பசுமரத்தாணி நினைவுகள்
மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மகள், தோள்பையை வீசி எறிந்த விதத்திலேயே, போன காரியம் கைகூடவில்லை என்று புரிந்துகொண்டாள் சாரதா.
“நம்ம வேணும்னா, ரிஷிகிட்ட எடுத்து சொல்லலாமே டி!” மென்று விழுங்கினாள்.
“என்னன்னு எடுத்துச் சொல்லணும்?” கறாராக கேள்வியைத் திருப்பியவள்,
“தம்பி! தம்பி! அக்காவுக்கு முப்பத்து மூணு வயசாகுதுடா! நீ அவர் தங்கையை கல்யாணம் செய்துகிட்டாதான், எங்க கல்யாணம் நடக்கும்னு விக்ரம் தீர்மானமா சொல்லிட்டாரு…எனக்காக உன் முடிவை மாத்திக்கோன்னு கெஞ்ச சொல்றீயா?” எகத்தாளமாகக் கேட்டு, தன் அறைக்குள் புகுந்தாள் காயத்ரி.
“அப்படிக் கேட்டாதான் என்ன தப்பு?” எனப் பின்தொடர்ந்தவள், “எப்படி இருந்தாலும் அவனும் நாளைக்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்துக்கத்தானே போறான். அது ஏன், அவனை விரும்புறேன்னு வாய்விட்டு சொல்ற, மாப்பிள்ளையோட தங்கை கீர்த்தனாவா இருக்கக்கூடாது?” விடாமல் நச்சரித்தாள்.
அம்மாவின் அர்த்தமில்லா பேச்சில் கடும்கோபம் கொண்டவள்,
“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ மா! திருமண பந்தத்தின் அடிப்படைத் தேவை நல்லதொரு புரிதல். கல்யாணமே வேணாம்னு சொல்ற உன் மகனை வற்புறுத்தி சம்மதிக்க வெக்குறதும் தப்பு; பெண்பார்க்க வந்தவர், முதல்ல பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் தங்கை விருப்பம் நிறைவேற்றினால் கல்யாணம் செய்துப்பேன்னு நிபந்தனை போடுறதும் ரொம்ப தப்பு!
சுயநலம் படைத்த இவர்கள் கரிசனம் காட்டித்தான் எனக்குக் கல்யாணம் ஆகணும்னு இல்ல; கண்ணீர்விட்டு கெஞ்சும் ரகமும் நான் இல்ல!” தீர்மானமாக உரைத்தவள், தனித்து வாழ்வதே மேலென்று கூறி அறையின் கதவை படார் எனச் சாற்றினாள். மனத்தைப் புண்படுத்தியவர்கள் மேலிருந்த கோபத்தை அறைக்கதவு மீது மட்டும்தான் காட்டமுடிந்தது அவளால்… அந்தச் சமயத்தில்.
எதிர்பார்த்து ஏமாறுவதே வாழ்க்கையின் நியதியானது எனத் துவண்டுபோன சாரதாவின் கண்கள், நிழற்படமாக மாறிய கணவனின் முகத்தைத் தழுவியது. இருபது ஆண்டுகளுக்கு முன் தன்னையும் பிள்ளைகளையும் நிர்கதியாகத் தவிக்கவிட்டு, உலக வாழ்க்கையை விட்டொழித்த அவர் தானே அவளுக்கு ஏமாற்றத்தின் வலியை முதன் முதலில் உணர்த்தியவர்.
சாலை விபத்தில் கணவர் இறந்ததும், குடும்பச் சுமைகள் அத்தனையும் சாரதாவின் தோளில் விழுந்தது. துக்கம் விசாரித்த உறவுகள் பக்கம் பக்கமாக அனுதாபங்கள் வாய்மொழிந்ததோடு சரி. ஆறுதல் பேச்சும், இலவச அறிவுரைகளும் மனத்தின் வலியை குறைக்குமே தவிர, வயிற்றுப் பசியைப் போக்காது என்ற நிதர்சனத்தை உணர்ந்தாள் சாரதா.
கண் கசியக் கூட நேரமில்லாமல், அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டாள். மூத்தவள் காயத்ரியும், இளையவன் ரிஷிகுமாரும், அன்னையின் கஷ்டங்களை அறிந்து, தங்கள் முழு கவனத்தையும் கல்வியில் செலுத்தினர்.
இரண்டு பட்டப்படிப்புகள் முடித்த கையோடு, காயத்ரி ஒரு பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தாள். ரிஷி விமானியாகும் தன் லட்சியத்தில் வெற்றி பெற்று, சர்வதேச விமானங்களின் நிறுவனம் ஒன்றில் சேர்ந்தான்.
