நறுங்காதல் பொழிபவனே – 9

ஆதவன் வேல்விழிக்கு முதன் முதலாய் வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப்புடவையில் ஆதவனின் இல்ல கிரகப்பிரவேச விழாவிற்கு வந்திருந்தாள் வேல்விழி. அவளுடன் ரேவதியும் அக்ஷயாவும் வந்திருந்தனர்.

ரேவதியும் அக்ஷயாவும் வெவ்வேறு ஊரை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆதவனின் அழைப்பை ஏற்று வந்திருந்தார்கள். அக்ஷயாவுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. வேல்விழியின் இல்லத்தில் தான் தங்கியிருந்தார்கள் இருவரும். ஆதவன் வேல்விழியின் வீட்டினரையும் இந்த விழாவிற்கு அழைத்திருந்தான். கல்யாணம் பேசி தேதி குறிப்பதற்கு முன் அவனின் வீட்டிற்குச் செல்வது சரியில்லை எனக் கூறி வர முடியாதென்றே அவர்கள் கூறியிருந்தனர். வேல்விழியையும் அவர்கள் செல்ல வேண்டாமெனத் தான் உரைத்தனர். ஆனால் இவளது தோழிகள் இதற்காகவெனவே அந்த ஊருக்கு வந்து அவர்களின் வீட்டில் தங்கியதும், தோழிகளுடன் அவளையும் செல்ல அனுமதித்தனர்.

இந்த ஆறு மாதங்களில் வீட்டு வேலை துரிதமாய் நடக்க, அதனுடன் இவர்களின் காதலும் மென்மேலும் மனதோடு விருட்சமாய் வளர்ந்து அவர்களின் பிணைப்பை அதிகரிந்திருந்தது.

இந்த ஆறு மாதங்களில் அவனது காதல் பற்றி அவனது தாய் விஜயாவிடம் ஒன்றிரண்டு முறை பேச வாயெடுத்த போதெல்லாம், அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். அதனாலேயே வேல்விழியை அவர் முன் நிறுத்திவிட வேண்டுமென முடிவு செய்து அவளைக் கிரகபிரவேச விழா அன்று வர வைத்திருந்தான்.

அனைத்திலும் தனக்கே முன்னுரிமை அளித்து, எதையும் தன்னிடம் பகிர்ந்து முடிவு எடுக்கும் மகன், இது வரை தன் சொல்லை மீறி நடக்காத மகன், ஒருத்தியை காதலிப்பதை தன்னிடம் உரைக்காது அவளின் வீட்டிற்கே பேச சென்றது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்திருந்தன.

அவனது தந்தை மனோகரிடம் வேல்விழியின் வீட்டினில் பேசியதையும் அவளின் குடும்பத்தினரை பற்றியும் உரைத்திருந்தான் ஆதவன். அவரும் வேல்விழியின் குடும்பத்தினரை பற்றி விசாரித்து வைத்திருந்தார். இவை அனைத்தையும் அவர் தனது மனைவியிடம் உரைத்தும் இருந்தார்.

தான் வாங்கிக் கொடுத்த சேலையில் தன்னவளை கண்டவனின் நெஞ்சம் துள்ளி அடங்க, முகம் பரவசத்தில் மின்ன பார்த்தவன், மூவரையும் வரவேற்று உள்ளே அழைத்து வந்தான்.

தான் பின்னாளில் வாழ போகும் இடம் என்ற எண்ணத்துடன் அவ்விடத்தைப் பார்த்திருந்தவளுக்கு, தங்களின் காதலை பற்றிப் பேசி, அங்கிருங்கும் எவரும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்றொரு பயம் உள்ளத்தை நடுங்க செய்து கைகளைச் சில்லிட வைத்தன.

