நிழல் தேடும் மான்கள்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
நிழல் தேடும் மான்கள்
“பவானி ரோடுல போகட்டுமா, இல்ல சேலம் பைபாஸ்ல ஏறிடலாமா மேடம்…?” முன்னிருந்த ஓட்டுநரின் குரலில் தன் மடிக்கணினியில் இருந்து தலை நிமிர்ந்து பார்த்தாள் சுமித்ரா.
“ம்ம்.. எந்த ரூட் பக்கம்னு எனக்கும் சரியா தெரியாதே… நீங்க சேலம் ரூட்லயே போங்க… பவானி கொஞ்சம் சுத்துன்னு சொல்வாங்க” கொஞ்சம் யோசித்துச் சொன்னவள், போக்குவரத்து அதிகமில்லாமல் வெறிச்சென்று இருண்டிருந்த சாலையைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்தாள்.
“ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டை பிடிச்சு சவிதா ஹாஸ்பிடல் வழியா காளை மாட்டு சிலை வரைக்கும் போயிடுங்க, அங்கிருந்து நான் வழி சொல்றேன்…” தட்டச்சுக் கொண்டிருந்த மின்னஞ்சலில் மீண்டும் புதைந்தாள்.
அவள் எப்போதும் ரயிலில் முன்பதிவு செய்து வருவது தான் வழக்கம். திடீரென ஊருக்கு வர வேண்டிய நிர்பந்தத்தில், இந்த முறை பெங்களூரில் இருந்து காரிலேயே கிளம்பி இருந்தாள்.
நகருக்குள் எப்போதும் ஸெல்ப் டிரைவிங் தான். இவ்வளவு தூரம் தனியாக எடுத்து வர பத்ரி அனுமதிக்கவில்லை. இவளுக்கும் நேற்றிரவு வெகு நேரம் நீண்ட பிராந்திய கலந்தாய்வில் பங்கேற்று, அதைத் தொடந்த அலுவலர்களுக்கான டின்னரை முடித்து வீடு வந்து, அதற்கு மேல் அகால நேரத்தில் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் அளவு தெம்பும் இல்லை.
அவசரத்திற்கு அழைக்கும் ஓட்டுனரை கூப்பிட்டு வரச் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் படுத்து உறங்கினாள். செந்தில் வரவும் இரண்டு மணி போல அங்கிருந்து கிளம்பினார்கள்.
ஏறி அமர்ந்தவளுக்குத் தன்னையும் மீறி கண் இழுத்துவிட்டது. தான் தூங்கி ஓட்டுனரும் அசந்து விடக்கூடாதே என்ற கவனத்தில் முயன்று எழுந்து அமர்ந்தவள் நேற்றைய மீட்டிங் குறிப்புகள் மற்றும் அது சம்பந்தமாக அனுப்ப வேண்டிய சில தகவல்களைச் சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தாள்.
அரைகுறை உறக்கத்தில் ஓடும் வண்டியில் அமர்ந்து வேலை செய்வது ஒருகட்டத்தில் கண்கள் மயமயவென்று ஆகி வயிற்றைப் பிரட்ட, அதற்கு மேல் முடியவில்லை. கணினியை மூடி லெதர் பைக்குள் வைத்தாள். அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி தலைக்கு மேல் மாட்டி எரிந்த தன் விழிகளைத் தேய்த்து விட்டுக் கொண்டாள். வண்டி காக்காபாளையம் தாண்டியிருந்தது.
“செந்தில், ஏஸியை நிறுத்திட்டு ஜன்னலை திறந்து விடுங்களேன். “
சாளரக் கண்ணாடி கதவுக்குள் சுருள, குபுகுபுவென்ற இளங்காலை காற்று உள்ளே புகுந்து முகம் வருடியது. உச்சிமுடியை கலைத்து புடவைத் தலைப்பை நெகிழ்த்துகிற காற்றை மலர்வுடன் வரவேற்கிற மாதிரி சுமி நன்றாக நகர்ந்து கதவோரம் தன் முகம் பதித்துக் கொண்டாள்.
சாலையோர புளிய மரங்களும், புங்கைகளும், அரச ஆல விழுதுகளும் விரைந்து பின்னால் ஓடி மறைந்தன. வேலி போட்டு அடைத்திருந்த சில காடுகளில் மாம்பிஞ்சுகளைச் சுமந்த பிள்ளைத்தாச்சிகளாய் கிளை பரப்பி நின்ற மரங்களும், நடுநடுவே சாமந்திக் காடுகளும், அடுக்கு மல்லித் தோட்டங்களும்….
கண் முன் நகரும் பசுமையில், எந்த மேல்பூச்சும் இல்லாத இயற்கையின் பேரழகில் இதயம் இளகித் ததும்பியது.