மாதத்தின் பாதி நாட்கள் ஆகாயத்திலும், மீதமுள்ள நாட்களில், பல நேரங்களில் பாஷை தெரியாத ஊரிலும், சில நேரம் மட்டுமே தாய்மண்ணில் கழித்தவன், திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.
காலத்தின் போக்கில் மகனின் எண்ணங்கள் மாறும் என்று நம்பிய அன்னையின் கவலையெல்லாம் மகளின் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே.
காயத்ரியின் இருபத்து-ஐந்தாம் வயதில் தொடங்கியது அவள் சுயம்வரத்தின் முதல் அத்தியாயம். தகப்பன் இல்லாத பிள்ளைகள், தலைச்சன் பிள்ளை, அதிகமாகப் படித்து இருக்கிறாள், ஜாதகம் பொருந்தவில்லை என்று ஏதேதோ காரணங்களை அடுக்கி, பெண்பார்க்க வந்தவர்கள் கைவிரிக்க, ஆண்டுகள் அதன்போக்கில் உருண்டோடியது.
காயத்ரி வேலை செய்யும் கிளைக்குப் பணிமாற்றத்தில் வந்த விக்ரம், அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, அவனும் அவன் தங்கை கீர்த்தனாவும் பெரியப்பாவின் வீட்டில் வளர்ந்ததால், காயத்ரியின் குடும்பநிலை, அவனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியிருக்கவில்லை.
பெரியவர்கள் சம்மதத்துடன், திருமணம் நல்லபடியாக நிச்சயமானது. மகளின் கல்யாணத்திற்கு முட்டுக்கட்டை போட்ட இடையூறுகளைத் தகர்த்துவிட்டதாகச் சாரதா பெருமூச்சுவிட, அச்சமயம் மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த விக்ரமின் தங்கை கீர்த்தனா, வருங்கால அண்ணியை சந்திக்க வந்திருந்தாள்.
அவளுக்குப் பருக பழச்சாறு கொடுத்து அன்பாக உபசரித்த சாரதா,
“போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், உங்க அண்ணனே காயத்ரியை அழைச்சிட்டு வந்துட்டு இருக்காரு மா. சீக்கிரம் வந்துடுவாங்க!” மகள் அலைபேசியில் அழைத்து தகவல் சொன்னதாகக் கீர்த்தனாவிடம் கூறினாள்.
அதைக் கேட்டு கீர்த்தனாவின் இதழ்கள் குறும்பாக வளைந்தன.
“அண்ணன் ஏதோ விமானத்தில் பறந்து வரா மாதிரி விளக்கம் சொல்றாரு. அதையும் நீங்க நம்புறீங்களே! போக்குவரத்து நெரிசலில் யார் வண்டி ஓட்டினாலும் வேகமாக வரமுடியாது. அண்ணா வருங்கால மனைவியோட நேரம் செலவழிக்க சாக்கு சொல்றாரு!” எனக் கண்சிமிட்டவும், சாரதாவின் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் விரிந்தன்.
அவர்கள் வரும்வரை பிள்ளைகளின் புகைப்படங்களைக் காட்டுவதாகச் சொல்லி, ஆல்பங்களை எடுத்துவந்தாள். கீர்த்தனாவும் அவற்றை ஆவலாகக் கண்டுகளித்தாள்.
காயத்ரி அண்ணனுக்கு ஏற்ற மனையாள் என நெகிழ்ந்தாள். சாரதா தன்னிச்சையாக பிள்ளைகளின் அருமை பெருமைகளைப் பாட, கீர்த்தனாவின் கவனம் ரிஷிகுமார் பக்கம் திரும்பியது.
விமானியாக பணிபுரியும் நேரத்தில், விளையாட்டு மைதானத்தில், விவாத மேடையில், வெளியூர்களில் என இடத்திற்கு ஏற்றார்போல உடை அணிந்தவன், உடல்மொழி, தோற்றம், பாவனை அனைத்தும் அம்சமாகவே இருந்தது. அதில் ஒரு குழு புகைப்படத்தில் குறும்பு நகையுடன் கண்கள் சுருக்கி நிற்கும் மகனை சாரதா சுட்டிக்காட்ட,
“இவனா உங்க மகன்?” கீர்த்தனா கண்கள் அகல உற்று நோக்கினாள்.
“ஆமாம் மா! உனக்கு அவனைத் தெரியுமா?” வினவினாள் சாரதா.