மனோகரும் விஜயாவும் வீட்டினுள்ளே ஓம குண்டத்தின் முன் அமர்ந்து மந்திரத்தை உச்சரித்தவாறு பூஜையினில் இருக்க, முகிலன் ஐயருக்கு தேவையானதை எடுத்து கொடுத்து உதவி புரிந்து கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தலில், வந்திருந்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சிலர் ஆங்காங்கே நாற்காலியில் அமர்ந்திருக்க, அங்கிருந்த நாற்காலிகளில் அந்த மூன்று பெண்களையும் அமர வைத்தான். அவனுடன் பணிபுரியும் தோழிகள் என நினைத்து கொண்டனர் அனைவரும்.

பூஜை முடிந்ததும், வந்திருந்தவர்கள் அனைவரும் பரிசளித்து விட்டு உணவு உண்ண சென்று விட்டனர்.

இந்த மூன்று பெண்களும் செல்லலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே அமர்ந்திருக்க, முகிலன் வந்து அவர்களை உணவு உண்ணும் இடத்திற்கு அழைத்துச் சென்று உண்ண வைத்தான்.

அப்பொழுது தான் அவர்களைக் கண்டார் விஜயா. தான் அணிந்திருக்கும் சேலை போலவே சேலை உடுத்தியிருந்த வேல்விழியைக் கண்டவருக்கு, அவள் தான் தன் மகன் காதலிக்கும் பெண் எனவும், அவன் தான் இருவருக்கும் இவ்வாறாய் ஒரே மாதிரியான சேலையை வாங்கிக் கொடுத்திருக்கிறான் எனவும் புரிந்து போனது.

அப்பெண்கள் உண்டு விட்டு அங்கும் இங்குமாய் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த சமயம், விஜயாவின் பார்வை வேல்விழியையே பல மணி துளிகளாய் தொடர்வதைப் பார்த்த அக்ஷயா அதை வேல்விழியிடம் உரைக்க, அது வரை சற்று இயல்பாய் நடமாடி கொண்டிருந்தவளுக்கு அசௌகரியமாய்த் தோன்றியது.

ஆதவன் எதையோ வாங்கி வர வெளியே கடைக்கு எங்கோ சென்றிருந்ததால், வாங்கி வந்திருந்த பரிசை முகிலனிடம் அளித்து விட்டு கிளம்பி விட்டனர் மூவரும்.

பின் மூன்று பெண்களும் திருச்சியில் பிரசித்துப் பெற்ற கோவிலுக்குச் சென்று விட்டு வீட்டை அடைந்தனர். மாலை வேளையில் அக்ஷயா மற்றும் ரேவதி மீண்டுமாய்ச் சென்னைக்குப் பயணிக்க வேண்டி இருந்ததால் தங்களின் பைகளைத் தயார் செய்து கொண்டு இருந்தனர்.

அவனின் தாய் தன்னைப் பற்றி ஏதுரைத்தார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட, மாலையில் அப்பெண்களை வழி அனுப்பி வைத்து விட்டு ஆதவனுக்கு அழைத்தாள் வேல்விழி. அவனின் கைபேசி அவள் அழைக்கும் பொழுதெல்லாம் பிசியாகவே இருந்தது.

இரவில் அவள் அழைப்பை ஏற்றவன், “விழி நான் இன்னிக்குக் கொஞ்சம் பிசிடி! நாளைக்குப் பேசலாம்” என்றான்.

“டேய் ஃபோனை வச்சா கொன்னுடுவேன்” கோபமாய் உரைத்தாள் அவள்.

“எவ்ளோ நேரமா ஃபோன் செய்றேன்! என்ன ஏதுனு கேட்காம நீ பாட்டுக்கு பிசினு ஃபோன் வைக்கப் போற” என்றாள்.

“ம்ப்ச் என்ன சொல்லனும்? சீக்கிரம் சொல்லு! நான் ஹோட்டல்ல நிக்கிறேன் டின்னர் வாங்கிறதுக்கு” என்றான்.

கிரகபிரவேசம் நிமித்தமாய் அன்றைய நாள் முழுவதும் அவனுக்கிருந்த வேலை பளு அவனை அவ்வாறு அலுப்பாய் பேச வைத்தது.

