பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 11

விமான நிலையத்திலிருந்து புறப்படும் போதே குணா, அஷ்வினிடம் தனிமையில் பேசவேண்டும் என்று முடிவு செய்துவிட்டான்.

ஒரு வாரமாகப் பூட்டியிருக்கும் வீட்டில் படர்ந்திருக்கும் தூசும் தும்பும் மதுமிதாவிற்கு ஆகாது என்று கட்டுக்கதைக் கட்டி அம்மாவையும், குழந்தையையும் அஷ்வின் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, நண்பனை மட்டும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

நந்தினியிடம் இந்தக் காரணமெல்லாம் செல்லுபடியாகாது என்று அறிந்த நண்பர்கள், அவர்களை வாசலோடு இறக்கிவிட்டுப் புறப்பட்டனர். இன்று தப்பித்தாலும், நாளை அவள் முகத்தில் தானே முழிக்க வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்த அஷ்வின், மனைவிக்குக் கைபேசியில் சமாதான தூது தட்டிக் கொண்டிருந்தான்.

“தப்பு செஞ்சிட்டேன் டா! நான் பெரிய தப்பு செஞ்சிட்டேன்!”  எப்போது அஷ்வினிடம் மனம்விட்டுப் பேசலாம் என்று காத்திருந்தவன் வீட்டிற்குள் நுழைந்த மறுகணமே புலம்பத் தொடங்கினான்.

“நீ தப்பு செய்யலேன்னாதான் டா ஆச்சரியம்!” அலட்டலே இல்லாமல் உரைத்தவன், நேரடியாக விஷயத்தைக் கூறும்படி சொன்னான்.

 “இன்னைக்கு விமான நிலையத்தில் பல்லவின்னு, அம்மா அறிமுகம் செய்தாங்களே…அந்தப் பெண்ணை எனக்கு ஏற்கனவே தெரியும்…” என்றவன், சென்னையில் அவளைப் பார்த்தது முதல், விமானத்தில் பேசியது வரை அனைத்தையும் கொட்டித்தீர்த்தான்.

இவன் உண்மையிலேயே சிந்தித்துத் தான் செயல்படுகிறானா என்று தோன்றியது அஷ்வினுக்கு.

“ஒருமுறை கூட ஊருக்குப் போயிட்டு அமைதியாவே திரும்ப மாட்டியா டா! மூணு வருஷமா புதுசு புதுசா வம்ப இழுத்துட்டு வர!” குணாவின் அவசரபுத்தியைச் சுட்டிக்காட்டவே செய்தான் அஷ்வின்.

“அம்மா மதுமிதாவை ஊருக்கு அழைச்சிட்டு போயிடுவேன்னு தீர்மானமா சொன்னாங்க டா…” சாவித்ரியின் நிபந்தனைகளை விளக்கி, அதில் குழம்பியதாக வருந்தினான்.

அதுவுமே அஷ்வினுக்குப் பழகிப்போன ஒன்றுதான். மதுமிதா விஷயத்தில், குணா தேவைக்கு மீறி பயப்படுவதும், உணர்ச்சிவசப்படுவதும் பல சந்தர்ப்பங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறான்.

“அம்மா சொன்னா என்னடா குணா; நாளைக்கே வா மதுமிதாவை ஊருக்கு அழைச்சிட்டு போயிடுவாங்க. அமெரிக்காவுலேந்து அவங்களால, உன் உதவி இல்லாமல் குழந்தையை எப்படி அழைச்சிட்டுப் போகமுடியும்?” நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கச் சொல்லி அறிவுறுத்தினான்.

“யோசிக்காம செஞ்சிட்டேன் டா!” தலைகுனிந்தவன், முகத்துக்கு நேரே சவால் விட்ட பல்லவியின் திட்டம் அறியாது தவித்தான்.

அச்சமயம் குணாவின் கைபேசி ஒலித்தது.

புதிய எண் என்பதால் அழைப்பைத் துண்டித்தான்.

