நறுங்காதல் பொழிபவனே – 19 (Final)

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவைப் புரட்டி போட்டுச் சென்றிருந்த காலமது. தனக்கு உயிரானவர்களின் உயிர் பறிப்போவதை கண் முன்னே காணும் நரகமான நாட்களைப் பலரும் கடந்து வர வேண்டிய காலமாய் இருந்தது. எங்குக் காணினும் இறப்பு செய்திகளாய், இதயம் மறுத்த நிலையில் உயிருடன் வாழ்ந்து வந்தனர் மக்கள்.

இரண்டாம் அலை முழுவதுமாய் ஓய்ந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியிருந்த ஒரு நாளில் ஆதவன் வேல்விழியின் இல்லத்தில் ஒரு வாரம் தங்குவதற்காக வந்திருந்தான்.

வேல்விழி தற்சமயம் ஐந்து மாதம் கர்ப்பவதியாய் இருந்தாள். இரண்டாம் அலை நாட்களில் வெளி செய்திகள் எதுவும் அவளை எட்டாத வண்ணமே வைத்து அவளைப் பாதுகாத்திருந்தனர்.
அவளின் தந்தை மட்டுமே மளிகை காய்கறி பொருட்கள் வாங்க வெளியே சென்று வருவார். வேல்விழியின் அறைப்பக்கமே செல்லாதிருந்தார் அவர். ஆதவனுமே அவ்வீட்டிற்கு செல்வதை முழுவதாய் நிறுத்தியிருந்தான்.

அவனை மிஸ் செய்வதாய் உரைத்து ஒரு வாரம் தன்னுடன் வந்து தங்குமாறு கூறி அவள் அடம் பிடிக்க, தற்பொழுது நாடு சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் எடுத்துக் கொண்ட பிறகு ஆதவன் வேல்விழி இல்லத்தில் ஒரு வாரம் அவளுடன் தங்க வந்திருந்தான்.

வேல்விழியின் வார்த்தை போலவே, காவ்யா பிறந்ததும் ஆதவன் வேலை செய்து கொண்டிருந்த நைட் ஷிப்ட் பிராஜக்ட் வேறொரு கம்பெனிக்குக் கைமாறிப்போனது. அதனால் இவன் பெஞ்சிற்குத் தள்ளப்பட்டான். அதாவது வேறு ப்ராஜக்ட் தேடுதலில் ஈடுபட ஆரம்பித்தான். நைட் ஷிப்ட்டில் இருந்து வெளி வந்தது மிகுந்த ஆசுவாதத்தை அளித்திருந்தது அவனுக்கு. அது தன் தேவதை மகளின் வரவால் தான் நிகழ்ந்தது என்றொரு நம்பிக்கை அவனுக்கு. அவன் அடுத்து சேர்ந்த பிராஜ்க்ட்டில் சற்று வேலைபளு அதிகமானதாய் இருந்தாலும், ஆன்சைட் இருப்பதால் ஒத்துக் கொண்டான். ஆகப் பகல் வேளையில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையில் அலுவல் வேலை பார்த்துக் கொண்டே தான் இங்குத் தங்கியிருக்கிறான்.

வேல்விழியின் அறையில் இருந்த மேஜையில் மடிகணிணியை வைத்து நாற்காலியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன்.

மெத்தையில் சாய்வாய் அமர்ந்து அவளது மாமியார் அவளுக்காக செய்து ஆதவனிடம் கொடுத்தனுப்பி இருந்த புளி சாதத்தை விரும்பி ரசித்து உண்டவாறே அவனையும் ரசித்துப் பார்த்து கொண்டிருந்தாள் விழி. சைட் அடித்துக் கொண்டிருந்தாள் எனக் கூற வேண்டுமோ!

அவள் மசக்கையாய் இருப்பதால் புளி சாதத்தை விரும்பி உண்பாளென செய்து கொடுத்தனுப்பிருந்தார் விஜயா. விழி அவளது மாமனார் மாமியாரிடம் பேசாமல் இருந்தாலும், காவ்யா பிறந்த பிறகு இரண்டு மூன்று முறையும், தற்பொழுது இவள் மாசமான பிறகு ஒரு முறையும் என வந்து பார்த்து விட்டே சென்றிருந்தனர் மனோகரும் விஜயாவும்.