வழியில் சில சோளக் காடுகளும் தென்பட, “வழில கூறு கட்டி விக்கிறதை பார்த்தீங்கன்னா நிறுத்துங்க… ஆனா, இத்தனை காலைல வச்சிருக்கிறது சந்தேகம் தான்.” தானும் இரண்டு பக்கமும் கவனித்தாள்.
என்னதான் அமெரிக்கன் சோளத்தை ஆசைக்கு வாங்கி ருசித்தாலும் இந்தப் பால் பிஞ்சு கதிர்களின் சுவைக்குக் கிட்டே கூட அவற்றால் நெருங்க முடியாது. உப்பு போட்டு சுட சுட வேக வைத்துக் கொடுத்தால் பத்ரிக்கும், பிள்ளைகளுக்கும் கூட ரொம்பவே இஷ்டம்.
அவள் அதிர்ஷ்டம் தொலைவில் சாலையின் எதிர்புறமாக ஒரு வயதான அம்மா கூடையை வைத்துக் கொண்டு நின்றார். பேருந்துக்குக் காத்திருக்கிறாரோ? மஞ்சள் சாணி பூசிய கூடைப் பின்னலுக்கு வெளியே சோளக்கதிர்களின் இளம்பச்சையும் உமி நூல்களுமான தோகை தெரிய… “செந்தில், நிறுத்துங்க.. நிறுத்துங்க..”
வண்டி அவர் அருகே வேகம் குறைந்து நின்றது. “அம்மா, விக்கவா எடுத்துட்டு போறீங்க…?” கூடையைக் காட்டி சுமி விசாரிக்க, “மகராசியா வாங்கிட்டு போ… எனக்கும் மார்க்கெட்டு வரைக்கும் கொண்டு போக வேண்டிய வேலை மிச்சம்..” அந்த மூதாட்டியின் உடனடி சம்மதத்தில் சுமி முகமெல்லாம் புன்னகையாக கீழே இறங்கினாள். நேற்று மாலை அவள் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்த ஆறிலக்க சம்பளச் செய்தியைப் பார்த்தபோது கூட இந்தளவு பூரிப்பும் மகிழ்ச்சியும் தோன்றவில்லை.
அவர் எடுத்து நீட்டிய கதிரின் மேல் தோகையை இதழ் இதழாக விரித்து உள்ளிருப்பதைக் நசுக்கிப் பார்த்தாள். வெளிர்மஞ்சள் நிறத்தில் சிறுத்திருந்த பருப்புகளைக் கிள்ளியதும் வெண்பால் பிதுங்கி நகக்கணுவில் வழிந்தது.
“எல்லாமே பிஞ்சு தான் ஆயா…” அலைச்சல் மிச்சமான சந்தோசத்தில் அந்த அம்மா கூடையை இவள் பக்கம் நகர்த்திவிட்டு சாலையிலேயே குத்துக்கால் போட்டு அமர்ந்து கொண்டார்.
இவள் தேர்ந்தெடுப்பதை வாங்கி செந்தில் வண்டியில் அடுக்க, “அந்தப் பைக்குள்ள என்ன வச்சிருக்கீங்க?” மண்ணில் சரிந்து கிடந்த அழுக்கேறிய துணிப்பையைக் காட்டி கேட்டாள்.
பட்டை பட்டையாய் முரட்டுத் துணி வைத்துத் தைத்திருந்த அதன் நிறம் எந்தக் காலத்திலோ நீலமாய் இருந்திருக்க வேண்டும். இப்போது கருப்புக்கும் பழுப்புக்கும் இடையே ஓரங்கள் நைந்து பிய்ந்த கைப்பிடிகளுக்கு மாறாக வேறு காடா துணி வைத்துக் கட்டியிருந்தது.
“பக்கத்துல ஸ்கூலு புள்ளைங்களுக்கு விக்குறதுக்கு…” இவளே குனிந்து அந்தப் பையைப் பிரித்துத் துழாவினாள். சில மாங்காய்களும் ஒரு அன்னாசியும் கூடவே இரண்டு துண்டு வாழைத் தண்டுகளும் இருந்தன. தண்டை கட்டோடு அப்படியே எடுத்துக் கொண்டவள் நான்கைந்து மாங்காய்களைப் பொறுக்கி எடுத்தாள். வெயிலுக்கு எல்லாமே வெதும்பி போயிருந்தன.
“அது உனக்கு வேணாம் ஆயா. அய்ய.. அதுல செல்லாததைத் தனியா போட்டு வச்சிருக்கேன்..”
“பரவால்ல கொடுங்க… எத்தனையோ வருஷம் ஆச்சு, இதையெல்லாம் சாப்பிட்டு” அவர் ஒதுக்கிய சூம்பிக் கிடந்த எலந்தைப்பழங்களையும், சிறு நெல்லிகளையும் கூட விட மனதில்லை. பத்மநாபசாமி கோவில் பொக்கிஷத்தை நேரில் கண்ட சந்தோஷம்! தனித்தனியே பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டாள்.