அதைத் தொடர்ந்து வந்த குரலஞ்சலை(VoiceMail) கேட்ட நண்பர்களின் முகம் வெளிறிப்போனது.

“மிஸ்டர் குணா! போன் வந்தா எடுத்துப் பேசமாட்டீங்களா. பத்து நிமிடத்தில் மறுபடியும் போன் செய்வேன். எடுத்துப் பேசலேன்னா, நாளைக்குக் கல்லூரியில் நேரில் சந்தித்துப் பேச வேண்டியதாக இருக்கும்!” மிரட்டியிருந்தாள் பல்லவி.

எல்லாம் கைமீறி போய்விட்டது என்று நண்பர்கள் அமைதி காக்க, அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தது, மீண்டும் ஒலித்த அழைப்புமணி.

அஷ்வின் அழைப்பை ஏற்கச் சொல்லி நண்பனுக்குக் கண்ஜாடை காட்டினான்.

பயத்தில் உதறிய விரல்களுக்கு இடுக்கே அகப்பட்ட கைபேசி அவ்வசைவுக்கு நடனமாட, ஹெலோ சொன்னவனின் குரலிலும் நடுக்கம் தாண்டவமாடியது.

“என்ன உதவி வேணும்னாலும் கேளுன்னு சொல்லிட்டு, அழைப்பை ஏற்காமல் இருந்தால் என்ன அர்த்தம் மிஸ்டர்.குணா!” அதே அதிகாரத் தோரணை.

“அது…அது…புது நம்பர்…யாருன்னு தெரியல!” குணா தடுமாற,

“அது சரி! தெரியாத நம்பர் வந்தா எடுத்துப் பேச மாட்டீங்க. ஆனால் பெயர்கூடச் சரியா தெரியாத பொண்ணுக்கு ப்ரபோஸ் மட்டும் பண்ணுவீங்க…ரொம்ப ஒழுக்கமானவர் தான் நீங்க!” கேலி செய்தவள் இதழோரம் ஒரு நமுட்டு சிரிப்பு.

பாவம்! அவனுக்குத் தான் அதைப் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.

“ப்ளீஸ் பல்லவி! மன்னிச்சிருங்க! நான் ஏதோ தெரியாம பேசிட்டேன்!” காலில் விழாத குறையாகக் குணா கெஞ்ச, அதை இன்னும் அதிகமாக ரசிக்கவே செய்தாள் பெண்.

டூ லேட் டு ரிக்ரெட் மிஸ்டர்.குணா.” வெளிப்பட்ட சிரிப்பை அடக்கி, தீவிரக்குரலில் பதிலளித்தவள், சனிக்கிழமை மாலை குடும்பத்துடன் ஒரு இடத்திற்கு நேரில் வரும்படி ஆணையிட்டு விலாசம் ஒன்றையும் படபடவென்று ஒப்பித்தாள்.

“பல்லவி ப்ளீஸ், நான் சொல்றத கேளுங்க!” விடாமல் கெஞ்சினான் குணா.

“நான் சொல்றத நீங்க கேளுங்க குணா!” இன்னும் அழுத்தமாகச் சொல்லி மறுத்தாள்.

வேறுவழியில்லை என்று உணர்ந்தவன், “சரி! நான் மட்டும் வரேன். அம்மா வேண்டாமே ப்ளீஸ்!” மன்றாடினான்.

“உங்க அம்மாகிட்ட தான் முக்கியமா பேசணும் குணா! பெயருக்கு ஏற்றா மாதிரியே மகனை நற்குணத்தின் சின்னமாக வளர்த்த உங்க அம்மாவை நேரில் சந்திச்சு பாராட்ட வேண்டாமா, மி…ஸ்…ட…ர்…கு…ணா!” நக்கல் செய்தவள் அவன் வராத பட்சத்தில் கல்லூரிக்கு வந்துவிடுவேன் என்று நாசுக்காக எச்சரித்து அழைப்பைத் துண்டித்தாள்.

