நறுங்காதல் பொழிபவனே – 17

தொடர்ந்து நிகழ்ந்த கருச்சிதைவு சம்பவங்கள் விழியின் மனதை வெகுவாய் பாதித்திருந்தன. ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்தவளுக்குக் கருச்சிதைவினால் உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களும் இணைந்து வாழ்வின் மீதான வெறுப்பையும் சலிப்பையும் உண்டாக்கியிருந்தன. அதனால் எதிலும் நாட்டமில்லாமல் சுற்றி திரிந்தாள் அவள்.

அதிலிருந்து அவளை மீட்கவெனவே இயற்கை சூழ்ந்த இடத்திற்கு சுற்றுலா செல்லலாம் என ஆதவன் திட்டமிட்டிருந்த சமயம், விழியின் அலுவலகத் தோழர் ஒருவருக்குக் குன்னூரில் திருமணம் என இவர்களின் இல்லத்திற்கு வந்து அழைப்பிதழ் அளிக்க, அவளின் அலுவலகத் தோழமைகளுடன் இவளும் ஆதவனும் இணைந்து அவ்விடத்திற்கே சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

அனைவரும் சேர்ந்து தங்குவது போல் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, ஆதவனும் விழியும் அவர்களுக்காகத் தனி அறை புக் செய்து கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு, மேலும் மூன்று நாட்கள் ஹனிமூன் கொண்டாடிவிட்டு திருச்சிக்கு பயணித்திருந்தனர்.

விழிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு மூன்று மாதங்களே ஆகியிருந்த நேரமது.

சனிக்கிழமை காலை வேளையில் ஆதவனின் திருச்சி இல்லத்தை அடைந்தனர் இருவரும்.

கவியின் கர்ப்பம் பற்றிய செய்தியை அறிந்த பிறகு அவர்கள் இருவரும் அன்று தான் ஊருக்கு வந்திருந்தனர். கவிக்கு ஐந்தரை மாதங்கள் ஆகியிருந்தது. கவியைக் காணும் பேராவலுடன் வந்தாள் விழி. கர்ப்பவதியாய் இருக்கும் அவளின் முகப்பொலிவையும், வயிற்றில் உணரப்படும் கருவின் வளர்ச்சியையும் காணும் ஆசையுடன் வந்தாள் விழி.

ஆனால் கவிதா காலையிலேயே முகிலனுடன் செக்அப்பிற்கு சென்று விட்டதாய் உரைத்தார் விஜயா.

மாலை வேளையில் ஆதவனும் முகிலனும் மாடியில் காற்றாட நின்று பேசி கொண்டிருந்தனர்.

“ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு வெறுப்பா இருக்குணா” என்றான் முகிலன் முகத்தில் வலியை தேக்கி.

“என்னடா நீ? குழந்தை பிறக்கிற நேரத்துல இப்படிப் புலம்பிட்டு இருக்க? எதுவும் பிரச்சினையா?” எனக் கேட்டான் ஆதவன்.

“ஆமாண்ணா! நம்ம அம்மா பண்ற டார்ச்சார்லாம் அவ அவங்க வீட்டுல போய் சொல்லிருக்க! அவங்க கவிக்கிட்ட, ஒன்னு நான் அவங்க வீட்டோட மாப்பிள்ளையா போகனும் இல்ல தனிக்குடித்தனம் போகனும்னு அவளைப் பிரைன் வாஷ் பண்ணிருக்காங்க. அவளும் அதைக் கேட்டுட்டு என்கிட்ட வந்து சண்டை போட்டுட்டு இருக்கா! தினமும் இதைப் பத்தின சண்டை தான் போகுது!” எரிச்சலாய் உரைத்தான் அவன்.

“அம்மா அப்பாக்கு இது தெரியுமா?” எனக் கேட்டான் ஆதவன்.