உண்டு முடித்துக் கை கழுவி அமர்ந்தவளின் கண்கள் மீண்டுமாய் தன்னவனையே வட்டமடித்திருந்தன.
இத்தனை நாட்களாய் அவனைக் காணாது தவித்திருத்த தவிப்பெல்லாம் பார்வையிலேயே தீர்த்து கொள்பவளாய் பார்த்து கொண்டிருந்தாள் அவள்.

அவனைக் கண்ட நாள் முதல் இன்றைக்கு வரைக்குமான நிகழ்வுகளை மனம் இவளின் அனுமதியின்றி அசைப்போட்டது.

முதன் முதலாய் அவனின் அன்னையுடன் உணவகத்தில் அவனை சந்தித்ததை எண்ணி பார்த்தவளின் மனமோ, “ஹ்ம்ம் சரியான அம்மாஞ்சி தான்டா நீ” எனக் கொஞ்சி கொண்டது.

“அவன் அம்மாவை கவனிச்சிக்கிட்ட விதம் வச்சி தானே அவனைப் பிடிச்சிது. அத்தையும் சும்மா சொல்ல கூடாது நிஜமாவே ரொம்ப நல்ல அம்மா தான். இவ்ளோ நல்ல குணங்களோட பையனை வளர்த்துட்டு மருமகள்ங்ககிட்ட மட்டும் பக்கா மாமியாரா நடந்துகிறாங்க. அதுவும் குழந்தை விஷயத்துல தான் ரொம்ப பண்ணிட்டாங்க. ஆனா இது வரை ஆதவன் எங்க வீட்டுக்கும் சேர்த்து செலவு செய்றதை பத்தி அவங்க எதுவும் கேட்டதே இல்லயே! ஒரு வகைல பார்த்தா நல்லவங்களா தெரியுறவங்க ஒரு வகையில கெட்டவங்களா தெரியுறாங்களே! இவனும் அப்படித் தானே இருக்கான்! அம்மா அப்பா குடும்பம்னு வந்துட்டா என்னைய தானே வளைய வைக்கிறான்! எனக்காக செய்டினு சொல்லியே எனக்குப் பிடிக்கலைனாலும் அவங்க அம்மா சொல்றதை கேட்க வச்சிடுவான்! அப்புறம் வந்து கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்வான். சரி சமாதானமாவது செய்றானேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்” எண்ணப்போக்கின் வழியில் பெருமூச்சு விட்டவளாய்,

“ஹ்ம்ம் மனிதர்கள் பலவிதம் அதுல அவரவர் ஒரு விதம்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக வேண்டியது தான்”

எண்ணியவளின் சிந்தனை ஆதவனுடனான சென்னை வாழ்வில் வந்து நிற்க, அவளின் கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வந்து அவளின் சிந்தனையைக் கலைத்தது.

அதைச் சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவள் எழுந்து, “ஆதவ் இந்த டிரெஸ் அண்ட் கலர் நல்லா இருக்கானு பாருடா” எனக் கேட்டவாறு அவனருகில் வந்து நின்றாள்.

“ம்ப்ச் வேலை செய்யும் போது டிஸ்டர்ப் செய்யாதடி!” எனத் தன் பார்வையை மடிக்கணிணியில் இருந்து இம்மியளவும் திருப்பாது அவளிடம் கூறினான்.

“ஏன்டா ஒரு நிமிஷம் திரும்பி பார்த்தா என்ன குறைஞ்சா போய்டுவ?” என் அவன் தாடியை பிடித்து இழுத்தாள்.