அவர் கேட்டதற்கு மேல் தாராளமாய்ப் பணம் கொடுத்து விட்டுக் கிளம்பினார்கள். வண்டி வேகமெடுக்கவும், “இந்தாங்க செந்தில்….” மிளகாய் தூவி கீறல் போட்டிருந்த மாங்காய் துண்டு ஒன்றை பிய்த்து கொடுத்தாள்.
“இல்ல எனக்கு வேணாம் மேடம்… நீங்க சாப்பிடுங்க…”
‘இந்தம்மா என்ன பக்கி மாதிரி காலங்கார்த்தாலே காரம் போட்ட மாங்காயை திங்குது….!!!?’ என்று நினைத்து அவன் உள்ளுக்குள் சிரிக்கிறானோ என்னவோ, சுமி அதையெல்லாம் லட்சியம் பண்ணவில்லை.
அசிடிட்டி தொல்லையால் ஏற்படும் நெஞ்செரிச்சலையும் மறந்து ‘ஸ்ஸ்ஸ்..’ என உரைக்கும் நாக்கைத் தட்டிக் கொண்டு சாப்பிட்டாள். சாப்பிடும் காரமோ, காற்றின் வேகமோ, இல்லை பழைய நினைவுகளின் ஏக்கமோ… கண்கள் கலங்கி லேசாய் நீர் வடிந்தன. தோளை உயர்த்தி விழியோரம் துடைத்துக் கொண்டாள்.
இப்போது வெளிச்சம் நன்கு ஏறி இருந்தது. ஒவ்வொரு ஊரை தாண்டும் போதும் பள்ளி செல்லும் குழந்தைகள், அவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எனச் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்திருக்க, பயணத்தின் வேகம் குறைந்தது. இவர்களை ஒட்டியபடி வந்த ஒரு பள்ளிப் பேருந்தில் சிறு சிறு பிள்ளைகளின் முகங்கள் தெரிய, ஆசிரியையோ என்னவோ கதவோர இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண்ணின் தோற்றம் சுமிக்கு சட்டென்று இன்னொரு நபரை நியாபகப்படுத்தியது.
‘சாலாக்கா மாதிரியே இருக்குல்ல இந்தப் பொண்ணு!!!!??’
அந்தப் பெண்ணின் நீள் மூக்கும், சற்றே தூக்கிய மோவாயும் கூந்தலின் முன்வளைவுகளும் அவரைப் போலவே இருக்க, ‘அவங்களைப் பார்த்தே எத்தனை வருஷமாச்சு…?’ சட்டென்று மேலெழுந்த நினைவலைகளில் சுமி தேங்கிப் போனாள். ஒரு காலத்தில் வத்சலா தான் சுமி வயது பெண்களுக்கு ரோல் மாடல், ஆதர்ச பிம்பம், வழிகாட்டிச் செல்லும் முன் ஏர் என எல்லாமும்.
இவர்கள் எல்லோரும் கூப்பிடுவது தான் சாலா, அவருடைய ஒரிஜினல் பெயர் வத்சலா. அந்த ஊரிலேயே முதன்முதலாக இன்ஜினியரிங் படித்த பட்டதாரி சாலாக்கா தான். இப்போது மாதிரி பிஇ படிப்பு மலிந்து போன காலமில்லை அது.
பெண்களைக் கல்லூரிக்கு அனுப்பவே யோசிக்கும் ஊரில் அவர் அப்பா துணிச்சலாகத் தன் பெண்ணை ஐஆர்டிடியில் படிக்க வைத்தார். யார் கிண்டல் கேலிகளையும் கேள்விகளையும் சட்டை பண்ணாமல் படிப்பே குறியாகப் படித்த அந்த அக்கா படித்து முடிக்கும் முன்பே வேலை வாங்கி சென்னை போனார்.
பிறகு அங்கிருந்து பூனே. சில வருடங்கள் லண்டன் டெபுடேஷனில் பணி செய்து விட்டு இப்போது குடும்பத்துடன் டெல்லியில் இருக்கிறார் என்று கேள்வி.
‘சாலாக்கா மாதிரி நாமளும் படிச்சு முன்னுக்கு வரணும்…’ சுமியின் பள்ளி வயது முழுவதும் அவர் மீதுள்ள பிரமிப்பும், அவருடைய முன்னேற்றத்தைக் கண் முன்பு காண்கிற பிரேமையுமாகத் தான் கழிந்தது.
இவர்கள் அருகே குடி இருந்த அவர் பெற்றோர் எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு வீட்டை விற்று விட்டுத் தங்கள் சின்ன மகனிடம் போனார்கள். ஓரிரு ஆண்டுகள் கோவையில் இருந்தவர்கள், மகனின் பணி இட மாறுதலில் இப்போது தூத்துக்குடி பக்கம் சென்று விட்டார்கள் என அப்பா ஒருமுறை சொன்னார். அவர்கள் எண் மாறிவிட்டதால் இப்போது எந்தத் தொடர்பும் இல்லை.
