நறுங்காதல் பொழிபவனே – 2

கொரோனா எனும் பெரும் தொற்று இல்லாத காலம் அது. மக்களெல்லாம் சுதந்திரமாய் வெளியில் சுற்றி திரிந்த காலம் அது.

திருச்சியில் இருக்கும் வேல்விழியின் இல்லத்தில் பெண் பார்க்கும் படலம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

மகிழுந்தில் வந்திறங்கியது அந்தக் குடும்பம். தாய் தந்தையுடன் அவன் மட்டும் என வந்திருந்த அக்குடும்பத்தினரை வரவேற்று நின்றார் வேல்விழியின் தந்தை சண்முகம்.

வீட்டின் வாசலில் சிறிய கடையாய் அமைந்திருந்த சண்முகத்தின் மெக்கானிக் ஷெட்டை சற்று வெறுப்பாய் தான் பார்த்தான் அந்த மாப்பிள்ளை. ஆனால் அவனின் தாய் தந்தையரின் முகத்திலோ மட்டற்ற மகிழ்ச்சி.

அவர்களின் இல்லத்தில் நுழைந்ததும் மகேஸ்வரியும் சண்முகத்துடன் இணைந்து இவர்களை வரவேற்று அமர பணித்தார்.

தனது அறையில் அமைதியாய் அமர்ந்து அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் வேல்விழி. தற்போது திருமணம் வேண்டாம் எனப் பலமுறை கூறியும் கேளாது இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கும் தந்தை மீது கோபம் பொங்கி வழிந்தது அவளுக்கு.

வேல்விழியை அழைத்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் சண்முகம். அனைவருக்கும் காபியை வழங்கினார் மகேஸ்வரி.

சண்முகமும் அந்த ஆடவனின் தந்தையும் பால்ய சிநேகிதர்கள் எனவும் சென்ற வாரம் தான் நெடுநாட்கள் கழித்துச் சந்தித்ததாகவும், அவரின் விருப்பத்தின் பேரில் இந்தப் பெண் பார்க்கும் படலம் திடுமெனத் திட்டமிடப்பட்டதாகவும் கூறி தங்களின் பால்ய கதைகளை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த ஆடவனை நிமிர்ந்து பார்த்தாள் வேல்விழி. சிவந்த மேனியனாய் அலை அலையான கேசத்துடன் நெடு உயரமாய் அவனின் உடுப்பு முதல் கடிகாரம் வரை அனைத்தும் அவனின் ஆடம்பரத்தை பறைசாற்றியது.

இவளை பார்த்த அவனின் விழியில் ஏளனம் தெரிந்ததோ? வேல்விழிக்கு ஏனோ அவனைத் துளியும் பிடிக்கவில்லை! தங்களின் பொருளாதாரச் சூழலுக்கு அவன் பொருத்தமானவனல்ல என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

எவ்வாறேனும் இச்சம்பந்தந்தை நிறுத்திவிட வேண்டும் என அவள் மனதினுள் எண்ணி கொண்டிருந்த சமயம், “மாப்பிள்ளையும் பொண்ணும் தனியா பேசிக்கட்டும்” எனக் கூறி சண்முகமே வேல்விழியிடம் அவனை அவளது அறைக்கு அழைத்துச் செல்லுமாறு உரைத்தார்.

சுற்றிலும் வீட்டை நோட்டமிட்டவாறே சென்ற அந்த ஆடவனின் முகத்தில் பெருத்த அதிருப்தி!

அவளின் அறைக்குச் சென்றதும் அவளை ஆழ்ந்து நோக்கியவன், “ஹ்ம்ம் பணக்கார பையனா தெரியுறான்! எப்படியாவது மடக்கி போட்டுடுனு சொன்னாரா உங்கப்பா” என்றான்.

அவள் வாயினாலேயே இந்தத் திருமணம் வேண்டாமென உரைக்க வைப்பதற்காக இவ்வாறாய்ப் பேசியிருந்தான் அவன்.

முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் வந்த அவனின் இந்தக் கேள்வியில் வெகுவாய் அதிர்ந்து அவனை அவள் பார்க்க,

“என் அழகு என்ன? என் அந்தஸ்து என்ன? பட்டிக்காட்டு பொண்ணு மாதிரி இருக்கிற நீ எனக்கு எப்படிச் செட் ஆவனு உங்கப்பா கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாரா! எங்கப்பா தான் ஏதோ நட்பு பாசம்னு கேட்டா.. வேண்டாம்… எனக்கு அந்தத் தகுதியில்லனு தானே சொல்லிருக்கனும் உங்கப்பா. மாநிறம் கூட இல்லை நீ! என் இடுப்பு உயரம் இருப்பியா? ஏதோ எம் எஸ் ஸி படிச்சேன்னு சொன்னாங்க. அதாவது முடிச்சியா இல்லையா? எனக்குப் பிடிக்கலைனு எவ்ளவோ சொன்னேன் கேட்டா தானே.. எங்கப்பா கம்பல்ஷன்ல தான் இங்க வர வேண்டியதா போச்சு”
வாய்க்கு வந்தவாறு பேசி கொண்டே போனவன் தனது விருப்பமின்மையையும் போகிற போக்கில் உரைத்திருந்தான்.

கோபத்தின் உச்ச நிலைக்குச் சென்றிருந்தவள், “ஹலோ மிஸ்டர்! வாயை மூடுறீங்களா கொஞ்சம். இந்தக் கல்யாணம் பிடிக்கலைனு உங்க அப்பாவை எதிர்த்து சொல்ல தைரியம் இல்லாம… இங்க என்னையும் என் குடும்பத்தையும் குறை சொல்ல வந்துட்டியா?” காட்டமாய்க் கத்தினாள்.

அந்த அறையில் இருந்து சட்டென வெளி வந்தவளின் பின்னேயே அந்த ஆடவன் வர, அனைவரையும் ஒரு நொடி பார்த்தவள், “எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல. இவரைச் சுத்தமா பிடிக்கலை” அவன் முகத்துக்கு நேரே விரலை சுட்டி உரைத்தாள்.

அனைவரும் ஸ்தம்பித்து எழுந்து நிற்க, பதறிய சண்முகமோ, “என்னமா ஏன்மா அப்படிச் சொல்ற! உன் வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு தானே இவ்ளோ பெரிய இடத்துல சம்பந்தம் செஞ்சேன்! என் நண்பனை அவமதிக்கிற மாதிரி ஆகிடும்மா” மகளின் அருகே வந்து அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினார் அவர்.

“இந்தா நிக்கிறாரே பெரிய மனுஷனோட பையன், இவருக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல. இதை அவரோட அப்பாகிட்ட சொல்ல பயந்துட்டு இங்க வந்து நம்மள குறை சொல்லிட்டு இருக்காரு! என்னைய பார்த்ததும் பயந்தாங்கொள்ளி பொண்ணு, தைரியமா எல்லார் முன்னாடியும் பேசி மானத்தை வாங்கமாட்டா… ஆனா எப்படியும் அவ அப்பாகிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவானு நினைச்சாரு போல. நம்ம நிறுத்தின மாதிரி இருக்கனும் இந்தக் கல்யாணம்னு ப்ளான் செஞ்சிட்டு வந்திருப்பாரு போல” வெறுப்பாய் அவனை நோக்கி அவள் கூறவும், ஆத்திரத்தில் ஏதோ சீற்றமாய் பேச வாயெடுத்தவனைத் தடுத்த அவனின் தந்தை அனைவரிடமும் மன்னிப்பு கோரி அவனை வெளியே இழுத்து சென்றார்.

“ஏன்டா நீ காதலிச்ச பொண்ணைக் கல்யாணம் செய்ய நாங்க ஒத்துக்கலைனு இந்தக் கல்யாணத்தை நிறுத்த இப்படி ப்ளான் பண்ணிட்டு வந்தியா!” அவரின் மகனிடம் அமைதியாய் அவர் பேசிக் கொண்டே சென்றது அனைவரின் காதினிலும் விழுந்தது.

