பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 09

தள்ளாடி நடந்துவந்து, மடியில் விழுந்த குழந்தையின் கையிலிருந்து சிதறிய நிலக்கடலைகளை கண்டவுடனே, பிரச்சனை என்னவென்று உணர்ந்தான் குணா.

அவன் முகத்தில் பதற்றம் இல்லை;

“மா…மா…மாமா” முனங்கும் குழந்தையின் மேனியில் பரவும் கொப்பளங்களை கவனமாக பரிசோதித்தவன்,

“அம்மா! ஊருக்குப் போகும்போது நான் உன்கிட்ட கொடுத்த அந்த மருந்த எடுத்துட்டு வா!” சாவித்ரியிடம் கேட்க, அவள் அறைக்குள் ஓடினாள்.

அவளுக்கும் ஓரளவிற்குப் பிரச்சனை என்னவென்று புலப்பட்டது. இதைப்பற்றி முன்னமே குணா, மேலோட்டமாக சொல்லிருந்த போதிலும், குழந்தை படும் அவஸ்த்தைகளை நேரடியாகப் பார்க்கும்போது மனம் கனத்தது.

மெல்லிய மருந்து பாட்டிலை கொண்டுவந்தவள், கூடவே, ஸ்பூன், பாலாடை, தண்ணீர் என்று அனைத்தையும் சேர்த்து மகனிடம் நீட்டினாள்.

மருந்து பாட்டிலை மட்டும் வாங்கியவன், அதைத் திறந்து வேறொரு மெல்லிய கருவியை வெளியில் எடுத்தான். எழுதுகோல் போல இருந்த அக்கருவியின் நீல நிற மூடியை அகற்றி, விரல்களை மடக்கி அழுந்தப் பிடித்துக் கொண்டான்.

மதுமிதா அசையாதப் படி அவளை இறுக்கமாக அணைத்தவன், அக்கருவியை அவள் வலது தொடைப்பகுதியில் செலுத்தி, சில வினாடிகள் காத்திருந்தான்.

அவன் முரட்டுததனமாக செய்த காரியத்தில் குழந்தை அழுதிருக்க வேண்டும். ஆனால் அவள் குணாவை கட்டியணைத்து முத்தமிட்டாள்.

“என்னையே உனக்கு ஊசி போடும்படி செஞ்சிட்டையே! எதுக்கு டி வேர்க்கடலையை எடுத்த!” வலி உணராமல் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தையிடம் கேட்டவன் கண்கள் பனித்தன.

கீற்றுப் புன்னகை வீசும் அவள் நெற்றியில் முத்தமிட்டு மார்போடு சேர்த்து அணைத்தான்.

மாட்டூசி போல ஏதோ ஒன்றை குழந்தைக்குச் செலுத்திவிட்டு பாசமாக இருப்பதைப் போல நடித்துச் செல்லம் கொஞ்சுகிறானே என ஆத்திரம் கொண்டாள் சுதா.

“குழந்தைய விடுங்க! நான் டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போறேன்!” என்று குழந்தையைப் பிடித்து இழுத்தாள்.

அவளிடம் தராமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன், கைபேசியில் அஷ்வினை அழைத்தான்.

‘இவனுக்கு இதே வேலை!’ நேரம்காலம் பார்க்காமல் அழைக்கும் நண்பனை மனதில் திட்டிக்கொண்டே,

“ஹெலோ! சொல்லுடா!” என்றான்.

“டேய்! மதுகுட்டி பல்லாங்குழி சோழின்னு நெனச்சுகிட்டு, வேர்க்கடலையை எடுத்துட்டா டா! உடம்பு முழுக்க ராஷெஸ்(Rashes)! எபிபென்(Epipen) ஒரு டோஸ்(Dose) கொடுத்திருக்கேன்! அது போதுமா இல்ல, அலெர்ஜி(Allergy) மருந்தும் கொடுக்கணுமா?” வினவினான் குணா.

