நறுங்காதல் பொழிபவனே – 4

கொரோனா முதல் அலை சற்றாய் குறைந்து மக்கள் சற்று இயல்பாய் வெளியில் நடமாடிக் கொண்டிருந்த காலமது.

பேருந்தில் அவளிடம் விளையாட்டாய் பேசி வம்பிழுத்து வந்திருந்த ஆதவன், அவளின் வீட்டை அடைந்தான்.

வாசலில் இருந்த மஞ்சள் நீரில் முகம் கால் கைகளைக் கழுவியவன், வீட்டிற்குள் வந்து சானிடைசரை நன்றாய் கைகளில் பூசிக் கொண்டே உள்ளே வர, “வாங்க தம்பி” என்று அழைத்த மகேஸ்வரி, “காபி குடிக்கிறீங்களா?” எனக் கேட்டவாறு காபி கலக்க போக,

“இல்ல அத்தை, வேண்டாம்! சாப்பிடுற நேரம் ஆகிடுச்சே! ஒரேடியா சாப்டுக்கிறேன்! குளிச்சிட்டு பாப்பாவை பார்த்துட்டு வரேன்” என்றவாறே வேல்விழியின் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

குழந்தைக்குப் பாலூட்டி கொண்டிருந்தவள், இவனைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் சிரித்து, பின்பு அவன் இவளிடம் கூறிய பொய் நினைவில் வர அவனைக் கோபமாய் முறைத்து எனக் கலவையான முகப் பாவனைகளைக் காண்பித்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவளின் இந்த முக உணர்வுகளைக் கண்டவன், வாய்விட்டு சிரித்தவனாய் “குளிச்சிட்டு வந்து என் பொண்ணைக் கவனிக்கிறேன்” என்றவன், குளியலறையின் கதவினருகே சென்று திரும்பி, “உன்னையும் சேர்த்து தான்” எனச் சிரித்தவாறு சென்றான்.

அவனைக் கண்டதிலேயே அவன் மீதான அவளின் கோபங்கள் அனைத்தும் மட்டுப்பட்டிருந்தன. இருந்தாலும், “என்னைய எப்படி அழவிட்டுட்டான்! இன்னிக்கு அவன்கிட்ட பேசாம மௌனமா இருந்தே ஒரு வழி பண்றேன்” மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

அவன் குளித்து முடித்து வரவும், இவள் மெத்தையில் குழந்தையைத் தூங்க வைக்கவும் சரியாக இருந்தது. குழந்தையின் அருகினில் வந்தவன் கொஞ்சி முத்தமிட்டு கொண்டிருப்பதை ரசனையாய் பார்த்திருந்தாள் அவள்.

காதலிக்கும் போது இருந்தது போல் இல்லை அவனின் தோற்றம் இப்பொழுது. இந்த ஆறு வருடத்தில் அலுவலகப் பளு அதன் அழுத்தம் என மண்டை ஏறி வழுக்கை விழும் நிலையில் இருந்தது. அவனின் ஒல்லியான உடல் புஷ்டியாகி தொப்பையும் வந்திருந்தது. ஆயினும் அவளின் பார்வை எப்பொழுதும் ரசனையாய் தான் படியும் அவனின் மீது. அன்று ரயிலில் அவனைப் பார்த்திருந்த அதே ரசனை பார்வை தான் எப்பொழுதும். அவனின் முகம், அது வெளிப்படுத்தும் உணர்வுகள், அவனின் செயல்கள், சிரிக்கும் பொழுது விழும் கன்னக்குழி என அனைத்துமே என்றைக்கும் ஆசையாய் ரசித்துப் பார்த்திருப்பாள் அவள். அவன் மீதான அவளின் அளவற்ற அன்பு என்றும் அவனை ரசனை கண் கொண்டே பார்க்க வைக்கிறது.

தன்னை அவள் உற்று நோக்குவதை உணர்ந்து சிரிப்பாய் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“பொண்ணை மட்டும் கொஞ்சுறேனேனு பொறாமையாடி பொண்டாட்டி” கண் சிமிட்டி உரைத்து அவளின் கன்னம் கிள்ளியவன், “பிறந்தநாள் வாழ்த்துகள் என் பொண்டாட்டி” என முத்தம் வைக்கப் போக,

அச்சமயம் அவளின் அன்னை, “வேலு, மாப்பிள்ளக்கு வந்து சாப்பாடு போடு! நான் குழந்தையைக் கவனிச்சிக்கிறேன்” என்றவாறு கதவை தட்டினார்.