அவனைக் கண்டுகொண்டவளின் மனம் கடந்தகாலத்தில் பயணிக்க, சாரதாவின் கேள்விக்கு மென்மையாகத் தலையசைத்தாள்.
அச்சமயத்தில், மாப்பிள்ளையும் மகளும் ஜோடியாக வீட்டுக்குள் நுழைய, அவர்களை வரவேற்கும் பரபரப்பில் சாரதாவோ கீர்த்தனாவின் முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை.
கீர்த்தனாவை கண்டதும், விக்ரம் தன் வருங்கால மனைவியின் தோளினை வளைத்து அறிமுகம் செய்தான். தன்னவனின் ஸ்பரிசத்தில் வெட்கமும், பூரிப்பும் கலந்தவளாக மென்மையாகச் சிரித்தாள் காயத்ரி.
பெண்கள் இருவரும் சகஜமாகப் பேசிபழக, திருமணத்தைப் பற்றிய மற்ற திட்டங்களையும், முகூர்த்த நாள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.
“உனக்கு எப்போ தேர்வுகள் முடியும்னு சொல்லு கீர்த்தி! அந்தச் சமயத்துல திருமணத்திற்குத் தேதி குறிக்கலாம்!” விக்ரம் யோசனை சொல்ல,
“அண்ணா! எனக்கும் ரிஷிக்கும் கூட அப்போவே கல்யாணம் செய்துவைங்க!” பட்டென்று உடைத்தாள்.
சம்பந்தமே இல்லாமல் பேசும் அவளை மூவரும் குழப்பமாகப் பார்த்தனர்.
“என்ன உளறுற கீர்த்தி!” விக்ரம் அதிராத குரலில் அழுத்தமாகக் கேட்க,
“அண்ணி! நான் அண்ணன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்!” சுற்றம் அறிந்து புறப்பட எழுந்தாள்.
“எதுவாயிருந்தாலும் இங்கேயே சொல்லு கீர்த்தி!” விக்ரம் தடுக்க, அவளோ செவிசாய்க்கவில்லை.
காயத்ரி தன்னவனுக்குப் புறப்படும்படி ஜாடை காட்ட, விக்ரம் தங்கையைப் பின்தொடர்ந்தான்.
மகனின் குணாதிசயங்களைக் கூறி, கீர்த்தனா மனதில் தேவையில்லாத ஆசை வளர்த்துவிட்டதாக யோசித்த சாரதா,
“கீர்த்தனா! என்னமா திடீர்னு?” பதற,
“அது…அத்தை…விமானி கணவனாக வந்தால், சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் பாருங்க!” கிண்டலாகப் பதிலளித்து கண்சிமிட்ட, சாரதா தன் யூகம் சரியென்ற முடிவுக்கே வந்துவிட்டாள்.
அண்ணனுடன் தனியாகப் பேச வேண்டுமென்று அழைத்துச் சென்றவள், ரிஷிகுமாரை முன்னமே தெரியும் என்றும், நம்பி திருமணத்திற்குச் சம்மதம் சொல்லும்படியும் கேட்டுக்கொண்டாள்.
“கீர்த்தி விருப்பம் சரிதான் காயத்ரி! நம்மள மாதிரியே, உன் தம்பியும், என் தங்கையும் கல்யாணம் செய்துகிட்டா, நாம எப்பவும் ஒரே குடும்பமா இருக்கலாம்!” தங்கை காதலுக்குப் பச்சைகொடி காட்டினான் விக்ரம்.
காயத்ரிக்கும் அதில் விருப்பம்தான். ஆனால், திருமணத்தில் நாட்டமே இல்லாத தம்பியின் சம்மதம் பெறுவது சுலபமில்லை என்று எடுத்துரைத்தாள்.
வீட்டின் பெண்கள் ரிஷியிடம் தொடர்ந்து வாதம் செய்தபோதும் அவன் தன்னிலையில் உறுதியாக இருந்தான். கீர்த்தனாவைப் பார்த்ததுக் கூட இல்லை என்றும் அடித்துக் கூறினான்.
ரிஷியிடம் பேசினால் தெளிவு பிறக்கும் என்று கீர்த்தனா வழிசொல்ல, அவனோ ஊருக்கு வருவதற்கே மறுத்தான்.
யார் பக்கம் உண்மை என்று புரியாமல் குழம்பினார்கள் காயத்ரியும், விக்ரமும். இளையவர்களின் பிடிவாதத்தால் மூத்தவர்கள் இடையே மனஸ்தாபங்கள் வளர்ந்தது.