மதுமிதாவின் உடல்நலத்தைப் பற்றி வேறு சில கேள்விகளை கேட்டவன்,

“வேற மருந்து எதுவும் கொடுக்க வேண்டாம் டா! கொஞ்ச நேரம் தூங்கட்டும். இன்னும் நாலு மணி நேரத்துல ராஷெஸ் குறையுதா பாரு. மறுபடியும் எனக்கு போன் செய். தேவைப்பட்டா பயணத்தை ஒத்திப்போடு!” ஆலோசனை சொல்ல,

‘இதற்கு மேலும் பயணத்தை ஒத்திப்போடுவதா!’ மனதில் பதறியவன்,

“அதுக்கு அவசியம் இருக்காது டா!” என்று அழைப்பைத் துண்டித்தான்.

“உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க! பிரச்சனை பண்ணாம குழந்தைய தாங்க! நான் டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போறேன்!” குரலை உயர்த்தினாள் சுதா.

“இப்போ டாக்டர் கிட்ட தானே பேசினேன்! நீயும் தானே அஷ்வின் பேசினத கேட்ட! மதுகுட்டிக்கு ஒண்ணுமில்ல!” திடமாகப் பேசி குழந்தையைப் படுக்கவைத்து, போர்வை ஒன்று விரித்து அவள் நெற்றியில் இதமாக தட்டிக்கொடுத்தான்.

“ஆமாம் சுதா! குணா சொல்றது உண்மைதான். மதுமிதா உடம்புக்கு ஒவ்வாத உணவுகளில் வேர்க்கடலையும் ஒண்ணு. இதைப் பற்றி குணா முன்னாடியே சொல்லிருக்கான். நான்தான் மறதியாக அதை ஜன்னல் மேலே காய வெச்சிருந்தேன்!” சாவித்ரி எடுத்துரைக்க,

“உங்க மகன் சொல்ற கட்டுக்கதை எல்லாம் நீங்க வேணும்னா நம்புங்க அத்தை; அவரும் அவர் சிநேகிதனும் குழந்தைக்குச் சிகிச்சைன்ற பேருல செய்யும் அட்டூழியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும்!” ஆளுமையுடன் வாதாடினாள்.

“நான் இப்போ செய்தது அடிப்படை முதலுதவி!  குணா அழுத்தமாகச் சொல்ல,

“அப்படின்னா ஏன் மாமா டாக்டர்கிட்ட வர தயங்குறீங்க?” கேட்டு மடக்கினாள்.

“எனக்கு இந்த ஊரு டாக்டர்கள் கொடுக்கற சிகிச்சையில் நம்பிக்கை இல்லை!” நிர்தாட்சண்யமாக மறுத்தான்.

அதைக்கேட்டு பெருங்குரலில் சிரித்தவள், “ஆமாம்! ஆமாம்! ரெண்டு வயசு குழந்தைக்குத் தூக்க மாத்திரையும், மூளை, நரம்புகள் பாதிக்கும் மருந்துகள் பரிந்துரை செய்யும் உங்களுடைய டாக்டர் நண்பனைத் தானே நம்புவீங்க!” என்று, மனோகரிடம் சில தாள்களை நீட்டி,

“மாமா! நீங்களாவது குணா மாமா செய்யும் அக்கிரமங்களை அத்தைக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்க!” என்றாள்.

விவரங்களை நிதானமாகப் படித்தவர், சுதா சொல்வது அனைத்தும் உண்மை என்று தலையசைத்தார்.

“குழந்தைக்கு வெறும் ஊட்டச்சத்து மருந்து கொடுக்கறதா தானே என்கிட்ட சொன்ன?” மகன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவளின் குரல் வலுவிழந்தது.

தாய் மனம் நோகாமல் உண்மையை எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று குணா சிந்திக்க, சுதா மேலும் பேசினாள்.

“இன்னும் என்ன அத்தை உங்க பையன்கிட்ட விளக்கம் கேட்குறீங்க!” என்றவள், குழந்தையின் போர்வையை கையில் எடுத்தாள்.

“எல்லாரும் நல்லா பாருங்க! இந்தப் போர்வை சுமார் மூணு கிலோ இருக்கும். இதைப் போத்தினா, குழந்தையால இப்படி அப்படி அசையக்கூட முடியாது! எண்றவள், அதை உள்ளங்கையில் வைத்து தேய்த்தாள்.

