நறுங்காதல் பொழிபவனே – 6

வேல்விழிக்கு குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கொரோனா முதல் அலைக்கான லாக்டவுனை அறிவித்திருந்தது அரசு.

குழந்தை உண்டாகி ஆறு மாதங்கள் வரை சென்னையில் ஆதவனுடன் தான் இருந்தாள் வேல்விழி. ஏழாம் மாதத்தில் இரயிலில் சகல வசதிகளுடனான ஏசி கோச்சில் அவளும் அவனும் மட்டுமாய் ஓர் அறையில் தங்குவதாய் டிக்கெட் புக் செய்திருந்தான் ஆதவன்.

வரும் நாட்களில் பல மாதங்கள் அவர்கள் இருவரும் பிரிந்திருக்க வேண்டியிருந்ததால் அந்த ரயில் பயணத்தில் இருவரும் தங்களது துணையின் அண்மையை மனதினுள் நிரப்பிக் கொண்டவாறு பயணித்திருந்தனர்.

ஏழாம் மாதத்திலேயே பல குடும்ப இன்னல்களுக்கு இடையில் ஆதவனின் இல்லத்தில் அவளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அவளது பிறந்த அகத்துக்கு அவளை வழியனுப்பி வைத்தனர் புகுந்த வீட்டினர்.

சென்னையிலிருந்து வாரயிறுதி நாட்களில் ஊருக்கு சென்று அவளைப் பார்த்து விட்டு வருவான் ஆதவன். ஆயினும் அவளுடனேயே அந்த இரண்டு நாட்களையும் செலவிட மாட்டான். அரை நாள் அவளுடன் இருந்து விட்டு தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுவான்.

குழந்தை பிறந்து அவளது வீட்டுக்கு அவள் சென்ற சில நாட்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட, வேல்விழி அவளது இல்லத்திலும், ஆதவன் அவனது இல்லத்திலும் தனித்து இருக்குமாறு ஆகிப்போனது. வீட்டிலிருந்தே அவனது அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நாளொன்றிற்கு நான்கு முறையேனும் அவனை அழைத்துப் பேசிவிடுவாள் அவள். தனது அன்றாட நிகழ்வுகளை அவனிடம் தினமும் பகிர்ந்து விடுவாள். இவ்வாறாக ஆறு மாதங்கள் கைபேசியின் ஆடியோ வீடியோ வழியாகவே பேசி சிரித்துப் பகிர்ந்து என வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இருவரும். ஆறு மாதங்களாய் வீடியோ காலில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தனது குழந்தையை அன்று தான் நேரில் வந்து சந்தித்தான் அவன்.

அவன் வருவதற்கு ஒரு வாரம் முன்பே அவனது தாயும் தந்தையும் வந்து குழந்தையைப் பார்த்து விட்டு சென்றனர். அவனுடைய அலுவலக வேலை காரணமாக லாக் டவுன் முடிந்த உடன் அவனால் வர இயலாமல் போனது.

தற்பொழுது நெடு நாட்கள் கழித்து வந்த பின்னும், ஒரு நாள் மட்டுமே தங்கிவிட்டு அவன் செல்வதில் வருத்தமுற்றாள் அவள். ஆயினும் அவனிருக்கும் இந்த ஒரு நாளிலும் அவனிடம் சண்டை போட மனமில்லாது, அவனின் அண்மையைச் சுகித்திருந்தாள் அவள்.

வேல்விழியைப் பார்த்து சென்று ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் அவளுக்கு அழைத்தவன் மிகுந்த வேதனையுடன் பேசி கொண்டிருந்தான்.

“அம்மாவுக்குக் கால் மூட்டு வலி அதிகமா இருக்கு விழி! அவங்களுக்கு ஏன் இந்த நிலைமைனு கவலையாய் இருக்கு!” வருத்தமாய் அவன் கூறவும்,

“அத்தை மாத்திரைலாம் சரியா சாப்பிடுறாங்களா? ஆயுர்வேதிக் மருந்து ஏதோ வாங்கிக் கொடுத்தீங்களே.. மூட்டுல எண்ணையத் தேய்க்கனும்னுலாம் சொன்னீங்களே.. அதெல்லாம் சரியா செய்றாங்களா அவங்க” எனக் கேட்டாள்.

