பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 10

திருப்பங்கள் தரும் என்று பெரும் நம்பிக்கையுடன் தாய்நாட்டிற்குச் சென்றவன், தாயின் குறுக்கீட்டால் மட்டுமே பேராபத்திலிருந்து தப்பித்து, ஊருக்குத் திரும்பினான். சென்னையில், மார்கழி மாதத்தின் குளிரே தாக்குபிடிக்க முடியாதவள், பேத்தி மேலிருந்த அளவுகடந்த பாசத்தில், பனிக்காலத்தையும் பொருட்படுத்தாது அமெரிக்காவிற்கு வந்துவிட்டாள்.

நான்கு மாதங்கள் கடந்ததே தெரியாத அளவிற்கு மதுமிதாவுடன் அத்தனை இனிமையான நாட்களை கழித்தாள் சாவித்ரி. மதுமிதாவிற்கும் அப்படித்தான்;பாட்டி வந்த நாளிலிருந்து ‘டேகேருக்கு’ முழுக்குப் போட்டுவிட்டாள்.

அன்று வேலை நிமித்தமாக, குணா லண்டன் புறப்பட்டுக் கொண்டிருந்தான். தான் ஊருக்குத் திரும்பும்வரை அம்மாவையும் மதுமிதாவையும், அஷ்வின் வீட்டில் விட ஏற்பாடுகள் செய்தவன்,

“மதுகுட்டி! பாட்டியை படுத்தாம இருக்கணும், சரியா!” குழந்தைக்கு அறிவுறுத்த,

அவளும், “மா…மா…மாமா” என்று புதிர்பலகை ஒன்றை நீட்டினாள்.

நாற்பதெட்டுத் துண்டுகள் கொண்டிருந்த திருகு வெட்டுப் புதிரை துல்லியமாக இணைத்திருந்தாள் அவள்.

குட் ஜாப் மது!” என பாராட்டி,  குழந்தையை மடியில் அமர்த்தியவன்,

“கிரிஸ்த்மஸ்கு, அப்பா உனக்கு நூறு துண்டுகள் கொண்ட புதிர்பலகை வாங்கிட்டு வரேன்! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடலாம்!” என்று அவள் கேசத்தைக் கோதினான்.

பதிலுக்கு “மா…மா…மா” என்று இளித்துக் கைதட்டினாள் மதுமிதா.

“அவளுக்குப் பொம்மை வாங்கிட்டு வரது இருக்கட்டும்; நீ இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கற வழிய பாரு குணா!” மனதிலிருந்த ரகசியத் தீர்மானத்தை இறக்கிவைத்தாள் சாவித்ரி.

“எங்களுக்கு யாரும் வேண்டாம்னு சொன்னா உனக்குப் புரியுதா!” எரிச்சலடைந்தவன், குழந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்தான்.

“உனக்கு வேண்டாம் டா! ஆனா மதுமிதா வளர வளர, அவளுடைய தேவைகள் மாறும். எல்லா சமயத்துலையும் நீ தனியாளா அதெல்லாம் கவனிக்க முடியாது குணா!” பெண்ணின் துணை அவசியம் என்று வலியுறுத்தினாள்.

“அதுக்குத்தான் நீ இருக்கியே மா!” அலட்டலே இல்லாமல் கூறினான் குணா.

“என்னால முடிஞ்ச அளவுக்கு நான் கண்டிப்பா மதுமிதாவைப் பார்த்துப்பேன் குணா. ஆனா எனக்கும் வயசாகுது…இன்னும் எத்தனை நாளைக்கு…”

“அம்மா! அதெல்லம் நீ நூறு வயசு ஆரோக்கியமா இருப்ப!” அவள் முடிக்கும் முன் குறுக்கிட்டான் குணா.

அதைக்கேட்டு விரக்தியில் சிரித்தவள், “பிறப்பு இறப்பு நம்மளுடைய கையில் இல்லை குணா. யமுனாவோட விதியை உன்னால மாற்ற முடிஞ்சுதா சொல்லு!” அவன் வழியிலேயே மடக்கினாள்.

‘யமுனா இறந்திருந்தால் தானே!’ மனதில் நினைத்தவன், “அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! என்னால யமுனா இடத்துல வேற யாரையும் நெனச்சு கூட பார்க்க முடியாது!” திட்டவட்டமாக உரைத்தான்.

