நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே 1

நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுத்தப் படி ஒரு வித பதற்றத்திலே அமர்ந்திருந்தார் யாழ்மாறன். அவரை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கமழி. இருவரும் அந்த விசாலமான வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

‘எதற்கு இந்த பதட்டம்? எப்படியும் இங்கு இருக்கும் அந்த முகம் தெரியாதவன் நமக்கு உதவ போவதில்லை. நிச்சயம்  அவமானப்படுத்தி தான் அனுப்பி வைக்க போகிறான். ஏன் இவ்வளவு தூரம் வந்து வாங்கிக் கட்டிப்பானே! எந்த நம்பிக்கையில் அந்த முகம் தெரியாதவன்  நமக்கு பணத்தை தந்து உதவுவான் என்று என்னையும் இங்கு அழைத்து வந்தார்? நட்பு , சொந்தம் , நம்பிக்கை நாளடைவில் நலிந்து போனதை  அறியாமல் இங்கு அழைத்து வந்து விட்டவரை, என்னச் சொல்லி புரிய வைப்பது?’ என்று தனது உள்ளக் குமறலுக்கு ஒலி கொடுக்க முடியாமல் உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு தவித்தாள் கமழி.

தன் தந்தையின் இந்த முயற்சி அவளுக்கு எரிச்சலைத் தான் தந்தது. சுய கௌரவத்தை இழக்கும் செயலைச் செய்ய யாருக்குத் தான் இனிக்கும்? இருந்தும் தந்தைக்காக தான் அவருடன் வந்திருக்கிறாள்.

வாசலையும் மணியையும் நொடிக்கு ஒரு முறைப் பார்த்து கொண்டிருந்தவரை கண்டு அவள் உதட்டில் நிமிடம் தோன்றி மறைந்தது ஓர் ஏளனச் சிரிப்பு.  வகுப்பறைக்குள் அமர்ந்து ஆசிரியரின் வருகைக்கு ஐயத்தோடு காத்திருக்கும் மாணவனைப் போல் இருந்தார் .

அவரது நடுங்கும் கைகளைப் பற்றியவள், ” அப்பா !  இவ்வளவு பயப்படுற நீங்க ஏன் இங்க வரணும்? எந்த நம்பிக்கையில பா நமக்கு அவர் பணம் கொடுப்பார்?  முதல்ல உங்களை அவருக்கு நியாபகம் இருக்கானே தெரியல. இதுல பணம் கேக்கத் தான் வந்திருக்கோம் தெரிஞ்சா என்ன நினைப்பார்? இப்பையும் ஒன்னு கெட்டு போகல, சும்மா உங்களைப் பார்க்கத் தான் வந்தோம்னு சொல்லிட்டு போயிடலாம் பா”என்று தன் தந்தையிடம் கெஞ்சிப் பார்த்தாள்.

“நாம ஏன் அப்படி நினைக்கணும் கமழிமா?  நல்ல விதமாவே நினைப்போமே டா. அந்த வீட்டப் பத்தி வளருக்கு நல்லாவே தெரியும். அவளும் அந்த வீட்ல பிறந்து வளர்ந்தவ தான்.  அவளுக்கு அந்த வீட்ல எல்லா உரிமை இருக்கு. மீட்கற கடமையும் இருக்கு. கண்டிப்பா வளர் இதுக்கு ஒத்துப்பா !!”என்று நம்பிக்கையாக மொழிந்தவரை பரிதாபமாகப் பார்த்தாள்.