“எல்லாம் செய்றாங்க.. மாத்திரை சாப்பிடும் போது வலி குறைஞ்சிடுது.. ஆனால் திரும்பவும் வேலை செய்யும் போது வலி வந்துடுது!” என்றவன் மேலும் தொடர்ந்து,

“இரண்டு பசங்களைப் பெத்துக்கிட்டு, இந்த வயசுலயும் அவங்களே சமைச்சு சாப்பிட வேண்டியதா இருக்குனு அம்மா புலம்பினாங்க! அவங்க சொல்றதும் சரி தானே! இப்ப உன் சூழ்நிலை சரியில்ல ஆனா என் தம்பி மனைவிக்கு என்ன குறைச்சல், இங்க ஏசி இல்ல காத்து இல்லனு அவ வீட்டுலேயே கிடக்குறா.. என் தம்பியும் அவகிட்ட எதுவும் கேட்க மாட்டேங்கிறான். இங்கிருந்து மூனு வீடு தள்ளி இருக்கிறவளுக்கு இங்க வந்து சமைச்சு கொடுத்துட்டு போக எவ்ளோ நேரம் ஆகும்” தன் மன குமுறலை மனைவியிடம் அவன் வெளிப்படுத்த,

“கவலைப்படாதடா! அத்தையை நம்ம கூடவே சென்னைக்குக் கூட்டிட்டு போய் நல்லா வச்சுப் பார்த்துக்கலாம்! ஆனால் என்னால இங்கயே உங்க வீட்டுல இருக்க முடியாதுடா! எனக்குனு கனவு லட்சியம் ஆசைனு இருக்கு. அதுக்கு நாம சென்னைல இருந்தா தான் சரியா இருக்கும்” என்றவள் சொன்னதும்,

“என்ன இப்ப? உன்னாலயும் அம்மாவை பார்த்துக்க முடியாதுன்றதை தானே இப்படி நீ சுத்தி வளச்சி சொல்லிட்டு இருக்க” என்றவன் கோபமாய்க் கேட்க,

“நான் எங்கடா அப்படிச் சொன்னேன்? சென்னைல நம்ம கூட இருக்கட்டும்னு தானே சொல்றேன்”

அவனின் மனநிலை தற்போது சரியில்லை, தான் ஏது கூறினாலும் அது பிரச்சனையைத் தான் உண்டாக்கும் என அவனின் குரலிலேயே அறிந்து கொண்டவள், அவனின் பேச்சிற்கு மறு பேச்சு பேசாது தன்மையாய் தன்னிலையை எடுத்து கூறினாள்.

ஆனால் அவனோ, “அதான் உனக்குத் தெரியுமே, அம்மா இந்த வீட்டை விட்டு எங்கயும் வர மாட்டாங்கனு! அதைத் தெரிஞ்சி தானே இப்படிச் சொல்ற! அந்த ஃபங்ஷனுக்குப் பிறகு நீ அம்மாகிட்ட பேசுறதே இல்லனு எனக்குத் தெரியும். ஏதோ பெரியவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச வரை ஏதோ சாங்கியம் சொன்னாங்க செஞ்சோம்னு போகாம, இப்ப வரை அதை மனசுல வச்சிக்கிட்டு அவங்க கிட்ட பேசாம இருக்கிறவ தானே நீ”

தனது தாயிடம் அவள் இயல்பாய் பேசவில்லை என இத்தனை நாட்களாய் மனதை அழுத்தி கொண்டிருந்த விஷயத்தை இன்று அவனிருக்கும் அழுத்தமான மனநிலையில் நேரம் காலம் தெரியாது போட்டு உடைத்திருந்தான் ஆதவன்.

அவள் ஏதும் பதில் உரைக்காது கைபேசி இணைப்பை துண்டித்திருந்தாள்.

