நறுங்காதல் பொழிபவனே – 7

மறுநாள் காலை அலுவலகத்தில் வேல்விழி வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒலித்தது அவளின் கைபேசி.

கைபேசியின் திரையில் ஒளிர்ந்த அந்தப் பெயரை கண்டவளின் முகம் மென்னகை புரிந்தது.

அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க கொழுந்து சார்! ரொம்ப பிசியா இருக்கிற ஆளு நீங்க! என்ன அதிசயமா எனக்குக் கால் பண்ணிருக்கீங்க?” என நக்கலாய் கேட்டாள்.

‘என்னது மரியாதைலாம் பலமா இருக்கு’ மனதிற்குள் தோன்றியதை,”என்ன விழி! மரியாதைலாம் ஓவரா இருக்கு! நேத்து நாங்க வரலைனு நீங்க கோபமா இருக்கீங்க.. அதானே” எனக் கேட்டிருந்தான்.

“அய்யோ உங்க மேல கோபப்பட நாங்க யாரு சார்? நீங்கலாம் பெரிய ஆளு” அதே நக்கல் குத்தல் இருந்தது அவளின் பேச்சில்.

“நடந்தது என்னனு தெரியாம நீங்க பேசுறீங்க விழி” அவளின் நக்கல் பேச்சில் கடுப்பாய் உரைத்தான் அவன்.

“ஓ அப்படி என்ன நடந்தது? சொல்லுங்க கேட்போம்” என்றாள் அவள்.

‘அய்யோ உண்மையைச் சொன்னா அண்ணன் நம்மளை காலி பண்ணிடுவானே’ மைண்ட்வாய்ஸில் பேசியவாறே, “அது ஒன்னும் இல்லங்க! கான்கிரீட் வேலைனால தான் வர முடியாம போச்சு. நீங்க ரொம்பக் கோபமா இருப்பீங்கனு தான் சாரி கேட்கலாம்னு கால் பண்ணேன்” என்றான் அவன்.

“சாரிலாம் எதுக்கு? நீ என்ன பண்ணுவ உன் அண்ணன் பண்ணதுக்கு!” என்றாள் அவள்.

“என்னது அண்ணன் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டானா?” ஆச்சரியமாய்க் கேட்டான் அவன்.

“எதைச் சொல்லிட்டாங்களானு கேட்குற?”

“நேத்து ஏன் வர முடியலைனு அண்ணா சொன்னாங்களா?”

“ஆமா.. கான்கிரீட் வேலை இருந்தனால வர முடியலைனு சொன்னாங்க. ஏன் வேற எதுவும் காரணம் இருக்கா?” யோசனையாய் அவள் கேட்க,

“இல்ல எதுவும் இல்லங்க! சும்மா கேட்டேன்! நான் இப்ப தஞ்சாவூர்ல இருக்கேன், உங்களுக்கு எதுவும் வேணுமா?” பேச்சை மாற்றும் பொருட்டு இவ்வாறாய் அவன் கேட்க,

“ஹ்ம்ம் தலையாட்டி பொம்மை வாங்கிட்டு வா முகில்” ஆசையாய் அவள் கேட்க,

“எதுக்கு? அதான் ஏற்கனவே ஒன்னு இருக்கே! அது போதாதா” சிரித்துக் கொண்டே அவன் கேட்க,

‘ஏற்கனவே இருக்காஆஆஆ?’ யோசித்தவளுக்கு அவன் கூற வருவது புரிபட,

“ஹே உன் அண்ணாவ சொல்றியா? அவங்க என்னிக்கு நான் சொன்னதுக்குத் தலை ஆட்டிருக்காங்க? எப்பவும் நோ தான்” முகத்தைச் சுளித்தவாறு உரைத்தாள்.

“கல்யாணம் முடிஞ்ச பிறகு, தலையாட்ட வச்சிட மாட்டீங்களா என்ன?” கிண்டலாய் அவன் கேட்க,

“ம்க்கும் உங்க அண்ணன் மாறிட்டாலும்” ராகமாய் அவள் கூறவும், வாய் விட்டுச் சிரித்திருந்தான் அவன்.

“ஹ்ம்ம் அண்ணன நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க! சரி விழி நான் அப்புறமா பேசுறேன்” என விடைப்பெற எத்தனிக்க,

“எத்தனை தடவை சொல்லிருக்கேன்… பேர் சொல்லி கூப்பிடாதனு” சற்றுக் கோபம் போல் காட்டிக் கொண்டு அவள் கேட்க,

“அஞ்சு ஆறு நாள் முன்னாடி பிறந்த பொண்ணைப் பேரு சொல்லி கூப்டாம எப்படிக் கூப்டுவாங்களாம்?