‘இப்ப எங்க இருக்காங்களோ… ஏதாவது போன் பண்ணினாங்களான்னு அம்மாகிட்ட ஞாபகமா கேட்கணும்…’ நெருங்கிப் பிணைந்திருக்கும் சில உறவு இழைகள் கால ஓட்டத்தின் வேகத்தில் மெல்ல மெல்ல விலகிப் போகும் நிதர்சனத்தின் விந்தையை எண்ணி புன்னகைத்த சுமி, ஆழ்மூச்சுடன் கையிலிருந்த ஈரப்பிசுக்கை காகிதத் துண்டால் துடைத்துக் கொண்டாள்.
சாலாவை உதாரணப் பிம்பமாக முன் நிறுத்தி தான் பொருந்திப் படித்ததும், கடுமையாக உழைத்து பன்னாட்டு வங்கியில் நேரடி பணி நியமனமாக உதவி மேலாளர் பொறுப்பில் அமர்ந்ததும், இன்று பல படிகள் தாண்டி தென் இந்தியாவின் பிராந்திய தலைமைப் பொறுப்பில் உயர்ந்திருப்பதும்…
‘இந்த முன்னேற்றத்துக்கெல்லாம் வித்து அன்னிக்கு அந்த அக்காவைப் பார்த்துப் பார்த்து என் மனசுக்குள்ள விழுந்த விதை தான்…’ இந்த யோசனைகளுக்கு இடையே சுமி வழி சொல்ல, வீடு வந்து விட்டது. வாசலிலேயே நின்று இருந்தாள் அம்மா.
இவள் வருகையை வரவேற்கிற மாதிரி வழக்கத்தை விட பெரிதாய் விரிந்திருந்த கோலத்தை மிதித்து விடாமல் இறங்கிய சுமி அம்மாவை அணைத்துக் கொண்டாள்.
“எப்படிம்மா இருக்க?” “நான் நல்லா இருக்கேன். நீ எப்படிடி இருக்க? வர்றது தான் வர, அவரையும் பிள்ளைங்களையும் சேர்த்து கூட்டிட்டு வந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?”
“உங்க பேத்திகளுக்குப் பரீட்சை நேரம்மா. லீவ் போட்டுட்டு எங்க வர்றது..? அப்பா எங்க..?” பேசிக் கொண்டே செந்தில் இறக்கி வைத்த பைகளை உள்ளே எடுத்துச் சென்றார்கள்.
“கடைக்குப் போயிருக்காரு… நீ இன்னிக்கு வரேன்னு திடீர்னு தான தெரியும், அதுதான் முக்கு ரோடு வரைக்கும் போய்ச் சாமான் வாங்கிட்டு வரேன்னு போனாங்க” முகம் கழுவி அம்மா கொடுத்த காபியை ஊதியபடி அவள் முன் வாசல்படியில் வந்து அமர, அப்பாவின் ஸ்கூட்டர் வந்து நின்றது.
கால் வைக்கும் இடம் முழுக்கப் பைகளாக நிறைத்துக் கொண்டு வந்து நின்றவர், மகளைப் பார்த்ததும், “எப்படி இருக்கடா…?” என்றார் வாஞ்சையுடன்.
“நல்லாயிருக்கேன்பா…. எதுக்கு இத்தனையை வாங்கிட்டு வந்துருக்கீங்க? வண்டில அலையாதீங்கனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?” கடிந்துகொண்டே வண்டியை நேராக நிறுத்தி அவர் ஸ்டாண்ட் போட உதவினாள். வெறும் மூன்றே மாதங்கள் கழித்துப் பார்ப்பதில் அம்மா, அப்பா இருவருமே ரொம்பத் தளர்ந்திருப்பது போலிருந்தது.
‘நமக்கு மட்டும் வயசு ஆகல. நம்ம அம்மா அப்பாவுக்கும் சேர்த்தே வயசாகுது.’ இயலாமை சுட, சூடு ஆறியிருந்த காபியை ஒரே வாயில் ஊற்றிக் கொண்டாள். காலை உணவு அருந்தியதும் செந்தில் அவன் ஊருக்கு கிளம்பிவிட, இவள் அப்பாவுடன் பதிவு அலுவலகம் சென்று சொத்து வரி குறித்த தாள்களை நிரப்பி, வங்கிகளுக்குச் சென்று தான் வந்த வேலையை முடித்தாள்.
அப்பாவின் ஸ்கூட்டரில் வீடு திரும்புகையில் வழியில் இளநீரும், கரும்பு சாறும் அருந்திவிட்டு அம்மாவுக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் பிளேவரை ஃபேமிலி பேக்காக வாங்கிக் கொண்டார்கள்.