“ஸ்ஸ் ஆஆஆ” எனக் கத்தியவாறு அவன் அவளைப் பார்த்து முறைக்க,

“ஏன்டா பாப்பா பிறக்க தான் நிறையப் பிரச்சனை இருந்துச்சுனு பிறக்கிற வரை தாடியை எடுக்க மாட்டேன்னு நேர்ந்துட்டு வளர்த்துட்டு இருந்த! இப்ப பையன் பிறக்கிறதுக்குத் தான் அப்படி ஒன்னும் பிரச்சனை இல்லையே! அப்புறம் ஏன் இப்படி தாடி வளர்த்துட்டு இருக்க?” எனக் கேட்டாள்.

இன்னும் சிறிது நேரத்திற்கு அவள் தன்னை வேலை செய்ய விடமாட்டாள் எனப் புரிந்தவனாய், அவள் நோக்கி திரும்பியவன், “அடியேய் பையன்னே முடிவு பண்ணிட்டியாடி?” சிரித்தவாறு கேட்டான்.

“ஆமா பின்ன நீ மட்டும் உன் பொண்ணை வச்சு என்னைய வெறுப்பேத்துறல! நானும் உன்னை வெறுப்பேத்த ஒரு பையன் வேண்டாமா!” எனச் சிரித்ததால் உருவான அவன் கன்னக்குழியில் கை வைத்தவாறு உரைத்தவள்,

“இதே மாதிரி கன்னக்குழி நம்ம பையனுக்கும் வந்தா ரொம்ப நல்லா இருக்கும்டா” எனக் கூறி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

ஹா ஹா ஹா என வாய்விட்டு சிரித்தவன், “ரொம்பத் தான்டி ஆசை உனக்கு! நாளைபின்ன உன் பையன் வந்து ஏன் அப்பா பாப்பாக்காக மட்டும் தாடி வளர்த்திருக்கீங்க எனக்காக வளர்க்கலையானு கேட்டா என்ன சொல்றது! நாங்க பையன் பொண்ணு இரண்டு பேருக்கும் சரி சமமா தான் செய்வோம் எல்லாத்தையும்” என்றான் கண் சிமிட்டி!

“பார்ரா! பையன் பிறந்த பிறகு உன் பொண்ணு உன்கிட்ட உரிமை சண்டை போட போறா! அப்ப என்ன செய்றனு பார்க்கிறேன்” எனக் கிண்டல் செய்து உரைக்க,

அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் இடையைச் சுற்றி கை போட்டு தன்னுடன் இறுக்கியவாறே கன்னத்தில் முத்தமிட்டு, “இப்படி முத்தம் கொடுத்து கொஞ்சி சமாதானம் செய்வேன்” என்றான்.

அந்நேரம் உள் நுழைந்த ஒன்றரை வயதான காவ்யா தாய் தந்தையின் மடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், “அப்பா நானு நானு” எனக் கூறி தாயின் காலை கட்டி கொள்ள, இருவரும் ஒரு சேர சிரிக்க, விழி குனிந்து காவ்யாவை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

விழியின் இடையில் இருந்த கையைத் தன் மகளைச் சுற்றியும் போட்டவனாய், “வி ஆர் த ஃபேமிலி” என ராகமாய் பாடினான்.

சரியாய் அந்நேரம், காவ்யா லேசாய் திறந்து வைத்திருந்த கதவை முழுவதுமாய் திறந்து தேநீர் கோப்பையுடன் உள்ளே வந்த மகேஸ்வரி, இக்காட்சியினைக் கண்டு சற்று ஜர்க்காகி பின் சங்கடமாய் புன்னகைக்க, விழி சட்டென்று எழ முற்பட, காவ்யா அவளை எழ விடாமல் அழுத்தமாய் அமர்ந்திருக்க, “எழுந்திரு பாப்பா” எனக் கூறியவாறு அவளை இவள் தூக்க, கோப்பையை மேஜை மீது வைத்த மகேஸ்வரி, “பார்த்து சேர் உடைஞ்சிற போகுது” எனச் சிரிப்பாய் உரைத்து விட்டு சென்றார்.

“அய்யோ” என்ற நாணப் புன்னகை ஆதவன் விழி இருவரின் இதழிலும் தவழ்ந்தது.