அதில் தான் தன்னிலை அடைந்தவனாய், ‘அய்யய்யோ கோபத்துல மனசுல உள்ளதெல்லாம் உளறிட்டேனே!’ என எண்ணியவனாய் தலையில் அடித்துக் கொண்டான்.

மீண்டுமாய் அவளது அலைபேசிக்கு அவன் அழைக்க, அழைப்பை எடுத்தவள், “உங்க வீட்டுல யாராவது நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்கிறீங்களா? நீ கூட அவங்க கூடச் சேர்ந்து என்னைய கொடுமைக்கார மருமக மாதிரி தானே பார்க்கிற! அவங்க கஷ்டப்படுறாங்கனு சொன்னா நான் என்ன சந்தோஷமா சிரிச்சிட்டா இருப்பேன்? எனக்கும் கஷ்டமா தானே இருக்கும்!” பொரிந்து தள்ளி விட்டாள்.

“சரி விடுடி அம்மா மேல இருக்கப் பாசத்துல கத்திட்டேன்” என்றான் அவன் அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு.

“நீ கத்தினது தப்பில்லை என்னைய புரிஞ்சிக்காம கத்தின பாரு அது தான்டா கஷ்டமா இருக்கு” அவளின் குரல் கமற தொடங்கியது.

“இன்னும் எத்தனை வருஷம் என் கூட வாழ்ந்தாலும் என்னைய சரியா புரிஞ்சிக்க மாட்டல்ல நீ!” என்றவளின் குரல் அழுகையில நடுங்கியது.

“ஹே அழகம்மா! என்னடா” அவளைத் தேற்றும் முயற்சியில் அவன் இறங்க,

“உன் அம்மா கூட இருந்து சமைச்சு போட்டு அவங்களை எவ்ளோனாலும் பார்த்துக்கோனு நான் தனியா தானே இங்க இருக்கேன்! உங்க வீட்டை விட்டுட்டு என் கூடவே வந்து தங்கிடுனு என்னிக்காவது நான் கேட்டிருக்கேனா? அத்தையோட இந்தப் பிரச்சனையை எப்படிச் சரி செய்யலாம்னு யோசி! அவங்களை வேலை செய்ய வைக்காம எப்படிப் பார்த்துக்கலாம்னு யோசி! அதை விட்டுட்டு உங்க வீட்டாளுங்க பேச்சை கேட்டு என்னைய வந்து திட்டிட்டு இருக்காத” எனக் கூறி அலைபேசியின் இணைப்பை துண்டித்திருந்தாள் அவள்.

ஆதவனுக்கே தெரியும், இந்நேரம் அவள் நல்ல உடல்நிலையுடன் இருந்தால், தானாகவே முன் வந்து தனது வீட்டில் சமையல் வேலையில் ஈடுபடுவாள் என்று! ஆனால் அவனின் தம்பி மனைவியின் மீதிருந்த கோபமும் தாயின் வலியும் தான் ஏதும் செய்ய முடியா நிலையில் இருக்கிறோம் என்ற ஆதங்கமும் சேர்ந்து அவனை அவளிடம் கத்த வைத்துவிட்டது.

காதலித்த நாட்களில் சண்டை என்பதே அறியாதவர்கள், என்று இவர்களின் வீட்டினில் தங்களது காதலை உரைத்தார்களோ அன்றிலிருந்து இரு குடும்பத்தினராலும் இருவருக்குள்ளும் சண்டை மூண்டது.

‘அய்யோ முருங்கை மரத்துல ஏத்தி விட்டுட்டேனே! இவளை எப்படி இறக்குறது’ என யோசித்தவாறு விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தவனுக்கு, அவ்வாறு வந்த எந்தச் சண்டையினாலும் தங்களின் காதலை குறைய விடாது இருவரும் மீட்டெடுத்த பழைய நினைவுகள் ஊர்வலம் போயின.