‘கடமை உரிமைனு ரைமிங்கா சொன்னா மட்டும் வேகமாகப் பணத்தை கொடுத்து அந்த வீட்டை மீட்டுடுவாங்களா என்ன? ‘ என தனக்குள் பேசியவள், ” சரிப்பா ! கடமை , உரிமை எல்லாம் வளர் அத்தைக்கு தானே இருக்கு. அவங்க புள்ளைக்குமா இருக்கும்? வளர் அத்தைய பார்த்தால் கூட  இந்த விஷயத்தை சொல்லி உதவி கேட்கலாம். இவர பார்த்து என்னப்பா ஆகப் போகுது? எனக்கு இது சரினு படலப்பா”எனப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்,

தன் காலடி ஓசையில் கூட ஆளுமை  தொணிக்கும் என்பது போல,  அவன் காலடி ஓசையை கேட்டு அனைவரும் அமைதியாகிட, அவன் நடந்து வர, வணக்கங்கள் வைத்தத்தோடு அமைதியாக அமர்ந்துக் கொண்டனர் அங்குப் பணிபுரியும் ஊழியர்கள். அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்தப்படி அவனுடன் நடந்தான் அவனது காரியதர்சி சரண்.வெளியே அமர்ந்திருக்கும் இவர்கள் இருவரையும் பாராது வந்தவன் தனதறையில் தஞ்சமடைய, அவன் பின்னே வந்த  சரணும் அவர்களை பாராது அவனுடன் சென்று விட்டான்.

அவனைக் கண்ட பின் இருவருக்கும் மேலும் பதற்றம் கூடியது. ‘இப்போது என்ன செய்வது? எப்படி வந்த விஷயத்தை சொல்வது? ‘ என இருவரும் குழம்பி நின்றனர்.

“மாமா, சார் வந்துட்டார். நான் மேனேஜர் கிட்ட சொல்லி உங்களை உள்ள அனுப்ப சொல்றேன். நீங்க அவரைப் பார்த்து, வந்த விஷயத்தை சொல்லுங்க ” என்று கடவுள் அனுப்பி வைத்தது போல அவர்கள் குழப்பத்திற்கு தீர்வு  சொன்னவன். வேகமாக மேனேஜர்  அறைக்குள் சென்று அவரிடம் விஷயத்தை சொன்னான். முதலில் யோசித்தவன். பின் அவனிடம் பேசிப் பார்ப்பதாகச் சொல்லி அவர்களிடம் வந்தான்.

“நீங்க நிஜமாவே சார்’க்கு சொந்தமா?” இருவரையும் சந்தேகக் கண் கொண்டு வினவ, அவள் தந்தையைப் பார்க்க, அவரும் மகளைப் பார்த்துவிட்டு,  மேனேஜரிடம் “ஆமாங்க சொந்தக்காரங்க தான். நான் தம்பிக்கு மாமா முறை வேணும்” என்றார் பதற்றத்தோடு.

“நீங்க வீட்டுக்கு போகாம இங்க ஏன் வந்தீங்க?” இன்னும் கேள்விகள் இருக்கு என்பது போல அவரை துருவினான்.

“எங்களுக்கு வளரோட வீட்டு அட்ரஸ் தெரியாதுங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வீட்டு பிரச்சனையால வளரும் அவங்க புருசனும் ஊரவிட்டு வந்துட்டாங்க. அவங்க எங்க இருக்காங்க என்ன ஆனாங்க  எங்களுக்கு தெரியல. அப்றம்  தம்பி மூலமா,  ஆபிஸ் அடர்ஸ் தெரிஞ்சு இங்கு வந்தோம். எங்களுக்கு வீட்டு அட்ரஸ் தெரிஞ்சா கூட  நாங்க வளர பார்த்து விஷயத்தை சொல்லிடுவோம்” என்றார்  வெள்ளந்தியாக.

அவரைப் பார்க்க மேனேஜருக்கு சந்தேகம் படும் படியாக இல்லை தான். ஆனாலும் தீர விசாரித்து விட்டு தான் உள்ளே அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணியவன். அவரிடம் ஊர் பெயர் என அனைத்தையும் விசாரித்தவன்,  வந்த காரணத்தையும் கேட்டுக் கொண்டான்8.

“எங்க சார் கொஞ்சம் கோபக்காரர். சட்டுனு கோபப்பட்டுடுவார். நான் முதல்ல உங்க விஷயத்தை சொல்றேன் , அதுக்கு அப்றம் நீங்க வாங்க” என்றவன் முன்னே செல்ல, வயிற்றுக்குள் ஏதோ ஊரி ஊரிச் சென்றது அவருக்கு.

