பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 05

“இங்க எதுக்கு வந்த? இன்னும் யார் வாழ்க்கையை கெடுக்கணும்னு திட்டம்போட்டிருக்கு?” குணாவை பார்த்ததும் கர்ஜித்த மீனாட்சியின் கோபமும், வெறுப்பும் மூன்றாண்டுகள் ஆனபோதும் துளிக்கூட குறையாமல் இருந்தது.

மனைவி பெருங்குரலில் கூச்சலிடும் சத்தத்தில் மாணிக்கமும் வாசலுக்கு வந்துவிட்டார்.

“சுதாவுக்கு கல்யாணம்னு கேள்விபட்டேன்!” குணா தன்மையாய் தொடங்க, மதுமிதா “மா…மா…மாமா” மழலையில் மொழிந்து அவர்களை அழைத்தாள்.

மதுமிதாவின் மழலைத்தேன் மொழியில் கூட அவர்கள் மனம் இளகவில்லை. தேக்கிவைத்த கோபம்தான் எரிமலையாய் கொப்பளித்தது.

“தாயில்லா பிள்ளையோட வந்து நின்னா உன்மேல இரக்கப்படுவோம்னு நெனச்சியா…இல்லை சுதாவை ரெண்டாம் தாரமா கட்டி வெச்சிருவோம்னு கணக்கு போட்டையா?” பொங்கினார் மாணிக்கம்.

“ஏன் மாமா ஏதேதோ பேசுறீங்க! சுதாவுக்கு திருமண வாழ்த்துச் சொல்லி, அப்படியே, அம்மு அவளுக்காகவே தைத்த புத்தாடை கொடுக்க வந்திருக்கேன்!” கோபத்தைக் கட்டுப்படுத்தி, கொண்டுவந்த பொருட்களைக் காட்டினான்.

கைகளை உயரத்தூக்கி கும்பிடு போட்டவர், “போரும் பா! நீ என் பெரிய பொண்ணுக்கு சீர் செஞ்சு அவ வாழ்க்கைய சீரழிச்சது!” ஏளனமாக குத்திக்காட்டி புறப்படுமாறு கையசைத்தார்.

தன்மானத்தை சீண்டியவர் முன் பணிய மனமில்லாதவன், குழந்தை முகத்தை தன்பக்கம் திருப்பி,

“மதுகுட்டி! இவங்ககிட்ட எல்லாம் தழைஞ்சு போனா வேலைக்கு ஆகாது செல்லம்…” என்றவன்,

“உள்ள வரீங்களா? இல்ல தெருவுலேயே நம்ம பஞ்சாயத்த வெச்சுக்கலாமா மாமா?” அதிகாரமாகக் கேட்டான்.

அவர்கள் மௌனமாய் நிற்க, குணாவே மேலும் பேசினான்.

“எனக்கு ஒண்ணும் இல்ல…வீட்டுப் பிரச்சனை ஊர் பிரச்சனையா நீங்க வளர்த்து விட்டுட்டு, அப்புறம் என்னால தான் உங்க ரெண்டாவது பொண்ணு கல்யாணம் நின்னு போச்சுனு சொல்லாதீங்க!” எச்சரிக்க, அவர்களும் வேறு வழியில்லாமல் உள்ளே நடந்தனர்.

ஒவ்வொரு அறையாக மேற்பார்வை இட்டபடி, குழந்தையிடம் கதையளந்தான். மூன்றாண்டுகளில் பெரிதாக மாற்றமில்லை என்று கவனித்தவன், சுதா வீட்டில் இல்லை என்பதையும் கண்டுகொண்டான். யமுனா அறையிலிருந்து பல்லாங்குழி பலகையை எடுத்து, அதைக் குழந்தையிடம் காட்ட, அவளும் துள்ளலாக கைத்தட்டி விளையாட ஆயத்தமானாள்.

“மதுகுட்டி, இப்போ ஒவ்வொரு குழிலையும் அஞ்சு அஞ்சு சோழி போடுவாளாம். மிச்சத்த அப்பாகிட்ட கொடுப்பாளாம். அதுக்குள்ள அப்பா, தாத்தாகிட்ட பேசிட்டு வந்துடுறேன் சரியா!” கொஞ்சிப்பேச, அவளும் எல்லாம் புரிந்ததுபோல தலையசைத்தாள்.