“ஹ்ம்ம் நாங்க சண்டை போடுறது அவங்க காதுல விழாமலா இருக்கும். தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்துக்கிறாங்க! இதுல அம்மா வேற அவ கர்ப்பமா இருக்கும் போது காலேஜ்க்குப் போகக் கூடாதுனு என்னலாம் சண்டை போட முடியுமோ எல்லாத்தையும் போட்டாங்க. அவ காலேஜ் போயே தீருவேன்னு போய்ட்டு இருக்கா! அம்மா மேல தான்ணா நிறையத் தப்பு இருக்கு! அவங்களால தான் இங்க பிரச்சனையே உருவாகுதுனு புரிய மாட்டேங்குதா இல்ல புரிஞ்சிக்கிட்டே இப்படி நடந்துக்கிறாங்களானு தெரியலை. நான் ஏதாவது அம்மாகிட்ட எதிர்த்து பேசிட்டா ஓனு ஒப்பாரி வச்சிடுறாங்க. அதுக்கும் கவி தான் என்னைய கெடுத்துட்டானு அவளை இழுத்துச் சண்டை போடுறாங்க” என மனப்பாரங்களை எல்லாம் அண்ணனிடம் இறக்கி வைத்தான் முகிலன்.

“ஹ்ம்ம் இப்ப ஒன்னும் பண்ண முடியாதே முகிலா.. இரண்டுங்கெட்டான் நிலைமைல இருக்கீங்க இரண்டு பேரும். படிப்பு முடியலையே! குழந்தை வேற பிறக்க போகுது. குழந்தை பிறந்தா பார்த்துக்க ஆளு வேணுமே நீங்க தொடர்ந்து படிக்கிறதுக்கு. இதுல நீங்க எங்கிருந்து தனிக்குடித்தனம் போக முடியும்?” என ஆதவன் எதையோ சிந்திக்க,

“குழந்தை பிறக்கிற டைம்ல அவளுக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிடும்ணா. எப்படியும் அரியர் வச்சி தான் எழுதனும். குழந்தை பிறந்ததும் கொஞ்ச மாசத்துக்கு அவ அம்மா வீட்டுல தான் இருப்பா.. அதுக்குள்ள நான் படிக்கிற பார்ட் டைம் டிகிரி கோர்ஸ் முடிஞ்சிடும். ஒரு வேலை வாங்கிட்டு அங்க பக்கத்துலேயே வீடு பார்த்துட்டு இவளை கூட்டிட்டு போய்ட வேண்டியது தான். இவளையும் அங்கேயே வேலை பார்த்துக்க சொல்லலாம்ன்ற முடிவுல இருக்கேன்” எனத் தனது திட்டத்தை உரைத்தான் முகிலன்.

“அதுவும் சரி தான். ஆமா செக்அப்லாம் நல்லபடியா முடிஞ்சிதா முகில்? கவி எங்கே? பார்க்கவே இல்லையே இன்னிக்கு?” எனக் கேட்டான் ஆதவன்

“அதெல்லாம் முடிஞ்சிது! அவளோட அம்மா வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன்ணா” என்றான் முகிலன்.

“ஹ்ம்ம் விழி இன்னிக்கு கவியைப் பார்க்கனும்னு ஆசையா வந்தாடா! அவளுக்கு இந்த மாதிரி பிரக்னென்ட்டா இருக்குறவங்கள பார்க்க ரொம்ப பிடிக்கும்” சற்றாய் சிரித்தவாறே கூறினான்.

அவனின் கூற்றில் முகிலனின் முகம் பரிதவிப்பை பிரதிபலிக்க, “அண்ணா! கவியோட அம்மா முன்னாடி அண்ணியை வர விடாதீங்க!” என்றான்.

“கவி தனியா யோசிச்சா நல்லவிதமா தான் யோசிப்பாணா. ஆனா அவங்க அம்மா கூட சேர்ந்துட்டானா அவ்ளோ தான். அவங்க செய்ற தப்பு தப்பான அட்வைஸ் எல்லாம் கேட்டு அப்படியே இங்க நடந்துப்பா!” என்றான் முகிலன்.