கையில் இரவுணவு பார்சலுடன் சாலையில் பேசிக் கொண்டே நடந்தான்.

எடுத்ததும் அவனின் தாய் பற்றிக் கேட்க தயங்கியவள் சற்று யோசித்து,

“ம்ம்ம் இன்னிக்கு நான் கட்டியிருந்த சேலையைப் பத்தி நீ ஒன்னுமே சொல்லலையே” என்றாள்.

“அடியேய் இங்க மனுஷன் எவ்ளோ வேலை செஞ்சிட்டு அலைஞ்சிட்டு சுத்திட்டு இருக்கேன். இதைக் கேட்க தான் கால் பண்ணியா நீ?” அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்க,

“என்னடா நீ பேசலாம்னு ஃபோன் செஞ்சா இப்பவே இவ்வளவு சலிச்சிக்கிற? கல்யாணத்துக்குப் பின்னாடி என்னயலாம் மதிக்கவே மாட்ட போலயே” வருத்தமாய் உரைத்தாள்.

அவளின் வருத்தத்தில் சற்றாய் பெருமூச்சு விட்டுத் தன்னைச் சமன்படுத்தியவன், “வேலை அலுப்புல கத்திட்டேன்டி” என்றவன் சாலையோரத்தில் இருந்த பூங்கா திண்டில் அமர்ந்தவாறு பேச ஆரம்பித்தான்.

“சேலை நான் வாங்கிக் கொடுத்ததுடி! நல்லா இல்லாம எப்படி இருக்கும்!” புருவத்தை உயர்த்தி உரைத்தான்.

“பார்ரா! நினைப்பு தான்! அதை நான் அழகா கட்டினதால தான் அழகா தெரிஞ்சிது” என்றாள் அவள்.

“யாரு? நீ அழகா கட்டியிருந்த? பின்னாடி குதிகாலுக்கு மேல சேலை தூக்கிட்டு இருந்துச்சு! முன்னாடி கொசுவம்லாம் ஒரு அளவா இல்லாம தான் இருந்துச்சு” என்று அவன் மேலும் சொல்லி கொண்டே போக,

“டேய் அந்தளவுக்காடா என்னைய பார்த்துட்டு இருந்த?” ஆனந்த அதிர்ச்சியில் கேட்டாள்.

அத்தனை வேலைக்கு இடையிலும் தன்னை அவன் இத்தனை கூர்மையாய் கவனித்திருந்ததில் மனம் பரவசத்தில் துள்ளியது அவளுக்கு.

“நான் நல்லா தான் புடவையைக் கட்டிட்டு வந்தேன்! பஸ்ல ஏறி இறங்கி வந்ததுல அப்படி ஆகிடுச்சு. கல்யாணத்துக்குப் பிறகு புடவையைக் கட்டிக்கிட்டு என்னைய வெளிய கூட்டிட்டு போறேனா அலுங்க குலுங்காம போற மாதிரியான வண்டில தான் கூட்டிட்டு போகனும்” தனது  ஆசையை உரைத்தாள்.

அதன்பின் அன்று கிரகபிரவேசத்தில் நிகழ்ந்ததை எல்லாம் அவளிடம் பகிர்ந்து கொண்டவனிடத்தில், “சரி உங்கம்மா என்னடா சொன்னாங்க?” எனக் கேட்டாள்.

“உங்கம்மா என்னையவே உத்து உத்து பார்த்துட்டு இருந்தாங்க. எனக்கு ஒரு மாதிரி அசௌகரியமா இருந்துச்சு! அதான் உடனே கிளம்பிட்டேன்” என்றாள்.

அது வரை சந்தோஷமாய்ப் பேசி கொண்டிருந்தவன் ஏதோ யோசனையில் சிக்கியவனாய், “ஹ்ம்ம் அதை அப்புறம் சொல்றேன் விழி” என்று அழைப்பை துண்டித்திருந்தான்.

