நறுங்காதல் பொழிபவனே – 18

Epi 18

ஆதவன் வேல்விழி இருவரும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கி இருந்தனர்.

இந்த மருத்துவர் இருவருக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் இயல்பாய் அவர்கள் இருக்கலாம் எனவும் கூறி சில ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினார். தினமும் ஒரு மாதுளை உட்கொள்ள வேண்டுமென உரைத்திருந்தார்.

இதை மட்டுமே இருவரும் கடைப்பிடித்தனர். அதற்கிடையில் தான் அந்த வளைகாப்பு நாளும் வந்தது.

கவியின் ஏழாம் மாதத்தில் வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

விழிக்கு அதில் கலந்து கொள்ள துளியும் விருப்பமில்லை. ஆதவன் தான் அவளைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றான்.

வளைகாப்பு நாளன்று காலையில் இருவரும் திருச்சி வீட்டை அடைந்தனர். பயணக்களைப்பில் இருவரும் சிறிது நேரம் உறங்கினர்.

விழி விழித்துப் பார்க்கும் பொழுது, கவி தன்னை அலங்கரிப்பதற்காகப் அழகு நிலையத்திற்கு சென்றிருப்பதாக உரைத்தார் விஜயா.

இதற்கே விழிக்குக் கோபம் வந்தது. உறங்கி கொண்டிருந்த ஆதவனை எழுப்பித் தன் ஆதங்கத்தை உரைத்தாள்.

“பாரு இந்தப் பொண்ணு என்னைலாம் பார்லருக்கு கூப்பிடவே இல்லை! என்னமோ நானா வேண்டாத விருந்தாளியா வந்து உட்கார்ந்திருக்க மாதிரியே எனக்கு ஃபீல் ஆகுது” என்றாள் விழி.

“நீ தூங்கிட்டு இருக்கனு கூப்பிடாம போய்ருக்கலாம்ல! இதெல்லாம் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத! கிளம்பு டைம் ஆகிடுச்சு” எனக் கூறியவன் தானும் கிளம்பத் தயாரானான்.

ஆதவன் பட்டு வேஷ்டி சட்டையில் கிளம்பியிருக்க, விழி கிளம்ப மனமேயில்லாமல் புடவை உடுத்தி தன்னை அலங்கரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஆதவனும் விழியும் வரவேற்பரையில் அமர்ந்திருந்த சமயம் வந்த கவிதா, ஆதவனை மட்டும் பார்த்து வாங்க என அழைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

விழிக்கு கோபம் உச்சத்தைத் தொட தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

தனக்கு குழந்தை பேறு இல்லாததினால் தான் இவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என மனம் ரணமாய் வலிக்க அழுது கொண்டிருந்தாள் விழி.

கவியின் பெற்றோர்கள் தான் இந்த வளைகாப்பு முழுவதையும் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்களிருக்கும் வீட்டிலிருந்து புகைப்படமும் காணொளியும் எடுத்து விட்டு மண்டபம் செல்வதாய் திட்டமிட்டிருந்தார் புகைப்படக்காரர்.

விழி உள்ளே போன சமயம் புகைப்படக்காரர் வந்து ஆதவன் வீட்டினர் அனைவரையும் வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, ஆதவன் அறையினுள் சென்று விழியை சமாதானம் செய்து வெளியே அழைத்து வர, “நான் போட்டோக்குலாம் நிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டாள் விழி.

“ஏன் போட்டோ எடுத்தா என்ன? எல்லாத்துக்கும் மூஞ்சை தூக்கி வச்சிக்கிறது! இப்படி இருந்தா உனக்கு எப்படி நல்லது நடக்கும்” என அவர் மனதை வதைக்குமாறு பேசவும்,

“ம்மா என்னமா பேசுற நீ!” ஆதவன் அவரை முறைத்தான்.

“ஆமா பொண்டாட்டிய சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வந்துடும் உனக்கு” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் விஜயா.

விழி கண்களில் நீர் நில்லாமல் வழிந்து கொண்டிருந்தது.

கவியும் முகிலும் ஒரு வார்த்தை எதிர் கேள்வி கேட்கவில்லை.

ஆதவனின் தந்தை மனோகர், “என்ன பேச்சு இது விஜி” என அதட்டியவர், “எல்லாரும் கிளம்புங்க மண்டபத்துக்குப் போகலாம். சொந்தகாரங்கலாம் அங்க தான் இருக்காங்க. நம்ம எல்லாரும் இங்க இருந்தா அவங்களை யாரு கவனிக்கிறது?” எனக் கூறி அனைவரையும் மண்டபத்துக்கு அனுப்பினார்.

