நறுங்காதல் பொழிபவனே – 5

ரயிலில் அக்ஷயா அவ்வாறு கூறியதும், “என்னது என்னைய லவ் பண்றானா?” ஆதவன் மீது கோபம் எழுந்தது வேல்விழிக்கு.

அவனை அவள் எரிப்பது போல் பார்க்க,

“அய்யோ அவ விளையாடுறா விழி! நீ என்னை பஸ்ல தினமும் பார்க்கிறதை அக்ஷு என் டீம் மேட்ஸ்கிட்ட சொல்ல, அவங்க உன்னையும் என்னையும் வச்சி ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க!” அவன் அவளிடம் சரண்டர்ராக,

அவளோ, ‘உன்னை நான் நம்பவில்லை’ என்ற பார்வையைப் பார்த்து வைத்தாள்.

அக்ஷயா தான், நண்பனுக்காகத் தான் விளையாட்டாய் கூறியதாய் எடுத்துரைத்தாள்! ஆதவன் கூறியதை வழி மொழிந்தாள்!

“அப்புறம் ஏன் என்னைத் தெரியாத மாதிரி பார்த்த? தெரியாத மாதிரி பேசின?” கேட்டவாறு வேல்விழி அவனை முறைக்க,

“நீ மட்டும் தினமும் என்னைப் பார்த்தியே! தேடி வந்து பேசுனியா?” குற்றப்பார்வை அவன் பார்த்து வைக்க,

“மூனு வருஷமா நம்ம ஒரே காலேஜ்ல படிச்ச டைம்லயே நீ என்கிட்ட பேச மாட்ட! என்கிட்டனு இல்ல எந்தப் பொண்ணுகிட்டயும் பேச மாட்ட! அதான் இப்ப நானா வந்து பேசினா நீ பேசுவியோ மாட்டியோனு தயக்கம்!” என்றவள்,

“நீயும் தான் என்னைய பார்த்திருக்க! நீ என்கிட்ட வந்து பேசிருக்காலாம்ல” என்றாள் அவள்.

“அதான் சொன்னேனே ஒன்னும் பேசாமலேயே உன்னயும் என்னையும் சேர்த்து வச்சு ஓட்டி தள்ளுறாங்க! இதுல நானா வந்து பேசி எதுக்கு வம்பை விலைக்கு வாங்கனும்னு விட்டுட்டேன். நீயா வந்து பேசினா பார்த்துக்கலாம்னு நினைச்சேன்”

இந்தக் கலவரத்தில் அக்ஷயா உரைத்த அழகம்மா என்ற அந்தப் பெயரை கவனியாது விட்டிருந்தாள் அவள்.

ஹ்ம்ம் எனக் கூறி அவள் எதையோ யோசிக்கப் போக, அவளின் முன் கையை நீட்டி, “இப்ப கோபம் போய்டுச்சா? ஃப்ரண்ட்ஸ்?” எனக் கூறி புன்னகை புரிய, அவளும் சிரித்துக் கொண்டே கை குலுக்கினாள்.

அக்ஷயா இவர்களுக்கு அடுத்த நிறுத்தத்தில் ரயிலில் ஏறியிருந்தாள். அக்ஷயாவும் ஆதவனும் ஒன்றாய் தான் பயணச்சீட்டை பதிவு செய்திருந்தனர். ஆனால் ஒரே பெட்டியில் வெவ்வேறு சீட்டு தான் இருவருக்கும் கிடைத்தது. ரயிலில் ஏறியதும் இவனைப் பார்க்கவென அவள் வந்ததில் தான் இத்தனை வேடிக்கை நிகழ்வுகள் நடந்தன.

சிறிது நேரம் வேல்விழியிடம் பேசி விட்டு அவள் தனது இருக்கைக்குச் சென்றதும், புத்தகத்தைக் கையிலேந்தி படித்துக் கொண்டிருந்த ஆதவனை நோக்கி, “எப்படி நீ இப்படி மாறிட்ட?” எனக் கேட்டாள்.

“எப்படி மாறிட்டேன்?” என அவளிடமே அக்கேள்வியை அவன் கேட்டு வைக்க,

“காலேஜ்ல பொண்ணுங்க கூடவே பேச மாட்ட! சொல்ல போனா பசங்க கூடவுமே தான் பேச மாட்ட! தினமும் நீ அக்ஷயா கூடப் பேசுறதை பார்த்த பிறகு உன்னைப் பத்தி நான் நினைச்சதுலாம் தப்புனு தோணுச்சு” என்றாள்.

“அப்படி என்ன என்னைய பத்தி தப்பா நினைச்சிருந்த?” தன்னைப் பற்றி ஏதும் ஏடாகூடமாக நினைத்து வைத்திருந்தாளோ என்ற கலக்கத்துடன் அவன் கேட்க,

அவளோ, “சீன் பார்ட்டினு நினைச்சேன்!” என்று கூறவும்,

“என்னைய பார்த்தா சீன் பார்ட்டினு நினைச்ச? அப்படி நான் என்ன சீன் போட்டேன் காலேஜ்ல?” சற்று ஆதங்கமாகவே வந்தது அவனின் கேள்வி.

“இல்ல நீ இங்கிலீஷ் க்ளாஸ்ல மட்டும் அந்த மேடம்கிட்ட ஏதாவது டிபேட் பண்ணி சண்டை போட்டுட்டு இருப்ப! அதுவும் இங்கிலீஷ்லயே பேசுவியா.. எங்களுக்கு ஒன்னும் புரியாது. ஓவரா சீன் போடுறனு தோணும். அப்புறம் ஃபர்ஸ்ட் செம்ல நீ க்ளாஸ் டாப்பர்னு தெரிஞ்சதும், செம்மயா படிக்கிற பையன்! அதான் படிக்கிற பையனுக்கே இருக்கத் திமிர் போலனு நினைச்சிட்டு உன்னைக் கண்டுக்கிறதே இல்ல!

