தைப் பார்த்தவன்,

“அம்மா!” என்று கர்ஜித்தான்.

“குணா…குணா…பொறுமையா கேளுடா!” மென்றுவிழுங்கியவள் அவனருகே வர தயங்கினாள்.

அம்மா என்று கூடப் பாராமல், கையோங்கிவிடும் அளவிற்கு அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“அது…யமுனா…அமாவாசை…ஊதுவத்தி….” அவள் கண்கள் யமுனாவின் நிழற்படத்தைச் சுட்டிக்காட்ட,

அதைப் பார்த்தவன், ருத்திர தாண்டவம் ஆடாது ஒன்றுதான் குறை.

வழக்கத்திற்கு மாறான அவன் உடல்மொழியிலும், சத்தமான பேச்சிலும் திடுக்கிட்டுப்போன மதுமிதா அவன் தோளில் சாய்ந்து விம்மினாள்.

குழந்தையின் மனநிலை அறிந்தவன் அவளை தோளோடு தோள் சேர்த்து அணைக்க,

இஸ் திஸ் மிஸ்டர்.குணசேகரன் மனோகர்’ஸ் ரெசிடென்ஸ்?” விசாரித்தபடி இரண்டு பேர் வாசலில் நின்றனர்.

வந்தவர்கள் யார் என்று குழம்பியவன், அவர்களிடம் ஆம் என்று தலையசைத்து தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

வீ ஆர் ஃப்ரம் சைல்ட் ப்ரொடெக்டிவ் சர்வீஸ்!” என்று அடையாள அட்டைகளை நீட்ட, உலகமே அழிந்துவிட்டதாக மனமுடைந்தான் குணா.

மதுமிதாவை இன்னும் அழுத்தமாக அணைத்தவனின் தொண்டை அடைத்தது.

எது நடக்கக்கூடாது என்று மிகவும் ஜாக்கிரதையாக இருந்தானோ, அது இன்று நடந்துவிட்டது.

அதுவும் அம்மாவின் முன் அனைத்து உண்மைகளும் வெளிவரப்போகிறது என்று அறிந்தவனுக்குக், கோபம், ஆத்திரம், அழுகை, பயம் என்ற அத்தனையும் ஒன்றோடு ஒன்று முட்டிமோதியது.

சில படிவங்களை காட்டிய அதிகாரிகள், தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்று ஆங்கிலத்தில் கேள்விகளைத் தொடுக்க, பதில் சொல்ல முடியாமல் திணறினாள் சாவித்ரி.

குணா அவற்றைத் தமிழில் மொழிப்பெயர்த்துக் கூற கம்மிய குரலில் விவரித்தாள்.

மதுமிதா விஷயத்தில் இவ்வளவு அலட்சியமாக இருந்திருக்கிறாள் என்று அறிந்தவனால், அதிகாரிகள் முன்னிலையில் அவளை முறைப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு அதிகாரி குணாவிடம் சில ஆவணங்களைக் கேட்க, மற்றொருவர் வீட்டை வலம் வந்தார்.

குழந்தை பாதுகாப்பான சுற்றுசூழலில் வளர்கிறாளா என்று சரிபார்த்தவர், எல்லாம் சரியாக உள்ளது என்பதுபோல இன்னொரு அதிகாரியிடம் தலையசைத்தார்.

அதற்கிடையில் ஆவணங்களைப் பரிசோதித்த அதிகாரி, “குழந்தையை வளர்க்க அவங்க அம்மாவுக்கு இஷ்டம் இல்லையா? அவங்க குழந்தை வேண்டாம்னு சொல்லிட்டு இந்தியா போயிட்டாங்களா? இப்போ குழந்தைக்கு முழு பொறுப்பு நீங்க மட்டும்தானா?” ஆங்கிலத்தில் கேள்விகளை அடுக்கினார்.

அதற்கெல்லாம் ஆம் என்று மென்மையாக தலையசைத்தவனின் பார்வை மட்டும் எதிரில் நின்றிருந்த அம்மாவை தழுவி மீண்டது. உண்மைகள் உடைந்துவிட்டதை எண்ணி மனம்நொந்தான்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்து நின்றவளுக்கு அவர்களின் ஆங்கிலம் கலந்த உரையாடலில், எதுவும் விளங்கவில்லை.

எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் திருப்தியாக இருப்பதாகச் சொன்ன அதிகாரி, குழந்தைக்கு இதைபோன்ற தீக்காயமோ, வேறேதாவது அபாயமோ இன்னொரு முறை ஏற்பட்டால் குழந்தை மேலான உரிமையை குணா இழந்துவிடுவான் என்று எச்சரித்தார்.