“எதுக்கு என்மேல கோபப்படுறீங்க மாமா…உங்க பொண்ணு இருந்தவரைக்கும் அவளை நல்லாதானே பார்த்துகிட்டேன்…இதோ, இப்போ உங்க பேத்தியை…இதைவிட வேறென்ன உங்க மருமகன்கிட்ட எதிர்பாக்குறீங்க!” சகஜமாக பேசினான்.

செய்வதை எல்லாம் செய்துவிட்டு தேனொழுக பேசுகிறானே என்று எரிச்சலடைந்தார் மாணிக்கம்.

“காதல்ன்ற பேருல ஆசைகாட்டி, உன் தேவைகளை மட்டும் தீர்த்துகிட்ட நீயெல்லாம், நல்ல மருமகனா…ச்சீ!”அருவருப்பாக முகம் சுளித்தார்.

“ஜோசியர் சொல்படி கேட்டிருந்தா, இன்னைக்கு என் பொண்ணு உயிரோட இருந்திருப்பா இல்ல…எல்லாம் நாங்க பக்குவமா நடந்துக்கறோம்னு சொல்லிட்டு என்ன செஞ்சு வெச்சிருக்க!” மதுமிதாவை ஏறிட்டபடி புலம்பினாள் மீனாட்சி.

“பரிகாரம்ன்ற பேருல யமுனாவை என்கிட்டேந்து பிரிச்சு, அந்தக் கிழவனுக்கு கல்யாணம் செஞ்சு வெக்கலாம்னு தானே நெனச்சீங்க!” அவளை மடக்கினான் குணா.

“பரிகாரம் பொய்னா, யமுனா ஏண்டா இறந்தா!” ஆத்திரம் கொண்டார் மாணிக்கம்.

“அப்போ கொரோனாவுல செத்துப் போனவங்க எல்லாரும் பரிகாரத்தை மீறி குழந்தைப் பெத்துக்கிட்டதுனால தான் இறந்துப் போனாங்கன்னு சொல்றீங்களா மாமா?” கேள்வியைத் திருப்பினான் குணா.

அதற்குள் மதுமிதா, மிச்சம் நான்கு சோழிகள் என்று நீட்ட, குழந்தையோடு, “5,10,15,20,25,30!” என்று ஒவ்வொரு குழியிலும் விரல் வைத்து எண்ணியவன், “வெரி குட் மதுகுட்டி!” பாராட்டி, “இப்போ நாலு நாலா போட்டுட்டு மிச்சத்தை எடுத்துட்டு வா.”

அவளும் பல்லாங்குழி பலகையுடன் தரையில் அமர்ந்தாள்.

“ம்ம்…பதில் சொல்லுங்க மாமா!” நினைவூட்டினான்.

ஏடாகூடமாய் பேசுபவனிடம் வீண்விவாதம் ஏன் என்று சலிப்புத்தட்ட,

“அதான் உனக்குத் தேவையான என்னோட பூர்வீக வீடு எழுதி வாங்கிட்டியே… இன்னும் எதுக்கு நல்லவன் மாதிரி நடிக்குற?” பேச்சைத் திசைதிருப்பினார் மாணிக்கம்.

“எது? உங்க பூர்வீக வீடா?” பெருங்குரலில் சிரித்து, அதிகாரமாய் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தவன்,

“தாத்தா வீட்டுல என்னோட அம்மாவுக்குப் பங்கு தராம மொத்த சொத்தையும் நீங்களே எடுத்துகிட்டு, உங்க வீடுன்னு சொந்தம் கொண்டாடுறீங்களா!” நியாயம் கேட்டு அவர் வாயடைத்தான்.

மாணிக்கம் தலைகுனிந்து நிற்க, கணவரின் சார்பில், மீனாட்சி கசந்த குரலில் பேசினாள்.

“பூர்வீகவீடு வழிவழியா குடும்பத்தின் ஆண்வாரிசுக்குக் கொடுக்கறது தான் வழக்கம். உங்க மாமாவும் அவர் காலத்துக்கு அப்புறம் உனக்குத் தான் சேரணும்னு முடிவு செஞ்சியிருந்தாரு தெரியுமா!” குணாவைப் பெற்ற பிள்ளையாகப் பாவித்து அவர்கள் சிந்தித்த எதிர்காலத் திட்டங்களை விவரித்தாள்.

“அப்போ எனக்கு சேர வேண்டியதை தானே வாய்விட்டு கேட்டிருக்கேன்…அப்புறம் ஏன் என்னை எதிராளியாகவே பாக்குறீங்க!” முகத்தில் தோன்றிய குற்றவுணர்ச்சியை மறைத்துத் தோளினை குலுக்கினான்.