“ஒழுங்கா கம்பியை பிடிச்சு உக்காரு… காலைத் தூக்கி ஸ்டாண்ட்ல வைச்சுக்கோ…” அப்பா அறிவுறுத்தியபோது திரும்பவும் இரட்டை ஜடை அணிந்த பள்ளிச் சிறுமியாகவே மாறிவிட்ட பிரமை சுமிக்கு.
மதியம் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். அம்மா மணக்க மணக்க செய்திருந்த பச்சை சுண்டைக்காய்க் குழம்பும், புடலங்காய் கூட்டும், பொரித்த அப்பளமும் நாவின் சுவையரும்புகளைத் தூண்ட, ரொம்ப நாட்கள் கழித்து நிதானமாக சாப்பிட்டாள்.
வாய்ப்பேச்சின் சுவாரஸ்யத்தையும் மீறி வயிறு நிறைய உண்ட களைப்பில் அவள் கண்கள் சொருகின. “உள்ள ரூம்ல போய்ப் படுடி.. ஏங்க.. ஏஸி போட்டு விடுங்க…” “அது வேலை செய்யுதோ இல்லையோ, நீங்க வரும்போது போடறது தான்.” அப்பா ஸ்விட்சை போட எழ, அதுவரை முழுவேகத்தில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி நின்றது.
“நிறுத்திட்டானா… கடங்காரன், சாப்ட்டுட்டு தலை சாய்க்கிற நேரம் பார்த்து சரியா நிறுத்தி தொலைச்சுடுவான்…“ அம்மா மின்சாரத் துறையைக் கரித்துக் கொட்ட, “இங்கயே நல்லா காத்து வருதும்மா.. நான் இப்படியே படுக்கிறேன்…” சுமி சமையல் அறை தரையில் கால் நீட்டி அப்பா கொடுத்த தலையணையை வைத்துப் படுத்தாள்.
தோட்டத்தில் இருந்து வந்த காற்றில் அவ்வளவாக வெக்கை தெரியவில்லை. சில்லென்ற தரையில் தலைசாய்த்தது தான் தெரியும். எத்தனையோ நாட்களுக்கு உண்டான உறக்கத்தை சேர்த்து வைத்து உறங்குவது போல அவள் கட்டையாய்க் கிடந்தாள்.
அவள் திரும்ப எழுந்தபோது இரவு கனிந்து இருள் பூத்திருந்தது. ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்து சுமி கூடத்திற்கு வந்தாள். அப்பா ம்யூட்டில் வைத்து டிவி பார்த்தபடி இருக்க, அம்மா இவள் வாங்கி வந்திருந்த வாழைத்தண்டுகளை நார் பிரித்து அரிந்து கொண்டிருந்தார். “ஏம்மா, எழுப்பி விடக்கூடாது…??”
“நல்லா அசந்து தூங்குற.. எப்படி எழுப்புறது? எங்க முழிச்சிடுவியோன்னு இன்னும் டீ கூடப் போடல..” அம்மா அரிவாள்மனையை ஓரமாகச் சாய்த்து வைத்து விட்டு எழுந்து போனார்.
“நீ இரும்மா… நான் போடுறேன்”
“நீ தானே என்னிக்கும் செய்யற, இங்க வர்ற நாளுல நிம்மதியா உட்காரு…” கொஞ்ச நேரத்தில் கை வந்து சேர்ந்த ஆவி பறந்த சோளங்களையும், அவித்த வேர்க்கடலையையும் ஒரு கை பார்த்தாள்.
“நைட்டுக்கு எனக்கு ஒன்னும் வேணாம், இதுவே திம்முனு இருக்கு…”
”அது சரி, உனக்குப் பிடிக்குமேன்னு ஆப்பத்திற்குப் போட்டுருக்கேன், இரண்டே இரண்டு சாப்டுட்டு படு…” நாற்பது வயதாகி, இரண்டு டீன் ஏஜ் பெண்களுக்குத் தாயானாலும், பெற்றவள் மட்டும் தான் தன் குழந்தையை என்றும் குழந்தையாகவே பார்ப்பது…
இரவு வெகுநேரம் கதை பேசிவிட்டு உறங்க நள்ளிரவானது. பேசி பேசி களைப்பில் அம்மா உறங்கிவிட, அதற்குமேல் தொணதொணக்காமல் சுமி கண்களை மூடிக் கொண்டாள். மதியம் நெடுநேரம் தூங்கி இருந்ததில் இப்போது உறக்கம் பிடிக்கவில்லை. வெளியில் படுத்திருந்த அப்பாவின் குறட்டை ஒலி சுவர்களில் பிரதிபலித்து இங்கு வரை கேட்டது.
கவிந்திருந்த அமைதியில் இவளுடைய மொபைல் திடீரென ஒலிக்க, தூக்கி வாரிப் போட எழுந்தாள். பத்ரி தான்…
‘என்ன இந்த நேரத்துல…?’