“தெரியும் குணா! நீ யமுனாவை இன்னும் மறக்கலன்னு எனக்குப் புரியுது டா!” சொன்னவளின் கண்கள் வீட்டை வலம் வந்தது.

வீட்டில் நிரம்பியிருந்த யமுனாவின் பொருட்களும், அதைக் குணா பொக்கிஷமாகப் பாதுகாத்த விதத்தில் இருந்தே மகனின் மனநிலையை  உணர்ந்தாள் சாவித்ரி. ஆனால் அவன் வாழ்க்கை முழுவதையும் இப்படியே ஓட்டுவது இயலாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவள், மகனின் கரங்களை மென்மையாக வருடி,

“நீ சுதாவோட சண்டை போடாம வந்திருந்தா கூட, நான் உன்னை இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்லி வற்புறுத்திருக்க மாட்டேன். ஏன்னா, நீ சொன்ன சித்தின்ற முறையிலாவது, சுதா நம்ம மதுமிதாவை நல்லா பார்த்துகிட்டு இருந்திருப்பா…” என்றதும்,

“நல்லா பார்த்துகிட்டு இருப்பா!” ஏளனமாகச் சிரித்தவன்,

“அவளும் அவளுக்குப் புருஷன்ற பேருல உங்க அண்ணன் கட்டி வெச்சிருக்க ஒரு தலையாட்டி பொம்மையும்…அவருக்குன்னு எங்க தான் கிடைக்கறாங்களோ தினுசு தினுசா மாப்பிள்ளைகள்…” உறவுகளைக் கொச்சைபடுத்திப் பேச,

“குணா! மரியாதையா பேசு!” கண்டித்தாள் சாவித்ரி.

“உனக்கு என்னை மட்டும்தான் மா கண்டிக்கத் தெரியும்.” இரைந்தவன்,

அன்று சுதா தன் மீது வீண் பழி சுமத்தியபோதும், மீனாட்சி குழந்தையைத் தூற்றியபோதும், சாவித்ரி மௌனம் சாதித்தது தவறு என்று இடித்துக்காட்டினான்.

அன்று அவளிருந்த மனநிலையில் அவளால், எதுவுமே பேசமுடியவில்லை தான்.

“என் மகன் தப்பு செய்ய மாட்டான்னு எனக்குத் தெரியும் குணா!” தழைந்து போனவள், “இவங்களுடைய  வாயை அடைக்கவாவது, நீ கண்டிப்பா இன்னொரு கல்யாணம் செய்துக்கணும் டா!” அதையே காரணம் காட்டி தன் எண்ணத்தை அழுத்தமாகச் சொன்னாள்.

“இவங்களுக்குப் பயந்துகிட்டு நான் கல்யாணம் செய்துக்கணுமா?” முடியவே முடியாது என்று மறுத்தான்.

“உனக்கு ரெண்டு மாசம் அவகாசம்; உனக்குப் பிடித்த பெண்ணை கல்யாணம் செய்துகிட்டாலும் சரி; இல்லை நான் சொல்ற பெண் கழுத்தில் தாலி கட்டினாலும் சரி…மதுமிதா உன்னோட இருப்பா…இல்லேன்னா நானே அவளை சுதாகிட்ட விட்டுடுவேன்.” தீர்கமாக உரைத்தவள்,

“மதுகுட்டி! வா நம்ம அஷ்வின் மாமா வீட்டுக்குக் கிளம்பலாம்.” எந்தவித அலட்டலும் இல்லாமல் குழந்தையை தூக்கிச் சென்றாள்.

அன்று வீட்டில் நடந்த பிரச்சனையில், குணா தன் மகள் மேல் வைத்திருந்த அதீத பாசத்தைக் கவனித்தாள் சாவித்ரி. அவனது பிள்ளைப்பாசம் என்ற பலவீனத்தை வைத்து, அவனுக்கு ஒரு வாழ்க்கைதுணையை அமைத்துத் தர வேண்டுமென்று அன்றே ரகசியத் தீர்மானமும் செய்துவிட்டாள்.

ஊருக்குப் புறப்படும் தருணத்தில், அம்மாவின் திடீர் நிபந்தனைக்குச் சரியாக பதில் சொல்ல முடியவில்லை குணாவால். லண்டனில் இருந்து பல முறை கைபேசியில் பேசியும், அவள் தன் முடிவில் உறுதியாக இருந்தாள். குணாவின் வசியப்பேச்சு எல்லாம், அவள் பிடிவாததிற்கு முன் செல்லாகாசானது.