இதனால் தான் அந்தஸ்து பாராமல் தன் மகளை அவனது மகனுக்கு உடனே மணம் முடித்து வைக்க முடிவு செய்தானோ எனத் தோன்றியது சண்முகத்திற்கு.

அன்றிரவு வரை யாரும் வேல்விழியிடம் பேசாது இருந்தனர்.

இரவு வேளையில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தினர்.

“ஏன்டி கல்யாணம் செஞ்சிக்கிற எண்ணம் இருக்கா இல்லையா உனக்கு? இப்படி வரதைலாம் ஏதாவது குறை சொல்லி கலைச்சிக்கிட்டே இருக்க” மகேஸ்வரி உணவருந்திக் கொண்டே கேட்டார்.

இன்னும் அவன் பேசியதை எண்ணி ஆத்திரத்தில் இருந்த வேல்விழி, “அம்மா அந்தப் பையன் பேரு என்ன?”

“ஏன்டி கேட்குற?”

“சொல்லுமா”

“உன் அப்பாக்கு தான் தெரியும்”

“அப்பா! அந்தப் பையன் பேரு என்னப்பா?”

அது வரை இவர்களின் பேச்சை கேட்டவாறு உண்டு கொண்டிருந்த சண்முகம், அமைதியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “குமார்” என்றார்.

“இனி குமார்ன்ற பேருல கூட எந்த வரன் வந்தாலும் பார்க்காதீங்கப்பா! இர்ரிட்டேட்டிங் ஃபெல்லோ” முகத்தைச் சுழித்துக் கொண்டு கூறினாள் அவள்.

“அவன் என்ன பேசினான் உன்கிட்ட?” சண்முகம் கேட்கவும், அனைத்தையும் கூறி முடித்தவளின் கண்கள் கலங்கியது.

“நான் என்ன அவ்ளோ மோசமாவாப்பா இருக்கேன்! ஒரு நிமிஷம் கூனிக்குறுகி போனா மாதிரி இருந்துச்சு. ஆனா அடுத்த நிமிஷம் எவனோ சொல்றான்னு நான் ஏன் கூனி குறுகனும். எல்லார் முன்னாடியும் இவன் எனக்கு வேண்டாம்னு சொல்லனும்னு வந்துச்சு பாருங்க ஒரு ஆத்திரம்! அதனால தான் அப்படி வந்து படபடனு பொரிஞ்சு தள்ளிட்டேன்”

மகளின் மனநிலை தாய் தந்தையர் இருவருக்குமே புரிந்தது. அனைவரும் கை கழுவி எழும்பவும் தந்தையிடம் வந்த மகள்,

“அப்பா ப்ளீஸ்! எனக்குனு ஒரு லட்சியம் இருக்கு. இப்ப பிபிஓல தானே வேலை பார்க்கிறேன். இந்த ஊரை விட்டு என்னை நீங்க எங்கேயும் அனுப்ப மாட்டேன்னு சொன்னதால தான் இங்கிருக்கப் பிபிஓல சேர்ந்தேன். எனக்கு நான் ஐடில வேலை செய்யனும்னு தான் ஆசை. என் சம்பளம் நம்ம குடும்பத்துக்கும் இப்ப தேவை தானேப்பா!  நான் படிச்சதுக்கான லோன் வேற கட்ட வேண்டியது இருக்கு தானே! ஒரு வருஷம் வேலை பார்த்த பிறகு கல்யாணம் செஞ்சிக்கிறேன்ப்பா! நாளைக்கு மறுநாள் சென்னைல ஒரு ஐடி கம்பெனி இன்டர்வியூ வந்திருக்கு. நான் போய்ட்டு வரேன்ப்பா. ப்ளீஸ்ப்பா” கெஞ்சலாய் கேட்டாள்.