“ம்ப்ச்” என ஏமாற்றமாய் இவளின் முகத்தை அவன் பார்க்க, அவள் உதட்டினுள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவசரமாய் ஓர் அச்சாரத்தை அவளின் கன்னத்தில் அழுத்தமாய் பதித்தவன், ‘எப்பூஊடி’ எனப் புருவத்தை உயர்த்திவிட்டு ஓடிச் சென்று கதவை திறந்தான்.

எப்பொழுதுமே அவனுக்கு அவள் தான் பரிமாற வேண்டும். இருவருமே ஒன்றாய் உண்ண வேண்டும் அல்லது அவள் தான் அவனுக்குப் பரிமாற வேண்டும். உணவு உண்ணும் நேரம் தனியாகவே உண்ண மாட்டான். உணவின் ருசியால் வயிறு நிறைவதை விட, சந்தோஷமாய்ப் பேசி சிரித்து மனமும் வயிறும் நிரம்ப உண்ணுவது தான் அவனுக்குப் பிடிக்கும்.

இன்று அவள் கோபத்தில் இருப்பது போல் காட்டிக் கொண்டிருப்பதால், உர்ரென முகத்தை வைத்துக் கொண்டே பரிமாறி கொண்டிருந்தாள்.

அவளின் முகத்தைப் பார்த்தவாறே, ‘ஓ மேடம் கோபமா இருக்காங்களாமா!’ என மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டவன், அவளைப் பேச வைக்கும் பொருட்டுத் தன் பேச்சை தொடங்கினான்.

“விழி, இன்னிக்கு பஸ்ல வரும் போது என்ன நடந்துச்சு தெரியுமா? ஒரு பொண்ணு என்னைய சைட் அடிச்சிட்டே வந்துச்சு! மாஸ்க் போட்டுருக்கேன்… என் கண்ணு மட்டும் தான் வெளில தெரிஞ்சிது.. அதுலயும் என்னைப் பார்த்து பார்த்து பக்கத்துல இருக்கப் பொண்ணுகிட்ட என்னமோ சொல்லிட்டு இருந்துச்சு அந்தப் பொண்ணு” என்றான்.

“அதெப்படி உனக்குத் தெரியும்? அப்ப நீயும் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு இருந்திருக்க.. அப்படித் தானே!” அவனை முறைத்தவாறு கேட்டிருந்தாள் வேல்விழி.

“அய்யய்யோ நம்மளே வான்டட்டா வாய் விட்டு மாட்டிக்கிட்டோமே! நம்ம வாய் சும்மாவே இருக்க மாட்டேங்குது” சத்தமாய் அவளுக்குக் கேட்க வேண்டுமென்றே உரைத்தவன்,

‘எப்படிப் பேச வைச்சேன் பாரு’ என மனதிற்குள் குத்தாட்டம் போட்டவனாய், மேலும் அவளை வம்பிழுக்கும் பொருட்டு, “அந்தப் பொண்ணோட பஸ் ஸ்டாப் வரவும் ஒரே பீலிங் ஆகி போச்சு போலருக்கு. என்னய ஏக்கமா பார்த்துட்டே இறங்கி போய்டுச்சு” சோகமாய் பாவனைச் செய்து அவன் உரைக்க,

“நீயும் அப்படியே அந்தப் பொண்ணு பின்னாடி போக வேண்டியது தானே!” கடுப்பாய் உரைத்திருந்தாள் அவள்.

மேலும் கோபமேற, “மூஞ்சை பாரு! பொண்ணுங்க இவன் பின்னாடி சுத்துதாம்!” என உதட்டை சுழித்தவள்,

“நீ ஒரு பிள்ளைக்கு அப்பானு சொன்னியா அந்தப் பொண்ணுகிட்ட?” என்றாள்.