வேலைகள் முடிந்து நியூயோர்க் செல்லும் விமானத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தவனின் மனதில் பல எண்ணோட்டங்கள்.

குழந்தை கிஷோர் வீட்டில் வளர்வதைப் பற்றி எண்ணும்போதே குணாவிற்கு அங்கமெல்லாம் கூசியது. குழந்தை இந்தியாவில் வளருவதைப் பற்றி யமுனா அறிந்தால், அவள் மறுநொடியே சென்னைக்கு வந்து பெரும் ரகளையே செய்துவிடுவாள் என்றும் அஞ்சினான் குணா.

மதுமிதா தன்னுடன் இருப்பது தான் அவளுக்குப் பாதுகாப்பு என்றும், அவள் தன்னுடன் அமெரிக்காவில் இருக்கும் வரை தான் தனக்கும் பாதுகாப்பு என்றும் உறுதியாக நம்பியவனுக்கு, அதைச் செயல்படுத்தும் வழி தான் புலப்படவில்லை.

யோசித்து யோசித்து சலித்துப் போனவனின் சிந்தனையை, முன்சீட்டில் அமர்ந்திருந்தவர்களின் செல்லச்சண்டை கலைத்தது.

“வீணாப்போனவன்! பணம், பதவின்னு ஓடுறவனுக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை எல்லாம்…கொஞ்சமாவது குடும்பத்தைப் பற்றி அக்கறை இருக்கா!” வசைப்பாடிய பாட்டியின் புலம்பல்களை சற்றும் பொருட்படுத்தவில்லை அவள்.

அவள் கவனமெல்லாம், சேட்டை செய்யும் இரண்டைரை வயது விஷ்ணு மீதுதான் இருந்தது.

குழந்தகளுக்கான இழுபெட்டியில் விஷ்ணுவை அமர்த்திப் பூட்டியவள்,

“இவன் அடம்பிடித்து அழுதாலும்,  பெல்ட் மட்டும் அவிழ்க்காதே; அப்புறம் நீதான் ஏர்போர்ட் முழுக்க இவனைத் துரத்திட்டு ஓடணும்!” எச்சரித்தவள்,

விமானத்தில் பாட்டிக்கு முன்வரிசையில் இருக்கை உள்ளதா என்று விசாரித்து வருவதாகச் சொல்லி நகர்ந்தாள்.

“அதைக் கொஞ்சம் ஆசையா சொன்னாதான் என்ன பவி மா?” நீலாவதி அசடுவழிய,

“புலம்பாதேன்னு சொன்னா கேக்குறியா?” கண்களை உருட்டினாள், பவி என்னும் பல்லவி.

“குழந்தையை உன் தலையில் கட்டிட்டு ஓடிட்டான்…அதான்…” விடாமல் புலம்ப,

“போதும் நிறுத்து!” கையசைத்வள், “இது நானா விரும்பி ஏத்துகிட்ட பொறுப்பு; எனக்கு யார் உதவியும் வேண்டாம். உனக்கு விருப்பமில்லேன்னா, இப்படியே ஊருக்குக் கிளம்பு!” திடமாக உரைத்தாள்.

“என் காலத்துக்குள்ள உன்னை ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்துட்டா…” நீலாவதி முணுமுணுக்க,

“இதே மாதிரி பேசி தான் அவனைக் கல்யாணம் செய்துக்க சொல்லி கட்டாயப்படுத்தின. அப்புறம் கொள்ளுப்பேரனைப் பார்க்கணும்னு குழந்தை பெத்துக்க சொல்லி தொல்லைப்படுத்தின…தயவு செய்து மறுபடியும் இந்த வசனம் பேசி கொடுமை படுத்தாதே பாட்டி!” கடிந்தாள் பல்லவி.

சுறுக்கென்று குத்திய பேத்தியின் பேச்சில், பாட்டி நீலாவதியின் முகம் சுருங்கியது.

அவள் வாடிய முகத்தைப் பார்க்க சகிக்காமல், “நீலுமா! நீ சென்சுரி அடிக்காம டிக்கெட் வாங்கமாட்ட!” என்று பாட்டியின் கன்னங்களை கிள்ளி கண்சிமிட்டினாள் பல்லவி.