“மன்னிச்சிடுங்க விக்ரம்! ரிஷிக்குக் கல்யாணத்துல துளிக்கூட விருப்பமில்ல.” காயத்ரி கூற,
“அப்போ! நம்ம கல்யாணத்தைப் பற்றியும் மறந்துடு காயத்ரி!” அவனும் தீர்க்கமாகப் பதிலளித்தான்.
தன்னை மணந்துகொள்ள விரும்புவதாகத் தேனொழுகப் பேசியவன், தங்கை விருப்பமே பிரதானம் எனச் சொல்வதும், அதற்காக நிச்சயித்த திருமணத்தை ரத்து செய்வதும் கண்டவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.
மகளின் வாழ்க்கையை எண்ணி வருந்திய சாரதா, பிராயணம் முடிந்து இத்தாலியில் இளைப்பாறிக் கொண்டிருந்த மகனை அழைத்தாள். பேச்சுவார்த்தை வழக்கம்போல முடிவே இல்லாமல் நீடிக்க,
“இவ்வளவு சுயநலவாதியா உன்ன வளர்க்கவா, நான் இத்தனை வருஷம் தனியா கஷ்டப்பட்டேன்! அப்படி என்னடா உனக்குக் கல்யாணத்துல அவ்வளவு வெறுப்பு?அக்கா வாழ்க்கையைப் பற்றி யோசிச்சு பாரு ரிஷி!” கொந்தளித்தாள்.
“நீ அனுபவித்த கஷ்டம் கண்கூடா பாத்ததுனால தான் மா கல்யாணம் வேணாம்னு சொல்றேன்!” என்றவன் விமானியின் வாழ்க்கையில் உள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, எதிர்பார்க்காத நேரத்தில் தனக்கு ஒரு விபத்து நேர்ந்தால், அதன் விளைவுகள் அனைத்தும் மனைவியாக வரப்போகிறவள் சுமக்க வேண்டுமென்றும், அப்படியொரு தண்டனையை எந்தவொரு பெண்ணுக்கும் கொடுக்க விரும்பவில்லை என்றும் விளக்கினான். மேலும் பிடித்த வேலையில் இருப்பதால், தனக்கு எந்தக் குறையும் இல்லை என்று தெளிவுபடுத்தினான்.
தந்தையின் அகால மரணம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதைப் புரிந்துகொண்டாள். கீர்த்தனாவின் உறுதியை நேரில் பார்த்தவளுக்கு, அவள் மட்டும்தான் ரிஷி மனதில், வாழ்க்கை மேலிருக்கும் வீண் பயத்தை அகற்றமுடியும் என்றும் யூகித்தாள்.
“சரிடா ரிஷி! இந்தக் காரணத்தை நீயே பக்குவமாகக் கீர்த்தனாகிட்ட சொல்லிடு; அந்தப் பொண்ணு மனசு மாறினால், உங்க அக்காவோட கல்யாணம் நல்லபடியா நடக்கும்!” அவன் போக்கிலேயே சாரதா பேச,
கீர்த்தனாவை நேரில் சந்திக்க சம்மதம் தெரிவித்தான் ரிஷிகுமார்.
தொடர்ந்து வந்த நாட்களில் காயத்ரி வழக்கம்போல அலுவலகம் சென்றுவந்த போதும், விக்ரமிடம் பேசுவதைத் தவிர்த்தாள். கீர்த்தனாவிடம் அப்படி என்ன குறை கண்டுவிட்டார்கள் இவர்கள் என்று நினைத்தவனும் பதிலுக்கு வெறுப்பைக் காட்டினான்.
அக்கா தம்பி இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவியது. தெளிவான காரணங்களைச் சொல்லாமல் திருமணத்தைத் தவிர்க்கும் தம்பியின் போக்கு காயத்ரியின் மனத்தைப் புண்படுத்தியது. இல்லற வாழ்க்கை விரும்பும் அக்காவிடம், தன் கண்ணோட்டத்தைக் கூறி பயமுறுத்த விரும்பாதவன் உண்மை காரணங்களை மறைத்தான்.
இரண்டு நாட்களில் கீர்த்தனா லண்டன் கிளம்புவதாகச் சாரதா மகனுக்கு நினைவூட்ட, ரிஷி அவளை அழைத்தான்.
பேச மறுத்தவன் குரல் கேட்டதும், கீர்த்தனாவின் முகம் ஜொலித்தது. சந்தித்துப்பேச ஏதுவாக பூங்கா, கடற்கரை என்று அவள் அடுக்க,
“அதெல்லாம் வேண்டாம்! உங்க வீட்டுக்கு வந்து பேசட்டுமா! முடிந்தால் தனியாக!” பீடிகையுடன் கேட்டான்.