கதவை தட்டி உள்ளே வர அனுமதிக் கேட்டு நின்றவனை உள்ளே வரச் சொல்ல, பாதிக் கதவை திறந்து வைத்தப்படி  உள்ளே நுழைந்தான்  மேனேஜர் மனோகர்.

வாயிலிருந்து  வார்த்தையை உதிக்காமல் கண்களால் ‘என்ன?’என்பது போல வினவினான் யாழ்வளவன்.

“சார் உங்கள பார்க்க, ஒரு பெரியவரும் அவரோட பொண்ணும் வந்திருக்காங்க. அந்தப் பெரியவர் உங்களுக்கு மாமன் முறையாம், உங்களை சந்திச்சி ஒரு உதவி கேட்டு வந்துருக்காங்க” என்று யாழ்மாறன் சொன்னதைச் சொல்லி முடித்து  அவர் முகம் பார்த்து பதிலை எதிர்பார்க்க, அவனது இறுகிய தாடையும் உள்ளே நறநறவென பற்களை  அரைக்கும் சத்தத்தில் அவன் கோபத்தை  உணர்ந்தவன் .

‘மனோகரா ! இன்னைக்கி நீ தான் முதல் செதரு தேங்காய் டா” என்றெண்ணிக் கொண்டு அவன் விடப்போகும் வார்த்தையை  எண்ணி ஐயம் கொண்டு நின்றான்.

“டாமிட், எவனோ ஒருத்தன் காலங்கத்தாலே வந்து என் மாமா மச்சான்னு வந்து சீரியல் ஓட்டுவான், நீங்களும் அதைக் கேட்டு வந்து எங்கிட்ட சொல்லி என் டைத்த வேஸ்ட்  பண்ணிட்டு இருக்கீங்களா? உங்களுக்கு வேணா உங்க வொர்க் ஆண்ட் டைமோட வால்யுவபல் தெரியாமல் போகலாம். ஆனால் எனக்கு அப்படி இல்ல, எவ்ரி செக் இஸ் ப்ரீசியஸ் டூ மீ.கோ தெ ஹெல், இனி இது போல சொந்தம் சொர்க்கம் எவனாது உங்க காதுல பூ சுத்த வந்தால் நீங்க வேணா அந்தப் பூவ சுத்திக்கங்க, என்கிட்ட வந்தும் நிக்காதீங்க. அப்றம் உங்களை ஃபயர் பண்ண வேண்டியது வரும் மைண்ட் இட். நவ் கெட் லாஸ்ட், ஆண்ட் அந்த திடீர் சொந்தமனு மொளச்ச மஸ்ரூம்ஸ் எல்லாம் ஆபீஸ் குள்ள அலோவ் பண்ணாதீங்க”என விட்டெரியாக கத்திவிட்டு  கணினியில் கண் பதித்தான் யாழ்வளவன்.

அவன் பேசும் வார்த்தைகள் அவர்களுக்கு ஊசிக் குத்தினது போல  சுறுக்கு சுறுக்கென்று வலிக்க, தந்தையின் கசந்த முகத்தைக் கண்டு அவன் மேல் கோபம் வர உள்ளே சென்று கத்திவிடலாம் என்று எத்தனித்தவளின் கையைப் பற்றியவர் அமைதியாக இருக்கும்படி கண் ஜாடைக் காட்டினார். உள்ளுக்குள் அவனைத் திட்ட வேண்டும் என்று எழுந்த கோபத்தையும் அதற்காக சேகரித்த வார்த்தைகளையும் அடக்கி தன்னை சமன் செய்ய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டாள்.

முகத்தைத்  தொங்க போட்ட படி வெளிய வந்த மேனேஜரின் முன் வந்தவர் “எங்களை மன்னச்சிடுங்க தம்பி ! எங்களால் நீங்க தம்பிக்கிட்ட திட்டு  வாங்கிட்டீங்க. இனி நாங்க உங்களுக்கு தொந்தரவா இருக்கல. ஓரே ஒரு சின்ன உதவி மட்டும் பண்ணுங்க தம்பி”என்றதும் அந்தப் பெரியவரின் முகம் பார்த்தான்.