தன் சூழ்நிலையை ஒளிவு மறைவின்றி சொல்ல நினைத்தவன், அவளைத் தொடர்புகொள்ள முயன்றான். அவன் துரதிர்ஷ்டவசம், அவள் அழைத்தது ஒரு டோல் ஃப்ரி நம்பரிலிருந்து.

“இப்படி அவகிட்ட கெஞ்சறதுக்குப் பதிலா, அம்மாகிட்ட உண்மையை சொல்லிடு குணா; அவங்க உன்ன புரிஞ்சுப்பாங்க!” அஷ்வின் யோசனை சொன்னான்.

திருமணம் செய்துகொள்ளும் நல்லெண்ணத்திலேயே இருந்தாலும், ஒரு பெண்ணிடம் இங்கிதம் இல்லாமல் பேசியதை அம்மாவிடம் சொல்வது முடியாத காரியம் என்று மறுத்தான். நடப்பது நடக்கட்டும் என்று பெருமூச்சுவிட்டவன், அவளைச் சந்திக்கத் துணிந்தான்.

சனிக்கிழமை அன்று அஷ்வினையும் விடாப்பிடியாக வற்புறுத்தி அழைத்துச் சென்றான். ஆருயிர் நண்பன் அருகில் இருந்தால் பக்கபலமாக இருக்கும் என்று குணா நினைக்க, அஷ்வின் மனதிலோ இருவரும் சிட்டாகச் சிறைச்சாலைக்குப் பறக்கப்போவதாகத் தோன்றியது.

நீயூயோர்க் நகரத்தின் விலைவாசிக்கு, வாடகை வீட்டில் வசிப்பதே சவால் என்றால், பல்லவி சொன்ன விலாசத்தில் இருந்த அந்த தனி வீடு ஆடம்பரத்தின் மொத்த உருவமாக இருந்தது.

“சொத்து மதிப்பு எல்லாம் அளந்துதான் ப்ரபோஸ் செஞ்சியா டா!” நண்பன் காதில் கிசுகிசுத்தான் அஷ்வின்.

குணா அவனை ஆழமாகப் பார்த்து முறைக்க,

“மன்னிச்சிரு நண்பா! இந்த விஷயத்தில் உன்னை நம்ப முடியாது டா!” மேலும் கிண்டல் செய்து கடுப்பேத்தினான்.

அச்சமயம் வாசற்கதவைத் திறந்த பல்லவி, மலர்ந்த முகத்துடன் சாவித்ரியை மட்டும் அன்பாக அழைத்து, மதுமிதாவைத் தூக்கிக்கொண்டாள்.

மதுமிதாவும் அவள் அன்பில் உருகி இளிக்க, குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவள், திருதிருவென்று முழிக்கும் நண்பர்களைப் பார்த்து ஏளனமாக சிரித்து நகர்ந்தாள்.

குணா விமானத்தில் பேசியது எதுவும் பல்லவிக்குப் பிடிக்கவில்லை தான். ஆனால் அவன் மதுமிதா மீது கொண்ட பாசத்தைக் கண்டதும் பேதையின் மனம் இளகியது.

தொடக்கத்திலிருந்து அவன் தன்னை ஒரு விவாகரத்தான பெண்ணாகப் பாவித்துப் பேசியதில், அவன் மனநிலை உணர்ந்தாள். அதுவும் தான் மணமாகதவள் என்று அறிந்த அடுத்த நொடி, அவன் முகத்தில் பரவிய குற்றவுணர்ச்சியும் கவனிக்கவே செய்தாள்.

தான் விடுத்த மிரட்டலில் ஆடிப்போனவனுடன் இன்னும் கொஞ்சம் விளையாட விழைந்தது அவள் குறும்புள்ளம்.

வீட்டிற்கு வந்தவர்களை அனைவரும் அன்புடன் அழைத்து உபசரித்தார்கள்.

“உண்மையை சொல்லுடா குணா. இரண்டு நாள் இடைவெளியில், பல்லவிய சந்திச்சு கல்யாணத்துக்குச் சம்மதிக்க வெச்சுட்டியா!”