விழி காவ்யாவை இறக்கி விட்டதும், மீண்டுமாய் அவள் விளையாட செல்ல, விழி நினைவு வந்தவளாய், “அய்யோ உன்கிட்ட நான் பேச வந்ததையே மறந்துட்டேன்” என்றவள், தன் கைபேசியில் இருந்த ஆயத்த ஆடைகளை அவனிடம் காண்பித்து, எது நன்றாக இருக்கிறது எனக் கேட்டு கொண்டிருந்தாள்.

“ஏன்டி பிறக்காத பையனுக்கு இப்பவே டிரஸ் எடுக்கனுமா?” என அவன் சலித்துக் கொள்ள,

“இது ஃபேமிலி காம்போ! உனக்குத் தான் தெரியும்ல! நான் எப்பவுமே ஒரே கலர்ல நம்ம எல்லாருக்கும் டிரஸ் எடுப்பேன்னு! துணி ஆன்லைன்ல விற்கிற நானே விலை குறைவா இருக்கும் போது வாங்காம போனா எப்படி?” எனக் கேட்டாள்.

ஆம் வேல்விழி வீட்டில் அடைப்பட்டுக் கிடப்பதால் மன இறுக்கம் அதிகமாவதாய் உரைக்க, வீட்டிலிருந்தே வேலை செய்யும் வகையில் துணி வியாபாரத்தை அவளுக்கு ஏற்படுத்திக் கொண்டான் ஆதவன்.

அடுத்து குழந்தை பிறந்ததும், இவள் இந்த வியாபாரத்தைத் தொடர்ந்து செய்வாளா என்றும் தெரியாது. அதற்கு அவளுக்கான நேரமிருக்காது எனவும் புரிந்தது. ஆயினும் தற்சமயம் அவளின் மன இறுக்கத்தைப் போக்க, அவளின் ஆசையை நிறைவேற்றி வைத்தான் அவன். நஷ்டமானாலும் பரவாயில்லை என அவளின் விருப்பப்படி விட்டுவிட்டான் ஆதவன்.

அதில் சலுகை விலையில் தாய், தந்தை, சிறுவர், சிறுமியர் எனக் குடும்பத்தினர் முழுவதுமாய் ஒரே நிறத்தில் உடுத்துவதாய் அமைந்த உடைகளைத் தான் அவனுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் மகேஸ்வரி ஏதோ வேலையாய் விழியை அழைக்க, சமையலறை நோக்கி அவள் சென்ற சமயம், காவ்யா தனது குட்டி நடைவண்டியை தள்ளியவாறு ஆதவன் அறையினுள் செல்ல, சிறிது நேரத்தில் டமால் எனச் சத்தமும், காவ்யாவின் வீல் என்ற அழுகை சத்தமும் சமையலறையைச் சென்றடைந்தது.

மகேஸ்வரியும் விழியும் காவ்யா தான் விழுந்து விட்டாள் எனப் பதறி சத்தம் வந்த அவ்வறையை நோக்கி சென்று பார்க்க, ஆதவன் அமர்ந்திருந்த நாற்காலியின் ஒரு கால் உடைந்திருக்க, தரையிலிருந்து எழுந்து கொண்டிருந்தான் அவன். அவனருகே நின்று அழுது கொண்டிருந்தாள் காவ்யா.

விழி அவசரமாய் ஆதவனுக்கு அடிப்பட்டிருக்கிறதா என ஆராய, மகேஸ்வரி காவ்யாவை தூக்கி வைத்துக் கொண்டு சமாதானம் செய்தார்.

ஆதவனின் கைகளைத் தேய்த்து விட்ட விழி, “அம்மா வாய வச்ச மாதிரியே நடந்து போச்சு” என அவன் மட்டும் கேட்கும் வகையில் மெல்லியதாய் உரைத்து சிரித்தாள். அவன் அவளை முறைத்தான்.

“ஆமா பாப்பாவும் கூடச் சேர்ந்து விழுந்தாளா என்ன? ஏன் இப்படி அழுறா?” குழந்தையின் உடலை கவனித்தவாறு கேட்டார் மகேஸ்வரி.

