நீயே என் தேவதேவி – 2

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 2

விஷ்ணு! நன்மாறன், கலைவாணி தம்பதியரின் இளைய மகன். வீட்டிற்கு செல்ல பிள்ளை. அதனாலோ என்னவோ அவனிடம் விளையாட்டுத்தனம் இருக்கும்.

இந்த வயதில் கூட அவனின் விளையாட்டுத்தனம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 

அதற்காக அவன் பொறுப்பில்லாதவன் என்று பொருள் அல்ல.

அவனின் அண்ணனான ரகுநந்தன் ஆரம்பித்த ரிசார்ட் சம்மந்தமான வேலைகளை பொறுப்புடன் பார்த்துக் கொள்பவன் தான் விஷ்ணு. 

அவனின் அண்ணன் ரகுநந்தன் ஆசைப்பட்டு ஆரம்பித்தது தான் உயர்தர தங்கும் விடுதிகள். முதலில் அவர்களின் ஊரான சுற்றுலாத்தலமான ஊட்டியில் தான் ரகுநந்தன் தனியாகத் தொழிலை துவங்கினான். 

தந்தை நன்மாறன் ஊட்டி சுற்றுலாத்துறை அலுவலகத்தில் வேலையில் இருக்க, எந்தத் தொழில் பின்புலமும் இல்லாமல் சொந்த முயற்சியில் தொழில் கற்று ஆரம்பித்தான் ரகுநந்தன். 

தம்பியான விஷ்ணு படிப்பை முடித்ததும் அவனையும் தன் தொழிலுடன் இணைத்துக் கொண்டான் ரகுநந்தன்.

ரகுநந்தன் அவர்களின் அத்தை மகளான தமிழாசிரியையாக பணிபுரியும் சுபரூபாவை பெரியவர்களின் கட்டாயத்தின் பெயரில் திருமணம் முடித்தவன். 

ஆம்! கருமை நிறத்திலும், முன் இரண்டு பற்கள் தூக்கலுடனும் இருந்த சுபரூபாவை விருப்பம் இல்லாமலே தான் திருமணம் செய்திருந்தான் ரகுநந்தன். (ரகுநந்தன், சுபரூபா வரும் கதையின் பெயர் பூவிதழ் மலரே)

அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், சில மனக்கசப்புகள் ஒரு சில மாதங்களில் முடிவுக்கு வந்தன. ரகுநந்தனுக்கு ஒரு விபத்து ஏற்பட, அந்த நேரத்தில் தன் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்ட மனைவியின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டது என்பதை புரிந்து, உடல் அழகு முக்கியத்தை விட, மன அழகின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டு அவளுடன் சந்தோசமாக வாழத் துவங்கினான் ரகுநந்தன். 

அதன் பின் அந்த வீட்டில் சந்தோஷத்தின் நிகழ்வுகள் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தன. ரகுநந்தன், சுபரூபா தம்பதிக்கு மகள் வைஷ்ணவி பிறந்தாள். அவர்களின் வாழ்க்கைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் இப்போது மீண்டும் சுபரூபா கருவுற்றிருந்தாள். ஏழாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. 

அண்ணனும், அண்ணியும் ஊடல் கொண்டு இருந்த நேரத்தில் விஷ்ணு பொறுப்பாக அண்ணனுக்கு சில அட்வைஸ் அல்வாக்களை கொடுக்க, அதற்கு முன்பே அண்ணனின் மனம் அண்ணியின் பக்கம் சாய்ந்து விட்டது என்பதை அறியாமல், தான் கொடுத்த அட்வைஸ் அல்வாவால் அண்ணனின் வாழ்க்கை சீரானது என்று பெருமை பீத்தலில் சுற்றிக் கொண்டிருப்பவன். அதை அண்ணனிடமும் அவ்வப்போது சீண்டலாக சொல்லி அவனை வம்பிழுக்க மறக்க மாட்டான்.

வீட்டினருக்கு விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் தொழிலில் கெட்டிக்காரனாக இருந்தான். 

அண்ணன் ஆரம்பித்து, அண்ணனிடம் கற்றுக் கொண்ட தொழில் தான் என்றாலும், அவனுக்கும் அந்தத் தொழிலில் ஈடுபாடு இருந்தது. 