விழி வரவே மாட்டேன் என அடம்பிடித்து நின்றாள்.

“அவ அப்படித் தான்மா! உன் அத்தை பத்தி தான் உனக்குத் தெரியும் தானே! இதெல்லாம் மனசுல வச்சிக்காதமா! அங்க சொந்தகாரங்க எல்லாம் மூத்த மருமக எங்கனு கேட்பாங்க. எல்லாரும் உன்னைய இங்க காலைல பார்த்திருக்காங்க. இவ்ளோ தூரம் வந்துட்டு அங்க வரலைனா நல்லா இருக்காதுமா” என அவளிடம் சற்று கெஞ்சலாய் பேசவும், வேறு வழியின்றி ஒத்துக் கொண்டு மண்டபத்திற்குச் சென்றாள் விழி.

இவர்களின் இல்லத்தில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது அந்த மண்டபம்.

மண்டபத்தில் இருந்த உறவினர்கள் இவளிடம் இயல்பாய் தான் பேசினார்கள். ஆனால் கவியின் தாய் தந்தையர் இவளிடம் பேசவில்லை.

விழி ஓரமாய் அமர்ந்து கொண்டாள். ஆதவன் வந்தவர்களுக்கான உணவு உபசாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

விஜயா கவிதாவின் தாயாரிடம், “வளையல் ஒருத்தருக்கு இரண்டு டசன் தரனும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டசன் ஒரு கைக்குனு கொடுக்கனும். ஆனால் இங்க இருக்க வளையலை பார்த்தா அவ்ளோ இருக்காது போலயே” என வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக அவர்களின் வாக்குவாதங்கள் முடிந்து, ஒவ்வொருவராய் கவிக்கு வளையல்கள் அணிவித்துக் கொண்டிருந்த நேரம், விழியின் அருகில் வந்தமர்ந்தான் ஆதவன்.

அந்நேரம் அவர்களிடம் வந்த விஜயா, “விழி நீயும் வா! உனக்கும் வளையல் போடனும்” எனக் கூப்பிட,

‘எனக்கெதுக்கு வளையல் போடனும்’ இவள் புரியாமல் அவரைப் பார்க்க,

“எதுக்குமா அவளுக்கு” எனக் கேட்டான் ஆதவன்.

“இது ஒரு சாங்கியம்டா! பிள்ளை இல்லாதவங்களுக்கு இந்த மாதிரி சடங்கு நேரத்துல அவங்களையும் கூட உட்கார வச்சி வளையல் போட்டா அவங்களுக்குக் குழந்தை தங்கும்னு சொல்வாங்க! நீ வா விழி” என அவனிடம் கூறியவாறு இவளிடம் வந்து நின்றார் விஜயா.

மேடையில் இருந்த பெண்கள் அனைவரின் பார்வையும் இவள் மீது தான் இருந்தது. இவளின் வருகைக்காக அனைவரும் காத்துக் கொண்டு நின்றனர்.

வேல்விழிக்கு இதில் சுத்தமாய் விருப்பமில்லை. ஏனோ அனைவரின் முன்பு தனக்குக் குழந்தை பேறு இல்லையென அறிவிப்பதாகத் தோன்றியது. அந்தப் பரிதாப பார்வையும் வசைமொழிகளும் தன்னை எட்ட வேண்டாம் எனத் தான் தள்ளி அமர்ந்து கொண்டாள். ஆனால் மேடையேற்றி இவள் பிள்ளை இல்லாதவள் என அறிவிப்பது போன்ற இச்சடங்கை செய்ய இவளுக்குச் சுத்தமாய் விருப்பம் இல்லை.

ஏற்கனவே குமுறிக் கொண்டிருந்த மனதின் அழுத்தம் அதிகமாக, “நான் வர மாட்டேன்! எனக்கு ஒன்னும் யாரும் செய்ய வேண்டாம்” என ஆக்ரோஷமாய் அழுதவாறு உரைத்தவள், அங்கிருந்து வெளியே செல்ல கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று வெளிநடப்பு செய்யும் அவளின் செயலில் பதறியவனாய், அவளின் கைப்பிடித்து நிறுத்தியவன், “எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க விழி! நீ சும்மா வந்து உட்காரு! வளையல் போடுவாங்க அவ்ளோ தான்” என ஆதவனும் அவர்களுக்கு ஆதரவாய் பேச, அப்படியே பேச்சற்று நின்று விட்டாள் விழி.