அதில் ஒருவிதமான சலசலப்பு சப்தம் வந்தது.

“சாப்பிடக்கூடிய பொருளான வேர்க்கடலை தொடுவதே மதுமிதாவுக்கு பாதுகாப்பு இல்லன்னு விளக்கம் சொல்றவரு, கண்ணாடி மணிகள் வெச்சு தெச்சிருக்க இந்தப் போர்வையை பயன்படுத்தறாரு.

அதைக் குழந்தை தெரியாமல்  வாயில் போட்டுகிட்டா, என்ன ஆகும்னு யோசிச்சுப்பாருங்க!” சுதா மூச்சுவிடாமல் கொந்தளித்தாள்.

“ஏதாவது பேசுடா குணா! இந்தப் போர்வை ஏன் இவ்வளவு கனக்குதுன்னு நான் அன்னைக்குக் கேட்கும்போது,  இது வெறும் இலவம் பஞ்சால் ஆனதுன்னு சொன்னியே டா! சாவித்ரி பதற,

அப்போதும் மௌனம் காத்தான் குணா.

அரைகுறையாக விஷயங்களைத் தெரிந்துகொண்டு, தானும் குழம்பி, குடும்பத்தினரையும் குழப்பும் இவளுக்கு என்ன விளக்கம் சொல்வது என்று புரியாமல் எரிச்சலடைந்தான்.

“அத்தை! உங்க பையன் நீங்க நினைக்குற அளவுக்கு உத்தமன் இல்லை. அவருக்கு அமெரிக்காவில் பெண்கள் சவகாசம் நிறைய இருக்கு.” தனக்கு மட்டும் தெரிந்திருந்த ரகசியங்களை உடைத்தவள், குணாவை பார்வையால் சுட்டெரித்து, மேலும் பேசினாள்.

“மாமா பெண்களிடம் எப்படி எல்லாம் கொஞ்சிப் பேசுவாருன்னு யமுனா அக்கா என்கிட்ட நிறைய சொல்லிருக்கா. இந்த இரண்டு வாரத்தில், நானும் அதைக் கண்கூடா பார்த்தேன்!

அவர் உல்லாச வாழ்க்கைக்கு மதுமிதா இடைஞ்சலா இருந்திடக் கூடாதுன்னு தான், குழந்தைக்குக் கண்டகண்ட மருந்துகள் கொடுத்து முடக்கி வெச்சிருக்காரு. இதே நிலைமை நீடிச்சா, நம்ம மதுமிதா நமக்கு இருக்க மாட்டா!” தான் பார்த்துக் கேட்ட விஷயங்களை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைத்துப் பேசினாள்.

“போதும் நிறுத்து டி!” பொறுமையிழந்து கொந்தளித்தான் குணா.

அவள் முகவாயை அழுந்தப் பிடித்து, “உன் கணவரை அவமானப்படுத்தி பேசிட்டேன்னு தானே இப்போ என்னை பழி வாங்க வந்திருக்க!” கர்ஜித்தவன்,

அவளருகில் நிற்கும் கிஷோரை அனல்பார்வை பார்த்து,

“அவன் யாரு என் குழந்தையை தொட்டுப்பேச?” என்று அதட்டினான்.

குணாவின் ஆணவப் பேச்சுக்கெல்லாம் அசராதவள், “அவர்தான் இனி மதுமிதாவுக்கு அப்பா! நம்பி வந்த மனைவிய கொடுமை படுத்தின உனக்கெல்லாம் என் கிஷோரை பற்றிப் பேச அருகதையே இல்ல!” எதிர்த்துப் பேசியவளின் வார்த்தையில் மரியாதையும் தேய்ந்தது.

“அத்தை…” சுதா தொடங்க,

“சுதா! குழந்தையை தத்தெடுக்கறத பற்றி மட்டும் பேசு; அனாவசியமான பேச்சுகள் வேண்டாம்!” எச்சரித்தார் மாணிக்கம்.

மகளும் சரி என்று கண்ஜாடை காட்டினாள்.

கணவனுக்கும் இதில் பங்குள்ளது என்று உணர்ந்த மீனாட்சி, அவரை கேள்வியாக நோக்கினாள்.