அதுவும் ஆரம்பத்தில் அண்ணன் சொல்லும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தவன், அண்ணனுக்கு விபத்து நேர்ந்த போது விஷ்ணுவே தனியாக தொழிலை கவனிக்க வேண்டியது இருக்க, அப்போதுதான் அண்ணன் தனக்கு கொடுத்த வேலை கொஞ்சம்தான்… அதில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு, இன்னும் பொறுப்புடன் தொழிலை கவனிக்க ஆரம்பித்தான்.

ரகுநந்தனின் உடல் தேறி மீண்டும் தொழிலை முழுமூச்சாக கவனிக்க ஆரம்பிக்க வரும்முன், விஷ்ணு தான் தனியாக சிரமப்பட்டு போனான். 

தொழிலை வளர்க்க ஒரு தங்கும் விடுதியோடு நிறுத்திவிடாமல் ரகுநந்தன் உயர்ரக ரிசார்ட் ஒன்றும் கட்ட ஆசைப்பட்டான். அதற்கான ஆரம்பக்கட்ட வேலை நடந்த நேரத்தில் தான் ரகுநந்தனுக்கு விபத்து ஏற்பட்டது. புதிய ரிசார்ட் கட்டும் வேலையை பார்த்துவிட்டு திரும்பி வரும் வழியில் தான் மழையால் மண்சரிவு ஏற்பட்டு பள்ளத்தில் காரில் சென்று கொண்டிருந்த ரகுநந்தன் சரிந்திருந்தான். அதில் அவன் உயிர் பிழைத்ததே அதிசயம்! 

அதனால்தான் இப்போதும் அதை நினைத்து கலைவாணி கலங்குவார். இரண்டு மகன்களும் காரில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்.

ரகுநந்தன் விபத்தில் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் பழைய விடுதியின் பொறுப்புடன் புதிய ரிசார்ட் கட்டும் பணியை கவனிக்கும் பொறுப்பும் விஷ்ணுவிடம் வந்து சேர, இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாமல் திணறிப் போனான். அவர்களின் தந்தை நன்மாறனும் கூட வந்து உதவி செய்தாலும், அப்போது அவர் சுற்றுலாத்துறை வேலையையும் பார்க்க வேண்டியது இருந்ததால் முழுமூச்சாக இளைய மகனுக்கு அவரால் உதவ முடியவில்லை. 

அந்தக் காலக்கட்டத்தில் தான் தொழில் நடத்துவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அதனை எத்தனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொண்டு, அதிலிருந்து வேலையில் மிகக் கவனமுடன் இருக்க கற்றுக் கொண்டான். 

ஊட்டியில் மட்டும் இல்லாமல், முக்கியமான சுற்றுலாத்தலங்களில் எல்லாம் உயர்தர தங்கும் விடுதியை நடத்த வேண்டும் என்பதுதான் ரகுநந்தனின் கனவு. ஊட்டிக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் ரிசார்ட் ஆரம்பித்து, அதன் முழுப்பொறுப்பையும் தம்பி விஷ்ணுவிடம் ஒப்படைத்தான். 

கொடைக்கானலில் ரிசார்ட் வேலை ஆரம்பித்ததிலிருந்து இப்போது நல்லபடியா நடத்திக் கொண்டிருப்பது வரை, விஷ்ணு அண்ணன் கொடுத்த வேலையை சரியாகவே செய்தான். 

வாரத்தில் ஒரு நாள் ஊட்டியில் இருக்கும் தங்கும் விடுதிகளின் கணக்குகளை மட்டும் இல்லாமல், கொடைக்கானலில் இருக்கும் ரிசார்டின் கணக்கு வழக்குகளையும் சரி பார்ப்பது ரகுநந்தனின் வழக்கம். 

மற்றபடி விஷ்ணுக்கு கொடுத்த வேலையில் தலையிட மாட்டான். அதேநேரம் தம்பி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்ப்பான். அவனைச் சீண்டவே சில நேரம் தன் விளையாட்டுப் புத்தியை அண்ணனிடம் காட்டுவான் விஷ்ணு. 

ரகுநந்தன் மனைவி குழந்தை என்று செட்டில் ஆகிவிட, இப்போது விஷ்ணுவிற்கு பெற்றவர்கள் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஆனால், ஏனோ எந்த வரனும் சரியாக அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

விரைவில் தானும் சம்சார சாகரத்தில் குதிக்க வேண்டும் என்ற அவாவுடன் கனவில் மிதந்து கொண்டிருந்தான் விஷ்ணு. 