“என் மனசு எவ்ளோ வலிக்குதுனு உனக்குப் புரியவே இல்லையாடா?” எனக் கேட்டவாறு அங்கேயே மடங்கி அமர்ந்து அழுதுவிட்டாள் விழி. அவளுக்கு சுற்றமெல்லாம் மறந்து விட்டது. தன்னிலை எண்ணி தன் மீதே கழிவிறக்கம் உண்டாக அழுது கரைந்தாள்.

ஆதவனுக்கும் கண்களில் நீர் தேங்கி விட்டது.

“எதுக்கு உன் பொண்டாட்டி இவ்ளோ சீன் போடுறா?” விஜயா மேலும் வார்த்தைகளை விட,

விழியின் அருகில் மண்டியிட்டவன், “விழி நீ என்ன செஞ்சிட்டு இருக்கனு உனக்குப் புரியுதா? எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க! இப்ப உன்னோட செயல் தான் எல்லாரும் நம்மளை ஒரு மாதிரி பார்க்க வைக்குது” என அவளின் தோளை உலுக்கினான்.

மண்டபத்தில் இருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் மீதிருக்க, சலசலவென உறவினர்களின் பேச்சுச்சத்தம் மண்டபத்தை நிறைத்தது.

அந்நேரம் விழியை எவ்வாறு கையாளவென ஆதவனுக்குத் தெரியவேயில்லை. சுற்றத்தின் சலசலப்போ, அவனின் பேச்சோ எதுவுமே அவளின் செவியை எட்டவேயில்லை.

அச்சமயம் ஆபத்பாந்தவனாய் வந்தார் விஜயாவின் தங்கை புஷ்பவள்ளி.

இவளருகில் வந்தவர், “நீ ஒன்னும் மேடைக்குலாம் வர வேண்டாம்மா! உனக்குப் பிடிக்காதது எதுவும் இங்க நடக்காது சரியா! வா வந்து சேர்ல உட்காரு முதல்ல” அவளின் முதுகை வருடி எழுந்து நிற்க வைத்தவர், ஆதவன் அவரிடம் கொடுத்த நீரை அவளைப் பருக வைத்தார்.

அவளுடன் நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் பேசி இயல்பாக்கியவர், மேடையின் ஓரத்தில் நாற்காலி போட்டு அவளை அமர வைத்து சந்தனம் தடவி, வளையல் போட அவர் மேடையில் பல தட்டுகளில் அடுக்கியிருந்த வளையல்களில் ஒரு தட்டிலுள்ள வளையலை அவர் எடுக்கப் போக, “இதை எடுக்காதீங்க! இது எங்கம்மா எனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்தது! இதைத் தவிர மத்த வளையல் எல்லாம் எடுத்துக்கோங்க” என்றாள் கவிதா.

புஷ்பவள்ளியின் முகம் சுருங்கினாலும், விழியிடம் காண்பிக்காது, “உனக்கு நான் கலர் கலரா வளையல் போடுறேன்! அடுத்த வருஷம் இந்த நாள்ல உன் குழந்தை உன் கைல இருக்கும். இது இந்த அம்மாவோட வாக்கு சரியா” எனக் கூறியவாறு அவளின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்.

அதன்பின் மூன்று பெண்கள் தொடர்ந்து வந்து இவளுக்கு வளையல் போட்டப்பின் விழியைக் கவிக்கு வளையல் போட கூறினர்.

மனம் முழுக்க வேதனையில் திளைத்திருந்த விழி, அவளின் கன்னத்தில் சந்தனம் தடவும் பொழுது சற்று கைகளை வீசி வேகமாய் தடவி தன் கோபத்தினைக் காண்பிக்க, அங்குள்ளவர்களுக்கு அது அவள் கவியை அறைந்ததாகத் தோன்றியது.

அனைவருமே அதிர்வாய் விழியை நோக்கினர்.

“அண்ணி என்ன பண்றீங்க?” என முகிலனும், “என் பொண்ணை எதுக்கு அடிச்ச நீ?” எனக் கவியின் அன்னையும் ஒருங்கே வந்து விழியைக் கேள்வி கேட்க,

‘என்னது நான் அடிச்சேனா?’ என்பது போல் அவர்களைப் பார்த்து வைத்தாள் இவள்.

கவிக்குமே அது அடித்தது போல் தோன்றவில்லை என்பதால், “அம்மா விடும்மா! எதுக்கு அவங்ககிட்ட சண்ட போடுற” எனக் கூறவும் தான் அனைவரும் அமைதியாகினர்.