நீலாவதியும் கவலைகள் மறந்து சிரித்தாள்.

பல்லவி நகர்ந்த மறுகணமே, விஷ்ணு சாப்பிடுவதற்குச் சிறுதீனி ஒன்று கேட்டு அடம்பிடிக்க, அதைத் திறக்கத் தெரியாமல் திண்டாடியவள், பின் இருக்கையில் குணாவை கவனித்தாள்.

அவனோ, பல்லவியின் பேச்சில், தன்னையே பார்த்ததுப் போல நெகிழ்ந்து, சிந்தனையில் கலந்திருந்தான்.

“ஹெலொ…பாய்…திஸ்…ஓபென்!” தனக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளைக் கோர்த்துப் பேசி, குணா முகமருகே பொட்டலத்தை நீட்டினாள் நீலாவதி.

மதுமிதாவிற்கு அவற்றைக் கொடுத்துப் பழகியவன், அசால்டாக திறந்தான்.

புருவம் உயரத்தி பார்த்தவள், “தாங்க் யூ” என்றாள்.

“இருக்கட்டும் பாட்டி!” குணா தமிழில் பதில் சொல்ல, அவள் புருவங்கள் இன்னும் அதிகமாக வளைந்தது.

“உனக்குத் தமிழ் புரியுமா?” பூரிப்புடன் விசாரித்தவள், குழந்தையிடம் உணவை கொடுத்துவிட்டு, குணாவுடன் சொந்த ஊர், வீடு என்று சகஜமாகப் பேச்சுக்கொடுத்தாள்.

சென்னையில் இருவரின் வீடும் அருகருகே இருப்பதை அறிந்தவனுக்கு, பல்லவியை அன்றுப் பள்ளிக்கூட வாசலில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அதை அவன் வாய்விட்டு சொல்ல வந்த நேரம், அவர்களை நோக்கி வேகநடையிட்டாள் பல்லவி.

இன்றும் இடத்திற்கு ஏற்ப உடை அணிந்திருந்தாள். ஜீன்ஸ், டீஷ்ர்ட் அணிந்தவளின் தலைக்கு மேலிருந்த கூளிங்க் க்ளாஸ் மட்டும் அதே என்று கவனித்தவனின் இதழ்கள் புன்னகையில் வளைந்தன.

அறிமுகம் செய்துகொள்ளும் நல்லெண்ணத்தில் கைக்குலுக்க முன்வந்தான் குணா.

பார்ப்பவர்களிடம் எல்லாம், வீட்டுக் கதை அனைத்தையும் ஒப்பிக்கும் பாட்டியின் சுபாவம் அறிந்தவளோ, குணாவை பார்வையால் சுட்டெரித்தாள்.

அதைக் கவனிக்காத நீலாவதி, “பவி மா! இவர் குணா! எனக்கு மூட்டு வலின்னு சொன்னேன்; தம்பி, விமானத்துல அவரோட முன்சீட்ட எனக்கு கொடுக்கறதா சொன்னாரு!” படபடவென்று பேசினாள்.

“அவசியமில்ல! நீ நடுவுல உட்கார்ந்து அவஸ்தைப்படு! அப்போதான் உன் வாய்க்கு கொஞ்சம் ஓய்வு தருவ!” சிடுசிடுத்தவள், பாட்டியைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

குணாவின் மூளை பலவற்றை கணக்குப் போட தொடங்கியது.  தன்னைப் போலவே அவளும் தனியாக குழந்தையை வளர்க்க மெனக்கெடுவதால், இருவரும் திருமணம் செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது அவனுக்கு.

மதுமிதாவிற்காக அன்று அவள் பள்ளியில் பரிந்து பேசிய ஒன்றே அவள் மேல் உயர்ந்த எண்ணத்தை ஏற்படுத்தியது.

அவளுக்குத் திருமண பந்தத்தில் விருப்பமில்லை என்றாலும், மதுமிதா தன்னுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை எடுத்துச் சொன்னால், மனமிறங்கி தனக்கு உதவி செய்வாள் என்று ஏதோ ஒரு நம்பிக்கை அவன் மனதில் மலர்ந்தது.