கேட்டவனுக்கு ஒரு கணம் இதயம் துடிப்பது நின்றுவிட்டது. அவர்கள் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டவன், குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு சேர்த்து அணைத்தான்.

குணா கொடுத்த ஆவணங்களை ஒன்று சேர்த்த மற்றொரு அதிகாரி, குழந்தைக்கு எபிபென் உபயோகிப்பதைக் கண்டறிந்தார்.

பெற்றோர்கள் பெரும்பாலான நேரங்களில் அதைப் பயன்படுத்தாமல் போக, அவை காலாவதி ஆவதைக் கூடக் கவனிப்பதில்லை என்று அறிந்தவர், அதைச் சோதிக்க விரும்பினார்.

குணாவின் சோதனை காலம், அவன் எல்லாம் சரியாக வைத்திருந்தாலும், இந்தியாவில் அதைப் பயன்படுத்தியதை மறந்தே போயிருந்தான். கைவசமில்லை என்று சொன்னால் பெரும் குற்றமாகிவிடும் என்று அறிந்தவன், காரணங்களை தேடித் தவிக்க,

வீ ஹேவ் இட் ஹியர்!” கம்பீரமாகச் சொல்லிகொண்டே பல்லவி உள்ளே நுழைந்தாள்.

“குழந்தையை வெளியே அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததால், தன் ஹேண்ட்பாகில் வைத்திருந்ததாகப் பல்லவி சொல்ல, குணாவும் ஆம் என்று தலையசைத்து பெருமூச்சுவிட்டான்.

அதிகாரிகள் அவளை யாரென்று வினவ, குணாவின் தோழி என்று பதிலளித்தாள்.

அவர்களுக்குப் பதிலளிப்பது போல மதுமிதா அவளிடம் தாவிக்கொண்டாள்.

குடும்பத்தினர் மீது தவறேதும் இல்லை என்று அதிகாரிகள்  உறுதிப்படுத்த, அதைக்கேட்ட குணா, தன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, அப்படியே விசாரணை சம்பந்தமான ஆவணங்களை அழித்துவிடுமாறும் விண்ணபித்தான்.

விசாரணை பதிவுகளை அழிக்கவேண்டிய காரணம் என்னவென்று அதிகாரிகள் கேட்க, தான் ஒரு கல்லூரி பேராசிரியர் என்றும், இதைப்போன்ற குற்றச்சாட்டு தன் வேலை சார்ந்த விஷயங்களை பாதிக்கும் என்றும் விளக்கினான்.

அவர்களும் அவன் சூழ்நிலையைப் புரிந்துகொண்டனர்.

அவர்களை வழியனுப்பிவிட்டு வந்தவனை பதற்றத்துடன் பார்த்து நின்றனர் பெண்கள்.

ஆனால் அவனோ பூகம்பத்தை எதிர்த்து போராடி வென்றதுபோல சோர்ந்துப் போயிருந்தான்.

பல்லவியின் கண்கள் மேஜையிலிருந்த ஆவணங்களை கவனித்தது.

குணாவிற்கு உதவும் நல்லெண்ணத்தில் அவள் அவற்றை கையில் எடுக்க, அவன் வெடுக்கென்று பிடுங்கி, பெட்டியில் பூட்டி மறைத்தான்.

அவன் கோபம் குறையவில்லை என்று நினத்தவள்,

“மன்னிச்சிருங்க குணா! நான்தான் அம்மாவை வற்புறுத்தி அண்ணாவோட மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனேன். இதுல இவ்வளவு சிக்கல் இருக்கும்னு எனக்குத் தெரியாது!” மென்மையாகப் பேசி அவன் கைகளை வருடினாள்.

கைகளை விலக்கிகொண்டவன், “நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் பல்லவி. எபிபென் சரியான நேரத்தில் காட்டி உதவி செஞ்சதுக்கு….” என்றவன், அது அவள் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்னவென்று வினவினான்.

விஷ்ணுவுக்கும் மதுமிதாவை போலவே ஒவ்வாமை பிரச்சனை இருப்பதாகப் பதிலளிக்க, அவனும் லேசாக தலையசைத்து சிரித்தான்.

மகன் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டான் என்று நிம்மதி அடைந்தாள் சாவித்ரி.

