நறுங்காதல் பொழிபவனே – 8

ஆதவனும் முகிலனும் வீட்டினுள் நுழைந்ததும் அவனை வரவேற்று அமர சொன்னார் மகேஸ்வரி.

விழியின் பெரியப்பா, பெரியம்மா, அவர்களது மகளும் பேரனும் மற்றும் மாமா, அத்தை, அவர்களது மருமகளும் பேரனும் என அனைவரும் வந்திருந்தனர்.

அந்தச் சிறிய வரவேற்பறையில் இத்தனை பேர் நிறைந்து இருந்ததே கூட்டமாய் தோன்றியது.

விழியின் தந்தை சண்முகம் தான் அனைவரையும் அழைத்திருந்தார்.
தங்களுக்கென்று சொந்த பந்தங்கள் இருப்பதை வருபவனிடம் காண்பித்துக் கொள்ளவும், வேற்று சாதி எனப் பாராது பெண்ணின் காதலை ஏற்று நீயே தானே பேசி முடித்தாய் எனப் பின் நாட்களில் இந்தச் சொந்த பந்தங்கள் எதிலும் தலையிடாது விலகி செல்வதைத் தடுப்பதற்கும் இவ்வாறு இவர்களை அழைத்திருந்தார் அவர்.

“இதுல யாருப்பா மாப்பிள்ளை பையன்?” எனக் கேட்டார் விழியின் மாமா.

‘எங்கே தன்னை மாப்பிள்ளை என நினைத்து வெளுத்து விடுவார்களோ?’ எனப் பயந்து, “இதோ இவர் தான்! நான் அவங்க தம்பி” என்றான் முகிலன் அவசரமாய்.

இருவரின் உள்ளங்கையும் பதட்டத்தில் குளிர்ந்து வியர்த்து போயின. ஆனால் முகத்தில் புன்னகையும் கண்களில் தைரியத்தையும் ஒட்ட வைத்திருந்தனர்.

ஆதவனை அளந்தன அனைவரின் பார்வைகளும். விழியை விடச் சற்று நிறமாய், படித்த முகக்களையுடன் இருந்தவனைப் பிடித்திருந்தது அனைவருக்கும்.

‘ஓகே பையன் பார்க்க நல்லா இருக்கான்’ நினைத்தவாறே, “எங்க வேலை பார்க்கிறீங்க தம்பி? வீட்டுல எத்தனை பேரு? எவ்ளோ சம்பளம்? என்ன ஜாதி?” கேள்விகளை அடுக்கினார் அவளின் பெரியப்பா.

அனைத்துக்கும் பதிலுரைத்தான் இவன்.

ஏற்கனவே வேற்று ஜாதி பையன் என்பதை அறிந்து இருந்ததினால் அதைப் பற்றிப் பெரியதாய் யோசிக்கவில்லை எவரும்! அவனின் படிப்பும் சம்பளமும் அவர்களை ஜாதியை பற்றி யோசிக்க விடவில்லை எனவும் கூறலாம்.

ஆதவன் தன்னைப் பற்றி விளக்கி கூறியதில் திருப்தியான முகப் பாவனை அனைவரிடத்திலும்.

அனைவரும் அமைதியாய் வெவ்வேறு யோசனையில் இருக்க, “இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணும்னு நாங்க நினைச்சு பார்க்கவே இல்ல!” ஆதங்கமாய் உரைத்தார் விழியின் தாய்.

“எங்களோடது மெச்சூர்ட் லவ் தான் அத்தை! அவளும் வேலைக்குப் போறா.. நானும் வேலைல இருக்கேன்.. நீங்க பயப்பட வேண்டாம் எதுக்கும்! நான் அவளை நல்லா பார்த்துப்பேன்” அவரின் மனதை புரிந்தவனாய் தன்னிலையை விளக்கினான்.

ஆதவனைப் பற்றி முன்பே குடும்பத்தினர் அனைவரும் விசாரித்து விட்டனர். அவனைப் பற்றி விசாரித்ததில் நல்ல விதமாகவே தகவல்கள் வந்திருந்தன.
அவனுக்கு விழியைக் கட்டி கொடுப்பதில் அனைவருக்கும் பரம திருப்தி! அதனாலேயே இன்று அனைவரும் ஒன்று கூடி வந்திருந்தனர். ஆனால் விழியின் அன்னைக்கு மட்டும் விழி காதலித்ததில் சற்று ஏமாற்றம். அதைத் தான் இவ்வாறாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் அவர்.