குணா டெல்லி சென்றபோது, குழந்தையுடன் பழகிய சுதாவிற்கு பல சந்தேகங்கள் உதித்தது.

முதலில் கண்ணை உறுத்தியது, ஊட்டச்சத்து மருந்து என்று சொல்லி, சாவித்ரி குழந்தைக்குப் புகட்டிய ஏராளமான மருந்துகள். அவற்றில் சிலவற்றை எடுத்துச்சென்று, தனக்குப் பரிச்சயமான மருந்துக் கடை ஊழியரிடம் விசாரித்து, அவற்றின் பயன்பாடுகளைத் தெரிந்துகொண்டாள்.

குழந்தைக்கு அன்றாட பணிவிடைகளை செய்யும்போது, அந்த விசித்திரமான  போர்வை, சில பொம்மைகள் என்று ஒன்றன் பின் ஒன்றாகக் கண்ணுக்குத் தென்பட்டது.

மேலும், விடுப்புக்காக இந்தியா வந்த இரண்டு வயது குழந்தைப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் என்னவென்று சந்தேகம் கொண்டாள். மதுமிதா மேற்கொள்ளும் வித்தியாசமான பயிற்சிகள், அன்றுப் பள்ளியில், மதுமிதாவின் குணாதிசயம் பற்றி, அப்பெண் சொன்ன மருத்துவ ரீதியான தகவல்கள் என எல்லாம் சேர்ந்து குணாவின் வளர்ப்புமுறை மேல் அவநம்பிக்கை கொண்டாள்.

கிஷோரிடம் தன் மனதிலுள்ள குழப்பங்களைப் பகிர, அவனுக்குக் குணாவின் குணாதிசயங்களை எடைப்போட அன்றொரு நாள் சந்திப்பே போதுமானதாக இருந்தது.

சுதாவிற்கு விருப்பமிருந்தால், மதுமிதாவை அவர்களே தத்தெடுத்து கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னான். அவன் அன்பிலும் அக்கறையிலும் உருகினாள் பெண்.

முன்கோபம் கொண்ட குணாவை சமயம் பார்த்துதான் அணுக வேண்டுமென்று சிந்தித்த இளஞ்சோடிகள், தங்கள் திருமணத்திற்குப் பிறகு, சட்டப்பூர்வமான முறையில் குழந்தையைக் கேட்கலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

அவர்கள் திட்தத்தில் மாணிக்கம், பெருமிதம் கொண்டாலும், தங்கையின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டார். குடும்ப விவகாரங்கள் நீதிமன்றம் வரை போகவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

பணம், சொத்து என்று அலைபவன், சுதாவின் எண்ணத்தை அறிந்தவுடன், விட்டால் போதுமென்று மதுமிதாவை தத்து கொடுத்துவிடுவான் என்று உறுதியாக நம்பினார் மாணிக்கம்.

இதற்கு மீனாட்சி நிச்சயம் சம்மதம் தெரிவிக்கமாட்டாள் என்று அறிந்த மாணிக்கம், அவளிடமிருந்து திட்டத்தை மூடி மறைத்தார். காலப்போக்கில் மனையாள் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு.

“அத்தை! ப்ளீஸ்! மதுமிதாவை என்கிட்ட கொடுத்திடுங்க! யமுனா அக்காவுக்காக நான் இதைக்கூட செய்யக்கூடாதா!” தந்தை சொல்லிற்குக் கட்டுப்பட்டு, சுதா தாழ்ந்த குரலில் கெஞ்சினாள்.

“உனக்கென்ன பைத்தியமா டி! மகளை மிருகம் மாதிரி வளர்த்து வெச்சிருக்கான்! அவளைப் போய் தத்தெடுத்துக்க விரும்புற!”, மதுமிதா அன்று கடித்த இடத்தில் தோன்றியத் தழும்பைத் தேய்த்தவாறு குழந்தையை முறைத்தாள்.

“அம்மா ப்ளீஸ்! சும்மா இரு!” சுதா கெஞ்ச,

மீனாட்சியின் அவதூறான பேச்சில் சினம் கொண்டவன், சுதாவின் கைகளை அழுத்தமாகப் பற்றி அவளை எழுப்பினான்.