தற்போதும் அதே கனவில் தான் இருந்தான். அதிகாலை ஐந்து மணி ஆகியிருக்க, மின்மினி ரிசார்டின் வெகு அருகிலேயே இருந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவின் கனவில் வெள்ளையாடை தேவதைகள் ‘லா…லா…” பாடிக் கொண்டிருந்தனர். 

அவனைச் சுற்றி சுற்றி ஆடிக் கொண்டே பாடிய தேவதைகளை வாயில் ஜொள்ளு வடியாத குறையாகப் பார்த்து, அவர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தான் விஷ்ணு. 

“ஆஹா! எத்தனை தேவதைகள்… எத்தனை தேவதைகள்‌… இந்தத் தேவதைகளில் என் தேவதேவி யாரோ?” என்று அவர்களில் தன்னவளைத் தேடினான். 

அந்த நேரத்தில் சட்டென்று அந்தத் தேவதை கூட்டம் விலக, அவர்களுக்கு இடையே சிறகு வைத்த வெள்ளையாடை தேவதை ஒன்று கால் தரையில் படமால் மிதந்து வந்தது. 

“ஆஹா! ஆஹா! அவள்தான் என் தேவதேவி. இதோ வருகிறாள். எனக்கே எனக்கான தேவதேவி என் அருகில் வருகிறாள். இதோ கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டாள்…” என்று சந்தோஷத்துடன் கூவியபடி கையை நீட்டி அவளைப் பிடிக்க முயன்ற நொடி தொப்பென்று கட்டிலிலிருந்து விழுந்தான் விஷ்ணு.

“ஆஆ…” கட்டிலிலிருந்து விழுந்த வேகத்தில் அலறியவன் இடையைப் பிடித்துக் கொண்டு எழுந்தான். 

“என் தேவதேவியைப் பிடிக்க போய் இப்படி விழுந்து வச்சுட்டேனே… ஹ்ம்ம்! எவ்வளவு நல்ல கனவு! எல்லாம் போச்சே…” என்று புலம்பிக் கொண்டே பின்பக்கத்தை தேய்த்துக் கொண்டே மீண்டும் கட்டிலில் விழுந்தான். 

“நைன்டி’ஸ் கிட்ஸ்க்கு கனவுல கூட ஒரு பொண்ணு வந்துட கூடாதே. உடனே அந்தச் சாமிக்கு கூட பொறுக்காதே! யோவ், வாழ்க்கையில் தான் ஒரு பொண்ணை தர மாட்டேங்கிற. கனவுலயாவது கொடுயா. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தால் நைன்டி’ஸ் கிட்ஸ் எல்லாரும் சேர்ந்து உனக்குச் சாபம் கொடுத்துடுவோம். கன்னி பையன்ங்க சாபம் உன்னைச் சும்மா விடாது பார்த்துக்கோ…” என்று வீராவேசமாகப் பேசியவன், கட்டிலில் புரண்டான். 

மீண்டும் உறக்கம் வர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. உறக்கமே வரவில்லை என்றால், கனவு எங்கிருந்து வரும்?

“பொண்ணும் போச்சு. தூக்கமும் போச்சு…” என்று புலம்பிக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஓய்வறை சென்றுவிட்டு வந்தவன், ஜெர்கினை எடுத்து மாட்டிக் கொண்டு கதவை திறந்து கொண்டு பொடி நடையாக ரிசார்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவ்வீட்டில் அவன் மட்டுமே. வீட்டை சுத்தம் செய்ய மட்டுமே அங்கே ஒரு வேலையாள் வந்து செல்வார். மற்றபடி காஃபி, உணவு எல்லாம் ரிசார்ட்டோடு இணைந்திருந்த அவர்களின் உணவகத்தில் தான். 

காலை நேர குளிருக்கு சூடான காஃபியை கேட்டு நாவு ஏங்க… நேராக உணவகத்திற்கு சென்றான். 

உணவக ஊழியர்கள் அப்போதுதான் காலை நேர உணவு தயாரிப்பிற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தனர்.

ஊழியர்கள் அவனைக் கண்டதும் வணக்கம் வைக்க, “என்ன பெருமாளு… பால் வந்திருச்சா?” என்று ஒரு ஊழியரிடம் கேட்டான். 

“வந்துருச்சுங்க சார்…” என்று பெருமாள் பதில் சொல்ல, 

“அப்ப பெருமாளு இந்த விஷ்ணுக்கு சூடா ஒரு காஃபி போட்டு கொடுங்க…” என்றான். 