இப்ப உன்னைய பார்க்கும் போது டோட்டல் சேஞ்ச்! உனக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா அதுவும் கன்னக்குழி விழுக!”
அவனைப் பற்றிய தன் எண்ணங்களை இயல்பாய் அவள் கூறினாள்.

அவளின் கன்னக்குழி சிரிப்பு என்ற பதத்தில் வாய்விட்டு சிரித்தவன், “அந்தக் கன்னக்குழி, சிரிச்சா எப்பவுமே விழும்! என்ன… நான் தான் காலேஜ்ல சிரிக்கிறதையே மறந்திருந்தேன்” என்றவன் சற்று அமைதியாகி மீண்டும் தொடர்ந்தான்.

“அப்ப என் ஃலைப்ல நிறைய ப்ராப்ளம் விழி! என்னால எதுலயும் கான்சென்ட்ரேட் பண்ண முடியாத நிலை! படிப்பு மட்டும் தான் எங்க வாழ்வை உயர்த்தும்னு அதுல மட்டும் தான் கவனமெல்லாம் இருந்துச்சு” சற்று கவலையாய் உரைத்தவன் மேலும் தொடர்ந்து,

“நான் ப்ளஸ் டூ படிச்சிட்டு ஒரு வருஷம் படிக்க முடியாம வேலைக்குப் போய்ட்டேன் விழி! எங்கப்பா செஞ்ச பிஸ்னஸ் லாஸ்ல போச்சு. வீட்டு வாடகை கொடுத்து தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டம்ன்ற நிலைல இருந்தோம். அதான் வேலைக்குப் போயிட்டேன். தம்பி ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தான். அப்ப எனக்கு இந்த எஜூகேஷன் லோன் பத்திலாம் தெரியாது. எனக்கு என்ஜீனியரிங் படிக்கனும்னு தான் ஆசை! ஸ்கூல் முடிச்சு ஒரு வருஷம் கழிச்சு ஃப்ரண்ட் ஒருத்தன் மூலமா இந்த லோனை பத்தி கேள்விப்பட்டு அப்ளை பண்ணா டிகிரி படிக்கிற அளவு தான் சாங்ஷன் ஆச்சு. அதை வச்சி பிசிஏ தான் படிக்க முடிஞ்சிது. லோன் சாங்ஷன் ஆன பிறகு காலேஜ்லாம் செலக்ட் பண்ணி பணம் கட்டின பிறகு அப்பாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகி உடம்பு சரியில்லாம போய்டுச்சு! அப்பா வீட்டுலேயே இருக்க வேண்டிய நிலை! நானும் தம்பியும் வேலைக்குப் போய்ட்டே காலேஜ்ல படிச்சோம். அதான் பிஜி படிக்க ஆசை இருந்தும், ஐடில வேலை கிடைக்கவும் சேர்ந்துட்டேன். காலேஜ் முடிச்ச வருஷமே வேலைக்குச் சேர்ந்துட்டேன். அதுக்குப் பிறகு இரண்டு கம்பெனி மாறிட்டேன்! இப்ப நல்லா போகுது வாழ்க்கை! நானும் தம்பியும் சேர்ந்து ஊருல வீடு கட்டிட்டு இருக்கோம். என்னோட ட்ரீம் அது” கண்கள் மின்ன உரைத்தான் அவன்.

‘இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கானா?’ என்று தான் தோன்றியது அவளுக்கு. கல்லூரியில் பயிலும் போது, ஏதோ பணக்கார பையனாகத் தான் அவனை எண்ணியிருந்தாள்.

அவன் மீதிருந்த ஈர்ப்பு இப்பொழுது பெரும் மதிப்பாய் மாறியிருந்தது. குடும்பத்திற்காகவும் பெற்றோருக்காகவும் உழைக்கும் ஒருவன் கண்டிப்பாகப் பொறுப்பானவனாகத் தான் இருப்பான் என அவனை எண்ணி பெருமையாகவும் இருந்தது அவளுக்கு.

தன்னை யாரோ என விலக்கி வைக்காது, அனைத்தையும் பகிர்ந்து கொண்டது மகிழ்வை அளிந்திருந்தது அவளுக்கு.

கல்லூரி நாட்களின் நினைவில் திளைத்திருந்தவனாய், “நீ அதுக்குப் பிறகு எம் சி ஏ படிக்கப் போய்ட்டல! டிகிரி வாங்க வரும் போது, கூடப் படிச்சவங்கலாம் என்ன செய்றாங்கனு தெரிஞ்சிக்கிட்டேன்!” என்றான்.

“ஆமா பிஜி படிச்சிட்டு ஐடில வேலை பார்க்கனும்னு தான் என் ஆசை! ஆனா அப்பா என்னைய வெளியூருக்கு அனுப்ப பயந்துட்டு போக விடலை. அதனால நம்மூருலயே பிபிஓல வேலை செஞ்சேன்! ஒருத்தன் என்னைய பொண்ணு பார்க்க வந்து செஞ்ச வேலைல அப்பாவே நீ உனக்குப் பிடிச்சதை செய்மானு அனுப்பி விட்டுட்டாரு” என்றாள்.