அவளை வெறுப்பேற்றி வம்பிழுப்பதற்காகவே பேசி பழகிய நாளிலிருந்து பெயர் சொல்லியே அழைக்கிறான் இவன்.

‘அண்ணனை கட்டிக்கிட்டு எங்க வீட்டு மருமகளா வாங்க! அன்னிலருந்து அண்ணி தவிர மறுவார்த்தை வாயிலிருந்து வராது’ மனதிற்குள் கூறி கொண்டவனாய்,

“பை விழி” என வேண்டுமென்றே விழியில் அழுத்தம் கூட்டி கூற,

“டேய் முகில்” என அவள் கோபமாய் ஏதோ கூற ஆரம்பிக்க,

இணைப்பை துண்டித்திருந்தான் இவன்.

அவள் கைப்பேசியைப் பார்த்தவாறு அவனை வசைமாறி பொழிய, இவன் அவளை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான்.

விழி அவனின் அண்ணியாய் வருவதில் அத்தனை சந்தோஷம் அவனுக்கு. இவ்வாறு கல்லூரி தோழி போல் வெகு இயல்பாய் பேசி நட்பு பாராட்டும் விழியிடம் வம்பு வளர்த்து அவளை வெறுப்பேற்றுவது அவனுக்குப் பிடித்தமான ஒன்று. அதைத் தான் இன்றும் செய்திருந்தான்.

அங்கு அவனை வசைபாடி முடித்த விழிக்கு, அண்ணனும் தம்பியுமாய் தன்னிடம் கூட்டு சேர்ந்து எதையோ மறைக்கிறார்கள் எனப் புரிந்தது.

‘இன்னிக்குச் சாய்ந்திரம் இருக்கு இந்த ஆதவனுக்கு’ மனதினுள் கறுவி கொண்டவளாய் வேலையைக் கவனிக்கலானாள்.

மாலை பேருந்து நிலையம் அடைந்ததும், அந்த ஐஸ்க்ரீம் கடைக்குச் செல்லலாம் என ஆதவனை அழைத்துச் சென்றவள், ஐஸ்க்ரீமை சுவைத்து உண்டவாறே, “ஏன் ஆதவ் என்கிட்ட மறைச்சீங்க?” அமைதியான முகப் பாவனையில் மொட்டையாய் கேட்டிருந்தாள்.

“என்னத்த மறைச்சேன்?” கேள்வியாய் அவளை நோக்க,

“முகில் எனக்குக் கால் பண்ணான்! நேத்து வீட்டுல நடந்த பிரச்சனையைச் சொன்னான். நீ ஏன்டா என்கிட்ட சொல்லலை? நீ என்னைய உங்க வீட்டுல ஒருத்தியா நினைக்கலைல” ஆதங்கமாய் வந்து விழுந்தது அவளின் வார்த்தைகள்.

‘அடப்பாவி முகில்! எதுவும் விழிகிட்ட சொல்ல வேண்டாம்னு தானே ப்ளான் செஞ்சி வச்சிருந்தோம்! எல்லாத்தையும் இவகிட்ட சொல்லிட்டானா! இவளை இப்ப எப்படிச் சமாளிக்கிறது?’ நினைத்தவாறே அவளைப் பார்த்தவன்,

“அம்மா கான்கிரீட் வேலைக்குப் பூஜை முடிஞ்சதும் வீட்டுக்கு போகாம அங்கயே இருப்பாங்கனு நான் என்ன கனவா கண்டேன்! அங்கிருந்து நானும் முகிலும் உன் வீட்டுக்கு வரதுக்காகக் கிளம்பும் போது, அம்மா சந்தேகமா எங்களைப் பார்த்து எங்க போறீங்கனு கேட்டாங்க? முகில் வாயை வச்சிட்டு சும்மா இல்லாம உன் மருமகளைப் பார்க்க போறோம்னு சொல்லிட்டான்”

“அப்புறம் என்னாச்சு? அம்மா என்ன சொன்னாங்க?” ஆர்வமாய் அவள் கேட்க,

“அடிப்பாவி அப்ப முகில் உன்கிட்ட எதுவும் சொல்லலையா! நீ தான் என்கிட்ட போட்டு வாங்கிருக்கியா? உளறிட்டியேடா ஆதவா” வடிவேலு மாடுலேஷனில் அவன் சொல்லவும்,

வாய்விட்டு சிரித்தவாறு, “அதான் உளற ஆரம்பிச்சிட்டியே! முழுசா உளறிடு” என்றாள்.