தன்னிடமிருந்து தந்தையிடம் செல்ல தாவிய காவ்யாவை கையில் பிடித்தவாறு அவள் உடலை ஆராய்ந்து கொண்டிருந்தார் அவர்.

“நான் விழுந்ததைப் பார்த்து பயந்து அழுறா அத்தை! அப்பாகிட்ட வாடா தங்கம்” என்றவாறு குழந்தையை அவன் வாங்கிக் கொள்ள, அவர் சமையலறை நோக்கி சென்றார்.

அவன் கைகளில் வந்ததும் அழுகையை நிறுத்திய காவ்யா, “அப்பா காட்டு காட்டு” என அவன் முகத்தை, கையை என ஆராய்ந்தவள், அவன் வலக்கையில் லேசாய் ஏற்பட்டிருந்த சிராய்ப்பை காண்பித்து, “அப்பா ஊ ஊ” என்றவாறு அடிப்பட்ட இடத்தில் ஊதியவாறு இருந்தாள்.

தந்தையின் காயத்தை ஆராய்ந்து கண்டறியும் குழந்தையின் செயலில் ஆதவன் விழி இருவரும் இன்ப அதிர்வுக்குள்ளாகி ஸ்தம்பித்து நின்றனர்.

ஆதவன் தன் மகளை உச்சி முகர்ந்து முத்தமிட்டவாறு, “நான் தன்யனானேன்” என நெகிழ்வாய் உரைக்க,

“டேய் இதெல்லாம் ஓவரு! தினமும் கூட இருந்து பார்த்துக்கிற என்னைவிட வீடியோ கால்ல பேசுற உன் மேல இவ்ளோ பாசமா அவளுக்கு” என முகத்தைச் சுருக்க, வாய்விட்டுச் சிரித்தான் ஆதவன்.


ஒரு வருடம் கழித்து…

கொரோனா இல்லாத இந்தியாவாக, முகக் கவசம் இல்லாத முகமாக, நித்தம் நூறு நேரம் கை கழுவும் அவஸ்தை இல்லாத புது இந்தியாவாகப் பழைய நிலைக்கு வந்திருந்தது நம் நாடு.

ஆதவன் விரும்பி செல்லும் அவன் வீட்டினருகே இருக்கும் முருகன் கோவிலில் அவனது மகனுக்குப் பெயர் வைக்கும் வைபவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆதவன் வேல்விழி தம்பதியினருக்கு இரண்டாவதாக மகன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன.

விஜயாவும் மனோகரும் ஆளுக்கொரு கையில் ஆதவன் மற்றும் முகிலனின் பெண் குழந்தைகளை, கோவிலில் உள்ள பூங்காவில் விளையாட வைத்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, கவிதாவும் விழியும் மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஐயர் சிறப்புப் பூஜைக்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தார்.

ஆதவனும் முகிலனும் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர சென்றிருந்தனர்.

விழியின் மடியில் இருக்கும் குட்டி பையனை கொஞ்சிய கவிதா, “அக்கா நாங்க நம்ம வீட்டு மேல் மாடில வீடு கட்டலாம்னு முடிவு பண்ணிருக்கோம்” தயங்கி தயங்கியே உரைத்தாள்.

“அப்படியா ரொம்ப சந்தோஷம் கவி!” சந்தோஷமாகவே உரைத்த விழி,

“என் வீட்டுகாரர் தான் அம்மா அப்பாவை தனியா விட்டுட்டு சென்னை போகப் போறோமேனு ரொம்பவே வருத்தப்பட்டார். இப்ப கூடத் துணைக்கு நீங்க இருப்பீங்கன்றது அவருக்கு ஆறுதலா இருக்கும்” என்றாள்.

