பகிர்வோம்! மகிழ்வோம்!

அது ஒரு அழகிய கூட்டுக் குடும்பம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உறுப்பினர்கள், பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். செல்வியும், அவள் ஓரகத்தி (Co-Sister) வாணியும் வகைவகையான பலகாரங்கள் சமைக்க, காய்ந்த எண்ணெய் வாசம் வீடெங்கும் பரவியது. பலகாரங்களை ருசித்தபடி, தீபாவளி ஊதிய பணத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர், அண்ணன் ராஜாவும், தம்பி சேகரனும்.

தங்களுக்கும் முக்கியமான வேலை உள்ளது என்பது போல, தீபாவளி பட்டாசு விளம்பர சிற்றேடு ஒன்றை அலசிக் கொண்டிருந்தனர் அவர்கள் பிள்ளைகள் முரளியும், சூரியாவும். அப்பா தந்த பணத்தில், தங்களுக்குப் பிடித்தமான பட்டாசு வகைகளை வாங்கிக்கொள்ளலாம் என்பது, அவர்களுக்கு இடப்பட்ட அன்புக்கட்டளை.

பிள்ளைகள் தனித்தனியே, அவரவர்களுக்குப் பிடித்த பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுத்தனர். கால் மணி நேரத்தில் பட்டியலிட்ட சூரியா முகத்தில் வருத்தம்.

“அப்பா! எனக்குப் பிடிச்ச பட்டாசு எல்லாம் வாங்க, நீங்க கொடுத்த பணம் பத்தல!” சூரியா வருத்தமாகச் சொல்ல,

அதற்கு மறுப்பாய் தலையசைத்தவர், “கொடுத்த பணத்துல வாங்கிக்கோ சூரியா!” திடமாய்ச் சொன்னார்.

மனமுடைந்த சூரியா அடம்பிடிக்க, அதைக்கண்ட சேகரன், மகனை கண்டித்தார். குழந்தையிடம் பேசி புரிய வைக்கிறேன் என்று தம்பிக்கு ஜாடை காட்டினார் ராஜா.

“சூரியா! இங்க வா… பெரியப்பா மடியில உட்காரு!” செல்லமாக அழைத்து, “முரளி! நீயும் வா!” என்று கையசைத்தார். இருபுறம் அமர்ந்த பிள்ளைகளை அன்பாய் அரவணைத்து, மெல்லிய குரலில்,

“அங்க பாரு சூரியா!” சமையலறையை கைக்காட்டி, “அம்மாவும், பெரியம்மாவும் என்ன செய்யறாங்க?” என்று கேட்டார்.

எதிர் பக்கத்தில் சமைத்துக் கொண்டிருந்த பெண்களை கவனித்தவன், “ம்ம்… அம்மா எனக்குப் பிடிச்ச முறுக்கு சுத்துறாங்க,” துள்ளலாய் சொல்லி, “பெரியம்மா, நம்ம எல்லாரும் விரும்பி சாப்பிடுற லட்டு பிடிச்சிட்டு இருக்காங்க.” என்றான்.

“சரியா சொன்ன சூரியா!” சிறுவன் தோளில் தட்டிக்கொடுத்தவர், “ஒரே மாதிரியான உணவு சமைக்காமல், வெவ்வேறு வகைகள் சமைக்கறதுனால, நாமளும் விதவிதமான பலகாரங்கள் சாப்பிட முடியறது இல்லையா?” யோசிக்கச் சொன்னார்.

“ஆமாம் பெரியப்பா!”

“நல்லது! அதே மாதிரி, இப்போ நீயும், முரளியும் உங்க பட்டாசு பட்டியல ஒப்பிட்டு பாருங்க. ஒரே வகையான பட்டாசுகள், தனித்தனியா வாங்குறத்துக்குப் பதிலா, பொதுவா வாங்கிக்கலாம். அப்புறம் உங்களுக்குப் பிடிச்சதுல, ஆளுக்கொரு பொருள் தேர்ந்தெடுங்க!” விளக்கியவர், அவர்களுக்குப் புதுப் பட்டியலிட உதவியும் செய்தார்.

“இப்போ உங்க ரெண்டு பேரு கிட்ட இருக்குற பணத்தையும் சேர்த்து எண்ணுங்க!” என்றார்.

