நறுங்காதல் பொழிபவனே – 3

“அப்பா எனக்கு வேலை கிடைச்சிடுச்சு!” அலுவலகத்தில் இருந்து வீடு வந்திருந்த வேல்விழி, வாசலினருகே இருந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்த சண்முகத்திடம் பூரிப்புடனான மகிழ்வுடன் உரைத்திருந்தாள்.

அந்த நேர்முகத் தேர்வின் முடிவை மின்னஞ்சலில் தெரிவிப்பதாய் உரைத்திருந்தார் அந்நிறுவனத்தின் ஹெச் ஆர். சென்னையில் இருந்து வந்து ஒரு வாரமான போதும் மின்னஞ்சல் ஏதும் வராது இருந்ததில் கவலையுடன் சுற்றி திரிந்தவளுக்கு இந்த மின்னஞ்சலை கண்டதும் மகிழ்வில் கண்ணீரே வந்துவிட்டது.

இன்னும் ஒரு வாரத்தில், தான் சென்னை சென்று அந்தப் பணியில் சேர்ந்துவிட வேண்டுமெனப் பெற்றோர்களிடம் உரைத்து, அங்குத் தங்குவதற்கான ஏற்பாட்டை எல்லாம் செய்ய ஆரம்பித்தாள்.

ரேவதியின் பிஜியிலேயே வேறோர் அறை தான் கிடைத்தது அவளுக்கு. முதல் நாள் வேலைக்குச் செல்வதில் மிகுந்த சிரத்தையுடன் தன்னை அலங்கரித்துக் கொண்டு கிளம்பினாள்.

ரேவதி சற்று சீக்கிரமாய் அவளது அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென முன்பே கிளம்பியிருக்க, அன்று காலை தனியாய் தனது அலுவலகத்தை நோக்கி பேருந்தில் பயணித்திருந்தாள் வேல்விழி.

கூட்ட நெரிசலில் தட்டு தடுமாறி தனக்கு கிடைத்த இருக்கையில் அவள் அமர்ந்து பயணித்திருந்த சமயம், ஒரு நிறுத்தத்தில் ஏறினான் ஆதவன். அவனுடன் ஒரு பெண்ணும் ஏறினாள்.

இவர்கள் இருவரும் பயணச்சீட்டினை எடுத்துவிட்டு நின்று கொண்டு தங்களது ப்ராஜக்ட் பற்றிக் கேலியாய் பேசி சிரித்துக் கொண்டிருந்த சத்தத்தில் தான் ஆதவனைப் பார்த்தாள் வேல்விழி.

வேல்விழியின் விழிகள் அவனை விட்டு அகலாது நிலைத்து நின்றன. இயல்பாய் அவன் அப்பெண்ணுடன் பேசி சிரிப்பதை வியப்பாய் பார்த்திருந்தாள் அவள்.

‘இவனைப் பத்தி நான் நினைச்சதுலாம் தப்பா இருந்திருக்கே! ஒரு வேளை இப்ப அப்படி மாறிட்டானோ?’ அவனைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி இருந்தாள் இவள்.

அவர்கள் இருவரும் இறங்கிய நிறுத்தத்தில் தான் அவளும் இறங்கினாள். அவர்களின் பின்னேயே நடந்தவளுக்கு, ஆதவனின் அலுவலகமும் தனது அலுவலகத்தின் அருகில் இருப்பதை அறிந்து கொண்டதில் ஏதோ இனம் புரியாத ஓர் ஆசுவாசம் எழுந்தது.

இவ்வாறாக நாளுக்கு ஒரு முறையேனும் செல்லும் பொழுதோ அல்லது வரும் பொழுதோ பேருந்தில் அவனைக் கண்டுவிடுவாள். அவனைக் காணாத நாட்களில் மனதில் ஒரு வெறுமை சூழ்ந்து அன்றைய நாளில் தனது உற்சாகம் குறைவதையும் உணர்ந்திருந்தாள். ஏதோ ஒன்று அவனிடம் தானாய் சென்று பேச தடுத்தது அவளுக்கு! முக்கியமாய் அந்தக் குமார் போன்று இவன் தன்னை அவமதித்திடுவானோ என்றொரு பயம் அவளைச் சூழ்ந்திருந்தது.

ஒரு நாள் தானாக அவனே வந்து இவளிடம் பேசும் சூழலும் அமைந்தது.