பெண்ணவளும் முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தாள்.
மனத்தைக் கவர்ந்தவனை நேரில் கண்டவளின் கன்னங்கள் நாணத்தில் சிவந்தது. திருமணத்திற்கு மறுப்பு சொல்லும் எண்ணத்துடன் வந்தவனோ அவள் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை.
மிஸ்…மிஸ் அவள் பெயரையும் மறந்திருந்தான்!
“ரி…” தொடங்கியவள், இடைநிறுத்தி, “கீர்த்தனா!” என்றாள்.
“ஹான் கீர்த்தனா! உங்களை மட்டுமில்ல, எனக்கு யாரையும் கல்யாணம் செய்துக்க விருப்பமில்ல!” என்றதும்,
‘ஆண்மை கோளாறோ!’ மனதில் கிளம்பிய சந்தேகத்தை வாய்விட்டு கேட்டேவிட்டாள்.
‘இப்படியும் ஒருத்தியா!’ யோசித்தவன் மென்னகையுடன், மறுப்பாய் தலையசைத்தான்.
விமானியாகப் பணிபுரியும் தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்து சராசரி மனிதர்களைக் காட்டிலும் அதிகம் என்பதால் திருமணம் பந்தத்தில் தனக்கு நாட்டமில்லை என்றான்.
“என்னம்மோ நாட்டுக்காகச் சேவை செய்யும் ராணுவ வீரன் மாதிரி பேசுறீங்க!” கிண்டலாகச் சிரித்தாள்.
அவள் எள்ளல் பேச்சில் கடுப்படைந்தவன், “சண்டைக்குப் போனாலும் சுற்றுலாவுக்குப் போனாலும் விமானம் ஆகாயத்தில் தான் பறக்கும். அதை ஒட்டுறவங்க உயிருக்கும் ஆபத்து அதிகமாக இருக்கும்!” நிதர்சனத்தை உரைத்தான்.
அப்போதும் சலிக்காமல் தர்க்கம் செய்து சீண்டினாள்.
“அப்படின்னா ஆகாயத்தில் பறந்தாலும், சாலையில் உருண்டாலும் தண்ணீரில் நீந்தினாலும் இறப்பதுதான் விதியென்றால் அதை யாராலும் தடுக்கமுடியாது. உங்க பயம் அர்த்தமற்றது ரிஷிகுமார்!”
“இறப்பது இயற்கையானதுதான்!” தொடங்கியவன், நிறைவான வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்த பிறகு இறப்பதில் தவறில்லை என்றும், எதிர்பாராத நேரத்தில், நாம் நேசித்தவர்கள் நம்மைவிட்டு பிரிவது கொடுமை என்றும் வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தினான்.
இன்றைய பொழுதின் இனிமைகளை ரசிக்காமல், நாளைய சிந்தனையில் வீண் மனவுளைச்சல் கொள்ளும் இப்படியொரு ரிஷியை சந்திப்பாள் என்று கனவிலும் நினைக்காதவள்,
“மரணபயம்தான் உங்களுக்குப் பிரச்சனைன்னா, நான் வேணும்னா, எமதர்மராஜா கிட்ட சொல்லி உங்களுக்குச் சாகாவரம் வாங்கித்தரட்டுமா?” எகத்தாளமாகக் கேட்டு கண்சிமிட்டினாள்.
“மிஸ்.கீர்த்தனா! கண்டதும் காதலா?” புருவங்கள் உயர்த்தி கேட்டான்.
“ஏன் இருக்கக் கூடாதா?” பதிலுக்கு ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டு, வியப்பில் ஆழ்த்தினாள்.
“படித்தப் பெண்தானே நீங்க?” பற்களை நறநறத்தான்.
“அப்போ நிழற்படம் பார்த்து, பத்து நிமிடம் பேசிப் பழகிய உங்க அக்காவுக்கும், என் அண்ணாவுக்கும் காதல் வந்திருக்கே; அவங்க படிச்சவங்க இல்லையா?” ஏட்டிக்குப்போட்டி வாதாடினாள்.
தன் மனதில் உள்ள நெருடலை சொல்லும்வரை இப்படித்தான் அடம்பிடிப்பாள் என்று புரிந்துகொண்டான் ரிஷி.