சிறிது நேரத்தில் பயணிகள் விமானத்தில் ஏற, குணா அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான். பல்லவி, பாட்டியை அவளருகிலேயே கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

இவள் தான் தன் பிரச்சனைக்குத் தீர்வு காண வந்தவள் என்றால், அவளுடன் பேச இறைவன் வழிகாட்டுவார் என்று நம்பியவன், அமைதியாகக் கண்ணைளை மூடிக்கொண்டு இளைப்பாறினான்.

“குணா! குணா! போய் என் சீட்டுல உட்காரு!” படபடவென்று பேசி அவனைத் தட்டி எழுப்பினாள் நீலாவதி.

“பாட்டி!”குணா திருதிருவென்று முழிக்க,

“ஃபலைட் புறப்படற நேரம்…என் பேத்தியால இப்போ எழுந்து வர முடியாது! எனக்கு இங்க உட்கார்ந்தா தான் வசதியா இருக்கும்!” என்று அவனை விரட்டினாள்.

நீலாவதியின் புத்திசாதூரியத்தை எண்ணி அவளை மலைப்பாகப் பார்த்தான்.

ஆனால் நீலாவதி அவனை விரட்டுவதிலேயே கவனமாக இருந்தாள்.

அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாக பல்லவி அருகில் வந்து அமர்ந்தவனுக்கு, இறைவன் தன் பிரச்சனைக்கு வழிகாட்டுவது போல இருந்தது.

பல்லவி முகம் பார்த்து குணா மென்மையாக சிரிக்க, அவள் முகத்தில் அதே கடுகடுப்பு.

சிறிது நேரம் அவளை அமைதியாக கவனித்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று குழந்தைக்குக் கதைச் சொல்லி விளையாடி கொண்டிருந்தாள்.

சிறுவன் தூங்கியதும் மெல்லமாக பேச்சு கொடுத்தான் குணா.

“பவித்ரா! ஆர் யூ அ டிவோர்சீ!” அவள் திருமண பந்தத்தைப் பற்றி உறுதி செய்ய முயற்சித்தான்.

எதைக் கேட்டாலும் கண்களை உருட்டி முறைக்கும் அவள் சுபாவம் பழகிப்போனவன் அவள் அனல்பார்வையை லட்சியம் செய்யவில்லை.

“தப்பா நினைக்காதீங்க! நீங்களும் பாட்டியும் பேசியதைக் கேட்டேன்….” குணா வெளிப்படையாகக் கூற,

“மிஸ்டர்! ஒட்டுக்கேட்டதும் இல்லாம, இவ்வளவு அநாகரீகமா கேட்குறீங்களே! டோன்ட் யூ ஹேவ் எனி மேனர்ஸ்!” எகிறினாள் அவள்.

உண்மை இருக்கும் இடத்தில் தான் கோபம் அதிகமாக இருக்கும் என்று நம்பியவன், நேரம் பார்த்துப் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியானான். அடுத்த ஐந்து மணி நேரம் மௌனத்தில் நகர்ந்தது.

ஆனால் அவன் கண்கள் மட்டும் அவளிருக்கும் திசையிலிருந்து திரும்ப மறுத்தது.

பெரும்பாலான நேரம் விஷ்ணு அவள் மடியிலேயே உட்கார, அந்தக் குறுகிய இடத்தில் இருந்தவளுக்கு கால்கள் மறத்துப்போனது. விஷ்ணுவின் சிணுங்கல்களால், விமானத்தில் அளித்த உணவையும் அவளால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.

பாட்டியின் உதவியை நாடலாம் என்றால், அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

பசி, அசதி என்று அனைத்தும் ஒன்றுசேர அவள் முகம் வாடியிருந்தது. அதைக் கவனித்த குணா, குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக முன்வர, அதற்கும் உறுமினாள் பல்லவி.

அப்போதும் அவனுக்குக் கோபம் வரவில்லை.

தன்னைப் போலவே, குழந்தையை முன்பின் தெரியாதவர்களிடம் விட மறுக்கும் அவள்மேல் மரியாதைதான் கூடியது.

விமானம் தரையிறங்க ஒருமணி நேரமே இருக்க, பல்லவியின் கண்கள் தூங்கும் பாட்டியையும், இடது பக்கம் இருந்த கழிவறையுமே மாறி மாறி பார்த்துத் தவித்தது.