மகன் அருகில் வந்து அமர்ந்தவள், “மன்னிச்சிரு குணா! யமுனாவின் ஆசி குழந்தைக்கு இருக்கணும்னு தான் பூஜை செய்தேன்.” தன்மையாகப் பேசினாள்

அதிகாரிகளிடம் பேசியது எதையும் சாவித்ரி புரிந்துகொள்ளவில்லை என்று நிம்மதி பெருமூச்சுவிட்டனுக்கு யமுனாவின் நிழற்படம் நினைவுக்குவந்தது.

அதை எடுத்து தன் மார்போடு அணைத்தவன்,

“இந்த சடங்கு, பூஜையில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லன்னு உனக்கு எத்தனைமுறை சொல்றது!” நாத்திகம் பேசினான்.

இரத்தமும் சதையுமாக இருப்பவளுக்குக் காரியம் செய்கிறார்களே என்ற குற்றவுணர்ச்சியில் துடிதுடித்தான். உண்மையை சொல்ல துணிவில்லாதவனின் உணர்ச்சிகள் இரைச்சல்களாக வெளிவந்தது.

மனைவியின் படத்தை அவன் இதயத்தோடு சேர்த்து அரவணைத்த விதம், வார்த்தையில் வெளிபட்ட வலி, கண்ணோரம் எட்டிப்பார்த்த மழைச்சாரல், எல்லாம் கவனிக்கவே செய்தாள் பல்லவி.

‘எத்தனை ஆத்மார்த்தமாக மனைவியை நேசிக்கிறான் இவன்’ என்று எண்ணி வியந்தாள் அவள்.

சாவித்ரி இடைவிடாமல் மகனிடம் பரிதாபமாகக் கெஞ்சினாள்.

“என்னை எவ்வளவு பெரிய சிக்கல்ல மாட்டிவிட்டுட்ட தெரியுமா. நீ செஞ்ச வேலைக்குக் குழந்தையை வளர்க்க துப்பில்லன்னு மதுமிதாவைத் தூக்கிட்டுப் போயிருப்பாங்க. அப்புறம் மதுமிதா உனக்கும் இல்லாம எனக்கும் இல்லாம ஏதோ ஒரு காப்பகத்தில் அனாதையா வளர்ந்திருப்பா!” கொந்தளித்தான் குணா.

ஒரு சிறிய தீக்காயத்தால் இவ்வளவு பிரச்சனையா என்று பேதலித்துப்போனாள் சாவித்ரி.

பின்விளைவுகளை கற்பனை செய்தவள் விசும்பி விசும்பி அழ, அவளை ஆறுதலாக அரவணைத்த பல்லவி.

“ஆன்ட்டி! அழாதீங்க! மதுமிதாவுக்கு அப்படி எதுவும் நடக்காது. குணா மாதிரி ஒரு அப்பா அவளுக்கு இருக்கும்போது அவளுக்கு எந்த ஆபத்தும் வராது!” எனத் தேற்றினாள்.

 இருவரும் அவளை ஆழமாகப் பார்த்தனர்.

“உங்க வீட்டு விஷயத்தில் தலையிடறேன்னு தப்பா நினைக்காதீங்க! குழந்தைக்கு அம்மா இல்லேன்ற குறையே தெரியாம அவரால மட்டும்தான் வளர்க்க முடியும்! அந்த அளவுக்கு அவர் மதுமிதா மேல உயிரா இருக்காரு.”

 என்றவளின் விழிகள் குணாவின் குணாதிசயத்தை எண்ணி வியந்தது.

“அதுமட்டுமில்ல ஆன்ட்டி…” மனதில் தோன்றிய எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கினாள்.

“சொல்லுமா!”

“அவர இன்னொரு கல்யாணம் செய்துக்கச் சொல்லி வற்புறுத்தாதீங்க!”தயக்கத்துடன் உரைத்தாள்.

அவள் பேச்சில் மலைத்து நின்றான் குணா.

“அதுக்கில்ல மா…அவன் குழந்தையை எப்படித் தனியாளா வளர்ப்பான்!” சாவித்ரி வினவ,

“அவர் உங்களவிட என்னைவிட நல்லாவே பார்த்துப்பாரு ஆன்ட்டி! மதுமிதாவை ரெண்டு வருஷமா தனியாளா வளர்த்திருக்காரு!” என்றவள்,

“நம்ம ரெண்டு பேரும் அவ பக்கத்தில் இருந்தும் இன்னைக்கு என்ன நடந்ததுன்னு யோசிச்சுப் பாருங்க!” விரக்தியில் தலைகுனிந்து சிரித்தாள்.