“சரி! அதுக்கும் விழி அவங்க முன்னாடி போகாம இருக்கிறதுக்கும் என்னடா சம்பந்தம்?” கேள்வியாய் அவன் கேட்க,

சற்றாய் தயங்கியவன், “அண்ணிக்கு அபார்ஷன் ஆனதால அவங்க கண் முன்னாடி மாசமா இருக்கப் பொண்ணு போக வேண்டாம்னு அவங்க அம்மா சொல்லிருக்காங்க! அதான் அவ இன்னிக்கு இங்க வரலை! அண்ணிய எதுவும் மனசு நோகுற மாதிரி பேசிட போறாங்கனு தான் சொல்றேன்” என்றான்.

பயணக்களைப்பில் உறங்கி எழுந்த விழி, அறையில் ஆதவன் இல்லாததைக் கண்டு வீட்டிற்குள் தேடியவள் மாடிக்கு சென்றாள்.

அங்கு முகிலன் இதை ஆதவனிடம் உரைப்பதை கேட்டவளுக்கு மனம் வலித்து அழுகை கண்களை நிறைக்க, அங்கிருந்து நகரலாம் என நினைத்து இவள் நடக்கப் போக,

முகிலனின் கூற்றில் அதிர்ந்து பின் கோபமாகி தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஆதவன், “ஏன்டா நீயும் அப்படி நினைக்கிறியா என்ன?” என வேதனையுடன் கேட்டான்.

அந்தக் கேள்வியில் அப்படியே நின்று விட்டாள் விழி.

“ச்சே ச்சே நான் எப்படிணா அப்படி நினைப்பேன்” என ஆதவனுக்கு ஆறுதல் உரைத்தான்.

“ஹ்ம்ம் எப்படிலாம் இருங்காங்க பாரேன் மனுஷங்க” எரிச்சலுடன் மொழிந்தான்.

தன் வலியை மறைத்து கோபத்தினை கட்டுக்குள் கொண்டு வந்த ஆதவன் ஞாபகம் வந்தவனாய், “ஆமா உனக்குக் கவி பிரக்னென்ட்டா இருக்கிற விஷயம் எப்ப தெரியும்?” எனக் கேட்டான்.

“ஏன்ணே கேட்குற?”

“விழிக்கு நீ முன்னாடியே தெரிஞ்சு வச்சிட்டு அவகிட்ட சொல்லலைனு கோபம்! நான் அப்படி இல்லைனு சொல்லியும் அவ நம்பலை” என்றான் ஆதவன்.

“அண்ணி நினைச்ச மாதிரி எங்களுக்கு இரண்டாவது மாசத்துலயே தெரியும்ணா. கிட்ல தான் கன்பர்ம் பண்ணோம். டாக்டர்கிட்ட போகலை! எனக்கும் கவிக்கும் தவிர யாருக்கும் தெரியாது அப்போ! மூனாவது மாசம் செக்அப்பிற்கு அப்புறம் தான் எல்லார்காட்டயும் சொன்னோம்” என்றான்.

விழி இதையெல்லாம் கேட்டு அழுதவாறு கீழிறங்கி சென்றிருந்தாள்.

ஆதவன் மேலும் சிறிது நேரம் முகிலனிடம் பேசிவிட்டு அறைக்கு செல்ல, அங்கு விழி படுத்திருப்பதைப் பார்த்தவன், “விழி இன்னுமாடி தூங்குற?” எனக் கேட்டவாறு அவளை எழுப்ப,

அழுதழுது சிவந்த கண்களுடன் எழுந்து அமர்ந்தாள் விழி.

அவளைப் பார்த்து பதறியவனாய், “என்னடி என்னாச்சு? எதுக்கு அழுதுட்டு இருக்க?” எனக் கேட்டான்.

அழுகையில் தேம்பியவாறே, “நான் முகில் சொன்ன எல்லாத்தையும் கேட்டேன்” என்றாள்.