நடப்பதை எல்லாம் பார்த்தால், அவள் தண்டிக்க அழைத்ததுப் போல இல்லை என்று நண்பனை வம்பிழுத்தான் அஷ்வின்.

நேரம் காலம் அறியாமல் கிண்டல் செய்கிறானே என்று நண்பனை கூர்மையாகப் பார்த்தான் குணா.

நலன்விசாரிப்பில் தொடங்கிய பேச்சு, அப்படியே குடும்பம், படிப்பு, பணி என்று நீண்டுகொண்டேப் போனது.

சரணும், மஞ்சரியும் தன்னைப்போலவே மருத்துவர்கள் என்று அறிந்த அஷ்வின், அவர்களுடன் மருத்துவத்துறை சார்ந்த விஷயங்களை அளவளாவினான்.

பல்லவி பிறந்தவுடனே அவளின் அன்னை இறந்துவிட்டதாக நீலாவதி குறிப்பிட்டதும், சாவித்ரிக்கு யமுனாவின் நினைவு வந்து வாட்டியெடுத்தது. கள்ளம் கபடமில்லா மதுமிதாவின் முகத்தை ஏக்கமாகப் பார்த்து மீண்டது அவள் விழிகள்.

சரணும், மஞ்சரியும் வேலை, மேற்படிப்பு சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், குழந்தையை வளர்க்கும் பொறுப்பு, பல்லவி தலையில் விழுந்தது என்று புலம்பத் தொடங்கினாள் நீலாவதி.

பல்லவி வழக்கம் போல கண்களை உருட்ட, அதற்குப் பிறகு நீலாவதி புலம்பவில்லை என்றாலும் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.

பாசமலர் அண்ணன் தங்கை கதையில் தொடங்கியவள், பல்லவிக்கும் மஞ்சரிக்கும் உள்ள பரஸ்பர புரிதல் வரை பெருமிதத்தோடு விளக்கினாள்.

அமைதியாக தலையாட்டி கொண்டிருந்த சாவித்ரிக்கு புரிந்ததோ இல்லையோ, குணாவிற்குப் பல்லவியை பற்றி நன்கு புரிந்தது. வீட்டின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த இவள் பேச்சுக்கு மறுப்பேச்சே இல்லை என்று உணர்ந்தான்.

அவளுடன் தனியாகப் பேச இரண்டு நிமிடம் கிடைத்தாலும் போதும், நிலமையை சமாளித்துவிடலாம் என்று நம்பியவனின் விழிகள் அவ்வப்போது பல்லவி இருக்கும் திசையில் வலம் வர, அவளோ அமைதியாகப் பதார்த்தங்களை உணவுமேஜையில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அவன் மேல் ஏற்கனவே நல்லபிப்பிராயம் வந்துவிட்டது என்று யார் அவனிடம் சொல்வது…

மதுமிதா, விஷ்ணு காட்டும் கார் பொம்மைகளுடன் விளையாட மறுத்துத் தலையைத் திருப்பிக்கொள்ள,

“உனக்கு பார்பி டால்(Barbie_Doll) தான் பிடிக்குமா மதுகுட்டி!” குழந்தையிடம் கொஞ்சிப்பேசிய மஞ்சரி,

“என்கிட்ட பெண் குழந்தைகள் விளையாடுறா மாதிரி பொம்மை எதுவும் இல்லை குணா!” என்றாள்.

மதுமிதா அருகில் வந்து அமர்ந்தவன், “அவளுக்குப் புதிர் சார்ந்த விளையாட்டுகள் மட்டும்தான் பிடிக்கும்!” என்றதும்,

அதுவும் தன்னிடம் கைவசமில்லை என்று கூறினாள் மஞ்சரி.

“சீட்டுக்கட்டு இருந்தால் கொடுங்க!” என்றான் குணா.

ஆம் என்று தலையசைத்தவள் உடனே கொண்டுவந்தாள்.