சிந்தித்துப் பார்த்தவளுக்கு, இன்று மட்டுமில்லை, ஊரில் மதுமிதா கீழே விழுந்தது, வேர்க்கடலை தொட்டு உடல் சரியில்லாமல் போனது அனைத்தும் தன் கவனக் குறைவால் ஏற்பட்டது என்று அசைப்போட்டவளுக்குப் பல்லவி சொல்வது சரியென்று பட்டது.

“அவர் தன் வாழ்க்கை பாதையை தெளிவாகத் திட்டமிட்டிருக்காரு. அதைச் செயல்படுத்த அவரை சுதந்திரமா விடுங்க ஆன்ட்டி!” மேலும் வலியுறுத்தினாள் பல்லவி.

அவள் சொன்ன அனைத்தையும் மனதார ஏற்றதாக, சாவித்ரி மலர்ந்த முகத்துடன் பதிலளிக்க, விமான நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லி புறப்பட்டாள் பல்லவி.

தன் பயத்தை வாய்விட்டு சொல்லாமலேயே மிக துல்லியமாக உணர்ந்து, அதற்கான தீர்வையும் தந்துவிட்டு அமைதியாக நகர்ந்தவள், குணா கண்களுக்கு வரம் தரும் தேவதையாகவே தோன்றினாள்.

வழியனுப்பிவிட்டு வருவதாகக் கூறி அவளைப் பின்தொடர்ந்தவன்,

“பல்லவி!” மெல்லிய குரலில் அழைக்க, அவள் திரும்பினாள்.

“தாங்க்ஸ் பல்லவி! நீங்க எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா?” மகிழ்ச்சியில் மிதந்தான்.

“ஓ பெரிய உதவியா செஞ்சிருக்கேன்!” உதட்டைச் சுழித்தவள்,

“அப்போ தாங்க்ஸ் மட்டும் போதாது மிஸ்டர்.குணா!” வம்பிழுத்தாள்.

“வேற என்ன வேணும்னு சொல்லுங்க!” உலகத்தையே அவள் காலடியில் போடும் அளவிற்குச் சந்தோஷத்தில் மிதந்தான்.

“அடுத்தமுறை நான் அமெரிக்கா வரப்ப, கிஃப்ட் கார்ட் வாங்கித்தந்து ஏமாத்தாதீங்க! வேணும்னா உங்க க்ரெடிட் கார்ட் கொடுங்க!” எனக் கண்சிமிட்டினாள். 

அவள் குறும்பை ரசித்துச் சிரித்தவன், “அதுக்குள்ள உங்களுக்கு கிரீன் கார்ட் வாங்கித்தந்து ஸைட்டும் அடிக்கறதுக்கு வக்கீல் கணவர் வந்துடுவாரு!” அவன் பதிலுக்கு வம்பிழுக்க,

இருவரும் கவலைகள் மறந்து சிரித்தனர்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு….

இரண்டு மாதங்கள் விடுப்புக்குப் பிறகு பணிக்குத் திரும்பினாள் பல்லவி.

அவர்கள் அலுவலகத்திற்கு வரும் வழக்குகளின் நிறைகுறைகளை ஆராய்ந்து, சம்பந்தபட்டவர்களுடன் பேசி, முதல்கட்ட ஆதாரங்களைச் சேகரிப்பதும், ஆலோசனைகள் பரிந்துரை செய்வதும் அவளுக்கென்று நியமிக்கபட்ட தலையாய கடமைகளில் சில.

மேஜையின் மேல் தேங்கியிருந்த வழக்குகளின் தொகுப்புகளில் ஒன்றினை வணங்காமல் எடுத்தவளின் கவனத்தை ஈர்த்தது அந்த புகைப்படம்.

அது மதுமிதாவின் புகைப்படம்.

மதுமிதாவை தத்தெடுத்து கொள்வதற்காகச் சென்னையை சேர்ந்த திருமதி.சுதா கிஷோர், திரு.குணசேகரன் மனோகர் மீது வழக்குத் தொடர விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தது.

குணா வளர்ப்பில் தனக்கு அதிருப்தி என்று சுதா சுட்டிக்காட்டியக் காரணங்கள் அனைத்தும், பல்லவி நேரில் கண்டதுக்கு முற்றிலும் முரண்பாடாக இருந்தது.

கண்ணால் பார்த்த கண்ணியனை கண்மூடித்தனமாக நம்புவாளா!

காதில் கேட்கும் குற்றங்களைக் கட்டுக்கதைகள் என புறம்தள்ளுவாளா!

தீர விசாரிப்பதே மெய் என்ற முதுமொழி வழி நடப்பாளா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…