தந்தை விபத்தில் இறந்தபின், அன்னை சந்தித்த சவால்கள் இன்னும் கண்முன் பசுமரத்தாணியாக இருப்பதைத் தாழ்ந்த குரலில் விளக்கினான். இளம்வயதில் தந்தையை இழந்து தானும் தன் குடும்பத்தினரும் பட்ட சிரமங்களைப் பார்த்து எடுத்த முடிவு என்றவன்,
“ப்ளீஸ் கீர்த்தனா! என் மனநிலையைப் புரிஞ்சுக்கோங்க! உங்க அண்ணனுக்கும் புரியவைத்து, என்னோட அக்காவைக் கல்யாணம் செய்துக்க சொல்லுங்க!” கெஞ்சலாகக் கேட்டான்.
“உம்” மென்மையாகத் தலையசைத்தவள், இரண்டு நிமிடத்தில் வருவதாகச் சொல்லி ஒரு நாட்குறிப்பை எடுத்து வந்தாள்.
அதை அவனிடம் நீட்டி, “உங்க அப்பாவோட மரணம்தான் எனக்கும், உங்க மேல காதல் மலர காரணமாக இருந்தது ரிஷி!”
காலத்தால் பழுப்படைந்த அந்த நாட்குறிப்பின் முதல் பக்கம் திறந்ததுமே, அவனுக்கு அத்தனையும் விளங்கியது.
“அன்புள்ள ரித்தி,
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
இப்படிக்கு ரிஷி!”
நெளிவுசுளிவாகப் பதிந்திருந்த தன் கையெழுத்தைக் கண்டுகொண்டவன்,
“ரித்தி!” கேள்வியாக அவளை நோக்கினான்.
“ம்ம்!” மூடித்திறந்த அவள் இமைகளின் இடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
ஐந்தாம் வகுப்பில் எடுத்த புகைப்படம் பார்த்து அவளுக்கும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பரிசளித்த நாட்குறிப்பு பார்த்து அவனுக்கும், பள்ளிப்பருவத்தின் பசுமையான நினைவுகள் பசுமரத்தாணியாக கண்முன் தோன்றியது.
அன்று…
“பாருங்க பா! ரித்திக்கு நான் கொடுத்த பரிசு பிடிக்கலையாம்.” வீட்டிற்கு அழைத்துச்செல்ல வந்த அப்பாவிடம், அழுதுக்கொண்டே உடன் நடந்த தோழியைச் சுட்டிக்காட்டினான்.
“எனக்கு ஹீரோபென் வேணும்னு தானே Santa கிட்ட கேட்டேன். நாட்குறிப்பு கேக்கலியே!” முணுமுணுத்தாள் கீர்த்தனா.
பள்ளிக்கூடத்தில், மாணவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று பரிசுகள் பரிமாறிக்கொள்ள ஏதுவாக “கிறிஸ்மாம்” விளையாட ஏற்பாடு செய்திருந்தார் ஆசிரியர். பிள்ளைகள் துருப்பு சீட்டில் தங்களுக்குப் பிடித்தப் பரிசுகளின் பெயர்களை எழுதினர். அவற்றை ஒரு ஜாடியில் போட்டு பிள்ளைகளை அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னார் ஆசிரியர்.
ரிஷியிடம், கீர்த்தனா எழுதிய சீட்டு வர, அதில் அவள் தனக்கு ஒரு ஹீரோபென் வேண்டுமென்று எழுதியிருந்தாள். ரிஷியும் அதை வாங்கித்தருமாறு தந்தையைத் தொல்லை செய்தான்.
அன்றாட தேவைகளுக்குப் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருக்கு, பள்ளிகள் இதைப்போன்ற யுக்திகளில், பெற்றோருக்கு வீண் செலவு வைப்பதாக நினைத்தார். அவன் கேட்ட எழுதுகோலின் விலை அதிகம் என நினைத்தவர், அலுவலகத்தில் புத்தாண்டு பரிசாகப் பெற்ற நாட்குறிப்பை அவளுக்கு தரும்படி ரிஷியிடம் வலியுறுத்தினார்.
வேண்டாவெறுப்பாக அவன் அதைத்தர, கீர்த்தனாவும் அதில் அதிருப்தி கொண்டு, அழுது ரகளை செய்தாள்.