இன்று நடந்த நிகழ்வு அவரையும் பாதித்திருக்க, மகளின் ஆசைக்காக அனுமதி அளித்தார் அவர்.


வேல்விழி தான் சென்னையில் காலை தங்கி தயாராகிச் செல்வதற்கு அந்த மென்பொருள் நிறுவனத்தின் அருகில் தங்கும் இடம் வேண்டுமெனத் தனது கல்லூரி தோழியிடம் கூற, அவளது தோழியின் தோழி ரேவதி மத்திய கைலாஷ் பகுதியிலுள்ள பிஜியில் தங்கியிருப்பதாய் உரைத்து அவளது கைபேசி எண்ணை வழங்கினாள்.

காலை சென்னை வந்திறங்கிய வேல்விழி, மத்திய கைலாஷில் ரேவதி தங்கியிருக்கும் பிஜிக்கு சென்று குளித்து முடித்து நேர்முகத் தேர்வுக்காகக் கிளம்பினாள். ரேவதியும் அவளின் அலுவலகத்திற்குக் கிளம்பினாள். இருவரும் சோலிங்கநல்லூரில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததினால் ஒன்றாய் பயணிக்க முடிவு செய்தனர்.

ரேவதி தங்கியிருந்த பிஜியில் தங்குவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. உணவு வழங்கப்பட மாட்டாது. ஆகையால் ரேவதி வழமையாய் உண்ணும் சிறிய அளவிலான உணவகத்திற்கு வேல்விழியை அழைத்துச் சென்றாள்.

வெளியில் நிறைய நபர்கள் கையில் தட்டினை ஏந்தி உணவருந்த, உணவகத்தின் உள்ளே ஆறு நாற்காலிகளும் மூன்று மேஜைகளும் இருக்க, அதில் ஓரமாய் இருவர் மட்டுமே அமரும் வகையில் இருந்த மேஜைக்கு வேல்விழியை அழைத்துச் சென்றாள் ரேவதி.

“இங்க கம்மி விலையில டேஸ்ட்டான டிபன் சாப்பிடலாம். நான் தினமும் இங்க தான் சாப்பிடுவேன் வேல்விழி” என்றாள் ரேவதி.

தங்களுக்கான உணவை ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்த பெண்கள் இருவரும் தங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, வேல்விழியின் பார்வையோ நிமிடத்திற்கு ஒரு முறை அவளெதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி மீது படிந்து மீண்டது. அப்பெண்மணியும் அவரது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது மகனின் பேச்சுகளும் தான் அவளின் செவியைத் தீண்டி கருத்தை கவர்ந்தது.

அப்பெண்மணியின் முகத்தை நோக்கியவாறு இவள் அமர்ந்திருக்க, அவரது எதிரில் அமர்ந்திருந்த அவரது மகனின் முதுகை தான் இவளால் காண முடிந்தது.

அந்தத் தாயும் மகனும் தங்களுக்காய் முதலில் இரண்டு இட்லியை ஆர்டர் செய்திருந்தவர்கள் அதன் பிறகு பேசிய பேச்சை தான் இவள் கவனித்திருந்தாள்.

“அம்மா உனக்கு வெங்காயத் தோசை பிடிக்கும்ல. அடுத்து அதை ஆர்டர் செய்யலாம்” அந்த மகன் தாயிடம் உரைக்க,

“வேண்டாம்டா! எனக்கு இதுவே போதும்! உனக்கு ஆர்டர் பண்ணிக்கோ! இந்த இரண்டு இட்லி உனக்கு எந்த மூலைக்குப் பத்தும்” அந்தப் பெண்மணி பரிவாய் பேச,

“அதெல்லாம் உன்னால சாப்பிட முடியும்! முடியலைனா பாதி நான் சாப்பிடுறேன். உனக்கு ஒரு ஆனியன் ஊத்தப்பம். எனக்கு ஒரு பொடி தோசை” அந்தப் பெண்மணி வேண்டாம் எனப் பலமுறை தடுத்தும் ஆர்டர் செய்திருந்தான்.

