பாசமென்னும் பள்ளத்தாக்கில் (அறிமுகம்)

பாசமென்னும் பள்ளத்தாக்கில் கதைக்கரு கவிதை வடிவில்…

தாயில்லா பிள்ளை இவள் உறவிற்கு ஈடுயிணை இல்லை – என்று

தாயுமானவன் பறைசாற்றும் பாசத்திற்கு எல்லையும் இல்லை;

உதாசீனம் செய்யும் சுற்றத்தைக் காண விருப்பமில்லை- விதிவசத்தால்

உறவுகளைச் சந்திப்பிதை தவிர்க்கவும் முடியவில்லை;

உள்ளத்தில் தேக்கிவைத்த ஏக்கங்களுக்கு அளவில்லை – மனதில்

பூட்டிவைத்த ரகசியங்களுக்குக் குறைவில்லை – வழியில்

பந்தங்களுடன் ஏற்படும் சஞ்சலங்களுக்கும் பஞ்சமில்லை;

பழிச்சொல்லுக்குப் பலியாகி இழக்கிறான் சமநிலை – முன்கோபத்தில்

பொத்தி வளர்த்த தாரகையைப் பிரிய வேண்டிய சூழ்நிலை – பதற்றத்தில்

பல தவறுகள் செய்து தடுமாறுகிறான் தன்னிலை!

உறவுகளே வேண்டாமென வெறுத்து,

உள்ளத்து ரகசியங்களை மறைத்து,

உலகமே அவள் மட்டும் தான் என்று,

உரிமையை நிலைநாட்ட போராடுவது ஏன்-தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…

பாசமென்னும் பள்ளத்தாக்கில் கதாபாத்திரங்கள்!

ந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,

அவர் ஹீரோ(ஹீரோயின்) ஆவதும், ஆன்ட்டி ஹீரோ(ஹீரோயின்) ஆவதும் அமையும் சந்தர்ப்ப சூழ் நிலைகளிலே – அதை

சரியென்று ஏற்பதும், தவறென்று மறுப்பதும் பார்ப்பவர் கண்ணோட்டத்திலே!

இந்தப் பூமியில் ஜனிக்கும் எவரும் நூறு சதவீதம் நல்லவரும் கிடையாது; நூறு சதவீதம் கெட்டவரும் கிடையாது. இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களும் இதற்கு விதிவிலக்கில்லை. கதையின் முக்கியமான மூன்று நபர்களை, உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

குணா என்னும் குணசேகரன்:

நல்ல குடும்பத்தில் பிறந்து, அன்றாடம் நல்ல பழக்க வழக்கங்களை பயின்று, பெற்றோர் பெயர் சொல்லும் பிள்ளையாக, உறவுகள் கொண்டாடும் உத்தமனாக, ஊரார் போற்றும் மனிதனாக இருந்தவன், இன்று அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்தது ஏன்?

பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டது தான் பிழையா-இல்லை

உயிரானவளை ஏழ்கடல் தாண்டி அழைத்துச் சென்று தொலைத்தது தான் சரியா-இன்று

தாயில்லா பிள்ளைக்கு பாசம் கேட்டு உறவுகள் முன் நிற்பது தான் குற்றமா?

கசப்பான பக்கங்களைத் திருத்தி அமைக்க வேண்டி வந்தவனை ஏற்காமல், உறவுகள் கற்கள் எறிந்து விரட்ட, அவற்றையே கொண்டு, தன்னைச் சுற்றி கோட்டை கட்டிக்கொள்கிறான் குணா. தனி ஆளாக, பெண் குழந்தையை வளர்க்கும் சவால்கள் ஒருபுறம் இருக்க, மனைவியை திட்டமிட்டுத் தொலைதூரம் அழைத்துச் சென்று தொலைத்ததின் மர்மத்திற்கு ஒரே சாட்சியாக விளங்கும் அந்த குழந்தையை தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவனுக்கு.

பவி என்னும் பல்லவி…

அழகான குடும்பம், அளவில்லா பாசம் என்று வளர்ந்தவளுக்கு, ‘கஷ்டம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா என்று தான் அவளிடம் கேட்க வேண்டும். அவள் விரும்பிய அனைத்தையும், அவள் கேட்கும் முன்னரே நிறைவேற்றி தரும் வீட்டின் உறுப்பினர்கள்; நினைத்ததை சாதித்தே தீர வேண்டுமென்ற அவள் பிடிவாத குணத்திற்கும் கண்மூடித்தனமாக தலையாட்டும் பாசப்பிணைப்புகளின் நடுவில் வளரும் முடிசூடா இளவரசி அவள்.

அன்னை முகம் இவள் கண்டதில்லை-ஆனால்

அண்ணன் அரவணைப்புக்கு குறைவும் இல்லை.

அண்ணி என வந்தவள் அந்நியமாய் இருந்ததே இல்லை.

தகப்பன் பாசம் இவள் அறிந்ததில்லை – பாட்டியின்

தாலாட்டு பாடலுக்கு மிஞ்சிய அன்பும் இல்லை-வீட்டின்

செல்லப் பிள்ளையாக வளர்ந்த இவள் – இனிமேல்

சந்திக்கப் போகும் சவால்களுக்கும் எல்லையே இல்லை.

புத்தி சாதூரியத்தின் மொத்த உருவமாய் இருந்தவள் மனதில் காதல் முளைக்கிறது. ஆனால் அதை செடியாக்கி, மரமாக்கி அவள் வளர்க்க நினைத்த இடமோ பாறையான ஒரு இதயம்.

வீசிய கற்கள் கொண்டு கோட்டை கட்டிக்கொண்டவன் மனமும் சேர்ந்து பாறையானது. அந்தப் பாறையில் கசிந்த தேனினும் இனிமையான ஒரு சொட்டு நீர்த்துளியை பருகியவளுக்கு, பாறைமனம் படைத்தவனை தனதாக்கி கொள்ள வேண்டுமென்ற பேராசை தலைக்கேறியது.