இவனும் தன்னைப் புரிந்து கொள்ளாமல் குற்றம் சாட்டுகிறானே எனக் கலங்கிய விழியின் மனமோ, திருமணப் பேச்சு தொடங்கிய நாளிலிருந்து உண்டான பிரச்சனைகளையும், அதை இருவரும் எதிர்கொண்ட விதத்தையும் அவளுக்கு நினைவுப்படுத்தின.


வேல்விழியும் ஆதவனும் தங்களின் காதலை வெளிப்படுத்திக் கொண்ட இரண்டு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் அலுவலகப் பேருந்தில் ஒன்றாய்ப் பயணித்திருந்த போது, வேல்விழி சற்று கவலையாய் இருப்பதைப் பார்த்து என்னவென்று வினவினான் ஆதவன்.

இருவரும் பேருந்தில் ஓர் இருக்கையில் அருகருகே அமர்ந்து பயணித்திருந்தனர்.

எப்பொழுதும் பேருந்தில் ஏறிய பின்பு இருவரும் ஒன்றாய் தலையணை ஒலி வாங்கியை ஆளுக்கொரு காதினில் சொருகி கொண்டு தங்களுக்குப் பிடித்தமான பாடல்களை ஒன்றாய் கேட்டு ரசிப்பர்.

ஆனால் அன்று பாடல் கேட்க விருப்பமில்லை எனக் கூறிய வேல்விழியின் முகத்தில் குழப்பமும் கவலையும் விரவி கிடந்தன.

“என்னாச்சு விழி! குழப்பமா இருக்கிற மாதிரி தெரியுறியே” எனக் கேட்டான் ஆதவன்.

“பயமா இருக்குடா! இத்தனை நாளா என் மேரேஜ் பத்தி பேசாம இருந்தவங்க, நேத்து ஏதோ வரன் வந்திருக்கிறதா சொன்னாங்க! நாளைக்கு வீட்டுக்குப் போனதும் அப்பா அம்மா அதைப் பத்தி பேசினா அவங்கள எப்படி ஃபேஸ் செய்வேன்னு பயமா இருக்கு! என்னால அவங்ககிட்ட எதையும் மறைக்க முடியாது! பொய் சொல்லவும் பிடிக்காது! அப்பா அம்மாகிட்ட நம்ம காதலை பத்தி நாளைக்குச் சொல்லிடவா” எனக் கேட்டாள்.

“இல்லடி! வீட்டு வேலை முடியட்டும். இன்னும் மூனு மாசத்துல வீடு கட்டி முடிச்சிடுவோம். அதுக்கப்புறம் நம்ம காதலை பத்தி வீட்டுல சொல்லலாம்” என்றான் அவன்.

“ஹ்ம்ம்” என யோசனையுடனேயே தலை அசைத்தவள், “அப்பா அம்மா நம்ம காதலை ஒத்துக்கலைனா என்னடா செய்றது? என்னால எந்த நிலைலயும் உன்னை விட்டுட்டு இருக்க முடியாதுடா! அவங்க மனசை கஷ்டப்படுத்திட்டும் என்னால நிம்மதியா வாழ முடியாதுடா”

கண்களில் தவிப்பு தெரிய வருத்தம் இழையோடிய குரலில் கேட்டவளை ஆதுரமாய்ப் பார்த்திருந்தான் அவன்.

“அப்படிலாம் விட்டுடுவேனாடா அழகம்மா! நீ வீட்டுல நம்ம காதலை பத்தி சொன்ன பிறகு அவங்க ஒத்துக்காம போனா… நான் நேரடியா உங்க வீட்டுக்கு வந்து உங்கப்பா அம்மாகிட்ட பேசி உன்னைய பொண்ணு கேட்கிறேன் சரியா” என்றான் அவன் எவ்வித பயமும் அலட்டலும் இல்லாமல்!

“ஹே நிஜமாவா?” கண்கள் விரிய ஆச்சரியமாய் அவள் கேட்க,

“ஆமாம்டி! உன்னைய தனியா விட்டுடுவேனா என்ன? நம்ம காதல்ல என்ன பிரச்சனை வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம்” என்றவன் சொன்னதும் மனதிலிருந்த பெரும் பாரம் குறைந்ததாய் உணர்ந்தவள், அவன் கையோடு கை கோர்த்து கொண்டாள்.