“முகில் எப்பவும் இப்படித் தான் விளையாட்டாய்ப் பேசுவான். ஆனா இப்ப கொஞ்ச நாளா அம்மாக்கு என் மேல சந்தேகம் இருந்திருக்கு. அதனால உண்மையானு என்னைய கேட்டாங்க?”

“ஹ்ம்ம் நீ என்ன சொன்ன?” ஆர்வம் கூடியிருந்தது அவளது குரலில்.

“ஆமாம்மா! அவ ஒரு வாயாடி பொண்ணு! வம்பு சண்டைக்குப் போக மாட்டா.. வந்த சண்டையை விட மாட்டா! இங்கிலீஷ்ல யாராவது பேசினா சீன் பார்ட்டினு நினைப்பா.. அவளைத் தவிர மத்த பொண்ணுகிட்ட பேசினா அவங்ககிட்டயே பேசிக்கனு போய்டுவா கோபக்காரி! மொத்தத்துல அழகான ராட்சசி என் அழகம்மா” அவள் கண்களை நோக்கி ஆழ்ந்து ரசித்துக் கூறினான் அவன்.

அவனின் கூற்றில் கன்னம் வெட்கத்தில் சிவந்த போதும், “டேய் ஏற்கனவே ஐஸ்க்ரீம் தான் சாப்பிடுறேன்! எதுக்கு இவ்ளோ ஐஸை தலைல தூக்கி வைக்கிற? குளிர் ஜூரம் வரவா? உண்மையைச் சொல்லுடா” என்றாள்.

“ஆமாம்மானு சொன்னேன்”

“அம்மா என்ன சொன்னாங்க?” ‘என்னமோ பெரியதாய் வர போகிறது’ எண்ணியவளாய் அவள் கேட்க,

“அம்மாக்கு என் மேல கொஞ்ச நாளாவே சந்தேகம் இருந்திருக்கு விழி! அதான் நேத்து நேரடியாவே கேட்டிருக்காங்க. நான் ஆமாம்னு சொன்னதுல செம்ம ஷாக் அவங்களுக்கு. ‘எவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட மறைச்சிருக்க… என்கிட்ட சொல்லனும்னு தோணலைல உனக்குனு’ ஒரே அழுகை! அவ்ளோ தான்.. எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு! அவங்களுக்கு நான் காதலிக்கிறேன்றதை விட அதை அவங்ககிட்ட சொல்லாம பொண்ணு வீட்டுக்குப் போய்ப் பேசுறது வரைக்கும் போய்ட்டேனேனு தான் ரொம்பவே கோபம்!

“அவங்களைச் சமாதானம் செய்யவே நைட் ஆகிடுச்சு! அது வரை அவங்க என்கிட்ட பேசவே இல்ல” வருத்தமாய் உரைத்தான்.

“ஹ்ம்ம் அத்தை இப்ப எப்படி இருக்காங்க? நார்மல் ஆகிட்டாங்களா? உன்கிட்ட பேசுறாங்களா?” எனக் கேட்டாள்.

“இப்ப சரியாகிட்டாங்க! இன்னிக்கு காலைல தான் பேசினாங்க!
நேத்து நைட் அம்மா அப்பாகிட்ட சொல்லிருப்பாங்க போல, அப்பாக்கு இதுல பெரிசா எந்த எதிர்ப்பும் இல்ல. அவங்க தான் அம்மாவை சமாதானம் செஞ்சி நார்மல் ஆக்கினாங்க” என்றான் கூடுதல் தகவலாய்.

“ஹப்பாடா உங்கப்பாவாவது சம்மதிச்சாங்களே.. சந்தோஷம்” என்றவள்,

“நீ வராம போனதுக்கு உங்கம்மா தான் காரணம்னு தெரிஞ்சா உங்கம்மாவை நான் தப்பா நினைச்சிடுவேன்னு நினைச்சு தான் என்கிட்ட நீ சொல்லலையா?” மனதில் தோன்றிய கேள்வியை நேரடியாய் கேட்டிருந்தாள்.

“அம்மா ஒன்னும் போக வேண்டாம்னு சொல்லலை விழி! அவங்களை அழ வச்சிட்டு வரதுக்கு எனக்கு மனசில்லை! உன்கிட்ட சொன்னா நீ எப்படி எடுத்துப்பியோனு ஒரு தயக்கம்” என்றான்.

“ஓ அப்ப நான் அழுதா பரவாயில்லையா? உங்கம்மாக்காக யோசிச்ச இடத்துல எனக்காகவும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே” ஆதங்கமாய்க் கேட்டாள் அவள்.