வேல்விழியும் ஆதவனும் மகனுக்கு ஒரு வயது நிறைவானதும் சென்னை செல்லலாம் என முடிவு செய்து கொண்டனர். ஆதவனுக்கு மகன் பிறந்த சமயத்தில் ஆன்சைட் வேலை வர, மனைவி மற்றும் பிள்ளைகளை இந்நிலையில் இங்கு விட்டு செல்ல மனமில்லாது அந்த வாய்ப்பை வேண்டாமென நிராகரித்து விட்டான்.

“மேல நாங்க கீழே மாமா அத்தை இருக்கிற மாதிரி ப்ளான் செஞ்சி தான் கட்டுறோம் அக்கா! ஒரே வீட்டுல இருந்தா ஏதாவது பிராப்ளம் வரும், அதுக்கு இப்படித் தனியா இருக்கிறது நல்லதுனு தான் வீடு கட்டுறோம். அதுவுமில்லாம ஒரே ஊருல சொந்த வீட்டையும் வச்சிக்கிட்டு எதுக்கு வாடகை வீட்டுல தங்கனும். நானும் வேற வேலைக்குப் போறதா இருக்கேன். பாப்பாவை அத்தை பார்த்துப்பாங்க! அவங்க அவசரத்துக்கு ஒத்தாசைக்கு உதவி செய்யவும் நாங்க இருப்போம்” என இம்முடிவு எடுத்ததற்கான காரணக் காரியங்களைப் பகிர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் அமைதி காத்தவள், “உங்களை நிறைய நேரம் ரொம்ப ஹர்ட் பண்ற மாதிரி நடந்திருக்கேன். அப்பலாம் எனக்கு மெச்சூரிட்டி சுத்தமா இல்லை! இப்பவும் இல்லை தான் ஆனா நீங்க அப்படி நான் ஹர்ட் பண்ண பிறகும் என்னை நேர்ல பார்த்தா மூஞ்சை தூக்கிட்டு போகாம இப்படிப் பேசுறது தான் என்னை யோசிக்க வச்சிது அக்கா! உங்களுக்கும் உடன்பிறந்தவங்க இல்லை எனக்கும் இல்லை நம்ம குழந்தைங்களுக்கு நம்ம தானே உறவுகாரங்க. அவங்களுக்காக முடிஞ்ச வரை விட்டு கொடுத்து வாழ்வோம்னு நினைச்சிருக்கேன் அக்கா” என்றாள்.

‘என்ன திடீர் ஞானோதயம் இந்தப் பொண்ணுக்கு! வீடு கட்ட ஒத்துக்காம சண்டை போடுவேன்னு நினைச்சிருப்பா போல’ என மனதினில் எண்ணி கொண்டவளாய், “அதனால என்னம்மா இருக்கு! உறவுகளுக்குள்ள சண்டை சச்சரவு சகஜம் தானே” எனப் புன்னகை புரிந்தாள் விழி.

இருவரின் கணவன்மார்களும் வாங்கி வந்திருந்த பூஜை பொருட்களை ஐயரிடம் கொடுத்து விட்டு மண்டபத்தின் பின்புறம் காலி இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

ஆதவன் முகிலனிடம், “நீ மாடியில வீடு கட்டுறது நல்லது தான்டா! அம்மாவோட குணமும், பொண்டாட்டியோட குணமும் இப்ப உனக்கு நல்லா தெரிஞ்சி போச்சு. அதனால தனியா இருங்க. அதே நேரம் அம்மாவையும் பார்த்துக்கோங்க. நான் சென்னை போய்டுவேன் அவங்க தனியா இருப்பாங்கனு கவலையா இருந்தது! அதான் நீ வீடு கட்டுறதை பத்தி சொன்னதும் ஓகே சொல்லிட்டேன். பெத்த பிள்ளைங்களா அம்மா அப்பாவை கடைசி வரை வச்சி காப்பாத்த வேண்டியது பிள்ளைங்களோட கடமை தான். அதே சமயம் கணவனாய் பொண்டாட்டியை சந்தோஷமா வச்சி பாத்துக்கிறதும் நம்மளோட கடமை தானே. இதைப் பேலன்ஸ் பண்ணி கொண்டு போய்ட்டா போதும்டா. இதுக்கப்புறம் எந்தப் பிராப்ளமும் வராதுனு நினைக்கிறேன். இனி லைப் எப்படிப் போகுதுனு பார்ப்போம். அந்த ஆண்டவன் தான் துணை இருக்கனும்” எனக் கூறிக் கொண்டிருந்த சமயம் பூஜை ஆரம்பிக்க இருப்பதாய் கூறி இருவரையும் அழைத்தார் மனோகர்.