உறவுகளே வேண்டாம் என்று விலகிச் சென்றவனை, விரட்டி விரட்டி துரத்துகிறாள் இவள். மனதிற்குப் பிடித்தவனை கைப்பிடிக்கும் குறிக்கோள் ஒன்றே பிரதானம் என்று நினைக்கின்றவள், தான் செய்யும் செயல்களின் நல்லது கெட்டதைப் பற்றிச் சிறிதளவும் சிந்திப்பதே இல்லை. தனக்குத் தெரிந்த, தெரியாத அத்தனை மந்திரம் தந்திரங்களின் மூலம் அவனைத் தன் வசப்படுத்த பார்க்கிறாள். (இவள் கதையின் பாதியில் தான் வருவாள்)

மது என்னும் மதுமிதா…

இப்பூவுலகில் ஜென்மம் எடுத்ததைத் தவிர வேறொன்றும் பிழை செய்யாத இரண்டு வயது பிஞ்சு குழந்தை அவள்; குழந்தை தானே என்று அலட்சியம் கொண்டு பெரியவர்கள் செய்த, பேசிய அனைத்துச் செயல்களுக்கும் ஒரே சாட்சி அவள். தன் கண்முன் நிகழும் இனிமையான, கசப்பான விஷயங்களைப் புன்னகை ததும்பும் முகத்தால் சமநிலையாக பார்க்கும் அதிர்ஷ்டம் படைத்தவள்.

தன்னைச் சுற்றி நடந்தவற்றின் நியாய அநியாயங்களை உணர்ந்து மௌனம் காத்தாளா!

நீதிதேவதைக்கு யாரும் நிகரில்லை என்று உண்மையை உரக்கச் சொன்னாளா!

தாய் பாசமே அறியாதவள், தந்தை பாசத்தில் கரைந்தாளா- தானே

தாரம் என தர்க்கம் செய்து, தந்தை கைக்கோர்க்க நினைத்தவளின்,

தாரக மந்திரங்களில் தடுமாறி போனாளா?

தன்னை நேசித்தவர்களுக்கும், தூற்றியவர்களுக்கும், பாரம் என தள்ளி வைத்தவர்களுக்கும், பாவம் என தள்ளி நின்றவர்களுக்கும் இவள் என்ன பதில் சொல்லப் போகிறாள்…

இவர்களின் குணாதிசயங்களைப் பற்றி ஓரளவுக்கு உங்களிடம் சொல்லிவிட்டேன் நண்பர்களே. இப்போது, நீங்களே சொல்லுங்கள்…

1.மனதில் புதைத்த ரகசியத்தைக் காக்க பெரும்பாடு படுகிறவன் ஆன்ட்டி ஹீரோவா?

2.எப்படியாவது மனதை வசீகரித்தவன் கரம் பிடித்தே தீருவேன் என்று பிடிவாதம் கொண்டவள் ஆன்ட்டி ஹீரோயினா?

3.இவர்கள் செயல்களுக்கு எல்லாம் ஒரே சாட்சியாக இருக்கும் மழலை மொழி ஆன்ட்டி ஹீரோயின் Version 2.0 வாஹ்??

‘பாசமென்னும் பள்ளத்தாக்கில்’ விழுந்தார்களா, தள்ளினார்களா, இல்லை தள்ளப்பட்டார்களா என்பதை கதையின் முக்கியமான கதாபாத்திரங்களான இவர்களுடனும், இன்னும் சில விந்தை மனிதர்களுடனும் பயணித்துத் தெரிந்து கொள்ளலாம் தோழமைகளே.

பாசமென்னும் பள்ளத்தாக்கில்…

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, ஒவ்வொரு மனிதனுக்கும் இருமுகங்கள் உண்டு. ஆசை, கோபம், பாசம், வெறுப்பு, இன்பம், துக்கம் என எல்லா உணர்ச்சிகளின் கலவை தான் மனிதன்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், அதைக் கட்டுக்குள் வைத்து செயல்படுபவன் நல்லவன் ஆகிறான்; நம் கண்களுக்கு ஹீரோவாக தோன்றுகிறான். அவ்வுணர்ச்சிகளை அதீதமாய் வெளிப்படுத்தும் போது அவனே கெட்டவன் ஆகிறான்; நம் கண்களுக்கு ஆன்ட்டி ஹீரோவாக தோன்றுகிறான்; அவ்வளவு தான் வித்தியாசம்.

அன்றாடும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இக்குணம் ஒளிந்திருக்கும். அதை அறவே ஒழித்தல் என்பது சாத்தியமில்லை; அளவாக வெளிப்படுத்த முயற்சிசெய்யலாம்; விட்டுக்கொடுத்து வாழ பழகிக்கலாம்.

அப்படிப்பட்ட மனிதர்களை தான், நான் இக்கதையின் வழியே உங்களுக்கு அறிமுகம் செய்ய விழைகிறேன். அவர்களின் அக்குணத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அன்பு, அக்கறை யாவும் கண்ணுக்கு தெரியும்போது, மேகம் நீங்கிய நீலவானம் போல மனதில் தெளிவு பிறக்கிறது; தெளிந்த மனம் பாசம் கொள்கிறது; குற்றங்களைத் தள்ளி வைத்து நேசிக்கத் துவங்குகின்றது.

மொத்தத்தில், இது ஆரவாரம் இல்லாத மென்மையான குடும்பக் கதை. உறவுகளின் உரிமை போராட்டங்களைப் பற்றியது. மன இறுக்கம் பற்றிய சில செய்திகளையும் இக்கதையின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.