“என்னது உன்னைய பொண்ணு பார்க்க வந்தாங்களா?” சற்று அதிர்ச்சியாய் அவன் கேட்க,

அந்தக் குமாரை பற்றியும் அன்று நிகழ்ந்தவைகளையும் அவனிடம் பகிர்ந்திருந்தாள் வேல்விழி.

அவன் தன்னைக் குறைவாய் பேசியதை ஆதங்கத்துடன் அவள் உரைக்க,

‘என் அழகம்மாடி நீ! உன் அருமை அவனுக்குத் தெரியலை’ என மனதிற்குள் கொஞ்சி கொண்டான்.

“உங்கம்மா இங்க தான் இருக்காங்களா என்ன? அன்னிக்கு அந்தச் சின்ன ஹோட்டல்ல பார்த்தேனே” மேலும் தொடர்ந்து பல விஷயங்களைப் பேசும் போது இதைப் பற்றி அவள் கேட்க,

“இல்ல அம்மாவோட ரிலேடிவ் சைட் மேரேஜ் இங்க ஒன்னு நடந்துச்சு! அப்பாவால ரொம்ப டிராவல் பண்ண முடியாதுனு நான் தான் அம்மாவை பஸ்ல கூட்டிட்டு வந்து கூட்டிட்டு போனேன். அவங்க அது தான் பர்ஸ்ட் டைம் சென்னைக்கு வந்தது! உள்ளூரை விட்டு வெளிலேயே வராத ஆளு அவங்க! அதான் அந்த ஹோட்டல்ல சாப்பாடு நல்லா இருக்கும்னு அன்னிக்கு அங்க கூட்டிட்டு வந்தேன்! அன்னிக்கு நீ என்னைய பார்த்தியா? ஏன் பேசலை?”

“அதான் சொன்னேனே சீன் பார்ட்டினு நினைச்சு பேசலை! ஆனா அப்புறம் தானே தெரிஞ்சிது நீ அம்மாஞ்சி பையன்னு” எனக் கூறி சிரித்தாள்.

அம்மாஞ்சி என்ற வார்த்தையில் அவளை வியப்பாய் பார்த்தவன், “அது ஏன் அம்மாஞ்சினு நினைச்ச?” எனக் கேட்டான்.

“அம்மா பையன் இஸ் ஈக்வல் டூ அம்மாஞ்சி” சிரித்துக் கொண்டே அவள் கூற,

அவளின் பதிலில் சிரித்தவனாய், “அடடா இங்க ஒரு பொண்ணுக்கு அம்மாஞ்சிக்கு கூட அர்த்தம் தெரியாம இருக்கே” என்றான்.

“அய்யோ அப்ப அம்மா பையனை அம்மாஞ்சினு சொல்ல மாட்டாங்களா.. அப்ப அதுக்கு வேற மீனிங் இருக்கா?” பதட்டத்துடன் அவள் கேட்க,

“ஹ்ம்ம்” என அவன் தலையசைக்க,

“அய்யோ சாரி! எதுவும் தப்பான அர்த்தமா? ஆனா நான் அப்படிலாம் எதுவும் நினைச்சு சொல்லலப்பா!” சங்கடமான பாவனையில் அவள் கூற,

‘தெரியாம சொன்னாலும் சரியா தான் சொல்லிருக்க என் அழகம்மா! நான் உன் அம்மாஞ்சியா (முறைப்பையனா) தான் இருக்க ஆசைப்படுறேன்’ மனதிற்குள் நினைத்துக் குதூகலித்துக் கொண்டான்.

“அம்மாஞ்சினா ஒன்னும் தெரியாதவன்னு அர்த்தம்! ஆனா அது நம்ம பேச்சு வழக்குல அப்படி மாத்திட்டாங்க! உண்மையான அர்த்தம் என்னன்னா.. அம்மா கூடப் பிறந்தவங்களை அம்மான்னு சொல்லுவாங்க. ‘அம்மான் சேய்’ மாமன் மகன் அப்படிங்கிறது அம்மாஞ்சினு ஆகிடுச்சு. அகத்துக்குப் போய்ட்டு வரேன்ற சொல் ஆத்துக்குப் போய்ட்டு வரேன்னு ஆன மாதிரி தான் இதுவும் மாறிடுச்சு” என்றான்.

கண்களை உருட்டி, “ஓ” என்றவள், “இதெப்படி உனக்குத் தெரியும்?” என ஆச்சரியமாய்க் கேட்டாள்.

“எங்கப்பா அப்பவே தமிழ் லிட்ரேசர் படிச்ச ஆளு! வீடு முழுக்கத் தமிழ் புத்தகமா தான் இருக்கும். அவங்களுக்குப் புத்தகம் வாசிக்க ரொம்பப் பிடிக்கும். எனக்கும் தம்பிக்கும் அந்தப் பழக்கம் அப்படியே தொத்திடுச்சு!” என்றான்.

“தமிழ்ல டிகிரி படிச்சவர் ஏன் பிஸ்னஸ் பண்ணாரு. தமிழ் வாத்தியார் ஆகியிருக்கலாமே” என அவள் கேட்க,

“என்ன செய்ய! எங்கப்பாக்குத் தமிழ் மேலயும் ஆசை! பிஸ்னஸ் மேலயும் ஆசை” எனக் கூறி சிரித்தான்.