“என் குழந்தைய நான் யாருக்கும் தர மாட்டேன். நீ முதல்ல கிளம்பு டி!” என்று கர்ஜித்து வாசலை நோக்கி அவளை இழுத்தான்.

“அத்தை…அத்தை…” என சுதாவின் விசும்பல்கள் சாவித்ரி காதில் எட்டவே இல்லை.

அண்ணன் குடும்பம் வந்த நொடியிலிருந்து மகனின் நடத்தைப் பற்றியும், பேத்தியின் உடல்நலம் பற்றியும் பல விசித்திரமான செய்திகளை தொடர்ச்சியாக கேட்டவளின் மனம் சோர்ந்து போயிருந்தது. சுதா சுமத்திய குற்றச்சாற்றுக்கு எல்லாம் மகன் தெளிவாக பதில் சொல்லாமல் தடுமாறியதிலேயே, தாய்மனம் சுக்குநூறானது. அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய் உறைந்து போயிருந்தாள் சாவித்ரி.

“மாமா…நீங்களாவது புரிஞ்சுக்கோங்க!” குணா பிடியில் அகப்பட்டிருக்கும் சுதா மனோகரிடம் மன்றாட,

“நில்லுடா குணா!” தடுத்தார் மனோகர்.

“குழந்தையை தர மாட்டேன்னு சொல்ல உனக்கு எந்தளவுக்கு உரிமையிருக்கோ, அதே அளவிற்கு தர சொல்லி கேட்க சுதாவுக்கும் உரிமை இருக்கு!” சமநிலையில் பேசத்தொடங்கியவர்,

“சுதாவின் சந்தேகம், பயம் எல்லாத்துக்கும் நியாயமான விளக்கங்கள் சொல்லிட்டு, நீ தாராளமா உன் மகளை ஊருக்கு அழைச்சிட்டு போ! இல்லேன்னா நானே மதுமிதாவை சுதாகிட்ட கொடுத்திடுவேன்!” தன் முடிவை சொன்னார்.

குணா யமுனாவை திருமணம் செய்து கொண்ட நாள்தொட்டே, மனோகருக்கு மகன் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை. வீட்டார் அனைவரும் அவர்களை வெறுத்து ஒதுக்கியப் போதும், பந்தம் ஒரேடியாக முறிந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவனுடன் தள்ளியிருந்து உறவாடினார்.

தவறுகளை மறந்து, மன்னித்து ஏற்கவும் அவர் தயாராக இருந்தார். ஆனால் மகனுக்குத் தான் தழைந்து போக மனமில்லை. இன்று சுதாவிற்கு அளிக்கும் பதிலில் ஆவது, குணாவின் உண்மையான உணர்வுகளை புரிந்துகொள்ள முடியுமா என்ற நப்பாசை அவருக்கு.

வெறும் இரண்டே வாரங்கள் குழந்தையுடன் பழகிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் இவளுக்கு எதற்கு விளக்கம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் தான் குணாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் அவனுக்கு கிஷோரை சுத்தமாகப் பிடிக்கவில்லை.

ஆனால் மனோகரின் குறுக்கீட்டால் அனைத்தும் தலைகீழாக மாறியது.

அம்மாவின் மனதில் நம்பிக்கை பிறந்தால், அனைவரையும் வீழ்த்திவிடலாம் என்று எண்ணியவன், சாவித்ரி காலடியில் தஞ்சம் புகுந்தான்.

“அம்மா! மதுமிதா பற்றி உன்கிட்ட சொல்லாம மறைச்சது தவறு தான் மா!” என சரணாகதியானவனை அனைவரும் ஆழமாகப் பார்த்தனர்.

வெளிர்ந்திருந்த சாவித்ரியின் முகமும் நிமிர்ந்தது.

“உன்கிட்ட சொல்லக்கூடாதூன்னு இல்லம்மா! அவளுக்குப் பேச்சு வரல்லன்னு தெரிஞ்சதுமே நீ எப்படி பதறின…அப்படி இருக்கறப்ப, இதெல்லாம் சொல்லி உன்னைச் சங்கடப்படுத்த வேண்டாம்னு தான் மா…” மகன் சொல்லும்போதே, தாய்மனம் இளகியது.