ஒரே மாதிரியான எண்களை எடுத்து, அதில் பத்து ஜோடிகளை சேகரித்தான். எண்கள் இருக்கும் பக்கத்தை உள்புறம் திருப்பி, இங்கும் அங்குமாக தரையில் பரப்பி ஒரு மெமரி கேம்(Memory_Game) உருவாக்கினான்.

“மதுகுட்டி! அப்பாவுக்கு மாட்சிங்க் கார்ட்ஸ்(Matching_Cards) எடுத்துக்கொடு பார்க்கலாம்!”

அவன் சொன்னது தான் தாமதம்.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அனைத்தையும் ஜோடி சேர்த்துவிட்டாள். அனைவரும் அவளைப் பார்த்துப் பிரமித்தனர்.

“மதுமிதா அப்படியே  அவளுடைய அப்பா மாதிரி! கணக்குச் சார்ந்த விளையாட்டு எல்லாம் துல்லியமா விளையாடுவா. புத்திசாலி குழந்தை!” பெருமையடித்துக் கொண்ட சாவித்ரி,

“ஆனால் அவளுக்கு ஏதோ மூளை சம்பந்தமான பிரச்சனை இருக்குன்னு  சொல்றாங்க!” வருந்தவும் செய்தாள்.

“மனஇறுக்கம்!” குணா தெளிவுப்படுத்தினான்.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையே இல்லை ஆன்ட்டி; எங்க விஷ்ணு கூட ஏ.டி.ஹெச்.டி(A.D.H.D) குழந்தை” மஞ்சரி சொல்ல,

அதே சமயம் குணா விஷ்ணுவிற்கு மெமரி கேம் விளையாட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

விஷ்ணு குறும்பாக அட்டைகளை வீசி எறிய, அவன் செயலைச் சுட்டிக்காட்டி விஷ்ணுவின் பிரச்சனையை விளக்கினாள் மஞ்சரி.

“இப்படித்தான் ஆன்ட்டி! எதையும் பொறுமையா விளையாட மாட்டான்; ரெண்டு நிமிஷத்துக்கு மேல எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டான்.” அறிகுறிகளை அடுக்கினாள்.

“இதெல்லாம் குழந்தைகளுக்கே உண்டான இயல்பான குணம் மா!” எடுத்துச்சொன்னாள் சாவித்ரி.

“சரியா சொன்னீங்க சாவித்ரி!” ஒத்தூதிய நீலாவதி,

இன்றைய தலைமுறையினர், குழந்தைகளின் இயல்பான சுட்டித்தனத்தைக் குறைகூறி, அதற்கு மருத்துவரீதியாகப்  புதிது புதிதாகப் பெயர்சூட்டி மிகைப்படுத்துகிறார்கள் என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.

இதற்கிடையில் குணா, விஷ்ணு முன் அவனுக்குப் பிடித்தமான கார்களை வரிசைப்படுத்தி, வண்ணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தக் கற்றுக்கொடுத்தான்.

விஷ்ணுவும் ஆர்வத்துடன் விளையாட, குழந்தையை கண்கொட்டாமல் பார்த்து வியந்தவர்களுக்கு மத்தியில் பல்லவி மட்டும் குணாவின் குணாதிசயத்தை அளந்தவள்,

“அப்படியில்ல ஆன்ட்டி! இதெல்லாம் நம்ம உட்கொள்ளும் உணவில் கலந்திருக்கும் இரசாயனங்களாலும், பெண்களுக்குப் பிரசவகாலத்தில் வரும் மனவுளைச்சல்களாலும், சில சமயம் மரபியல் சார்ந்தப் பிரச்சனைகளாலும் ஏற்படும் குறைபாடு!”  என்று எளிமையான நடையில் விளக்கினாள்.

அன்றும் இதைப்போலத்தான் மதுமிதாவிற்காகப் பேசினாள் என்று நினைவுகூர்ந்த சாவித்ரி, அவளும் மருத்தவரா என்று வினவினாள்.