வேல்விழி ரயிலில் இருந்த கழிப்பறைக்குச் சென்றிருந்த நேரம், இவனிடம் வந்த அக்ஷயா, “ஏன்டா, வேல்விழியை அன்னிக்கு எங்கேயோ பார்த்தேன்! அவ்ளோ பிடிச்சிதுனு சொல்லி அழகம்மானு பேரு வச்சேன்னுலாம் கதை கதையா சொன்னியே! அதனால தானே நம்ம டீம் மெட்ஸ்லாம் உன்னைய அழகம்மானு ஓட்ட ஆரம்பிச்சாங்க! அதுக்குப் பிறகு தானே வேல்விழியை நாம பஸ்லயே பார்த்தோம்! நீயே தேடி போறதுக்கு முன்னாடி அவங்களே தேடி வந்துட்டாங்கடானு நானும் ஆச்சரியமா சொன்னேனே! இன்னிக்கு என்னடா அந்தப் பொண்ணுக்கிட்ட ப்ளேட்டையே திருப்பிப் போட்டுட்ட” எனக் கேட்டாள்.

“எனக்கு வேல்விழியைப் பிடிச்சிருக்கு அக்ஷு, ஆனா அந்தப் பொண்ணுக்கும் என்னைய பிடிக்கனும்ல! எடுத்ததும் காதல் சொல்லி ஒரு பொண்ணை இக்கட்டான சூழலுக்குள்ள இழுத்து விடக்கூடாதுனு நினைக்கிறவன் நான்! இரண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ்ஸா பேசி பழக ஒரு வாய்ப்பு வந்திருக்கு! அப்படியே போகட்டும் கொஞ்ச நாள்! நேரம் வரும் போது சொல்லிக்கலாம்! நீயும் எதுவும் அவகிட்ட சொல்லி வைக்காத” என்றான் ஆழமான குரலில்.

நண்பனை புரிந்து கொண்டவளாய் சரியெனத் தலையசைத்து அவளிடத்திற்குச் சென்றாள் அக்ஷயா.

அந்த ரயில் சென்னை அடையும் வரை ஆதவனும் வேல்விழியும் பேசிக் கொண்டே வந்தனர். இருவரும் தங்களது தொலைப்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அவளுக்காகத் தினமும் அவன் அந்த உணவகத்திற்கு வந்து அவளுடன் காலை உணவை உண்டான். இதனால் ரேவதியும் அவனுக்குப் பரிச்சயமாகி இருந்தாள். அலுவலகத்திற்குச் செல்லும் போது விழியுடன் அவளுடைய நிறுத்தத்திலேயே பேருந்தில் ஏறி விடுவான். அக்ஷயா அடுத்தச் சில நிறுத்தங்கள் தாண்டி அந்தப் பேருந்தில் ஏறியதும் மூவருமாய் ஏதேனும் பேசிக் கொண்டே செல்வார்கள்.

சில மாதங்களில் அக்ஷயாவிற்கு வேறொரு பிராஜக்ட் கிடைக்க, அது மாலை ஷிப்ட் என்பதால், காலை பேருந்தில் வருவதை நிறுத்தியிருந்தாள். அவளுக்கும் ஆதவனுக்குமான பேச்சு வெகுவாய்க் குறைந்திருந்தது.

வேல்விழியும் ரேவதியும் ஆதவனிடம் நல்ல நட்புடன் பழகி வந்தனர். தினமும் நேரிலும் புலனத்திலும் அளவளாவி கொண்டிருந்தனர். ரேவதி சில நாட்களில் வேறொரு திசையிலிருந்த அலுவலகத்திற்கு மாறிவிட்டதால் அதனருகே இருக்கும் பிஜிக்கு இடம்பெயர்ந்து விட்டாள்.

வாரயிறுதி நாட்களில் ஆதவனும் வேல்விழியும் அவர்களது ஊருக்கு ஒன்றாகப் பயணிக்கத் தொடங்கினர்.

ஊருக்கு செல்லாத நாட்களில், ஆதவன், வேல்விழி, ரேவதி, அக்ஷயா என அனைவருமாய் சேர்ந்து படத்திற்கு அல்லது எங்கேனும் வெளியே சென்று விட்டு வருவர்.

ஆதவன் வேல்விழியின் நட்பு விருட்சமாய் வளர்ந்திருந்தது. தனது அன்றாட நிகழ்வுகளை அவனுடன் அவள் பகிர்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தாள். அவனும் அவள் கூறும் அனைத்தையும் பொறுமையாய் கேட்டு கொண்டிருப்பான். அவளின் குடும்ப நிலையையும், இவளின் சம்பளம் அவளது குடும்பத்திற்கு எந்தளவிற்கு முக்கியம் என்றும் கூறியிருந்தாள். அவன் அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டான். ஆனால் முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க மாட்டான்.

ஆரம்ப நாட்களில் மாலை வேளையில் அவரவர் பணி முடியும் நேரத்திற்கேற்ப தனியாய் கிளம்பி செல்வர்! நாட்கள் செல்ல செல்ல இவர்களின் நட்பிணைப்பு அடுத்த நிலையை அடைந்ததும், அவள் வேலை முடிந்திருந்தாலும், அவனுக்காய் காத்திருந்து அவனுடன் வருவாள். அவனும் அவ்வாறே அவளுக்காகக் காத்திருப்பான். இருவரும் முடிந்த வரை மாலை வேளையும் ஒன்றாய் பயணிக்குமாறு பார்த்து கொண்டனர்.

நாளுக்கு நாள் வேல்விழியின் மனம் அவனைச் சுற்றியே வலம் வர ஆரம்பித்தது. அவனுடனேயே நேரத்தை போக்க வேண்டும், அவனுடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் எனப் பலவிதமான மன உணர்வுகளுக்கு ஆட்பட்டிருந்தாள் அவள். அவனின் அன்பு, கனிவான பேச்சு, அவனுடன் இருக்கும் போது அவள் உணரும் பாதுகாப்பு என அனைத்தும் அவளின் மனதை அவன்பால் சாய்த்திருந்தன.

ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் மாலை அலுவலகம் முடிந்ததும் அவளை ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றான் ஆதவன்.

“இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்திருக்க?” அங்கிருந்த மேஜையில் அவனுக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவளாய் அவள் கேட்க,

“வெய்ட் அண்ட் சீ மேடம்” என்றவனாய்,

வெய்ட்டரை அழைத்து ரகசியமாய் ஏதோ உரைத்தான்.

இவள் முன் மேக்னம் ஐஸ்க்ரீம் வைத்த வெய்ட்டர், “ஃபலூடா ரெடியாகிட்டு இருக்கு மேடம்” எனக் கூறி விட்டு சென்றார்.

மனம் நெகிழ்ந்து விட்டது அவளுக்கு!

“என்னடா இது!” சற்று குரல் கமறவே கேட்டாள் அவள்.

“நேத்து ஃபோன்ல பேசும் போது இதெல்லாம் சாப்பிடும்னு ஆசைப்பட்டிருக்கேன். ஆனா ரேட் அதிகம்னு வாங்கினது இல்லை. அதுக்குப் பிறகு ஆசையும் போய்டுச்சுனு சொன்னல!

உன் வாழ்க்கைல நீ ஆசைப்பட்டுக் கிடைக்காததுனு எதுவும் இருக்கக் கூடாதுனு நினைச்சேன் விழி” ஆழ்ந்த குரலில் உரைத்தவனை, நெக்குருகி போனவளாய், நெஞ்சம் விம்ம பார்த்திருந்தாள்.

“இப்படி என்னலாம் உன்னோட சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறாம இருக்கோ, அதெல்லாம் சொல்லு. என்னால முடிஞ்ச வரை அதெல்லாம் நான் நிறைவேத்துறேன்” என்றவன் கூறி முடித்ததும்,

“உன்னைக் கட்டிக்கப் போற பொண்ணு ரொம்பக் கொடுத்து வச்சவடா” என்றவள்,
அந்த ஐஸ்க்ரீமை ருசித்துச் சாப்பிட ஆரம்பித்தாள்.

‘நீதான்டி அந்த அதிர்ஷடக்காரி’ என மனதில் நினைத்துக் கொண்டான் அவன்.

அச்சமயம் அக்ஷயா வந்து இவர்களின் அருகில் அமர்ந்தாள்.

“ஹாய் அக்ஷு! உனக்கு இப்ப ஆபிஸ் டைம் தானே” எனக் கேட்டாள் வேல்விழி.

“ஆமா விழி, ஆதவன் தான் பேசி ரொம்ப நாளாச்சு ஒரு அரை மணி நேரம் வந்துட்டு போனு சொன்னான். அதான் வந்தேன்” என்றவளிடம் பேச ஆரம்பித்தான் அவன்.

பல நாட்கள் கழித்துச் சந்தித்ததினால், அவர்கள் இருவரும் இவள் ஒருத்தி இருப்பதையே மறந்து அவர்களின் அலுவல் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.

முதல் முறை ரயிலில் அக்ஷயாவை கண்டதும் வந்த அந்தப் பொசசிவ் உணர்வு நெடுநாட்கள் கழித்து மீண்டுமாய் இன்று துளிர்விட்டது அவளுக்கு. தன்னை விட அவனுக்கு அவள் பெரிதான நட்போ என நினைத்தவாறே அவர்களையே பார்த்திருந்தாள் அவள்.

‘ச்சே நான் ஏன் இப்படிலாம் யோசிக்கிறேன்! அக்ஷயாவை என்னை விட அவனுக்கு ரொம்ப நாளா தெரியும்! அப்ப அவ தானே அவனுக்குப் பெரிசா தெரியும்’ என மனதினுள் பேசிக் கொண்டாள் அவள்.

அவளின் பார்வை தன்னை ஊடுருவதை உணர்ந்து திரும்பிய ஆதவன், என்னவெனக் கேட்டுப் புருவத்தை உயர்த்த, ஒன்றுமில்லை எனத் தலையசைத்தவளின் முகம் பொலிவற்றுக் குழப்பத்தைப் பிரதிபலித்தது.

அவளின் முக உணர்வுகளைப் படித்தவனாய் அக்ஷயாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டு இவளின் புறம் திரும்பி, “என்னாச்சு! திடீர்னு ஏன் சோகமாகிட்ட? ஏதோ குழப்பமா யோசிக்கிற மாதிரி இருக்கியே என்னாச்சு?” எனக் கேட்டான்.

தன் முகம் பார்த்தே தன் உணர்வுகளை உணர்ந்து, அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டுத் தன்னிடம் வந்து கேட்ட அவனின் கேள்வியில் மனம் பாகாய் உருகியது அவளுக்கு.

அவனுக்கு அக்ஷயாவை விடத் தான் தான் முக்கியம் என்பதை அவனின் இந்தக் கேள்வி உணர்த்த, பரவசமாய் உணர்ந்தாள்.

நிமிடத்துக்குள் அவனின் செயல்களுக்கு ஏற்றவாறு மாறுபடும் தன் மனதின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை அவளால்! ஏன் தன் மனம் நிலைக்கொள்ளாது தவிக்கிறது எனப் புரியவில்லை அவளுக்கு.

ஐஸ்க்ரீமை சாப்பிட்டு முடித்து அக்ஷயா அலுவலகத்திற்குச் செல்ல, இவர்கள் அவரவர் இல்லத்தை அடைந்தனர்.

அன்றிரவு இவளின் தந்தை அழைத்து, இவளுக்காக மாப்பிள்ளை பார்த்திருப்பதாய் உரைக்க, இவளின் மனக்கண்ணில் ஆதவனே வந்து நின்றான்.