“நம்பி குழந்தையை விட்டுட்டுப் போங்க! ஐ அம் ய ப்ரொஃபஸர் பை ப்ரொஃபெஷன்!” மென்மையாகப்  பேசினான் குணா.

அப்போதும் அவனை யோசனையாகப் பார்த்தாள் பேதை.

“நான் முன்னாடி பேசினதுக்கு வேணும்னா மன்னிப்பு கேட்குறேன்!” குணா தழைந்து போக, ஒருவழியாக அவள் முகத்தில் சின்னதொரு சிரிப்பு மலர்ந்தது.

அவன் உதவியை ஏற்றாள்.

கால் மணி நேரத்தில் இருக்கைக்கு திரும்பியவளுக்கு, குணா சாப்பாடு வாங்கி வைத்திருந்தான். பல்லவி வேண்டாமென்று மறுக்க, அவளை உண்ணும்படி வற்புறுத்தி, விஷ்ணுவோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

குழந்தையின் தேவை அறிந்து, அவனுக்கு ஈடுகொடுத்து விளையாடும் குணாவை அவளும் ரசிக்கவே செய்தாள்.

“நன்றி மிஸ்டர்…” அவள் யோசிக்க,

“குணா!” என்று அறிமுகம் செய்துகொண்டு கடிகாரத்தை பார்த்தவன், அவளிடம் பேச அதிக அவகாசம் இல்லை என்று உணர்ந்தான்.

“பவித்ரா! உங்களுக்கு ஓகே நா, நானே உங்கள கல்யாணம் செய்துக்கறேன்!” அலட்டலே இல்லாமல் சொன்னான்.

கொஞ்சம் சிரித்துப் பேசினால், வரம்பு மீறுகிறானே என்று நினைத்தவள், குழந்தையை அவனிடமிருந்து பிடுங்கிகொண்டு,

“ப்ரொஃபஸர்னு சொல்லிட்டு, முன்ன பின்ன பழகாத ஒரு பொண்ணுகிட்ட இவ்வளவு அநாகரீகமா நடந்துக்க உங்களுக்கு வெட்கமா இல்ல?” கொந்தளித்தாள் பல்லவி.

“முன்பின் தெரியாத பெண்ணா…நான் யாருன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரியப்படுவீங்க…”, இடைநிறித்தியவன்,

அவள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டால், பிறகு மதுமிதாவை பற்றி சொல்லலாம் என்று மனதை மாற்றிக்கொண்டான்.

“சென்னையில் உங்க பையனை பள்ளிக்கு அழைச்சிட்டு வரும்போது பார்த்திருக்கேன்!” மேலோட்டமாகப் பேசினான்.

“பலே பேஷ்!” ஏளனமாக சிரித்தவள், “திருமணமான பொண்ணுகிட்ட ப்ரபோஸ் செய்யறது தான் உங்க கேடுகெட்ட குணாதிசயமா மிஸ்டர் குணா!” கேவலமாக கேட்க,

அவள் விவாகரத்தான விஷயத்தை மூடி மறைக்கிறாள் என்று உறுதியாக நம்பியவனின் கண்கள் குறும்பில் மின்னியது.

“கடையில் இலவச இணைப்பு இருக்கற பொருளா தேடி தேடி வாங்கறது இல்லையா…அதே மாதிரி, குழந்தை இருக்குற பெண்ணா பார்த்து திருமணம் செஞ்சுகிட்டா வேலை மிச்சம் பாருங்க பவித்ரா!” கண்சிமிட்டியவன், உடம்பை வளைத்து சோம்பல் முறித்தான்.

இழிவாக பேசும் இவனிடம் வாதிடுவது கூட வீண் என்று தலையை திருப்பிக்கொண்டாள் பல்லவி.

பொறுப்பாக பேசியிருக்கலாமோ என்று காலம் கடந்து சிந்தித்தான் குணா.

உண்மையைச் சொல்ல, அவன் முன்வர, அதே சமயத்தில் அங்கு வந்த நீலாவதி, குணாவிற்கு நன்றி தெரிவித்தாள். சொல்பேச்சு கேட்காமல் முன்சீட்டில் சென்று அமர்ந்தவளுக்கு, பேத்தியிடம் சமாதானம் பேச, அந்தப் பத்து நிமிடங்கள் தேவைப்பட்டது.