ஆதவனுக்கு சர்வமும் ஆடிப்போனதொரு நிலை! முகிலன் இவ்விஷயத்தைக் கூறும் பொழுது கூட அவன் இந்தளவு அதிரவில்லை! ஆனால் விழி தற்போது இருக்கும் மனநிலையில் முகிலனின் பேச்சை கேள்வியுற்றிருக்கிறாள் என்ற செய்தியே, ‘அய்யோ இது அவளை வதைத்திடுமே’ என அவளின் வலியை எண்ணி பயம் கொள்ளச் செய்தது.

அவள் அழுதவாறே மேலும் தொடர்ந்தவளாய், “நான் கவியைப் பார்த்தா அவளோட பாப்பாக்கு ஏதாவது ஆகிடுமாடா?” எனக் கேட்க,

அவளின் நிலை எண்ணி இவன் கண்ணிலும் கண்ணீர் சூழ்ந்தது.

“அப்படிலாம் இல்லடி” என்றவாறு அவளை அணைத்தவன்,

“அவங்க தான் பழைய பஞ்சாகமா பேசுறாங்கனா நீயும் அதையே பிடிச்சி வச்சிக்கிட்டு பேசிறியே! இதெல்லாம் நம்ம காதுலயே வாங்கிக்கக் கூடாது” எனக் கூறி முதுகை தடவி ஆறுதல்படுத்தினான்.

“யார் என்ன பேசினாலும் உனக்காக நான் இருக்கேன்! நீ சீக்கிரம் நல்லபடியா பாப்பாவை பெத்து எடுப்ப! அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு! அது உனக்கும் இருக்கனும்” என்று தேற்றியவன்,

“சரி நீ கிளம்பு! நீ இங்க இருக்க வேண்டாம்! நான் உன்னோட அம்மா வீட்டுல விட்டுட்டு வரேன்! இங்கிருந்தா யாராவது ஏதாவது சொல்வாங்க நீ கேட்டுட்டு அழுதுட்டு இருப்ப” என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு அவளின் பிறந்த வீட்டில் விட்டு இவன் வரும் பொழுது வீட்டினில் இருந்தாள் கவி.

கவிதாவிடம் எதையும் காண்பித்துக் கொள்ளாது இயல்பாக அவளின் நலனை விசாரித்து விட்டு அறையினுள் சென்று விட்டான் ஆதவன்.

விழியின் வேதனையும் வலியும் இவனையும் பாதிக்கத் தான் செய்கிறது. இவனுக்குமே இது வலி தானே! ஆயினும் குடும்பமாய் வாழும் போது இப்படியானவர்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணமே அவனைப் பொறுமையாய் இருக்க வைத்தது. கருவினை சுமந்திருப்பவளிடம் கோபத்தையும் வெறுப்பையும் காட்ட மனமில்லை அவனுக்கு. ஆனால் கவியின் வளைகாப்பில் இதுவே பெரும் பிரச்சனையாக வெடிக்கப் போகிறது என அறிந்திருக்கவில்லை அவன்.

அடுத்த வந்த ஒரு வாரயிறுதி நாளில் ஆதவனும் வேல்விழியும் அவர்களின் சென்னை வீட்டில் இருந்தனர்.

சனிக்கிழமையான அந்நாளிலும் மதிய வேளையில் ஆதவன், கட்டிலில் தனது மடியில் மடிகணிணியை வைத்துக் கொண்டு அலுவல் வேலையை செய்து கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்து கதை புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் விழி.

“கடுப்பாகுதுடி! வீக்கெண்ட்லயும் வேலை வாங்குறாங்க. ஆனா உருப்படியான ரேட்டிங் தர மாட்டேங்கிறாங்க. இந்தப் பிராஜக்ட் தானா எங்கயாவது போனா தான் ரிலீஸ் தருவாங்க போல. இல்லனா வேற கம்பெனில தான் வேலை தேடனும்” தன்னிலையைப் புலம்பியவாறு வேலை செய்தான் ஆதவன்.