ஒரு நாள் திங்கட்கிழமை காலை ஆறு மணியளவில் அவசரம் அவசரமாய்த் திருச்சியில் இருக்கும் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தாள் வேல்விழி. அவள் போக வேண்டிய ரயிலின் நிற்குமிடத்திற்கு ஓடி வந்தவள், அங்கு ரயில் இன்னும் வரவில்லை என்பதைக் கண்டதும் ஆசுவாசமடைந்தவளாய் மூச்சு வாங்கியபடியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்த மறுநொடி அவளின் முன் தண்ணீர் பாட்டிலை நீட்டி கொண்டு ஒரு கை தெரிய, ஓடி வந்ததின் பலனாய் நா வறண்டிருக்க, யார் எவரெனக் காணாது அவளும் அப்பாட்டிலை வாங்கி நீரை அருந்திய பிறகே அதை வழங்கியவனைத் திரும்பி பார்த்தாள். அவளின் விழிகள் வியப்பில் விரிந்தன. ‘ஆதவன்’ என மொழிந்தது அவளின் மனது.

இவள் ஓடி வரும் பொழுதே கண்டிருந்த ஆதவன், மூச்சிரைக்கத் தன்னருகில் அவள் அமரவும் நீரை அளித்திருந்தான்.

அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவளாய், “தேங்க்ஸ் ஆதவன்” என்றாளவள். அவளின் முகமும் மனமும் அவனைக் கண்டதில் பூரித்துப் போனது.

பேசவெல்லாம் வேண்டாம்! அவனைக் கண்டாலே போதும் எனத் தினமும் அவனைத் தொடர்ந்திருந்தவளுக்கு, இத்தனை அருகில் அவனைக் காண்பது, அதுவும் அவனாகவே அவளுக்கு உதவியது என அனைத்தும் சேர்த்து நெஞ்சை படபடக்கச் செய்தது.

ஆனால் அவளின் ஆதவன் என்ற அழைப்பில், நெற்றி சுருங்க யோசித்த இவனோ, “என்னைய முன்னாடியே தெரியுமா உங்களுக்கு?” எனக் கேட்டான்.

‘என்னது என்னைய தெரியலையா?’ தான் அவன் நினைவில் இல்லை என்பதில் சுருங்கி போனது அவளின் முகம்.

‘இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி சீன் போடுறானா?’ எண்ணியவளாய்,

“நான் சென்னைல பஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன்! உங்க ஃப்ரண்ட் கூட டைடில் பார்க் ஸ்டாப்ல ஏறுவீங்க! உங்க ஃப்ரண்ட் உங்க பெயரை சொல்லி கூப்பிடுறதை வச்சி தெரிஞ்சிக்கிட்டேன்! தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன்” எனக் கூறி திரும்பி கொண்டாள்.

அவனிடம் நன்றி கூறும் பொழுது அவளிடம் இருந்த உற்சாகம், தான் கேட்ட கேள்வியில் முற்றிலுமாய்த் தொலைந்திருந்ததைக் கண்டவனின் இதழில் குறுநகை ஒட்டிக் கொண்டது.

அவள் செல்ல வேண்டிய ரயில் வர, இவனும் எழுந்து தான் ஏற வேண்டிய பெட்டியை தேடி நடக்க ஆரம்பித்தான்.

‘ஓ இவனும் சென்னைக்குத் தான் போறானோ?’ மனதினுள் நினைத்தவளாய் தான் ஏற வேண்டிய பெட்டியின் எண்ணை வைத்து பார்த்து கொண்டிருந்தாள்.

“என்ன நிக்கிறீங்க? எந்தக் கோச் உங்களுக்கு?” எனக் கேட்டவாறு அவளுடன் நடந்தான்.

அவள் பெட்டியின் எண்ணை கூற, “எனக்கும் அது தான்! வாங்க! சேர்ந்தே தேடுவோம்” கூறியவாறு அவன் முன்னால் நடக்க, ஒரு கூடை ஐஸ் கட்டியை தலையில் கொட்டிய ஜில்லிப்பில் கண்கள் மின்ன வானத்தில் பறந்திருந்தாள் இவள்.

‘ஹய்ய்யா! இன்னிக்கு இவன் கூடத் தான் டிராவல் பண்ண போறோமா? அவன் என்னைய மறந்திருந்தாலும் ஞாபக படுத்துறது தான் இன்னிக்கு என்னோட வேலை’ தனக்குள்ளேயே பேசியவாறு அவனைப் பின் தொடர்ந்தாள்.

இருவரும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருக்க, ரயில் புறப்பட்டது. உடனே கையில் ஏதோ புத்தகத்தினை எடுத்து அதில் அவன் மூழ்கி போக,

‘வாவ் இவனுக்கு நம்மளை மாதிரியே புக் படுற பழக்கம் இருக்கா?’ மைண்ட்வாய்ஸில் பேசியவாறு அவனைப் பார்த்திருந்தாள்.

‘ரொம்பச் சாதாரணப் பையன் தான்! ஆனா ஏன் அவனைப் பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு’ பதிலில்லா இக்கேள்வியுடனேயே அவனை நோக்கியிருந்தாள் அவள்.