சிறுவர்கள் அவர் சொற்படி கேட்டு, பணத்தை மதிப்பிட்டனர். அத்தொகை அவர்கள் பட்டியலிட்ட பட்டாசுகளை வாங்க போதுமானதாக உள்ளதா என்று வினவினார். கூட்டிக் கழித்துக் கணக்கு போட்ட பிள்ளைகள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

“பெரியப்பா! இப்படிச் செஞ்சா, எங்களுக்குத் தேவையான பட்டாசுகள் வாங்குறது போக, மிச்ச பணம் இருக்கு!” உற்சாகமாய்ச் சொன்னவன், “அதுல இன்னும் கொஞ்சம் பட்டாசு வாங்கிக்கலாமா?” என்றும் கேட்டான்.

மென் சிரிப்புடன், இடவலமாக தலையசைத்தவர், “பணம் இருக்கேன்னு, தேவைக்கு மீறி வாங்குறதும் தப்பு சூரியா!” என்று அறிவுரை சொன்னார்.

“அப்போ அந்தப் பணத்த என்ன செய்யறது?” முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கேட்டான்.

பலகாரங்களை அம்மாவும், பெரியம்மாவும் என்ன செய்வார்கள் என்று அவர்களைக் கேட்க சொன்னார். வீட்டில் உள்ளவர்களுடனும், சுற்றாருடனும் பகிர்ந்து கொள்வேன் என்றாள் வாணி. வீட்டிற்கு வரும் பணிப்பெண்ணுடன் பகிர்வேன் என்றும் கூறினாள்.

அதே சமயத்தில் சேகரன், நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்த புத்தாடைகளை சிறுவர்களுக்குக் காட்டினார். தங்களுக்கு வந்த தீபாவளி ஊதிய பணத்தில், அப்பணிப்பெண் வீட்டாருக்கும் சேர்த்துப் புத்தாடைகள் வாங்கியதாய் விளக்க,

“இதுலிருந்து என்ன புரியுது?” வினவினார் ராஜா.

“நம்ம கிட்ட இருக்கறத மற்றவங்களோட பகிர்ந்துக்கணும்!” என்றான் சூரியா.

“ரொம்ப சரியா சொன்ன சூரியா!” ராஜா அவனை மனதார பாராட்டினார்.

“குறிப்பா ஏழைகளுக்கு உதவி செய்யணும்!” முரளி தன் பங்குக்குப் பேசினான்.

“தப்பு முரளி! இங்க யாரும் ஏழை, பணக்காரர்கள் இல்ல; எல்லாரும் அவரவருக்குத் தெரிஞ்ச வேலையைச் செய்யறாங்க. அதுக்கேத்த ஊதியம் அவங்களுக்குக் கிடைக்குது. அவ்வளவுதான்!” என்று செல்வி மகனுக்கு விளக்கினாள்.

“ஆமாம் முரளி. அவங்க நமக்கு ஒத்தாசையா, வீட்டு வேலை செய்யறாங்க; அவங்க கணவர், உங்கள தினமும் ஆட்டோவுல அழைச்சிட்டுப் போய்ப் பள்ளியில விடுறாரு. அவங்க நமக்கு ஒரு விதமா உதவுறாங்க; நம்ம பதிலுக்கு வேறொரு விதத்துல உதவியா இருக்கோம்.” என்று வாணி மேலும் நடைமுறை உதாரணங்களோடு விளக்கினாள்.

பெரியவர்கள் பேச்சை கவனமாகக் கேட்ட சூரியாவிற்கு, ஒரு சந்தேகம் உதித்தது.

“சரி மா! நாங்களும் அவங்க பையனோட பட்டாசுகளைப் பகிர்ந்துக்கறோம். ஆனா அவன் எங்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லையே!” வெகுளியாக கேட்க,

அதற்குச் சிரித்த ராஜா, “உதவுலேன்னா என்ன… திறமைகளைப் பகிர்ந்துக்கறதும் சிறப்பான விஷயம் தான்!” யோசனை சொன்னார்.

சிறுவர்கள் ஆழமாய்ச் சிந்தித்தனர். “அப்பா! அவன் ரொம்ப அழகா ஓவியம் வரைவான். நானும் சூரியாவும் அவன்கிட்ட பயிற்சி எடுத்துக்கறோம்!” உற்சாகமாய்ப் பேசினான் முரளி.

அனைவரும் அவன் யோசனையை ஆமோதித்தனர். நற்பண்புகள் கற்ற பிள்ளைகளின் மத்தாப்பு சிரிப்பொலியுடன், தீபாவளி திருநாளும் மகிழ்ச்சியில் நிறைந்தது.

– வித்யா வெங்கடேஷ்.