“அய்யோ ஆன்ட்டி! ஏற்கனவே வீட்டுல ரெண்டு டாக்டர் இருக்கறது போதாதா!” என்று இருபுறத்திலும் அண்ணன் அண்ணி தோளினை வளைத்து ஊஞ்சலாடியவள், “இதெல்லாம், இவங்கப் பேசிக் கேட்டு வளர்த்துக்கிட்ட கேள்வி ஞானம்” என்று சொல்லிச் சிரித்தாள்.

‘புத்திசாலி பெண்தான்’ குணா மனதில் அசைப்போட,

“நான் சட்டம் படிச்சிருக்கேன் ஆன்ட்டி; சமீபத்தில்தான் சென்னையில் ஒரு பிரபலமான வழக்கறிஞர் கிட்ட ஜூனியரா சேர்ந்திருக்கேன்!” என்றாள் பல்லவி.

‘வக்கீலா!’ அதிர்ந்தான் குணா.

அவன் பயத்தை சொல்லாமலேயே உணர்ந்த அஷ்வினின் கண்கள், நண்பனை கவலையுடன் நோக்கியது.

அனைவரிடமும் சகஜமாகப் சிரித்துப் பேசும் பெண் தன்னிடம் எப்போது சீறிப்பாயப் போகிறாளோ என்று மனதளவில் பயந்தான்.

“ரொம்பப் புத்திசாலி பொண்ணுமா நீ!” சகலமும் அறிந்திருக்கிறாள் என்று சாவித்ரி பறைசாற்ற,

“புத்திசாலித்தனம் இருந்து என்ன பிரயஜோனம்! அவளுக்கு ஜாதகத்தில் பெரிய கண்டம்! அவளுடைய முதல் திருமண வாழ்க்கை கண்டிப்பா விவாகரத்துல தான் முடியும்னு ஜோசியர் சொல்லிட்டாரு. பரிகாரம் செய்யச் சொன்னாலும் கேட்க மாட்டேன்றா.” நீலாவதி புலம்ப,

“பாட்டி! அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை!” கண்டித்தாள் பல்லவி.

“ஜோசியம், பரிகாரம் எல்லாம் அலட்சியம் செய்யக்கூடாது பல்லவி.” மென்மையாக அறிவுறுத்தியச் சாவித்ரி, மகனை பரிதாபமாகப் பார்த்தாள்.

“ஜாதகம் பொருந்தலேன்னு தெரிஞ்சும், இவனும் என்னோட அண்ணன் பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி கல்யாணம் செய்துகிட்டாங்க; பரிகாரத்தையாவது செய்யுங்கன்னு சொன்னோம்; அதுவும் செய்யாம…இதோ… அவளைக் கொரோனாவுக்குப் பலிகொடுத்துட்டு, தாயில்லா குழந்தையோடத் தனியா கஷ்டப்படறான்!” தன் பங்குக்கு புலம்பியவள்,

“மதுமிதாவுக்கு ஆகவாது இன்னொரு கல்யாணம் செய்துக்கணும்னு சொல்லிருக்கேன்”, சாவித்ரி தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.

இதைப்பற்றி பேசியாதால் தானே, பிரச்சனை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்று கோபாவேசம் கொண்டவன்,

“அம்மா! எனக்கும் மதுமிதாவுக்கும் நடுவில் யாரும் வர வேண்டாம்னு எத்தனை முறை சொல்றது!” கர்ஜித்து வாசலை நோக்கி நடந்தான்.

எதற்காக வந்தோம்; எங்கு இருக்கிறோம் என்பதையே உணராமல் நண்பன் தன்னிலை மறக்கிறானே என்று நொந்த அஷ்வின்,

“குணா நில்லுடா!” என்று அழைத்தப்படி அவனை பின்தொடர்ந்தான்.

அம்மாவின் கட்டாயத்தால்தான், குணா தன்னிடம் அப்படிப் பேசியிருப்பான் என்று தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்டாள் பல்லவி.