நீலாவதியிடம் தன் தொழில் அட்டையை நீட்டியவன், “பாட்டி! உங்களுக்கு இந்த ஊரில் ஏதாவது உதவி தேவைப்பட்டா தயங்காம எனக்கு போன் செய்யுங்க!” பணிவடக்கத்துடன் பேசியவனின் விழிகள் மட்டும் பல்லவியை தழுவி இருந்தது.

மனம்மாறி தன்னைத் தொடர்புகொள்வாளோ என்ற நப்பாசை அவனுக்கு.

பாட்டி கையிலிருந்த அட்டையை வெடுக்கென்று பிடுங்கியவள், “கண்டிப்பா குணா! யூ வில் சூன் ஃபேஸ் த கான்சிகுவென்ஸெஸ்!” புன்முறுவலோடு எச்சரித்தாள் பேதை.

விமான நிலையத்தில் மற்ற சம்பிரதாயங்களை முடித்து வெளியே வந்த குணாவை வரவேற்க அஷ்வின், மதுமிதாவையும் சாவித்ரியையும் அழைத்து வந்திருந்தான். குணாவை கண்டதும் மதுமிதா அவனிடம் தாவிக்கொண்டாள்.

“ஒரு வாரமா உன்ன பார்க்காம ஏங்கி போயிட்டா டா குழந்தை. அதான் அழைச்சிட்டு வந்தேன்!” விவரித்தான் அஷ்வின்.

“அப்பாவ தேடினையா டா மதுகுட்டி!”, குழந்தையைக் கொஞ்சியபடி பல்லவியின் உருவத்தைத் தேடியவன்,

அவள் தன் இடது பக்கத்தில் மிக அருகில் நின்றுகொண்டு அவனையே இமைக்காமல் பார்க்கிறாள் என்று அறியவில்லை.

“அம்மா கிட்ட வா டா விஷ்ணு!” மஞ்சரி ஏக்கத்துடன் கைகளை நீட்ட, பல்லவியிடமிருந்து வர மறுத்தான் விஷ்ணு.

“அம்மா அப்பான்னு குழந்தைப் பக்கத்துல இருந்திருந்தா தானே ஆசையா வருவான்!” நீலாவதி புலம்ப,

“பாட்டி!!!!” கண்களை உருட்டினாள் பல்லவி.

அவர்கள் குரல் கேட்டு குணா தலைத்திருப்ப, நீலாவதியும் அவனைக் கண்டுகொண்டாள்.

தன் பேரனும், மருமகளும் என்று சரண், மஞ்சரி இருவரையும் குணாவிற்கு அறிமுகம் செய்தாள். குணா செய்த உதவிகளையும் அவர்களிடம் விவரித்தாள்.

குணா அவர்களைப் பார்த்து அசடுவழிய, அதே சமயத்தில் பல்லவியை அடையாளம் கண்ட சாவித்ரி,

“அடேய் குணா! இவங்க தான் டா, நம்ம மதுமிதாவுக்காக பேசினாங்க!” முகத்தில் பூரிப்புடன் மகனிடம் பகிர்ந்தவள்,

“நீ இந்தக் குழந்தைக்கு அத்தையா மா! இவன் உன் குழந்தைன்னு தப்பா நெனச்சிட்டேன்…உன் பேரு…” யோசிக்க,

“பல்லவி!” மென்சிரிப்புடன் பதிலளித்தாள்.

ஆனால் அவள் குரலில் இருந்த கரிசனம், குணாவை மென்று விழுங்கும் அவள் கண்களில் இல்லை.

யூ வில் சூன் ஃபேஸ் த கான்சிகுவென்ஸெஸ்!” அவள் மிரட்டியது காதில் எதிரொலிக்கத் தலைகுனிந்து நின்றான் குணா.

பந்தங்கள் முன் பதமாய் பேசி வென்றவன்-இன்று

பல்லவி முன் பல் இளித்தது ஏனோ?

உயிரோடு இருப்பவளின் ஊமை நாடாகம் உலகம் அறியவா-தன்னை

உளவு பார்க்க வந்தவளுக்கு உபாயம் செய்யவா-இல்லை

உள்ளத்து ரகசியம் உடையாமல் இருக்க உதவி கேட்கவா-விழுந்தது

காதலின் மாயாஜாலத்திலா; கர்மவினையின் மாயவலையிலா–தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…