வயது வந்த இரண்டு பெண்களை வீட்டில் விட்டு வந்ததில் பதட்டம் ஏறப் பச்சையைத் தேய்த்தாள்.
“என்னாச்சுங்க…?”
“ஏய் சுமி.. பதறாதே. ஒன்னும் இல்ல. நாளைக்குச் சாயங்காலம் நான் கொச்சின் கிளம்பணும். ஒரு அவசர வேலை. நாளைக்கு நைட்டுதானே நீ புறப்படுறதா இருந்த, இப்ப காலைலயே கிளம்பிடு. நான் செந்திலுக்குச் சொல்லிட்டேன். அவன் காலைல வந்திடுவான்…”
“ஓ…. ம்ம்… சரி…”
சுரத்தே இல்லாமல் அவனிடம் பேசிவிட்டு வைத்தாள். அவ்வளவு நேரம் இருந்த உற்சாகமனைத்தும் காற்று போன பலூனாகக் கீழிறங்க, சுண்டிப் போன முகத்துடன் வந்து படுத்தாள். ஏதோ ரிமாண்டில் வந்த கைதி திடீரென அது ரத்தாகி மீண்டும் சிறைக்குச் செல்லும் மனநிலை வாய்த்தது. அம்மாவின் இடுப்பில் கை போட்டு நெருங்கி படுத்துக் கொண்டாள்.
கண்கள் குபுகுபுவெனப் பொங்கின. ஏன் அழுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை. நெஞ்சில் உள்ள ஆதங்கமெல்லாம் ஒற்றை உருண்டையாக உருண்டு எழும்பித் தொண்டையை அடைக்க, என்னவோ இங்கிருந்து போகவே அவளுக்குப் பிடிக்கவில்லை.
இதற்கும் தான் வாழும் வாழ்க்கையில் லௌகீக ரீதியில் ஒரு குறைவுமில்லை. கண் நிறைந்த கணவன், நல்ல பிள்ளைகள், உயர் பதவி, கை நிறையச் சம்பளம் எனப் பார்ப்பவர் பொறாமை படும் வாழ்க்கை தான்.
ஆனாலும்…
இத்தனை நிறைவுகள் இருந்தாலும் தனக்கென அமைந்த எதையும் அனுபவித்து நிதானமாக ருசித்து வாழ முடியாத அவசர வாழ்க்கையின் இயந்திர ஓட்டம்…. கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் அந்த சக்கரத்திற்குள் உடனே போய் சிக்கிக் கொள்கிற களைப்பும் அயர்ச்சியும்…. ‘ப்ச்…’
ஓட்டமென்றால் சாதாரண ஓட்டமில்லை. எந்நேரமும் பேய் ஒன்று துரத்துவது போலப் பின்னங்கால் பிடரியில் படுகிற ஓட்டம். எதற்கு ஓடுகிறோம் என்றே தெரியாத வேகமும், வெறியும். கொஞ்சம் நிதானித்தாலும் பக்கத்தில் ஓடுகிறவன் முந்திக் கொள்வானே என்கிற பயம், இருக்கும் இடத்தை யார் வந்து பிடுங்கப் போகிறாளோ என்ற அச்சம், ‘இன்னும் கொஞ்சநாள்’ என்று தனக்குத் தானே போலி சமாதானம் சொல்லியபடி கண்முன் கட்டியிருக்கும் கேரட்டை துரத்திக் கொண்டு ஓடுகிற கண்மண் தெரியாத ஓட்டம்…
இளமையும் துடிப்பும் இருந்தவரை எப்படியோ, நாற்பது கடந்த பின்னால் எப்போதும் பதட்டமான மனசும், படபடக்கிற விரைவுமாக வேலை அழுத்தத்தில் இழுபட்டபடி நிற்காமல் ஓட மூச்சுத் தள்ளுகிறது. ‘எதுவும் வேணாம் எனக்கு’ என்று சகலத்தையும் துறந்து விட்டு ஒரு மூலையில் நிச்சிந்தையாய் அமர்ந்து விடத் தோன்றுகிறது.
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் சட்டென்று எல்லாவற்றையும் உதறி விட்டு அப்படி உட்கார்ந்து விட முடியுமா…? எந்தப் பணியும் பதவியும் இந்தச் சமுதாயத்தின் முன் தன்னைப் பெருமையாக கௌரவமாகச் சித்தரிக்கிறதோ, அதே வேலையும் அழுத்தமும் தான் கண்ணுக்குப் புலப்படாத இரும்பு கண்ணிகளால் சங்கிலி போட்டுத் தன்னைப் பிணைத்து வைத்திருப்பது போலிருந்தது.
தன் சின்னச் சின்ன ஆசைகளை அடைய அனுமதிக்காத, இயல்பான ஆசுவாசங்களைச் சுவாசிக்கவும் நேரம் கொடுக்காத கடுமையான சர்வாதிகாரியாக விரட்டுகிறதே!!??