“இதோ சார்…” என்ற ஊழியர் காஃபி போட செல்ல, சட்னிக்கு தேங்காய் உடைத்துக் கொண்டிருந்ததையும், சாம்பாருக்கு தேவையான காய்களை நறுக்கிக் கொண்டிருந்தவர்களையும் பார்த்தபடி சமையலறையைச் சுற்றி வந்தான். 

சில நொடிகளில் பெருமாள் சூடாக காஃபி போட்டு எடுத்து வந்து கொடுக்க, வாங்கிக் கொண்டவன், ஒரு மேஜையின் முன் அமர்ந்து சூடான காஃபியை ரசித்து அருந்த ஆரம்பித்தான். குளிருக்கு இதமாக இருக்க, அவனின் கண்கள் ரசிப்புடன் மூடித் திறந்தன. 

நிதானமாக காஃபியை குடித்து முடித்துவிட்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து கைப்பேசியை பார்த்தான். அவர்களின் ரிசார்ட்டில் அறை பதிவிற்காக இருந்த வெப்சைட்டில் சென்று ஆராய்ந்தான். அடுத்த இரண்டு நாட்களுக்கு அனைத்து ரூம்களும் புக் செய்யப்பட்டிருப்பதை கண்டான். 

‘குட்!’ என்று மெச்சிதலுடன் முனகிக் கொண்டான். 

ஊட்டியிலும் சரி, கொடைக்கானலிலும் சரி அவர்கள் ரிசார்ட்க்கு என்று ஒரு பெயர் இருந்தது. வெளியூரிலிருந்து ஒரு முறை வந்து தங்குபவர்கள் அடுத்த முறையும் அங்கேயே தங்க விரும்புவார்கள்.

தங்கள் ரிசார்டின் பெருமை இந்த இரண்டு ஊர்களோடு முடிந்து விடாமல், இன்னும் பறந்து பரவ வேண்டும் என்ற அவா ரகுநந்தனுக்கு மட்டும் இல்லாது இப்போது விஷ்ணுவிற்கும் வந்திருந்தது. 

கொடைக்கானலுக்கு அடுத்ததாக, மூணாறில் ரிசார்ட் ஆரம்பிக்க விரும்பினர். அதற்கான இடத்தை அண்ணன் தம்பி இருவருமே தேடிக் கொண்டிருந்தனர். 

இடம் சம்பந்தமாகவும் சில வலைதளங்களில் சென்று பார்த்தான் விஷ்ணு‌. 

அதில் ஒரு இடம் அவர்கள் தேடிக் கொண்டிருந்தது போல் தெரிய, அதைப் பற்றி அண்ணனிடம் பேச முடிவு செய்து உடனே ரகுநந்தனுக்கு அழைத்தான்.

உடனே அழைப்பை ஏற்காமல் அழைப்பு நிற்க போது தான் எடுத்தான் ரகுநந்தன். 

“ஹலோ…” என்றவனின் குரலில் இன்னும் தூக்க கலக்கம் மீதி இருக்க, 

“தூங்கு மூஞ்சி அண்ணா, இன்னுமா தூங்குறீங்க?” என்று கேட்டான்.

“டேய், யார் தூங்கு மூஞ்சி? இன்னும் விடியவே இல்லைடா. அதுக்குள்ள போன் போட்டு எழுப்பி விட்டுட்டு.‌‌.. நான் தூங்கு மூஞ்சியா?” என்று ரகுநந்தன் வள்ளென்று விழுந்தான்.

கூடவே, “ஒன்னுமில்லை வைஷூ பேபி… நீ தூங்கு…” என்றவன் பேச்சு சத்தத்தில் எழுந்து கொண்ட மகளை தட்டிக் கொடுப்பதும் இங்கே விஷ்ணுவிற்கு கேட்டது. 

“நான் இவளைப் பார்த்துக்கிறேன். நீங்க அந்தப் பக்கம் போய் பேசிட்டு வாங்க…” என்று அவனின் அண்ணி சுபரூபா கணவனை விரட்டுவதும் கேட்டது. 

விஷ்ணுவின் உதடுகள் புன்னகையில் விரிந்தன‌.

“குடும்பமே சரியான தூங்கு மூஞ்சி குடும்பமா இருக்கீங்க…” என்று நக்கலாக அண்ணனிடம் கேலி செய்தான்.