“எங்க அண்ணன் மகளைத் திருச்செங்கோட்டுல எங்க சொந்தகாரங்க சுத்தி இருக்க இடத்துல தான் கட்டிக் கொடுத்தோம். என்ன பிரச்சனைனாலும் சுத்தி ஆளுங்க இருக்காங்க பொண்ணை உடனே போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுவாங்கன்ற தைரியத்துல தான் கட்டி கொடுத்தோம். இப்ப எந்தப் பிரச்சனையும் இல்லாம அவங்க வாழ்க்கை போகுது” என விழியின் தாய் மகேஸ்வரி இழுக்க,

அவரின் மனநிலையைப் புரிந்து கொண்டவனாய், “எங்களுக்குள்ள சண்டையே வராது அத்தை! அப்படியே வந்தாலும் உடனே சரியாகிடும்! என்னாலயும் சரி அவளாலயும் சரி ரொம்ப நேரம் பேசிக்காம இருக்க முடியாது! என்னைய நம்பி உங்க பொண்ணைக் கொடுங்க. நான் நல்லா பார்த்துப்பேன்” என்றான்.

அவனின் பேச்சும் நேர் கொண்ட பார்வையும் அனைவருக்கும் பிடித்திருந்தது.

“அப்புறம் என்ன பொண்ணைக் கட்டி கொடுத்துடலாம்” என்றார் அவளின் மாமா.

அறையினுள் இருந்த விழியின் மனது சந்தோஷ பெருக்கில் துள்ள, ஆதவனின் முகத்திலோ பளிச்செனச் சிரிப்பு மேவ,

“இல்லண்ணே! ஜாதகம் பொருத்தம் பார்க்கனும்” எனக் குண்டை தூக்கி போட்டு இருவரின் மகிழ்வையும் புஸ்வானமாகினார் மகேஸ்வரி.

இது வரை அமைதியாய் அனைவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம், “அதெல்லாம் வேண்டாம்மா! ஜாதகம் செட் ஆகலைனா வேண்டாம்னு சொல்ல முடியுமா.. அதான் இரண்டு மனசும் ஒத்து போய்டுச்சுல” என்றார்.

“ஜாதகம் பொருத்தம் இல்லாமலா இவங்க பொருந்தி போயிருப்பாங்க? அதெல்லாம் பொருத்தம் இருக்கும் ஒன்னும் பார்க்க வேண்டாம் தங்கச்சி” என்றார் அவளின் மாமா.

“இல்லண்ணே ஒரு தடவை பார்த்துட்டா.. என் மனசுக்கு திருப்தியாகிடும்” என்றவர் அவனிடம் ஜாதகம் கேட்டார்.

இவ்வாறு தனது தாய் ஏதேனும் கேட்டு வைப்பார் என்று ஏற்கனவே விழி அவனிடம் ஜாதகத்தை எடுத்து வருமாறு கூறியிருந்ததால், அவன் கையில் ஒரு ஜெராக்ஸ் காபி வைத்திருந்தான். அதை அவர்களிடம் அளித்தான்.

பின் அங்கிருந்த அனைவருக்கும் தேநீர் அளித்தாள் விழி. அவளும் அவனும் பார்த்து கொள்ளவே இல்லை. அனைவரும் இவர்களையே நோட்டமிடுவது போன்று கூச்சம் இருவரிடத்திலும் இருந்ததால் பார்க்க கூட முயற்சிக்கவில்லை.

கல்யாணம் எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் எனக் கேட்டார் அவரின் பெரியப்பா.

அதே சமயம் சமையலறையின் உள்ளே பெரியம்மாவும், அத்தையும், “பிள்ளைங்க இரண்டும் சென்னைல வேலை பார்க்கிறாங்க. ஒருத்தருக்கொருத்தர் அவங்க வேலைல அனுசரணையா இருந்து குடும்பத்தையும் பார்த்துப்பாங்க. பையனும் பார்க்க நல்ல குணமானவனா இருக்கான். கண்டதையும் யோசிக்காம கட்டி கொடுத்திடு மகேஸ்வரி” தங்களின் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

“இப்ப சொந்த வீடு கட்டிட்டு இருக்கோம். அது ஆறு மாசத்துல முடிஞ்சிடும். எங்க வீட்டுல லவ் மேரேஜ்லாம் எந்தப் பிரச்சனையும் இல்ல. வீடு கிரகபிரவேசம் முடிஞ்சதும் அம்மா அப்பாவோட கல்யாண தேதி குறிக்க வரேன்”என்றுரைத்தான்.