“நான் ஏன்டி சொல்லனும்? ஆபிஸ்ல வந்து பாரு ஐம் ஆல்வேஸ் சிங்கிள் தான்! இன்னும் எனக்கு ப்ரபோஸல் வருது தெரியுமா?” மேலும் அவளை வம்பிழுக்க என அவன் பேச,

“அடங்கவே மாட்ட நீ” எனப் பல்லை கடித்தவளாய் அவனின் முதுகு கை எனச் சரமாரியாய் அடித்தவள்,

“நான் உன் மேல கோபமா இருக்கேன்றதை மறந்துட்டு பேசிட்டு இருக்கேன் பாரு!” எனத் தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

அவளுக்கும் அவன் தன்னைப் பேச வைப்பதற்காகவே இவ்வாறு வாயாடினான் எனப் புரிந்திருந்தது.

ஹா ஹா ஹா என வாய்விட்டு சிரித்தவன், சிங்கில் கை கழுவி விட்டு நகர, இவளும் தனது கையை கழுவ வர, அவள் நைட்டியின் மேல் போட்டிருந்த துண்டில் கையை துடைத்தவனாய், “உனக்கு என்ன கிப்ட் வேணும்டி அழகம்மா” எனக் கேட்டான்.

அவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே அவர்களது அறைக்கே வந்திருந்தான்.

இவர்கள் உள் நுழையவும், “பாப்பாவை தொட்டில்ல போட்டுட்டேன்மா.. நல்லா தூங்குறா.. ” என்றவாறு அவ்வறை விட்டு வெளியே வந்தார் அவளின் அன்னை மகேஸ்வரி.

தாயின் சேலையில் கட்டியிருந்த தூளியில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை மீண்டுமாய் கொஞ்சி லேசாய் தொட்டிலை ஆட்டி விட்டு இவளருகில் மெத்தையில் வந்து அமர்ந்தவன்,

மீண்டுமாய், “சொல்லு விழி! உனக்கு என்ன கிப்ட் வேணும்?” எனக் கேட்டான்.

அவனை முறைத்தவாறு அவள் திரும்ப, “நைட் ஆபிஸ் வேலை வந்துடுச்சுடி! இன்னிக்கு லீவ் சொல்லிட்டு இன்னிக்கு வேலைலாம் நேத்தே முடிச்சி கொடுத்து வந்திருக்கேன்! அதான் நைட் வர முடியலை! இப்ப இருக்கச் சூழ்நிலைல பாப்பாவை வச்சிக்கிட்டு விடியற்காலைலயே கோவிலுக்கும் போய்ட்டு வர முடியாது! அதான் மதியமா வந்தேன்” அவளின் கோபத்திற்கான காரணம் அறிந்தவனாய் விளக்கம் அளித்தான்.

“ஏன் உங்க வீட்டுல காலைல சாப்பிட்டுட்டு மதியமா போ தம்பினு சொல்லையா?” எனக் கேட்டாள்.

‘அதெப்படி நேர்ல பார்த்த மாதிரியே கேட்குறா இவ’ என மனதிற்குள் எண்ணியவனாய்,

அவளைத் திசை திருப்பும் பொருட்டு,
“அதெல்லாம் விடு! உனக்கு இப்ப என்ன கிப்ட் வேணும்னாலும் சொல்லு வாங்கித் தரேன்” என்றான்.

அவள் தாடையைத் தடவியவாறு தீவிரமாய் யோசிக்க, ‘அவசர குடுக்கையா வாய விட்டுட்டோமோ! சரி எவ்ளோ தூரம் தான் போகுதுனு பார்ப்போம்’ மைண்ட்வாய்ஸில் பேசியவனாய் அவளை அவன் பார்க்க,

“என்ன கேட்டாலும் வாங்கித் தருவியா?” எனக் கேட்டாள்.

“ஆமா அழகம்மா! உனக்கு இல்லாததா? 1000 ரூபாய் தரேன் என்ன வேணுமோ வாங்கிக்கோ” தயாள பிரபுவாய் அவன் கூற,

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள், “அதெல்லாம் எனக்குத் தெரியாது! என்ன கேட்டாலும் வாங்கித் தரேன்னு சொல்லிருக்க! எவ்ளோ காசுனாலும் வாங்கித் தந்து தான் ஆகனும்” அடமாய் உரைத்தாள்.

“போச்சு இன்னிக்கு உன் பேங்க் பேலன்ஸ்லாம் காலி ஆதவா” என வாய்விட்டு புலம்பியவனாய்,

“பாருடி மன்த் எண்டு! கோல்ட்லாம் வாங்காத! 5000 ரூபாய் வேணா தரேன்! அதுல உனக்குப் பிடிச்சதை வாங்கிக்கோ” தீவிரமாய் அவன் உரைக்க,

“சரி போனா போகுது பொழச்சி போ! ஐயாயிரம் வேண்டாம் ஒரு பத்தாயிரமா கொடு” என்றாள்.