“உனக்கு வாய் கூடிப் போச்சுடா‌. காலங்காத்தாலயே போன் போட்டுட்டு நக்கலா பண்ணிட்டு இருக்க. வந்தேன்னு வச்சுக்கோ தூக்கிப் போட்டு மிதிப்பேன்…” ரகுநந்தன் கடுப்புடன் மிரட்ட, 

“அதான் நீங்க வர மாட்டன்னு எனக்கு நல்லா தெரியுமே… அண்ணி வயித்தில் பாப்பா இருக்குன்னு நீங்க தான் எங்கயேயும் நகர மாட்டீங்களே…” என்றான் கிண்டலாக. 

“அந்த எகத்தாளம் தானே உனக்கு…” ரகுநந்தன் பல்லைக் கடிக்க, 

“ஹிஹி… அது உங்களுக்குத்தான் அண்ணா‌. என்னவோ அண்ணியை பார்த்துக்க நம்ம வீட்டில் ஆளுங்களே இல்லாதது போல ரொம்பத்தான் அலட்டிக்கிறீங்க. அம்மா, அத்தைன்னு வீட்டில் இரண்டு லேடீஸ் இருக்கும் போது… என்னவோ நீங்களே அண்ணியை பார்த்துக்கணும்னு ஓவரா அலப்பறை பண்றீங்க. அதுவும் அண்ணி அவங்க பாட்டுக்கு அவங்க டீச்சர் வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. நீங்க தான் ஒழுங்கா தொழிலை பார்க்காமல், அவங்களை ட்ராப் பண்றேன். பிக்கெப் பண்றேன்னு சொல்லிட்டு அவங்களுக்கு ட்ரைவராவே மாறிட்டு வர்றீங்க. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை…” நாக்கை கன்னத்துக்குள் அதக்கிக் கொண்டு கேலியாக உரைத்தான். 

“யாருக்கு பொறுப்பில்லை… எனக்கா? நேரம் தான்டா. எனக்கு இல்லாத பொறுப்பு உனக்கு வந்திருச்சாக்கும்?” ரகுநந்தனும் கேலியாக கேட்க, 

“அஃப்கோர்ஸ்! ரொம்ப பொறுப்பு இருக்கப் போய்த்தான்‌… இந்த நேரத்திலேயே மூணாறில் இடம் எதுவும் இருக்கான்னு வெப்சைட்டில் தேடி, ஒரு இடம் நாம தேடுவதற்போல் இருக்கேன்னு பொறுப்பா அதைப் பற்றி உங்ககிட்ட சொல்ல பேசிட்டு இருக்கேன். நான் எவ்வளவு பொறுப்புன்னு பார்த்துக்கோங்க…” என்று அலட்டிக் கொண்டான்.

“இடமா? என்ன இடம்?” இடம் பற்றிய பேச்சு என்றதும், தம்பியின் மற்ற பேச்சை புறம் தள்ளிவிட்டு தீவிரத்துடன் கேட்டான் ரகுநந்தன். 

அவனின் அந்தத் தீவிரம்‌தான் அவன் வளர்ச்சிக்கு காரணம் என்று விஷ்ணுவிற்கு நன்றாகத் தெரியும்.

அண்ணனின்‌ பேச்சுத் தொனி‌ மாறிய உடனே தன் விளையாட்டுத்தனத்தை கைவிட்ட விஷ்ணு, தான் பார்த்த இடம் விளம்பரத்தை பற்றிய தகவலை அண்ணனுக்கு விவரிக்க‌ ஆரம்பித்தான்.

“அந்த டீலர் போன் நம்பரும் சைட்ல இருக்கு. நீங்க போன் பண்ணி விசாரிக்கிறீங்களா? நான் விசாரிக்கட்டுமாண்ணா?” என்று வினவினான்.

“போன் நம்பரை எனக்கு அனுப்பி விடு. நான் கால் பண்ணி பேசுறேன். நமக்கு ஒத்து வருவது போல இருந்தால், நீ ஒரு நாள் நேரில் போய் பார்த்துட்டு வந்திடு…” என்றான் ரகுநந்தன்.

“சரிண்ணா…” என்றான். 

“இதே பொறுப்போட எப்பவும் இருடா தம்பி…” என்று கேலியாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் ரகுநந்தன். 