அச்சமயம் மதுமிதா, மீதம் இரண்டு சோழிகள் என்று குணாவிடம் காட்ட, அவனும் குழந்தை அருகில் அமர்ந்து 4,8,12,16,20,24,28,32 என்று நிதானமாக எண்ணி, “குட் ஜாப்!” என்று பாராட்டினான்.

இரண்டு வயதிலேயே கணக்கில் அதிபுத்திசாலியாக இருக்கிறாளே என்று கவனித்த மீனாட்சி,

‘அப்படியே அப்பனை கொண்டு வந்திருக்கு!’ மனதில் முணுமுணுத்தாள்.

குழந்தையை மடியில் அமர்த்திக்கொண்டு வேறொரு கணக்கு கொடுத்தவன்,

“வந்தது வந்துட்டேன்! சுதாவை பார்த்துட்டு கிளம்பறேன் மாமா!” ஏதோ விருந்துக்கு வந்தவன் போல அறிவித்தான்.

மகள் வீடு திரும்பும் முன் அவனை விரட்டியே ஆக வேண்டுமென்று உறுதியாக இருந்தாள் மீனாட்சி.

“நீங்க இவன்கிட்ட கெஞ்சறத விட்டுட்டு, நடந்த அத்தனையும் சாவித்ரிகிட்ட சொல்லுங்க. அப்போதான் மகனை  வளர்த்திருக்கும் லட்சணம் அவங்களுக்கும் தெரியும்.” பொறுமையிழந்தாள் மீனாட்சி.

குணா, பணம் கேட்டுத் தொல்லைசெய்த அக்கிரமங்கள் எல்லாம் அறிந்தால், தங்கை மனவுளைச்சலில் உயிரைக்கூட விட்டுவிடுவாள் என்று பயத்தில்தான், மூன்றாண்டுகளாக மாணிக்கம் மௌனம் காத்தார். ஆனால் சுதாவின் திருமணத்திற்கு இவனால் பேராபத்து வந்துவிடுமோ என்று பதறியவருக்கு, மனைவி சொல்லும் யோசனை சரி என்று பட்டது.

“இப்போ நீ கிளம்புறியா…இல்ல உங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லட்டுமா?” மிரட்டினார் மாணிக்கம்.

பாசமலர் தங்கையின் மீதிருந்த அதீத பாசத்தில், மாமா எதையும் அம்மாவின் காதில் போடமாட்டார் என்ற தைரியத்தில் தான் குணாவும் தயக்கமின்றி அவரிடம் பணம் வாங்கிக்கொண்டிருந்தான்.

மாணிக்கம் மிரட்டியதில், மனதளவில் பதறினாலும், பயந்தால் தலைக்குமேல் ஏறி உட்காருவார்கள் என்ற நிதர்சனத்தை நொடியில் உணர்ந்தான்;

நிலைமையை எப்படி கையாளுவது என்று சிந்தித்தபடி, விளையாட்டு சாமான்களை ஏறக்கட்டியவன்,

“அம்மாகிட்ட சொல்லித்தான் பாருங்களேன்! உங்க ரெண்டாவது பொண்ணு கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கறேன்!” பதிலுக்கு மிரட்டி, குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.

“மது குட்டி! சுதா சித்திய நம்மளோட அமெரிக்கா அழைச்சிட்டு போகலாமா டா!” குழந்தையிடம் கொஞ்சிப்பேச,

அவளும் குணாவின் தோளினை சுற்றி வளைத்து, “மா…மா…மாமா!” என்று முத்தமிட்டாள்.

கர்வப் புன்னகையுடன் வாசலை நோக்கி வேகநடையிட்டான் குணா.

ஒரு மகளை இவன் மிரட்டல்களுக்கு பயந்து இழந்தது போதுமென்று தெளிந்தவர்,

“சொல்லமாட்டேன்னு நெனச்சியா டா! நாளைக்கே நீ செஞ்ச அக்கிரமங்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல ஆதாரத்தோட புகார் கொடுத்து, உனக்கு அரெஸ்ட் வாரண்ட் வாங்கிட்டு வந்து சொல்றேன்!” ஆவேசமாக கர்ஜித்தார்.

திரும்பிப் பார்க்காமல் முன்வாசலை நோக்கி நடந்தவன் அங்கமெல்லாம் நடுங்கியது.