 அவன் கன்னங்களை வருடியவள், “பரவாயில்ல குணா!” என விட்டுக்கொடுக்க,

“அவனைப் பேசவிடு சாவித்ரி! அவனும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் எல்லா பாரத்தையும் தனியாவே மனசுல போட்டுகிட்டு சுமப்பான்!” மனோகர், மகன் வழியிலேயே பேசி மடக்கினார்.

“சொல்றேன் மா!” என தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான் குணா.

“மதுமிதாவிற்கு ஆடிஸம்(Autism); மன இறுக்கம்னு சொல்லுவாங்க. இது பிறவியிலேயே வரும் பிரச்சனை. ஆனால் மதுமிதாவுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்குன்னு ஆறு மாசம் முன்னாடி தான் மா எனக்கே தெரியும். இந்த குறைப்பாடுக்கு நிரந்தர தீர்வு இல்லை; ஆனால் கட்டுக்குள்ள வெச்சிருக்கலாம். அது அவள் முன்னேற்றத்திற்குத் தடையாகவும் இருக்காது.

ஐம்புலன்களின் ஒருங்கிணைப்பில், மூளைக்குத் தகவல் கொண்டுபோய் சேர்க்கறதுல நரம்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்தத் தகவல் பரிமாற்றம் தான் மதுமிதாவுக்கு பிரச்சனை.

ஒரு சராசரி மனிதனுக்கு இருக்குற இயல்பான விருப்பு வெறுப்பு இவளுக்கு இருக்காது. உதாரணத்துக்கு சொல்லணும்னா, நம்ம கண்ணகளுக்குக் கூசும் ஒரு நிறம், இவளுக்கு இதமா இருக்கும். நமக்கெல்லாம் ரம்மியமாகத் தோணும் மெல்லிசை இவள் காதில் ரீங்காரமா ஒலிக்கும்.

உண்மையிலேயே எந்த மருந்தாலையும் இதைக் குணப்படுத்த முடியாது.

வழக்கத்திற்கு மாறாக செயல்படும் மூளையின் சுமையை குறைக்கத்தான் மருந்தேயொழிய குணப்படுத்த இல்ல.

இந்தப் போர்வையும் ஒரு விதத்தில் நிவாரணம் தான்; தீர்வு இல்லை;

சென்ஸரி ப்ளாங்கெட்(Sensory Blanket) சொல்லுவாங்க. அது அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கொடுக்கும்.”

நீண்ட விளக்கம் சொல்லி பெருமூச்சுவிட்டவன் சாவித்ரி பதிலுக்காகக் காத்திருந்தான்.

“உன்ன நம்புறேன் குணா!” சொன்னவள், பள்ளியில் அன்று அந்தப் பெண் பேசியதை மனதில் அசைப்போட்டாள். அவளும் இதே மாதிரியான விளக்கம் தான் கூறினாள். அதனால் மகன் பேச்சில் பொய் இல்லை என்று தீர்மானமாக நம்பினாள்.

“அத்தை! இதெல்லாம் சரி! ஆனா அவருக்கு வேறொரு பெண்ணோட தொடர்பு இருக்கா இல்லையான்னு சொல்லச் சொல்லுங்க!” சாவித்ரி மனம் மாறுவதற்குள் மற்றொரு பிரச்சனை இருக்கிறது என்று நினைவூட்டினாள் சுதா.

தழைந்து போனால், தலைக்கு மேல் ஏறுகிறாளே என்று கடும்கோபம் கொண்டான் குணா.

“அம்மா!” பெருங்குரலில் அழைத்தவன், “யமுனாவோட தங்கைன்ற ஒரே காரணத்துக்காகத் தான், மதுமிதா பற்றி ஒளிவுமறைவு இல்லாம சொன்னேன். என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி, யமுனாவைத் தவிர வேற யாருகிட்டையும் பகிர்ந்துக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை!” தீவிரக்குரலில் உரைத்து, சாவித்ரியின் கரங்களை மென்மையாய் வருடினான்.