“எனக்கு இந்தத் தம்பியோட வீட்டு அட்ரஸ் மட்டும் வாங்கிக் கொடுங்க. நான் அவங்க அம்மா வளர் கிட்ட பேசினா எல்லாம் சரியாகிடும். அவளும் நானும் வாழ்ந்த வீடு எங்க பூர்வீக வீடு எப்படியாவது மீட்டிடனும். கொஞ்சம் அவங்க விலாசத்த  மட்டும் வாங்கிக் கொடுங்க தம்பி” என்று கெஞ்ச,  அவனால் மறுக்க முடியவில்லை, “சரி இருங்க எப்படியாவது சாரோட வீட்டு அடர்ஸ் வாங்கித் தர்றேன். இப்போ நீங்க இங்க இருக்கிறது நல்லது இல்ல வெளிய வெயிட் பண்ணுங்க வாங்கித் தரேன்” என்று அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறபடுத்த எண்ணினான். இருவரும் அவனைப் புரிந்துக் கொண்டு அங்கிருந்து விலக, கதவின் இடையில் தெரிந்த அவன் முகத்தைக் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் கனன்றது ‘ இனி இந்த முகத்தைப் பார்க்கவே கூடாது’ என்று சூளுரை வேறு எடுத்துக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள். அவள் நகர்ந்த பின் அவனது கண்கள் கதவின் இடையே தெரிந்த வெற்று  இடத்தைப் காண, அங்கேதுமில்லாமல் தோளைக் குலுக்கிவிட்டு வேலையில் மூழ்கினான்.

தன்னுடன் வேலைப்பார்க்கும் அத்தனை   ஊழியர்களிடம் விசாரித்து பார்த்து விட்டான் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை  நொந்து போனவன் கடைசியில் பி .ஏ சரணுக்கு ‘ சார் ‘வீட்டு அடர்ஸ் தெரியும் என்று சிலர் சொல்ல,  உள்ளே அவனுடன் இருந்தவனை அலைபேசி வழியே வெளியே அழைக்க,  அவனும் வெளிய வந்தான்.

“என்ன மனோகர் சார், காலையிலே சாரை சூடாக்கிட்டு, என்னை வேற வர சொல்லிருக்கீங்க  என்ன பிரச்சனை சார் உங்களுக்கு?”என்றவனைக் கண்டு புன்னகைத்தவன், ” எனக்கு என்ன சரண் பிரச்சினை? எல்லாம் சாரைத் தேடி வந்தவருக்கு”என்று  அனைத்தையும்  சொல்லி முடிக்க,  கொஞ்சம் யோசித்தவன் கண்ணாடி வழியே எட்டிப் பார்த்தான். இருவர் நிற்பது தெரிந்தது ஆனால் முகம் தெரியவில்லை.

“சரி நான் அடர்ஸ் சொல்றேன். ஆனா எனக்கு எதுவும் பிரச்சனை வர்றாம பார்த்துங்க மனோகர் சார்” என்று விலாசத்தைக் கொடுக்க  ‘ நன்றி’ உரைத்துவிட்டு, வெளியே சென்று அவர்களிடம் விலாசத்தைக் கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு இருவரும் அவ்விடம் விட்டுச் சென்றனர்.  அவர்களால் திட்டு வாங்கினாலும் ஏதோ உதவி செய்த திருப்தியுடன் தன் வேலையை கவனிக்களானான்.

அந்த அடர்ஸை வெறிக்கப் பார்த்து நின்றாள்.  தந்தை மேல் கோபம் வந்தாலும் அவரது உணர்வுக்கு மதிப்பு தரவே எண்ணினாள். அமைதியாக அவர் அருகே நின்றாள். ஆட்டோவுக்காக இருவரும் காத்திருந்தனர்.