கிளம்பும் முன் விழியை ஒரு முறை பார்த்துவிட நினைத்து சுற்றும் முற்றும் அவன் பார்வையைச் சுழலவிட, அவனின் பார்வையைப் புரிந்து கொண்டவராய், “வேலும்மா!” என்று அழைத்தார் சண்முகம்.

“என்னப்பா” என்று வெளியே வந்தவளின் கண்கள் ஆதவனை வருடி சென்றது.

“தம்பி கிளம்புறாங்க பாரு” என்றார்.

வருகிறேன் என்பதாய் அவன் அவளைப் பார்த்து தலை அசைக்க, அவளும் அதை ஏற்பதாய் தலை அசைத்தாள்.

அனைவரிடமும் விடைப்பெற்று சென்றனர் இருவரும்.

அங்கிருந்து நகர்ந்த பிறகே ஆதவனுக்கும் முகிலனுக்கும் இயல்பாய் மூச்சு விட முடிந்தது. மனம் மிக மகிழ்வாய் இருந்தது. வேல்விழிக்கும் அதே நிலை தான்.

ஆதவன் சென்ற உடனேயே ஜோசியரிடம் இவர்களின் ஜாதகப் பொருத்தம் பார்க்க சென்றனர். அவரும் பொருத்தம் இருப்பதாய் உரைத்து, இவர்கள் தான் சரியான ஜோடி எனக் கூறினார்.

வந்திருந்த சொந்த பந்தங்கள் அனைவரும் மாலையே கிளம்பி சென்று விட்டனர். அனைவரின் வசிப்பிடமும் விழியின் இல்லத்தில் இருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவினில் தான் இருந்தது.

வேல்விழி ஆதவனுக்கு இரவு உணவு உண்டப்பின் அழைத்தாள்.

அன்றிரவு புது வீடு கட்டமான பணி மேற்பார்வை பார்க்க சென்ற ஆதவன், அங்கேயே தங்கி கொண்டான்.

ஆதவனின் குடும்பத்தினர் தற்பொழுது ஒரு வாடகை வீட்டினில் தங்கியிருந்தனர். அந்த வீடு இந்த வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது.

வேல்விழியின் அழைப்பிற்காக ஆவலாய் காத்திருந்தவன், உடனே அழைப்பை ஏற்றான்.

“நான் இன்னிக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்டா ஆதவ்! அதுக்குக் காரணம் நீ தான்டா! தேங்க்யூ சோ மச்! சாரிடா அன்னிக்கு சண்டை போட்டதுக்கு” என்றாள் விழி.

“அடடா நான் இன்னிக்கு செஞ்ச வீர தீர செயலுக்கு என் அழகம்மா என்கிட்ட போட்ட சண்டை எல்லாம் மறந்து சில பல விஷயங்களை அள்ளி கொடுப்பானு எதிர்பாரத்தேனே! இப்படித் தேங்க்யூ அண்ட் சாரிவோட முடிச்சிட்டியே” எனக் கூறி அவளை வம்பிழுத்தான் அவன்.

“வேற என்னத்த எதிர்பார்த்த நீ” என யோசித்துக் கன்னம் சிவந்தவளாய்,

“உனக்குக் குழந்தைங்கனா பிடிக்குமாடா? எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அதுவும் பிரக்னென்ட்டா இருக்கப் பொண்ணுங்கள பார்க்கவே பிடிக்கும். அந்த நேரத்துல அவங்க ரொம்ப அழகா தெரிவாங்க. அவங்கள எல்லாரும் எந்த வேலையும் செய்ய விடாம சந்தோஷமா வச்சு பார்த்துப்பாங்க! அந்தக் குழந்தை பூ போல அழகா இருக்கும். கொஞ்சிட்டே இருக்கலாம். இப்படிப் பல காரணங்களுக்காகப் பிரக்னென்ட்டா இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் காலேஜ் படிக்கும் போதே வயித்துல தலைக்காணிலாம் வச்சி பார்த்திருக்கேன். நான் கர்ப்பமா இருக்கும் போது பார்க்க எப்படி இருப்பேனு நினைச்சி பார்த்துப்பேன். அந்தப் பீரியட் ஆஃப் லைப்பை அனுபவிச்சி ரசிச்சு சந்தோஷமா வாழனும்டா” கண்களில் கனவுகள் மின்ன அவளுரைக்க,

“என்ன மேடம்.. வீட்டுல மேரேஜ்க்கு க்ரீன் சிக்னல் கிடைக்கவும் பேபி பத்திலாம் பேச ஆரம்பிச்சிட்டீங்க! அப்ப நானும் அட்வான்ஸ்டா பேசனும்ல” அவளைச் சீண்டினான்.

