பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 12

ஊரே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்க, அன்றும் குணா கல்லூரிக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. உலகத்தையே புரட்டிப் போட்ட கொரோனா நோயின் தீவிரம் குறைந்து வந்த நிலையில், மாணவர்களை கல்லூரி வளாகங்களுக்கு வரவழைக்கும் பாதுகாப்பான வழிமுறைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

மாணவர்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப, நேரிலோ இணையத்தளத்திலோ பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என்று முடிவாக, கல்வியாளர்களின் வேலைபளு அதிகரித்தது. இரு தரப்பினருக்கும் தேவையான பாடத்திட்டங்களை வரைந்து முடித்த களைப்பில் வீடு திரும்பினான் குணா.

“புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குணா!” கதவை திறந்த பல்லவி உற்சாகமாய் வரவேற்றாள்.

“அதுக்குள்ள வந்துட்டீங்களா பல்லவி! ஏழு மணிக்கு மேல புறப்படலாம்னு தானே பேசிகிட்டோம்!” கண்கள் அகல வினவினான்.

“நாம மெதுவா கிளம்பலாம் குணா! வீட்டுல எந்த வேலையும் இல்ல; அதான் நாங்க சீக்கிரமே கிளம்பி வந்துட்டோம்!” என்றவள், தன்னுடன் பாட்டியும், விஷ்ணுவையும் அழைத்து வந்திருப்பதகாகக் கூறி, பணி முடித்து வீடு திரும்பும்போது, அண்ணி மஞ்சரி அவர்களை வீட்டிற்க்கு அழைத்துச் சென்றுவிடுவாள் என்றும் அறிவித்தாள்.

“ம்ம்!” தலையசைத்தவன், சற்று நேரம் இளைப்பாறிவிட்டு வருவதாகக் கூறி நகர்ந்தான்.

“குணா! பணியாரம் சாப்பிட்டுப் போங்க! ஆன்ட்டி சூப்பரா செஞ்சிருக்காங்க!” துள்ளலாக வழிமறித்தவளிடம் வேண்டாமென்று தலையசைத்தான்.

“யமுனா போனதுலேந்து, அவன் பணியாரம் சாப்பிடுறத விட்டுட்டான் மா!” தாழந்த குரலில் சொன்னவள், யமுனா செய்யும் பணியாரம் மகனுக்கு எந்தளவுக்கு பிடிக்கும் என்றும் விளக்கினாள்.

‘மனைவி மேல் இவ்வளவு காதலா!’ பிரமிப்பாய் பார்த்தாள் பல்லவி.

மென்மையாகச் சிரித்துவிட்டு நகர்ந்தான் குணா.

காரணம், பல்லவியின் கண்பார்த்துப் பேசமுடியவில்லை அவனால்.

பத்து நாட்களாகப் பல்லவியுடன் செலவிட்ட தருணங்களில் யமுனாவே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தன்னைத் தேடி வந்தது போல உணர்ந்தான். பல்லவி பார்க்க விரும்பிய சுற்றுலா ஸ்தலங்கள், அவற்றைப் பற்றி அவள் ரசித்துப் பேசிய வார்த்தைகள், உணவு பழக்கவழக்கங்கள் என யாவும் யமுனா செய்வது போலவே இருந்தது.

புத்தாண்டு நாளான அன்றும், தன்னை மறுபடியும் டைம்ஸ் ஸ்குவேர் அழைத்துச் செல்லும்படி அன்புக்கட்டளை விடுத்திருந்தாள்.

சாலை நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இருவரும் சப்வேவில்(ரயிலில்) பயணிக்கத் திட்டமிட்டிருந்தனர். பயணிகள் இருக்கையில் அமர்ந்த மறுநொடி,

“உங்களால இன்னும் உங்க மனைவியை மறக்க முடியலையா குணா?” அவள் வினவ, அதைக் கேட்டவனுக்கு புரை ஏறியது தான் மிச்சம்.

“ம்ம்!” மென்மையாக தலையசைத்தான்.