அவனின் குரலில் இருந்த பேதம் மேலும் அவளைக் கிலியூட்டியது. ஏதோ பெரியதாய் பிரச்சனை ஆகி விட்டதோ என யோசித்தவளாய் படுக்கையில் புரண்டாள் விழி.

அங்கு இரவுணவை நால்வருமாய்ச் சேர்ந்து உண்டவர்கள் உறங்க செல்ல ஆயத்தமானார்கள்.

அம்மா விழியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என நாளை கேட்க வேண்டுமென எண்ணி கொண்டவனாய் சோர்வில் உடனே உறங்கி போனான். ஆனால் அவன் நினைத்ததை அப்பொழுதே செய்து கொண்டிருந்தார் அவனின் தந்தை மனோகர்.

“அந்தப் பொண்ணு வேல்விழியைப் பார்த்தியா விஜி” எனக் கேட்டார் மனோகர்.

“ஹ்ம்ம் பார்த்தேன் பார்த்தேன்! அதான் எனக்கு வாங்கியிருந்த புடவை மாதிரியே வாங்கிக் கொடுத்து இது தான் உங்க மருமகனு சிம்பாளிக்கா சொல்லியிருந்தானே உங்க மகன்” என்றார்.

“அவன் உன்னையும் விழியையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறான்! அவனுக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு! புரிஞ்சிக்க விஜி! நம்ம பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம்” என்றவர் கூறவும்,

“ஹோ என்னைய வில்லியாவே முடிவு பண்ணிட்டீங்களா! நீங்களே என்னையும் என் பையனையும் பிரிச்சிடுவீங்க போலயே” என்று முறைத்தார்.

“நான் ஒன்னும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேனு சொல்லலியே!” என்றவரை வியப்பாய் பார்த்தார் மனோகர்.

“அவன் இப்படிச் செய்வான்னு எதிர்ப்பார்க்கலைங்க. அந்த அதிர்ச்சி முதல்ல! அதுவுமில்லாம என்கிட்ட சொல்லாம அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போய்ப் பேசினது தான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு! இப்பவே அந்தப் பொண்ணுக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குறானேனு வேற கவலை ஆயிடுச்சு. ஆனா இன்னிக்கு அந்த வேல்விழி பொண்ணைப் பார்த்ததும் பிடிச்சிடுச்சுங்க. ரொம்பவே அமைதியா குடும்பப் பாங்கான பொண்ணா தெரிஞ்சிது அந்தப் பொண்ணு” தன்னிலையை விளக்கி சம்மதத்தையும் அவர் தெரிவித்ததும், ஆசுவாசம் கொண்டார் மனோகர்.

“சீக்கிரம் அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போய்ப் பேசுவோம்” என்று மனோகர் கூறவும், “புது வீட்டுக்கு வந்ததும் நல்ல காரியம் பேசியிருக்கோம்! எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று மகிழ்வாய் உரைத்தார் விஜயா.

மறுநாள் மனோகர் மூலமாய் இந்த நல்ல செய்தியை அறிந்த ஆதவன் வேல்விழிக்குக் கைபேசியில் அழைத்து உரைக்க, “என்னடா இது பட்டுனு ஒத்துக்கிட்டாங்க! நான் என்னமோ உங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்க. சூசைட் செய்வேன்னு மிரட்டி உனக்கு வேற பொண்ணைக் கட்டிக்க வைக்கப் பார்ப்பாங்கனுலாம் நினைச்சு நேத்து ரொம்பவே வருத்தப்பட்டுட்டு இருந்தேனே” என்றாள்.

“அடிப்பாவி எங்கம்மாவ எவ்ளோ கொடூர வில்லியா நினைச்சு வச்சிருக்க! இதுக்குத் தான் நிறையப் படம் பார்க்காத பார்க்காதனு சொன்னேன். உன் கற்பனை குதிரை எப்படித் தறி கெட்டு ஓடுது பார்” சிரித்துக் கொண்டே உரைத்தான்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு வேல்விழியின் வீட்டில் பெண் பார்க்க அமர்ந்திருந்தனர் ஆதவனின் குடும்பத்தினர்.