மென்மையான அவளின் ஸ்பரிசமும், அவளின் உள்ளங்கை வெம்மையும், அவளின் தற்போதைய உணர்வை அவனுக்கு உணர்த்தியது. அவனும் அக்கையை அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டான்.

அன்றிரவு ஆதவனும் வேல்விழியும் ஒன்றாகவே திருச்சிக்கு பயணித்திருந்தனர்.

மறுநாள் அவரவர் வீட்டுக்குச் சென்றதும், மதிய உணவு வேளையில் அவளின் திருமணப் பேச்சை ஆரம்பித்தனர் அவளின் பெற்றோர்.

அவளுக்காக ஒரு வரன் பார்த்திருப்பதாக அவர்கள் உரைக்க, இப்பொழுது திருமணம் வேண்டாம் மறுத்து விட்டாள் அவள்.

“வேண்டாம்னா என்ன அர்த்தம்? யாரையும் காதலிக்கிறியா?” அவளின் அன்னை மகேஸ்வரி நேரடியாய் கேட்க, சண்முகம் சந்தேகமாய் அவளைப் பார்த்திருந்தார்.

அவரின் அதிரடி கேள்வியில் திருதிருவென முழித்தவள், மனம் நிறைந்த பதட்டத்துடன் தயங்கியவாறே, ஆமெனக் கூறி ஆதவனின் முழு விபரத்தையும் உரைத்திருந்தாள்.

தனது பெற்றோர் நிச்சயமாக இந்தக் காதலுக்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை என மனதிற்குள் எண்ணியவளாய், அவர்களிடம் எவ்வாறு எடுத்து கூறி தனது காதலை புரிய வைக்கலாம் எனச் சினிமாவில் வரும் காதல் வசனங்களை எல்லாம் இவள் மனதினுள் உருப்போட்டுக் கொண்டிருக்க,

சண்முகமோ, “சரி பையனை நேர்ல வர சொல்லு! பேசலாம்” எனக் கூறி விட்டார்.

‘என்னது இது உடனே ஒத்துக்கிட்டாங்க? இதுக்குப் பின்னாடி எதுவும் உள்குத்து இருக்குமோ?’ மனதினுள் சிந்தித்தவாறே சரியெனத் தலையசைத்தாள்.

ஆதவனுக்கு அழைத்து நடந்ததைக் கூறி மறுநாள் மதிய வேளையில் அவளது இல்லத்திற்கு வந்து பெற்றோரிடம் பேசுமாறு உரைத்தாள்.

“இப்படி உடனே சென்னா எப்படி வர முடியும் விழி” என்றவன் கேட்க,

“அதெல்லாம் தெரியாது! நீ வருவனு சொல்லிட்டேன்! வந்துடு” எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டாள்.

மறுநாள் ஞாயிறன்று அவனின் வருகைக்காகத் தடதடக்கும் மனதுடன் அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

அவனின் அலைப்பேசிக்கு அழைக்க, அது உயிற்ற நிலையில் இருப்பதாய் கணிணி பெண் கூறினாள். அவனின் தம்பி எண்ணிற்கு அழைக்க, அதுவும் அந்த நிலையிலேயே இருந்தது.

ஆதவன் வேல்விழியிடம் தனது காதலை உரைத்த உடனேயே தனது தம்பியிடம் கூறி விட்டான். வேல்விழியுடன் தினமும் குறுஞ்செய்தியில் பேசிக் கொள்ளும் அளவிற்கு நட்புறவில் இருந்தான் அவனின் தம்பி முகிலன்.

“அய்யோ இங்க அப்பா அம்மாலாம் இவனுக்காகக் காத்துட்டு இருக்காங்களே! இவன் ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப்னு வருதே” எனப் புலம்பியவாறு அவன் வரவை எதிர்நோக்கி வாசலை பார்த்திருந்தாள்.