சட்டென நிமிர்ந்தவன், “எதுவும் வேணுமாங்க?” எனக் கேட்டான்.

அவன் சட்டென நிமிர்ந்ததில் முகத்தை வேறுபுறம் திருப்பியவளுக்கு நெஞ்சம் குறுகுறுக்க, ‘இல்லை’ என அசைத்தாள்.

“இல்ல என்னையவே பார்த்துட்டு இருந்த மாதிரி இருந்துச்சு! அதான் கேட்டேன்” என்றான்.

இதனைக் கூறும் போது அவனின் கண்கள் சிரித்ததோ!

“இல்லையே” என முகப் பாவனையிலும், தலை அசைத்தலிலுமாய்க் கூறியவள், அதற்கு மேலும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தால், தன்னைக் கண்டு கொள்வான் எனப் பயந்தவளாய், கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்.

அதே இதழோர குறுநகையுடன் அந்தப் புத்தகத்தினுள் ஆழ்ந்தான் அவன்.

அவளின் மூடிய விழிகளுக்குள் அலைபுறுதல் தெரிந்தன. ‘யாரிவன் எனக்கு? ஏன் இவனைக் கண்டாலே என் நாடி நரம்பெல்லாம் ஜிவ்வென்று பரவசம் ஆகிறது? அவனை மணந்து கொள்ளும் எண்ணமுமில்லை! இது காதலும் இல்லை! ஆனால் அவனைப் பார்க்க பிடித்திருக்கிறது! ரசித்துக் கொண்டே இருக்கப் பிடிக்கிறது! அவனின் நலனில் மனம் அக்கறை கொள்கிறது! டீன் ஏஜ்ஜில் வர வேண்டிய உணர்வுகளெல்லாம் இப்பொழுது வந்து தொலைகிறதே! மூன்று வருடங்களாய் தினந்தோறும் பார்க்கும் பொழுது வராத ஈர்ப்பு இன்று எவ்வாறு வந்தது?’ அவளின் மனது அவனைக் கண்ட நாளிலிருந்து நடந்த விஷயங்களை ஓட்டி பார்க்க செய்தன.

அன்று அவன் அன்னையுடன் அவனைக் கண்ட பிறகு தான் தன்னுள் இத்தனை மாற்றம்! அவனைப் பற்றி என் மனதின் எண்ணங்களை எல்லாம் உடைத்த நிகழ்வு அது! அவனின் அன்னையிடம் அவன் காண்பித்த அன்பு! தினமும் அவளுடன் பயணிக்கும் அந்தப் பெண்ணைப் பாதுக்காப்பாய் அவன் கவனித்துக் கொண்ட அந்தக் கனிவு! அவனின் இச்செயல்கள் தான் தன்னை அவனிடம் ஈர்த்து இன்று அவனின் அண்மையைப் பரவசமாய் உணர செய்திருக்கிறது என அலசி ஆராய்ந்து,

‘சரி நல்ல பையன் தான்! அதுக்காக அவனைப் பார்க்கிறப்பலாம் இப்படிப் பூரிச்சு பொங்கனும்னு அவசியம் இல்லையே! இனி அவனைப் பார்க்கவே கூடாது’ அவளொரு தீர்மானத்திற்கு வந்த நேரம்,

“ஹை ஆதவ்” என்றொரு பெண் குரல் கேட்க, பட்டெனக் கண் திறந்து பார்த்தாள் வேல்விழி.

தினமும் அவனுடன் பயணிக்கும் அந்தப் பெண் தான் அவனெதிரே நின்று பேசி கொண்டிருந்தாள்.

வேல்விழி அவளின் முதுகை தான் பார்த்தாள். தினமும் அப்பெண்ணைக் காண்பதில் முதுகையும் அவளின் குரலையும் வைத்தே அப்பெண் தான் என யூகிக்க முடிந்தது.

அவனெதிரே நின்று அவள் பேச, அவனோ அவளின் குடும்பம் மற்றும் பயணம் என ஏதேதோ கேட்டு விசாரிக்க, இங்கு இவளுக்குப் பொசசிவ் உண்டானது.

தன்னிடம் ஒரு வார்த்தை எதைப் பற்றியும் பேசாதவன், இவளுடன் இத்தனையாய் அங்கலாய்த்து பேசுவது அவளுக்கு பொசசிவ்வை உண்டு பண்ணியது. அவனை இனி பார்க்கவே கூடாது எனத் தான் முடிவு எடுத்தது எல்லாம் மறந்தே போயிற்று அவளுக்கு. ஏதேனும் செய்து தான் அவனிடம் பேசிட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கி எழுந்தது.