தன் தலையை உலுக்கி தன்னிலை அடைந்தவளாய், அவள் தற்சமயம் தனக்குத் திருமணம் வேண்டவே வேண்டாம் எனக் கூறி பெற்றோரிடம் சண்டையிட்டு அந்த வரனை தட்டிக் கழிக்கச் செய்தாள்.

அவளின் பெற்றோருக்கு இவள் மீது மிதமாய் சந்தேகம் வந்திருந்தது.

அன்றிரவு படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு படுத்தவளுக்கு ஆதவனின் நினைவுகளே மனதில் ஊர்வலம் போனது.

அவனை அந்த உணவகத்தில் முதல் நாள் சந்தித்தது முதல் இன்று பேசியது வரை அவளின் மனதில் அனைத்தும் ஊர்வலமாகப் போக, ‘ஏன் நானே ஆதவனைக் கட்டிக்கக் கூடாது? நான் அவனைக் காதலிக்கிறேனானு தெரியலை! ஆனா அவனை மாதிரி ஒரு பையனை கட்டிக்கக் கொடுத்து வச்சிருக்கனும்’ அவளையும் மீறி எழுந்த இந்த எண்ணங்களை உணர்ந்து
மெத்தையிலிருந்து சட்டென எழுந்து அமர்ந்தவள், தன் மனதின் எண்ணப்போக்கை தடை செய்தாள்.

“அய்யோ எனக்கு ஏன் இப்படிலாம் தோணுது” எனத் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

ஆனால் அவளின் மனமோ மேலும் தொடர்ந்து அவனைத் திருமணம் செய்வதால் ஏற்படக் கூடிய சாதகப் பாதகங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தன.

இதை மேலும் நீட்டிக்க விரும்பாதவள், ஆதவனிடமே இதைப் பற்றிப் பேசிவிடலாம் என முடிவு செய்து, மறுநாள் சனிக்கிழமை ஆதலால் மாலை கோவிலுக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பினாள். அதன் பிறகு தான் சற்று ஆசுவாசமடைந்தது அவளின் மனம்.

காலை அவளின் குறுஞ்செய்தியை பார்த்தவன், திடீரென எதற்காகக் கோவிலுக்கு அழைக்கிறாள் எனக் கேட்க, அன்று அந்தக் கோவிலில் விசேஷம் எனக் கூறி அவனை வருமாறு பணித்தாள்.

அக்ஷயா அதே சமயம் அவனுக்கு அழைத்துத் தனது திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஷாப்பிங் செல்ல இருப்பதாகக் கூறி, தன்னுடன் ஷாப்பிங் வர இயலுமா எனக் கேட்டாள்.

மாலையில் தானே கோவில் செல்ல வேண்டியுள்ளது என எண்ணிய ஆதவனும் சரியெனச் சம்மதித்தான். இதைப் பற்றி வேல்விழியிடம் கூறவில்லை அவன். அங்கு ஏதேனும் பரிசு பொருள் விழிக்காக வாங்கி, மாலை கோவிலில் வைத்தே அவளிடம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் எனத் திட்டமிட்டதினால் அவளிடம் இந்த ஷாப்பிங் பற்றி உரைத்திருக்கவில்லை அவன். அக்ஷயாவையும் அவளிடம் கூற வேண்டாமென உரைத்து விட்டான்.

அன்று காலை ஆதவனும் அக்ஷயாவும் தி நகர் சென்றவர்கள், பனகல் பார்க், ரங்கநாதன் தெரு என அந்த ஏரியாவை சுற்றியுள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று தேவையானதை வாங்கிப் பேருந்தில் ஏறும் போதே மணி மாலை ஐந்தை கடந்திருந்தது.

போக்குவரத்து நெரிசலில் பேருந்து ஊர்ந்து செல்ல, ஆதவன் அக்ஷயா இருவரது கைபேசியுமே உயிரற்றுக் கிடந்தது.

மாலை ஆறு மணிக்குக் கோவிலில் இருக்க வேண்டியவன், இங்கோ அசோக் நகரை கூடத் தாண்டாது இருந்தான்.

அக்ஷயாவிடம் வேல்விழி தனக்காக இந்நேரம் கோவிலில் காத்திருப்பாள் எனக் கூற, தானும் வேல்விழியைக் காண உடன் வருவதாய் உரைத்தாள் அக்ஷயா.

அன்றைய நாள் முழுவதும் துள்ளலான பதட்டமான மனநிலையில் சுற்றி கொண்டிருந்தாள் வேல்விழி. அவனிடம் பேசிவிடலாம் என முடிவு செய்த போது இல்லாத உணர்வுகள் எல்லாம் இப்பொழுது அவளை ஆட்டுவித்தது.

தன்னை அவன் ஏதேனும் தவறாய் எண்ணிவிடுவானோ எனக் கலக்கமானது மனது. ஆயினும் பேசி தீர்த்து விடுவது என முடிவு செய்தாள் அவள்.

அழகாய் புடவை உடுத்தி, மிதமாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டு பரீட்சை எழுத போகும் பதட்டத்துடன் கோவிலுக்குச் சென்றாள் வேல்விழி.

இதயம் படபடக்க அவனின் வருகைக்காகக் கோவிலில் காத்திருந்தாள்.

அவனுக்கு அவள் அனுப்பியிருந்த குறுங்செய்தி எதற்கும் பதில் வராமலிருக்க, அவனின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். அதுவோ ஸ்விட்ச் ஆப் என வந்தது.