இவர்களின் கேள்வி எதற்கும் பதில் கூறாது வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள் விழி. இலக்கற்று அவளின் பாதம் தெருவில் நடக்க, அவளின் பின்னேயே ஓடி வந்த ஆதவன், “நில்லு விழி! எங்க போற?” என அவளை நிறுத்தி வழியில் வந்த ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

ஆட்டோ நிறுத்தப்பட்ட அடுத்த நொடி, வண்டியில் இருந்து இறங்கியவள் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஆதவன் அந்த ஓட்டுனருக்குப் பணம் அளிக்கவென சில்லரையைத் தேடி எடுத்து கொடுக்கவே சில நிமிடங்கள் ஆனது.

ஏன் இவள் இன்று இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்ற கோபம், வருத்தம், வேதனை, வலி என அனைத்துமே அவனையும் சூழ்ந்தன.

பலதரப்பட்ட உணர்வுகளுடன் தான் அந்த அறைக்குள் சென்று அவளிடம் பேசினான் ஆதவன்.

அவனிடம் தன் உணர்வுகளைக் கோபமாய் அவள் வெளிபடுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இவன் ஆறுதல்படுத்திய பிறகே தன் செயலின் வீரியம் அவளுக்குப் புரிந்தது.

ஆதவன் அவளை மென்மையாய் அணைத்திருக்க, அவன் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்திருந்தவளின் கண்கள் உடைப்பெடுத்து அவனின் கழுத்தை நனைக்க, “எனக்கு ஒரு மாதிரி கில்டி ஃபீல் ஆகுதுடா!ரொம்ப இன்டீசன்ட்டா பிஹேவ் பண்ணிட்டேன்ல!” என அழுகையில் விம்மியது அவளின் குரல்.

அவளின் கண்ணீரை உணர்ந்து முகத்தை நிமிர்த்தித் தன்னைப் பார்க்க செய்தவனோ,

“எனக்காகத் தானே உனக்குப் பிடிக்கலைனாலும் அந்த சடங்குக்கு ஒத்துக்கிட்டே! எல்லார்கிட்டயும் நான் பேசிக்கிறேன். நீ ஒன்னும் கில்டி ஃபீல் ஆகிக்காத!” அவள் மீதிருந்த கோபம் முற்றிலுமாய் குறைந்திருக்க, தன்னாலும் அந்தச் சூழலில் அவளுக்காக ஏதும் செய்ய இயலவில்லையே என்ற அவனின் இயலாமை விளைவித்த மனதின் வலியில் கூறினான் அவன்.

“ஆனா உன் வீட்டுல செய்ய சொன்னதுக்கு நீ என்ன செய்வ? உனக்கும் வருத்தமா தானே இருந்திருக்கும்” என அவனுக்காக அவனிடமே அவள் வாதாட, தன் மீதான மனைவியின் அன்பில் மென்னகை புரிந்தவனோ,

“சரி வா நீ கொஞ்ச நேரம் தூங்கு! நான் மண்டபம் போய் எல்லாரையும் வழி அனுப்பிட்டு வரேன்” என்றவாறு அவளை அவன் மெத்தையில் படுக்க வைத்து நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தான்.

அவனின் கனிவில் நெக்குருகி போனவளின் கண்களில் மீண்டுமாய் கண்ணீர் சூழ, “போடா என்னைய அழ வச்சிட்டே இருக்க நீ!” என அவள் சிணுங்க,

“ஆமா இன்னிக்கு எல்லார் முன்னாடியும் உன்னைய அழ வச்சிட்டேன்ல! எனக்கு வேறு வழி இல்லடி” முகத்தில் வேதனை ரேகைகள் படர உரைத்தவன்,

‘எங்களோட தேவையை விரைவாய் நிறைவேற்றி மகிழ்விக்க வேண்டும் இறைவா’ என அவசரமாய் இறைவனிடம் கோரிக்கை வைத்தவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு உறங்குமாறு கூறி அவளின் தலையைக் கோதிவிட்டான்.

அன்றிரவே அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பி விட்டனர் வேல்விழியும் ஆதவனும்.

விஜயாவின் பேச்சு ஆதவனை வருத்தியிருக்க, விழியின் வளைகாப்பிற்காகத் தான் இனி இந்த ஊர் பக்கம் வர வேண்டும் என மனதினில் சபதம் எடுத்து கொண்டவன், விழியிடமும் அதை உரைத்தான்.

இவர்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்ட மூன்றாம் மாதத்தில் விழிக்கு மாதவிடாய் நாட்கள் தள்ளி போக கர்ப்ப பரிசோதனை உபகரணத்தில் பரிசோதித்த விழிக்கு நெகிட்டிவ்வாக ரிசல்ட் வந்தது.

எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போகும் வலியை வலிக்க வலிக்க வாழக்கை அவளுக்கு அளித்துக் கொண்டிருந்தது.