இதையெல்லாம் வெளியே சொன்னால் கேட்பவர்கள் சிரிப்பார்கள். “மிடில் ஏஜ் மேட்நெஸ்” என்பான் பத்ரி. “யூ ஆர் டிப்ரஷட்னு நினைக்கிறேன், ஸ்பா போய்ட்டு வாயேன்மா” தந்தை சொல்வதைப் பின்பற்றி மாறி மாறி கிண்டல் செய்வார்கள் மகள்கள் இருவரும்.
இந்த அம்மா என்ன சொல்வாள்? “போடி பைத்தியக்காரி…“ என்பாளா..? அல்லது, “ஒருவாரம் இருந்துட்டு போ, வக்கணையா சமைச்சு போடுறேன், எல்லாம் சரியா போயிடும்” என்பாளா…?
இல்லை, என் மனதை, என் கவலைகளை, அழுத்தங்களை என்னை விடத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பவள் இவள் மட்டும்தான். “கஷ்டப்படாதடி… சாப்பிடுற சாப்பாடோட ருசி கூடத் தெரியாம அப்படி என்ன ஓடுறது?” நிச்சயம் இப்படித் தான் சொல்வாள்.
ஆனால், யார் என்ன சொன்னாலும், ஏன் தானே நினைத்தாலும் எங்கும் நிற்க முடியாது. எல்லை எதுவென்றே வரையறுத்திடாத இந்த ஓட்டத்தை முதுகில் சுமந்திருக்கும் குடும்பச் சுமைகளையும் சுமந்தபடி தொடர்ந்து ஓடத்தான் வேண்டும்.
இரட்டை வண்டிகளை இழுத்துச் செல்ல தானே விரும்பி மூக்கணாங்கயிறு மாட்டிக் கொள்ளும் மாட்டின் நிலை தான் தன் நிலையும். மனதுக்குள் ஏதேதோ பிதற்றிக்கொண்டே இருந்தவள் தன்னை மீறி எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.
“என்னடி செந்தில் வந்து நிக்குது..?” அதிகாலையில் அம்மா வந்து எழுப்ப, “இல்லம்மா, இப்ப கிளம்பணும்..” சிவந்திருந்த தன் கண்களை மறைத்தபடி பத்ரி இரவு அழைத்திருந்த விவரம் சொன்னாள்.
“என்ன சுமி இப்படிச் சொல்ற? மீன் வாங்கி வறுத்துப் பிள்ளைங்களுக்குக் கொடுத்தனுப்பலாம்னு இருந்தேன்… வாங்கி வச்ச கீரையை இன்னும் ஆயல… திடுதிப்புன்னு கிளம்பறன்ற…” அம்மாவின் அங்கலாய்ப்பைக் கேட்டபடியே சுமி குளித்துத் தலை சீவினாள்.
“இரண்டு பேரும் வாங்கம்மா அங்க… எங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்ல…” கமறிய தொண்டையைச் செருமியபடி அவள் சாதாரணமாகப் பேச முயன்றாள். அரிதாய் வீடு வந்த பெண் அடித்துப் பிடித்து உடனே கிளம்புவதில் அம்மாவின் முகமும் விழுந்திருந்தது.
“நீங்க இங்க வந்தா ஆற அமர இருந்துட்டுப் போகலாம். நாங்க அங்க வந்து என்னடி பண்றது? நீயும் வேலைக்குப் போறவ… டிவியையே பார்த்துட்டு கொட்டு கொட்டுன்னு எவ்வளவு நேரம் தான் உட்கார்றது?” பதில் சொல்ல முடியவில்லை சுமியால், விடுபட முடியா சுழலில் சிக்கிக் கொண்டது போல ஆயாசமாக இருந்தது.
முடி சுருளை இவள் சீப்பில் இருந்து உருவி விரலில் சுருட்டிக் கொண்டிருக்கும்போது அப்பா உள்ளே வந்தார்.
“பக்கத்து தெரு அலமேலு இருக்குல்ல, அது மகளும் பேத்தியும் வந்துருக்காங்கம்மா உன்னைப் பார்க்கணும்னு… நீ வந்தா சொல்லுங்கன்னு சொல்லி வச்சிருந்தாங்க. அது தான் வீட்டுக்குப் போய்ச் சொல்லிட்டு வந்தேன்.”
“என்னங்க எப்படி இருக்கீங்க? வாம்மா…” இவள் வெளியே வந்து வரவேற்க, பதின் வயதில் நின்றிருந்த பெண்ணும், அவள் தாயும் உள்ளே வந்தார்கள். சுமி அவர்களை இங்கு வரும்போது அவ்வப்போது பார்த்துப் பேசி இருக்கிறாளே தவிர, பெரிய பழக்கம் எல்லாம் கிடையாது.