“அவங்க கொரோனாவால் இறந்துட்டாங்கன்னு தெரியும். அவங்களுக்கு எப்படி இந்த வைரஸ் வந்தது? மதுமிதா அப்போ நாலு மாசம் குழந்தைன்னு ஆன்ட்டி சொன்னாங்க; முழுநேரமும் தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைக்குப் பரவாம எப்படி பார்த்துக்கிட்டீங்க?” கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.

உறவுகளிடம் ஒற்றை வரியில் பொய்சொல்லி சமாளித்துவிட்டான் அன்று. திடீரென்று இத்தனை கேள்விகளுக்குப் பதில் தேடி எங்கே போவது. 

முகத்தில் சோகத்தை ஒட்டிக்கொண்டவன்,

“விடுங்க பல்லவி! அதெல்லாம் எதுக்கு. நானே கொஞ்சம் கொஞ்சமா அதுலேந்து வெளிய வர பார்க்கிறேன்!” சொன்னவன் குரல் சரிய,

“இல்ல குணா! சோகத்தை உங்க மனசுக்குள்ளே பூட்டி வெச்சுகிட்டு அவதிப்படறீங்க!” என அவன் கரத்தில் ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தவள், மனசவிட்டு பேசுங்க! பாரம் குறையும்!” என்றாள்.

கைகளை நாசுக்காக விலக்கிகொண்டவன், “இன்னைக்கு புத்தாண்டு தினம். சந்தோஷமா பேசலாமே!” என கண்சிமிட்டி,

“சொல்லுங்க! மறுபடியும் எதுக்கு டைம்ஸ் ஸ்குவேர் போகணும்னு சொன்னீங்க!”பேச்சை திசைத்திருப்பினான்.

“நண்பன் என்ற உரிமையில், உங்ககிட்ட புத்தாண்டு பரிசு கேட்கலாம்னு நெனச்சேன். ஆனா நீங்க என்னை அப்படி நினைக்கல! நம்ம அடுத்த ஸ்டேஷன்லே இறங்கி வீட்டுக்குப் போகலாம் மிஸ்டர்.குணா!” கழுத்தை நொடித்தவள் மறுபுறம் திரும்பி அமர்ந்தாள்.

சிறுபிள்ளை போல கோபப்படுகிறாளே என்று ரசித்தவனின் இதழோரம் சின்னதொரு புன்னகை எட்டிப்பார்த்தது.

“இப்போ என்ன! யமுனாவுக்கு எப்படி கொரோனா வந்துதுன்னு தெரிஞ்சக்கணும், அவ்வளவுதானே!” என்றவன் கட்டுக்கதை ஒன்று சொல்லச் சுற்றிமுற்றி பார்த்தான்.

அவன் பேச ஆர்வத்துடன் காத்திருந்தாள் அவள்.

“யமுனா! உங்கள மாதிரியே சரியான பிடிவாதக்காரி!” நமுட்டு சிரிப்புடன் தொடங்கியவனை, கண்கள் சுருக்கி வீழ்த்தினாள் பெண்.

“பனிகாலத்தில், அதுவும் கொரோனாவுக்கு முழுசா தீர்வு கிடைக்காத இந்த நேரத்தில், மாஸ்க் போட்டுட்டு ஆவது ஷாப்பிங்க் செய்வேன்னு அடம்பிடிக்கறீங்களே…அதேமாதிரி தான் என் யமுனா அன்னைக்குச் சொல்பேச்சு கேட்காமல் கல்லூரிக்கு போனாள்!”

‘என் யமுனா!’ தன்னவள் என்று அவன் உரிமை கொண்டாடுவதை கவனிக்கவே செய்தாள் பெண்.

“அவங்க கல்லூரியில் படிச்சாங்களா?”

“ம்ம்!” அவள் தையல்கலை பயின்றாள் என்று பதிலளித்துத் தன் கற்பனைக்கு எட்டிய கதையை அரங்கேற்றினான்.

ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புகள் உண்டு என்று அறிந்த யமுனா, தன் உடைமைகளை எடுத்து வருவதற்காகக் கல்லூரி வளாகத்திற்குப் பிடிவாதமாகச் சென்றாள். அச்சமயம் வேறொருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், யமுனாவையும் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமை படுத்தினார்கள். இரண்டு நாட்களில், அவளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்தார்கள் என்றும், அதன் பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தாள் என்றும் சொல்லி பெருமூச்சுவிட்டான்.