வெங்காய ஊத்தாப்பத்திற்கு முன்பாகவே இவன் கேட்டிருந்த பொடி தோசை வந்திருக்க, அதில் பாதியை பிய்த்து தனது அன்னையின் தட்டில் வைத்தவனை வேண்டாமெனக் கூறி அவர் முறைத்து பார்க்க, அவன் ஊட்டி விட வருவது போல் அவரது வாய்க்கருகே தோசையைக் கொண்டு செல்ல, “அய்யோ படுத்துறானே! நானே சாப்பிடுறேன்டா” என வாய்விட்டு புலம்பியவாறு தோசையைச் சாப்பிட ஆரம்பித்தார்.

அவரின் புலம்பலில் வாய்விட்டுச் சிரித்திருந்தான் இவன்.

அந்த அன்னையின் முகத்தில் இந்தப் புலம்பலையும் தாண்டி அத்தனை பெருமிதம்! கண்களில் அத்தனை பளபளப்பு!

அடுத்து அவருக்கு வந்த தோசையைப் பிய்த்து மகனுக்கு வைத்தவர், தன்னால் இயன்ற வரை உண்டு விட்டு மீதியை மகனிடம் கொடுத்து விட்டார்.

அந்த அன்னையின் பார்வை வாஞ்சையாய் மகனை வருடிக் கொண்டிருந்தது.

அங்கு ரேவதியின் பேச்சை சற்றும் காதில் வாங்காது இக்காட்சியினை ரசித்துப் பார்த்திருந்த வேல்விழியை உலுக்கினாள் ரேவதி.

“நான் பேசுறதை கேட்காம அங்க என்ன அவளோ ஆர்வமா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?” சுற்றி பார்த்தவாறு கேட்டாள் ரேவதி.

“பஸ்ல போகும் போது சொல்றேன்ங்க” என்ற வேல்விழியின் விழிகள் அவர்களைத் தான் பின் தொடர்ந்தன.

அவ்விருக்கையை விட்டு எழுந்த அந்த ஆடவன் தன் தாயின் கையினைப் பற்றிக் கை தாங்கலாகக் கை கழுவும் இடத்திற்கு அழைத்துச் செல்ல, ‘அந்தம்மா கால்ல எதுவும் அடிபட்டிருக்கா?’ மனதினுள் நினைத்தவாறு அவரது கால்களை ஆராய்ந்தாள் இவள். ஆனால் அவ்வாறு ஒன்றும் தென்படவில்லை.

கை கழுவி விட்டுக் கல்லாவில் இருந்த உரிமையாளரிடம் பணத்தினை வழங்கும் போதும் அவளின் கண்கள் அவரது கால்களிலேயே இருக்க, “என்னமா கால்ல அடிப்பட்டிருக்கா?” மகனின் கை வளைவை பற்றியவாறு நின்றிருந்த அந்தத் தாயிடம் கேட்டிருந்தார் அந்த உரிமையாளர்.

“இல்லப்பா! மூட்டு வலி இருக்கு. ரொம்ப நேரம் நிக்கவோ காலை மடக்கின மாதிரி உட்காரவோ செஞ்சா வலிக்கும்” என்றார் அவர்.

தான் கேட்க நினைத்ததை அந்த உரிமையாளர் கேட்டதுலேயே அவளது கண்கள் மின்னி மேல் நோக்கி எழுந்து அவர்களைப் பார்த்தன.

அப்பெண்மணியின் மகனை கண்டு அவளது கண்கள் வியப்பில் ஆழ்ந்தன.

“இது ஆதவன் தானே! இவன் சரியான சீன் பார்ட்டி ஆச்சே! இவனுக்குள்ள இப்படி ஒரு அம்மாஞ்சியா?” மனதினுள் எழுந்த இன்பமான அதிர்வுடன் அவனைப் பார்த்திருந்தாள் வேல்விழி.

உண்டதிற்கான பணத்தினைச் செலுத்திவிட்டு அகன்றிருந்தனர் இருவரும்.

— தொடரும்