விசும்பும் குழந்தையை மைதானத்தின் புல்தரையில் அமர்த்தி அருகில் அமர்ந்தார். கீர்த்தனாவின் வாடிய முகத்தை கையில் ஏந்தியவர்,
“அங்கிள் பாருமா!” மென்மையாக அழைத்து,
“நமக்காக ஆசையா ஒருத்தர் தரும் எந்தப் பரிசுப்பொருளும் உயர்ந்தது. நீ கேட்ட ஹீரோபென் காட்டிலும், இந்த நாட்குறிப்பு இன்னும் சிறப்பானது. உன்னோட சின்ன சின்ன சந்தோஷங்களை இதில் எழுதி வெச்சுக்க பழகு. நாளிடைவில் மறந்துப்போகும் நினைவுகள் கூட இதில் நிரந்தரமா இருக்கும். அவ்வளவு ஏன்! நம்ம நேசித்த மனிதர்கள் நம்மளவிட்டு ரொம்ப தூரம் போயிடுவாங்க; ஆனா அவர்களின் நினைவுகளைச் சுமக்கும் இந்த நாட்குறிப்பு, அவங்க நம்ம பக்கத்துல இருக்கும் உணர்வை தரும்.” என்றவர்,
பிள்ளைகளுக்குப் புரியும் விதத்தில், ஆன் பிராங்கின் டைரி (The Diary of Anne Frank) பற்றி விவரித்து அது எப்படிச் சரித்திரத்தில் இடம்பெற்றது என்றும் எடுத்துரைத்தார்.
ஹீரோபென் மட்டுமே சிந்தனையில் நிறைந்திருக்க, ரிஷி தந்தையின் அறிவுரைகள் பொருட்படுத்தாமல், வீட்டிற்குப் புறப்பட்டாள்.
விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிக்குத் திரும்பியவள், ஒரு வாரத்திற்கு மேலும் ரிஷி பள்ளிக்கு வராததைக் கவனித்தாள். அவன் தந்தை விபத்தில் இறந்ததால், அவர்கள் ஊரைவிட்டு சென்றதாக அறிந்தவளுக்கு, ஏனோ ரிஷியின் ஞாபகம் வாட்டியெடுத்தது.
‘க’வில் தொடங்கும் சொற்கள் அனைத்தையும் , ‘த’ என்று உச்சரிக்கும் அவளை நண்பர்கள் கேலி செய்தபோது, ‘ரிஷிகுமார்’ என்ற தன் பெயரை ‘ரிஷி’ எனச் சுருக்குவது போல, ‘கீர்த்தனா’ என்ற அவள் பெயரை ‘ரித்தி’ எனச் சுருக்கலாம் என்றான். கேலி செய்பவர்களிடம் தனக்காக முதன்முதலில் பரிந்துப் பேசியவன் அவன்தானே.
நேசித்தவர்கள் வெகுதூரம் விட்டுச்சென்றாலும், நாட்குறிப்பின் நினைவுகள் அவர்களை அருகிலேயே இருக்கவைக்கும் என்று அவன் தந்தை சொன்ன அறிவுரை நினைவுகூர்ந்தாள். ரிஷியுடன் கழித்த பசுமையான நினைவுகளை அந்த நாட்குறிப்பில் நிரப்பினாள். அன்றிலிருந்து கற்பனையில் அவனுடன் கதைக்கப் பழகியவள், அந்த உரையாடல்களையும் எழுத, நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் அவளுக்கு வாடிக்கையானது.
இன்று….
ரித்தி-ரிஷி என்று ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பம் இட்டிருப்பதைக் கண்டவன், கீர்த்தனாவை கேள்வியாக பார்க்க, சமீபத்தில் எழுதிய நாட்குறிப்பு ஒன்றை காட்டினாள்.
“இன்னுமா அப்படி எழுதற!” வியந்தான்.
“எப்போவுமே அப்படித்தான் எழுதுவேன் ரிஷி!” பதில் உரைத்தவள்,
“உன் அப்பாவின் மறைவு, நம்ம ரெண்டு பேரு மனசுலயும், பசுமரத்தாணியா பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கு டா! நீ எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடு, நிகழ்காலத்தைக் கடக்கற; நான் கடந்தகாலத்தின் பசுமையான நினைவுகளே போதுமென்ற மனநிறைவோடு, நிகழ்காலத்தைக் கடக்கறேன்.”, பெருமூச்சுவிட்டவள், அவன் கைவிரல்களைக் கோர்த்து,
“நல்லதே நடக்கும்னு நம்பிக்கையோட நாம நிகழ்காலத்தைச் சேர்ந்து வாழலாமே ரிஷி!” யாசிக்கும் குரலில் கெஞ்சினாள்.
தடுமாற்றத்தில் தத்தளித்தவன் மௌனம் காக்க, அவனை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என நினைத்தவள்,
“சரி! உனக்குப் பிடிச்ச வாழ்க்கையை நீ வாழு டா! அண்ணா-அண்ணி திருமணம் நல்லபடியா நடக்கும்; அதுக்கு நான் பொறுப்பு! காயத்ரி அண்ணிகிட்ட சொல்லிடு!” விட்டுக்கொடுத்தாள்.