 கேட்டவள் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

“இதுக்குதான் சொல்லமாட்டேன்னு சொன்னேன்!” என்றதும் கண்களை துடைத்துக்கொண்டவள்,

“விதி எப்படி எல்லாம் நம்ம வாழ்க்கையில் விளையாடுது!” விரக்தியாகப் பேசியவள், “இதுலேந்து வெளிய வர பாருங்க குணா!” என அறிவுறுத்தினாள்.

“ம்ம்!” தலையசைத்தான் அவன்.

தேவையில்லாமல் அவனுக்கு மனவுளைச்சலை தந்து விட்டோமே என்று வருந்தியவள் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை. அதனால், மீதி பயணமும் மௌனத்தில் நகர்ந்தது.

டைம்ஸ் ஸ்குவேர் வந்ததும், அன்று வந்த அதே அடுக்குமாடி கடை முன் நின்றாள் பல்லவி.

“மறுபடியும் மேசீஸ்(Macy’s) ஸா!” வாயை பிளந்தான் குணா.

அன்று அந்த அடுக்குமாடி கடையை அவளுடன் உலா வந்தவனின் கால்கள் ஒருபக்கம் சோர்வடைய, பணப்பையும் சுருங்கியது. அவள் கேட்கும் பொருட்களை வாங்கித்தர, கொள்ளை அடித்தாலும் போதாது என்று நினைத்தான்.

“ஆமாம் குணா! ஒவ்வொரு புத்தாண்டுக்கும், நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பால் ட்ரொப்(Ball Drop) பார்க்க வந்துடுவேன். அப்புறம் ஷாப்பிங்! இந்த கொரோனா தாக்கத்தால் கடந்த ரெண்டு வருஷமா வர முடியல.” அலட்டலே இல்லாமல் சொன்னவளை இமைக்காமல் பார்த்தான்.

முதல்முறை ஊருக்கு வந்தவள் போலவே இந்த ஒருவாரமாகத் தன்னிடம் பாவனை செய்தாளே என்று ஆதங்கம் கொண்டவன்,

“அப்போ! உங்களுக்கு இந்த இடமெல்லாம் அத்துப்படி. அப்படித்தானே!” திடமாக கேட்டான்.

“ம்ம்! மூலை முடுக்கு ஒண்ணு விடாம தெரியும்!” குறும்பாகக் கண்சிமிட்டியவள்,

“என் எதிர்காலமே இந்த நியூயோர்க் நகரத்தில் தான்!” கைகளை இருபுறம் பரப்பி, ஆழ்ந்து சுவாசித்தவள்,

“ஐ லவ் நியூயோர்க்!” மனமுருகி உரைத்தாள்.

“இவள் என்ன ரகம்?” யோசித்தபடி அவளையே பார்த்து நின்றான் குணா.

“என்ன பாக்குறீங்க! அதோ அங்கே பாருங்க!” எதிர் திசையில் வானுயர்ந்த கட்டிடம் ஒன்றை சுட்டிக்காட்டியவள்,

“முப்பதாவது மாடியல் என் கணவரோட அலுவலகம் இருக்கும். தினமும் ஷாப்பிங் செய்ய நான் இங்க வருவேன். அவர் என்னைப் பைனாகுலர்லேந்துப் பார்த்து சைட் அடிப்பார்.” என கற்பனையில் மிதந்தவள்,

”எப்படி எங்களுடைய காதல் கதை!” துள்ளலாகக் கேட்டு அவன் பதிலுக்குக் காத்திருந்தாள்.

“செம்ம மொக்க!’ மனதில் நினைத்தவன்,

“நிறைய சினிமா பார்ப்பீங்களா! இந்திய சட்டம் படிச்சிட்டு இங்க இருக்கறவன கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்றீங்க!” ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கிறதே என்று ஏளனமாகக் கேட்டான்.