அவள் குரலில் எந்தக் கோப தாபமோ இல்லை! தாய்காகக் கவலையடைந்து சிந்தித்தவன், தனக்காக யோசிக்காமல் போனானே என்ற வருத்தம் தான் அவளுக்கு இருந்தது.

“ம்ப்ச் புரிஞ்சிக்க விழி! இது வரை அவங்க இவ்ளோ வருத்தப்பட்டு நான் பார்த்ததே இல்ல! அப்படியே அவங்கள விட்டுட்டு எப்படி நான் வர முடியும்?” விளங்கி கொள்ளேன் என்பதாய் அவளை அவன் பார்க்க,

“உங்க அம்மாவை பத்தி யோசிச்ச நீ, எங்க வீட்டுல என்னைய பத்தி என்ன நினைச்சிருப்பாங்கனு யோசிக்கவே இல்லையேடா?” வருத்தமாய் உரைத்தவள் சற்று அமைதியாகி,

“உங்கம்மா என்னைய கட்டிக்காதனு சொன்னா என்னைய விட்டுடுவியாடா ஆதவ்”

நேற்றைய நிகழ்வின் வலி அவளை அவ்வாறு கேட்க வைத்திருந்தது.

இத்தனை நேரமாய் மனதில் இருந்த வருத்தத்தை ஓரமாய்த் தள்ளி வைத்து மகிழ்வாய் பேசி கொண்டிருந்த இருவரின் இலகுதன்மையும் முற்றிலும் காணாமல் போயிருந்தது.

“ஹே என்ன பேசுற நீ?”ஆத்திரத்தில் கத்தியிருந்தான் அவன்.

சற்றுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “என் மேல உனக்கு நம்பிக்கை அவ்வளவு தானா விழி?” அடிக்குரலில் கேட்டான்.

“நேத்து நீ எங்கப்பா அம்மாக்கு நம்பிக்கை வர மாதிரி நடந்துக்கலையே!” வெறுமையான குரலில் கூறினாள்.

நேற்றைய அவள் தந்தையின் பேச்சும் அவரிடம் கண்ட தவிப்பும் அவளை இன்று இவ்வாறு உரைக்க வைத்தது.

அவன் எழுந்து வெளியே சென்று விட்டான். இன்னும் பேசி கொண்டிருந்தால் வார்த்தைகள் தடித்து விடும் எனப் பயந்தான்.

தன் மீதான நம்பிக்கையைத் தானே குலைத்து விட்டது புரிந்தது அவனுக்கு. இனி பேசி பலனில்லை. செயலில் தான் அதை மீட்டெடுக்க வேண்டும் என எண்ணியவனாய் அமைதியாய் அவளுடன் பயணித்திருந்தான்.

அவளும் அவனைச் சமாதானம் செய்ய முற்படவில்லை.

அன்று இரவு வரை இருவரும் ஏதும் பேசி கொள்ளவில்லை. அதன் பிறகு வந்த நாட்களிலும் கூட “சாப்பிட்டாச்சா? பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சா?” என முக்கியமான விஷயங்களை மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசி கொண்டனர்.

வெள்ளி கிழமை காலை இருவரும் திருச்சி சென்றடைந்தனர்.

மாலை நான்கு மணி அளவில் வேல்விழியின் வீட்டிற்கு வந்தனர் முகிலனும் ஆதவனும்.

இவளது தாய் தந்தை மட்டுமே வீட்டிலிருப்பார்கள் என எண்ணி இவர்கள் வந்திருக்க, வீட்டில் கூடியிருந்த மொத்த சொந்த பந்தங்களையும் கண்டு பயந்து விட்டான் முகிலன்.

“அண்ணே! காதல் படப் பரத் மாதிரி அடிக்க ப்ளான் பண்ணி வர சொல்லிட்டாங்களோ” ஆதவனின் காதை கடித்தான் அவன்.

“சும்மா இருடா! நீ வேற! எனக்கும் தான் பயந்து பயந்து வருது! மனசுல பயம் இருந்தாலும் கண்ணுல பயம் தெரிய கூடாதுடா.. பேஸ்மெண்ட் வீக்கா இருந்தாலும் பாடிய ஸ்ட்ராங்கா காமிச்சிக்கனும். ஸ்டெடிடா ஸ்டெடி” முகிலுக்குக் கூறுவது போல் தனக்குமாய் சேர்த்து உரைத்தவாறு வீட்டினுள் நுழைந்தான் ஆதவன்.

— தொடரும்