“எல்லாம் உன்னாலதான் பாட்டி! புலம்பாதன்னு சொன்னா கேக்குறியா!” கழுத்தை நொடித்தவள், அவர்களை அழைத்து வருகிறேன் என்று நண்பர்களை பின்தொடர்ந்தாள்.

“மிஸ்டர்.குணா! இதுதான் சாக்குன்னு தப்பிக்கப் பாக்குறீங்களா!” ஆளுமை அவள் குரலில் எதிரொலித்தது.

குணா நல்லவன் என்று தெரிந்தப் பின்னும், ஏனோ அவனை சீண்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று பித்தம் கொண்டது பேதை மனது.

ஒதுங்கியும் போகாமல், முகத்துக்கு நேரே சண்டையும் போடாமல் பொறுமையை சோதிக்கிறாளே என்று எரிச்சல் கொண்டவன் அவள் ஆட்டதிற்கு முடிவுகட்ட நினைத்தான்.

அவள் பக்கம் வேகமாகத் திரும்பியவன்,

“இங்க பாருங்க பல்லவி! இன்னொரு கல்யாணம் செய்துக்கலேன்னா அம்மா மதிமிதாவை ஊருக்கு அழைச்சிட்டு போயிடுவேன்னு பயமுறுத்தினதால தான் உங்ககிட்ட அப்படிப் பேசிட்டேன்… அதுவும் நீங்க விவாகரத்தான பெண் நெனச்சுதான்!” அன்று அவனிருந்த மனநிலையை விளக்க,

அவளோ கைகளைக் குறுக்கே கட்டியபடி, சிலையாக நின்றாள்.

எதற்கெடுத்தாலும் முறைக்கிறாளே என்று குணாவிற்குக் கோபம் தலைக்கேறியது தான் மிச்சம்.

“மன்னிப்பு கேட்டும் முறைச்சா என்ன அர்த்தம்?” குரலை உயர்த்தியவன்,

“நீங்க விவாகரத்தான பெண்ணான்னு கேட்டப்பவே, இல்லன்னு வாய்திறந்து சொல்லிருந்தா, நான் இவ்வளவு தூரம் உங்ககிட்ட பேசிருக்கவே மாட்டேன்!” தவறு அவளுடையதும் என்று சுட்டிக்காட்டினான்.

அப்போதும் அவள் அசரவில்லை.

அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று பூச்சாண்டி காட்டும் இவளிடம் இனி என்ன பேசுவதென்று வெறுத்துப்போய் நகர்ந்தான்.

“மதுமிதாவைப் பிரியக்கூடாதூன்னு நெனச்சுதான் எனக்கு ப்ரபோஸ் பண்ணதா சொன்னீங்க; இப்போ அவளையே மறந்துட்டு கிளம்புறீங்களே! இதுதான் உங்க தந்தை பாசமா?” பல்லவி நறுக்கென்று கேட்க,

அப்போதுதான் குணாவிற்கு தான் இருக்கும் இடம், செய்யும் முட்டாள்தனம் எல்லாம் உரைத்தது.

இவளிடம் பேச்சுகேட்பதே தனக்கு வாடிக்கையாகிப் போய்விட்டது என்று அவன் மனதிற்குள் புழுங்க,

தான் சொல்ல நினைத்ததை பல்லவி சொல்லிவிட்டாள் என்று பெருமூச்சுவிட்டு அமைதியாக நின்றான் அஷ்வின்.

பதில் கூறாமல், மதுமிதாவை தேடி நகர்ந்தவனை கைநீட்டி தடுத்தாள் பல்லவி.

“பயப்படாதீங்க குணா! உங்க நிலைமை எனக்குப் புரியுது. மதுமிதா மேல எவ்வளவு பாசமா இருக்கீங்கன்னு அன்னைக்கு விமான நிலையத்துலேயே புரிஞ்சுகிட்டேன். இன்னைக்கு இன்னும் அதிகமாகவே அதை உணர்ந்தேன்.” மென்மையாகப் பேசியவள்,

“எல்லாத்தையும் மறந்துட்டு, நண்பர்களாகப் பழகலாமே!” என்றவள், மீண்டும் அவன்முன் கரங்களை நீட்டினாள்;

இம்முறை அவன் கைகுலுக்குவான் என்று எதிர்பார்த்து!