ஊசலாடிய மனம், பெண் அவளின் அன்பில் விழ, “ஹீரோபென் வாங்கித்தரட்டுமா?” பனித்த கண்களோடு அவளே கதி என்று சரணடைந்தான்.
“ஹீரோ தான் பெண்ணைத் தேடி வந்துட்டானே! வேணும்னா பார்க்கர் பென் வாங்கித்தா!” குளமான கண்களுடன் புன்னகைத்தவள், அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
ரிஷியின் மனமாற்றத்தை அறிந்து அனைவரும் மகிழ அவர்களின் பள்ளிப்பருவம் நட்பை பற்றியும் விளக்கினாள் கீர்த்தனா. கணவரின் அறிவுரையை ஆழமாக உள்வாங்கிய கீர்த்தனா மேலிருந்த மதிப்பு பன்மடங்காகப் பெருகியது சாரதாவிற்கு.
விளையாட்டு பெண் என்று நினைத்த அண்ணனோ, தங்கையின் ஆத்மார்த்தமான காதல் கதையைக் கேட்டுப் பேச்சற்றுப் போனான்.
தம்பியின் மனதில் இத்தனை மனப்போராட்டங்களா என்று காயத்ரி உணர்ந்தபோதும், விக்ரம் மேலிருந்த கோபம் மட்டும் துளியும் குறையவில்லை.
“மன்னிச்சிரு அக்கா! என்னோட பிடிவாதத்தால் தானே உங்க ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்!” ரிஷி பழி சுமக்க,
“இல்ல அண்ணி! நான் உங்க எல்லார் கிட்டயும் வெளிப்படையா பேசியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. தப்பு என்னுடையது தான்!” வருந்தினாள் கீர்த்தனா.
காயத்ரி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சிலையாக நிற்க,
“நம்ம கல்யாணம் நடக்காதுன்னு சொன்னது தப்புதான் காயத்ரி! ஆனா, என் நிலைமையிலிருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு!” என்ற விக்ரம்,
தங்கை விரும்பும் வாழ்க்கையை அமைத்து தரவும் முடியாமல், ரிஷியுடன் மச்சான் என்று உண்மையாக உறவாடவும் முடியாமல் திண்டாடுவதற்கு, விலகிவிடுவதே அனைவருக்கும் நல்லது என்று யோசித்ததாகச் சொன்னான்.
ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி கெஞ்சினார்கள். அப்போதும் அவள் சிலையாக நின்றாள்.
“ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது டி!” அசையாது நிற்கும் பெண்னைக் கண்டித்தாள் சாரதா.
எவருடைய பேச்சையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அலைபேசியை விரல்களால் வருடினாள்.
“காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா!
கேட்கும்வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா!”
என விக்ரம் அலைபேசி இசைக்க, திடீரென்று ஒலித்த அந்தப் பாடலின் ஒலியை குறைக்கமுடியாமல் அசடுவழிந்தான் அவன்.
தன் அலைபேசியைக் செவி அருகில் பிடித்துக் கொண்டவள், “விலகிப்போக நினைத்தவர், ஏன் இன்னும் அதே ரிங்க்டோன் வெச்சிருக்கீங்க?” இறுகிய முகத்துடன் அதிகாரமாய் கேட்டாள்.
“டேய் அண்ணா! இதுதான் உன்னோட தங்கை பாசமா?”, கீர்த்தனா பொய்கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, காதல் மயக்கத்தில் மிதந்தவனோ தன்னவளை இமைக்காமல் பார்த்த வண்ணம் நின்றான்.
அவன் உதடுகள் உச்சரித்த சொற்கள் யாவும் மனத்திலிருந்து உதிக்கவில்லை என்று உணர்ந்தவளும் மென்சிரிப்புடன் தன் காதலை விழிகளில் தூது அனுப்பினாள்.
பிள்ளைகள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததை எண்ணி நெகிழ்ந்த சாரதா, நிழற்படத்தில் உறைந்த கணவரிடம் நன்றிகூற,
‘பேரப்பிள்ளையாக மறுஜென்மம் எடுத்து விரைவில் உன்னிடம் வருகிறேன்!’ சொல்வதுபோல அவரும் புன்னகைத்தார்.
நேசித்த உறவுகள் நெஞ்சத்தில் நிறைந்திருக்க,
நாட்குறிப்புகளில் நினைவலைகள் நிரந்தரமாக,
நிழலாகத் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்!!!