“பத்தாயிரத்துல அப்படி என்னடி வாங்க போற? உங்க வீட்டுச் செலவு முழுக்க நான் தானே பார்த்துக்கிறேன்” சற்று அதிர்வாய் அவன் கேட்க,

“என்னமோ வாங்க போறேன் உனக்கென்ன? நீ தானே எதுனாலும் வாங்கிக்கோனு சொன்ன? பத்தாயிரம் கொடு?” என்றாள் இவளும் விடாமல்.

“தர முடியாது போடி?”

“ஒரு பத்தாயிரம் கூடப் பொண்டாட்டிக்கு குடுக்க மாட்டேங்கிறே! ரியலி ஐ ஹேட் யூ போடா” பழிப்பு காட்டியவாறு உரைத்தாள்.

“நானும் ஹேட் யூ போடி” என்று சிரித்தான்.

“இது நம்ம சொல்லிக்கிற ஹேட் யூ இல்ல! நிஜமான ஹேட் யூ” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“சரிடி இப்ப என்ன பத்தாயிரம் தானே, போட்டு விடுறேன்” என உடனே கைபேசி எடுத்துப் பணப் பரிமாற்றம் செய்தான்.

சட்டென இவன் புறம் திரும்பியவள், “என்னடா நிஜமாவே அனுப்பிட்ட!” என ஆச்சரியமாய் இவள் கேட்க,

“உன்னைப் பத்தி தெரியாதாடி! அநாவசியமா இது வரை நீ செலவு செஞ்சது இல்லயே! வேஸ்ட்டா எதுவும் வாங்க மாட்டனு தெரியும்! வாங்கினாலும் பாப்பாவுக்குத் தான் ஏதாவது வாங்குவ! எது வாங்கினாலும் என்கிட்ட சொல்லாம உன்னால இருக்க முடியாதுனும் தெரியும்” அவன் அவளை உணர்ந்து கூறுயதில், மனம் மகிழ்ந்தவளாய் அவனை அணைத்து கொண்டாள்.

“நான் சும்மா தான்டா கேட்டேன்! நீ அனுப்ப மாட்டேன்னு நினைச்சேன்! நீ அனுப்பிட்டு இப்படி டயலாக்கும் சொன்னதுல விழி ஹேப்பி! லவ் யூ புருஷா” என அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

ஊடல் கூடலாகி இனிதாய் கழிந்தது அன்றைய பொழுது.

மறுநாள் காலை அவன் தனது இல்லத்திற்குக் கிளம்பி கொண்டிருக்க, அவனிடம் தேநீரை கொண்டு வந்து கொடுத்தவளிடம், தேநீர் கோப்பையை வாங்கியவாறே, ” விழி அந்த எல் ஐ சி பணத்தைக் கட்டிட்டியா?” எனக் கேட்டான்.

“இல்லடா! இனி தான் கட்டனும்” என்றாள்.

“சரி மறக்காம கட்டிடு” என்று காபியை சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தான்.

“சரி பணம் அனுப்பி விடு” என்றவள் கூறவும்,

“அது தான் நேத்துப் பத்தாயிரம் அனுப்பினேனே!” கண் சிமிட்டி அவன் உரைக்கவும்,

விழிகள் விரிய அவனைப் பார்த்த விழி, “அடப்பாவி! ப்ராடு பையா! அதானே பார்த்தேன்… என்னடா கேட்டதும் கொடுத்துட்டானேனு மைல்ட்டா டவுட் வந்துச்சு! யோசிக்க விடாம அதுக்குள்ள பேசி கீசி என்னைய மயக்கி…” என மேலும் ஏதோ கூற வந்தவளின் முகம் நாணம் பூக்க அதோடு பேச்சை அவள் நிறுத்த,

“ஹ்ம்ம் மயக்கி என்ன செஞ்சேனாம்?” குறும்பாய் அவன் கேட்க,

“ச்சீ போடா” என அவனிடமிருந்த கோப்பையை வாங்கிக் கொண்டு ஓடி விட்டாள். அவனின் சிரிப்பு அவளைப் பின் தொடர்ந்தது.

— தொடரும்