இது நாள் வரை இவர்கள் திட்டமிட்டு சென்ற எந்த இடத்திற்கும் அவன் வராமல் இருந்ததில்லை. அவன் வருவதற்குத் தாமதமானாலும் அவளுக்கு அழைத்துக் கூறி விடுவான். ஆனால் இன்றோ ஒரு மணி நேரம் தாண்டிய பிறகு அவனிடம் இருந்து எந்தச் செய்தியும் வராமலிருக்க, மனம் லேசாய் வருந்தவும் அதே சமயம் அவனுக்கு ஏதேனும் ஆகிற்றோ எனப் பயமும் கொள்ளத் தொடங்கியது அவளுக்கு.

ஒரு மணி நேரமாகியும் அவன் வராமலிருக்க, பெருத்த ஏமாற்றத்துடன் தனது அறையை வந்தடைந்தாள் வேல்விழி.

அவளின் கண்கள் கலங்கி கண்ணீரை பொழிந்தது. ஏன் வராமல் இருக்கிறான் என்ற காரணத்தை அவளால் யூகிக்கவே முடியவில்லை.

அழுதழுது கண்கள் சிவந்திருந்த நேரத்தில் அவளின் பிஜி வரவேற்பறையில் அவளுக்காக யாரோ காத்திருப்பதாய் உரைத்து சென்றார் அவளின் பிஜியில் பணிபுரியும் பெண்.

யாராய் இருக்கும் என எண்ணியவளாய் முகம் கழுவி அங்குச் சென்று பார்க்க, அந்த வரவேற்பறையில் ஓரமாய் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இருந்த நாற்காலியின் அருகில் ஆதவன் அக்ஷயாவுடன் நின்றிருந்தான்.

புடவையில் தலை கலைந்து கண்கள் கலங்கி முகம் சிவந்து வந்தவளை பார்த்து பதறி போன ஆதவன்,

“அழகம்மா என்னடா ஆச்சு?” என அவளருகில் வந்து கைகளைப் பிடிக்கப் போக,

விருட்டெனக் கையைப் பின்னே இழுத்து கொண்டாள் அவள்.

“ம்ப்ச் விழி! அக்ஷு கூட ஷாப்பிங் போனேன்” என அவன் முடிக்கும் முன்பே,

“உனக்கு என்னைய விட அவ தான் முக்கியமா போய்ட்டால! நான் வெயிட் பண்ணுவேன்னு கூட நினைக்காம அவ கூட ஷாப்பிங் போனேன்னு வந்து கூலா சொல்லிட்டு இருக்க நீ! நீ எனக்கு வேண்டாம் போடா! ஐ ஹேட் யூ” என அடக்கப்பட்ட அழுகையுடன் கூடிய விம்மலில் உரைத்தவள், அங்கிருந்து சென்றிருந்தாள்.

“அழகம்மா” என்ற அவனின் குரல் அவளின் செவியைத் தீண்டாது போனது.

அவளை எவ்வாறு சமாதானம் செய்வது எனப் புரியாது அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று அவன் அமர,

அவனருகில் வந்த அக்ஷயா, “ஆதவா அவ உன்னை லவ் பண்றாடா” என்றாள்

“என்ன உளர்ற நீ” அவனுக்குக் கோபம் தான் வந்தது.

“நீ அவளை விட மேலான இடத்தில என்னைய வச்சிருக்கேன்னு நினைச்சி தான் கோவிச்சிக்கிட்டு போறா!” புருவங்கள் இடுங்க அவளின் செய்கையையும் பேச்சையும் யோசித்துப் பார்த்தவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.

“ஓ மேடம்க்கு என் மேல பொசசிவ் கோபம் வந்திருக்கு” என்றான்.

“அதே தான்! சரி பேசி சமாதானம் செய். நான் அப்புறம் பேசுறேன் அவகிட்ட” என்று விட்டு கிளம்பி விட்டாள் அக்ஷயா.

தன்னறைக்குச் சென்று கைபேசிக்கு மின்னுயிர்யூட்டி, ஒரு மணி நேரம் கழித்து அவளின் கைபேசிக்கு அவன் அழைக்க, உடனே எடுத்திருந்தாள் அவள்.

“சாரிடா! நான் சீக்கிரம் வந்துடலாம்னு நினைச்சு தான் அவ கூடப் போனேன்! ஆனா லேட்டாகிடுச்சு! கோவிலுக்குப் போனேன் அங்க நீ இல்லன்னதும் உன்னைப் பார்க்க பிஜி வந்தேன்” என்றான்.

“ஹ்ம்ம்” என்றாள் அவள்.

“என்ன பேச மாட்டியா?” வருத்தத்துடன் ஒலித்தது அவனின் குரல்.

“இப்ப மட்டும் எதுக்கு எனக்குக் கால் பண்ண? அவளுக்கே ஃபோன் பண்ணி பேச வேண்டியது தானே! உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு நான் முக்கியம் இல்லைல என்ற ஆதங்கத்துடன் வந்தது அவளின் வார்த்தைகள்.

“சாரிடா! அவ மேரேஜ் ஷாப்பிங் சொன்னாளா.. அதான் போனேன்! நம்ம மேரேஜ்க்கு நம்ம இரண்டு பேருமா ஷாப்பிங் செய்யலாம்! இப்ப தான் எனக்கு எது எங்க கிடைக்கும்னு தெரியும்ல!” குறும்புடன் உரைத்திருந்தான் அவன்.