“ப்ரொஃபெஸர் படிப்பு, உத்தியோகம் தாண்டி எதுவும் யோசிக்க மாட்டீங்க போல”, பதிலுக்கு கேலி செய்தவள்,

“நான் சட்டம் படிச்சதே, இந்த ஊரில் இருக்கும் ஒரு வக்கீலை இம்ப்ரெஸ் செஞ்சி கல்யாணம், கிரீன் கார்ட்(Green_Card), சிடிசென்ஷிப்ன்னு(Citizenship) அப்படியே வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்கத் தான்!”

“அது என்ன குறிப்பா வக்கீல் கணவன்!” பக்குவம் என்பதே இவளுக்கு இல்லை என்று தோன்றியது அவனுக்கு.

“நீங்க ஜான் கிர்ஷாம்(John_Grisham) கதைகள் படிச்சது இல்லையா. அதில் வரும் வக்கீல்கள், வானளாவிய அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில்…சும்மா கெத்தா, ஊரே தெரியுறா மாதிரி ஜன்னல்கள் கொண்ட அலுவலக அறையில் உட்கார்ந்துகிட்டு வேலை செய்யுவாங்க. அங்கிருந்து பார்க்கும்போது, உலகம் நம்ம காலடியில இருக்குறா மாதிரி தோணும். அவங்க வாய்திறந்து பேசணும்னாலே பணம்தான்! எல்லாம் ஹவர்லி பில்லிங்க்(hourly_billing).” என்று கற்பனையில் மிதந்தாள்.

பணம், பதவி, அந்தஸ்த்து என்று அடுக்கிக் கொண்டே போக, அவள் மனநிலையை நன்கு உணர்ந்தான் குணா. இவளையா திருமணம் செய்துகொள்ள நினைத்தோம் என்று சிந்தித்தவன், இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டான்.

சிலையாக நிற்கும் அவனை உலுக்கியவள், “குணா! நீங்க கூட மொக்கையா ப்ரபோஸ் செய்யறதுக்குப் பதிலா, கிரீன் கார்டு வாங்கித்தரேன்னு சொல்லிருந்தீங்கன்னா, உடனே திருமணத்திற்குச் சம்மதிச்சிருப்பேன்!” பல்லவி உதட்டை சுழித்து வம்பிழுக்க, அவன் அதிர்ந்துதான் போனான்.

“சரி! சரி! பயப்படாதீங்க! எனக்கு கிரீன் கார்டு எல்லாம் வேண்டாம். நான் கேட்கும் பரிசுப்பொருள் வாங்கித்தாங்க!” வலுக்கட்டாயமாக அவனை இழுத்தாள்.

அன்றுபோல மீண்டும் அவள் பெண்கள் பிரிவுக்கு வேகநடையிட,

“பல்லவி! ஒரு நிமிஷம்! இதோ வந்துடறேன்” என்று எதிர்பக்கம் நடந்தான்.

ஐந்து நிமிடத்தில் திரும்பியவன், அவள் கையில் ஒரு அட்டையை நுழைத்து, “இந்த கிஃப்ட் கார்டுல இருநூறு டாலர் இருக்கு. இதில் நீங்க எதிர்பார்க்கும் பரிசுப்பொருள் வாங்க முடியும்னா வாங்கிக்கோங்க. என் பட்ஜெட் இவ்வளவுதான்.” என்றவன், மதுமிதாவிற்குப் பொம்மைகள் வாங்கி வருவதாகக் கூறி நழுவினான்.

‘ப்ரொஃபெஸர் சரியான கஞ்சன்!’ மனதில் செல்லமாக முணுமுணுத்தவள், தனக்கு வேண்டியதை வாங்க நகர்ந்தாள்.

ஒருமணி நேரத்தில் நுழைவாயிலருகே சந்தித்தனர்.

“குழந்தைக்குத் தேவையானது கிடைச்சுதா!” அவன் கையில் வைத்திருந்த இரண்டு நீளமான பைகளைப் பார்த்து வினவினாள்.

திருகு வெட்டுப் புதிரொன்றை வாங்கியதாகக் கூறியவன், அதை பையிலிருந்து எடுத்தும் காட்டினான்.