அப்பெண்ணுடன் பேசியிருந்தாலும் அவனின் பார்வை அவ்வப்போது எதிரில் எங்கேயோ தொட்டு மீள்வதைக் கண்ட அப்பெண், இவனின் பார்வை யாரை தொட்டு வருகிறது எனக் காண திரும்பி பார்த்தவளுக்கு வேல்விழியைக் கண்டதும் அதிர்ச்சி உண்டாக,

“ஹே ஆதவா! உன் அழகம்மாகிட்ட லவ்வை சொல்லிட்டியா? என்கிட்ட சொல்லவே இல்ல இவங்களைக் கூடக் கூட்டிட்டு வர்றனு” வேல்விழியைப் பார்த்தவாறு சத்தமாய் அவள் கூறியதில்,

இவனோ அப்பெண்ணை நோக்கி கண்களைச் சுருக்கி அச்சோ எனும் பாவனையில் தலையில் கை வைத்து இல்லையென என அசைக்க,

‘என்னடா நடக்குது இங்க?’ எனத் திருதிருவென முழித்தவாறு வேல்விழி இருவரையும் பார்க்க,

தான் ஏதோ சொத்தப்பி விட்டோம் என அவனின் பாவனையில் புரிந்த கொண்ட அப்பெண்ணோ நிலைமையைச் சீராக்க எண்ணி,

“ஹை வேல்விழி! ஐம் அக்ஷயா! நைஸ் டு மீட் யூ” எனக் கையைக் கொடுக்க,

‘இந்தப் பொண்ணுக்கு எப்படி என் பெயர் தெரியும்? அப்ப என்னை யாருனு தெரியாத மாதிரி இவன் பார்த்ததுலாம் நடிப்பா’ அவனை முடிந்த மட்டும் முறைத்தவாறு, இவளிடம் கை குலுக்கினாள்.

‘அய்யோ மொத்தமா சொதப்பிட்டியே அக்ஷூ’ என நெற்றியுடன் சேர்த்து கண்களையும் மூடியவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டான் ஆதவன்.


“என்னைய எப்பவும் அழ வச்சிட்டே இருக்க நீ! ரொம்பப் பொறுப்பான பையன் நீனு நினைச்சது எவ்ளோ பெரிய தப்புனு அடிக்கடி நிரூபிக்கிறடா நீ! அன்னிக்கு ரெயில்வே ஸ்டேஷன்ல எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்ததைப் பார்த்துட்டு, எவ்ளோ பொறுப்பா டிரெயின் வரதுக்கு முன்னாடியே வந்து உட்கார்ந்திருக்கான்னு நினைச்சேன்! அம்மா மேல பாசமா இருக்கான், பெத்தவங்களை எவ்ளோ நல்லா பார்த்திருக்கிறான், அப்ப கட்டிக்கிட்ட பொண்ணையும் நல்லா பார்த்துப்பான்னு நினைச்சேன்! நீ பெத்தவங்கள பார்த்துக்கிறதுல எந்தக் குறையும் வைக்கிறதில்ல தான் ஆனா பொண்டாட்டினு நான் ஒருத்தி இருக்கிறதை நினைக்கிறதே இல்ல! பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டானு என்னைய மறந்துட்டு உங்க வீட்டுல ஜாலியா சுத்திட்டு இருக்கத் தானே!”

கண்களில் எட்டி பார்க்கவிருந்த நீரை உள்ளிழுத்தவாறு ஆதவனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள் வேல்விழி.

“உங்கப்பா மேல அம்மா செம்ம கோபமா இருக்கேன்!” குழந்தையிடம் கூறியிருந்தாள்.

இரவு 12 மணியிலிருந்து அவனின் வாழ்த்துக்காகக் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த வேதனை அவளின் குரலில்.

தனது பிறந்தநாளன்று வருவேனென வாக்களித்திருந்தவன், மதியம் 12 தாண்டியும் கைபேசியில் அழைத்து வாழ்த்தவுமில்லை, நேரில் வரவுமில்லை என்ற கோபமும் ஆதங்கமும் அவளை இவ்வாறு பொரிந்து தள்ள வைத்தது.

“அடியேய் அழகம்மா! என்ன தான்டி உன் பிரச்சனை! வாய்ஸ் மெசேஜ் அனுப்பாதனு எத்தனை தடவை உனக்கு சொல்லிருக்கேன்! இங்க நான் ஆபிஸ் கால்ல பேசுவேனா இல்ல உன் வாய்ஸ் மெசேஜை கேட்பேனா…”

அவளைக் காணவெனப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தவன், இதழில் அதே குறுஞ்சிரிப்புடன் இவ்வாறாய் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அவளை உசுப்பேற்றி விளையாடி கொண்டிருந்தான்.

— தொடரும்