மூன்று நாட்களாக தூங்கவிடாமல் வாட்டியெடுத்த பிரச்சனை சுமூகமாய் முடிந்ததை எண்ணி நெகிழ்ந்தவன், இதழோர புன்னகையுடன் பதிலுக்கு கைகுலுக்கி நன்றிகளைத் தெரிவித்தான்.

அஷ்வின் முகத்திலும் நிம்மதி பிறந்தது.

“சரி! நாங்க கிளம்பறோம்!” அம்மாவை அழைப்பதற்காக குணா வீட்டிற்குள் நகர,

“நில்லுங்க குணா! விஷ்ணுவோட அத்தை பல்லவி, மதுமிதாவோட அப்பா குணசேகரனை மன்னிச்சிட்டா! ‘மிஸ்.பல்லவி’ கிட்ட பேசின பேச்சுக்கு ‘மிஸ்டர்.குணசேகரன்’ அனுபவிக்க வேண்டிய தண்டனை நிறைய இருக்கு!” குறும்புத்தனம் மீண்டும் அவளிடம் ஒட்டிக்கொள்ள,

அவள் ஜாடைப்பேச்சு புரியாமல் நண்பர்கள் குழம்பி நின்றார்கள்.

“முதல் தண்டனை, இந்தப் பல்லவி சமைச்சு வெச்சிருக்க உணவை சாப்பிடணும்!” என்றதும்,

நண்பர்கள் பக்கென்று சிரித்தனர்.

“அப்புறம்….” குணாவும் நமுட்டு சிரிப்புடன் கேட்க,

“அடுத்த ஒரு மாதத்திற்கு, நீங்கதான் எனக்கு நியூயோர்க் சுத்திக் காட்டணும்!” அலட்டலே இல்லாமல் தன் விருப்பத்தைச் சொன்னாள்.

“அது சரி! உங்களோட ஊர் சுத்தினா, என் கல்லுரி வேலையெல்லாம் யார் பாக்குறது!” புருவங்களை மேலும் கீழுமாக அசைத்து அவன் கேட்க,

“மிஸ்டர்.குணா! மாலை நேரத்தில் தான் நியூயோர்க் சுத்திப் பார்க்க அழகா இருக்கும். ப்ரொஃபஸருக்கு மதுமிதா, கணக்குப்பாடம் தாண்டி வேறெதுவும் தெரியாதுபோல!” பதிலுக்கு வம்பிழுத்தாள் பல்லவி.

“நாங்க சுத்தாத இடமா! எங்க போகணும்னு மட்டும் சொல்லுங்க!” எதற்கும் தயார் என்றான்.

“ஓ அப்படியா! அப்போ இன்னைக்கே டைம்ஸ் ஸ்குவேர் அழைச்சிட்டுப் போங்க. விடிய விடிய சுத்திட்டு வரலாம்!” என்றவளின் முகத்தில் சிறிதும் தயக்கமில்லை.

கடிகாரத்தில் இரவு எட்டு மணியாகிவிட்டது என்று பார்த்தவன், “இதுக்கு மேலையா!” பதறினான்.

தி சிட்டி நெவெர் ஸ்லீப்ஸ் மிஸ்டர்.குணா!” நியுயோர்க் நகரத்தின் தனித்துவத்தை நினைவூட்டி கண்சிமிட்டியவள், துள்ளிகுதித்து வீட்டிற்குள் ஓடினாள்.

கைகுலுக்கி தொடங்கிய நட்பு நெடுநாள் நீடிக்குமா-இல்லை

கைகோர்த்து வாழும் திருமண பந்தத்தில் தொடருமா-இவள்

கயவனின் கனிவான பேச்சில் கரைந்துப் போவாளோ–இவன்

கன்னியின் கள்ளச் சிரிப்பில் கதிகலங்கி நிற்பானோ– தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….