“அப்பா மேல கோபமா டா !” மகளின் அமைதியை புரிந்து கொண்டு கேட்டார். அவரிடம் உண்மையை  மறுக்க முடியவில்லை. ” ஆமா ப்பா ரொம்ப கோவம் தான். எனக்கு முன்னாடியே தெரியும்  இப்படி எல்லாம் நடக்கும்னு. ஏன்ப்பா அவமானம் பட்டு தான் அந்த வீட்டை மீட்கணுமா? நமக்கே அது சொந்தமில்லைனு தாத்தா சொன்னதையும் மீறி நீங்க அந்த வீட்டை மீட்க நினைக்கிறீங்க. ஆனா அதுக்காக நீங்க படுற அவமானத்த பார்க்க முடியல. அடுத்து இந்த வீட்டுக்குப் போய் அங்க என்ன அவமானத்த தேடிக்க போறீங்களோ !  அந்த வீடு வேணாம்ப்பா ப்ளீஸ் வாங்க ஊருக்கே போயிடலாம். கடவுள் புண்ணியத்துல நல்லாதான் இருக்கோம் அதுவே போதும் அந்த வீடு நமக்கு வேணாம் பா” தந்தைக்காக அவரை வற்புறுத்த,

“கமழி மா, உனக்கு அந்த வீட்டைப் பத்தி சரியா தெரியல அதான் நீ அப்படி பேசற. வெறும் கல்லு செங்கல்  மண்ணாலான வீடுனா நான் இவ்வளவு தூரம் அவமானப் பட்டு அதை மீட்கனும் போராடிட்டு இருக்க மாட்டேன். தலைமுறை தலைமுறையா  வாழ்ந்த வீடு,  என் தலைமுறைக்கு அப்றம் அந்த வீடு இல்லைனு நினைக்கும் போது அந்த வீட்ட கூட காப்பத்த வக்கத்து இல்லாதவனாகிட்டேன் எண்ணியே நொந்து செத்துப் போயிடுவேன்மா, எத்தனை சொத்து போனாலும் பரவாயில்லை அந்த வீட்டை மட்டும் கைவிடக் கூடாது கமழி, அந்த வீடு போச்சினா நான் செத்ததுக்கு சமம்டா ” என்று கண்கலங்க ,

“அப்பா ! என்ன பேச்சி இது?  உங்களுக்கு அந்த வீடு எவ்வளவு முக்கியமோ அதே போல நீங்களும் எங்களுக்கு முக்கியம் ப்பா ! உங்களுக்கு என்ன அந்த வீட்டை மீட்கனும் அதானே மீட்றலாம்ப்பா ஆனா இனி நீங்க இப்படி பேசக் கூடாது” செல்லமாக மிரட்டினாள். கண்ணைத் துடைத்துக் கொண்டவர்  சமத்தாய் தலையை ஆட்டினார். அதில் அவளது முகத்தில் புன்னகை அரும்பியது.வழியே சென்ற ஆட்டோவைப் பிடித்துஅவ்விடம் சென்றனர்.

பிரம்மாண்டத்தை நிலைநாட்ட, நிமிர்ந்து நின்ற இல்லத்தை கண்டு, மலைத்து போய் உள்ளே செல்ல,  தோட்டத்தில் அமர்ந்திருந்தவரின் குரல் கேட்டு வந்தவர்கள் பாதி வழியே நின்றனர்.

“யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டிட, அவரது தோற்றத்தையும் குரலையும் வைத்து அந்த வீட்டின் சொந்தக்காரர் என்றுரைக்க அவரிடம் வளரைப் பார்க்க வந்ததாகச் சொன்னார்கள்

“வளரையா பார்க்க வந்தீங்க, அப்போ நீங்க சொர்க்கத்துக்கு தான் போகணும், அண்ணி செத்துப் போய்  வருஷ கணக்குல ஆகிடுச்சி”  என்றிட யாழ்மாறன்  நெஞ்சை பிடித்துபடி நிலை தடுமாறினார்.

மஞ்சள் மலர் பூக்கும்