“விடுடா! நம்ம பாப்பா பிறக்குற நேரம் உனக்கேத்த மாதிரி எல்லாமே சரியாகிடும்” ஆறுதல் மொழி அவள் உரைக்க,

“ஹே விழி! எனி குட் நியூஸ்?” இன்பமாய் அதிர்ந்து அவன் கேட்க,

“ஆசைய பாரு! மூனாவது ஹனிமூன் போய்ட்டு வந்து அஞ்சு நாள் தான்டா ஆகுது” என நாக்கை துருத்தினாள் அவள்.

“ஹ்ம்ம் நானும் எதுவும் நல்ல செய்தியோனு நினைச்சேன்” எனப் பெருமூச்சு விட்டான். அவளின் முகமும் வாடி விட்டது. ஆயினும் தன்னை மீட்டு கொண்டாள்.

“விழி என் கூட வேலை பார்க்கிற மணி வைஃப்க்கு பிசிஓடி பிராப்ளம்னால 2 டைம்ஸ் கெமிக்கல் பிரக்னென்சி போல வந்துச்சாம். அப்புறம் ஆயுர்வேதிக் மெடிசன் எடுத்து பிசிஓடி சரியாகி இப்ப அவங்க பிரக்னென்ட்டா இருக்காங்க. நம்மளும் அந்த ட்ரீட்மெண்ட் எடுக்கலாமா விழி” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம் நல்ல யோசனை தான். ஆமா அதென்ன கெமிக்கல் பிரக்னென்சி?” எனக் கேட்டாள்.

“அது கரு பார்ம் ஆன கொஞ்சம் நாள்லயே அழிஞ்சிடுமாம். பிரக்னென்ட் ஆனது கூட அவங்களுக்குத் தெரிய வராதாம். ஆனா நெக்ஸ்ட் டைம் வர்ற பீரியட்ஸ் அப்ப செம்ம வயிறு வலி இருந்துச்சாம் அவங்க மனைவிக்கு. அதை வச்சி டெஸ்ட் செஞ்சி தான் கண்டுபிடிச்சிருக்காங்க” என்றான் ஆதவன்.

“ஹ்ம்ம் அப்ப அவங்க எந்த டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணாங்கனு கேளு. அங்கயே பார்க்கலாம்” என்றாள்.

வேலையைச் செய்தவாறே அவளிடம் பேசி கொண்டு இருந்தவன், “ஏழாம் மாசம் கவிக்கு வளைகாப்பு வைக்கிறாங்களாம்டி! டேட் நாளைக்கு சொல்வான் முகில். நம்ம ஆபிஸ்க்கு லீவ் சொல்ற மாதிரி இருக்கும்” என்றான்.

“நான் வரலை” ஒற்றை வரியில் அவள் தன் கோபத்தை வெளிபடுத்த,

“ஏன்டி?” அவன் சோகமாய் ராகம் பாட,

“உங்க வீட்டுல யாராவது என்னை மதிக்கிறாங்களா? உனக்கு அதெல்லாம் கவலை இல்ல! உனக்கு உங்க குடும்பம் தான் வேணும்! முகிலும் கவியும் என்கிட்ட பேசுறதை நிறுத்தி பல மாசம் ஆகுது! ஆனா நீ அவங்ககிட்ட தொடர்ந்து பேசிட்டு தான் இருக்க” எனக் கோபமாய் உரைத்து முகத்தை அவள் திருப்பிக் கொள்ள,

“என்னடி பேசுற நீ? உனக்காக அவனை விட்டு கொடுக்க முடியுமா? கூடப் பிறந்தவன்டி?” புரிச்சிக்கோயேன் என்பது போல் இவன் பதிலளிக்க,

“சரி தம்பியை விட்டு கொடுக்க வேண்டாம். அந்தக் கவி பொண்ணுகிட்ட பேசாம இருக்கலாம்ல. அவ அமைதியா இருந்தாலும் நல்லா இருக்கியா கவினு நீயே போய்ப் பேச வேண்டியது” என முறைத்தாள் இவள். 