முதன் முதலாக இரு குடும்பத்தவர்களும் சந்திக்கும் இந்நிகழ்வில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க வேண்டும் என இருவரும் இறைவனிடம் வேண்டியவர்களாய் பதட்டத்தில் இருந்தனர்.

ஆதவன் வேல்விழி இருவரின் இதயமும் ரயில் வண்டியாய் தடதடத்துக் கொண்டிருந்தது. கண்டிப்பாக வாய் தகராறு வரும் என எண்ணினான் ஆதவன். அப்பொழுது எவ்வாறு சமாளிப்பது என மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று வந்திருந்த அவளின் பெரியப்பா மற்றும் மாமா குடும்பத்தினர் அனைவரும் இன்றும் வந்திருந்தனர் அவளின் இல்லத்திற்கு.

தனது அறையில் பதட்டமாய் அமர்ந்திருந்தாள் வேல்விழி.

வேல்விழியின் வீட்டை பார்வையிட்ட விஜயா, “பசங்க ஆசைப்பட்டா செஞ்சி தானே ஆகனும். அது தானே நல்ல தாய் தகப்பனுக்கு அழகு” என்று தான் ஆரம்பித்தார்.

“ஆமா உங்க பையன் வீடு தேடி வந்து பொண்ணு கேட்கும் போது எங்களாலயும் முடியாதுனு சொல்ல முடியலை” என்றார் வேல்விழியின் தாய் மகேஸ்வரி.

“அப்புறம் நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க? அதைச் சொல்லுங்க?” எனப் பேச்சை தொடங்கனார் அவளின் மாமா.

“உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்யனும்னு நினைக்கிறீங்களோ, அதைச் செய்யுங்க! எங்களுக்குக் கண்டிஷன் எதுவுமில்லை” என்றார் மனோகர்.

சண்முகம், “எங்க வழக்கத்துல பையன் வீட்டுப் பக்கம் தான் கல்யாணம் நடக்கும். நம்ம இரண்டு குடும்பத்துக்கும் இது தான் சொந்த ஊருன்றனால இங்கயே கல்யாணம் வச்சிக்கலாம். பொண்ணுக்கு பத்து பவுன் நகை போடுவோம். கல்யாண செலவுலாம் நீங்க தான் பார்த்துக்கனும்! கோவில்ல செஞ்சாலும் இல்ல மண்டபத்துல செஞ்சாலும் எங்களுக்கு ஓகே தான்” என்றவர் கூறவும்,

“பத்து பவுன் போடுறது ஓகே ஆனா எங்க வழக்கப்படி பொண்ணு வீட்டுல தான் முழுக் கல்யாண செலவும் செய்வாங்க! தாலியும் பட்டும் தான் பையன் பக்க செலவா இருக்கும்” என்றார் மனோகர்.

சிறிது நேரம் சண்முகம் யோசிக்கவும்,
விழியின் பெரியப்பா, “சரி அப்ப கல்யாண செலவை பாதிப் பாதியா பிரிச்சிக்கலாம்” என்றதும் அனைவரும் ஒத்து கொண்டனர்.

கல்யாணத்தை மண்டபத்தில் வைத்து கொள்ளலாமென முடிவு செய்து விட்டு அடுத்த மூன்று மாதங்கள் கழித்து வந்த முகூர்த்த நாளில், எந்த நாளில் மண்டபம் கிடைக்கிறதோ அந்தத் தேதியை முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறி விடைப்பெற்று சென்றனர்.

ஹப்பாடா என்றிருந்தது ஆதவனுக்கும் வேல்விழிக்கும்.