பூஜை எல்லாம் நடந்து முடிந்து பெயர் வைக்கும் தருணம் வர, மகனை கையில் ஏந்திய ஆதவன், “முத்தமிழ் குமரன், முத்தமிழ் குமரன், முத்தமிழ் குமரன்” என மூன்று முறை அக்குழந்தையின் காதில் உரைத்தான்.

அனைவருமாய் இணைந்து அழகாய் ஒரு குடும்பப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

நல்லறத்துடன் கூடிய இனிய இல்லறமாய் தங்களின் வாழ்வு தொடர வேண்டுமெனக் கடவுளை வேண்டிக் கொண்டு கிளம்பினர் ஆதவனும் வேல்விழியும்.


முத்தமிழ் குமரனின் முதல் பிறந்தநாள் விழாவை விமர்சையாய் கொண்டாடிய பிறகு ஒரு நன்னாளில் சென்னைக்கு ரயிலில் பயணித்திருந்தனர் ஆதவன் வேல்விழி குடும்பத்தினர்.

ரயிலில் மகன் மகளுடன் காலை வேளையில் பயணத்தைத் துவங்கினான் ஆதவன்.

கிட்டதட்ட மூன்று வருடங்கள் கழித்து சென்னைக்குச் செல்கிறாள் வேல்விழி.

உறங்கும் மகனை மடியில் கிடத்தியப்படி ரயிலின் ஜன்னலருகே அமர்ந்து வெளியே இயற்கை காட்சிகளைக் கண்டுகளித்து வந்தவளின் உள்ளம், சென்னையில் இவர்கள் முன்பு வாழ்ந்த வாழ்வை அசை போட வைத்தது.

சென்னை வாழ்வின் பக்கங்கள் முழுவதும் தன்னவனே நிறைந்திருக்க, எத்தகைய இன்னல்கள் தொடர்ந்து வந்த பொழுதிலும் எந்தச் சூழ்நிலையிலும் விடாமல் தன் மீது நறுங்காதல் பொழிந்த தன் கணவனை எண்ணி பூரித்து நெகிழ்ந்தவளாய் அவனைப் பார்த்திருந்தவளின் மனம், “மை ஸ்வீட் அழகப்பாடா நீ” எனக் கொஞ்சி கொண்டது.

“விழி காவ்யா மேல கண் வச்சிக்கோ! நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்” எனக் கூறி தன் இருக்கையில் காவ்யாவை அமர வைத்து சென்றான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவனின் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டவள், “என்ன முகம் சிரிப்புல பூரிச்சு போய் இருக்கு? என்ன விஷயம்” எனப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

“அது ஒன்னுமில்லடி! ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரும் போது கடைசி வரிசைல இருந்த ஒரு பொண்ணு என்னைய பார்த்துச் சைட் அடிச்சிட்டு இருந்துச்சு” அவளை வம்பிழுக்கவென வாய் கொள்ளா சிரிப்புடன் கூறினான்.

“ஓஹோ யாருனு சொல்லு! அவங்ககிட்ட போய் நீ இரண்டு பிள்ளைங்களுக்கு அப்பன்னு சொல்லிட்டு வரேன்” என அவள் எழ போக,

அவளைப் பிடித்து அமர வைத்தவன், “பொறுக்காதே உனக்கு” என அவளைப் பொய்யாய் முறைக்க,

“நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்” அவனின் முறைப்பில் சிரித்திருந்தாள் இவள்.

இவர்களின் காதலுடனான இந்த ஊடலுக்கும் கூடலுக்கும் முற்றுப்புள்ளி என்பதே இல்லை.

——— சுபம் ——–

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்