‘எதுக்கு வந்திருக்காங்க…?’ என்ற கேள்வி தோன்றினாலும், “நல்லா வளர்ந்துட்டியே… என்ன படிக்குற?” பொதுவான நல விசாரிப்புகள் தொடர….
“சொல்லு மாலு… அந்தக்கா ஊருக்கு கிளம்ப நேரமாகுதுல்ல…” தாயார் தூண்ட அந்த மாலினி வெட்கமாகச் சிரித்தாள். “இல்லக்கா… இந்த வருஷம் நான் பிஎஸ்ஸி சேர்ந்திருக்கேன், மேல என்ன படிக்கிறது, என்னவெல்லாம் இப்ப படிச்சு வச்சா மூணாவது வருஷமே வேலை கிடைக்கும்னு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. அதுதான் உங்ககிட்ட கேட்டுட்டு போகலாம்னு…”
சுமிக்கு சட்டென்று சாலாக்காவின் நினைவு வந்தது. கஷ்டப்படும் அடிமட்ட குடும்பத்தில் இருந்து வருகிற அந்தச் சின்னப்பெண்ணின் ஆர்வமும், முன்னேற வேண்டும் என்கிற வேட்கையும்… தொடுதிரை அலைபேசியிலும் கட்டற்ற இணையத்திலும் சிக்கிச் சீரழியும் நகரத்து மேல்தட்டுப் பிள்ளைகளை அவளையும் அறியாமல் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது.
சிறுநகரங்களில் இந்த மாதிரி துடிப்புள்ள தலைமுறையைப் பார்ப்பதற்கே அத்தனை சந்தோசமும் உத்வேகமுமாய் இருக்க, அவர்கள் எதிரில் அமர்ந்தவள் படிப்பு விஷயமாக நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டாள்.
“பொண்ணுங்களுக்குப் படிப்பும் சம்பாத்தியமும் ரொம்ப ரொம்ப முக்கியம், அதுவும் இந்தக் காலத்துல நம்ம கால்ல நாம நின்னோம்னா தான் நாமே நம்மளை மதிப்போம். நல்லா படி… என் நம்பர் வச்சுக்கோ… எப்ப வேணுமானாலும் கூப்பிடு..”
சொல்லும்போதே சுமிக்குச் சிரிப்பு வந்தது. சற்று முன் இருந்த மனநிலைக்கும் இப்போது தான் பேசுவதற்கும் உள்ள முரணை நினைத்து அவள் முறுவலிக்க, தனக்கான ஊக்கம் என்று அதைப் பொருள் எடுத்துக் கொண்ட மாலினி, “கண்டிப்பாக்கா… நீங்க தான் என் இன்ஸ்பிரேஷன்…” என்றாள்.
நமுட்டுச் சிரிப்புடன் மாலினியின் தோளைத் தட்டிக் கொடுத்தாள் சுமி. வழியனுப்ப வாசலில் வந்து நின்றவள், தன் அம்மாவுடன் எதையோ உற்சாகமாக பேசியபடி துள்ளலுடன் நடந்து போகும் அந்தப் பெண்ணையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு ஏதோ கண்ணுக்குத் தெரியாத திரை விலகிய உணர்வு!
தான் ஓட ஆரம்பித்தது, ஓடிக் கொண்டிருப்பது தனக்காக மட்டும் இல்லை, தன்னைப் பார்த்து ஓடத் துவங்கும் இவள் மாதிரி பெண்களுக்காகவும் தானே ??!!!
தான் சாலாக்காவைப் பார்த்து… இவள் என்னைப் பார்த்து…. சாதாரண அலுப்புக்கும், அயர்ச்சிக்குமா இந்தத் தொடர்ச்சியின் கண்ணி அறுபட வேண்டும்…?
தொடர்ந்து ஓடுவதில் சலிப்பு தட்டும் தான். களைப்பில்லாமல் ஓடுவதற்கு இந்த மான்களுக்குத் தேவை அவ்வப்போது தென்படக்கூடிய சிறு சிறு குளிர் நிழல்கள் மட்டுமே, அம்மாவின் மடி சாய்ந்து இளைப்பாறி வாஞ்சையுறும் இச்சிறுத்தருணங்களைப் போல…
அவள் மனக்குளத்தில் குமைந்திருந்த அலைகள் மெல்ல அடங்கின. தனக்கு உண்மையில் என்ன தேவை எனப் புரிபட, “அம்மா, அடுத்த வாரம் காரை அனுப்புறேன். இரண்டு பேரும் வந்துடுங்க. பசங்களுக்கு லீவ் ஆரம்பிக்குது, நானும் ஒரு மாசம் எம்எல் போட்டுட்டு உங்க கூட இருக்கேன்… எனக்கும் ரெஸ்ட் வேணும், உங்களுக்கும் ரெஸ்ட் வேணும்….” சிறிது நேரத்தில் பெற்றோரிடமிருந்து விடைபெற்ற சுமி தெளிந்த மனதுடன் காரில் ஏறினாள்.