“என்ன பேச போற நீ?” சந்தேகமாய் அவனை அவள் கேட்க,

“நம்ம ஹனிமூன் பத்தி தான்” என்றான்.

“அதெல்லாம் இப்ப எதுக்கு? ஒன்னும் வேண்டாம்!” உள்ளே போன குரலில் குழைவாய் அவள் கூற,

“ஹா ஹா ஹா” வாய்விட்டு சிரித்தவன்,

“ஹனிமூன் இல்லாம எப்படிப் பேபி வரும் என் பேபி” என மீண்டுமாய் அவன் சிரிக்க,

‘அய்யோ! ஏன்டா இந்த டாபிக்கை ஆரம்பிச்சோம்’ எனக் கண்ணைச் சுருக்கி தன் நெற்றியிலேயே லேசாய் அடித்துக் கொண்டவள்,

“ச்சீ போடா! நான் ஃபோனை வைக்கிறேன்” என வைக்கப் போக,

“ஹே இருடி” என்றவன்,

“எனக்கும் குழந்தைங்கனா ரொம்பப் பிடிக்கும். கவலையேப்படாத! ஒரு கிரிக்கெட் டீமையே ரெடி பண்ணிடலாம்” என உரைத்தான் அவன்.

“என்னது கிரிக்கெட் டீமாஆஆ?” வாயை பிளந்தவாறு அவள் கேட்க,

“பின்னே! நான் பேட்டிங் பண்ணா பௌலிங் அண்ட் கீப்பிங் பண்ண ஆளு வேண்டாமா.. பதினோரு பேரு இல்லனாலும் அட்லீஸ்ட் நாலு பேராவது வேணாமா” என்றான்.

“ஆசை தான்! நாலுலாம் வேண்டாம்பா! இரண்டு போதும் எனக்கு! அதுல ஒன்னு உன்னை மாதிரியே கொழுக் மொழுக்னு சிரிச்சா கன்னத்துல குழி விழுற மாதிரி வேணும். நீயும் என் பையனும் ஒன்னா மூச்சு வாங்க ஓடி வரதை பார்க்கனும்” என்றவள் கூறி முடிக்கும் முன்,

“இன்னொன்னு உன்னை மாதிரி பொண்ணு தான் வேணும். நீ சின்ன வயசுல செஞ்ச சேட்டைலாம் எப்படி இருக்கும்னு என் பொண்ணுகிட்ட நான் பார்க்கனும்”

பின் நாட்களில் இந்த விஷயத்திற்காகத் தான், தாங்கள் கஷ்படப்போகிறோம் என்பதை அறியாமல் இருவரும் சேர்ந்து கனவுலகில் சஞ்சரித்திருந்தனர்.

“இப்ப என் மேல முழு நம்பிக்கை வந்துருச்சா மேடம் உங்களுக்கு! நீ லூசு மாதிரி அம்மா ஒத்துக்கலைனா விட்டுட்டு போய்டுவியா..  ஆயா ஒத்துக்கலைனா விட்டுட்டு போய்டுவியானுலாம் இனி கேட்க மாட்டல்ல” எனக் கேட்டான்.

“சாரிடா! ரியலி சாரிடா! எனக்கு உன் மேல நம்பிக்கை இருந்தாலும், என் அம்மா அப்பாக்கு நம்பிக்கை வர மாதிரி நீ நடந்துக்கலைனா நம்ம கல்யாணம் எப்படி நடக்கும்? அந்த கோபத்துலயும் கவலைலயும் தான் அன்னிக்கு அப்படி பேசிட்டேன்” தன்னிலை விளக்கத்தை அளித்தாள் அவள்.

“ஆமா அதென்னடி அம்மா அப்பாகிட்ட பேச வாங்கனு சொல்லிட்டு அங்க ஒரு கும்பலையே வர வச்சிருக்கீங்க?” எனக் கேட்டான்.