“புரிஞ்சுக்கோ மா! மதுமிதா ஒண்ணும் அனாதை இல்ல; அப்பா நான் அவளுக்கு இருக்கேன்.” மனமுருகியவனின் கண்கள் மீனாட்சியை தழுவி மீண்டது.

“கொஞ்சம் யோசிச்சு பாரு மா…இத்தனை நாளாக யாரையும் கடிக்காத குழந்தை, நான் ஊருக்கு போனப்ப அத்தையை கடிச்சிருக்கா…அது ஏன் தெரியுமா?” கேள்வியை எழுப்பி அனைவரையும் சிந்திக்க வைத்தான்.

“தெரியல டா!”

“கடிக்கறது, கிள்ளறது எல்லாம், பேச்சு வராத பெரும்பாலான ஆடிஸம் குழந்தைகள் தங்களோட உணர்ச்சிகளாய் வெளிப்படுத்த பயன்படுத்தும் வழி. நான் அவள் பக்கத்த்தில் இல்லன்னு சொல்ல முயற்சி செஞ்சிருக்கா. அது புரியாத அத்தை, அவகிட்ட கோபமா பேச, அது அவள் மனதைக் காயப்படுத்திருக்கும். அதான் அத்தைகிட்ட ஒட்டவே மாட்டேன்றா!” சாமர்த்தியமாக பழியை தூக்கி மீனாட்சி மேல் போட்டவன்,

“அவளுக்கு நான்னா உசுரு; எனக்கும் மதுமிதா தான் எல்லாமே; மதுமிதாவை என்கிட்டேந்து பிரிச்சு, என்னை அனாதை ஆக்க போறியா மா, சொல்லு! தாழ்ந்த குரலில் கேட்டு, பாசத்தால் அவளை கவிழ்த்தான்.

மாட்டேன் என்று சாவித்ரி தலையசைக்க,

“அதுக்கில்லை அத்தை…!” இடைபுகுந்தாள் சுதா.

“இங்க பாரு சுதா! குணா மதுமிதா விஷயத்தில் பொறுப்பா தான் இருக்கான். எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு!” என்றவள், மகனின் தலையில் மென்மையாகத் தட்டிக்கொடுத்தாள்.

சுதாவை அருகே வந்து அமரும்படியும் அழைத்தாள்.

வாடிய அவள் முகத்தை கையில் ஏந்தியவள், “உனக்கும் இப்போதான் கல்யாணமாயிருக்கு சுதா. சந்தோஷமா போய் மாப்பிள்ளையோட குடும்பம் நடத்து.

அடுத்த ஆறு மாசம் நான் குணாவோடத்தான் இருக்கப்போறேன். நான் மதுமிதாவை நல்லபடியா பாத்துக்கறேன். அதுக்கு அப்புறம் குழந்தை விஷயத்துல என்ன செய்யலாம்னு பார்ப்போம்!” இளையவளுக்கு பக்குவமாக எடுத்துரைத்தவள்,

அந்த நொடியே ரகசியமாக இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வும் கண்டுவிட்டாள்.

அன்னை முடிவில் மனம் குளிர்ந்தவன், அவளருகே கண்ணீர் மல்க அமர்ந்திருக்கும் பெண்மானை பார்த்து,

‘தோற்பவன் நானா!’ இறுமாப்புடன் கண்சிமிட்டி ஏளனமாக சிரித்தான்.

‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது’ என்று மீனாட்சி பெருமூச்சுவிட, கிஷோரின் மனம் ஆசை மனைவியை அரவணைத்து ஆறுதல் சொல்லத் துடிதுடித்தது.

தந்தைமார்கள், சுயநலவாதியின் சூழ்ச்சமங்கள் அறிந்தபோதும், குடும்ப நலன் கருதி உண்மை உணர்ச்சிகளை புதைத்தனர்.

தந்தை நான் இருக்கேன் என்று தோதாய் பேசி,

தத்தெடுக்க வந்தவளை தந்திரமாய் வென்றவன் – நாளை

தாயின் ரகசிய திட்டத்தில் தோற்றுப்போவானா-இல்லை

‘தோற்பவன் நானா’ என்று தலைக்கனம் கொள்வானா – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….