வம்பை விலைக்கு வாங்கிவிட்டதை உணர்ந்தவன், பிரச்சனை நீடிக்காமல் இருப்பதற்கு வழி ஒன்றை யோசித்தபடி காரில் அமர்ந்தான். நண்பன் உள்ளம் அறிந்தவன் போல ஊரிலிருந்து அஷ்வின் அழைக்க, நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்தான் குணா.

“உனக்குப் பொறுமைனா என்னன்னே தெரியாதா டா குணா!” கடிந்தவன், “வேலியில் போகுற ஓணானை எடுத்து மடியில கட்டிக்கிட்டு, இப்போ என்ன செய்யறதுன்னு கேட்குற!” இடித்தும் காட்டினான்.

“நான் பொறுமையா தான் டா பேசினேன்! அவங்கதான் என்னை குற்றவாளி மாதிரியே பாக்குறாங்க!” தன்மானத்தை உரசினார்கள் என்று குணா புலம்ப,

“பார்க்காம! நீ செஞ்ச வேலைக்கு வா டா மருமகனேன்னு விருந்து வெப்பாங்களா…ஆயிரம் முறை சொன்னேனே… சண்டைய வளர்காதன்னு!” சலித்துக்கொண்டான் அஷ்வின்.

“சரி! நீயும் அவங்கள மாதிரியே பேசாத! இப்போ என்ன செய்யலாம்னு சொல்லு…ப்ளீஸ் டா!” கெஞ்சினான் குணா.

“நாளைக்கு உன்ன கைது செஞ்சா, என் கூட்டாளி ஒருத்தன் அமெரிக்காவில் இருக்கான்னு என்னைக் காட்டிக்கொடுக்காத!” அஷ்வின் கடுப்பாக,

“அஷ்வின்….” திடுக்கிட்டான் குணா.

விதி விரித்த வலையில் சிக்கியவன் என்ன செய்வான் என்று பரிதாபம் கொண்டவன்,

“சரி! நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்பு. நான் யோசிச்சு சொல்றேன்!” ஆறுதலாய் பேசி அழைப்பைத் துண்டித்தான்.

வீடு திரும்பியவனின் நல்லதிர்ஷ்டம், கமலாம்மா மட்டும்தான் அங்கிருந்தாள். பெற்றோர் கோவிலுக்கு சென்றிருப்பதாகக் கூடுதல் தகவலும் சொன்னாள்.

பிள்ளைகள் செய்யும் பாவங்களுக்குப் பெற்றவர்கள் தானே பரிகாரம் தேடியாக வேண்டும். அதுதானே பாசத்தின் பொன்விதி.

மதுமிதாவைப் பார்த்துக்கொள்ளும் படி கமலாம்மாவிடம் கேட்டுக்கொண்டவன், தனக்குக் கல்லூரி வேலை இருப்பதாகச் சொல்லி நழுவினான்.

நண்பன் அழைப்புக்காக காத்திருந்தவனுக்கு ஒரு யுகம்போல இருந்தது. ஒரு மணி நேரத்தில் குணாவை காணொளி அழைப்பில் தொடர்புகொண்டான் அஷ்வின். திரையில் நண்பனின் முகத்தைக் கண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவனுக்கு, தன் முகத்தை தான் காட்டமுடியவில்லை.

 செய்த வேலை அப்படியே…

“என்ன கைதி செஞ்சிட்டாங்கனா, மதுகுட்டியை மறந்துடாத டா…ஊருக்கு அழைச்சிட்டு போய் உன்கூடவே வெச்சுக்கோ!” பவ்வியமான குரலில் கெஞ்ச,

“இதெல்லாம் கெத்தா மிரட்டறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்!” ஏளனமாகத் திட்டினான் அஷ்வின்.

“சும்மா பயமுறுத்த தான் டா அப்படிப் பேசினேன்!” குணா முகம் சுருக்க,

“உன் மாமாவும் உன்னைப் பயமுறுத்த தான் போலீஸ் அது இதுன்னு மிரட்டிருப்பாரு…“சுதா கல்யாணமாகும் வரை கண்டிப்பா அவர் போலீஸ்கிட்ட போகமாட்டாரு டா…” அஞ்சாதே என்றதும்,

குணா முகத்தில் நம்பிக்கை மலர்ந்தது.

“….ஆனா உங்க அம்மாகிட்ட சொல்ல வாய்ப்பு இருக்கு!” பீடிகையுடன் முடிக்க,

குணாவின் மலர்ந்த முகம் வாடியது.

பிரச்சனைகளைத் தவிர்க்க, அம்மாவையும் ஊருக்கு அழைத்து வரும்படி யோசனை சொன்னான் அஷ்வின்.