“விழி எனக்கு நீயும் வேணும் நம்ம குடும்பமும் வேணும். ஒரு கைல அஞ்சு விரலும் ஒன்னாவா இருக்கு அப்படித் தான் குடும்பத்துல உள்ள ஆளுங்களும். நம்ம பிள்ளைங்களுக்கு அவங்களும் அவங்க பிள்ளைங்களுக்கு நம்மளும் தான் சொந்தம். நம்மளோட சண்டையை அடுத்த ஜென்ரேஷன் வரை தொடர விடக் கூடாதுடி. அதனால வளைகாப்புக்குக் கண்டிப்பா போறோம்” இத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் அவன் தனது காதில் ஒலிவாங்கியை மாட்டி கொண்டான்.

கோபமாய் அதைப் பிடித்திழுத்தவள், “இதுக்கு எதுக்குடா என்கிட்ட பர்மிஷன் கேட்குற மாதிரி சொன்ன?” அவனை முறைத்தாள். 

“நான் எங்கடி பெர்மிஷன் கேட்டேன். இன்பர்மேஷன் தான் சொன்னேன்” எரிகிற நெருப்பில் மேலுமாய் அவன் எண்ணெய் ஊற்ற,

கோபத்தில் புசு புசுவென மூச்சு வாங்கியவளாய்ஒ, “ஐ ஹேட் யூ” என அவனுக்கு முதுகை காண்பித்தவாறு படுத்து கொண்டாள். அப்படியே சிறிது நேரத்தில் உறங்கி போனாள்.

அவளின் கோபம் எவ்வளவு நேரம் தாங்கும் என அறிந்தவனாய் மெல்லியதாய் சிரித்தவன், தனது வேலையில் ஈடுபட ஆரம்பித்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து அவனின் வயிற்றில் கைப்போட்டு இடுப்பில் முகத்தைப் புதைத்தவாறு உறங்கியிருந்தவள் லேசாய் விழிப்பு வந்து கண்களைத் திறக்க, ஆதவன் கால் நீட்டி மடியில் மடிகணிணியை வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இன்னுமா வேலை முடியலை உனக்கு?” எனக் கேட்டவாறே எழுந்தவள், மணியைப் பார்க்க மாலை நான்கை காண்பித்தது.

“விழி ரொம்பத் தலைவலிக்குதுடி! டீ போட்டு தர்றியா?” எனத் தலையில் தைலத்தைத் தடவியவாறே கேட்டான்.

“போடுறேன்டா” என எழுந்தவள், அவன் கையிலிருந்த தைலத்தை வாங்கி அவனின் நெற்றியில் தேய்த்து சிறிது நேரம் நீவி விட்டாள்.

பின் சென்று தேநீர் கொண்டு வந்து அவனின் கையில் கொடுக்க சென்றவளின் கை அவனிடம் கொடுக்காமல் அந்தரத்தில் நின்றது.

“ஹே தூங்கிறதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட சண்டை போட்டேன்ல! குடும்பம் தான் முக்கியம்னு சொன்னவனுக்கு நான் ஏன் டீ தரனும்” என முகத்தைத் திருப்பிக் கொண்டு அவள் நடக்க,

அவளின் பேச்சில் சிரிப்பு வந்தாலும் அதை வாய்க்குள் புதைத்தவனாய், “ரொம்பத் தலை வலிக்குதுடி” என அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற, அதில் மனம் உருகியவளாய், “இதை முதல்ல குடி! தலைவலி டேப்லெட் கொண்டு வர்றேன்” என மாத்திரையை எடுத்து வந்து கொடுத்தாள்.

கோபத்திலும் தன் மீது அக்கறை செலுத்தும் மனைவி மீது காதல் பெருகியது.

அடுத்த அரை மணி நேரத்தில் வேலை முடித்து மடிகணிணியை எடுத்து வைத்தவன், அவளின் மடியினில் தலை வைத்து அவளை நீவி விடக் கூறியவனின் வலி பறந்து சுகம் தந்த உணர்வில் அப்படியே உறங்கி போனான்.

— தொடரும்