“மூணு வயசு கூட ஆகல…நூறு பகுதிகள் கொண்ட புதிர் விளையாட்டா?” அதை முன்னும் பின்னும் ஆராய்ந்தாள்.

மதுமிதாவின் திறமகளை விளக்கியவன், மற்றொரு பையை அவளிடம் நீட்டி, “இது விஷ்ணுவுக்கு!” என்றான்.

அதில் லெகோ செட்(Lego_Set) இருப்பதைக் கவனித்தவள், “அவன் இதைப் பொறுமயாக விளையாட மாட்டானே குணா!” எனத் தயங்க,

“கட்டாயம் விளையாடுவான் பல்லவி! இந்தப் பகுதிகளை ஒன்று சேர்த்தால், அவனுக்குப் பிடித்த கார் பொம்மையாக மாறும்.

கார் வேணும்னா, அதுக்குத் தேவையான உழைப்பை அவன்தான் போடணும்னு, பக்கத்துல உட்கார்ந்துக் கற்றுக்கொடுங்க. நிச்சயமாகச் சிந்திச்சு விளையாடுவான்!” என்றான்.

குழந்தைகளின் மனநிலையை அறிந்து செயல்படும் குணா மீது பெருமளவு மரியாதை வந்தது அவளுக்கு.

பல்லவி மனதார நன்றிகூற, “சரி! சரி! உங்களுக்குத் தேவையானது கிடைச்சுதா!” உற்சாகத்துடன் கேட்டான்.

கிஃப்ட் கார்டை உயரத்தூக்கி அசைத்து, “இருநூறு டாலரும் காலி!” பெருமையடித்தவள், அதைக் கைப்பையில் பத்திரப்படுத்தினாள்.

“காலியான கார்டை வெச்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க!” மென்சிரிப்புடன் வினவினான்.

“ஒரு நினைவு சின்னம் தான்!” குறும்பாகக் கண்சிமிட்டியவளை, தன்னையும் மறந்து ஒரு நொடி ரசித்தான்.

ஒரு நொடிதான்; ஒரு நொடி மட்டும்தான்.

அவள் பையிலிருந்து எடுத்துக்காட்டிய மேக்கப் செட்டை பார்த்துத் திடுக்கிட்டவன்,

‘யமுனா!’ மென்மையிலும் மென்மையாக உச்சரிக்க,

அவனை கேள்வியாக நோக்கினாள் பல்லவி.

அவன் முகத்தில் பரவிய சோகமே அவன் மனநிலையும் எடுத்துரைத்தது.

“மன்னிச்சிருங்க குணா! உங்க மனைவிக்கும் பிடிக்குமா…நான் வேற ஏதாவது வாங்கிக்குறேன்!” அவள் கடையில் நுழைய,

“பரவாயில்லை பல்லவி! வாங்க கிளம்பலாம்.” எனத் தடுத்தான்.

மனிதர்களின் பேச்சுக்குரல் நிறைந்த அந்தச் சாலையில் இருவரின் இதயங்கள் மட்டும் குற்றவுணர்ச்சியில் குமுறிக்கொண்டு இருந்தது.

மாமன் மகள் ஆசையாகக் கேட்டதை வாங்கித்தர மறுத்துவிட்டு இன்று யாரோ ஒரு பெண்ணுக்குப் பரிசளித்ததை எண்ணி வருந்தினான் அவன்.

‘கவலைகளை கடந்து வா’ என்று சொல்லிவிட்டு, தானே அவன் நினைவலைகளைக் கிளறிவிட்டதாக நொந்தாள் அவள்.

“குணா!” தாழ்ந்த குரலில் அழைத்தவள்,

“இந்த இடத்திற்கு நான் பலமுறை வந்திருக்கேன்!” என ஒப்புக்கொண்டவள்,

“சரண் என்னை எங்கேயும் தனியாகவே அனுப்பமாட்டான். உங்களோட போயிட்டு வரேன்னு சொன்னதுனால தான், இந்த ரெண்டு வாரம் ஊர் சுற்ற அனுமதி கொடுத்தான்….தெரிஞ்சா மாதிரி காட்டிக்கிட்டா, நீங்களும் வர மாட்டீங்களோன்னு தான்…” தடுமாற,

“பரவாயில்லை பல்லவி!” கசந்த குரலில் உரைத்தவந், வேறெதுவும் பேசவில்லை.