ஆதவன் தான் அவளிடம் பேசி மனதை தேற்றி மருத்துவமனை அழைத்துச் சென்றான்.

“அது பால்ஸ் நெகிட்டிவ்வா கூட இருக்கலாம்! நீங்க ப்ளட் டெஸ்ட் எடுங்க” மருத்தவரின் அறிவுரையின் பேரில் ரத்த பரிசோதனை எடுத்தாள் விழி.

இரண்டு நாட்கள் கழித்துப் பரிசோதனை முடிவை வாங்க சென்றான் ஆதவன்.
அவன் வீடு வந்து சேரும் வரை பொறுமையில்லாது அவனுக்கு அழைத்துப் பரிசோதனை முடிவை கேட்டாள் விழி.

வீட்டிற்கு வந்து பேசுவதாய் உரைத்து இணைப்பை துண்டித்து விட்டான் ஆதவன்.

விழிக்கு மனது கனத்துப் போனது. நெகட்டிவ் என்பதால் தானே அவன் கூறவில்லை என எண்ணி அதைப் பற்றி மேலும் அவனிடம் அவள் ஏதும் கேட்கவில்லை. வீட்டிற்கு வந்தவனும் அவளிடம் ஏதும் இதைப் பற்றிப் பேசாது இருந்தான். அந்தப் பரிசோதனை முடிவை எடுத்துப் படித்துப் பார்த்துவிட்டு அவளும் அமைதியாகி விட்டாள். இருவரும் இதைப் பற்றி எதுவும் பேசி கொள்ளாது அன்றைய நாளை கடத்தினர்.

மறுநாள் அந்தப் பரிசோதனை முடிவை மருத்துவரிடம் காண்பிக்க, அந்த முடிவையும் இவர்களின் முகத்தினையும் மாறி மாறி பார்த்தவர், “பாசிட்டிவ்வா தானே வந்திருக்கு! அப்புறம் ஏன் இரண்டு பேரும் இவ்ளோ சோகமா இருக்கீங்க?” எனக் கேட்டார்.

“பயமா இருக்கு டாக்டர்!” என ஒரு சேர இருவரும் கூறினர்.

அவர்களுக்கு தைரியம் அளித்து நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பேசினார் மருத்துவர். 

அதன்பின் மருத்துவரின் வழிகாட்டுதலில் மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டனர்.

விழியின் அன்னையிடம் மட்டும் இச்செய்தியை உரைத்து வர வைத்தனர். ஐந்து மாதத்திற்குப் பிறகு மற்றவர்களிடம் கூறலாம் என முடிவு செய்து கொண்டனர்.

விழி முழு ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர் உரைத்ததால், தனது வேலையை ராஜினாமா செய்தாள்.

விழியை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டனர் ஆதவனும் அவளின் அன்னையும்.

இந்தக் கரு தங்கிவிட வேண்டுமென்றும், இக்குழந்தை நலமாய் பிறந்து பூமியை அடைந்திட வேண்டுமென்றும் தனது வேண்டுதலை அனுதினமும் கடவுளிடம் வைத்துக் கொண்டே இருந்தான் ஆதவன்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஆதவன் தன் வீட்டினரிடம் இவளின் கர்ப்பம் பற்றி உரைத்தாலும் யாரும் சென்னை வர வேண்டாம் எனக் கூறி விட்டான்.

இதற்கிடையில் முகிலன் கவிதாவிற்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைக் காண்பதற்காகக் கூட ஆதவன் ஊருக்கு செல்லவில்லை. அவன் மனதில் சபதமெடுத்தவாறு விழியின் வளைகாப்பிற்குத் தான் அதன்பின் ஊருக்குச் சென்றான்.

ஊருக்கு சென்ற விழி அவளின் பிறந்த இல்லத்திற்குத் தான் அழைத்து செல்லப்பட்டாள்.

குழந்தை பிறந்த பின்பு கொரோனா காலமாய் உருமாற, விழி கவியின் வளைகாப்பு நிகழ்வுக்குப் பிறகு ஆதவனின் இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பே அமையவில்லை. இவளும் அதன் பிறகு ஆதவன் வீட்டினருடன் பேச்சு வார்த்தை வைத்து கொள்ளவில்லை. அவனின் இல்லத்தினருடனான அவளின் விலகல் தான் ஆதவனை வருத்தங்கொள்ள செய்திருந்தது. அவள் அவர்களின் மீதான கோபத்தை வளர்க்காது சுமூகமாய் பேசி இயல்பாய் பழகும் நாட்களுக்காய் காத்திருக்கிறான் அவன்.

— தொடரும்