“என்னது நம்ம மேரேஜா?” திகைப்பாய் அவள் கேட்க,

‘அய்யோ எதுவும் திட்டிடுவாளோ! ரூட்டை மாத்து ஆதவா’ என மைண்ட்வாய்ஸில் பேசியவனாய்,

“ஹ்ம்ம் ஆமா அது இருக்கட்டும்! நீங்க ஏன் இன்னிக்கு சேரி கட்டியிருந்தீங்க மேடம்” பேச்சை மாற்றினான்.

“அது சும்மா கோவிலுக்குப் போக” அவன் பேச்சை மாற்றுவதைப் புரிந்து கொண்டவளாய் உரைத்தாள்.

“பொய் சொல்லாத! உன்னைய பத்தி எனக்குத் தெரியாதா! உன்னோட ஒவ்வொரு ரியாக்ஷனும் எனக்குப் புரியும்” அவள் வாயினாலேயே அவளுக்குத் தன்னைப் பிடிக்கும் எனக் கூற வைக்கும் முயற்சியில் விழுந்தன அவனின் வார்த்தைகள்.

“என்ன தெரியுமாம் என்னைய பத்தி” இவளுமே அவனின் வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்க பார்க்க,

“எல்லாமே தெரியும்!” என்றான் அவன்.

“என்ன தெரியும்?” மீண்டுமாய் அவள் கேள்வி கேட்க,

“பேச்சை மாத்தாத! எதுக்கு இன்னிக்கு புடவை கட்டின?” துள்ளலுடன் ஆர்வமிகுதியில் கேட்டிருந்தான்.

“எல்லாம் தெரியும்னா எதுக்கு இன்னிக்கு சேலை கட்டினேனும் தெரியும்ல! அப்புறம் ஏன் கேட்குற?” ஹஸ்கி வாய்ஸில் பேசியவளின் முகம் நாணத்தில் சிவந்தது.

“அது உன் வாயால கேட்கனும்னு தான்டி அழகம்மா” மென்மையாய் உரைத்தான் அவன்.

“திடீர் திடீர்னு என்னைய ஏன் அழகம்மானு கூப்பிடுற?” என்றவள் கேட்க,

“அது அப்புறம் சொல்றேன்! இன்னிக்கு புடவைல ரொம்ப அழகா இருந்த நீ! கூட அக்ஷயா வேற இருந்தா.. நீயும் வந்து கத்திட்டு போய்ட்ட! அதான் அப்ப எதுவும் சொல்ல முடியலை” கண்ணில் காதலுடன் ரசிப்பாய் அவன் கூற,

“ஆமா அக்ஷயா என்னைய பத்தி என்ன நினைச்சிருப்பா? நானும் லூசு மாதிரி கோபத்துல அவ இருக்கிறதை கவனிக்காம ஏதேதோ பேசிட்டேன்! நான் அவளுக்குக் கால் பண்ணி பேசுறேன்” சங்கடமாய் உரைத்தாள் அவள்.

“அதெல்லாம் அவ ஒன்னும் நினைக்க மாட்டா! அவளுக்கு நம்ம லவ் பண்றோம்னு தெரியும்” தங்களின் காதலை விளையாட்டாய் போட்டு உடைத்திருந்தான் அவன்.

“என்னது நம்ம லவ் பண்றோமா?” அவனின் வார்த்தையில் இன்பமாய் அதிர்வுற்றவள்,

“யார் அப்படிச் சொன்னா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல” விளையாட்டாய் பேச்சை இழுத்தாள்.

“ஒன்னும் இல்லாமா தான் புடவை கட்டிட்டு வந்தியாடி என் அழகம்மா” அதே ரசனை பாவம் அவன் குரலில்.

“என்ன நீ வார்த்தைக்கு வார்த்தை டி சொல்ற?” குரலில் சற்றுக் கோபம் போல் காட்டிக் கொண்டாள்.

“அப்படித் தான் சொல்லுவேன்! உரிமையுள்ளவ கிட்ட தான் டி சொல்ல முடியும்” அவனின் உரிமையை இவ்வாறாய் நிலைநாட்டினான் அவன்.

“அப்ப நானும் டா சொல்லுவேன்” கேலியாய் கூறினாள் இவள்.

“அடிப்பாவி! புருஷனை டா சொல்லுவியா?” அவளின் மீதான தன் காதலின் உறுதியை விளையாட்டு போக்குலேயே தெரிவித்தான் அவன்.

அவனின் வார்த்தையில் கண்கள் மின்ன வயிற்றில் பட்டாம்பூச்சி படபடத்தது அவளுக்கு.

அதை அவனிடம் காண்பிக்காது, “யாரு புருஷன்? நினைப்பு தான்!” நொடித்துக் கொண்டாள் இவள்.

“எனக்குப் புருஷனாகப் போறவன் பேரு சூரியனோட பேரா இருக்கும்! அவன் அம்மா பையனா அம்மாஞ்சியா இருப்பான்! அப்புறம் அவனுக்குக் குடும்ப உறவுகள் மேல அவ்ளோ பாசம்! தன்னோட பிரண்ட்டை அப்படிக் கேர் பண்ணி பார்த்துப்பான்! அவனைத் தான் நான் கட்டிக்கப் போறேன்! ஆனா அது நீ இல்லை”

அவள் நீட்டி முழக்கி தன்னைப் பற்றி விளக்கி கூறியதில், தன் காதல் கை கூடிய பெருத்த நிம்மதியுடன் சிரித்திருந்தான் அவன்.

அன்றைய இரவு முழுவதும் இவ்வாறாய் காதலை நேரடியாய் உரைக்காமலேயே தங்களின் காதலை உறுதிப்படுத்தி அளவளாவி கொண்டிருந்தனர் இந்தக் காதல் ஜீவிகள்.

— தொடரும்