பன்னிரெண்டு, ஒன்று, இரண்டு, மூன்று என நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர, இவன் வரவே இல்லை. இவனின் கைபேசியும் உயிர்பெற்று இருக்கவில்லை.

வேல்விழியின் விழிகளில் நீர் சூழ அமைதியாய் அமர்ந்திருக்க, அவளருகில் வந்த சண்முகம், “இதுக்குப் பிறகும் அந்தப் பையன் வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்லைமா! முதல் சந்திப்புலயே சொன்ன நேரத்துக்கு வர முடியாதவன் மேல நான் எப்படி நம்பிக்கை வச்சி உன்னைக் கட்டி கொடுக்கிறதுமா! ஒரு வேளை டைம் பாஸூக்காக உன்னைக் காதலிக்கிறதா சொல்லி பழகுறானோனு தோணுது” என்றவர் கூறவும், விழிகளில் திரண்டிருந்த நீர் அவளின் விழியைக் கடந்து வந்திருந்தது.

அழுகை குரலில், “அப்படிலாம் இல்லப்பா!” என்றவள் மறுத்து பேச,

மகளின் கண்ணீரில் கலங்கியவராக “சரி இதெல்லாம் விடுமா! நீ முதல்ல உன் வேலையைக் கவனி! அந்தப் பையனை பத்தி நான் விசாரிக்கிறேன்” எனக் கூறி அவளுக்கு ஆறுதல் உரைத்து சென்று விட்டார்.

“ஏன்டி காதல்னு வந்தா உங்களுங்கு கண்ணு மண்ணு தெரியாம போய்றுமோ! அந்தப் பையனை பிடிச்சிருக்குனா உடனே எங்ககிட்ட வந்து சொல்ல வேண்டியது தானே! லவ் பண்ண இனிக்குது, கல்யாணம் பண்றதுக்குப் பொண்ணோட அப்பா அம்மாகிட்ட வந்து பேசுறதுக்குக் கசக்குதா அந்தப் பையனுக்கு” மகேஸ்வரி மனதின் ஆதங்கத்தைச் சுடு சொல்லாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்க,

“அம்மா! அவர் அப்படிலாம் கிடையாது! இன்னிக்கு அவரால வர முடியாம போனதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்” தாயிடம் கூட அவனை விட்டு கொடுக்க இயலாது அவனுக்காகப் பரிந்து பேசியவளின் மனமோ, அவன் மீது கட்டற்ற கோபத்துடன் இருந்தது.

அன்றிரவு இவளை பேருந்தில் ஏற்றிவிட்டு அவளின் தந்தை சென்றதும், அவளருகில் வந்தமர்ந்தான் ஆதவன்.

அவனின் புறம் துளியும் திரும்பாது ஜன்னல் வழியாய் வெளியே பார்த்து கொண்டிருந்தாள் அவள்.

“ஹே சாரிடி! இன்னிக்கு கண்டிப்பா வீட்டுல இருக்கிற மாதிரி சூழல் ஆகிட்டுடி! கான்க்ரீட் போட இன்னிக்கு தான் பூஜை போட்டோம்! அந்த வேலைக்காக நானும் தம்பியும் அங்கயும் இங்கயும் அலைஞ்சதுல வர முடியாம போய்ட்டு” அவன் கூறி முடிக்கவும், இவளின் கண்கள் கலங்கியது.

“நான் எப்படிக் கூனி குறுகி போனேன் தெரியுமா? நான் என்னமோ பொய்யானவனைக் காதலிக்கிறதா தானே அவங்க நினைச்சிருப்பாங்க! உனக்கு என்னைய விட அந்த வீட்டு வேலை முக்கியமா போய்டுச்சுல” அழுகையின் விம்மலுடனே அவள் கூற,

“ஹே அழகம்மா! என்னடி! இதுக்குப் போய் இப்படி அழற?” என்றவன் கேட்க,

“இது உனக்குச் சின்ன விஷயமா போச்சா.. என் நிலைமைல இன்னிக்கு நீ அங்க நின்னுட்டு இருந்திருந்தீனா தெரிஞ்சிருக்கும்! உன்னை ஏன்டா காதலிச்சோம்னு என்னிக்கும் என்னைய ஃபீல் பண்ண வச்சிடாதடா” என்றவள் கூறவும், இவனுக்குக் கோபமேற,