அவன் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று உணர்ந்தவள்,

“ஹான்! அப்புறம்…ஒவ்வொரு புத்தாண்டுக்கு நாளுக்கும் நான் இங்க வரதுக்கு வேறொரு சென்டிமென்ட் இருக்குத் தெரியுமா!” பேச்சை வளர்த்தாள்.

“ம்ம்…!” என்றான்.

தெரிந்துகொள்ள அவன் ஆர்வம் காட்டாத போதும், அவளே முன்வந்து உரைத்தாள்.

“நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு, அந்தப் பந்து, கடிகாரத்தின் மேல் விழும்போது, மனசுல ஏதாவது நெனச்சுப்பேன். அது அப்படியே அந்த வருஷம் நடந்துடும் தெரியுமா!” என்று செல்லம் கொஞ்சினாள்.

அவளின் வேடிக்கை பேச்சில் அவனும் சிரிக்கவே செய்தான்.

அதைக் கண்டுகொண்டவள், “நெவர் டூ லேட் குணா! இப்போக்கூட வேண்டிக்கலாம்…வாங்க!” என்று கண்களை இறுக மூடி பிரார்தித்தாள்.

நடுரோட்டில் கைக்கூப்பி, கண்மூடி நின்றிருந்தவள், தரையில் விழுந்து கும்பிடாதது ஒன்றுதான் குறை என்று அவளை இமைக்காமல் பார்த்தான்.

“என்ன வேண்டிகிட்டேன்னு கெஸ் பண்ணுங்க, பார்க்கலாம்!” என்று கண்சிமிட்டினாள்.

“தெரியாது!” என்று உதடுகளை மடக்கி இடவலமாக தலையசைத்தான் குணா.

“மதுமிதா எப்போவுமே உங்ககூட இருக்கணும்னு வேண்டிகிட்டேன்!” மென்மையாக அவன் கண்பார்த்துப் பேசினாள்.

கடந்த சில மாதங்களாக, குழந்தையை தன்னிடமிருந்து பிரிக்க நினைத்த மனிதர்களுக்கு மத்தியில், இப்போது அந்த வான்தேவதையே வரம் தந்தது போல மனம் நெகிழ்ந்தான்.

“தாங்க்ஸ் பல்லவி!” மனதார உரைத்தவனின் கண்ணோரம் மழைச்சாரல்.

அவள் செய்கைகள் விநோதமாக இருந்தாலும், இப்போது அவனுக்கும் அதில் நம்பிக்கை வந்துவிட்டது.

அந்தரத்தில் ஜொலிக்கும் வெண்பந்து இருக்கும் திசையில், கண்மூடி வேண்டியவன்,

“உங்களுக்குப் பிடிச்சா மாதிரி ஒருத்தர கல்யாணம் செய்துகிட்டு, சீக்கிரமே நியூயோர்க்கு நிரந்தரமா வந்துடுங்க.” இதழோர புன்னகையுடன் வாழ்த்தினான்.

அவளும் அழகாக அசடு வழிந்தாள்.

ஒருவருக்கு ஒருவர் பிரார்த்தனை செய்துகொண்டதை கண்டு நெகிழ்ந்த வான்தேவதைகள் ததாஸ்து சொல்லி வாழ்த்தவே செய்தது.

ஆனால் பிரார்த்தனை செய்து கொண்டவரே, அந்த வேண்டுதலை அவர்களுக்காகத் தாமே நிறைவேற்றிவைப்பார் என்ற விதியின் விளையாட்டை யார் இவர்களிடம் சொல்வார்கள்….

யமுனாவின் நினைவலைகள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்க – இவன்

யதார்த்தத்தை தலைநிமிர்ந்து சொல்ல அஞ்சுவது ஏனோ?

யாரும் வேண்டாமென்று தனிமையில் தவிப்பவன் மனதில்-இவள்

யாகம் செய்து புகுவாளோ; யாதுமாகி போவோளோ – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…