சுதா திருமணம் முடியும்வரை, அம்மா தன்னுடன் வர விரும்பமாட்டாள் என்று உறுதியாகச் சொன்னான் குணா.

“அப்போ நீ சுதா கல்யாணம் முடியும்வரை ஊருலேயே இரு…அப்புறம் அம்மாவை இங்க அழைச்சிட்டு வந்துடு…அடுத்த எட்டு மாசத்துக்கு நம்ம பயப்பட வேண்டாம்!” மறுயோசனை சொன்னவன்,

சாவித்ரி அவன் கண்பார்வையில் இருப்பது மட்டுமே பிரச்சனைகளுக்குத் தற்காலிகமான தீர்வு என்றும் வலியுறித்தினான்.

“சுதா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு டா! அதுவரை இங்க இருந்தா, என் வேலை, மதுகுட்டி மருத்துவ சிகிச்சை….” தடைப்படக்கூடிய காரியங்களை அடுக்கினான் குணா.

“அது சரி!” உதட்டை சுழித்தவன், “நீ செஞ்சது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தா முதல்ல உன் வேலை பறிப்போகும்…அப்புறம் மதுமிதா!” நிதர்சனத்தை எடுத்துரைத்தவன்,

“இங்க பாரு குணா! இப்போ நமக்கு வேறவழியில்ல…உன் மாமாவுக்கு ஒரு சின்ன துப்பு கிடைச்சாலும் போதும்…நம்மள உண்டில்லன்னு பண்ணிடுவாரு…. அதனால கல்லூரியில் என்ன சொல்லி சமாளிக்கலாம்னு நீ யோசி, மதுமிதா சிகிச்சைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்யறேன்!” ஒரே வழிதான் உள்ளது என்று திட்டவட்டமாக விளக்கினான்.

நண்பன் சொல்வதுதான் சரி என்று உணர்ந்தவன், மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவித்தான்.

‘மாமன் வீட்டிற்குச் சென்றிருக்கவே கூடாதோ; அவர்களிடம் தேவையில்லாமல் வாதம் செய்திருக்கவே கூடாதோ;’ கைமீறிப் போன விஷயங்களை நினைத்து வருந்தினான்.

கமலாம்மா அறையின் கதவை தட்ட, முகத்தில் தோன்றிய உணர்வுகளை மறைத்து இயல்பாகப் பேசி சமாளித்தான்.

உறங்கும் குழந்தையை மெத்தையில் விட்டு, வீட்டிற்குப் புறப்படுவதாகச் சொல்லி நகர்ந்தாள்.

பால் வடியும் குழந்தையின் நெற்றியில் படர்ந்த முடியை மென்மையாக ஒதுக்கியவன்,

‘எனக்கு வேலை போனாலும் பரவாயில்ல மதுகுட்டி! நீதான் எனக்கு முக்கியம்! நீ மட்டும்தான் எனக்கு முக்கியம்!’ மனதை திடப்படுத்திக் கொண்டவன், கல்லூரியில் விடுப்பு கேட்க தன் மின்னஞ்சல் முகவரி திறந்தான்.

தன் உயர் அதிகாரியிடமிருந்து வந்த அந்த செய்தியைக் கண்டவனின் கண்கள் பனித்தன. அதிர்ஷ்ட்ட தேவதை இன்னும் தன் பக்கம் இருப்பதாக உணர்ந்தான்.

மாநாட்டில் கலந்துகொண்ட கல்லூரி நிர்வாகங்கள், குணா கட்டாயம் தங்கள் வளாகங்களுக்கு வந்து மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டுமென்று விண்ணப்பித்திருந்தனர். குணாவின் வசீகரிக்கும் பேச்சால், இந்திய மாணவர்கள், மேற்படிப்புக்காகத் தங்கள் கல்லூரியை தேர்ந்தெடுப்பார்கள் என்று யூகித்த உயர் அதிகாரி, அவனை அந்தக் கல்லூரிகளுக்குச் சென்று வரும்படி கேட்டுக்கொண்டார்.

அதுவரை அவன் இந்தியாவில் இருந்தபடியே தன் வசதிக்கு ஏற்ப பாடங்களை நடத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் இருக்கவேண்டிய நிர்பந்தத்தை விளக்க அவசியமில்லாமல் போனதை எண்ணி நெகிழ்ந்தான். அவருக்குத் தன் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துப் பதில் எழுதினான்.