அன்றிரவு மகிழ்வான மனநிலையுடன் அவனுக்கு அழைத்தவள், “இவ்ளோ ஈசியா எல்லாம் முடியும்னு நினைச்சு கூடப் பார்க்கலைடா! ஐம் சோ ஹேப்பி” குரலில் உற்சாகத்தைத் தேக்கி உரைத்தாள்.

அவளின் மகிழ்வில் நெஞ்சம் நிறைந்தவனாய், “எப்பவும் நீ இப்படியே சந்தோஷமா இருக்கனும்டா அழகம்மா” என்றான்.

“உன்னோட இந்த அழகம்மாவை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா! மிஸ்டு யுர் அழகம்மா சோ மச்” காதலுடன் ஆழ்ந்த குரலில் உரைத்தாள்.

அவள் அவ்வாறு உரைக்கவும் மனம் பாகாய் உருக, “என்னடி செய்ய! இந்த ஆறு மாசத்துல வீட்டு வேலை வச்சி செஞ்சதுல எதுலயும் கவனம் செலுத்த முடியலை. ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு மனசு ரொம்ப நிம்மதியா இருக்குடி” மென் குரலில் உரைத்தான்.

“இனி கல்யாணம் குழந்தைனு நம்ம கனவுலாம் நனவாகிடும்” கண்களில் கனவு மின்ன உரைத்தாள் அவள்.

“ஆமாமா நம்ம ஹனிமூன் கனவும் நிறைவேறிடும்” குறும்பாய் அவன் உரைக்க,

அவளின் வெட்க சிரிப்பு இவனின் செவிகளைத் தீண்டியது.

“ஒன்னு மட்டும் மனசுல வச்சிக்கோ விழி!
நம்மளோட வாழ்க்கைன்றது நீயும் நானும் மட்டும் தான்! கல்யாணம் முடிஞ்ச பிறகு வாழ போறது நீயும் நானும் தான்! அதனால யார் என்ன பேசினாலும் பெரிசா எடுத்துக்கிட்டு பேசாத! நமக்குள்ள வர்ற சண்டை நம்மைப் பேசின வார்த்தைகளுக்காகத் தான் இருக்கனுமே தவிர மத்தவங்க பேசினதுக்காக இருக்கக் கூடாது. இங்க நான் மத்தவங்கனு சொல்றது உன் குடும்பத்தையும் என் குடும்பத்தையும் சேர்த்து தான்! இதை என்னிக்குமே நாம கடைப்பிடிச்சா தான் நம்ம வாழ்க்கைய நமக்காக நாம வாழ முடியும்”

“எதுக்குடா இப்படி திடீர்னு நீளமா அறிவுரை செஞ்சிட்டு இருக்க? எதுவும் பிரச்சனை வரும்னு நினைக்கிறியா?” சற்று பயத்துடன் அவள் கேட்க,

“நான் இப்ப சொன்னது நம்ம கல்யாணத்துக்கு மட்டும் இல்லடி. நம்ம ஆயுசுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம். சொந்தங்கள்னால நமக்குள்ள எந்தப் பிரச்சனையும் வந்துட கூடாதேனு சொல்றேன்” விளக்கமாய் அவன் எடுத்துரைக்க,

“எந்தப் பிரச்சினை வந்தாலும் நீ எனக்காக என் கூட இருந்தா மட்டும் போதும்டா! எல்லாத்தையும் நான் கடந்து வந்துடுவேன்” காதலாய் அவள் உரைக்க,

அவளின் சொல்லில் நெகிழ்ந்தவனாய், “லவ் யூ டி அழகம்மா!” என்றான். காதலில் முக்குளித்து வந்தன அவனின் வார்த்தைகள்.

திருமணம் நிகழும் வரை இரு குடும்பங்களுக்குள் உருவாகவிருக்கும் சங்கடங்களை அறியாத இருவரும் இனி தங்களின் காதலுக்கு எவ்வித தடங்கலும் இல்லை என்ற நிம்மதியில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தனர்.

— தொடரும்