“நக்கலை பாரேன். வர வர நீங்களும் என்னைப் போல பேச படிச்சிட்டீங்கண்ணா…” என்று தனக்குள் சிரித்துக் கொண்ட விஷ்ணு, எழுந்து ரிசார்ட் பக்கம் சென்றான். 

நீச்சல் குளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதை சில நொடிகள் நின்று பார்த்தான்‌. அங்கேயே வளர்க்கப்படும் வாத்து, முயலுக்கு எல்லாம் ஒருவர் உணவு வைத்துக் கொண்டிருந்தார். 

அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டே தனது அலுவலக அறைக்குச் சென்றான். 

சில வேலைகள் இருக்க, அதைப் பார்த்து முடித்த போது காலை எட்டு மணி ஆகியிருந்தது. 

வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு வரலாம் என்று நினைத்தபடி எழுந்து வெளியே வந்தான். 

வரவேற்பில் இரவு நேர பணியில் இருந்தவர்கள் கிளம்பிக் கொண்டிருக்க, காலை பணி ஊழியர்கள் வேலையை ஆரம்பித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுடன் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் கவிநயா. 

அவளின் சிரிப்பு சத்தம் அவனின் செவியை தீண்டியது. 

‘பாரேன் இந்தப் பொண்ணை… என்கிட்ட பேசும் போது மட்டும் வார்த்தையில் தந்தி அடிக்க வேண்டியது. ஆனால், மத்தவங்கட்ட மட்டும் பல்லு சுளுக்காத குறையா சிரிச்சு பேச வேண்டியது. என்னைப் பார்த்தால் மட்டும் அவ்வளவு கொடூரமானவனாவா தெரியுது?’ என்று தனக்குள் பல்லைக் கடித்தபடி வந்தான்‌.

அவனை கவிநயா கவனிக்கவில்லை. அவனுக்கு முதுகை காட்டியபடி வரவேற்பில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாள். 

விஷ்ணு அவர்களை நெருங்கியதும், அந்தப் பெண் அவனைக் கண்டுவிட்டு, “குட் மார்னிங் சார்…” என்றாள். 

அவனைக் கவனிக்காத கவிநயா பதறி திரும்பி, “கு…குட்மார்னிங் சார்…” என்றாள் திணறியபடி. .

“ரொம்ப பிஸியா பேசிட்டு இருக்கீங்க போலிருக்கே…” அவன் சிரித்தபடி கேட்க, இரண்டு பெண்களும் திருதிருவென முழித்தனர்.

“வேலை பார்க்கிறோம் சார்…” என்று வேகமாக சொன்ன வரவேற்பு பெண் சுகுணா கணினியின் பக்கம் திரும்பி ஏதோ பார்ப்பது போல் பாவனை காட்டினாள்‌.

அவளைப் போல் சட்டென்று சமாளிக்க முடியாமல், “இதோ… இதோ சார்…” என்று திணறினாள் கவிநயா. 

“என்கிட்ட இப்படித் திணறி திணறி பேசக் கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா?” குரலை உயர்த்தாமல் அழுத்தமாக கேட்டான். 

“ச…சரிங்க சா…ர்…” என்று அதையும் திக்கி சொன்னவளை பார்த்து தலையை உலுக்கிக் கொண்டு, “வேலையைப் பாருங்க…” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்தான்.

“உப்!” என்று மூச்சை இழுத்துவிட்டாள் கவிநயா. 

“என்ன கவி சார்கிட்ட காலையே டோஸ்ஸா?” வரவேற்பு பெண்ணான சுகுணா கேலியாக கேட்க, 

“ச்சு போ சுகு…” என்று சலித்துக் கொண்டாள் கவிநயா. 

“நீ இங்க வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாசம் ஆச்சு. என்னவோ சாரை இப்பத்தான் புதுசா பார்க்கிற மாதிரி ஒவ்வொரு முறையும் அவர்கிட்ட திணறி பேசினால் சும்மாவா இருப்பார். மத்த எல்லார்கிட்டயும் நல்லாத்தானே பேசுற. சார்கிட்ட மட்டும் எதுக்காம் இந்தத் திணறல்?” என்று சுகுணா யோசனையுடன் கேட்க, 

எதற்கு என்று தனக்கே புரியாததை அவளுக்கு என்னவென்று சொல்வது என அறியாமல் தன் வேலையைப் பார்க்க அங்கிருந்து நகர்ந்தாள் கவிநயா.