மாலையில் வீடு திரும்பிய அன்னையிடம், பயணத்தை ஒத்திப்போட்டதாகக் கூறி, குறிப்பாக சுதாவின் திருமணத்தை முன்னின்று நடத்துவதாகம் சொல்ல, அவள் மறுகேள்வி இன்றி மகனை ஆரத்தழுவினாள்.

மகிழ்ச்சியில் தத்தளித்தவளுக்குத் தலைகால் புரியவில்லை. படபடவென்று அண்ணனை அழைத்தாள்.

“அண்ணா! இருந்தாலும், குணாவுக்கு உங்கமேல தனி பாசம்தான்!” மறுமுனையில் மாணிக்கம் குரல் கேட்டதும், பொடிவைத்து பேசி, மகனை பெருமிதத்துடன் ஏறிட்டாள்.

சவால்விட்டுச் சென்றவன் என்ன சொல்லி வைத்திருக்கானோ என்று சிந்தித்து மாணிக்கம் குழம்ப, குணாவிற்கும் அம்மாவின் பேச்சுப் புலப்படவில்லை.

“வீட்டுக்கு வந்து ஒரு வாரமா என்கிட்ட முகம்கொடுத்து பேசாதவன், உங்களோட மட்டும் ஒரு மணி நேரத்துல உறவாடறான்… விடுப்ப நீட்டிக்கச் சொன்னா, முடியாதுன்னு அப்படிக் குதிச்சவன், இப்போ சுதா கல்யாணம் முடியும்வரை இருக்கேன்னு சொல்றான்…அப்படி என்னதான் மாமன்-மருமகன் ரகசியமோ!” பொய்யாக சலித்துக்கொண்டவள், மகனை பார்வையால் மெச்சினாள். குணாவும் பதிலுக்கு அசடுவழிந்தான்.

எதிர்முனையில் கேட்டவருக்குத் தான் ஒரு கணம் இதயம் துடிப்பது நின்றுவிட்டது. தங்கையிடம் புன்முறுவலுடன் மிக்க மகிழ்ச்சி என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

“போலீஸ்கிட்ட போறேன்னு சொன்னா, பயந்துகிட்டு ஊரவிட்டு போயிடுவான்னு பார்த்தா, சுதா கல்யாணம் வரைக்கும் இங்க இருக்கேன்னு சொல்லிருக்கானே!” குழம்பி நின்றார் மாணிக்கம்.

“நீங்க சாவித்ரிகிட்ட எல்லாத்தையும் சொன்னா தான் இவன் கொட்டம் அடங்கும்!” மீனாட்சி தீவிரக்குரலில் கூற,

இடவலமாய் தலையசைத்தவர், “இல்ல மீனாட்சி! இவன் எதை மனசுல வெச்சுகிட்டு இப்படியெல்லாம் செய்யறான்னு தெரியல மா! இப்போதைக்கு நமக்கு நம்ம சுதா கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அவன்கிட்ட சண்டைக்குப் போகுறத விட, நாம நம்ம பொண்ண பத்திரமா பார்த்துகிட்டாலே போதும்!”

“புரியலைங்க!”

“சுதாவுக்கு இன்னைக்கு நடந்தது எதுவுமே தெரியவேண்டாம். கல்யாணம் முடியும்வரை, நம்ம பொண்ண அவன் கண்ணுல படாம பார்த்துக்கலாம்னு சொல்றேன்!” விவேகத்துடன் செயல்படலாம் என்று அறிவுறுத்தினார்.

“யாரு கண்ணுல படாம என்னை பார்த்துக்கப் போறீங்க அப்பா?” வினவிக்கொண்டே மஞ்சள் நிற பாவாடை தாவணியை முன்னும் பின்னும் திருப்பி ஆராய்ந்தாள் சுதா.

வாசற்கதவு திறந்திருப்பதையோ, மகள் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதையோ கவனிக்காமல் ரகசியம் பேசிக்கொண்டிருந்தனர் மாணிக்கமும் மீனாட்சியும்.

“அது…அது…” இருவரும் தடுமாற,

“குணா மாமா இங்க வந்தாரா மா!” தமக்கையின் தனித்துவம் வாய்ந்த தையல்கலையில் ரகசியங்கள் அம்பலமானது.

பெற்றோர் பதற்றம் புரிந்துப் பக்குவமாய் நடப்பாளோ- பேதை

பரிசளித்தவனின் திருவிளையாடலில் பகடைக்காய் ஆவாளோ-தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…

Click Here to Comment!