“எனக்கே அவங்கலாம் வந்த பிறகு தான்டா தெரியும்! இல்லனா உன்கிட்ட முன்னாடியே சொல்லிருப்பேன்” என்றவள்,

“ஹே சொல்ல மறந்துட்டேன்! ஜாதகம் கூடச் செம்ம மேட்சிங்கா இருக்குனு அம்மா ஜோசியரை பார்த்துட்டு வந்து சொன்னாங்க! நீ ஜாதகத்துல எதுவும் கோல்மால் செஞ்சியாடா?”

“அதெல்லாம் மேல உள்ளவன் போட்ட முடிச்சும்மா! எல்லாமே பொருத்தமா தான் வரும்” என்றான்.

“உங்கம்மாவுக்கு இந்தக் கல்யாணத்துல அவ்வளவா விருப்பம் இல்ல போலயே!” என்றவன் இழுக்க,

“அப்படிலாம் இல்லடா! அவங்களுக்கு லவ் மேரேஜ் பிடிக்காது. அது மேல நம்பிக்கை கிடையாது. அவங்க பொண்ணே அதைச் செஞ்சிட்டு வந்ததுல வருத்தம். இந்த ஒரு வாரமா என் மனசை மாத்த தினமும் பல விதமா பேசி பார்த்தாங்க. ஒன்னும் வேலைக்காகலை. அப்பாவும் வேற நம்ம காதலுக்கு முழுச் சப்போர்ட்! அதான் இன்னிக்கு அவங்க ஆதங்கத்தை அப்படிச் சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம என்னதான் ஆதர்ச தம்பதிகளாய வாழ்ந்தாலும அவங்க ஆயுசுக்கும் லவ் பண்ணி தானே மேரேஜ் செஞ்சீங்கன்ற வார்த்தையைச் சொல்லாம இருக்க மாட்டாங்கடா. அதனால பியூசர்ல அவங்க எப்படிப் பேசினாலும் பெரிசா எடுத்துக்காத சரியா” தன் தாயின் நிலையைப் பற்றி நீளமாய் விளக்கி இருந்தாள்.

“ஹ்ம்ம்” என அவன் அமைதி காக்க,

“ஆமா இன்னிக்கு எப்படி உங்கம்மா விட்டாங்க? நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா?” ஆவலாய் கேட்டாள்.

“ம்ப்ச் அதெல்லாம் இல்லை! கிரகபிரவேசம் முடியுற வரைக்கும் அவங்ககிட்ட மேரேஜ் பத்தி எதுவும் பேச வேண்டாம்னு நினைச்சிருக்கேன். இன்னிக்கு நானும் தம்பியும் எங்க ஸ்கூல்மேட் கல்யாண ரிசப்ஷனுக்குப் போய்ட்டு வரதா சொல்லி தான் அங்க வந்தோம்” என்றான்.

“அய்யோ தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாங்களா ஆதவ்!” என்று அவள் கேட்க,

“அட நீ வேற! அவங்க தெரிஞ்சாலும் வருத்தப்படத் தான் செய்வாங்க! கிரகபிரவேசம் அன்னிக்கு உன்னை அம்மாகிட்ட காமிக்கிறதா ப்ளான் பண்ணிருக்கேன். கண்டிப்பா உன்னைப் பார்த்தா அம்மாக்கு பிடிக்கும்” என்றான்.

“ஹ்ம்ம் ஒரு பக்கம் சால்வ் பண்ணிட்டோம். உங்க வீட்டு பக்கமும் ஓகே ஆகி தேதி குறிச்சிட்டா தான் மனசு நிம்மதியா இருக்கும்டா” என்றாள்.

‘தேதி குறிச்ச பிறகு தான்டி ரியல் பிரச்சனையே வரும்’ மனதினுள் எண்ணி கொண்டவனாய்,

“எல்லாம் நல்லபடியா நடக்கும்! கண்டதையும் யோசிக்காம இன்னியோட சந்தோஷத்தை மட்டும் மனசுல வச்சிட்டு நிம்மதியா தூங்கு” என்றுரைத்து அழைப்பை துண்டித்துப் படுத்தவனுக்கு எவ்வாறு தனது தாயை சமாதானம் செய்யப் போகிறோமோ என்றெண்ணி பெருமூச்சு உண்டானது.

— தொடரும்