“போ போய் உங்கப்பா சொல்றவனையே கட்டிக்கோ! அப்படி ஒன்னும் ஃபீல் பண்ணி நீ என்னைய கல்யாணம் செஞ்சிக்க வேண்டாம்” முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

தன்னையும் தனது காதலையும் புரிந்து கொள்ளாமல், அவள் விட்டு கொடுத்து பேசியதாய் தோன்றியதில் கோபம் வந்தது அவனுக்கு.

அவள் ஏதும் பேசாது, கண்களைத் தாண்டி கன்னத்தில் வழிந்த நீரை துடைக்கவும் செய்யாது ஜன்னலை வெறித்தவாறு அமர்ந்திருக்க, அவளின் இந்தக் கோலம் அவனின் நெஞ்சை காயம் செய்ய,

“விழி! அழாதடி! நீ அழுதா என்னால தாங்கிக்க முடியாதுடி” என அவளின் கையைப் பற்றினான்.

அவளோ, “என்னைய தொடாத! என்னைய கட்டிக்க மாட்டேன்னு சொன்னவன், எதுக்கு என்னைய தொடுற?” அழுகையால் நடுங்கிய குரலில் உரைத்தவாறு அவனின் கையை உதறி தள்ளினாள்.

பேருந்தில் விளக்கெல்லாம் அணைக்கப்பெற்றுப் பயணம் துவங்கியிருக்க, அவளின் முகத்தைத் தன்னை நோக்கி திருப்பிக் கைகளில் ஏந்தியவன், ஒற்றை விரலால் அவளின் விழி நீரை துடைத்தவாறு,

“என்னிக்குமே ஏன்டா இவனைக் காதலிச்சோம்னு நீயோ இல்ல நானோ நினைக்காத அளவுக்கு வாழுறது தான் நீ என் மேலயும் நான் உன் மேலயும் வச்சிருக்கக் காதலுக்கு நாம செய்யும் மரியாதை! அதனால என்னிக்குமே இப்படி நினைக்கனும்னு தோணுதுனு கூடச் சொல்லாத! இட் வில் ஹர்ட் மீ எ லாட்” என்று பெரூமூச்செறிந்தவன், மேலும் தொடர்ந்து,

“இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி, நான் தான் உன் புருஷன்! உன்னைய யாருக்கும் நான் விட்டு கொடுக்கிறதா இல்லை! உங்கப்பாகிட்ட சொல்லு வர்ற வெள்ளிகிழமை நான் வீட்டுக்கு வந்து பேசுவேன்னு! அன்னிக்கு உன் ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடு” என்றவன் அவளைத் தோளோடு அணைத்து தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.

பல மணி நேரமாய் அவளின் மனம் அடைந்திருந்த வேதனை நீங்க பெற்றவளாய், அவனின் தோளில் தஞ்சம் அடைந்திருந்தாள் அவள்.

அவளின் தலையை வருடியவாறு இருக்கையில் தலையைச் சாய்த்து படுத்திருந்தவனுக்கோ, அவனை வேல்விழியின் இல்லத்திற்குப் போக விடாது தடுத்த அவனது அன்னையின் பேச்சுக்கள் வந்து போயின.

ஆரம்பத்திலேயே அன்னையைப் பற்றிய தவறான எண்ணத்தை வேல்விழியிடம் விதைக்க வேண்டாமென எண்ணி தான் இவ்வாறு உரைத்திருந்தான் அவன்.

‘ஆரம்பமே இவ்ளோ பிரச்சனையா இருக்கே! இன்னும் என்னலாம் பிரச்சனைகள் வருமோ! எப்படிச் சமாளிக்கப் போறோமோ’ எனப் பல சிந்தனையில் உழன்றவாறு உறங்கி போயிருந்தான் ஆதவன்.

— தொடரும்